Mohamed Riyaz M
சிறுகதை வரிசை எண்
# 79
மழை, அதைக் காண்பவரைப் பொருத்து மாறுபடும். சூடாய் இருப்பவருக்கு உள்ளக்குளிர்ச்சி தரும். மகிழ்ச்சியாய் இருப்பவரை பேருவகை கொண்டு கூத்தாடச் செய்யும். சோர்வாய் இருப்பவருக்குள் பழைய நினைவுகளைத் தூண்டும். குற்றம் செய்தவருக்குள் கலவரம் செய்யும்!
"ம்மா! நான் பெரியப்பா வீட்டுக்குப் போய்ட்டு வரேன்ம்மா!" என்றான் கபீர்.
"வீட்டுப் பாடம் எழுதிட்டியாலெ?"
"கொஞ்சக் காணம் இருக்கு. நாளைக்கு நாயித்திக்கிழமதான? முடிச்சிடுறேன். அரமணிநேரத்துல வந்துட்றேன்மா!"
"சரிப்பா. ராத்திரி நேரம். முக்குல நிக்காத. வாப்பா வர்றதுக்குள்ள வந்துரு!"
"சரிம்மா!" என்று கிளம்பினான் உள்ளத்துள்ளலுடன்.
கபீரின் வீட்டினருகிலேயே உள்ளது அவனது பெரியப்பா வீடு. கிட்டத்தட்ட அவனது அனைத்துப் பெரியப்பா, சித்தப்பா வீடுகளும் அவனது வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளியே இருந்தன.
பெரியப்பாவின் வீட்டை ஒட்டியவாறே அவரது மளிகைக் கடையும் இருக்கும். கடையில் யாரேனும் ஒருவர் இருப்பார். வாங்க ஆள் யாரும் இல்லையெனில் வீட்டிற்குள் சென்று விடுவர்.
கபீர், பெரும்பாலும் கடையில் நின்றுகொண்டு, விற்பதைப் பார்த்துக்கொண்டிருப்பான். கடையில் நிற்கும் பெரியப்பா, பெரியம்மா, அண்ணா, கடைக்கு வரும் ஆட்கள் என யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பான். நாளும் தன் அம்மாவிடமிருந்து இரண்டு உரூபாய் வாங்கி வந்து, ஏதேனும் வாங்கிச் சாப்பிடுவான். அவனது அப்பா மிகவும் கண்டிப்பானவர் என்பதால், வீட்டில் பேச நினைப்பதெல்லாம் இங்குப் பேசிக் களிப்பான்.
அன்றும் அப்படிச் சென்ற போது, கடைக்கு அருகிலேயே இருக்கும் பாலக்கட்டையில் அமர்ந்து கொண்டு அவனது பள்ளி நண்பன் முருகன் அச்சத்துடன் கையைப் பிசகிக் கொண்டு இருந்தான். இருவரும் ஆறாம் வகுப்பு மாணவர்கள்.
"ஏன்டா என்னாச்சு?", என நக்கலாக அவனிடம் கேட்டான் கபீர்.
மெதுவாகத் தலையாட்டினான்.
"சொல்றா!"
"அம்மா, Bread packet வாங்கியார 35 ரூவா குடுத்துச்சு."
"சரி..."
"வர்ற வழியில நம்ம பவித்ரா வீட்டுல சண்ட. நின்னு வேடிக்கெ பார்த்துட்டுருந்தேன். அங்கருந்து கடைக்கு வரும்போது காச பாக்குறேன் 10 ரூவா தான் இருக்கு."
"தேடுனியா?"
"தேடிட்டேன்டா. சுத்தமா காணும். அம்மா என்னைய வேற தேடும். காச காணாக்கிட்டேன்னு சொன்னா என்னய தொலச்சுரும். எப்டி வீட்டுக்குப் போகப் போறேன்னு தெரிலடா!"
