அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை போட்டி 2023
சின்ன வயசு...பெரிய மனசு ! * மாலா உத்தண்டராமன் *
“இங்கே பாருய்யா...இந்த வருஷம் முச்சூடும் நாம ஒய்வு, ஒழிச்ச லில்லாம உழைச்சதுக்கும், சிந்தின வேர்வைக்கும் பிரதிபலனா, வயல்ல முந்திரி நல்லா வெளைஞ்சி, அதிசயமாக நிறைய மூட்டை கெடைச்சிருக்கு...போன வருஷத்தை விட, இந்த வருஷம் ரெண்டு மடங்கு வெளச்சல்..எல்லாம் இயற்கை அருளிய புண்ணியம்..முந்திரி மூட்டையை வண்டியில ஏத்தறே...டவுன்ல இருக்கிற ஒழுங்கு முறை தானியக் கமிட்டியில எடை போட்டு விக்கறே.. அதுக்கான ரொக்கத்தை வாங்கி- பையிலே போட்டு பத்திரமா வூட்டுக்கு கொண்டாந்து சேக்கறே.. அதுமட்டும்தான் டவுன்ல உன்வேலை! இதைஉன் நினைப்புல, மந்திரம்போல, பதிச்சு வச்சிக்கோ! ஆமாம்.கறாராய்ச்சொல்லிபுட்டேன்..”எச்சரித்தாள்அஞ்சலை.மெல்லியதேகம்; ஐம்பது வயது. கணவன் மீது இப்போது கொஞ்சம் கூடுதல் சந்தேகம் தோன்றி-:தனி உபதேசம் சொல்லி சொல்லி களைத்துப் போன முகம்.
“ அதையே எத்தனை வாட்டிதான் சொல்லுவே அஞ்சலை..? நான் இன்னும் புரிஞ்சிக்கலைன்னு முடிவுபண்ணிட்டியா..? நீ எதை மனசிலே வச்சிட்டு இப்படி வம்பு வளர்க்கிறேன்னு நல்லா தெரியுது.. பெரியமேதையாட்டம்புத்திமதிசொல்லிகோவத்தைக் கெளப்பாதே..இன்னும் கொஞ்ச நேரத்திலே கந்தன் டிராக்டர் ஓட்டிட்டு வந்திருவான். முந்திரி மூட்டைகளை ஏத்தியாகணும். அதுக்கு ஒருமணி நேரம் பிடிக்கும். சுருக்க பொறப்பட்டாத்தான் வரிசையில மொத ஆளா நின்னு ரசீது வாங்க தோதுபடும்..” ஐம்பத்தைந்து வயது முத்துசாமி பவ்யமாகப் பதில் சொன்னான்.
அத்துடன் அஞ்சலை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கணவன் பேச்சில் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை. மறுபடியும் அபாயச் சங்கை ஊதினாள்.
“பணம் கைக்கு கிடைக்கிற வரைக்கும், நல்லஆளா இருப்பே..கொஞ்சம் கனமானதொகை மட்டும் உன்கண்ணிலே பட்டுட்டா போதும்..அப்புறம் புத்திபிசகஆரம்பிச்சிடும்..அவன்கூப்பிட்டான்..இவன் கெஞ்சினான்னு, அந்த கருமாந்திரக்கடை பக்கம் உன்கால் தானாக போயிடும்..நம்ம செல்லப்பொண்ணு மீனாட்சிக்கு முகூர்த்ததேதி நிச்சயம் பண்ணிட்டோம்கிற எண்ணம் மனசிலே கெட்டியாக இருக்கட்டும் இன்னும் இருபது நாள்ல கலியாணம் நடக்கப் போவுதுங்கிறதை மறந்திடாதே.! பண்னையார்கிட்டே கடன் வாங்கி, முந்திரி விவசாயத்துக்கு முதல் போட்ட பணம்யா.. சொன்ன சொல் மாறாம,வட்டி சேர்த்து, திருப்பிக் கொடுத்திடணும்..மீனாட்சியோட கல்யாணச் செலவையும் சமாளிக்கணும்.. அப்போதான்யா ஊர்ச் சனங்க நம்மள மதிப்பாங்க.” மூச்சிரைக்க விவரித்தாள்.
