logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

தா. ஜோசப் ஜூலியஸ்

சிறுகதை வரிசை எண் # 80


பொன்னார் மேனியனே “பொன்னார் மேனியனே…புலித்தோலை அரைக்கசைத்து…. மின்னார் செஞ்சடைமேல்…மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே…மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால்…இனியாரை நினைக்கேனே” தேவாரப் பாடலை பின்னணிப் பாடகர் ஜேசுதாசின் குரலில்இந்தோள ராகத்தில் மெய் மறந்து பாடிக் கொண்டு அமர்ந்து இருந்தார் அந்த சிவனடியார். கொன்ன மரத்தடிச் சாமியார் என அந்த வட்டாரத்தில் அழைக்கப்படும் அவரது தலைக்கு மேலிருந்த கொன்றை மரம், மஞ்சள் கொன்றை மலர்களை பொற்துகள்களாக அவர் மீது தூவி அவருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தது. மஞ்சள் கம்பளம் விரித்தது போல் காட்சி அளித்த அந்த இடத்தில் ஒரு தெய்வீக மணம் கமழ்ந்து கொண்டு இருந்தது. அவருக்கு எதிரே வந்து, நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்து, வணங்கி எழுந்து சிறிது நேரம் நின்று இருந்த செம்புலியப்பன், சாமியார் கண்ணைத் திறக்கும் வரைக் காத்து இருந்தார். அவரது கையில் இருந்த அழுக்கேறிய ஐம்பொன்னாலான தூக்கும், களைக் கொல்லியும் அவரை ஒரு விவசாயி என முத்திரை குத்திக் காட்டிக் கொண்டிருந்தன. முழுதும் பாடி முடித்து கைச் சொம்பிலிருந்து ஒரு வாய் ”தூத்தம்” குடித்த சிவனடியார் செம்புலியப்பனைப் பார்த்து தொண்டையைக் கணைத்து விட்டுக் கேட்டார். ”என்ன செம்புலி அப்பனே, காலையில் கவலையாய் வந்து நிற்கிறீர்?” ”ஒங்களுக்குத் தெரியாததா சாமீ. நீங்கள் முக்காலமும் ஒணர்ந்தவர்.” ”உம் பையன் பத்தின கவலையா அத்த விடு. அவன் ஒன்ன எங்கோ கொண்டு நிறுத்தப் போகிறான். அவனால்தான் உன் வீட்டுக்கு விடியல்” “அதுக்கான அறிகுறியே காங்கலியே சாமி”. ”அறிகுறி எல்லாம் வந்துருச்சு, ஒங்கண்ணுக்குத் தெம்படல .சரியான காலத்துல, எல்லாமே சரியா நடக்கும். நமச்சிவாயா, அந்த புள்ளய காப்பாத்து, நீ வயக் காட்டு வேலயப் போய்ப் பாருய்யா” ”எல்லாம் என் தலை எழுத்து” எனத் தன்னையே நொந்து கொண்டு பெரிய கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பினார் செம்புலியப்பன். “ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லிக்கிட்டே போ. எல்லாம் நல்லபடி நடக்கும்” என்றார் அந்த சிவன் அடியார். அம்புலியப்பனைத் தாண்டிச் சென்ற ஒரு ஹீரோ ஹோண்டா இரு சக்கர வண்டி சட்டென நின்றது. ”ஏறுப்பா, ஒன்னை இறக்கி விட்டுப் போறேன்” என வண்டியில் இருந்து அவரது மகன் மணிகண்டன் கூப்பிட்டான். மத மதவென வளர்ந்து , பெரிய அதிகாரி போல் தோற்றம் அளிக்கும் அவனைப் பார்த்து, செம்புலியப்பன் “தொர, காலங்காத்தால எங்க கெளம்பியாச்சு?” ”அட வாப்பா, காலங்காத்தால வாயக் கிண்டாத” “நீயும் படிச்சு பெரிய எஞ்ஜினீரா வருவேன்னுதான் கடன ஒடன வாங்கி ஒன்ன படிக்க வக்கிறேன். நீயோ பொறுப்பில்லாம