இரு சிறகுகள்
தயக்கத்தோடு கேட்டதற்கு சமீபத்தில்தான் கண் நடுவில் பூ விழுந்து பார்வை மங்கிப்போச்சு, எதையுமே தொட்டுப்பார்த்துதான் என்னவென்றே தெரிந்து கொள்கின்ற நிலைக்கு இவ்வளவு சீக்கிரத்தில் இவள் கண் பாதிச்சுருச்சே என்கிற ஆறாத வேதனை என்றான் கணவன். தலைப்பாகையில் கம்பீர தோள்களுடன் முதிர்ந்த விவசாயி போலத் தெரிந்தான். நிமிர்ந்த பார்வை அகன்ற கண்கள், சுறுசுறுப்பாக இருந்தான். வெயில் உச்சில் எரிந்துகொண்டிருந்தது. உலர்ந்த ரோட்டில் சிறு கற்கள் எல்லாம் கொதித்துக் கிடந்ததன. அவன் நெற்றியில் புடைத்த வியர்வை, வலது புருவத்தில் சிறு உருண்டையாக கீழே விழுந்தது. கொஞ்சம் கூடுதல் உயரம் கருத்த நிறம் இங்கும் அங்கும் தலையில் எட்டிக் குதித்த நரையில் காற்று ஊர்ந்து கொண்டிருந்தது.
சமீபத்தில்தான் இந்த பாதிப்புனா, டாக்டரை பார்த்திருக்கலாமே என்றேன். ஒருமுறை பார்த்தோமே, இரண்டு கைகளையும் அகல விரித்து இம்புட்டுக் காசு அகுமாம் என்ன பண்ண? சொல்லும் போதே குரலில் உடைந்து விழுந்தான். சட்டென குறுக்கிட்டவள் காச விடுங்க என்ன ஆப்பிரேசன் பண்ணனுமுனு அஞ்சு நாளோ, பத்து நாளோ ஊசி போட்டு பெட்ல படுக்க வச்சுருவாங்க, வேலைக்கு டீயோ பன்னோ தருவாங்க, எப்படியோ என்ன பத்திரமா பாத்துக்கலாம். அப்புறம் இந்த மனுசன? பேச்சில் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்திருந்தபடியே இடதுபக்கம் திரும்பினாள், வலது கையை நீட்டி அவன் விரல்களுக்குள் தாழிட்டுப் புன்னகைத்தாள். பதிலுக்கு அவனும் இதயத்தில் இருந்து அள்ளித் தந்தான். இந்த மனுசனை விட்டுட்டு ஒரு நிமிசம் என்னால பிரிந்திருக்க முடியாது என தீர்க்கமாகச் சொல்லி முடித்தாள். இவள் யாரென்றோ? இவள் பெயர் ராணி என்றோ? எங்கிருந்து இருவரும் வந்தார்கள் என்றோ? எந்த தகவலும் எனக்குத் தெரியாது.
தினமும் பள்ளிச்செல்லும் மாணவனைப் போல, எட்டு மணிக்கெல்லாம் சின்னத் தூக்கு வாளியில் மதிய சோற்றையும் எடுத்துக்கொண்டு கிணற்றைச் சுற்றி தென்னை மரம் நிற்கும் குரங்காட்டி காட்டு வழியாக, கிறிஸ்தவர்கள் கல்லறையைத் தாண்டி, பெரியாயி கோவிலை அடைவேன். கல்லறைக்குப் பக்கத்தில் இருக்கும் கோவில் என்பதால் மயான அமைதி இருக்கும். மதுரைவீரன் இரண்டு பெரிய குதிரைகளை உருண்டை சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார். கோவில் மேற்கூரையை தொடுமளவிற்கு பெரிதாக வடிக்கப்பட்ட குதிரையின் கால்களுக்கிடையில் பாய் போட்டு அமரும் அளவிற்கு நான்கு சுவர் அடைத்தது போல அமைதியான இடம் இருக்கும். வடக்கு நோக்கி படுத்திருக்கும் பெரியாயி தலைமாடத்தில் ஏறக்குறைய முன்னூறு வருடங்களான அரச மரம் தடித்த உருவத்தில் பிள்ளையார் காது போன்ற இலைகளோடு காற்றில் அசையும். காற்றில் உதிர்ந்த இலைகள் சில சமயம் யாரோ நடமாடுவது போல ஓசை எழுப்பி திரும்பிப் பார்க்க வைக்கும். முன்பு எழுதிய மூன்று போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்திருந்ததால் வாழ்கை நிறைய வலி மிகுந்த பாடத்தை கற்றுக் கொடுத்திருந்தது. இருந்த ஒரே ஆதரவு ஜெயம்மா அம்மாதான். இரண்டு வருடங்களுக்கு முன்பே அவளும் இறந்து போனாள். குடிகார அப்பா என்பதை விட, பொறுப்பில்லாத அப்பாவிடமிருந்து தாங்கிக் கொள்ள முடியாத அவமானங்களை சந்தித்திருந்த குடும்பம், எனக்கு கற்றுக் கொடுத்ததெல்லாம் படிச்சு, நல்ல வேலைக்கு போய் சம்பாதிச்சால்தான் நல்லா வாழ முடியும். என்னோட எண்ணமும் அப்படியாகத்தான் இருந்தது. கடைசி வாய்ப்பென கோவிலில் அமர்ந்து கடுமையாக படித்துக் கொண்டிருந்தேன். உறவுகள் யாரிடமும் நான் பேசுவதில்லை, கல்யானம் காது குத்தென செல்வதையும் முற்றிலும் தவிர்த்தேன். படிப்பு மட்டுமே வாழ்கையென பயணித்தேன்.