“எதுக்குமே நீ கவலைப்படாதே அஞ்சலை..இந்த தடவை மார்க்கட்டிலே முந்திரி செமவிலை போகுது..உன் எண்ணம்போல எல்லா கடனையும் அடைச்சிடலாம்.. மக கலியாணத்தையும் ஜோரா முடிச்சிடலாம்..சீக்கிரம் இட்லியைப் போடு..! வேற எதுவும் பேசி தொணதொணக்காதே..” எரிச்சல் பொங்கிற்று.
“ஆமா..இப்போ, ஐயா இப்படித்தான் நடிப்பே..இந்த அதிகார வார்த்தை யெல்லாம் நீ திரும்ப வரும்போது காத்தோட போயிரும்..உன்னைக் கெஞ்சி கேட்டுக்கிறேன்..தயவுபண்ணி,வேற திசைப்பக்கம் மூஞ்சியைத் திருப்பாமல் நேரா வூட்டுக்கு வரணும் சரியா..? சத்திய வாக்கு மாறாமல் இருந்தால் போதும்” மீண்டும்-மீண்டும் கெஞ்சிக் கலங்கினாள்.
“ஏண்டி..! என்னை மொடாக்குடிகாரன்னு மட்டமா எடை போட்டுட்டியா..? நீ பாட்டுக்கு உபதேசமா அள்ளிக் கொட்டறே..நாம் பட்ட கஷ்டம் தெரியாதா..? எனக்கு சுயபுத்தி இல்லைன்னு நெனைப்பா..? நீ எதிர்பார்க்கிற மாதிரி சரியா வேலையை முடிச்சிட்டு, ஒழுங்கா வந்திடறேன்.இது சத்தியம் போதுமாடி?“ தன்கையால் அவளது உள்ளங்கையில் அடித்து, வாக்குறுதி தந்தான் முத்துசாமி.
“சரிசரி..ரொம்பகோபப்படாதே.. நம்ம நன்மைக்காகத்தான் இம்மா நேரமா சொல்றேன்.. வாய்யா சாப்பிடலாம்..” ஒருவழியாக சாந்த நிலைக்கு வந்தாள்.
“அம்மாடியோவ்..! சண்டைஓய்ஞ்சிடிச்சா.? சமாதானம் ஆயிடுச்சா..? இப்பதான் எனக்கு நிம்மதி..பசி வயித்தைக் கிள்ளுதுப்பா”சிணுங்கினாள் மீனாட்சி.
தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தான்முத்துசாமி.பாசமகள் மீனாட்சியும் அப்பாவின் அருகில் அமர்ந்தாள்.எப்போதும்அப்பாவோடு சேர்ந்து உண்ணுவது வழக்கம்.இருவருக்கும் சூடாக இட்லியை யும்,மீன் குழம்பையும் பரிமாறினாள் தாய். ஆனந்தமாக சாப்பிட்டு முடித்தனர் தந்தையும்,மகளும்.
வெளியில் டிராக்டர் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதிலிருந்து கந்தனும் இரண்டு உதவியாட்களும் இறங்கினர்.
“மளமளன்னு மூட்டைகளை ஏத்து கந்தா..நேராமயிடுச்சு..”துரிதப் படுத்தினாள் அஞ்சலை.
வாசல் ஓரமாக- தயாராய் அடுக்கி வைத்திருந்த-முந்திரி மூட்டை களை, ஒவ்வொன்றாகத்தூக்கிச்சென்று, வாகனத்தில் ஏற்றி முடித்தார்கள் கந்தனும், வேலையாட்களும்.
“அஞ்சலை..நான் போயிட்டு வர்றேன்..நீ சாப்பிட்டு மற்ற வேலையைக் கவனிச்சுக்கோ..மவளே மீனாட்சி..! நீ அம்மாவுக்கு கூடமாட உதவி செய் கண்ணு” விடைபெற்றான் முத்துசாமி.
“நான் சொன்னதை மனசிலே நல்லா பதிய வச்சிக்கோ. ஏய் கந்தா..! அவரு கூடவே நீ இருக்கணும்..கமிட்டியிலே எடை போட்டு, முந்திரி மூட்டையை ஒப்படைச்சதும், பணத்தை வாங்கிட்டு, அவரை பத்திரமா வூட்டுக்கு கூட்டிட்டு வர்றது உன்னோட பொறுப்பு..! வேற எங்கேயும் போவக்கூடாது புரிஞ்சுதா..? “ மிரட்டல் தொனியில்-பலமுறை ஆணையிட்டாள்.
