KAVIJI
சிறுகதை வரிசை எண்
# 77
பூட்ஸ் காலன் - சிறுகதை- கவிஜி
************************************************
ஒவ்வொரு முறையும் கூட ஆள் இருக்கும். ஆனாலும்...
மாமாவோ... தாத்தாவோ.. தம்பியோ... மாமா பையனோ... பெரியப்பாவோ யாரோ ஒருவரோடு போவதே பெரும் சவாலாக இருக்கும். சில நேரத்தில் கூட்டமாக போகும் போது கூட திக் திக் தான் தொண்டைக்குள். பேச்சு எழாத.... முகம் வராத கால்கள் வியர்த்த நடை அது. அந்த வளைவு தாண்டி விட்டால்.. அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு வரும். வளைவு தாண்டி ஊருக்குள் நுழைகையில்... முன்னாலேயே கம்பீரமாக கையில் அருவாளோடு கெடா மீசையில் அத்தனை பெரிய உருவத்தில் அமர்ந்திருக்கும் இரண்டு அய்யனார்கள்... கண்களில் அமைதியை வார்ப்பார்கள்.
இனி ஒன்னும் ஆகாது. தானாக ஏறி கொண்ட சுமை... தானாகவே இறங்கி கொள்ளும். திண்ணையில் படுத்து காற்றாட தூங்குகையில்... பெரியப்பா சொன்ன கதைகள் ஒரு பக்கம்... பக்கத்து வீட்டு மாமா சொல்லும் கதைகள் ஒரு பக்கம் என்று இரு பக்கமும் ஒருவர் மாற்றி ஒருவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் கதைகள் காலத்துக்கும் முடிவிலிகள்.
இடையே படுத்து தூங்குவது போல ம்ம்ம் கொட்டினாலும்.. எல்லாரும் தூங்கிய பிறகும் ம்ம்ம் கொட்டும் இயல்பின் வழியே கதைகள் காலை பிடித்து பிராண்டிக் கொண்டிருக்கும். அப்படி கதைகளின் வழியே அந்த வளைவு நிறைந்திருந்தாலும்.. நிஜமும் அங்கே சிதையாகி எரிந்து கொண்டு தான் இருக்கும். கூட ஆள் வரும் போதே தூக்கி போடும் அந்த வளைவு... தனியாக போனால் என்ன செய்யும்...
திருப்பூர் வரை ரயில். பிரச்சனை இல்லை. பிறகு பேருந்து. குன்னத்தூர் தாண்டும் போதே உள்ளே உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.
தம்பிக்கு அழைத்தால்... அவன் ஊரில் இல்லை... 'பார்த்து போங்க காலைல வந்தர்றேன்' என்கிறான். மாமா தாத்தா பெரியப்பா எல்லாம் செத்து காலம் கடந்து விட்டது.
நண்பன் கதிரை அழைத்தால்... அவன் சரக்கு போத்தலுள் மாட்டிக் கொண்டு வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.
பேருந்து அதன் வேலையை காற்றில் நிகழ்த்தி விட்டு செம்மாண்டி பாளையத்தில் இறக்கி விட்டு ஈரோட்டுக்கு பறந்து விட்டது. இங்கிருந்து வெள்ளியம்பாளையம் இரண்டு கிலோமீட்டர். சாலையில் வெளிச்சம் இருக்காது என்று தெரியும். இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் சில இடங்களில் சாலையே இருக்காது என்றும் தெரியும். அப்படி சாலையே இல்லாத இடம் அந்த பெரும் வளைவோடு கீழே இறங்கி மேலே ஏறும். அந்த இறக்கத்தில் இருந்து பிரிந்து வலது பக்கம் விரிய தொடங்கும் சுடுகாடு... எல்லாவற்றுக்கும் பயன்படக்கூடியது. கொலை... கொள்ளை... திருட்டு... புரட்டு...குடி... குத்து... கூத்து என்று பார்த்தீனிய செடிகளின் கூடாரத்துக்குள் பவ்யமாய் அமைதி பொங்கும் வேக்காட்டு நிலம் அது.
மெயின் சாலையை விட்டு நகர்ந்து வலது புற சிதிலமடைந்த சாலைக்குள் நடக்க ஆரம்பித்து விட்டான்.
