ரா.ராஜநாராயணன்
சிறுகதை வரிசை எண்
# 76
காலாவதி தேதி
(சிறுகதை)-ரா.ராஜநாராயணன்.
அவன் சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலமானவன். வாட்ஸ்ஸப், முகநூல், இவற்றில் மிகப் பிரசித்தம், பெயர் செவந்தியப்பன்…. வாட்ஸ்ஸப்பில் சுருக்கமாக ’செவா’. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வாட்ஸ்ஸப் குழுக்களில் உறுப்பினராக இருக்கிறான். பல குழுக்களில் அவனே அட்மின். இதுபோக முகநூலிலும் இருக்கிறான். அவனுக்கு ஏகப்பட்ட சமூகஊடக நண்பர்கள். உடனுக்குடன் கருத்துக்களை லைக் கமெண்ட், ஷேர் செய்தல் அன்றாடம் தவறாமல் இருக்கும்.
கருத்துக்களை உடனுக்குடன் எதிர்கொள்வான். தான் போட்ட பதிவிற்கு எத்தனை லைக், கமெண்ட், ஷேர் வருகிறது என்று கணக்கு வைத்திருப்பான். தன் கருத்துக்கு என்ன எதிர்வினை வருகிறது என்று பார்த்துக்கொண்டே இருப்பான். நீண்ட வரலாற்றுக் கருத்துக்களாக வந்தாலும் கடைசி பத்தியை மட்டும் படித்துப் பதில் தருவான். இவன் ’மட்டியடிப்பவன்’ என்று ’கமெண்ட்’ வரும் கவலைப்படமாட்டான்.
காலை எழுந்ததும் வாட்ஸ்ஸப்பில் வரும் கடவுளர் படங்களை வணங்கிக் கண்ணில் ஒத்திக்கொள்வான்.
“இந்தக் கடவுளர் படத்தை இருபது பேருக்கு ஷேர் செய்தால் நல்லது நடக்கும், அப்படிச் செய்யாவிட்டால் ரத்தம் கக்கிச் சாவீர்கள்”
என்கிற அளவிற்கான சாபத்திற்குப் பயந்தோ என்னவோ இன்னும் கூடவே ஐந்து நபர்களுக்கு ஷேர் செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்.
குழுவில் இருக்கும் ஆட்களை அடையாளம் கண்டு வம்பிழுப்பான்.
“அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வீண்” எனப் பதிவிடுவான்.
தனியார் பள்ளியில் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் அரசு ஊழியரிடம் இப்படி வம்பிழுப்பான்.
”அரசுச் சம்பளம் இனிக்கிறது அரசுப் பள்ளி கசக்கிறது”.
அவர்கள் குழுவிலிருந்து வெளியேறினாலும் விடமாட்டான். மறுபடியும் இணைப்பான். இவன் எண்ணை ’பிளாக்’ செய்தாலும் விடமாட்டான். இன்னொருவரின் போனுக்கு செய்தியை அனுப்பி ஊழியருக்கு அனுப்பச் சொல்வான்.
ஒரு முறை பெண்களுக்குப் பேருந்தில் இலவசப் பயணம் என்று அறிவிப்பு வந்ததும்,
”எல்லோருக்கும் ஏன்? இலவசப் பயணம் தர வேண்டும்” என்று பதிவுபோட்டு
கைதட்டல்கள் வாங்கினான்.
சமீபத்தில் கூட மகளிர் உரிமைத் தொகை அறிவித்ததும்,
”ஏன்? எல்லோருக்கும் தரவில்லை” என்று பதிவிட்டான்.
ஏன்? எல்லோருக்கும் இலவசப் பயணம் தரவேண்டும் என்ற அவனது பதிவை மறந்திருந்த அவனின் ரசிகர்கள் இதையும் ரசித்தார்கள். சமூக ஊடகங்களில் பெரும்பான்மையும் ஆண்களே இருப்பதால் அவனுக்கும் இந்தக் கருத்திற்கு நிறைய ஆதரவு கிடைத்தது.
