logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சப்திகா

சிறுகதை வரிசை எண் # 87


சிவப்பு சேலைக்காரி நிறைமாத வயிற்றோடு நடக்க முடியாமல் அங்கும் இங்கும் அசைந்து அசைந்து நடந்து வரும் கர்ப்பிணியை போல் வந்து கொண்டிருந்தது திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் செல்லும் பேருந்து.' வரும்போதே இவ்வளவு கூட்டமா வருதே இதுல ஏறவா வேண்டாமா?' என்று ஒரு நிமிடம் மனதில் நினைத்தாள் லதா. அளவான உயரம், உயரத்திற்கு ஏற்ற எடை, கோதுமை நிறம், வட்ட வடிவ முகத்தில் அழகு சேர்ப்பது போல் அடர்த்தியான, வடிவமற்ற புருவங்கள்.அதற்கு இடையில் சிகப்பு சாந்து பொட்டு,நேர் வகுடு எடுத்து நேர்த்தியாக பின்னப்பட்ட கூந்தல், அதில் பாதி காய்ந்து போன மல்லிகை பூ சரம், வெள்ளை நிறத்தில் மஞ்சள் சிகப்பு வண்ணங்களில் பூ போட்ட பருத்தி சேலை, தோளில் கருப்பு நிற கைப்பையுடன் யோசனையோடு நின்றாள் லதா. அன்று வெள்ளிக்கிழமை என்பது அவளுக்கு அப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. உடனே வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளுக்கு முன் வந்து நின்ற பேருந்தின் கடைசி படியில் ஏறி விட்டாள். படிக்கட்டில் நின்றவாறு பயணிகளிடம் “உள்ளே போங்க”, என்று நாலு முறை சத்தம் போட்டு, இடித்து பிடித்து படிக்கட்டில் இருந்து மேலே ஏறுவதற்குள் அடுத்த நிறுத்தமே வந்து விட்டது. பயணிகள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டும் ஒருவர் நிற்க வேண்டிய இடத்தில் மூன்று பேர் நின்று கொண்டும் இருந்தனர். 'நல்லவேளை காட்டன் புடவையாக போச்சு. இல்லன்னா இறங்கும் போது சேலை கையோடு அவுந்து வந்திருக்கும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் லதா. "லதா டீச்சர்... நாகர்கோவில் வரைக்கும் நின்னுட்டு போக முடியாது. வள்ளியூருக்கு டிக்கெட் எடுப்போமா? யாரும் இறங்குறது போல தெரியலையே!", என்றாள் லதாவின் பேருந்து தோழி சுதா. இருவரும் இரண்டு வருடங்களாக ஒரே பேருந்தில் பயணம் செய்பவர்கள். "இல்ல டீச்சர்... வள்ளியூரில் இறங்கினாலும் இதே நிலைமைதான். இன்னைக்கு வெள்ளிக்கிழமை பாத்தீங்களா... எல்லா வண்டியும் கூட்டமாக தான் வரும். நான் நாகர்கோயிலே எடுக்கிறேன். நீங்க வேணும்னா வள்ளியூரில் இறங்குங்க டீச்சர்", என்றாள் லதா. " ஆமா... நீங்க சொல்றதும் சரிதான் டீச்சர். நானும் நாகர்கோயிலே எடுக்கறேன். நாகர்கோயில் போய் இறங்குற வரைக்கும் நிக்க வேண்டியது தான் போல இருக்கு", என்று நொந்து கொண்டாள் சுதா. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் வெளி மாவட்டத்திலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அங்கு வேலைக்காகவோ, படிப்பதற்காகவோ தங்கி இருப்பவர்கள் ஊர் திரும்புவதால் இந்த கூட்டம். கூட்ட நெரிசலை சமாளித்து கைப்பையில் இருந்து பணம் எடுத்து டிக்கெட் வாங்கி முடிப்பதற்குள் இருவரும் ஒரு வழி ஆகிவிட்டார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் பேருந்தில் இருந்து இறங்குபவர்களை விட ஏறுபவர்களே அதிகமாக இருந்தனர். அப்படி ஒரு நிறுத்தத்தில் ஏறிய பெண்கள் கூட்டத்தில் ஒருவர் மட்டும் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தார். நல்ல உயரம், வாட்ட சாட்டமான உடம்பு,மாநிறம் முகத்தில் கொஞ்சம் முரட்டுத்தனம், அளவுக்கு அதிகமான ஒப்பனை, இடுப்புக்கும் தோளுக்கும் இடைப்பட்ட கூந்தலில் கனகாம்பர பூக்கள், கம்பீரமான தோற்றத்துடன் இருந்த அவர் தங்க ஜரிகை வைத்த சிவப்பு சேலை அணிந்து இருந்தார். "லதா டீச்சர்... அந்த சிவப்பு சேலைக்காரிய பாருங்க… கொஞ்சம் வித்தியாசமா தெரியலையா? அது ஆணா? பெண்ணா?",என்று அவளை சுட்டிக்காட்டி லதாவின் காதோரமாக கிசுகிசுத்தாள் சுதா. அவளது கேள்வியின் அர்த்தம் புரியாமல் சுதாவை உற்றுப் பார்த்தாள் லதா. “அந்த சிவப்பு சேலையை பார்த்தா பொம்பளையை போல தெரியலையே! கோயிலுக்கு நேந்துகிட்ட சில பேரு பெண் வேடம் போடுவாங்களே… அந்த மாதிரி ஏதாவது இருக்குமோ!”, என்று மெல்லிய குரலில் கேட்டாள். “அதெல்லாம் ஒன்னும் இல்ல டீச்சர். அப்படின்னா அவங்க ஆம்பளைங்க பக்கம் நின்று இருப்பாங்க. இங்க வர மாட்டாங்க. இவங்க திருநங்கையா இருக்கும்”, என்றாள் லதா. “முன்னாடி எல்லாம் எங்கேயாவது ஒரு இடத்துல எப்பயாச்சும் ஒரு ஆள, ரெண்டு ஆள இப்படி பாப்போம். இப்ப பாத்தா திரும்புற பக்கம் எல்லாம் இவங்க தான் இருக்கிறாங்க”, என்று சுதா சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் அருகில் இருந்த இருக்கை ஒன்று காலியானது. ஒரு இருக்கையில் இருப்பதற்கு நான்கு பேர் போட்டியிட்டதில் இறுதியாக வெற்றிக்கனியை தட்டி பறித்தாள் சுதா. இத்தனை கூட்ட நெரிசலிலும் உட்கார இடம் கிடைத்த மகிழ்ச்சி அவள் முகத்தில் தாண்டவம் ஆடியது.பேருந்தில் உட்கார இடம் கிடைத்தால் போதும் உலகத்தில் எந்த பெரிய விஷயமாக இருந்தாலும் அதைப்பற்றிய சிந்தனையை எல்லாம் மறந்து விடுவாள் சுதா. இருக்கையில் அமர்ந்த சில மணித்துளிகளில் அனைத்தையும் மறந்து நித்திரையில் ஆழ்ந்தாள் சுதா. பேருந்தின் அசைவுகளுக்கும், வளைவுகளுக்கும் ஏற்றார் போல் அவள் தலை அங்கும் இங்கும் , முன்னும் பின்னுமாக நாட்டியமாடி கொண்டிருந்தது. அவ்வப்போது ஒலி எழுப்பும் ஓட்டுனரின் ஒலிப்பானும்,நடத்துனரின் சீட்டியும் அவளின் தலையசைவிற்கு பக்கவாத்தியம் வாசிப்பது போல் இருந்தது. இதை பார்த்த லதாவிற்கு சிரிப்பு வந்தது. சத்தம் இல்லாமல் ஒரு இசை கச்சேரி நடந்து கொண்டிருப்பது போல் அவளுக்கு தோன்றியது. வேலை பார்க்கும் பெண்களுக்கு ஓய்வு நேரம் இதுதான். பாவம் உறங்கட்டும் என்று நினைத்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வண்டி மெல்ல ஆடி அசைந்து வள்ளியூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது. அங்கே சில பயணிகள் இறங்கியதும் ஒரு சில இருக்கைகள் காலியாயின. லதாவும் காலியாக இருந்த இருக்கை ஒன்றில் சன்னலோரமாக அமர்ந்தாள். அவள் அருகில் தயங்கியபடி சிவப்பு சேலைக்காரியும் அமர்ந்தார். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை லதா. அப்படியே ஆடிப் போய்விட்டாள். அவளுக்கு சட்டென படபடப்பு தொற்றிக் கொண்டது. ஏன் என்று தெரியவில்லை? அவளது இருதயம் வேகமாக துடித்தது. அவளுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.அப்படியே மெதுவாக சுதாவை எட்டிப் பார்த்தாள். அவள் தலை இன்னும் ஆடிக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருக்கும் சிவப்பு சேலைக்காரியை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவர் பின்னாடி பார்ப்பதும், திரும்புவதும் மீண்டும் பின்னாடி பார்ப்பதும், திரும்புவதுமாக அமைதியின்றி இருந்தார். அதை கவனித்து லதாவிற்கு என்ன விஷயம் என்று சிவப்பு சேலைக்காரியிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் கேட்கவில்லை. லதாவின் மனதில் ஒருவித பயம் இருந்தது. இவர்களும் நம்மை போல் சாதாரணமான, ரத்தமும் சதையும் உள்ள மனிதர்கள் தான் என்று லதாவின் அறிவிற்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் ஒரு பயம். ‘நாம பேசுறத ஒருவேளை தவறாக புரிந்து கொண்டால்?? திடீர்னு கோபப்பட்டுட்டா?? எல்லாருக்கும் முன்னாடி சத்தம் போட்டுட்டா??’ என்று ஒவ்வொன்றாக நினைத்து பேசாமல் அமைதியாகவே இருந்தாள் லதா. ஆனாலும் அவள் மனம் கேட்கவில்லை. அந்த சிவப்பு சேலைக்காரி என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள மெதுவாக தலையை திருப்பி பார்த்தாள் லதா. இந்த முறை லதா அவரைப் பார்ப்பதை சிவப்பு சேலைக்காரி பார்த்து விட்டார். லதாவின் கண்களை நேருக்கு நேராக பார்த்த சிவப்பு சேலைக்காரி சிறிய தயக்கத்துடன் லேசாக புன்னகைத்தார். அந்தப் புன்னகைக்குள் பல கேள்விகளும் ஏக்கங்களும் புதைந்து இருப்பது போல் உணர்ந்தாள் லதா. பயத்தை மூட்டை கட்டி ஒரு ஓரமாக வைத்துவிட்டு லதாவும் பதிலுக்கு சிரித்தாள். “ என்ன ஆச்சு எதுக்கு பின்னாடி திரும்பி திரும்பி பாக்குறீங்க?”, என்றாள் லதா. “ ஒன்றும் இல்லை அக்கா வள்ளியூர் வரைக்கும் தான் டிக்கெட் எடுத்தேன். கூட்டமா இருந்தது பார்த்தீங்களா! உக்கார இடம் கிடைக்குதோ இல்லையோ! வள்ளியூரில் இறங்கிடலாம்னு நினைச்சேன். இப்பதான் இடம் கிடைச்சிருச்சே. டிக்கெட் எடுக்கணும்ல. அதான் கண்டக்டரை பார்க்கிறேன். அவரும் பின்னாடியே தான் நின்னுட்டு இருக்காரு”, என்றவர் சட்டென்று திரும்பி அவர்கள் இருக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண்மணியிடம், “ அக்கா கண்டக்டர் வந்தா கொஞ்சம் சொல்லுங்க அக்கா”, என்று கூறிவிட்டு லதாவை நோக்கினாள். “ நாம தெரியாத்தனமா டிக்கெட் எடுக்க