"சரி நான் அம்மாட்ட சொல்றேன் வா"
"அதெல்லா வேணாடா. ஒரு தரவ இப்டி ஆச்சின்னு அம்மாட்ட நான் சொன்னேன்.. கால்ல சூடு வச்சிருச்சு."
"சரி வா மறுபுடியும் தேடுவோம்."
"தேடிட்டேன். கெடைக்கல", என்றான் விம்மிக் கொண்டே.
"என்கிட்டெ ரெண்டு ரூவா தான் இருக்கு."
முருகன் முகம் தொங்கிப் போயிருந்தது.
இவனும் இரக்கத்துடன், "சரி. அம்மா அடிக்க மாட்டாங்க. தைரியமா வீட்டுக்குப் போய்ச் சொல்லு!"
முருகனின் அம்மாவைப் பற்றிக் கபீருக்குத் தெரியும். மிகவும் கோபப்படுவார். முருகன் தவறு செய்தால் அடிப்பார், சில நேரம் சூடு கூட வைப்பார். அவனது தந்தை இஃதெல்லாம் பார்த்தால் தான் தடுப்பார்.
கபீர் கடைக்குள் கவலையுடன் 'சலாம்' சொல்லிவிட்டு நுழைந்தான். அப்போதுதான், ஒருவர் பொருள் வாங்கிவிட்டுச் சென்றிருந்தார். பின், கடை பொருள் வாங்க ஆளில்லாமல் இருந்தது.
பெரியப்பா, "கபீர் கடைய பார்த்துக்கோ! ஆள் வந்தா சொல்லு!" என்று சொல்லிவிட்டுக் காலை உணவு சாப்பிட வீட்டுக்குள் நுழைந்தார்.
தலையாட்டினான்.
அவனுக்கு அந்த அப்பப் பொட்டலம் (Bread Packet) கண்ணில்பட்டது.
"ச்ச. என் கைல காசிருந்தாவாச்சும் வாங்கிக் கொடுத்திருப்பேன்ல?" என எண்ணினான்.
திடீரென்று அவனுக்குள் ஒரு சிந்தனை தோன்றியது. அந்தச் சிந்தனைக்குள்ளும் அவன் உள்ளத்தில் ஒரு கலவரமே வெடித்தது.
"பேசாம யாருக்கும் தெரியாம இந்தப் பாக்கெட்ட எடுத்து அவன்ட்ட கொடுத்துருவோமா? பெரியப்பா வந்துட்டார்ன்னா? அவர் வர்றதுக்குள்ள குடுத்திருவோமா? பாவமில்லையா? ஐயோ அல்லா பார்ப்பானே? தண்டனை கொடுப்பானே.. ஒரு தடவ தானே..? ஒரு தடவன்னாலும் பாவம் பாவந்தானே? அப்ப முருகன் அவன் அம்மாகிட்ட அடி வாங்குவானே? அவன் கவனமா இல்லாததால அல்லா கொடுக்குற தண்டனையா இருக்குமோ? இருந்தாலும் முருகன் நல்லவன் தானே? எனக்கு நேத்து கூட பரிட்சை எழுதப் பேனா தந்தானே? அவனுக்காக நாம அல்லாகிட்ட தண்டனை வாங்கிப்போமா? நண்பனுக்காகத் தப்பு செய்றது பாவத்துல வருமா? ஏன் நாம சாப்பாட்டுக்காகத் தானே எடுத்துக் கொடுக்குறோம்? பேசாம பெரிப்பா கிட்ட கேட்போமா? அவர் தரமாட்டேன் ன்னு சொல்லிட்டா? அப்ப நாம அவனுக்குக் கொடுக்க முடியாம போய்டும்ல? அப்பறம் முருகன் வெறுங்கையோடத்தான் போவான்ல?" என்றெல்லாம் சற்று நேரத்துக்குள் இத்தனை கேள்விகள் அடுக்கி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.
வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான். பெரியப்பா நாற்காலியில் அமர்ந்திருந்தார். பெரியம்மா அவன் கண்ணுக்குப் படவில்லை. அண்ணன், தனிப்பயிற்சிக் கூடத்திற்குப் (Tuition) போயிருந்ததை அறிந்தான். அக்காள், வீட்டுப் பாடம் வரைந்து கொண்டிருந்தாள். கடைக்கும் யாரும் வரவில்லை.