செவா குடும்பத்திற்கு வருவோம். அவனுக்கு மனைவி, இரண்டு ஆண்குழந்தைகள் உண்டு. அவர்களைத் தனியார் பள்ளியில் படிக்கவைத்துக் கொண்டு சிரமப்படுபவன். தனியார் துணி உற்பத்திக் கம்பெனியொன்றில் மேற்பார்வையாளனாகப் பணிபுரிகிறான். ஒரு நாளைக்கு 900 ரூபாய் சம்பளம் தருகிறார்கள். கொஞ்சம் ஓவர்டைமும் கிடைக்கும். கஷ்டப்பட்டுத்தான் பிழைப்பை ஓட்டுகிறான். மனைவி வேலைக்குப் போகக் கூடாது என்ற கொள்கையுடைவன். அவன் கம்பெனியில் 250 பேர் வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் பீகார், ஒடிஸ்ஸா மாநிலத்தவர்கள். அவர்களிடம் இந்தியில் பேசி நன்றாக வேலை வாங்குபன் என்று அவனுக்கு நல்ல பெயர். இவனுக்கும் இந்தி தெரியுமாதலால் அவர்களும் பெருமிதம் கொண்டு இவனுக்குப் பணிந்து வேலை செய்வார்கள்.
செவாவின் வாட்ஸ்ஸப் வாழ்வியலில் தற்போது சொல்லப்போகும் சம்பவம் மிக முக்கியமானது. அவன் சமூக ஊடகங்களில் கருத்திடும், பதிவிடும் விசயங்களில் சில, பல ஆலோசனைகளும் உண்டு. நாட்டில் செயல்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான திட்டம் ‘செவா’ கொடுத்த யோசனையாகும். சில வருடங்களுக்கு முன்னால் செயல்படுத்தப்பட்ட ‘செல்லாத பணம்’ திட்டம் செவா சொன்னதுதான். இவனே நேரிடையாகச் சமூக ஊடகங்களில் பதிவிட்ட ஆலோசனைகள் அவை.
”கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமானால் முக்கியமாகப் பதுக்க வாய்ப்புள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என அறிவிக்கவேண்டும். மக்கள் தங்களிடம் உள்ள அந்த நோட்டுக்களை வங்கியில் கொடுத்துவிட்டுப் புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ள வேண்டும். கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் நோட்டுக்களை மாற்ற வரமாட்டார்கள். அதற்குப் பதிலாக அச்சடித்த புதிய நோட்டுக்கள் அனைத்தும் அரசுக்கு லாபம். மேலும் 1000 நோட்டுக்களை ஒழித்தால் தீவிரவாதிகள் பணத்தைப் பதுக்கமுடியாத நிலை உருவாகும்”.
இந்த ஆலோசனையைத்தான் ‘செவா’ டெல்லி வாட்ஸ்ஸப் குழு ஒன்றிலும் பதிவிட்டிருந்தான். அப்போதே
‘இது நடக்கும், நடந்தே தீரும்’ என்று ’டெல்லிவாலா’ ஒருவர் பதிவிட்டிருந்தார்.
பின்னர் பணம் செல்லாததாக அறிவிக்கப்பட்டதும்,
“வாக்குப் பலித்தது’ என்று டெல்லிவாலா பதிவிட்டார்.
இந்த நிகழ்வுகளெல்லாம் பார்த்த செவா இது நம்ம யோசனைதான் என்று நம்பினான்.
”செல்லாத பணம்” அறிவித்த நாளிலிருந்து மத்திய வங்கி கவர்னரைவிட செவாக்குப் பொறுப்புக் கூடி வாட்ஸஸப்பில் பதிவிடும், பதில் சொல்லும் வேலை அதிகமானது. முதல் கட்டத்தில் எல்லோரும் இது அருமையான திட்டம் என்றார்கள். போகப்போக பிரச்சனை தீவிரமானது. எதிர்பாராத திசைகளிலிருந்து சிக்கலான பிரச்சினைகள் தலை தூக்கியது. இவை எல்லாம் வாட்ஸ்ஸப்பில் பதிவு(பேசு) பொருளானது.
மக்கள் தங்கள் வாகனங்களுடன் சுங்கச் சாவடிகளில் காத்துக்கிடந்தார்கள். அதன் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டன. பின்னர் கட்டணம் கொஞ்ச நாள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது.
திருமண நிகழ்வுகளுக்குப் பணம் எடுக்க வழியின்றி மக்கள் திணறினார்கள். சாவுக்குக் கூட சடங்குகளுக்குப் பணம் எடுக்க முடியவில்லை. இதற்கு திருமண, சாவு நிகழ்வுகளுக்கு வங்கியில் விசேடப் பத்திரிக்கைகளைக் காட்டிப் பணம் எடுத்துக் கொள்ளலாம் என ஆலோசனைப் பதிவிட்டான் செவா. அது போலவே டெல்லியில் இருந்து உத்தரவும் வந்தது.