கந்தனும்,சகாக்களும் மண்டையை ஆட்டி சம்மதித்து விட்டு, டிராக்டரை உசுப்பினர். ஊர் எல்லை திரும்பும் வரை அவர்களை கண் கொட்டாமல் பார்த்து, வழியனுப்பிவிட்டு, தாயும்,மகளும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
அன்று அந்தி சாயும் வேளை-
முத்துசாமியின் வீட்டில் ஒரு பெரிய பூகம்பம் வெடித்தது.
வாசலில் - பத்திரகாளி கோலத்தில் அஞ்சலை !
எதிரில்- பரிதாப உருவத்தில் முத்துசாமி !
“யோவ்..!நீ கிளம்பறப்பவே ஆயிரம் தடவை தலைபாடாய் அடிச்சிட்டேனே.. திரும்ப திரும்ப கெஞ்சிக் கேட்டேனே..அப்போமட்டும் பெரிய ரோஷக் காரனாட்டம் செக்கு மாடு மாதிரி தலையை ஆட்டி,சத்தியம் அடிச்சியே.. இப்போ எந்த நிலைமையில இங்கே வந்து நிக்கறே..உன் புத்தி பத்தி எனக்கு தெரியும்யா..?”சேறு அப்பி, நனைந்து, அழுக்காகி போயிருந்த முத்துசாமியின் சட்டையைக் கொத்தாகப் பிடித்திழுத்து உலுக்கினாள்.
“என்னை மன்னிச்சிடு அஞ்சலை..வரிசையில் நின்னு,முந்திரிக்கு விலையை நிர்ணயம் பண்ணி, மொத சீட்டு நான்தான் வாங்கினேன்.. உடனே எடை போட்டு,கணக்கு வேலையும் சடுதியில் முடிச்சேன்.. மத்தியானம் தான் தொகையைக் கொடுத்தாங்க..வெளியிலே வந்த சமயம்-நம்மஊர் பயலுவ மூணு பேர் வந்தாங்க..அவனுங்களால வந்த வினைதான். ”அண்ணே..நீ வருஷம் பூரா உழைச்சதுக்கு நல்ல பலன் கிடைசசிருக்கு.. அதை சந்தோஷமாக் கொண்டாடடிடணும்னே.. சூடேறிப்போன உடம்பைக் குளுமை படுத்திடணும்னே.. ஒருநாள் மகிழ்ச்சியாகஇருக்கிறதிலேதப்பில்லே..அதிகமா வேணாம்..கொஞ்சம் போதும்...ஒண்ணும்செய்யாதுன்னே..’ன்னுஅதையும், இதையும் பேசி என்னை மயக்கிட்டானுங்க... எவ்வளவோ சொல்லி மறுத்துப் பார்த்தேன்..அவனுங்க வலுக்கட்டாயமாக என்னை இழுத்திட்டு போயிட்டா னுவ.முடியாது..முடியாதுன்னு கத்தினேன். மேலே பேசவிடாம வாயிலேஊத்திப்புட்டானுக.. உன்கிட்டே கொடுத்த சத்தியத்தை மீறிட்டேன்.. வாக்குறுதி தவறிட்டேன்….தோத்திட்டேன் அஞ்சலை...” தேகம் குலுங்க, நடுங்கி, கும்பிட்டான் முத்துசாமி.
