logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ந.கீதா

சிறுகதை வரிசை எண் # 78


நெசவு மனிதன் ந.கீதா ”கடக், கடக், டக்.............,கடக், கடக், டக்.............., கடக், கடக், டக்” அதிகாலை நேரத்தில் இசைபாடும் கைத்தறி நெசவின் சத்தம் கேட்பதாய் நினைத்துக் கண்விழித்தார் ராசய்யா. அருகில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி தேவியை எழுப்பினார். “தேவி, கேட்குதா? யாரோ நெசவு நெய்யுறாங்க” என்றார் ஆர்வமாக. “எப்போ பாரு உங்களுக்கு அதே நெனப்பு. இப்போல்லாம் யாரு கைத்தறி நெய்யப்போறா? எல்லாம் பவர்லூம் வந்துடுச்சு. நீங்களே நெசவு நெய்யுறத விட்டுட்டு டெக்ஸ்டைல் வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கீங்க. பேசாம படுங்க. கனவு எதும் கண்டிருப்பீங்க” என்றார் தேவியம்மா. ”ஒருவேளை கனவாகத்தான் இருக்குமோ?” என்ற சந்தேகம் தன்னுள்ளே எழுந்தாலும், தூக்கம் வரவில்லை. நினைவுகளுக்குள்கூட நெசவு செய்யும் கடக், கடக், டக் சத்தம் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. அமைதியாக எழுந்து அமர்ந்துகொண்டார். பிறந்ததிலிருந்து கேட்டு வளர்ந்த நெசவுச் சத்தம் கேட்பதற்கு அலாதியானதுதான். ஒரு நெசவாளிக்கு அதுதான் தாலாட்டுச் சத்தம். இளமையை முறுக்கேற்றும் சத்தம். முதுமையைக் கொண்டாடும் சத்தம். ராசய்யா தூக்கம் கொள்ளாமல் எழுந்துகொண்டதைப் பார்த்து தேவியம்மாவிற்கு ஏதோ மாதிரி இருந்தது. அவர்களுக்குப் பிறந்தது இரண்டு பெண்குழந்தைகள். கட்டிக்கொடுத்தாச்சு. நல்ல நிலையில் இருக்குதுக. இனியும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு யாருக்குக் கொடுக்கப்போறிங்க. போதும்பா. ஊருக்கு வந்திருங்க, நாங்க உங்களை ஜாம், ஜாம்ன்னு வெச்சுப் பாத்துக்கிறோம்ன்னு சொல்லுதுங்க. ஆனா, மனசு கேட்கல. நேற்று பெரிய மகள் ஈஸ்வரி போனில் அழைத்துச் சொன்னாள், ”நான் வேலை செய்யிற கம்பெனி முதலாளியோட பொண்ணு ஏதோ நலிவடைந்த கைத்தறி நெசவு பத்தி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுதாம். பேச்சு வாக்கிலே நான்தான் சொன்னேன். எங்கப்பாவுக்கு அதைப்பத்தி நல்லாத் தெரியும்ன்னு, நாளைக்கே கிளம்பு உங்களைப் பார்க்க வர்றாங்களாம். உங்களுக்குத் தெரிஞ்சத சொல்லிடுங்க அவங்க எழுதிகிட்டுப் போகட்டும்” அப்பொழுதிலிருந்து அவருக்கு சின்னவயதிலிருந்து நடந்த எல்லாச் சம்பவங்களும் சங்கிலி கோர்த்ததுபோல் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. ராசய்யா எட்டுவயதிலிருந்து மக்கம் ஏறிப்பழகியவர். மக்கத்தைப் பற்றி அவருக்குத் தெரியாத விசயமே இல்லை. ஆறாப்பு படிக்கும்போதே நூல் கணக்கு அத்துப்படி. தேவியம்மாளும் அப்படித்தான். சேம்பல் கணக்குலாம் வந்திருச்சுன்னா எழுதிக்கூட பார்க்க மாட்டாங்க. மனக்கணக்கே அப்டி கரெக்டா இருக்கும். என்ன? இப்பொல்லாம் ராசய்யா நெய்யுறது இல்ல. வயசாயிடுச்சு. வீட்டில்கூட இன்னும் ஒரு மக்கம் பாவி பிரிக்காம கிடக்கு. பார்க்கப் பார்க்க