நிகழ்ச்சிகளுக்கு,
”’மாமத்தனம்’ செய்பவர்கள் எப்படிப் பணம் எடுப்பது” எனப் பதிவுகள் அவனுக்கு வந்தன.
அது நியாயமாகவும் அவனுக்குத் தெரிந்தது. ஆனால் டெல்லியில் உள்ளவர்களுக்கு ’மாமத்தனம்’ என்பது புரியாது, அதையே ஆங்கிலத்தில் ‘அங்கிள்தனம்” என்று சொன்னாலும் விளங்காது என நினைத்துக்கொண்டான். இதற்கிடையில்,
”சாவிற்குப்பணம் எடுக்க பிணத்தை வங்கிக்கு எடுத்துக்கொண்டுவந்து ஆதாரமாகக் காண்பிக்கவேண்டுமா?” என்றுகூட ஒருவர் பதிவினார்.
அதற்கு செவா பதில் சொல்லவில்லை. அதற்காக எல்லாக் கருத்திற்கும் பதில் சொல்லாமல் இருக்கமாட்டான். ஒருவர் கேட்டிருந்தார்,
“பணத்தை மாற்ற மக்கள் இப்படித் தெருவிலே நிற்கவேண்டுமா?”.
அதற்கு அவன் பதில் இப்படி இருந்தது,
”ராணுவ வீரர்கள் மழையிலும், பனியிலும் நாட்டைக் காவல் காக்கும்போது தேச நலன் கருதி வெயிலில் காத்திருப்பது ஒன்றும் தவறில்லை”.
வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த பலர் ‘ஹீட் ஸ்ட்ரோக்”கில் இறந்தபோதும் அதையே பதிலாகச் சொன்னான். எதிர்பாராதவிதமாக அவனின் பெரியப்பாமகன் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து இறந்துபோனார். அதனைத் தியாகம் என்று வர்ணித்தான்.
அவனது கம்பெனியில் நிலை வேறுவிதமாக மாறியது. முதலாளி உற்பத்தியை நிறுத்திவிட்டிருந்தார்.
யாரும் இனிமே கம்பெனி வேலை பார்க்கவேண்டாம் என்றும் தினசரி ஒவ்வோர் ஆளும் தனக்குக் கணக்கு இருக்கிற வங்கிக்குச் சென்று 4000 ரூபாயைக் கொடுத்துப் புதுநோட்டாக வாங்கிவரவேண்டும் எனவும் தினசரி சம்பளம் எல்லாருக்கும் தவறாது வந்துவிடுமென்றும் செவா இதைக் கண்காணிக்கிற வேலையைப் பார்க்கவேண்டுமென்றும் முதலாளி கட்டளையிட்டுருந்தார். செவாவின் மனைவியையும் கூட பணம்மாற்ற வரச்சொல்லியிருந்தார்.
வாட்ஸ்ஸப்பில் கடுமையான கண்டனக் கணைகள் வந்துகொண்டே இருந்தன. அவற்றிற்குப் பதில் வேறு போடவேண்டும். ஒரு பதில் போடும் பொருட்டு பதிவு ஒன்றைக் கவனித்தான் ஒன்றும் புரியவில்லை,
பதிவு இப்படி இருந்தது,
”உற்பத்தியில் உபரியை உருவாக்கிப் பின்னர் அதனையே மீளவும் மூலதனமாக்கி மேலும் லாபத்தைப் பெருக்குவார் முதலாளி என்ற காரல் மார்க்ஸ் கருத்தை முதலாளிகள் இன்று பொய்யாக்கிவிட்டார்கள். அவர்கள் தங்களது உற்பத்தியையே நிறுத்திவிட்டார்கள்”.
இவனுக்கு, காரல்மார்க்ஸ் என்ன சொன்னார், பதிவு என்ன சொல்லவருகிறது என்று புரியவில்லை. மேலும் பலமுறை கார்ல்மார்க்ஸ் பற்றி எந்தப்புரிதலும் இல்லாமலேயே கடுமையாக விமர்சித்துக் கருத்துப்பதிவிடுவான். அவர் செத்த கோட்பாட்டிற்குச் சொந்தக்காரர், பல நாடுகளில் அவரின் முடக்குவாதக் கொள்கைகள் வெற்றிபெறவில்லை, என்று வேறு எங்கோ வந்த வாட்ஸ்ஸப் கருத்துக்களை கோர்த்துவிடுவான்.