நடப்பது ஒன்று தான் வழி. லிப்ட் கேட்டு போகலாம் என்றோ... ஏதாவது ஆட்டோ கீட்டோ வரும் என்றோ யோசித்து.... செம்மாண்டி பாளையத்தில் நின்று விட்டால் முடிந்தது கதை. இன்னும் சற்று நேரத்தில் செம்மாண்டி பாளையம் தன்னை அடைத்துக் கொள்ளும். இப்போதே.... அங்கொன்றும் இங்கொன்றுமாய் குத்த வைத்து அமர்ந்திருந்த இரண்டு டீ கடையில் ஒன்றை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாத்தா சொன்ன கதைகள்.... மாமா சொன்ன நிஜ சம்பவங்கள் என்று மாறி மாறி கண் முன்னே வந்து வந்து போனது. முப்பதடி தூரம் ஊருக்குள் செல்லும் கிளை சாலைக்குள் நுழைந்திருப்பான். பின்னால் சாலை தன்னை இழுத்து மூடிக் கொண்டது. முன்னால் நடக்க நடக்க பின்னால் சாலை மூடிக்கொண்டே வருவது நன்றாக தெரிந்தது. இரவில் பின்னால் நடப்பது நன்றாக புரிந்து விடும். திரும்பி திரும்பி பார்த்தான். இருள்... இருள்.. இருள் தான் அருள் வந்தது போல அங்கே அலைந்தது. கண்களை எத்தனை தேய்த்தும் பயம் அகலவில்லை.
கால்கள் நடக்கின்றனவா... இல்லை... சாலையில் மிதக்கின்றனவா...
புரிந்து கொள்ள மனம் ஒரு நிலையில் இல்லை. இனி திரும்பியும் போக முடியாது. கால்களில் கனம் கூடியது. மெல்ல மெல்ல முன்னோக்கி நடந்தான்.
ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும்.. ஏதாவது ஒரு பிணம் எரிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியும். அதுவும் வளைவு திரும்பும் இடத்தில்... அருகாமையிலேயே சாலையை ஒட்டியே எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை.... மாமா பெரியப்பா எல்லாம்.... 'அது என்ன பண்ணுது.. நீ இப்பிடி வா...' என்று பிடித்து இந்தப்பக்கம் இழுத்தபடியே அனலுக்கு மறித்து நகர்த்தி போவார்கள். அந்த இடம் தாண்டும் வரை... தாண்டுபவர்களின் உடல் முழுக்க ஜுவாலை தக தகக்கும். அப்படியே நெருப்பின் நிறம் அவர்கள் மேல் மின்னுவதை பார்க்க... திகிலடிக்கும். நெருப்பின் சூடு வீடு வந்து கூட உடலில் ஒட்டிக் கொண்டிருப்பதாக உணர்வார்கள். ஆவென திறந்து கிடக்கும் உடலில் படபடக்கும் நெருப்பு பொறி... எத்தனை மறந்தாலும் போகாது. அது ஒரு மேல்பூச்சு சிந்தனையாக நெற்றியில் தகனித்துக் கொண்டே இருக்கும்.
அப்படி எல்லாம் அது மாதிரி எதுவும் நடந்து விடக்கூடாது.
இன்று எந்த பிணமும் எரியாமல் இருக்க இறைவன் அருள் புரிவான். இந்த வளைவை தாண்டி விட்டால் தப்பித்தோம் என்ற நம்பிக்கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நடந்தான். நான்கடி முன்னால் நடந்தால்... இரண்டடி பின்னால் நடப்பது போல வருவதெல்லாம் பிரமை தான். அவனுக்கும் தெரியும். ஆனாலும்... அதில் இருக்கும் உண்மையை அவனால் நெருங்க முடியவில்லை. நெருப்புக்கு இன்று விடுமுறை அளித்து விட வேண்டினான். எப்போதோ வேர்க்க ஆரம்பித்து விட்டது. ஊர் பசங்களோடு செல்கையில்... அது வரை இருக்கும் பேச்சு... அங்கே சென்றதும் சட்டென நின்று போகும். முன்னால் மாமா அமைதியா வாங்க என்பது போல ஜாடை செய்வார். பின்னால் நடப்பவர்கள் பிணம் எரியும் பக்கம் போய் விடாத கவனத்தோடு இந்த பக்கமாகவே போக ஒருவரை ஒருவர் முண்டி கொண்டு இடித்துக் கொண்டு மூச்சில் அனல் அடிக்கும். கூட்டமாக போகும் போதே அப்படி. இப்போது இப்படி தனியாக வந்து மாட்டிக் கொண்டதை நினைத்தால்.. உள்ளே தவிப்பும் தகிப்பும் வேர்த்து வேர்த்து கொட்டியது.
