ANANTHA KUMAR
சிறுகதை வரிசை எண்
# 81
பெளர்ணமி விடியல்
“நான் சொன்னத மறுபேச்சு பேசாம கேட்டுட்டு தலை ஆட்டிட்டு சும்மா போவான்னு நானே எதிர்பார்க்கல” என்றார் பெரிதாக சிரித்து கொண்டே..நாட்டமை சாமிகண்ணு..
இரண்டாவது ரவுண்டுதான் போய்க்கொண்டிருகிறது. அதற்குள் நாக்கு லேசாக குழற ஆரம்பித்தது..
“ஆமாங்க ஐயா. எப்போதும் எதாவது எடக்கா பேசிட்டுதான் போவான். இன்னிக்கு என்னமோ எதுவுமே பேசல.. பயந்துட்டான் போல..” என்று எப்போதும் போல ஜால்ராவை நன்றாகவே தட்டினார் கந்தசாமி’
பின் என்ன சும்மாவா? சீமை சரக்கை யார் இலவசமாக கொடுப்பார்கள். குடிக்கிற சரக்கிற்கு நாணயமாக இருப்பதால் யாருக்காகவும் அவர் நாட்டாமையை விட்டு கொடுப்பதில்லை. அவருடனே இருப்பதால் ஊர் பெரிய மனிதர் என்ற மரியாதை வேறு.
‘தமிழ்செல்வன்… அவனை…’ கண்ணை மூடிக்கொண்டு நறநறவென பற்களை கடித்தார் நாட்டாமை.
செம்மிபாளையம் கிராமத்தில் இருக்கிற ஐநூறு குடும்பங்களும் அனேகமாக நாட்டமையை எதிர்த்துப் பேசுவதில்லை.பெரும்பாலும் விவசாயத்தை நம்பி வாழ்கிற குடும்பங்கள்.. இவரின் தயவு இல்லாமல் வாழ்வது கடினம் என்பதால் அடங்கித்தான் போய் கொண்டு இருந்தார்கள் தமிழ்செல்வன் மெதுவாக தலை எடுக்கும் வரை.
ஆரம்ப காலங்களில் அவன் அப்பன் கணக்கு பிள்ளை கதிர்வேலு போல. இவரை பார்த்தால் பதறி எழுந்து அவனும் வணக்கம் போட்டு கொண்டுதான் இருந்தான். ஒருமுறை செவந்தியை இவர் ஆட்கள் தூக்கி கொண்டு போவதை பார்த்து தடுக்க முயன்றவன் நன்றாக அவர் ஆட்களிடம் உதை வாங்கினான்.
அவள் திடிரென தற்கொலை செய்து கொண்டவுடன்தான் முதன் முதலில் நியாயம் பேசத்தொடங்கினான். ஆரம்பத்தில் அவன் பேசுவதை யாரும் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் சட்டம் படித்து முடித்து விட்டு வந்த பிறகு ஒரளவுக்கு ஊருக்குள் அவனை மதிக்க தொடங்கினார்கள்.
முதன் முதலாக விவசாயிகளுக்குள் ஒற்றுமையை விதைத்தான். எப்போதும் போல் விளைச்சல் நேரத்தில் நட்டமையிடம் மோட்டார் தண்ணிர் கேட்டு மன்றாடும் விவசாயிகளை அவர்களுள் ஒருவரான மயில்சாமியின் கிணற்று நீரை உபயோகபடுத்தி கொள்ளச் சொல்லி கொடுத்தான். பட்டணத்தில் இருந்து யாரையோ கூட்டி வந்து சொட்டு நீர் பாசனம் சொல்லி கொடுத்தான்.
அவர்களுக்குள் ஒரு சங்கம் அமைத்தான். மாதம் கொஞ்சம் பணம் போட சொல்லி கொடுத்து கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க ஏற்பாடு செய்தான்..
எத்தனையோ முறை அழைத்து பதவி ஆசை காட்டியும் அரசாங்க வேலை வாங்கி தருவதாக சொல்லியும் பட்டணம் போய் விடும்படி எச்சரித்தும் நாட்டமை பேச்சை தமிழ் மதிப்பதாக இல்லை. கதிர்வேலுவிடமும் எச்சரித்தாயிற்று.
