logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ஜனனி ஏழுமலை

சிறுகதை வரிசை எண் # 86


இவள் பெண்ணாடை அணிகிறாள்..... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இனமிருந்த கருவறைக்கு சென்றால் குறிஞ்சியில் தேன் குழைத்து முல்லையில் சாமையாக்கி மருதத்தில் வடித்தெடுத்து நெய்தலில் மீனொடு உப்பிட்டு தேசம் கண்டோமே ... இப்போது தினையும் திணையும் இல்லாமல் போய் குறிஞ்சி வாசிகளின் குறுகிய வடிவமாக ஊரின் ஒதுக்கு புறத்தில் இரண்டொரு வீடுகளாக மாறிப் போன குடும்பத்தில் ஒருத்தி தான் பூங்கொடி. வயசு 17 இருக்கு.10வது புட்டுக்குச்சி அப்போவே பள்ளிக்கூடத்துக்கு போறத நிறுத்திட்டா... வள்ளிக்கண்ணு(50) அப்பா.மரம் வெட்டப்போவான்... அம்மா வெளுத்தம்மாக்கு(48) செங்கசூலை... நம்ம பூங்கொடிக்கு செம்மல்லி தான் இஷடம். அப்பறம் முகம் பார்க்கிற கண்ணாடிக்கொண்டு அவளின் வளர்ந்து கொண்டிருக்கும் இடுப்பின் மடிப்புகளை மார்புக் கூட்டில் தளிர்த்து நிற்கும் மார்புகளை பார்ப்பது அவளுக்கு வரையறையில் சிக்காத அப்படி ஒரு திமிர் கொடுக்கும் இன்பம். ஒருநாள்...1000 கல்லு அடுக்கிட்டேன்...கெளம்பறேன் ஜெயாக்கா... சொல்லிட்டு பூங்கொடியும் தேவியும் சூலையிலிருந்து கெளம்பிட்டாங்க.... சாய்ந்திரம் மணி 6 இருக்கும்... வீட்டுக்கு வந்து அடுப்ப பத்த வச்சி கொஞ்ச நேரத்தில் கொதிக்கிற ஒலையில அரிசிய போட்டா... காலையில் வச்ச கொழம்பு ராத்திரிக்கு ஆவும் ன்னு தோணுச்சு அதனால அவ கொழம்பு வெக்கில... சோறு வடிக்கிறா மணி 7 கிட்ட ஆகப்போவுது... மரம் வெட்ட போன வள்ளிக்கண்ணும் வெளுத்தம்மாவும் வந்தாங்க... குளிச்சாங்க... மணி 8 ஆச்சு.....3 பேரும் சாப்டாங்க... நடாள் கழனி வரைக்கும் போயிட்டு வரேன்..ஏதோ எலி தொல்லை இருக்கா... பத்திரமா இருங்க... சொல்லிட்டு வள்ளிக்கண்ணு போயிட்டா.... ஊர்ல இருந்து கொஞ்ச தூரம் 5 குடிசை தான் இருக்கு பூங்கொடி குடும்பத்தோடு சேர்த்தே.... ஒரு மின்கம்பம்... எல்லார் வீட்லயும் லைட் லா இருக்கு.... 10 மணி இருக்கும்... சும்மா எல்லாரும் கப் சிப்னு கதவடைச்சுட்டு தூங்க ஆரம்பிட்டுடாங்க.... இரவு .. 11க்கும் மேலயிருக்கும் வெளிய வாடா வள்ளிக்கண்ணு... டப் டப் னு கதவ தட்ரதைக் கேட்டு பதறிட்டு வெளிய வந்தாங்க... பூவும் அவ அம்மாவும்... பாத்தா 3 போலீஸ்சு... அதுல ஒருத்தி பொம்பள... எங்கடி உன்புருஷன் வள்ளிக்கண்ணு... எலி புடிக்க சாமி..இந்நேரத்துல வந்திருக்கிங்க....என்னாச்சு சார்...