ஏக்கமாத்தான் இருக்கு. என்ன பண்றது. எல்லாம் காலத்தின் வேகத்துக்கு ஏற்ப மாறித்தொலைக்க வேண்டியிருக்கே?. ஆசையா இருந்தா இப்பக்கூட ஒரு மணிநேரமாவது நெய்யாம இருந்ததில்லை. நேரம் போனதே தெரியவில்லை. ஏங்க, ஈஸ்வரி கூப்டா. அவ முதலாளியோட பொண்ணு பதினோரு மணிக்கு வந்திடுமாம். மக்கத்துக்குள்ள கொஞ்சம் நூலெல்லாம் கெடக்குது. ஒதுங்க வைக்கனும். மேல கொஞ்சம் ஒட்டடை புடிச்சுக் கெடக்கு. அதைக் கொஞ்சம் தட்டனும். போட்டோவெல்லாம் எடுப்பாங்களாம். அதுக்குத் தக்கன குளிச்சு தயாரா இருக்கச் சொல்றா”. ”தெனம், மக்கம் ஏறுனா ஒட்டட புடிக்காது. நானே வாரத்துக்கு ஒருக்கா இல்லனா ரெண்டு வாரத்துக்கு ஒருக்காதான் மக்கம் ஏறுறேன். என்ன பண்றது? மொத மாதிரி முடியறதில்ல. இதைப் பராமறிக்கிறதே பெரிசா இருக்கு”. ஒருவருக்கொருவர் மாறி மாறி புலம்பிக்கொண்டே வீட்டைச் சுத்தம் செய்து முடிக்கவும் முதலாளியின் மகள் நந்தினி வந்திறங்கவும் சரியாக இருந்தது. எலுமிச்ச ஜூஸ்சும் உருளைக்கிழங்கு சிப்சும் கொடுத்து உபசரித்தார்கள். சற்று நேரத்தில் மிக இயல்பாகப் பேசத்தொடங்கியிருந்தனர் அந்தப் பெண்ணிடம். ”நீங்க எட்டு வயசுல இருந்தே மக்கம் ஏறுனதா ஈஸ்வரி அக்கா சொன்னாங்க. அதப்பத்தி கொஞ்சம் சொல்லமுடியுமா?” என்று பேச்சைத் தொடங்கினாள் நந்தினி. “ஓ! அதுவா? நான் ஒருவயசுக் கொழந்தையா இருந்தபோதே, அம்மா தவறிட்டாங்க. அப்பாதான் என்னை வளத்தது, படிக்க வெச்சது, வேலை கத்துக்கொடுத்தது எல்லாம். பள்ளிக்கூடம் போய்க்கிட்டே மக்கம் நெய்வேன். கால்கூட எட்டாது. இருந்தாலும் நெய்வேன். எங்க குலத்தொழிலே அதுதானே? அதனால ரொம்ப வெரசா கத்துக்கிட்டேன்” தன்னைப் பற்றிச் சொல்லும்போதே பெருமை புரிபடவில்லை. “உங்க சொந்த ஊரே இதுதானா?” கையிலிருந்த கேமராவில் மக்கத்தை போட்டோ எடுத்துக்கொண்டே பேசினாள். “இல்ல கண்ணு, வாங்கல்தான் எங்க சொந்த ஊரு. தொழிலுக்காக இங்கே வந்தேன். இங்கேயே தங்கியாச்சு.” “இப்போல்லா, கைத்தறிய அதிகமாப் பாக்க முடியறதில்லையே, ஏதாச்சும் குறிப்பிட்ட காரணம் இருக்காங்கய்யா?” “உங்களுக்குத்தான் தெரியுமே, பவர்லூம் அதிகமாயிடுச்சு. கைத்தறியவிட பவர்லூம்ல அதிக உற்பத்தி கொறஞ்ச நேரத்துல செய்யமுடியுது. மக்களும் அதுக்குப் பழகிட்டாங்க. ஆனாலும் கைநெசவுல இருக்குற நேர்த்தி அதுல வராதுதான். பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன கூட பவர்லூமுக்கு வேணுங்கற டிசைன ஏத்தறதுக்கு சேம்பலா சிலதுகள நெய்ஞ்சு தரணும். அதுக்காகவாவது கைத்தறியத் தேடுவாங்க. அம்புட்டுப் பரபரப்பா இருப்போம். இப்போல்லாம் அப்படியில்ல. காலம் மாறிடுச்சு. டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆயிருச்சுன்னு சொல்றாங்க. நமக்கு என்ன தெரியும்?” ”அடிக்கடி எங்க காலம் எங்க காலம்ன்னு சொல்றீங்களே, அப்படி என்னதான் சுவாரஸ்யமா சொல்றதுக்கு இருக்கு?” “ஓ! அதுவா? வெடியக் காத்தாலயே எல்லார் வீட்லயும் நெய்யுற சத்தம் கேட்கும். ஆம்பளைங்க எல்லாம் எழுந்ததும் மக்கம் ஏறிடுவாங்க. பொம்பளைங்க