மெதுவாக, அப்பப்பொட்டலத்தை (Bread Packet) அடியிலிருந்து மேலே எடுத்து வைத்தான். மீண்டும் எட்டிப் பார்த்தான். பெரியப்பா இன்னமும் எழுந்திருக்கவில்லை. இந்தப் பக்கம் திரும்பவுமில்லை. கடைக்கு ஆள் வருவது போன்று தோன்றவில்லை அவனுக்கு.
கொஞ்சங் கொஞ்சமாக முருகன் எடுப்பதற்கு ஏதுவாக ஓரத்துக்குத் தள்ளினான்.
"sh.. sh... முருகு! முருகா!"
பாலக்கட்டையில் உட்கார்ந்திருக்கும் முருகன் காதில் விழவில்லை.
"முருகா டேய்!" இன்னும் சற்று ஓசையாகவும் மூடிப் பல்லைக் கடித்துக் கொண்டும் முருகனுக்கே கேட்குமளவுக்குக் கத்தினான்
"என்னடா கபீரு!"
"மெதுவா இங்க வா!"
"எதுக்கு?"
"வாடா! சொல்றேன்."
முருகன் வந்தான்.
கடைக்கு அந்தப் பக்கம் நின்றவனிடம், "இந்தா வீட்டுக்குப் போ!" என்று கையில் பொட்டலத்தைத் திணித்தான்.
முருகன் மிரண்டு பார்த்தான்.
"வேகமா வாங்கிட்டுப் போடா.. பெரிப்பா வந்துரப்போறாரு.."
"வேணாடா கபீர்"
"வாங்கிட்டுப் போடா", என்று வாய்மூடிக் கத்தி அதட்டினான்.
மருகிக் கொண்டே, தன் கையில் இருந்த மாரியம்மன் காப்புக் கயிற்றைக் காட்டினான்.
சற்றே சந்தித்துவிட்டுப் பின்னர், "அதெல்லாம் ஒன்னும் ஆகாது. பாவமில்ல. நீ இத வாங்கிட்டுப் போடா வேகமா! யாராச்சும் பார்த்துரப் போறாங்க...", என்றான் சடுதியாக.
"வேண்டாம்!" எனத் தலையாட்டினான்.
"போறியா இல்லியா" என்று கடிந்தான்.
வேண்டாவெறுப்பாக தன்னிடம் இருந்த 10 உரூபாயையும் கைக்காசு 2 உரூபையையும் எடுத்து மேலே வைத்து அப்பப்பொட்டலத்தை எடுத்து நகர்ந்தான். முருகனுக்குள் ஏற்பட்ட அச்சத்தால் தன் காப்பைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்கு நடந்தான்.
"அப்பறமா மாரியம்மாகிட்டயும் முருகன்கிட்டயும் மன்றாடிக்குவோம்", என நினைத்துக்கொண்டான் முருகன்.
"அல்லா என்னய மன்னிச்சுடு. ஒரேயொரு தரவ என்னைய மன்னிச்சுடு. அவன் பாவத்தையும் நானே ஏத்துக்குறேன்." என்று வேக வேகமாக அரேபிய மொழியில் ஓதிக்கொண்டிருந்தான்.
அரைமணிநேரம் முடிந்து வீட்டுக்குச் சென்றான் கபீர்.
சற்று நேரம் அதைப் பற்றிச் சிந்தித்தான். பிறகு நடந்ததை மறந்து, தன் தம்பியோடு விளையாடியும் மற்ற வேளைகளில் ஈடுபட்டும் நேரத்தைப் போக்கினான்.
தூங்கும் நேரம் வந்தது!
இரவு தூங்கும்முன், ஓதுவதும் இறைவனிடம் மன்னிப்பு கேட்பதும் அவன் வழக்கம். சிற்றகவையிலிருந்து அவனுக்குப் பழக்கப்படுத்தி விட்டனர்.