பதற்றத்துல கேட்டா வெளுத்தம்மா. உம் புருஷன் 50000 திருடிட்டான்னு புகார் வந்திருக்கு.... பகல்ல வந்தா இருக்க மாட்றான்னு இராத்திரியில வந்தா இப்பவும் அந்த நாயக் காணோம்... இல்ல நீங்களே எங்கயாச்சும் ஒளிச்சு வச்சுட்டு எலி புலின்னு கதவுட்றீங்களா... கேட்டான். இல்ல நிசமாவே எலி புடிக்கத்தான் போய்கிறாரு... இவ யாரு ஓம்பொன்னா... வள்ளிக்கண்ணு வரலனா இவள கூட்டிட்டு போய்டுவேன் பாத்துக்கோ.... மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க வந்த போலீஸ் காரங்க... இத்தோடு மூனாவது நாள்... பொண்ண கூட்டுனு போனாதா அவன் வருவா... புருஷன் வந்தா தான் பொண்ண அனுப்புவோம்னு ஒரு போலீஸ்காரன் சொன்னான். சொல்லி 1 நிமிஷமில்ல...பூங்கொடிய ஜீப்ல ஏத்திட்டாங்க.. ஜீப்ப எடுக்கறாங்க.. பொன்ன விட்ருங்கயா... பொட்ட புள்ளய இப்படி கூட்டுனு போறானுங்களே... அழுது பொலம்பிட்டு ஓடுறா வெளுத்தம்மா... ஜீப்புக்கு உயிர் இல்லையே... ஈவு இரக்கம் எப்படி இருக்கும் அந்த இரும்புகளுக்கு... இவ 20 அடி பின்னாடி ஓட 200 அடி தாண்டி இருளில் அந்த ஜீப்பின் விளக்கு ஒளி மறைந்தது. வாயிலும் வயிறிலும் அடித்துக் கொண்டு நடாள் கழனி நோக்கி ஓடினாள் வெளுத்தம்மா.... பூங்கொடியின் செம்மல்லி தவழ்ந்த அந்த கூந்தல் வண்டியின் வேகத்தில் குறு இழைகளாக அங்கும் இங்கும் பறந்துக் கொண்டிருந்தன. ஜீப்பில் முதலில் ஏற மறுத்த பூங்கொடியின் தாடையில் ஓங்கி பளீர்னு ஒன்னு வெச்சா அந்த பொம்பள போலீஸ்... வண்டியில் ஏறியவுடன் கண்ணில் இருந்து தண்ணி கொட்டி நிறுத்த முடியாத பூங்கொடிய திரும்பவும்பொளீற்னு ஒன்னு போட்டா பாரு அவ கன்னத்தில... சக்தி இழந்து போன அவள் கன்னங்கள் மீண்டும் கண்ணீர்களை வர விடாமல் கணத்து வெறுத்து போய்... மனித அதிகார வர்க்கத்தின் வலையில் பிடிக்கப்பட்டு நீர் விலகி தூண்டில் மாட்டி தூண்டில்காரனைச் சேரும் மீனின் பயணத்தை அவள் கால்களில் உணர்ந்தவள் போல இரவின் நிறம் கொடுக்கும் வாசனைகளை மௌனமாக நுகர்ந்துக் கொண்டிருந்தாள்... முக்காமணி நேரத்துல காவல் நிலையத்தை சேர்ந்தது வண்டி... இறங்குடி... சொன்னா அந்த பொம்பள போலீஸ்... நேற்று நாளை மறந்து, இருக்கும் கணத்தையும் உணராமல் தொங்கிக் கொண்டிருந்த அவள் பார்வை அவர்கள் மூன்று பேரையும் பார்க்க... கீழிறங்கி விட்டாள்... ஒளி விளக்கில் தெரியும் சிவப்பு கட்டடத்தை ஒரு விதமாக நோக்கினாள் ... உள்ளே போய் பென்ச்சில் உட்கார்ந்துகொண்டாள். இங்கிருப்பது உண்மை தானா.. என்ன நடக்கப்போகிறது... என்பது பற்றிய அவளின் எவ்விதமான கேளவிகளுக்குமான பதில்களை நோக்கி அவளின் சிந்தனைகள் வாடகைக்கு எடுக்கப்படவில்லை... இதற்கெல்லாம் மாற்று பதிலா என்று தெறியவில்லை... கண்ணின் துளிகள் மட்டும் தொடர்ந்து அவளைத் தொட்டுக் கொண்டே இருந்தது.... தடுப்பணைகள் போட பொம்பள போலீஸ் இருந்தும் கண்கள் அச்சமின்றி ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தது... ஏனென்றால் அனாதைக்கும் கண்ணீர் சொந்தமானது... பிக்கைக்காரனுக்கும் பொதுவானது.... பணக்காரனுக்கும் உப்பு தான் கரிக்கும்.... ஆணும் பெண்ணும் கஷ்டத்தில் தணிக்கும் போது பேதமில்லாமல் அணைப்பது உப்புத் துளிகள் தானே.... அசையாத இரவில் உள்ளீடாக உள்ளாடும் மனத்தின் கேள்விகளுக்கு சரியான வெளியீடு-வெளி வரும் கண்ணின் உவர் கடைசல்கள் மட்டுமே... அதான் பூங்கொடியும் கண்கள் கசக்கிக் கொண்டிருந்தாள். இங்க பாரு..