எல்லாம் சமையல் வேலய வெரசா முடிச்சுட்டு ராட்டையிலெ நூல் சுத்தறது, பாவு பொனையறது, ஒடி கோக்கறது, ஆலையில பாவு ஓட்டறதுன்னு பல வேலைகள சலிக்காம பாப்பாங்க. வயசுப் பொண்ணுங்ககூட மக்கத்துல ஒக்காந்து நெசவு நெய்வாங்க. ஒரே நாள்ல ரெண்டு மூனு சேம்பில்கூட நெய்ஞ்சு கொடுத்திருக்கோம். “சரி, வீட்டில இருக்கிற எல்லாருக்கும் நெய்யத் தெரியும்ன்னு சொல்றீங்க அப்பறம் ஏன் ஈஸ்வரி அக்கா நெய்ஞ்சு பழகல?” “ஓ அதுவா? சின்னவயசிலே இருந்தே அவளுக்குப் படிப்புன்னா உசுரு. நான் நெய்யும்போது பலகையிலே வந்து உக்காந்துகிட்டு வேடிக்கை பார்ப்பா. அதோட சரி. நாங்களும் விட்டுட்டோம். ஆனா சின்னவ இருக்காலே அவ துறுதுறுன்னு ஒரு நிமிசம் சும்மா இருக்க மாட்டா. ராட்டையில நூல் சுத்துவா. ஆலைக்குள்ள பாவு சுத்தறதுக்காக ஓடி அப்பப்போ கால ஒடச்சிக்கிட்டு வந்து நிப்பா, அவ கதையே வேற. ஆனாலும் ரெண்டு பேரும் முழுசா நெய்யக் கத்துக்கல” “ஒரு மக்கம்தான் இருக்குது. ஆரம்பத்திலேர்ந்து ஒன்னுதான் இருக்குதா?” “சொந்த ஊர்ல இருக்கிறப்போ பத்து மக்கமாட்டம் போட்டிருந்தோம். அப்பா, அண்ணன், அண்ணன் பசங்கன்னு எல்லாரும் நெய்ஞ்சோம். ஆனா, இங்கே வந்ததுக்கப்புறம், ஈஸ்வரிக்கு கல்யாணமாச்சு. வீடு பொழங்கறதுக்குக் கட்டையா இருக்குதுன்னு ஒரு மக்கத்தை வித்துப்புட்டோம். அதுமட்டுமல்லாம, நெய்யுறதுக்கு ஆள் கிடைக்கல. சின்னவளுக்கு கல்யாணம் பண்ணும்போது ஆலைய வித்துட்டோம். “இனி அடுத்ததா, என்ன செய்யுறதா உத்தேசம்?” “இந்த மக்கத்தையும் வித்துடலாம்ன்னு அப்பப்போ தோணுது. வித்துப்புட்டா ஒரு தடுப்பாட்டம் போட்டு வீட்டை வாடகைக்கு விட்டுடலாம், மாசா மாசம் வாடகையாவது வருமுள்ளன்னு புள்ளைங்க சொல்லுதுங்க, ஆனா, இவருதான் புடிவாதமா இருக்கறாரு” என்று வந்தமர்ந்தார் தேவியம்மாள். “கண்ணு, இவங்கல்லாம் இப்படித்தான் சொல்வாங்க. என் மனசுக்கு ஒப்பிதம் இல்லம்மா. இந்த மக்கம் இருக்குறதாலதானே என்னைத் தேடிப் பேட்டி எடுக்க வந்திருக்கீங்க? இல்லேன்னா நீங்க வருவீங்களா? சொல்லு கண்ணு” என்று வாஞ்சையுடன் பேசினார் ராசய்யா. சற்று நேரம் அமைதிகாத்தாள் நந்தினி. “நீங்க எழுதறதப் படிச்சு நாலு பேராவது மக்கத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கட்டும். அரசாங்கம் எதுக்கு கைத்தறி வெச்சிருக்கவங்களுக்கு 300 யூனிட் மின்சாரம் தருதுன்னு நெனைக்கிறீங்க. எப்படியாவது என்னமாதிரியான நெசவாளியக் காப்பாத்தனும்ன்னு தான். அதனாலயாவது நாலுபேரு மக்கத்தைப் பிரிச்சு வித்துடாம இருக்கத்தான். என்னதான் நானே டெக்ஸ்டைலுக்கு வேலைக்குப் போனாலும், இந்தப் பலகைமேல ஏறுனாதான் இந்தக் கட்டைக்கு நிம்மதி. உண்மையச் சொல்லனும்னா, என் மூச்சு இந்த நெசவுக்குள்ளதான் ஊடாடிக்கிட்டு இருக்குது. தேவியம்மா கொண்டுவந்து வைத்த வடையிலிருந்து ஆவி பறந்தது. ராசய்யாவின் கண்களில் இருந்து ஆத்ம திருப்தி வெளிப்பட்டது. முற்றும்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.