தம்பியை நினைக்க நினைக்க கோபம் காதுகளில் அதிர்ந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் தூக்கிட்டு தொங்குவதாக தெரிய... நிலவை முக்கால் வாசி வெட்டி எடுத்துக் கொண்டு போன யாரையோ அவன் தேடுவதாக இருந்தது. துளி காற்றில்லை. செம்மண் பூமியில் அனல் அடிக்கும் அமைதி. என்ன ஊர் இது. ஒரு பய முன்ன பின்ன வர மாட்டேங்கறான். பூமியில் இருந்து தனித்து பிரிந்த ஒற்றையடியில் பிரபஞ்சம் தொலைந்து கொண்டிருப்பதாக தோன்றியது.
இந்தா... இங்க தான்... இன்னும் கொஞ்சம்.. இந்த வளைவை தாண்டிட்டா... அப்புறம் அய்யனார் துணை. எதுவும் ஒன்னும் பண்ண முடியாது. ஒரு நீண்ட நெடுங்கால்கள் சட்டென முளைத்து இந்த வளைவை தாண்டி விட்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
கடவுளே.. இன்னைக்கு பொணம் எரிய கூடாது. அந்த வளைவு அமைதியா இருக்கணும். இந்த மயானத்தை தாண்டற வரை... கூட இருந்து வழி நடத்து. உள்ளே பேரமைதி சுழன்றாலும்... உள்ளங்காலில் இருந்து எழும் பூட்ஸ் சத்தம் அந்த மயானத்தை உசுப்பி விட்டு கொண்டு தான் இருந்தது.
டக்... டக்... டக்... டக் என்று சீரான இடைவெளியில் அந்த சாலையில் குழி தோண்டுவது போன்ற உணர்வு. அவனால் அவன் பூட்ஸ் கால்களை அமைதியாக எடுத்து வைக்க இயலவில்லை. அது அதன் போக்கில் அப்படி டக் டக் டக் டக் என போய்க்கொண்டிருக்கிறது. பூட்ஸ் கால்கள் விடும் மூச்சு... கேவல்கள் போல. கண்கள் எத்தனை தூரம் நீள முடியுமோ அத்தனை தூரம் நீண்டது. முகம் முழுக்க இருள் அப்பிய சுமை.
இருக்காது.. இன்னைக்கு என்ன சனிக்கிழமை... இன்னைக்கு யாராவது சாவாங்களா. அப்படியே செத்தாலும்... எல்லாரும் வரணும்னு நாளைக்கு தான் எடுப்பாங்க. அப்ப நாளை சாயந்திரம் தான் எரிப்பாங்க. இன்னைக்கு ஒண்ணுமே இருக்காது.. இந்தா... இப்ப அந்த இடத்தை தாண்டி....
சிந்தைக்குள் நெருப்பு திகு திகுவென படர்ந்தது.
ஆவ் ஆவ்... என தூரத்தில் இருந்து நெருப்பு படர்வது தெரிந்து விட்டது.
"ஐயோ.... ஐ.....யோ..." மூச்சே நின்று விடும் போல திணற வைத்து விட்டது. திரும்பி விட முடியாத திக். பின்னால் யாரோ நிற்பது போல வந்த சிந்தனை அவனை எரிந்து கொண்டிருக்கும் தீயைத் தாண்டி கண்களை திருப்ப முடியாமல் செய்தது.
கண்களில் நீர் கோர்த்து விட்டது. கால்கள் பின்ன ஆரம்பித்து விட்டன. தொடை வழியே வழியும் வியர்வை முட்டிக்கு பின்புற மடிப்பில் சொரிய சொன்னது. கத்தவும் முடியவில்லை. கத்தவும் கூடாது.
"இந்த மாதிரி நேரத்துல சத்தம் போடக்கூடாது. சத்தம் காட்டாமல் ஒதுங்கி வந்தரனும்...."