வள்ளிக்கண்ணு வரட்டும் ஒன்ன அனுப்பிட்றோம்.... ஒருத்தன் சொன்னான். அவ ஒன்னுமே பேசல... திடீர்னு பெண் போலீஸ் சல்யூட் அடிச்சுட்டு வெளிய போயிட்டாங்க... அத பாத்ததும் அவ கண்ணுல மண்ணவாரி போட்ட மாறி இருந்துச்சு.... மனம் சிதைகிறது... கதையில் தேடப்படும் துப்புகள் போல... அடுத்தடுத்து "என்ன நடக்கப்போகிறது" என்ற வார்த்தைகள் மட்டுமே மண்டையில் ஓடி பயத்தின் ஒரு கோடி சொரூபங்கள் அவள் ஐம்புலன்களில் தொக்கிக் நின்று கொண்டிருந்தது... ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தலையில அடிச்சிக்குன்னே...ஏவ் பொன்ன அங்கம்பாக்கம் போலீஸ் கூட்டிட்டு போயிடுச்சி ... ...உன்னைத் தேடி வந்தவங்க பூங்கொடிய கூட்டிட்டு போயிட்டாங்கயானு... நடந்ததை வெளுத்தம்மா புருஷன் கிட்ட சொன்னா... வள்ளிக்கண்ணு கையில இருந்த பொறிய அப்படியே போட்டுட்டு இரண்டு பேரும் பதறிட்டு ஓடி வராங்க... மணி 12 க்கு மேல ஆயிடுச்சு... பஸ்யேதும் அப்போ இல்ல...வேலை கொடுக்குற கைலாசம் வீட்டுக்கு ஓடுறாங்க... வீடு பூட்டிட்டு இருக்கு... பக்கத்துல போய் யாரையும் எழுப்ப முடியல.... விரு விருன்னு பஸ் ஸ்டாப் வந்தா மயாணமா இருக்கு... கிராமம் தான.... அங்கிருந்து 5 கிமீ நடந்து போனா மெயின் ரோடுன்னு நடந்தே வந்துட்டாங்க மெயின் ரோட்டுக்கு... அங்க அங்கம்பாக்கம் பஸ் கேட்டா 2.30 மணிக்கு தான்னு இருந்த ஆட்டோ காரங்க சொன்னானுங்க.... வெளுத்தம்மாக்கு மனசு பொறுக்கல... அழ ஆரம்பிட்டா ... வள்ளிக்கண்ணு அழாம இருக்க சொன்னா... இங்க பாரு சும்மா இரு... ன்னு திட்டிட்டா வெளுத்தம்மாவை... ஆட்டோக்காரங்க என்னன்னு கேட்க... இல்லங்க குடும்ப பிரச்சனை அதான் அங்கம்பாக்கம் போகனும் சொல்லிட்டு ஓரமா போயிட்டு தலையில கைவச்சி குத்த வச்சான் வல்லிக்கண்ணு. கன்னிமா நீ தான்டி எம்பொண்ணுக்குத் துணைன்னு....அழகைய தொடச்சிட்டு நின்றாள் வெளுத்தம்மா. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒரு தனி அறையைக் காட்டி...