“அவன் எங்கங்க ஐயா நம்ம பேச்சை கேக்கறான். எதாவது கேட்டா சட்டம் பேசறான். இல்லாதவங்களுக்கு நிறைய பண்ணனும்னு சொல்றான். சின்ன வயசு. போகப்போக புரிஞ்சுட்டு திருந்துவான்.அவன் பேச்சை விடுங்கய்யா வெட்டிபய.. ” என்று நாசூக்காக நகர்த்து விட்டார். அவர் வாங்கி இருந்த கடனையும் வட்டியுடன் சேர்த்து தமிழ் கொடுத்து விட்டதால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை
இதையெல்லாம் கூட அவர் பொறுத்து கொண்டார். மொத்த விளைச்சலையும் இவரிடம்தான் கிராமத்து விவசாயிகள் விற்று கொண்டிருந்தார்கள். அதிலும் தலையிட்டு இவரின் பங்காளி தர்மலிங்கத்தை உள்ளே கொண்டு வந்து ஒரு போட்டியை உருவாக்கினான். இதனால் நெல்லின் விற்பனை விலையை அதிகரித்தை அவரால் ஒப்பு கொள்ள முடியவில்லை.
இத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நான்கு வருடமாக செய்ததில் அவனுடைய குரல் எல்லா இடங்களிலும் கொஞ்சம் அதிகரித்து கேட்கிறது. முதலில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும் சமீபகாலங்களாக அவனை விட இந்த கிராமத்திற்கு தான்தான் முக்கியம் என்றும் தமிழை ஓரங்கட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டார் நாட்டமை.
இவரை பார்த்தால் பயந்து கும்பிடு போட்டு கொண்டு இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருந்தது. அதனால் அவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்றுதான் நாட்டமை தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தார். அப்போதுதான் ஒரு வாய்ப்பு அதுவாகத் தேடிக்கொண்டு அவரிடம் வந்தது.
இரண்டு வருடங்களாக பொய்த்து போனது மழை. வேறு வழியின்றி தண்ணீருக்காக எல்லோரும் நாட்டமையிடம் வந்தார்கள்.
உதவி செய்வது போல எந்த பேரமும் பேசாமல் எல்லோருக்கும் தண்ணிர் கொடுத்ததில் இந்த வருட விளைச்சலை அவருக்கே கொடுப்பதாக அனைவரும் ஒப்புக் கொண்டார்கள்.
எந்த பலனும் கேட்காமல் உதவி செய்த அவரை உடனே நல்லவர் என்று கிராமத்தில் யோசிக்காமல் ஒத்துகொண்டார்கள். இந்த நேரத்தில்தான் நாட்டாமை பஞ்சாயத்தை கூட்டினார். தொண்டையை செருமிக்கொண்டவர்
“எல்லோரும் நல்லா கேட்டுக்கங்க. நம்மூர்ல இது வரைக்கும் மழை பொய்ச்சதே இல்ல. வருசா வருசம் விடாம நம்ம அம்மன் தயவில விவசாயம் செழிச்ச பூமி இது. இப்ப ரெண்டு வருஷமா மழை இல்ல. இந்த வருஷம் எல்லோர்க்கும் நான் உதவி பண்ணேன். ஏன்னா உங்களுக்கு ஒரு கஷ்டம்னா என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. ஆனா அதே சமயத்தில நம்ம இப்படியே விட்டுடவும் முடியாது.. என்ன பண்ணலாம் சொல்லுங்க” என்றார்.
“ஐயா நீங்கதான் இந்த ஊருக்கு பெரிய மனுஷன். நீங்களே பாத்து ஏதாவது செய்யுங்க” என்றார் கூட்டத்தில் ஒருவர்.
இதைத்தான் அவரும் எதிர்பார்த்திருந்தார்.
“நீங்க எல்லாரும் கேக்கறதுனால நம்ம ஊர் பெரிய மனுசங்க சார்பா சொல்றேன். நம்ம ஊர் பழமையான கோவில். அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்தவ. கோவில புதுப்பிச்சு குடமுழுக்கு விழா ஒன்னு நடத்திடலாம். அம்மன் மனசு குளிர்த்து போச்சுன்னா மழை அடுத்த வருஷம் கொட்ட வைப்பா அப்படிங்கறது நாங்க எடுத்த முடிவு” எல்லோரும் என்ன சொல்றீங்க”
“என்ன ஐயா இப்படி கேக்கறீங்க. நீங்க சொல்றதுக்கு எதுத்து பேச இந்த ஊர்ல யாருக்கு தைரியம் இருக்கு. உங்கள விட இந்த ஊர் நல்லது கெட்டது யாருக்கு தெரியும்” என்றார் எப்போதும் போல் கந்தசாமி.