ஆனால் இப்போது இது, தன்னைக் குறிவைத்துப் பதிவிடப்பட்டது, தனக்கு எதிரானது, என்று மட்டும் அவனுக்குப் புரிந்தது. அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. பதில் சொல்லாத பதிவுகள் அவனுக்கு மண்டைக் குடைச்சலை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும்.
ஒருமுறை உள்ளூர் பண்பலை வானொலியில் அவனைப் பேட்டிக்காகக் கூப்பிட்டிருந்தார்கள். அவனும் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி வரமறுத்தான். உண்மையில் அவனுக்குப் பொதுவெளியில் பேசத்தெரியாது என்பதே உண்மை. வாட்ஸ்ஸப்பில் மட்டும்தான் வீரம் காட்டுவான்.
வேண்டுமானால் வாட்ஸ்ஸப்பிலேயே கேள்விகேட்டு பதில் பெற்றுக்கொள்ளச் சொன்னான்.
இது கேள்விநேரம்…..
”சென்றமுறை உங்கள் வாட்ஸ்ஸப், முகநூல் பதிவுகளைக் கொண்டே ‘பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது, என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?” என்றது கேள்விப் பதிவு.
”நம்பிக்கை உண்டு” என்றான் பதில்பதிவில்.
”பணமதிப்பிழப்பு உண்மையிலேயே வெற்றி பெற்றதாக நினைக்கிறீர்களா?” இது நிருபர் பதிவுக்கேள்வி.
”ஆமாம்.” செவாவின் பதிலிது.
”கருப்புப் பணம் வெளியே வரும் என்றுதானே பணத்தை மாற்றினோம், ஆனால் 98% பணம் உள்ளே வந்துவிட்டதே?” நிருபரின் கேள்வி.
”நான் எண்ணிப்பார்க்கவில்லை” மட்டியடிப்பதிலிது.
”நீங்கள் போடுகிற பதிவுகள் சட்டமன்றம்வரை எதிரொலிக்கிறதே” இது நிருபர்,
”ஸ்மைலீ” ஒன்றைப் பதிவிட்டான்
”இருந்தாலும் ஆதாரப் பூர்வமாகவும், உண்மையில்லாமலும் வரும் சமூக ஊடகப்பதிவுகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?” என்று நிருபர் கொக்கி போட்டார்.
”அது அவர்கள் பாடு” என்றான் சுருக்கப்பதிவாக.
”உங்களின் அடுத்த திட்டமென்ன?” என்றார் நிருபர்.
”அரசியல் கட்சி ஏதும் ஆரம்பிக்கப் போகிறீர்களா? இல்ல ஏதேனும் அரசியல் கட்சியில் சேரப்போகிறீர்களா?” என்றது ஒரு சிக்கல் பதிவு
”அப்படி எல்லாம் திட்டமில்லை” என்றான்.
”அழைப்புகள் ஏதும் அரசியல் கட்சிகளிடமிருந்து வந்துள்ளனவா?”. இது நிருபர்.
”இல்லை,ஆனால் ஊடகம் ஒன்றை சொந்தமாக ஆரம்பிக்கும் திட்டம் உள்ளது”. என்றான்.
”அப்படிப் போடுங்க, இப்பதான் பூனைக்குட்டி வெளியே வருது”. என்று பதிவிட்ட நிருபர்,
”இதுவரை சேமிச்ச ரசிகர்களை வச்சிக்கிட்டு புது தொழில்ல இறங்கப்போறீங்க” என்றது நிருபர் பதிவு.
”இருக்கலாம்” என்று கைகூப்பும் ஸ்மைலீ படம் போட்டான்.
“இன்னும் ஒரேஒரு கேள்வி” என்றார் பதிவில்,
“செல்லாத பணம்” மாதிரி வேறு ஏதேனும் ஐடியா இருக்கா, இருந்தா ஒரு ’குளு கொடுங்களேன்” என்றார் நிருபர்.
”இருக்கு ஆனா அது சஸ்பென்ஸ்” என்று ஸ்மைலியில் கைகூப்பினான்.
இதோ இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது ‘செவா யூடியூப் சேனல்’. மிக்க மகிழச்சியுடன் அறிவித்தான் அவன். பரீட்சார்த்த ஒளிபரப்பிலேயே தினசரி சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டே இருந்தான். முக்கிமான அறிவிப்புகள், பேட்டிகள், ஊழல்கள், நாட்டைச் சிறப்பாக நடத்த யோசனைகள் என்று அடுக்கடுக்கான செய்திகள் உங்களுக்கு காத்திருக்கின்றன என அறிவித்தான்.