ஓதும்பொழுது அவன் செய்த தவறு நினைவுக்கு வந்து அதற்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டான். மன்னிப்பு கேட்டது பற்றாது என மீண்டும் மீண்டும் அவனை அறியாமல் வேண்டிக்கொண்டிருந்தான். உடனே போர்வையை எடுத்து முழுவதுமாகச் சுற்றிக் கொண்டு படுத்தான்.
"தூங்குறப்போ மலக்குல் மவுத்து (இசுலாத்தில் எமன் போன்றவர்) வந்து என் உயிர வாங்கிட்டார்ன்னா? அல்லா அதுக்குள்ள என் பாவத்த மன்னிக்காம விட்டுட்டான்ன்னா? நரகத்துல போட்டுடுவாங்களே? ஐயோ நேத்து இமாம் எவ்ளவோ சொன்னாரே.. நரகத்துல என்னவெல்லாம் இருக்கும் சொன்னார்ல? எவ்ளோ கொடுமையானதுல்ல? முருகனுக்காகத் தானே செஞ்சோம்?"
வீட்டுக்கு வெளியே காற்றடிக்கத் துவங்கியது. மண்மணம் கிளம்பியது.
அல்லாவுக்கு ஏன் அவ்ளோ கோவம் வரணும்? ஒருவேள முருகன் கும்புடுற கடவுளுக்கு அவ்ளோ கோவம் வருமா? அல்லா எழுவது தாய்க்குச் சமம்ல? அவன் எப்டி என்னைப்போலச் சின்னவங்களைக் கொடும செய்வான்? ஆனாலும், நாம செஞ்சது பெரிய பாவத்துல ஒன்னு தானே? தப்பு யார் செஞ்சாலும் தப்பு தானே? எடுத்துக் கொடுத்த இந்தக் கைய என்ன பண்ணுவாங்க? நான் வேற முருகனுக்குத் தரவேண்டிய தண்டனையையும் எனக்கே தா ன்னு சொல்லிட்டேனே.. கால்ல இருந்து உயிர உருவிக் கழுத்து வழியா எடுப்பாங்கல்ல? ச்ச ச்ச! இன்னைக்கு மலக்குல் மவுத்து வரமாட்டாரு.. ம்ம்க்கும். வந்துட்டாருன்னா? அவரு எவ்ளோ ஒசரமா இருப்பாரு... அய்யய்யோ..” 'மரணத்தின் விளக்கம்' என்ற குறும்படம் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. கழுத்தைத் தொட்டுப் பார்த்தான். உள்ளங்கைகளால் கழுத்தை அணைத்துக் கொண்டான்.
நீண்ட நேரம் உறங்காமல் அஞ்சிக் கொண்டிருந்தான். இதுநாள்வரை இப்படியாக அவன் உணர்ந்ததில்லை.
தூரத்தில் பெய்த மழை இங்கேயும் சடசடவெனப் பெய்தது. சாரலடித்தது; வலுவான காற்றும் கூட. மற்ற எல்லோரும் எழுந்து சாளரங்களை விரைவாக அடைத்துவிட்டுப் படுத்தனர்.
இவன், "பேய் மழை தனக்காகத் தான் பெய்கிறதோ?, காற்றும் இவனுக்காகத் தான் அடிக்கிறதோ?"வென நினைத்துக்கொண்டிருந்தான். மற்றவர் தூங்கியிருந்தனர். கபீர் மட்டும் தனக்குள்ளேயே உளறிக்கொண்டும் அஞ்சி நடுங்கிக் கொண்டும் படுத்திருந்தான். 'மலக்குல் மவுத்'தை எதிர்பார்ப்பவனாய் இருந்தான்.
காற்றின் வேகம் குறையவும் இல்லை; பேய் மழை பெய்து கொண்டிருந்தது. மின்சாரம் அணைந்திருந்தது.