மாமா சொன்ன கதைகளின் வழியே அவன் சிந்திக்க... அவன் நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டியது. வாய் கோணி முகம் நடுங்கி கால்கள் ஒன்றொன்று ஒன்று உரசி.. பயத்தின் உச்சியில் முன்னும் பின்னும் அற்ற அந்த வழியில் ஒரு வால் தொலைத்த நாயை போல நின்றான். நிற்க நிற்க ஜுவாலை அவன் அருகே நெருங்குவது போல் தோன்ற.... இல்லை நிற்கவில்லை. நின்றபடியே நடந்து கொண்டு தான் இருக்கிறான். தானாக இழுத்து போகும் நெருப்பு நெளியும் மென்னடை.
"அங்க... பாக்காத.. திரும்பு... திரும்பு..." - அவன் ஆழ்மனம் அவனை திருப்பினாலும்.. அவன் மூளை எரியும் நெருப்பையே தான் பார்த்தது. பட படவென எரிந்து வெடிக்குமந்த உடலின் வெப்பம் அவன் கண்களில் வழிந்தது. அவன் முகத்தில் நெருப்பின் நிழல் இன்னும் மஞ்சள் ஊற்றி சிவப்பு சேர்ந்தது.
தானே எறிவது போன்ற நினைப்பில் எது எண்ணெய் ஊற்றுகிறது என்று தெரியவில்லை. இதோ இன்னும் நாலைந்து அடிகள் கடந்து விட்டால்.. எரியும் சிதையைத் தாண்டி விடலாம். ஆனால் அவன் கண்கள் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு துண்டுகள் தாண்டி நகர மறுக்கிறது. அவன் பார்க்காதது போல இருக்க தான் பார்த்துக் கொண்டே இருக்கிறான். பார்த்துக் கொண்டே இருக்க இருக்க கால்கள் நடையை மறந்து விட்டன. எடையைக் கூட்டி விட்டன. அத்தனை பெரிய காட்டுக்குள்...பொல்லாத அந்த வளைவில் வெந்து கொண்டிருக்கும் அந்த உடல் அருகே ஒரு வேட்டை நாய் போல வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறான். இயல்பு மீறி நடக்கும் இசையை அவன் உடல் இதயத்தில் துடித்து துடித்து குதித்தது. அவனை தாண்டி அவனை நிற்க வைத்து... காண வைத்து.... கண் சிமிட்ட விடாத அந்த நேரம்... ஜுவாலையை சூடியபடியே தகித்தது.
நரம்புகள் முறுக்கேற....உடலில் இருந்த எண்ணெய் சொட்ட.. சட சடவென வெடிக்கும் சிதையின் முகம்... பாதி வெந்தும் மீது வேண்டாம் வேண்டாம் என தடுமாறியும்... அது ஒரு சித்திர போராட்டம். கூர்ந்து கவனித்த கண்களில் பயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால்... ஐயோ பாவம் என்ற பாவனை மெல்ல வழிந்தது. உற்று நோக்க நோக்க நெருப்புக்கும் வடிவம் உண்டு தான். அது கொண்ட வடிவத்தில்... பிணம் கொண்ட எரிதலில்... காலும் கையும்... நினைவும் கனவும் போல. அவன் அப்படியே நின்று விட்டான்.
"பயமா இருக்கு.. பயமா இருக்கு.. பயமா இருக்கு...."
எங்கிருந்து சத்தம் வருகிறது....
சுற்றும் முற்றும் அவசரமாய் தேடினான். தேடிய கண்கள் சிதையின் மேல் சுழல....கூர்ந்து கவனிப்பு அதுவாகவே நடந்தது. பிளந்து கிடந்த அந்த பிணத்தின் வாயில் இருந்து தான் நெருப்பை தாண்டி சொற்கள் கக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உணர்ந்த நொடியில் உள்ளே தக தகவென உடைந்து நடுங்கின அவன் கண்கள்.
நமக்கு பிணத்தை பார்த்து பயம் என்றால் பிணத்துக்கு நம்மை பார்த்து பயம்.
"எரியுது.. வலிக்குது... எனக்கு பயமா இருக்கு. இதுக்கப்புறம் எங்க போவேன்னு தெரியல. எங்க கூட்டிட்டு போவாங்கனு தெரியல. தனியா எரிய பயமா இருக்கு. இந்த காட்டுல யாருமே இல்ல. நல்லவேளை நீ வந்த. உதவி பண்ணு.... உதவி பண்ணு. எனக்கு பயமா இருக்கு... பயமா இருக்கு..."
அதன் எரிந்து கருகும்... தொங்கி உருகும் கை அவனை நோக்கி நீண்டது.