பூங்கொடிகிட்ட... இங்க கொசு கடிக்குது பாரு... அங்க போய் உட்காரு... ன்னு சொன்ன ஒரு போலீஸ்காரன்... ஏற்கெனவே கள களத்துப் போயிருந்த அவள் பார்வைகள் அமாவாசையின் இருள் போல அப்பிக் கொண்டன..... ‌பரவாயில்லை சார் நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்னு அவ சொல்ல... சொன்னா கேட்க மாட்டியா டி.... எழுந்திருச்சி போடினா போடின்னு போலீஸ்காரன் கத்தனா... அங்க மொத்தமாவே 2 போலீஸ் தான் இருந்தானுங்க... ஒருத்த அவகிட்ட உள்ள போகச் சொல்லி கத்திட்டு இருந்தான்... இன்னொரு போலீஸ் பூங்கொடிய போய் உச்காரச் சொல்ற அந்த ரூம்ல தான் இருந்தா.... அது பூங்கொடிக்கு தெரியும்.... வேனாகய்யா இங்கேயே உச்கார்ந்துக்கேறேன்....... இப்படி என்னை கொடுமை பண்றாங்களே.... செல்லியம்மா எனக்குச் சோதனையாடி ... கெஞ்சுறா பூங்கொடி.... என்னடி நீலிக் கண்ணீரா ஒழுங்கா உள்ளப் போடி.... மிரட்டுறான். நீ செரி பட்டு வர மாட்டேன்னு போலீஸ்காரன் அவளை இழுத்துட்டு போயி அந்த ரூம்ல தள்ளி வெளிய சாத்திட்டா... ஆறறவில் இடி விழுந்தது போல் உணர்ந்தவள் உள்ளேயிருந்தவன் கால்ல போய் விழுந்து.... எதுவும் பண்ணிடாதிங்கயான்னு அழறா... பாருடி இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோ... என்றான் அவன். அய்யோ அய்யோ சாமி அப்படி சொல்லாதிங்கயா... அவ்ளோ கெஞ்சி கூத்தாடுனா... ஒன்னும் பலிக்கல... பாரு உங்க அப்பனை ஜென்மத்துக்கும் வெளிய வராத மாறி உள்ள தள்ளிடுவேன் மனச்சுல வச்சிட்டு நீயே முடிவு பண்ணிக்கோ... உள்ள இருந்த அந்த போலீஸ் காரன் பூங்கொடி கிட்ட சொல்றான். அதைக்கேட்ட சில நிமிடங்களில், ஏதோ புரிந்தும் தெரிந்தும் கடைசியாக அவள் கெஞ்சலில் அவளுக்கே நம்பிக்கை இல்லாமல் போய் அழுகைகள் தானாக நின்று போன போது அது நிகழத் தயாராகிறது. தாவணி பாவடையில் இடை மறைக்காமல் அவள் நடந்து வரும் போது.. பெண்களே ஒரு நிமிடம் பார்த்து விடுவார்கள் அங்கத்தின் இடையினத்தையும் உடன் மெல்லினத்தையும்... இவன் ஆண் தானே... அவளின் மார்பகங்களை கொடுங்காரனின் கரங்கள் அ(க)டையும் போது அவள் வாலிபம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டிருந்த தவங்கள் வெடித்துச் சிதறியது. அவள்பெண்குறிக்கு வாயிருந்தால் கையிருந்தால் காலிருந்தால்.... காரி துப்பும், அவன் கன்னங்கள் பழுக்கும், ஆண்மையினை துரத்தி பந்தாடும். அடுத்து அவன் பயணம் அதை நோக்கிக் தானே... அவளுள் இருக்கும் சின்னஞ்சிறு இதயம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது. அவள் ஆடைகளைக் களையும் போது பருவம் களையப்படுகிறது. நடந்தேறுகிறது அந்த இன்சம்பவம். ஊரை உலுக்கிவிட்டு சூறாவளி திரும்பிப் போவது போல அவள் உடலை பதம் பார்த்து கரை காண்கிறது அவன் ஆண்மை. புயலுக்கு பின் கிடைக்கும் அமைதியில் ஒரு பூகம்பமே வந்து நடனமாடுகிறது பூங்கொடி என்னும் ஊரில். வைரமுத்துவின் வரிகளாகும் நம்ம பூவின் மேடுகளும் பள்ளங்களும் சிவந்து போய் கலங்குகிறது. அவளின் கண்கள் நெருப்பின் தன்மையில் கண்ணீரை மட்டுமே வெளியேத் தள்ளிக் கொண்டிருந்தன... பேண்டை போட்டுக் கொண்டு போலீஸ் வெளியே