“சரிய்யா..என் பேச்சை உதறியடிச்சிட்டு குடிச்சுத் தொலைச்சே.. போனாப் போவுதுன்னு மன்னிச்சிடலாம்..ஆனால்-மூக்கு முட்ட ஊத்திட்டு, நிலை கொள்ளாம தள்ளாடிட்டு ,முந்திரி வித்த காசு சுளையா ரெண்டு லட்சத்தை எங்கேயோ தொலைச்சிட்டு வந்து நிக்கறியே..அந்த கந்தன் பயலை நம்பி, உன்கூடஅனுப்பிவச்சி ஏமாந்துட்டேன்..கடையில இறக்கிவுட்டுட்டு தன்னோட ஆளுங்க ளோடு ஓடிப்போயிட்டான் போலிருக்கு.. கூலியாளுங்க ஓடினதுகூட தெரியாம, தன்னை மறந்து போதையில கிடந்திருக்கியே.. வெட்கமாயில்லே உனக்கு..? வருஷம் பூரா மாடாய் உழைச்சதுக்கு பிரதிபலனா கிடைச்ச வருமானத்தை கொஞ்ச நேரத்திலே பறி கொடுத்திட்டு வந்திருக்கியே நியாயமாய்யா..கடனை திருப்பி எப்படி கொடுப்பே..? மீனாட்சி கலியாணத் துக்குஇப்போஎன்னபண்ணுவே... பெத்த பொண்ணோட எதிர்காலத்தைப் பத்தி சிந்தனை இருந்தா, குடிக்கிற யோசனை உனக்கு வருமாய்யா.? எவ்வளவு திமிரும், அலட்சியமும் இருந்தா இப்படி கோட்டை விட்டுட்டு வூட்டுக்கு வருவே..?ஒருவருஷ சம்பாத்தியத்தை, ஒருநிமிஷத்திலே காணாம பண்ணிட்டியே..எந்த மொகத்தை வச்சிட்டு, எல்லார்கிட்டேயும் காரணம் சொல்லப்போறே. .மானமும், மரியாதையும் கப்பலேறிடும்..இந்த உசிரை வச்சிட்டு, இனி-தலைநிமிர்ந்து நடக்க முடியாது! பேசாமா மூணுபேரும் தற்கொலை செஞ்சிட்டு சாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்..வயக்காட்டுக்குப் போய்பூச்சிமருந்து டப்பாவை எடுத்திட்டு வர்றேன்..அதைக் குடிச்சிட்டு உசிரை வுட்றலாம்..அதுக்கும் தடை போட்டே அருவாமனையால கழுத்தை அறுத்திருவேன்....உன் கேடுகெட்ட செய்கையால் என் பொண்ணு எதிர்காலம் சூன்யமா யிடுச்சு..! “ கர்ண கொடூரமாக கர்ஜித்தாள்.
அப்போது-தண்ணீர்க் குடத்துடன் உள்ளே அடியெடுத்து வைத்த மீனாட்சி விஷயம் புரிந்து, அதிர்ந்து- குடத்தை கீழே வைத்து விட்டு,வாயடைத்து போய் சுவரோரம் சாய்ந்து கொண்டாள்.
“நீ செஞ்சது மகா கொடுமைப்பா..என் கலியாணம்பத்தி உன் மனசு மட்டும் நினைச்சிருந்தா இப்படி பொறுப்பில்லாம அழிச்சாட்டிய காரியம் பண்ணிட்டு வருவியாப்பா..?அதனால அம்மா சொன்ன மாதிரி மூணு பேரும் பாஷாணம் தின்னுட்டு உசிரை மாய்ச்சிக்கு வோம்..அநாதை போனமாக் கிடந்தா, யாராவது ஈமச்சடங்கு காரியம் நடத்தி பொதச்சிடுவாங்க.. அதுதான்சரியான தீர்வு..!” முதன் முறையாக-அப்பாவைத் திட்டித் தீர்த்தாள் மீனாட்சி.
“மவளே..! மீனாட்சி..உன்னை கலங்க வச்சிட்டேன்மா...நான் அளவுக்கதிகமா குடிக்கலை..நிதானத்தோடதான் இருந்தேன். பணப்பையை கவனமா வச்சிருந்தேன்...டவுன் பஸ்ஸிலே ஏர்ற வரைக்கும், பணப்பையை கக்கத்திலே, சாக்கிரதையாத்தான் இறுக்கிப் பிடிச்சிருந்தேன். நல்லா ஞாபகமிருக்கு.. அப்புறம்தான்,பை,கைநழுவி, கீழே விழுந்திருக்கணும்……ஊர்ல வந்து இறங்கினப்ப, பையைக் காணலை..” வார்த்தை தழுதழுத்து கதறினான் முத்துசாமி
அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ஊரே அந்த வீட்டு வாசல்முன் திரண்டது.