"ஏதாவது செய்யேன். எரிச்சல் தாங்கல...." என்ற எரியும் முகத்தில்... கண்கள் இருந்த இடத்தில் இருந்து புகை மாதிரி கண்ணீர் வருவதை அவன் உணர்ந்தான். அது நெருப்பில் பட்டு தெறித்து காணாமல் போவதையும் அவன் உணர்ந்தான்.
சாவின் வலி தெரியும். செத்து செத்து வாழ்ந்த வாழ்க்கை தெரியும். சாவதற்கே கெஞ்சும் காரணம் தெரியும். இப்படி நிறைய தெரிந்த பிறகு செத்தவனின் எண்ணமும் தெரிந்தது. எத்தனை மரணங்களை கடந்து வந்து... இப்படி ஒரு பிணத்திடம் மாட்டிக் கொண்டது பற்றிய பதற்றம் அவனை பதற செய்தது. அவனிடம் நிறைய பதில் இல்லை.
"என்ன நடக்கிறது. இது ஏன் இப்பிடி இருக்கிறது. இது என்கிட்டே பேசுது... அயோ... எப்பிடி பேசும்... நான் இங்கிருந்து எப்படியாவது நகரனும்...."
அவனால் நகர முடியவில்லை. அவன் காதில் சிதையின் இரைச்சல். அது இறைந்து கெஞ்சும் காட்சியை கடந்து அவனால் நகர முடியவில்லை. கருணையை கையேந்தும் ஒரு பிணத்தின் முன்... இயலாமையில் நிற்கும் மனிதன் ஒரு பாவனை மட்டுமே. அவனை அவனுக்கே சுமக்க முடியவில்லை. தொடர் பாரம் அவனை துகளாக்கி கொண்டிருந்தது.
அவன் பார்த்துக் கொண்டே நின்றான். அது கெஞ்சிக் கொண்டே இருக்கிறது. பயம் போய்விட்டது. பாவம் சேர்ந்து கொண்டே போனது. தீர்க்கமாய் பார்த்தான். திகைப்பு நீங்கி ஒரு மென்முறுகும் புன்னகையை ஜுவாலையில் தெளித்தான். எதுவோ சமன் பட்டது போன்ற நிறைவு. அவன் உள்ளம் பொங்கியது. இதயத்தின் சுமை இலையாக நகர்ந்து விட்டதாக ஒரு நம்பிக்கை. அவன் எடை இழந்து... தூரம் குறைந்து தன்னை கண்டான். அத்தனை பாவங்களையும் சரி செய்யும் மனம் ஒத்த காரியம் அது.
"பயப்படாத... நான் இருக்கேன்..." என்றபடியே அதோடு அவனும் நெருப்புக்குள் விழுந்து படுத்துக்கொண்டான்.
அப்பாடா என்று சிதையின் கிழிந்த முகத்தில் ஒரு சிரிப்பு. ஒரு அமைதி. இறுக கட்டிக் கொண்டது. ஒன்றுக்கொன்றான நம்பிக்கை இன்னும் வேகமாய் எரிய தொடங்கியது.
வளைவு தாண்டிய அய்யனார்கள் கண்கள் ஒருமுறை அடுத்தடுத்து அழுந்த மூடி திறந்து கொண்டன.
*
"கேட்டியா...!?" என்றது வெற்றிலையை சிறு உலக்கையில் இடித்தபடியே ஒரு பெருசு.
"கேட்டேன் கேட்டேன்... பூட்ஸ் காலனுக்கு எப்பிடிதான் தெரியுதோ.... ஊருக்குள்ள சாவுன்னா போதும்.... ராத்திரி தக் தக் தக்குன்னு நடக்க ஆரம்பிச்சிர்றான்......" வளைவு இருந்த திசை நோக்கி கால் நீட்டி அமர்ந்திருந்த இன்னொரு பெருசு பதில் இடித்தது.
பூட்ஸ் காலன் இரவை கிழித்துக் கொண்டு டக் தக்... டக் தக்... டக் தக் என்று அந்த வளைவில் நடந்து வரும் சத்தம் இப்போது நினைத்தாலும் திகில் தான். சிலிர்த்துக் கொண்டார்கள்.
சுடுகாட்டுக்கு வர்ற மனுசங்க... பொணத்தை எரிச்சும் எரிக்காமலும் விழுந்தடிச்சு ஓடி வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கறது எதுக்கு..... செத்தவனுக்கு பயந்துகிட்டா... ம்ம்ஹும்... இந்த பூட்ஸ்காலனுக்கு பயந்துகிட்டுதான. யார் இந்த பூட்ஸ் காலன். ஊருக்குள்ள யாரு செத்தாலும் பூட்ஸ் காலனுக்கு கொண்டாட்டம் தான். தக் தக் தக்னு வந்துருவான். வந்து எரிஞ்சிட்டுருக்கற பொணத்து கூட நின்னு பேசி... அப்புறம் அதுக்கு துணையா அது கூடயே விழுந்து எரிஞ்சுடுவான்.
அதெப்படி தெரியுது.. யாரு பார்த்தா..
யாரு பாக்கணும்.. அதான் விடிகாலைல சாம்பலோட பாதி வெந்தும் வேகாம அவன் பூட்ஸ் கிடக்குதே.
பழைய தோப்பு வீராசாமி பையன் மிலிட்ரிக்கு போன பாபு தான் இந்த பூட்ஸ்காலன்னு ஒரு பேச்சு இருக்கு. பாபுக்கு நேர்ந்துகிட்டு... கோயில் கூட கட்டி பார்த்துட்டாங்க. பண்ணாத பூசை எல்லாம் பண்ணியாச்சு. ஆனாலும்... ஒவ்வொரு சாவுக்கும் அவன் வர்றது நிக்கல. ஏன் செத்தவன் கூட இவனும் விழுந்து எரிஞ்சு போறான்னும் தெரியல. என்னதான் நடக்குது.
"போர்க்களமே ஒரு பாவ களம் தான். கோபம் இருக்கறவன்.. கோழை... பயந்தவன்.. பயப்படுத்துறவன்.. தேவை இருக்கறவன்.. என்ன தேவைன்னே தெரியாதவன்... தர்மத்துக்கு கட்டுப்பட்டவன்... ரெண்டு லட்சம் கடனுக்கு வேலைக்கு வந்தவன்னு... ஆயிரம் பேரும் ஆயிரம் கதை. என்ன காரணமா இருந்தா என்ன... கொன்னு கொன்னு மூளைல பாவமும் பழியும் படிஞ்சிட்டே இருக்கறது சுமை. மனசெல்லாம் ரத்த வாடை. எதுக்கு இந்த போரு. எதுக்கு ஒருத்தனை ஒருத்தன் கொன்னு என்ன சாதிக்க போறோம். ஏன் யாரோ ரெண்டு பேருக்கு நடக்கற நான் நீ போட்டில சம்பந்தமே இல்லாம இத்தன மனுஷங்களை கொன்னு போடறோம். குண்டுக்கு சரிஞ்சு தண்ணிக்கு தவிக்கறத பாக்குறது கொடூரம். அதுவும் தான் சுட்ட ஆள் தன்கிட்டயே... எப்படியாவது காப்பாத்துன்னு உயிர் பிச்சை கேக்கறது எந்த போர் வியூகத்திலும் இல்லாதது. சண்டைல எந்த அர்த்தமும் இருக்கறதா தெரியல. ஊருக்கு வரும் போது மிச்சம்... கைல படிஞ்ச ரத்த கரையும்... மனசுல படிஞ்ச பாவ சம்பளமும் தான்....."
புலம்பிகிட்டே ஊர் திரும்பின பாபுதான்... இப்பிடி ஊருக்குள்ள வரும் போது எரிஞ்சிக்கிட்டிருந்த பொணத்தை பார்த்து பைத்தியம் புடிச்சு கூடவே விழுந்து எரிஞ்சிட்டானும் பேச்சு இருக்கு.
அவன் தான் இப்பிடி ஒவ்வொரு பொணம் எரியும் போதும் வந்து வந்து விழறான்னும் நம்பப்படுது. இல்லனா எப்பிடி அந்த பூட்ஸ் சத்தம் கேக்கும். எரிஞ்ச பொணத்து கூட எப்பிடி எரிஞ்சும் எரியாமலும் அந்த பூட்ஸ் கிடக்கும்.
அதே நேரம் பழைய தோப்பு வீட்டில் பாபுவின் அப்பா வீராசாமி இன்னொரு ஜோடி பூட்ஸை துடைத்து தயாராக வைத்துக் கொண்டிருக்கிறார். எரிவதற்கு பயந்து நடுங்கும் பிணங்கள் அடுத்தடுத்து ஊருக்குள் நிறைய இருக்கின்றன.
கவிஜி
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்