சுத்திக்கிட்டு அலையற. தேவை இல்லாம அந்த பொத்தையடி கண்ணுசாமி கொத்தனார் கிட்ட வேற சித்தாள் வேலைக்கு போறே. இது நல்லா இருக்குதா? பேசாம, அஞ்சு வீட்டு பண்ண கேட்டா மாதிரி நிலத்தை அவருக்கு கொடுத்துட்டு நானும் பட்டணம் போயி கடை கண்ணி வச்சி பொழக்கலாம்னு பாக்கேன்.” ”வேணாம்பா,அந்த பேச்ச எடுக்காத” ”ஏண்டா, நீயும் வெவசாயம் பண்ண வர மாட்ட. நெல்லு விக்கற வெலயிலயும், யூரியா, பொட்டாஷ்னு ஒர மருந்து விக்குற வெலயிலயும் போட்ட மொதல கூட நம்மளாள எடுக்க முடியல. வானம் பாத்த பூமியை வச்சுக்கிட்டு அழுவ சொல்றியா” ”வேணாம்பா, மறந்து போய் கனவுல கூட நெலத்தை யாருக்கும் அடமானம் கூட வச்சுடாத” ”ஏண்டா அப்படி சொல்ற. அப்ப ஒனக்கு இந்த நெலத்து மேல அவ்வளோ பிரியமா. ஆனால் அதுல இறங்கி ஒழக்க மாட்டே, என்னா ஏதுன்னு கேட்டுக்கவும் மாட்டே” ”இருப்பா, அது விஷயமாதான் லைப்ரரி போய்ட்டு இருக்கேன்”. ” நெலத்துக்கும் லைப்ரரிக்கும் என்ன சம்பந்தம்.” ”இருக்கு. நம்ம நெலத்துல இருக்குற கல்பாறையெல்லாம் கலர் மாறிப் போச்சி கவனிச்சியா, மண்ணும் கொஞ்ச நாளா மங்கி செவப்பா மாறி இருக்குதா. அவளோ ஏன்... எட்டு வீட்டுப் பண்ணையார் ரெண்டு நாளக்கி ஒரு தடவ வந்து நெலத்தை கெரயம் பண்ணிக் கொடுன்னு கேக்குறாரா?” ”ஆமா, அதுலாம் சரிதான். அதனால என்ன?” ”அந்த கொன்ன மரத்தடிச் சாமியார் ஒனக்கு என்ன சொல்லி அனுப்பினார்?” ”ஓஹோ, எல்லாம் ஒன் வேலையா? பேசி வச்சுக்கிட்டுதான் என்னை ஏமாத்துறீங்களா?” அய்யோ, அப்பா, நான் வேணூன்னா ஒன்ன ஏமாத்தலாம், அவருக்கு அதுல என்ன லாபம். அவர் உண்மையைத்தான் சொல்வார். அதற்குள் வயல் வந்துவிடவே, வண்டியை நிறுத்தினான் மணிகண்டன். ”என்ன எழவோ எனக்கு ஒன்னுமே புரிய மாட்டெங்குது.” ”நீ போய் வேலைய பாரு. நான் சாயங்காலம் எல்லாம் வெவரமா சொல்லி போடுறேன்.” அவர் கவலையுடன் வயலுக்குள் இறங்குவதைப் பார்த்து விட்டு, வண்டியக் கிளப்பி, அந்த சாலை முனையில் திரும்பி, நாலு ரோடு சந்திப்பில் வேகமாக வண்டியை விரட்டினான். அஞ்சு கிராமம் எனும் பெயர்ப் பலகை தாங்கிய அந்த அரசு பேருந்துக்கு பின்னால், அதனை முந்த முயன்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை மீறி, அவனை இடித்துத் தூக்கிப் போட்டது. அவன் சாலை ஓரம் இருந்த ஹாலோ ப்ளாக் தொழிற்சாலையின் முள்வேலி தாண்டி உள்ளே தொப்பென விழுந்தான். மனிதருக்கு வலி இல்லாமல் செய்ய கடவுளே உடன் கொடுக்கும் மருந்து ஆகிய மயக்கதேவதை அவனை அரவணைக்க உடன் அவன் தன்னை மறந்தான்.. நல்ல வேளையாக, அவன் லைப்ரரி செல்வதற்காக பாக்கெட்டில் வைத்து இருந்த அடையாள அட்டை அவனை யாரென்று அடையாளம் காட்டியது. அவனை கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கிருந்து நாகர்கோயில் எடுத்துச் செல்லப்பட்டான். அங்கு ஒரு வார கால சிகிச்சைக்குப் பிறகு, அவனால் எழுந்து அமர முடிந்தது. காலில் ஏற்பட்ட முறிவு குணமாக இரண்டு மாதம் ஆகும் என்ற