“ஐயோ..! கொஞ்சம் கூட யோசிக்காமல், குடிக்க ஆசை பட்டு, புத்தி கேட்டு, பொறுப்பில்லாம,அற்பத்தனமாநடந்திட்டியேமுத்துசாமி.நமக்கு குடும்பம் புள்ளைங்க தான் முக்கியம்பா..அந்த நெனைப்பு இருந்திருந்தா,இப்படி தொலைச்சிட்டு வந்து நிப்பியா? எங்கேயோ பணத்தை களவு கொடுத்திட்டியே.... மழை வேற பெஞ்சிட்டிருக்கு இந்த அகால வேளையில எங்கே போய்த் தேடறது...?” ஆளாளுக்கு- மாறி, மாறி முத்துசாமியை வறுத்தெடுத்தார்கள்.
“ நான் பண்ணின தப்புக்கு நீங்க ஏன் சாகணும்..?நான்தான் பாவி..உசிரோட இருக்க எனக்கு அருகதை கெடையாது.. மானம் போன பின்னாடி மனுஷனுக்குக்கு எதுக்கு இந்த அல்ப உசிரு..? நான்தான் சாகணும்.. அதுதான் சரியான தண்டனை..!...” கேவி அழுது கொண்டு, வெளியே ஓடியவனை அனைவரும் பிடித்துக்கொண்டனர். ஆக்ரோஷமாக-அவர்களை நெட்டித் தள்ளிவிட்டு- மறுபடியும் முன்னேற எத்தனிக்கையில்-
அங்கே-.ஒரு ஆட்டோ வந்து நின்றது.அதிலிருந்து ஒரு சிறுவன்,ஒரு பெண்மணி, மற்றும் ஒரு போலீஸ்காரர் இறங்கியதைக் கண்டு விக்கித்து நின்றான் முத்துசாமி. கூட்டத்தினரும் என்ன ஏதென்று விளங்காமல் முழித்துக் கொண்டு பார்த்தார்கள்.
“முத்துசாமிங்கிறது நீங்ககதானே..? அவசரப்படாதீங்க..நீங்க தற்கொலை பண்ணிக்க போக வேணாம்..நீங்க தொலைத்த பணம் கிடைச்சிடுச்சு....!” அவனது கரங்களைப் பிடித்து-தடுத்தி நிறுத்தி, தகவல் சொன்னார் காவலர்.
“ஆ அப்படியா..? என் பணம் எப்படி உங்களுக்கு.. ஒண்ணுமே புரியலைங்க ஐயா..” சொற்கள் திணறினான்.உடம்பெல்லாம் வியர்த்து சிலிர்த்தது.
அஞ்சலையும், மீனாட்சியும் வாயடைத்து,வியந்து நோக்கினார்கள். ஊர் சனம் ஆச்சரியத்துடன் வாய் பிளந்தார்கள்.
“இந்த பையன் பேரு முகமது காதர்..அவங்க அப்பா நெஞ்சுவலி காரணமா ஆஸ்பிடல்ல படுக்கையில் இருக்காரு..அவருக்கு இரவு சாப்பாடு கொடுத்திட்டு வீட்டுக்கு திரும்பற வழியில பஸ் ஸ்டாப்பில் உங்க பணப்பை கிடந்ததிருக்கு..அதை பத்திரமா எடுத்திட்டு போய் அம்மாகிட்டே கொடுத்திருக்கான்..கணவனுக்கு வைத்தியம் பார்க்க அந்தப் பணத்தை பயன்படுத்திக்க அந்த அம்மா நினைச்சிருக் கலாம்.யார்கிட்டேயும் சொல்லாமல் மறைச்சிருக்கலாம்..ஆனால்-அப்படியெல்லாம்பணத்துக்காக சபலப்படாமல்-உயர்ந்த மனசோடு, நேர்மையாக முடிவெடுத்து, போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர்கிட்டே விவரம் சொல்லி ஒப்படைச்சிட்டாங்க.. நல்லவேளை அந்த பையிலே தானியக் கமிட்டியில் பணம் வாங்கின ரசீது இருந்திச்சு.அதிலே உங்க அட்ரஸ் கிடைச்சது.. உடனே இன்ஸ்பெக்டர் ஐயா இவங்களோடு என்னை அனுப்பி,உங்ககிட்டே விஷயம் சொல்லிட்டு வர உத்தவிட்டார்...நீங்க என்னோடு ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் ஐயாவைப் பார்த்து விவரம் சொல்லி, கையெழுத்து போட்டுட்டு தொகையை பெற்றுக்கலாம்..” என்றார் காவலர்.