“சுயநலம் என்ற கண்ணுக்குத் தெரியாத கை மனிதனை இயக்குகிறது என்பாரே ஆடம் ஸ்மித், அதுபோலே யாரோ ஒரு சூத்திரதாரி முதலீடு போட்டு செவா யூடியூப் சேனல் இயங்குகிறது”
என்று ஒரு பதிவுகூட வந்தது. அதை அவன் சட்டை செய்யவில்லை……
சேனல் முறையாகத் தொடங்கிய நாளன்று வெளுத்து வாங்கினான். ஒரு பெரிய ’கிராப்’ போட்டு ஏதேதோ விளக்கினான். பலரும் ‘கிராப்’ போட்டு விளக்கியதால் அதை உண்மை என்றே நம்பினர்.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பெயர்களை வரிசையாக எழுதி, அதற்கு நேர் எதிரே மக்கள் தொகையை எழுதினான்.
”இது உண்மையான புள்ளிவிபரம் இதை யாரும் மறுக்க முடியுமா?” என்று சவால் விட்டான்.
”இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது” என்றது ஒரு பதிவு.
அடுத்தது ஊழல் பட்டியல், ’எக்ஸ்செல் ஷீட்’ ஒன்றில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளையும் வரிசைப்படுத்தினான். ஒரு எண்ணைபோட்டு அதற்குப் பக்கத்தில் ஏகப்பட்ட பூஜ்யங்களைப் போட்டான்,
”இவ்வளவு ஊழல் நடைபெற்றிருக்கிறது” என்றான்.
“மேலும் அதற்கு ஆதாரமாக அந்தப் பணத்தையெல்லாம் ஒரு லாரியில் ஏற்றினால் அதை ஒருமைல் நீளத்திற்கு நிறுத்தலாம், 300 ரபேல் விமானம் வாங்கலாம்” என்றான்.
இதுவரை இல்லாத அளவிற்கு ‘லைக்ஸ்’, ‘கமெண்ட்’ ஷேர்களைக் குவித்தது அது.
”அந்த அளவிற்குப் பணமே அச்சடிக்கப்பட்டிருக்காதே பெரியதொகை என்பது பணச்சுழற்சியில் வருவதுதானே’’ என்றாரொரு பதிவர்.
’’உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லை’’ என்றது சேனல்.
பெரிய தொகையாக இருப்பதால் அதில்தான் ரசிகர்கள் மயங்கினர். ஒருவரும் ஆதாரங் கேட்கவே இல்லை,சேனலும் அதுபற்றிப் பேசவேயில்லை.
முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக சேனல் அறிவித்துக்கொண்டே இருந்தது.
செவாவே தோன்றி இப்படிக் கூறினான்.
”நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக இருப்பது, கருப்புப் பணம் அதை ஒழிப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. ஏற்கனவே நாம் சொன்ன யோசனைகளின்படி அமைந்த ‘பணமதிப்பிழப்பு’ பெரிய அளவில் கருப்புப் பணத்தை ஒழித்தது. இன்னுங்கூட கறுப்புப்பணம் புதிய ரூபத்தில் வந்துகொண்டே இருக்கிறது. இது கடைசி முறை, இப்பாது நாம் சொல்லப்போகும் யோசனை இனி எந்தக் காலத்திலும் கருப்புப் பணத்தை இல்லாமல் ஆக்கிவிடும்”.
யூடியூப் ரசிகர்கள் பரபரப்படைந்தனர். என்ன யோசனையது?. தொடர்ந்தான் அவன்.
”தற்போது உள்ளது போலவே புதிய நோட்டுக்கள் அச்சடிக்கப்படலாம், ஆனால் அதில் அந்த நோட்டு ’காலாவதியாகும் தேதி’ அச்சடிக்கப் பட்டிருக்கும். மக்கள் பழைய நோட்டுக்களுக்குப் பதிலாக புதிய நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம், அது காலாவதி ஆனதும் அடுத்தது, இப்படியே காலாவதி தேதியோடு புதிய நோட்டுகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் யாரும் பணத்தைப் பதுக்கமுடியாது, புதிய நோட்டை மாற்றும்போது கணக்குக் காட்டவேண்டி இருக்கும், வருமான வரிக்கணக்கு தவறென்றால் பணம் பறிமுதலாகும்”.
இதுதான் அந்த யோசனை அறிவிப்பு. இது சானல், முகநூல் குழுக்கள் அனைத்திலும் வந்தது.