மறந்துட்டோம்னா அவ்வளவுதான்! அப்புறம் அவர்கிட்ட இருந்து யாரு திட்டு வாங்குறது? கண்டமேனிக்கு திட்டி போடுவாரு. என்ன செய்றது அசிங்கமா போயிடும் இல்லையா! ஆமா நீங்க டிக்கெட் எடுத்துட்டீங்களா அக்கா?”, என்றார் சிவப்பு சேலைக்காரி. “ ஆமாமா நான் அப்பவே எடுத்துட்டேன்”, என்றாள் லதா. “சரி அக்கா. ஆமா எந்த ஊருக்கு போறீங்க”, என்று கேட்டார் சிவப்பு சேலைக்காரி. ‘இது என்னடா வம்பா போச்சு தெரியாத்தனமா பேச்சு கொடுத்துட்டோமோ’ என்று மனதுக்குள் யோசித்த லதா அதை வெளிக்காட்டாமல் நாகர்கோயிலுக்கு போவதாக கூறினாள். சிவப்பு சேலைக்காரியும் விட்டபாடு இல்லை. “ நாகர்கோயிலுல எங்க அக்கா”, என்று மீண்டும் அடுத்த கேள்வியை கேட்டார். இந்திய வரைபடத்தில் ஏதோ ஒரு சின்ன புள்ளியை போல் இருக்கும் அவளது ஊரின் பெயரை சொன்னவுடன் தெரியவா போகிறது என்ற அசட்டு தைரியத்தில் அவள் வசிக்கும் கடற்கரை கிராமத்தின் பெயரை கூறினாள். “ஓ அந்த ஊரா உங்களுக்கு! எங்க ஊர்ல இருந்து கூட ரெண்டு பேரை அந்த ஊர்ல தான் கட்டிக் கொடுத்திருக்கு. அவங்கள உங்களுக்கு தெரியுமா?”, என்று ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் அவள் முகத்தில் ஒளிர்ந்தது போல் பிரகாசமான முகத்தோடு இரண்டு நபரின் பெயரை குறிப்பிட்டார். அந்த இருவர் யார் என்று லதாவிற்கு சுத்தமாக தெரியவில்லை. ஆனால் அந்த சிவப்பு சேலைக்காரியோ லதாவிடம் அந்த இருவரை பற்றியும், அவர்கள் திருமணம் செய்து கொடுத்த குடும்பத்தை பற்றியும், அவர்களின் உறவினர்கள் பற்றியும் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தார். லதாவிற்கு வேறு வழி தெரியவில்லை. இறுதியில் அவர்கள் இருவரையும் தெரிந்தது போல் காட்டிக்கொண்டாள். “அவங்க ரெண்டு பேரையும் பார்க்கவா நீங்க இப்ப ஊருக்கு போறீங்க”, என்று பேச்சை மாற்றினாள் லதா. “இல்லக்கா. எங்கள போல உள்ளவங்களுக்கு யாது ஊரு? யாது குடும்பம்? யாது சொந்தம்? ஒன்றும் இல்லை. எங்களுக்கு இரண்டு தலைவர் இருக்கிறாங்க. ஒருத்தங்க பெரிய அக்கா. இன்னொருத்தவங்க சின்ன அக்கா. இவங்கதான் எங்களை போல உள்ளவங்களுக்கு எல்லாமே. இன்னைக்கு எங்க சின்ன அக்காவுக்கு பிறந்தநாள். எங்க கூட உள்ளவர்கள் எல்லாம் அவங்கள பார்த்து வாழ்த்து சொல்ல நேரமே போயிட்டாங்க. நான் தான் கொஞ்சம் லேட் ஆயிட்டேன்”, என்றார் சிவப்பு சேலைக்காபேசினார். அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய கைபேசி ஒலித்தது. அதை எடுத்து சற்று சத்தமாகவே பேசினார். அவர் பேசியதிலிருந்து ஏதோ பணம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று மட்டும் லதாவிற்கு புரிந்தது. அதைப்பற்றி கேட்க வேண்டும் என்று லதாவின் மனது சொன்னாலும் அப்படி கேட்பது நாகரீகம் அல்ல என்று நினைத்து அவள் அமைதியாகவே இருந்தாள். கைபேசியை துண்டித்து விட்டு மீண்டும் அவராகவே பேச்சை தொடர்ந்தார். சிவப்பு