நிலையில் அவனை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டனர். வீடு திரும்பிய அன்று மதியம் அவன், தனது செல்போனை எடுத்து தரும்படிக் கேட்டு வெகு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தான். வாசலில் யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்தவன் எட்டு வீட்டுப் பண்ணையார் அங்கு நிற்கக் கண்டு, படுக்கையில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டான். ”வாங்கைய்யா, வாங்கைய்யா”, என மிக பவ்யமாக செம்புலியப்பன், தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு வரவேற்றார். குட்டையான வாசற்படி நிலைக் கட்டையில் தலை இடித்து விடாமல் குனிந்து உள்ளே வந்து நிமிர்ந்தவர், காமராஜர் கணக்கில் அத்தனை அம்புட்டு உயரம், அத்தனை வாளிப்பு. உள்ளே வரும்போதே எட்டு வீட்டுப் பண்ணை சொன்னார், “எலே, ரோட்டில் வண்டி ஓட்டத் தெரில, நீயெல்லாம் எங்ஜினீரா? வயசான ஆத்தா அப்பனை துடிக்க வச்சிட்டியே. ஒனக்குலாம் எதுக்குலே வண்டி. கேடு கெட்ட படிப்பு படிக்குறியா? செல்லமாகத் தட்டுவது போல் முதுகில் ஓங்கித் தட்டி விட்டு, அவன் நெளிவது கண்டு” ஆனாலும் ஒனக்கு ஆயுசு கெட்டிடே. இனிமேலாவது அப்பா சொல்றத கேட்டு, நெலத்தை வித்துப் போட்டு கடை வச்சு பொழச்சி போ. கூட மாட காசு வேணுன்னா தயங்காம கேளு. நம்ம பய புள்ளைகளுக்கு தராம நான் வேற யாருக்கு தருவேன். அவசரத்துக்கு இல்லாத காசு, இருந்தா என்ன இல்லாட்டிப் போனா என்ன. என்னா செம்புலியப்பா நான் சொன்றது சரிதான. ஒன்னோட நிலப் பத்திரத்து காப்பி ஒன்னு எனக்கு குடு. சும்மா, நாள தள்ளிப் போடாத. நாளக்கி இப்படி நடந்தா மாதிரி வேற ஏதாச்சும் நடந்தா. பாவம் ஒன் பொஞ்சாதி, தாங்க மாட்டா. அழாதம்மா” என அவள் அருகில் சென்று ஆறுதல் சொல்லும் சாக்கில் அவளது முதுகினைத் தடவி நின்றான். பின், ”ஒடம்பைப் பாத்துக்கோ” எனச் சொல்லி விட்டு வெளியேறினான். ”நீ ஏம்மா அந்த பாடு முன்னால வர. போய்ட்டானா பாரு. அப்பா, இது சரியில்ல. அவனுக்கு இல்லாத நெலமா? ஏன் நம்ம நெலத்து மேலயே குறியா இருக்கான்னுதான் நானும் அவன் வீட்டு வேலயாட்களை விசாரிச்சேன். அதுல எதோ நமக்குத் தெரியாத விஷயம் சதியா நடந்துட்டு இருக்கு”. ”அதைச் சொல்றேன்னு சொல்லிட்டுத்தான் நீ ஆஸ்பத்திரிக்கு போயிட்ட, இப்பவாவது அது என்னான்னு சொல்லித் தொலை.” “இருப்பா, செவுத்துக்கும் காது இருக்கும்னு சொல்லுவாங்க. அதனால அப்பறமா சொல்றேன். அவன் அப்படி சொன்ன இரண்டு நிமிடம் கழித்து அவர்கள் வீட்டு பின்புறம் அருகில் நின்று இருந்த இரு சக்கர வண்டி கிளம்பிச் செல்வது கேட்டது. ”சொன்னேன்ல, நம்ம பேச்ச ஒட்டுக் கேக்குராகப்பா?” “என்னடா கூத்து இது? யார் அவுக.?” “தோ, வந்திட்டுப் போச்சே ஒன்னோட அபிமான எட்டு வீட்டு பண்ணை. அதோட வேலையாதான் இருக்கும். நீ அதுக்கு நெலத்தை கொடுக்கறேன்னு எப்பவாச்சும் சொன்னியா?” ”ஆமாம், சொன்னேன், நீ ஒதவாக்கரையா சுத்தி வந்துக்கிட்டே இருக்குற. அதனால சொன்னேன். ”அது சரி, அத நான் விக்க வேண்டாம்னு சொல்றதை அவரிடம் எப்பவாது சொன்னியா?” ”இல்லையே, அப்படி நான் என் மவனையே காட்டிக் கொடுப்பனா?” ”அப்ப, நீ சொல்லாம, அப்பா சொல்றத கேட்டு நெலத்து வித்துப் போடுன்னு இன்னக்கி சொல்றாரே, அது எப்படி?” ”அவர்கிட்ட நான் நேரடியா சொல்லல. அரசல் பொரசலா நான் மத்தவங்க கிட்ட பேசுறது அவர் காதுக்கு எட்டி இருக்கலாம்”. ஒரே பக்கம் படுத்து இருந்ததில் மணிகண்டனுக்கு வலது தொடை மரத்துப் போனதால் அவன் ’அம்மா’ என முனகி காலை வேறு புறம் கைகளால் தூக்கி வைத்தான். அவன் படும் வேதனையைப் பார்த்த அவனது தாய், ”தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்; வேகமா வண்டி ஓட்டாத வண்டி ஓட்டாதன்னு. கேக்க மாட்டான், அவன் யார் பேச்சும் கேக்க மாட்டான்” என புலம்பிக் கொண்டே அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள். செம்புலியப்பன், நடந்ததை எல்லாம் கொன்ன மரத்தடி சாமியாரிடம் சொல்லி பரிகார பூஜை ஏதாவது செய்யணுமான்னு கேக்க வேண்டும் என கவலையுடன் சிந்தித்துக் கொண்டு இருந்தார். தனது ஆண்ட்ராய்ட் அலைபேசியில் கூகுளுக்குள் எதையோ தேடுவதில் மூழ்கி இருந்தான் மணிகண்டன். அவன் தேடிய விடையும் கிடைத்தது. தனது தந்தையிடம் அவன் ஏற்கெனவே கூறியது போல், அமிலக் கனிமக் கலவை திரவங்கள் அந்த எடத்தில் பாறைகளின் நிறத்தை வெளிறச் செய்யுமோ அது ஒன்றே, தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புடை கனிமங்கள் இருப்பதற்கான அறிகுறி ஆகும். எனவே, அதைத் தொடர்ந்து தங்கள் நிலத்தில் இரும்பு ஆக்சைடுகளாகிய ஹேமடைட், மாகினடைட் மற்றும் இரும்பு கற்கள் இருக்கின்றனவா, சிறிதளவு பொற்துகள் மணலில் கலந்து இருப்பினும் கனிம வளத்தின் அடையாளம் எனலாம். பொன் உற்பத்தி செய்யும் பாறைகள் இடத்துக்கு இடம் மாறுபட்டாலும், இது பொதுவான அறிகுறி எனக் கொள்ளலாம் இரு வேறுபட்ட விதத்திலான பாறைகளுக்கு இடையே பாளமாக இறுகி இருக்கும் கற்கள் அதனை ஒரு மண்டலம் போல் பிரித்து சாதக மண்டலம் ஆக்கி விடும். பாலை நிலங்களில் கற்பாறை போன்ற பொன்கட்டிகள் சரிவான பகுதிகளில் அமைந்து நீரோட்டம் போல் நீண்டு ஓடி இருக்கும். குழாய் வடிவ கற்களாக இருக்கும் இடங்களில் இருந்து கிடை மட்ட மண்டலமாக அமைந்து புதிய பொற்பாதைகள் அமைந்து இருக்கும். இவற்றை எல்லாம் படித்து விட்டு தனது அப்பாவுக்குச் சொந்தமான நிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அவன் கணக்குப் போட்டுப் பார்த்தான், ”எசக்கியம்மா, தாயே” என நிலையை மீறி மகிழ்ச்சியில் கத்தினான். என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் டக்கென எழுந்து நிற்க, காலில் முறிவு அதிகமாகியது. அவனை மீளவும் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்வதைக் கண்ட ஊர் மக்கள் மணிகண்டனை ஏதோ காத்து கருப்பு அடித்து