“எல்லாம் உங்க பெண்ணின் அதிர்ஷ்டம். மீனாட்சி திருமணத்துக்கு நீங்க உண்மையா உழைச்சி,சம்பாதித்தபணம் உங்களுக்கே கிடைச்சிருக்கு..நாங்க புறப்படறோம்..” என்றாள் பர்தா அணிந்த பெண்மணி.இரவுநேரம் என்றும்பாராமல்- மகனோடு பயணித்து நேரில்வந்துதொகையைஒப்படைத்தஅந்தபெண்மணியை சொந்தத்தாயாக பார்த்து முத்துசாமி குடும்பத்தாரும்,ஊர் மக்களும் நன்றி கூறி, வணங்கினார்கள்.
“இந்த சின்ன பையனுக்கு இத்தனை பெரிய உள்ளமா ? வழியில் கிடச்ச பெரும்தொகையை, தாய் மூலமாக, மிகவும் பொறுப்பு ணர்வோடு, கொண்டு வந்து கொடுத்திருக்கானே..முகம்மது காதர் மிக சிறந்த மாணவன்..நம்ம ஊர் தலைவர்கிட்டே இந்த பையனைப் பத்தி எடுத்துச் சொல்லி,அரசாங்க விருது வழங்க முயற்சி செய்யணும்..” வாய் குளிர வாழ்த்தினார்கள்.
“அதுக்கும் எங்க இன்ஸ்பெக்டர் ஐயா ஏற்பாடு பண்ணிட்டாரு.. நாளன்னிக்கு டவுனுக்கு வர்ற அமைச்சர், காதர் வீட்டுக்கு நேரில் சென்று, பாராட்டி,பரிசு கொடுக்கப்போறார். அவனோட அப்பாவின் வைத்தியசெலவையும் அரசாங்கமே ஏத்துக்கப்போவுது..”அடுத்தடுத்து-.மகிழ்ச்சிச்செய்தியை- வரிசையாக அடுக்கி விவரித்தார் காவலர். “ “நல்லவருக்குஎன்றும்நன்மையேகிடைக்கும்..”சிறுவனுக்கும், தாய்க்கும் ஊர்ப் பெரியவர் ஆசிர்வாதம் வழங்கினார். எல்லோரிடமும் விடைபெற்றுசிறுவனும்,தாயும்காவலரோடுகிளம்பினார்கள். அதிசயம் பொங்க, அவர்களை உன்னித்தவாறு, அந்த ஆட்டோ போகும் திசைநோக்கி கையெடுத்துக் கும்பிட்டார்கள் முத்துசாமி குடும்பத்தாரும் ஊராரும் !
*********************************************
அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை போட்டி 2023
இக்கதை என் சொந்தக் கற்பனையே: மொழிபெயர்ப்போ, தழுவலோ அல்ல;வேறு இதழ் எதிலும் வெளியாகவில்லை; வேறு எதற்கும் ( இணயம், வலைதளம்,ஊடகம்..)இந்த சிறுகதைப் போட்டி க்காக மட்டுமே எழுதப்பட்டது-என உறுதி அளிக்கிறேன்..நன்றி PDF இல் அனுப்பியுள்ளேன்
மாலாஉத்தண்டராமன்(ப.உத்தண்டராமன்) 221 சக்தி நகர் விரிவு2 காந்திநகர் அஞ்சல்,வடகுத்து,கடலூர் மாவட்டம் 607308 (செல் 9443876491) தமிழ்நாடு இந்தியா uths5mala@gmail.com
தற்குறிப்பு
மாலாஉத்தண்டராமன் எனும் புனை பெயரில் எழுதும் இவரின் இயற் பெயர் உத்தண்டராமன்300க்குமேல்சிறுகதைகள் 25 நாவல்கள் பல கவிதைகள் பிரபல இதழ்களில் வெளியாகியுள்ளன. நிறைய பரிசுகள் விருதுகள் பெற்றவர். இதுவரை 4நூல்கள் வெளியிட்டுள்ளார்.
**********************************************
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்