சேலைக்காரியின் அப்பா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வருடத்திற்கு முன் இறந்து விட்டார் என்றும் அவருக்கு வைத்தியம் பார்ப்பதில் ஏகப்பட்ட கடன் ஆகிவிட்டது என்றும் கூறினார். அந்தக் கடனை அவர் தான் அடைத்து வருவதாகவும் அது தொடர்பாக ஒருவரை பார்க்க வேண்டியிருந்ததால் சின்னக்காவின் பிறந்தநாளுக்கு தாமதமாக போக வேண்டியதாகிவிட்டது என்றும் அந்த கடன்காரர் தான் இப்பொழுது தொலைபேசியில் அழைத்து பேசினார் என்றும் கூறினார். “நீங்க எப்படி கடனை... உங்களுக்கு கூட பொறந்தவங்க யாருமே இல்லையா?”, என்று குழப்பத்தோடு கேட்டாள் லதா. “இருக்கான் அக்கா. ஒரு அண்ணன் இருக்கான். ஆனா எதுக்கும் பிரயோஜனம் இல்ல. அப்பா இறந்ததும் வீட்ட நீயே வச்சுக்க கடனையும் நீயே அடச்சுக்கனு சொல்லிட்டு அவன் பாட்டுக்கு ஒதுங்கிட்டான். நான் காலையில கடை தெருவில் போய் கலெக்ஷனுக்கு போவேன் அக்கா, சாயங்காலம் ஏதாவது கோயில்கள்ல ஆட்டத்துக்கு போயிட்டு வருவேன். அதுல கிடக்கிறத வெச்சு கடன் அடைச்சிட்டு வரேன். நான் பொறந்தது என்னமோ ஒரு கிறிஸ்தவ குடும்பத்துல தான் என்றாலும் எல்லா கோயிலுக்கும் போவேன். எல்லா சாமியும் எனக்கு ஒன்னு தான்.ஒன்றும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லக்கா. எங்கள எல்லோரும் கிண்டல் பண்ணும் போதும், வக்கிரமாக நடத்தும் போதும் எல்லா சாமியும் பாத்துட்டு வாய மூடிட்டு சும்மா தானே இருக்குது. எங்களுக்காக எந்த சாமியும் எந்த மதமும் பேசுறது இல்லையே! இந்த சாமிங்க மேல எனக்கு ரொம்ப கோவம் அக்கா. எங்கள இப்படி ஒரு பிறவியா படச்சு இவ்வளவு வேதனையும் வலியும் எங்களுக்கு கொடுக்கிறதே இந்த சாமி தானே. நாங்க என்ன பாவம் செஞ்சோம்”, என்ற சிவப்பு சேலைக்காரியின் கேள்வி லதாவின் மனதில் ஆணியடித்தது போல் இறங்கியது. அவரின் வார்த்தைகளில் நிறைந்திருந்த வலிகளை உணர்ந்தவளாய் அமைதியாக இருந்தாள் லதா. சிவப்பு சேலைக்காரியே மீண்டும் பேச்சை தொடர்ந்தார். “ எனக்கு ஒரு பதினாறு,பதினேழு வயசு இருக்கும் அக்கா. அதுக்கு மேல என்னால என்னுடைய ஆசைகள் எல்லாத்தையும் அடக்கிக்கிட்டு இருக்க முடியல அக்கா. நான் எனக்கு விருப்பப்பட்டது போல பூ வைக்க, பொட்டு வைக்க, சேலை கட்ட ஆரம்பிச்சேன். நான் ஒரு திருநங்கை அப்படிங்கிறது எங்க ஊர் முழுக்க பைய பைய பரவிடுச்சு. என்ன பெத்தவங்களுக்கு என்ன நெனச்சு மனசுல பயங்கர வேதனை தான். ஆனாலும் என்கிட்ட அதை பத்தி பேசுவோ, கோவப்படவோ மாட்டாங்க. அவங்க மனசுக்குள்ளேயே இதை வச்சு நொந்துக்குவாங்க. பார்த்து பார்த்து வளத்த பையன் இப்படி ஆயிட்டானேனு நெனச்சு சந்தோஷமா படுவாங்க? நிச்சயமா அவங்களுக்கு வேதனை தானே! ஒரு நாள் எங்க அண்ணன் கடற்கரையில் இருந்து வேகமா ஓடி வந்தான். அவன் வீட்டுக்குள்ள வந்ததுமே வந்த வேகத்துல என்னை அடி அடின்னு அடிச்சுட்டான். அம்மா அவனை தடுத்து எதுக்குடா