விட்டது. அதான் ஒன்னு மாத்தி ஒன்னு நடக்குதுன்னு பேசிக் கொண்டனர். மேலும் ஒரு மாதம் கூடுதலாகப் படுக்கையில் அவனைத் தள்ளியது. அதுவே செம்புலியப்பனுக்கு அந்த நில பேரத்தைத் தள்ளிப் போடசாதகமாக அமைந்தது.. வேஸ்டி வில்லியம் என்ற பெயரில் அந்த நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வீரர் அஞ்சு வீட்டுப் பண்னையிடம் அந்த நிலம் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார். அதன் பின் பண்ணையிடம் அவ்ர் கூறினார், ”ஒத்து வரானா பாரு, இல்லனா கவர்மெண்ட் ரோடு போட போகுதுன்னு சொல்லி நில ஆர்ஜித நோட்டீஸ் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அதெல்லாம் நம்ம தாசில்தார் ஜோரா செஞ்சுடுவார். தட்டித் தூக்கிடுன்னு சொன்னா, நீ வெட்டித்தான் தூக்கனுங்கற. மெதுவா பாத்து பதவிசா பண்ணு, ஒரு பொட்டு சந்தேகம் கூட வரக் கூடாது. ரெண்டு மாசத்துல தேர்தல் வேற வரப் போகுது செலவும் நெறைய இருக்கு.” “அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க எங்கிட்ட பொறுப்ப ஒப்படைச்சாச்சுல்ல, நிலம் ஒங்களுக்குத்தான்.” வேஸ்டி வில்லியத்தின் சம்பந்தியின் நிலம் முடியும் இடத்தில்தான் செம்புலியப்பனின் நிலமும் இருந்தது. மாமனாருக்குப் பின் அது தனக்குத்தான் என்பதால் அதனை விஸ்தரிக்க எண்ணிய வில்லியம் அஞ்சு வீட்டுப் பண்னையைத் தூண்டி விட்டு செம்புலியப்பன் நிலத்தை அடி மாட்டு விலையில் பிடித்துப் போட எண்ணி சூழ்ச்சி செய்தான். அஞ்சு வீட்டுப் பண்னைக்கும் அந்த நிலத்தின் மீது ஒரு கண். ஏனெனில், அது தனது பண்ணையில் கிழக்கு மூலையில் அமைந்து இருந்ததால் தனக்கு மேலும் சாதகமாக இருக்கும் என எண்ணி அவன் அதனை தானே வாங்கி கொள்ள எண்ணினான். பாரத பிரதமர் வருகையை ஒட்டி சாலைகள் சீரமைக்கப்பட்டதில் சாலை ஒப்பந்ததாரருக்கும் வேஸ்டி வில்லியத்துக்கும் பணப் பகிர்வில் பெரிய மனத்தாங்கல் ஏற்பட்டது. ஒரு நாள் நாகர்கோயிலில் இருந்து வேஸ்டி தனது புல்லட் வண்டியில் இரவு படம் பார்த்து விட்டு வரும்போது தாமரைக் குளத்துக்கு அருகில் அவனது ஜோலியை முடித்து விட்டனர். போட்டிக்கு ஆள் இல்லாத நிலையில், எட்டு வீட்டுப் பண்ணை, செம்புலியப்பனின் நிலம் இனி தனக்குத்தான் என மனப்பால் குடித்துக் கொண்டு இருந்தான். தைப்பூசம் முடிந்த மறு நாள், மணிகண்டன் மேற்பார்வையில் செம்புலியப்பனின் நிலத்தைச் சுற்றி, தகர வேலி அடிக்கப் பட்டது. இரண்டி செண்டுக்கு மேற்கூரைகளும் வேயப்பட்டது. வங்கிக் கடன் எடுத்து, எவர் சில்வர் பாத்திரம் செய்யும் தொழிற்சாலை கட்டி மணிகண்டன் அதில் ஒரு பத்துப் பேரை வேலைக்கும் அமர்த்தினான் என அவனது வீட்டினர் விளக்கம் கூறினர். பதறிப் போய்க் கேட்ட அஞ்சு வீட்டுப் பண்னையிடம், மகன் தனக்குத் தெரியாமல் லோன் வாங்கி விட்டான், நிலத்தை அடமானம் வைத்து விட்டான் என செம்புலியப்பன் அப்போதைக்கு பொய் சொல்லி