“அது சரிங்க. இதுக்கு பணத்துக்கு என்ன பண்ண போறோம்” இது தமிழ்செல்வன்
“அப்படி கேளு தமிழு, படிச்ச தம்பி, அதான் சரியா கேக்குது. ரெண்டு வருஷமா பள்ளிகூடத்துக்கு வசூல் பண்ண பணம் இருக்குதல்ல.. அதை எடுத்துக்க வேண்டியதுதான்.. சாமிக்கு அடுத்துதான் நமக்கு எல்லாமே.. என்னையா சொல்றீங்க” என அனைவரையும் பார்த்து கேட்டார் நாட்டமை.
அவருக்கு இந்த கிராமத்தில் ஒருவன் படித்து விட்டு கேட்கிற கேள்விகளே பிடிக்கவில்லை. இதில் எல்லோரையும் படிக்க வைத்தால் நாளை சுத்தமாக மதிப்பே இருக்காது என்பதால் அதை மிகச்சரியான நேரத்தில் தன் ஆயுதத்தை கையில் எடுத்தார்.
“அதெப்படிங்க ஒத்துக்க முடியும். நம்ம ஊருக்குனு ஒரு பள்ளிக்கூடம் கட்றது நம்ம எல்லோரோட கனவு. அப்பத்தான் எதிர்காலத்துல நம்ம கிராமத்து குழந்தைங்களும் படிப்பாங்க. இன்னிக்கு உள்ளூர்ல அஞ்சாம் வகுப்பு வரைக்கும் தான் படிக்க வெக்க முடியுது. அதுக்கு அப்புறம் வெளியூருக்கு அனுப்ப முடியாம அப்படியே படிப்பு நெறைய பேருக்கு நின்னு போகுது”
“இப்ப நீ படிக்கலையா தம்பி. வேணும்னா எல்லாரும் உன்னை மாதிரி போய் படிச்சுக்க வேண்டியதுதான்.. மத்தவங்க எல்லோரும் என்னைய்யா சொல்றீங்க”
கனத்த மௌனம் நிலவியது.
“இதுக்கு உங்க பங்காளி தர்மலிங்கம் ஜயா என்ன நினைக்ககறார்னு கேக்கலாமா... என்று இழுத்தான் தமிழ்.
“தாராளமா கேட்டு பாருங்க. அவரு என்ன ஊருக்கு ஒரு நல்லது நடந்தா வேணாம்னா சொல்ல போறாரு” என்றார் நாட்டமை.
எல்லோரும் தர்மலிங்கத்தை பார்த்தார்கள். அவரோ தமிழ் எதிர்பார்த்ததற்கு எதிராக கோவிலை புதுப்பிக்கலாம் என்ற கட்சியில் நின்றார். இத்தனை நாட்கள் பள்ளிக்கூடம் வேண்டும் என்றவர் ஒரு தர்மகர்த்தா பதவிக்கென கட்சிமாறி விட்டார் என்பது நட்டாமைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இதை அவர் முதலே எதிர்பார்த்து இருந்ததால் பங்காளியிடம் பேசி பதவி ஆசை கட்டி தன் வழிக்கு கொண்டு வந்திருந்தார்.
என்றாலும் தமிழும் அவனை சேர்ந்தவர்களும் விடவில்லை. கடைசியில் நிறைய பேசி எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையில் கடவுள் பூசாரி மேல் இறங்கும். கடவுளிடமே உத்தரவு கேட்டு விடலாமென்று முடிவு செய்தார்கள்.
நாட்டாமையும் தமிழும் இதற்கு ஒத்து கொண்டார்கள். நாளை பௌர்ணமி. இந்த நேரத்தில்தான் தமிழ் அமைதியாக எதிர்த்து பேசாமல் போனதை பார்த்து அவன் பயந்து போனதாக நாட்டமை சொல்லி கொண்டு இருந்தார்.
“ஐயா நாளைக்கு பூசாரி ஏதும் மாத்தி சொல்லிட மாட்டரே” என்றார் கந்தசாமி கொஞ்சம் சந்தேகத்துடன்.
“அதெப்படி சொல்லுவான். நான் கொடுக்கிற உத்தரவுக்குத்தான் அவன் வேல பார்ப்பான். அம்மன் என்னைக்கு உத்தரவு கொடுத்துருக்கு. நான்தான் இங்க கடவுள்.இதுவரைக்கும் எத்தன வேலைய அவன வெச்சு முடிச்சு இருக்கேன்”
அது மட்டும் இல்ல. தமிழ் கூட நம்ம பையன் ஒருத்தன் உள்ளற இருக்கான். அவன் சொல்லித்தான் தர்மாவ விலைக்கு வாங்குனேன்”.
“இப்ப கூட நம்மூர் நாடகத்துல நடிக்கற கிழவிக்கு சாமி வர மாதிரி அவங்க தரப்புல தயார் பண்றாங்கனு தெரிஞ்சு அவங்களுக்கும் பணம் கொடுத்து ஊரை விட்டு கிளம்பி போக சொல்லிட்டேன்”
என்று மிக பெரியதாக சிரிக்க ஆரம்பித்தார் நாட்டமை.