சில மணிநேரங்களுக்கு மயான அமைதி குழுக்களில் நிலவியது… யாரும் பதிவேதும் இடவில்லை… நிலைமை பாலைவனம் போலாயிற்று…
இதோ முதல் பதிவு
”ஆகா அருமையான யோசனை, நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒன்று,ஒரு பய இனி கறுப்புப் பணம் வெச்சுக்க முடியாது”.
அடுத்தது இது,
“வப்பாய்ங்கடா இனி ஆப்பு”.
அடுத்தது கண்டனப்பதிவொன்று வந்தது…
”டேய் லூசுப் பயலுகளா, கொஞ்சமாவது அடுத்த கட்டத்தை நோக்கிச் சிந்திச்சுதான் பேசுறீங்களாடா? அடுத்த கட்டத்தில நடக்கப் போறத.. சிந்திக்கிறதுக்குப் பெரிய அறிவு வேணும்டா, முதல் கட்ட யோசனை நல்லா இருக்கற மாதிரிதான் தெரியும், தப்பாச்சுனா அதன் விளைவுகள் மோசமா இருக்கும், ஏற்கனவே செல்லாத பணத்தால மக்கள் சந்திச்ச கொடுமைகளை உங்களால உணர முடியலயா…?.இல்ல உணராதமாதிரி நடிக்கிறீங்களா?, வரலாறு திரும்பும், முதன் முறை சோகமாக, அடுத்து கேலிக்கூத்தாக, இதச் சொன்னது நானில்லை..காரல் மார்க்ஸ், அதையும் வெளிநாட்டுக்காரன் சொன்னதும்பீங்களேடா’’.
பதிவித்(பொரிந்து) தள்ளிவிட்டான் பதிவன்.
”இந்த நகர்ப்புற நக்சல்களுக்கு இதே பொழப்பு, அதென்ன அந்நிய நாட்டுக்காரன் பேச்செல்லாம்’ என்றான் ஒரு பதிவன்.
”அப்பா தேச பக்தா ஏன்? அந்நிய முதலீடு மட்டும்தான் உனக்கு இனிக்குமா?” இது ‘நகர்ப்புற நக்சலின் பதில்.
தொடர்ந்தானவன்,
”கடந்தகாலத்தை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவன் அதே தவறுகளைச் செய்யச் சபிக்கப்பட்டவன்”.
“இது உள்ளூர் ஆள் சொன்னதா?” இல்ல….என்றான் தேசபக்தன்.
”ஆங் பேர் சொன்னா முதல்ல உனக்குப் புரியுமா?, இதச் சொன்னது,எட்மண்ட் பர்க், ஜார்ஜ் சாண்டியானா.
பதிவுகள் காரசாரமாகப் போய்க்கொண்டிருந்தன.
’செவா’ ஆடேடு.. 9…8…….6.
அப்போதுதான் குழுவில் சேர்க்கப்பட்ட அந்தப்புது எண் உள்ளே நுழைகிறார்.
“நமஸ்தே” என்றது புதியவரவு,
“ஏக் காவ்மே ஏக் கிசான் ரக தாத்தா” என்றனன் ஒருவன்.
அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்தனன் புதியவன்.
“காலாவதி தேதி’ திட்டம் அருமையானது, சிறந்தது, வளர்ச்சிக்கு ஏற்றது, கருப்புப் பணத்தை ஒழிக்கக்கூடியது”.
“லேகியம் விக்கிறான் பார்” என்றாரொரு குசும்புப் பதிவர்.
நாகரிகம் கருதச் சொன்னான் செவா.
“யப்பா புது வரவே, கையில இருக்கற பணத்த முன்ன மாதிரியே வரிசையில வெயில்ல, மாத்த நின்னு மண்டையப் போடனுமா?” விளக்கம் கேட்டது ஒரு பதிவு.
“செர்ட்டையின்லி பட் டெத் இல்லே..” என்றது புது வரவு வடிவேல் போல. மேலும் அது தொடர்ந்தது.
”இப்போப் பார்த்தா, இனிமே பேங்கலே மட்டும் மாத்தாது, எலக்சன் மாதிரி எல்லா செண்டர்லேயும் மாத்தலாம், இதுக்கு ஸ்கூல்ஸ்ல பேங்க் கவுண்டர் மாதிரி செயல்படும்”.
”கவுண்ட்டர்லே மாத்தச் சொன்னா முதலியார்கள் கோபிக்கே மாட்டாங்களா சாரே?” இது கண்டிப்பாக ஒரு குசும்பனின் பதிவுதான்.