தப்பினார். ஜியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவிடம் ஏற்கெனவே மணிகண்டன், சிறு பாறைக் கட்டிகளைக் கொடுத்து அவை தங்கக் கட்டிகள்தான் என ஊர்ஜிதம் செய்து இருந்தான். அவற்றில் ஒன்றை, ஒன்றரை கிலோ கிராம் கணம் இருப்பதை, நாகர்கோயிலில் ஒரு சேட்டிடம் விற்று பணம் பெற்றுக் கொண்டவன், சேட்டுக்கு மேலும் விற்பனை செய்வேன், விலை மாறக் கூடாது என வாய் ஒப்பந்தமும் செய்து கொண்டான். மணிகண்டனின் திடீர் பணக்காரத் தோற்றம் எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைத்தது. ஆயினும் செம்புலியப்பன் கொன்ன மரத்தடி சாமியார் சொல்லிக் கொடுத்தபடி, மணிகண்டன் என்ன சொல்ல சொல்வானோ அதையே எல்லோருக்கும் சொல்லி வந்தார். அஞ்சு வீட்டுப் பண்ணைக்கு நிலம் கை விட்டுப் போனது மட்டுமல்லாமல் மணிகண்டன் தன்னை மதிக்காமல் செல்வதை தாங்க முடியவில்லை. மணிகண்டன், கள்ளக் கடத்தல் தொழில் செய்கிறான் என உள்ளூர் காவல்துறையில் காதில் போட்டு வைத்தான். அவர்கள் மணிகண்டனைத் தொடர்ந்து சென்று, நாகர்கோயில் சேட்டிடம் அவன் தங்கம் விற்றதைக் கண்டு பிடித்தனர். விஷயம் மாவட்டக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டு, அவர், மாவட்ட ஆட்சியர்தான் கனிமவளக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நில ஆர்ஜிதம் செய்து கனிம வளங்கள் அரசுக்கு சேரும்படி செய்ய நடவடிக்கை எடுக்க இயலும் எனக் கூறியதால் மணிகண்டனை மாவட்ட ஆட்சியர் விசாரனைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பினர். மாவட்ட ஆட்சியரின் நோட்டீஸ் கண்ட மணிகண்டன் ஒரு நிமிடம் ஆடித்தான் போனான். சே, இத்தனை காலம் காத்து இருந்து இவை அத்தனையும் அரசுக்குப் போகத்தான் வேண்டுமா என சிந்திக்கலானான். கொன்ன மரத்தடி சாமியாரிடம் என்ன செய்யலாம் என யோசனை கேட்டான். அன்று நிறைந்த அமாவாசை. சாமியாடிக் கொண்டு இருந்த சாமியார் ஒரு நிலைக்கு வரட்டும் எனக் காத்து இருந்தான். ஆனால் அவனக் கண்ட அந்த சாமியாடி, ”அவனின்றி அணுவும் அசையாது. தெரியும்ல. பொளதிகம் படிச்சவனே, அசைவு விதியக் கூட நம்மாள் சொன்னாக் கேக்க மாடீங்கன்னு, வெள்ளைக் காரனை விட்டு சொல்லச் சொன்னான் அந்த ஈஸ்வரன். ஒவ்வொரு அசைவுக்கும் வினைக்கும் சமமா, அதற்கு இணையா எதிர் வினை உண்டு. நீ போடா ராஜா. சுப்ரீம் கோர்ட்ல உனக்கு சாதகமா தீர்ப்பு இருக்கு” என அவன் கேட்க நினைத்த காரியத்திற்கு பதில் கூறி முடித்து விட்டார். உள்ளூர் கோர்ட்டுக்கே போகாத நான், சுப்ரீம் கோர்ட் வரை போக வேண்டுமா? இந்த நிலத்தை சீல் வைத்து விட்டால், அதுவரை வருமானத்துக்கு நான் பழையபடி சித்தாள் வேலைக்குத்தான் போக வேண்டும். கோர்ட் வழக்கு எல்லாம் முடிய குறைந்தது பத்து வருஷமாவது ஆகும். அதுவரை வருமானத்துக்கு என்ன செய்யலாம் என குழம்பி, செல்போனை பார்த்துக் கொண்டு இருந்தான். ஏழு நாட்கள் உருண்டோடின. விசாரணைக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது. ”செல்லதுரை