இப்படி தம்பியை அடிக்கிற அப்படின்னு கேட்டதுக்கு என்ன சொன்னான் தெரியுமா அக்கா? இந்த பொட்ட பயலால எனக்கு ஊருக்குள்ள தல காட்ட முடியல. உன் தம்பி என்னலே பொட்டும், பூவும் வச்சிட்டு ஒரு மாதிரியா நடக்கிறான்னு ஊர்ல எல்லா பயலுகளும் கேக்குறாங்க. இதனால எனக்கு ஒரே அவமானமா இருக்கு. இன்னும் இவனை எதுக்கு வீட்ல வச்சுக்கிட்டு இருக்கீங்க? எங்கேயாவது அவன அனுப்பி தொலைங்க. அப்படின்னு ரொம்ப ஆவேசமா சொன்னான். இதை கேட்டு எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சங்கடம் தாங்க முடியல. எங்க அம்மா என்னை கட்டிப்பிடிச்சு ஓ…ன்னு அழுதாங்க. அப்ப எங்க அப்பா ஒரு வார்த்தை சொன்னாங்க அக்கா அது இன்னும் அப்படியே என் மனசுல பசுமரத்தாணி போல பதிஞ்சிருக்கு”, என்றாள் சிவப்பு சேலைக்காரி. “அப்படி என்ன சொன்னாங்க”, என்று மிகவும் ஆவலோடு கேட்டாள் லதா. “எங்க அப்பா ஒரு தெய்வப்பிறவிக்கா. அவர் என்ன சொன்னார் தெரியுமா? இவன் எங்க மூலமா இந்த உலகத்துக்கு வந்தவன். இவன் இப்படி ஆனதுக்கு அவன யாரும் குத்த சொல்ல முடியாது. அவனுக்கு எங்களை விட்டா வேற யாரும் கிடையாது. இந்த உலகத்துல நாங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்குறது வற அவன் எங்களோட தான் இருப்பான். உனக்கு அவன் வீட்டில் இருக்கிறது கஷ்டமா இருந்தா நீ வேணும்னா வீட்டை விட்டு வெளியே போ. அப்படின்னு எங்க அப்பா சொன்னாங்க”, என்று சொல்லும்போது சிவப்பு சேலைக்காரியின் கண்கள் சிவந்து கண்ணீர் வடிந்தன. “ நீங்களே சொல்லுங்க அக்கா இப்படிப்பட்ட அப்பாவ கேன்சர் நோய் வந்துடுச்சுன்னு வைத்தியம் பார்க்காமல் விட்டுவிட முடியுமா? எங்க அண்ணன் எனக்கென்னன்னு கண்ணை மூடிட்டு இருந்துட்டான். ஆனால் என்னால அப்படி இருக்க முடியலை. என்னால முடிஞ்ச மட்டும் கடன உடன வாங்கி எங்க அப்பாவுக்கு எவ்வளவு வைத்தியம் பார்க்க முடியுமோ அவ்வளவும் பார்த்தோம். அஞ்சு வருஷம் அப்பாவை உயிரோட வச்சிருக்க முடிஞ்சது. அவ்வளவுதான் அப்பா இறந்த கொஞ்ச நாளிலேயே துக்கம் தாங்காமல் அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க. அடக்க செலவுக்கும் கூட கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை தான். எப்படியோ எல்லா காரியத்தையும் நானே ஒத்தையில செஞ்சு முடிச்சேன். அப்போ கடன் வாங்குனது தான் இப்போ கொஞ்சம் கொஞ்சமா அடிச்சுட்டு இருக்கேன்”, என்றவர் பட்டடென திரும்பி நடத்துனரை பார்த்தார். நடத்துனர் இப்பொழுதும் பின்னாடி தான் நின்று கொண்டிருந்தார். “ உங்க கிட்ட பேசிட்டு இருந்ததுல டிக்கெட் எடுக்கறதையே மறந்துட்டேன் அக்கா”, என்று சொல்லி அவர்கள் இருக்கையின் அருகில் நின்று கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் ரூபாயை நீட்டினார். “கொஞ்சம் பின்னாடி கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கித்தாங்கக்கா”, என்று கேட்டார். அந்த பெண்மணியோ காதில் கேட்காதது போல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.