“பள்ளிகளில் வங்கிகள் கவுண்டர் செயல்பட்டால் பள்ளிகள் பாதிக்குமே” என்றானொருவன்
“நாட்டின் வளர்ச்சிக்காக சில தியாகம் செய்ய வேணும்தான்” நியாயம் கற்பித்தது புதுவரவு.
”நீங்க தியாகம் செய்யறமாதிரி எந்த திட்டமும் கொண்டுவரமாட்டிங்கதானே” என்றார் ஒரு ஆத்திரப்பதிவர். மேலுமவர்,
“செல்லாத பணத்தால 87 பேர்கிட்ட செத்துப் போனானே இப்பவும் அப்படி நடந்தா”.
“நாட்டோட முன்னேற்றத்திக்காக அவர்கள் கடவுள்ட்டே போயிருக்கார், சொர்க்கம் போயிருக்கார்னு வச்சிக்கலாம்தானே” என்றவன் புதியன்.
”ஏழ பாலைங்கலெல்லாம் நிறைய கடவுள்ட்டேயும்,சொர்க்கத்திலேயும் போய்ட்டுருக்காங்கோ, நீங்கதான் நம்பர் கொறச்சல்”. குசும்பன் பதிவு.
இப்போது ஒரு பதிவர் நேரடியாகத் தாக்கத் தொடங்கினார் செவாவை.
“டேய் செவந்தியப்பா, பாவிப்பயலே, நம்ம ரெண்டுபேரும் ஒரு கம்பெனியிலதான சூப்பர்வைசரா வேலை பார்த்தோம். பணம் செல்லாததாலதானே முதலாளி முதல்ல உற்பத்திய நிறுத்தினாரு, அப்பறம் நெறைய பேர வேலையவிட்டுத் தூக்கினாரு, அதுக்கப்புறம் கம்பெனியையே மூடிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குப் பொய்ட்டாரு, நம்ம கம்பெனிக்குப் பக்கத்திலிருந்த எத்தனை கம்பெனிய மூடுனாங்க, நம் கண் முன்னாடி எத்தனைபேர் வேலை இழந்தாங்க, இதுவரை அதனோட தாக்கம் இருக்குதான, அது உனக்கும் தெரியும்தான, இப்ப மறுபடியும் பணத்தை மாத்தனுங்கற, இதுக்கு வேற பேரு வைக்கிற, வாட்ஸ்ஸப்ல வர்ரதெல்லாம் உண்மையினும், அதுதான் வரலாறுன்னும் நம்பிக்கெடக்குற கூட்டத்தோட மனத்தைப் பயன்படுத்திக்கிட்டுதானே அவனை நம்ப வச்சு அதையே செயல்படுத்தி நாட்டை நாசம் பண்றானுங்க,அதுக்கு நீ துணைபோறே”
பதிவிட்டது செவாவின் பழைய நண்பன். பதிவு தொடர்ந்தது….
”இன்னைவரைக்கும் ஒரு நல்ல வேலை அமையாம நான் திண்டாடிக்கிட்டிருக்கேன், நீ எவனோ நாட்டைக் கெடுக்கிற சூத்திரதாரிக்கிட்ட முதலீடு வாங்கி சம்பமா வாழ்ந்துக்கிட்டு, பணத்த, செல்லமலாக்கு, காலாவதியாக்குன்னு உதார் யோசனை குடுத்திக்கிட்டு இருக்கே, கருத்த இப்படி உருவாக்கச் சொல்லி உனக்குப் பணம் கொடுத்தான்களா? உன் புள்ள பேரன் எதிர்காலம் வெளங்குமா? முதல்ல சேனல நிறுத்து, குழுவெல்லாம் கலைச்சிடு, சமூக ஊடகத்த கெடுக்காம விட்டுவை உருப்பாடியா நாட்டுக்கு உதவறமாதிரி ஏதாவது வேலை இருந்தாப்பாரு”.
மிக்க ஆற்றாமை கொண்ட பதிவாக அது இருந்தது.
’செவா’ ரிமூவ்டு 9…….5……..6
“அப்படிப்போடு அறுவாள” என்றார் ஒரு பதிவர்.
மேலும் அப்பதிவு சொன்னது.
“வழக்கமா அவதூறாப் பேசி அவனையே போக வைப்பீங்க இப்ப நீங்களே நீக்குறீங்க,என்னடா நடக்குது இங்க”.....