வக்கீல்” எனப் பெயர் பெற்ற நாகர்கோயிலின் நோட்டரி பப்ளிக் வக்கீல் ஒருவரை உடன் விசாரனையின் போது உடனிருக்க அழைத்துச் சென்றான். ”நான் எல்லாம் பேசிக் கொள்கிறேன். நீங்கள் என்னுடன் சும்மா வந்தால் போதும். உங்களுக்கு இந்த தங்கக் கட்டி ஃபீஸ்ஸா தருவேன்” என அவன் காட்டிய ஆசையில் அவரும் அவனுடன் சேர்ந்து சென்றார். மாவட்ட ஆட்சியர் புவியியல் மற்றும் கனிம வளத்துறையில் உதவி இயக்குநராகப் பணி புரிந்து பின் ஐ.ஏ.எஸ். எழுதி தேர்ச்சி பெற்றவர். அவர், கனிம வள சட்டங்களை அப்படியே மனப்பாடமாக எடுத்து உரைத்து,” நாங்கள் உங்கள் நிலத்திற்கு சீல் வைத்து அதனை ஆர்ஜிதம் செய்து அரசுடைமை ஆக்கப் போகிறோம்” என்றார். “ஐயா, மன்னிக்கனும். இதைத்தானே நோட்டீசில் எழுதி இருந்தீர்கள். அப்புறம் விசாரணை எதற்கு, வெறும் கண் துடைப்பா?” என செல்லதுரை வக்கீல் தைரியமாக கேள்வி எழுப்பினார். ”எல்லா நடைமுறை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது என்பதற்காகவே இந்த விசாரணை” “எல்லா நடமுறைகளா? அவை என்ன”, மணிகண்டன் வாயைத் திறந்தான். ”நாங்கள் சொன்னா உனக்குப் புரியாது” ”அப்படியானால் நீங்கள் என்னை விசாரிப்பது முழுமையாக இருக்காது. எனக்கு விளக்கமாக சொல்லவில்லை என்றே ஆகும். வாங்கையா போகலாம். இதற்கு சுப்ரீம் கோர்டில் தீர்வு இருக்கிறது” என சாமியாடி சொன்னதைச் சொல்லிவிட்டு விருட்டென எழுந்து வெளியே வந்து விட்டான். ”என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க. காரியத்தை கெடுத்து வீட்டிங்களே” என செல்லதுரை வக்கீல் அழாத குறையாக கூற, ”கேரள அரசுக்கும், ஜென்மம் நில சொந்தக்காரர்களுக்குமான சுப்ரீம் கோர்ட் வழக்கில், 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் நாள், மூன்று பேர் கொண்ட அமர்வு, ஒரு நிலத்தில் கீழ்ப்பகுதியில், பூமியின் நடுப்பகுதி வரை கிடைக்கும் கனிமங்கள் நிலத்தின் சொந்தக் காரருக்கே சொந்தம் என அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளனர். இதை அந்த மாவட்ட ஆட்சியர் நோட்டீசுக்கு பதில் நோட்டீசாக இப்போதே அனுப்பி விடும். அப்புறம் இதெல்லாம் தெரியாமல் ஒரு இந்தியக் குடிமகனை, வேண்டுமென்று விசாரணைக்கு அழைத்து மன உளைச்சல் தந்தமைக்கு மாவட்ட ஆட்சியர் எனக்கு ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் கடைசி பத்தியில் எழுதி விடுங்கள். அப்புறம் எந்த கொம்பன் வரான் பார்க்கலாம்” என்றான். தான் செய்யும் தொழிலில் தனக்கே தெரியாத அந்த தீர்ப்பு, அவன் நின்று தீர்க்கமாகப் பேசிய தோரணை, உருட்டிய கண்கள், பேச்சில் இருந்த ஆக்ரோஷம், ஆகியவை செல்லதுரை வக்கீலுக்கு ”பொன்னார் மேனியனை” நினைவூட்டியது ஏன் எனத் தெரியவில்லை. இந்த கதை எனது சொ ந்த படைப்பு என்றும், தழுவலோ மொழியாக்கமோ அல்ல எனவும் உறுதி அளிக்கிறேன். தா. ஜோ. ஜூலியஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.