"அம்மாகிட்ட சொல்லிருவோமா? வேணாம். நான் தப்பு செஞ்சிட்டேன்னு சொன்னா அவங்களுக்கும் தூக்கம் போய்டும். அடிப்பாங்க. அப்பா belt-ஐ எடுப்பர். விடு பார்த்துக்கலாம். மலக்குல் மவுத்து ஒன்னும் வரமாட்டாரு. அல்லா என்னய பாதுகாப்பான்."
ஓதிக்கொண்டேயிருந்தான். அனால், அச்சம் அகன்றவாறில்லை. தூங்கவுமில்லை. அவனையறியாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
"ஒளறாம படுடா கண்ணு!", என்றார் அவன் தாயார்.
சட்டென வாயை மூடி ஓதிக்கொண்டிருந்தான். சுற்றியிருந்த போர்வையைச் சற்று விலக்கிக் கொண்டான்.
ஒருவழியாகக் காலையானது. பக்கத்து வீட்டுப் புளியமரத்தில் குயில் கூவியது. எழும்போது, அவன் குற்றியிருந்த போர்வை முழுவதுமாக விலகியிருந்தது.
தூக்கமின்மையால் கண் பொங்கியிருந்தது. தலை விண் விண்ணென்று வலித்தது. இதுவரை அவன் இதுபோன்று தூங்காமலிருந்ததில்லை. சற்றுத் தள்ளாடிக் கொண்டிருந்தான். தந்தை இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தார். வேக வேகமாகப் பல் துலக்கி, காலைக் கடனை முடித்தான்.
தன் தாயிடம் மேலும் 2 உரூபாயையும் தன் பள்ளிப் பையிலிருந்து 2 உரூபாயையும் எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினான்.
"காலைலயே எங்கடா போற Tea கூடக் குடிக்காம?"
"இருங்கம்மா வர்றேன்!"
வேக வேகமாய் வீட்டிலிருந்து வெளியேறினான்.
நேற்றிரவு பெய்த மழையில் தரை குளிர்ந்திருந்தது. மண்ணும் பதமாயிருந்தது.
பெரியப்பா வீட்டை நெருங்கியதும் வேகத்தைக் குறைத்து எப்பொழுதும் போல் இயல்பாய் நடந்தான்.
அந்நேரம் பெரியம்மா தான் கடையில் இருப்பார் என அவனுக்குத் தெரியும்.
"என்னலே காலங்காத்தால வந்துட்ட?"
"சும்மா தான்" என்று சிரித்தான்.
"உங்வாப்பா தூங்குறாரா?" எனக் கேட்டார்.
"ஆமாம் பெரிம்மா"
"அதான் புள்ள காலையிலேயே இங்க வந்திருக்கு... சரி Tea குடிக்கிறியா?"
"வேணாம் பெரிம்மா. குடிச்சுட்டேன்"
"கொஞ்சக்காணம் குடிலெ"
திடீரென்று அவனுக்குள் ஏதோ தோன்ற, "சரிம்மா! கொஞ்ச சூடா குடுங்க" என்றான்.
"உங்கும்மா போடுற மாதிரிலாம் சூடாருக்காது. அப்டியே ரெண்டு இட்லி போட்டு எடுத்தாரவா?"
"ம்ம்... சரிம்மா"
"என்னடா எப்போவும் சாப்புடவே மாட்ட.. இன்னைக்கு எல்லாத்துக்கும் சரின்ற.. உங்வீட்ல இன்னிக்குக் களியா?"
"அட அதெல்லாம் இல்ல பெரிம்மா.. எங்வீட்லயும் இட்லிதான்!" என்றான் சிரித்தவாறே.
அவர் உள்ளே சென்றதை எட்டிப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டான். உறுமீனுக்குக் காத்திருந்த கொக்கு போல, மடமடவெனச் சட்டையிலிருந்து 4 உரூபாயை எடுத்துப் பணப்பேழையில் (கல்லா) ஓசையெழாதவாறு போட்டான்.