இதைப் பார்த்த லதாவிற்கே மனசு வலித்தது. அந்த பெண்மணியின் செயலைப் பார்த்ததும் சிவப்பு சேலைக்காரியின் முகம் சட்டென மாறியது. அவளுடைய கைப்பையை என்னிடத்தில் கொடுத்து விட்டு இருக்கையில் இருந்து எழுந்தார். கடகடவென்று வேகமாக நடத்துனர் நின்று கொண்டிருந்த பக்கம் சென்றார். அவரிடம் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தார். அதன்பிறகு பேருந்து நாகர்கோயில் வந்தடைவது வரை இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. பேருந்தில் இருந்து இறங்கும் பொழுது தான் சிவப்பு சேலைக்காரியின் பெயரை கேட்கவே இல்லையே என்று நினைத்தாள் லதா. படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்த சிவப்பு சேலைக்காரியிடம், “ உங்க பெயர் என்னன்னு சொல்லவே இல்லையே?”, என்றாள் லதா. இதைக் கேட்டதும் சிவப்பு சேலைக்காரியின் முகத்தில் வெற்றுப் புன்னகை ஒன்று சில மணித்துளிகள் தோன்றி மறைந்தது. “பெயரை தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க? அந்த பெயரை சொல்லித்தான் நீங்க கூப்பிட மாட்டீங்களே! நீங்க எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு ஒரு பேர் வச்சிருக்கீங்களே அதை சொல்லி தானே கூப்பிடுவீங்க! அப்புறம் என் பேரு உங்களுக்கு எதுக்கு? ஆனா ஒண்ணு மட்டும் உங்க கிட்ட சொல்றேன் அக்கா. நாங்களும் இந்த சமூகத்துல நல்லபடியா வாழனும், சமூக மாற்றம் வந்துடனும் அப்படின்னு அரசாங்கமும் என்னென்னலாமோ முயற்சி பண்ணுது. எங்களை போல உள்ளவங்க கூட இன்னைக்கு அரசாங்கத்தினுடைய உதவியால, ஒரு சில நல்ல மனுஷங்களோட உதவியால எப்படியோ படித்து எடுத்து எப்படியோ கஷ்டப்பட்டு ஏதோ ஒரு வேலைக்கு ஏறிடறாங்க. எங்களுக்கு ஒரு இடத்துல வேலை கிடைக்கும்போது பெருசா விளம்பரப்படுத்தி கொண்டாடுற இந்த சமூகம் அந்த வேலைக்கு போன பிறகு அங்க நடக்கக்கூடிய எங்களுடைய பிரச்சனைகளை பத்தி யாராவது கண்டுக்குறாங்களா? பேசுகிறார்களா? இல்லையே! நாங்களும் மனுஷங்க தான் என்று எப்ப இந்த உலகம் புரிஞ்சுக்க போகுது? காலம் காலமா இந்த மக்களுக்கு எங்க மேல இருக்கக்கூடிய அந்த எண்ணத்தில் மாற்றம் வருகிற வரைக்கும் எங்க வாழ்க்கையில எந்த மாற்றத்திற்கும் சாத்தியம் இல்லை அக்கா”, என்று சொல்லிவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி விறுவிறுவென நடந்து சென்றார். - சப்திகா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • SivaShankari G Avatar
    SivaShankari G - 2 years ago
    சிவப்பு சேலைக்காரியைப் போல பலரையும் பல இடங்களிலும் காண்கிறோம். ஆனால் நாம் யாரும் யோசித்து பார்ப்பதில்லை அவர்களின் நிலைமையை. இக்கதை மூலம் அரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது.அருமை வாழ்த்துக்கள்