போய் விட்டான். தள்ளாடிக்கினு ஜாக்கெட்ட இழுத்துப்பூட்டிக்னு தாவணிய எடுத்து போட்டுக்குன்னு எழுந்து நின்னா... இன்னொரு போலீஸ் உள்ள வந்துட்டான். இவளுக்கு ஒன்னும் புரியல... வெளிய போற நோக்குல ஒரு அடியெடுத்து வச்சா.... ... அவளப்பார்த்து அவன் .... எங்கடி போற... என்னப் பாத்தா உனக்கு ஆம்பள மாதிரி தெரியலான்னு கேட்டான்... பூங்கொடியின் மனம் பிணமானது. கண்கள் ஒரு பக்கம் அழுது மாண்டு போகத் துணிந்துக் கொண்டிருந்தது. எத்தனை சுமக்கும் அந்த ஒரு மணிநேரம்... ஐயா என்னால முடியலிங்க... என்ன விட்ருங்கய்யா... தடைபட்டுப் போன விம்மிய குரல்ல சொல்றா... உனக்கென்னடி.. நல்லா தான இருக்க... கம்முனு வந்து படு அதா உனக்கு நல்லது...இந்த பத்தினி வேஷம் லா போடாத புரியுதான்னு கத்தினான். துளிர்மேனி, மாநிறம், கருவளையம் தீண்டாத கண்களும் அடுக்குகள் இல்லாமல் அசைந்து ஆடும் இடைகள் என அவள் தேகத்தில் பறிபோன அவனுடைய கண்ணும் ஆண்மையும் நின்றுக் கொண்டிருந்த அவளை விர்ருனு இழுத்து கீழே படுக்க வைத்தது. ஜாக்கெட்டின் இரகசியத்தையே முதலில் தேடினான். மீசையை முறுக்குவது போல அங்கு விளையாடினான்.ஒரு பக்கம் பூங்கொடியின் தேகம் சிலிர்த்துப் பொங்குகிறது. பூங்கொடி- போலீஸகாரன்னு எல்லாத்தையும் தாண்டி ரெண்டு பேரும் ஆம்பள பொம்பளிங்க தான... இருந்தும் அவள் உடலுக்கும் மனத்துக்குமான போட்டி அது. இளமை தோரணமாகும் அவள் உடல் அவனால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது அவள் மனமோ செய்வினையில் அவன் ஆண்மையை வெட்ட அரிவாள் தேடிக் கொண்டிருந்தது. என்ன செய்வது தீயிட்டு கொளுத்தப்படவேண்டிய நாடகத்தை பூங்கொடியின் பெண்குறி மீண்டும் நடத்தி முடித்து விட்டது. அவனும் வெளியேப் போய் விட்டான்... அவளுக்கே தெரிந்தது இனிமேல் அங்கு யாருமில்லை.... என்றேதோ ஒரு புத்தி சொல்ல தள்ளாடி உடைகளை சுருட்டி எழத்துடித்து மெல்ல சொருவிக் கிடந்த கண்கள் மேலே பார்க்க... எவனே தெரியல... வந்து நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்... எம்மாடியோ... முடியாது சாமி... ஏற்கனவே செத்துட்டே .... ஒன்னும் பண்ணாதய்யா.... அவன் பக்கத்து ஸ்டேஷன் போலீஸாம்... தெம்பில்லாம தலையிலே அடிச்சிட்டு அவன்கிட்ட கெஞ்சினாள்... அவன் கால்ல விழறதுக்கு கூட அவ தெம்பில்லாம அப்படியே உட்கார்ந்த மேனிக்கே இருந்தா... கொஞ்சம் பொறுத்துக்கோன்னு சொல்லிட்டே தொட்டான் அவளை. ... பாலுக்காக உயிர் கொண்ட மார்பகங்களையே கைகளால் ஏசுவது கொய்வது எனத் தொடங்கினான். அவனும் நினைச்சத முடிச்சுட்டான்.... போயிட்டான்... இராஜ்யம் களைந்து சிதலமடைந்து கந்தலாகி அடித்துப் போன ஆற்றில் மிஞ்சுப் போன கூலமாகி விட்ட அவளின் அந்த இடத்தில் இருந்து இரத்தம் வரத் தொங்கிவிட்டிருந்தது. வலி