“இனி வெற்றி நம்ம பக்கம்தான் ஐயா” என்று குழறிக் கொண்டே எழுந்த கந்தசாமி நாளைக்கு பாரக்கலாங்க ஐயா.. உத்தரவு வாங்கிக்கறேன்” என்று ஆடிக்கொண்டே கிளம்பினார்.
பௌர்ணமி.. நிலவும் என்ன நடக்க போகிறது என தெரிந்து கொள்ள உறங்காமல் காத்திருந்தது. அனைவருக்கும் என்ன உத்தரவு கடவுளிடம் இருந்து வருமோ என மனது முழுதும் பதற்றம் சடுகுடு ஆடியது.
கிராமம் முழுதும் பய பக்தியுடன் பூசாரியை பார்த்து கொண்டிருந்தது. எல்லா நேரங்களிலும் அவருக்கு சாமி வருவதில்லை. ஒருவேளை இன்று வரா விட்டால் அடுத்த பௌர்ணமி வரைக்கும் காத்திருக்க வேண்டி இருக்கும்.
தமிழ் யாரையோ எதிர் பார்த்து கொண்டு இருந்தான். ஆனால் யாரும் வர போவதில்லை என்று நாட்டாமை மனதிற்குள் சிரித்து கொண்டார்.
திடிரென பூசாரி சிலிர்த்து கொண்டார்..
“டே…ய்.. என்று கத்திகொண்டே சாமி வந்தது மாதிரி ஆட ஆரம்பித்தார். எல்லோரும் பயபக்தியுடன் கன்னத்தில் போட்டு கொண்டார்கள்.
“ஆத்தாவுக்கு ஒரு குறை இருக்குடா..தீத்து வைக்கணும்டா..இல்லன்னா இந்த கிராமமே அழிச்சுரும் என்று சுழன்று ஆடத்தொடங்கினார்”
நாட்டமை உடனே முன் வந்து
“சொல்லு தாயி.. எதுவா இருந்தாலும் நாங்க நிறைவேத்தி வெக்கறோம்” என்றார் பவ்யமாக..
“இது என்னோட ஊருடா.. இங்க என் குழந்தைங்க எல்லோரும் பக்தியோடயும் இருக்கணும். புத்திசாலியாகவும் இருக்கணும். அதுக்கு என் குழந்தைஙக படிக்கறதுக்கு உடனே ஊருக்குள்ள ஒரு பள்ளிக்கூடம் கட்டணும்டா”
என்றவுடன் அனைவரும் பயபக்தியுடன் கன்னத்தில் போட்டு கொண்டார்கள்.
பூசாரி மெதுவாக மலையேற தொடங்க… சூடம் கொடுத்தும் அப்படியே முழுங்கியவர் மெதுவாக தமிழ் பக்கம் திரும்பி கொண்டே மயங்கி விழுந்து விட்டார். ஊர் மக்கள் அவரைத்தண்ணீர் தெளித்து எழுப்பி கொண்டிருந்தார்கள்.
மெதுவாக கண் விழித்த பூசாரி
“என்ன நடந்தது” என்றார் அப்பாவியாக..
போன வருடம் நடந்த பூசாரியின் மகன் விபத்துக்கு அவசரத்தில் ரத்தம் கொடுத்து உதவிய தமிழுக்கு தன்னுடைய நன்றி கடனை பூசாரி செலுத்தி விட்டார்.
தமிழ் எதிர்பார்த்த அவன் நண்பன் நாடகத்தில் நடிக்கும் அவன் அம்மாவிற்கு நாட்டமை கொடுத்த பணத்தில் நல்லபடியாக ஆபரேஷன் முடிந்தது என்றான். அதற்காகத்தான் அவன் நாட்டாமை பக்கம் சேர்ந்தது போல் நடித்தான்.
வானம் இருட்டி கொண்டு வந்து இடி மின்னலுடன் பௌர்ணமி வெளிச்சத்தில் மழை கொட்ட ஆரம்பிக்க தமிழ் அம்மனை உற்றுப்பார்த்தான். உத்தரவு கொடுத்த அவள் அவனை நோக்கி புன்னகைத்த மாதிரி தோன்றியது.
கடவுளின் உத்தரவில் பூரித்துப்போன கிராமமக்களின் முகம் பெளர்ணமி வெளிச்சம் பட்டு விடியலாய் மின்னியது!
ச.ஆனந்தகுமார்
********************************************
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்