இன்றைய காசைப் போட்டுவிட்டோம் என்ற உள்ள அமைதி அடைந்தான். அப்பொழுது தான் புன்னகை வந்தது. ஏதோ முணுமுணுத்தான். தலைவலி நீங்கியது போன்றதோர் உணர்வு. விடுதலையாகியிருந்தான். இன்னும் எத்தனை நாளுக்குக் காசு போட வேண்டும் எனக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.
உள்ளே இருந்த பெரியப்பாவுக்குச் 'சலாம்' வைத்தான்.
பெரியம்மா, "இந்தாடா சாப்டு", தேனீரையும் சாப்பாட்டையும் கொடுத்தார்.
வாங்கி கடைக்குள்ளேயே இருந்து சுவைத்துக் கொண்டிருந்தான். அதற்குள் கடைக்கு இரண்டு மூன்று பேர் வந்து போயினர். பெரியம்மா அவர்களுக்குப் பொருள் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்றிந்தார்.
தூரத்தில் முருகன் வருவது போன்று தெரிந்தது. அவனிடம் நிறையச் சொல்லக் காத்திருந்தது போன்று எதிர்பார்த்திருந்தான்.
வேகமாக நடை போட்டு வந்தான் முருகன். கையில் வைத்திருந்த 1 உரூபாயை அவனிடம் கொடுத்து, "கல்லால போடுடா கபீரு!"
"ஏன்டா...?", என நெற்றி சுருங்க அவனைப் பார்த்தான்.
முருகன் கபீரை நிமிர்ந்து பார்த்தான்.
"ம்ம் போடு. யாராச்சும் வந்துடப் போறாங்க.. "
"வேணா. நானே போட்டுக்குறேன். இன்னிக்குக் கூட நால் ரூவா போட்டேன்."
"சரி பரால்ல. இதையும் போடு. சேர்த்துப் போட்டுக்குவோம்."
கபீர் புன்னகைத்தான்.
"மாரியம்மாவும் அல்லாவும் அவன தூங்க விடாம பண்ணிருப்பாங்க", என மனத்துக்குள் கபீர் நினைத்துச் சிரித்துக்கொண்டு சாப்பிட்ட கையாலேயே காசைப் பேழையில் மெதுவாகப் போட்டான்.
சாப்பிட்டுத் தட்டையைக் கழுவி, கடையை விட்டு வெளியே வந்தான் கபீர். கணக்கைத் திருத்தி முருகனிடம், "நீ தெனைக்கும் ஒர்ரூவா போடு. நான் ரெண்ரூவா போடுறேன். ஆறு நாள்ல முடிஞ்சுரும்."
"நீ ஏன்டா போடுற.. நானே தெனைக்கும் போடுறேன். நீ காச வாங்கிக் கல்லால போடு போதும். நீ உன் காச போடாத!", என்று அவனிடம் கடிந்து கொண்டான் முருகன்.
"உன்கிட்ட packet எடுத்துக் கொடுத்தது நான்தான். நீ வேணான்னு தான சொன்ன?"
"இருந்தாலும் bread நீ சாப்டலல்ல?"
"சரி பரவால்ல. ரெண்டு பேரும் சேர்ந்தே காசு போடுவோம். வேணும்னா நீ அப்பறமா எனக்கு உன்காசுல கல்கோனா வாங்கித்தா!" எனச் சிரித்தான்.
"தர்றேன். ஆனா ஆறு நாளைக்கு அப்புறந்தான். சரியா?"
நக்கலாகத் தலையாட்டினான்.
இருவரும் புன்னகைத்தும் கலாய்த்துக்கொண்டும் இருந்தனர்.
பெரியம்மா, "எலேய் கபீரே. உன் சங்காத்தி வந்தோடன போய்ட்டியா? ஒழுங்காச் சாப்ட்டியாலே?"
"நல்லாவே சாப்பிட்டேன் பெரிம்மா. பாருங்க!" என வயிற்றைக் காண்பித்தான் கபீர்.
மழை தென்றலுடன் பொழியத் துவங்கியது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்