மாளாமல் படுத்த மேனியாகவே இருந்தாள்.... இன்னொருத்தன் வரானான்னு எட்டிப்பாத்தா... யாரும் வர்ல... ஒன்றரை மணி நேரம்... மவ ஜென்மத்து கொடுமைய மணி நேரத்துலப்பட்டுட்டா... மணி 2.30 இருக்கும்... பொறுமையா எழுந்து அவளா வெளிய வந்தா... எதுவுமே பேசல... தாங்கி தாங்கி நடந்துப்போயிட்டு ஸ்டேஷன்கு வெளிய உட்கார்ந்தாள்... எவனும் உள்ள வந்து உட்காருன்னு சொல்லல.... அந்த மூணாவதாக வந்தவன் அங்கிருந்து போய் விட்டிருந்தான்... ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அங்கம்பாக்கம் போற பஸ் வந்துச்சு பாருங்கனு ஆட்டோக்காரன் ஒருத்தன் குரல் கொடுக்க எழுந்து போய் ஏறிட்டாங்க.. ஜாமந்தானே... பஸ்ஸேறி முக்காமணி நேரத்துல அங்கம்பாக்கம் போயிடுச்சு... வள்ளிக்கண்ணுக்கு அந்த ஏரியா லா நல்லா பழக்கம் தான்.... அதனால இறங்கி ஸ்டேஷன்கு ஒரு 10 நிமிஷம் தான் நடந்து வந்துட்டாங்க... எம்மா பூங்கொடின்னு.....வெளிய உட்கார்ந்துக்கொண்டிருந்த பொண்ணப் பாத்துட்டு வெளுத்தம்மா... கத்திகிட்டு ஓடுனா ... புள்ள ஒன்னும் இல்லல்ல... வள்ளின்கண்ணு கேட்டா.... மகளை கட்டிட்டு அழுதாள் வெளுத்தம்மா.. பூங்கொடி இருக்கிறாளே. ..இரத்தக்கறைகள் இருக்கும் இடத்தை இழுத்து இழுத்து மறைத்துக் கொண்டு அழுதாள் எதுவுமே நடக்காதவள் போல... படுபாவிகளின் கோரச்செயல்களுக்கு சாட்சியாகாமல், மூலைக்கு மூலை சீரிப்போயும் அவளின் சிண்டு முடிகளும் இரவு ஊதக்காற்றில் பறப்பது போலவே தங்களைக் காட்டிக் கொண்டு காட்சி அளித்தன... வெளிரிப்போன அவளின் முகமும் தூக்கத்துக்கு தூது வருவது போலத்தான் நடந்த கலகங்களை மறைத்து வைத்தபடி மணிகளை எண்ணிக் கொண்டு நிசப்தத்தில் நிறைந்திருந்தது. .. அழுதாள்.... அவ முத முதல்ல சேயாக தாய் அருகில் இருந்த போது பிஞ்சு கைகள் வெளுத்தம்மாவின் தேகங்களைக் கட்டி அழுது இருக்குமே... அதே போல் அழுதாள்... அவங்க அம்மாவ கட்டிப் புடிச்சிட்டு.... ஒன்னு இல்ல மா.... நல்லா தான் இருக்கேன்.... உள்ள வந்து உட்காரச் சொன்னாங்க மா.... நான் தான் எங்க வீட்ல வராம உள்ளேயே வர மாட்டேன்னு சொல்லி இங்கேயே உட்கார்ந்துட்டேன்னு சொன்னா... உள்ள குரல் கேட்டு போலீஸ் ஒருத்தன் வெளியே வந்தான்.... வந்துட்டியா வள்ளிக்கண்ணு..... நீயா வர மாட்ட போல... உம்பொண்ண கூட்டுன்னு வந்தா தா வருவ போலன்னு கோபமா சொன்னான். அய்யா எதுவா இருந்தாலும் எம்பொண்டாட்டி புள்ளய வீட்ல விட்டுட்டு பொழுது விடிய வரேங்கய்யா... என்று சொன்ன வள்ளிக்கண்ணு வ பாதியில் நிறுத்திட்டு .. அவ்ளோ தான எங்க ஜீப்லயே ரெண்டு பேரையும் கூட்னு போய் வீட்ல விட சொல்ற நீ மட்டும் உள்ள வந்து உட்காருன்னு சொன்னான் குரல் கேட்டு வெளியே வந்த இன்னொரு போலீஸ்... ஒரு போலீஸ், வண்டிய கெளப்பனான்... ரெண்டு பேரையும் ஏறி உட்காரச் சொன்னான் வள்ளிக்கண்ணு... பூங்கொடியாள எழுந்திருக்கவே முடியல.... வெளிய காட்டிக்கவும் இல்ல... அவளின் அந்த இடத்தில் வலிய தாங்கிக்க முடியாம... ஒரு அடி எடுத்துவச்சப்போ பிரசவ வலியைக் கண்டது அவள் தேகம். சோகத்துடன் நடப்பது போல புறத்தில் இயம்பி வண்டிக்கிட்ட வந்துட்டா.... ஏறி உட்காரப்போறா....