புதிய வரவுக்காரர் இப்போது பழைய ஆள். அவர் இப்போது பதிவிலிட்டது,
“நம் நாட்டில் 40% கறுப்புப் பணம் இருக்கு, இது ஒரிஜினல் பணத்துக்கு இணையா புழக்கத்தில இருக்கு, இதனாலதான் நம் நாட்டில கடுமையான பணவீக்கம் இருக்கு, அதாவது விலைவாசி கடுமையா உயருது. நேத்து பதிவில சிலர் கேட்டாங்க மறுபடியும் வெயில்ல நிக்க வைக்கப் போறீங்களான்னு? நிச்சயமா இந்தமுறை கொட்டகை போட்டுத் தருவாங்க”.
“ஏன்…இந்த ”சுமாட்டோ” காரங்க மாதிரி வீட்டிலயே கொண்டுவந்து கொடுக்கலாமே, வேலைவாய்ப்புப் பெருகும்னு வாச்சாப்பும் விட்டுக்கலாம்”. என்றதொரு கருத்துக்குரல்.
“அதுக்கு வாய்ப்பு இல்லே” என்றது புதுக்குரல்.
“இன்னொரு முறே நீங்க பேங்கர்ஸ்ஸ ஊழல்வாதிகளா ஆக்கப்போறீங்கோ” என்றதொரு கண்டனக்குரல்.
”ஏன் அதுக்கு முன்னால அவங்க ரொம்ப நாணயமா இருந்தாங்களாக்கும்?” என்றதொரு ”காலாவதி தேதி” ஆதரவுக் குரல்.
”நல்லா இருந்தவங்களையும் கரப்ட் ஆக்கிட்டீங்களேப்பா” இது கண்டனத்தின் பதில்குரல்.
“இந்த முறை அதுக்கெல்லாம் கடுமையான வெஜிலென்ஸ் இருக்கும்”. புதுசின் பதிவிது.
செவாவின் வாட்ஸ்ஸப் குழுக்கள், முகநூல், யுடியூப் என அனைத்திலுமே “காலாவதி தேதி” பிரச்சினை ஓடிக்கொண்டே இருந்தது. வாதங்களும் பிரதிவாதங்களும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அது கடுமை அடைந்தது.
“காலாவதி தேதி அறிவிக்கப்பட்டால் நாடே குட்டிச்சுவராகும், உற்பத்திகுறையும், வருமானம் குறையும், வேலைவாய்ப்பு குறையும், பொருளாதார அறிவே இல்லாதவன்தான் இந்தக் கொள்கையை ஆதரிப்பான்”. என்று ரெளத்திரம் பேசியது ஒரு பதிவு..
அது இன்னும் ஒருபடி மேலே போய்..
”இதுமாதிரி பித்துக்குளித்தனமாய் செய்தால் வெடிகுண்டு வீசுவேன்” என்று குண்டைத் தூக்கிப்போட்டது அந்தப் பதிவு.
வெகு நேரம் யாரும் எதுவும் பதிவிடவில்லை. சிலர் குழுவிலிருந்து உடன் வெளியேறினார்கள்.
“ஆண்ட்டி இண்டியன்” என்றதொரு பதிவு.
மணி இரவு 8….
சம் ஒன் டைப்பிங்,…… சம் ஒன் டைப்பிங்,…… சம் ஒன் டைப்பிங்,……
இந்தப் பதிவு இதுவரையான “காலாவதி தேதி” பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
“நானும் இந்தப் பிரச்சினையைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வெடிகுண்டு என்று சொன்னதை யாரும் தவறாக எண்ணவேண்டாம், ’மக்கள் கருத்து’ என்பதே வெடிமருந்து என்று மகாத்மாவே கூறியிருக்கிறார். ஒத்த கருத்துள்ளவர்களை ஒன்று திரட்டுங்கள், அப்படித் திரண்டால் மக்களுக்கு எதிரான எந்தத் திட்டமும் வராது, சமூக ஊடகக்கருத்து ஒரு எல்லையோடு இருக்கவேண்டும், நம் சக்தி, ஆற்றலை, இங்குமட்டுமே வீணாக்கிவிடக்கூடாது. களத்திற்கு வந்து போராடவேண்டும், அது சத்யாகிரகப் போராட்டமாக இருக்கவேண்டும் மகாத்மா அதற்குத்தான் வாழ்நாளெல்லாம் போராடினார். நமது கோரிக்கையில் சத்தியமும், நேர்மையும் இருந்தால் கட்டாயம் அது வெற்றிபெறும், வாழ்க தாயகம்” என்று கூறி அந்தக் காந்தியரின் பதிவு நிறைவு பெற்றது.
------------------------------
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்