எம்மவ பாவம். வலியில் உயிர் போவது போல் ஆகிவிட்டது..எதையும் முகத்தில் காட்டிக்காம உட்கார்ந்துட்டா ... ஆனா எம்மானு அழுதுட்டா ... அவங்க அம்மா கேட்டதுக்கு ஒன்னு இல்லனு சொல்லிட்டா.. வண்டி புறப்பட்டது... ரெண்டு பேரையும் குடிசைக்கு கொஞ்சம் முன்னாடியே இறக்கி விட்டுட்டு வண்டி போயிட்டு... எறங்கி அவளாள நடக்க முடியல... தொப்புனு கீழ விழுந்துட்டா .... அவங்க அம்மா கால கட்டிக்கினு ... எம்மா நா மோசம் போயிட்டே மா.. எல்லா உண்மையையும் சொல்லி ஓன்னு அழுவுறா... அடிப்பாவி மகளே இதுக்காடி டி நான் உன்னை பெத்து வளர்த்தேன்.... கன்னிமாரே உங்க கோயில்ல இடிவுழ படுபாவிங்க நாசமா போவ.... என்னன்னவோ சொல்லி வெளுத்தம்மா ஓன்னு அழுவுறா... ஏற்கெனவே அழுது முடித்திருந்த பூங்கொடி வலி தாளாமல் மீண்டும் அவள் அம்மாவைக் கட்டிப்பிடித்து கொண்டு அழ ஆரம்பிச்சிட்டா... மணி விடிய காலை 4.30..5 ஆகப்போவுது... ஏய் பூங்கொடி இது பத்தி யார்டயும் சொல்லாத மா...... உம்மாமன வர வச்சி கலியாணத்தை நான் பண்ணிட்றே ... வெளிய தெரிஞ்சா உன் வாழ்க்கை என்னாகற்து... வெளிய சொல்லதமா... ன்னு அழுதுக்குனே பூங்கொடி கிட்ட சொன்னா வெளுத்தம்மா... எதுவுமே பேசாமா... அமைதியா கண்ண தொடச்சி்ட்டு மெல்ல எழுந்தாள். கை தாங்களாக கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டா அவ அம்மா... அவங்க வரும்போது..அங்கிருந்த குடிசையில் எதுலயுமே விளக்கெறியல... எல்லாக் கதவும் மூடி ட்டு தான் இருந்தது... எல்லாரும் நைட்டு பாத்துட்டு தான் இருந்தாங்க. பூங்கொடிய உள்ளக் கொண்டு போய் படுக்க வச்சா.... வலியில அசந்து தூக்கிட்டா பூங்கொடி. காலையில் தேவியும் சிவகாமியும் வந்து என்னாச்சுனு கேட்க... இராத்திரியே நாங்க போய் கூட்டிட்டு வந்துட்டோம் அவள... மவ ஸ்டேஷன் வெளியவே உட்கார்ந்திருந்தா ... உங்க மாமாவை மட்டும் உள்ள கூட்டிட்டு போய்ட்டாங்க...அப்புறம் ஜீப்லயே பூங்கொடியையும் என்னையும் கொண்டு வந்து விட்டுட்டாங்க ன்னு எல்லார்டையும் சொன்னா...வெளுத்தம்மா... அதுக்கப்புறம்ப பூவ பாத்துகிட்டு வெளுத்தம்மா வீட்லே தான் இருந்தா .... கொஞ்சம் பரவாயில்லை பூங்கொடி இப்போ... காலையில் 11 இருக்கும்... வள்ளிக்கண்ணு மூனு நாள் கழிச்சு தான் வீட்டுக்குள்ள நுழையுறான்..... பூங்கொடிக்கு நடந்த எதுவுமே அவனுக்கு தெரியாது.... வந்தததும் ... ஏ புள்ள பூங்கொடி ...உன் மாமன வரச்சோல்லி முதல்ல கலியாணம் முடிக்கணும் ... கரும்பு வெட்டப்போயிருக்கிற செங்கேணி இன்னும் 1 மாசத்துல வந்துடுவான்... எதுவும் சொல்லாம கல்யாணம் கட்டிக்கணும்... நேத்து ராத்திரி உன்ன போலீஸ புடிச்சிட்டு போயிடுச்சினு தெரிஞ்சதும் உசிரு எங்க கிட்ட இல்ல ... இப்போ உனக்கு எதுவும் ஆகல. . இனிமேல எங்களாள இப்படி ஒன்ன தாங்க முடியாது ... நீ ஒருத்தகிட்ட போயிட்டா நாங்க நிம்மதியா இருப்போம்மா.. என்று சொல்லிய வள்ளிக்கண்ணின் கருவிழிகள் கண்ணீர் துளிகளின் அலைகளில் மிதந்துக் கொண்டிருந்தது. அவ சரின்னு தலையாட்டிட்டா.... காலம் ஓடியது...அந்த செங்கேணி வரும் மாதமும் வந்தது... வந்த கொஞ்ச நாட்கள்ல கல்யாணம் முடிந்தது. பூங்கொடி மாமியார் வீட்டுக்கு போயிட்டா... பக்கத்து ஊரு தான்... அன்றிரவு பூங்கொடிக்கும் செங்கேணிக்கும் முதலிரவு... பூங்கொடி அவன் கதகதப்பில் பாதுகாப்பை உணர்ந்தாள்... அந்த மீசை அவளுக்காக துடித்துக் கொண்டிருந்தது....அரையடி தூரத்தில் படுத்திருந்த அவளை செங்கேணியின் ஒரே இழுப்பு அவன் அங்கத்தோடு சேர்த்துக் கொண்டது. அவள் கொங்கைகள் அவன் அணைப்புகளின் குடமுழுக்கில் நனைந்துப்போனது. பிறகென்ன இரவின் திரையை நான் மூட வேண்டும்...சாந்தி முகூர்த்தம் இனிதே நிறைவுற்றது... பூங்கொடி கர்ப்பம் அடைந்தாள். ஆண் குழந்தை கன்னியப்பனுக்கும் தாயாகி, மூன்று மாதம் ஆகியிருக்க, குழந்தையையும் பூங்கொடியையும் வீட்ல விட்டுட்டு கரும்பு வெட்டப்போயிட்டா செங்கேணி. 6 மாதம் கழித்து வந்த செங்கேணி உடனொருத்தியை அழைத்து வந்திருந்தான்.. உடல் வாகுவில் அவள் பூங்கொடிக்கு சளைக்காதவளாக இருந்தாள் ஆனால் அவளை விட 3-4 வயது பெரியவள். செங்கேணிக்கும் பூங்கொடிக்கும் 7 வயசு வித்தியாசம்... இனிமே இவளும் இங்க தான் இருப்பா.. உனக்கு விருப்பம் இருந்தா இரு .. இல்லனா உங்க அம்மா வீட்டுக்கு கெளம்புனு சொல்லிட்டான் செங்கேணி... பூங்கொடி எதுவுமே பேசல... அம்மா வீட்டுக்கு வந்துட்டா... எல்லாத்தையும் சொன்னா வீட்ல... வீட்ல திடீர் முடிவு எதுவும் எடுக்க முடியாம... அப்படியே ஒரு 10 நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் குழந்தைக்கு துண்டு மூடிக்குனு பால் கொடுத்துக் கொண்டிருக்க, குழந்தையின் கைகள் அவள் மார்பகங்களைத் தடவிக் கொண்டே பசியாறிக்கொண்டிருந்தது. தடவிய கைகளை வெளியே எடுத்த பூங்கொடி பட்டு பட்டுனு அடிச்சுட்டா... உச்சம் சென்று சூடு வைக்கவும் முயன்றாள்... வெளுத்தம்மா தடுத்துட்டா... அவள் ஏன் அப்படி செய்தாள் என்று எனக்கும் தெரியவில்லை... இன்னொரு பூங்கொடிக்கு மட்டுமே அதற்கான பதில் தெரிந்திருக்கும்...

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.