மதிய வெயில் உச்சில் நின்று எரியும்போது கறவ மாட்டிற்கு பக்கத்து ஓடக்கரையில் புல்லறுக்க வரும் பன்னீர் மாமா அருவா கையோடு புல் ஒட்டியிருக்கும் முகத்தில் வேர்வையைத் துண்டில் வழித்து சுருட்டி எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் சிறு ஓய்விற்கு வருவார். சரவெடி போல படபடவென அவரின் பேச்சு எனக்கு உற்சாகமாக இருக்கும். சில சமயங்களில் பப்பாளி, கொய்யாவோடு வருபவர் சாப்பிட வைத்துவிட்டுத்தான் திரும்புவார். உங்க பிச்சை பிள்ளை தாத்தா இந்த கோவில் மரத்தில் ஆட்டுக்கு தலை ஒடிக்கும் போது பெரிய பாம்பு மரத்தைச் சுற்றி இறங்க விடாது அடித்ததாகவும் வீட்டிற்கு திரும்பியவர் வாந்தியும் பேதியுமாக கிடந்து மூன்றாம் நாள் இறந்து விட்டதாகவும், இப்பவும் தாத்தா ஆவி இந்த கோவிலில் தான் இருக்கு, வேலை கிடைச்சவுடன் வேல் அடிச்சு உங்க தாத்தாவை கும்புட்டுக்கோ என வரும்போதெல்லாம் எனக்கு நினைவூட்டுவார். நான் சின்னப்பையனாக இருக்கும்போது எனத் தன்னை சூப்பர் ஹீரோவாக நினைத்து கதை சொல்லத் துவங்குவார், கதை முடிப்பதற்குள் அத்தையின் குரல் கேட்பதாக எங்கேயாவது காதில் விழுந்தால் அவ்வளவுதான் கதையை அப்படியே போட்டுவிட்டு புல்லுக்கட்டை தலையில் சுமந்து இருகைகளையும் புல்கட்டின் மீது வைத்து பிடித்து வீடு திரும்புவார்.
அன்று மதியம் பன்னீர் மாமா வந்தாகத்தான் நினைத்திருந்தேன். தினமும் தான் அவர் கதை கேட்கிறேம் எனக் கண்டுகொள்ளாமல் இந்திய வரலாற்று புத்தகத்தை வாசித்திக்கொண்டே இருந்தேன். வெகு நேரம் கழித்து திரும்பி பார்க்கையில் தலைப்பாகையுடன் ஒருவர் தன் மனைவியின் கைப்பிடித்தவாறு இரு பெரு மூட்டைகளை கோவில் வாசலில் இறக்கி வைத்துவிட்டு அமர்ந்திருந்தார். வெயிலுக்கு ஒதுங்கியிருப்பார்கள் என நினைத்து கவனத்தைச் சிதைக்காமல் படித்துவிட்டு வெயில் மஞ்சள் நிறமாகி மேற்கில் சாய்ந்ததும் வீடு திரும்பிவிட்டேன்.
வழக்கமான அடுத்த நாள் குரங்காட்டி காட்டு வழியாகச் செல்லாமல், ஏரோப்ளேன் வீடு நடராஜ் தென்னந்தோப்பு வழியாகச் சென்றேன். வீடுகளற்ற கோவில் வழித்தடத்தில் அன்று முளைத்த காளான் போல் புது வீடு ஒன்று முளைத்திருந்தது. ஒரே துணியால் நெய்யப்பட்ட ஆடை போல பத்து சிமெண்ட் சாக்கை இரண்டாக கிழித்து குடிசையாக தைத்திருந்தான். பொங்கலுக்கு கரும்பு குத்தி வைப்பது போல் நடுவீட்டில் முங்கில் ஒன்று பிடிப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள் எங்கிருந்தோ விறகு சேகரித்துக் கொண்டு வந்திருந்தான். வெள்ளை சாக்கை பாதியாக மடித்து, அய்யனார் கண் போல் இரு துளையிட்டு, கைப்பிடி என சணல் சொருகப்பட்டிருந்து பையிலிருந்து தக்காளி, வெங்காயம் என சமையலுக்கு தேவையான பொருட்களை வெளியே எடுத்தாள். வாரி விறகு குச்சிகளை நுணிக்கால் வைத்து நான்காக உடைத்து, மூன்று முக கற்களை குவித்து அடுப்பு மூட்டினாள். புகை தாங்கிப் பிடிக்க நிறுத்தப்பட்டிருந்த மூங்கிலில் கசிந்து வெளியேறி கொண்டிருந்தது. ஒரு வேலை இவர்கள் இங்கேயே தங்கிவிட்டால் எனக்கு இடையூறாக இருக்கும் என்ற பயம் என் மனதில் தோன்றியது. இரண்டு மூன்று முறை யோசனைக்குப் பிறகு அருகில் சென்று பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.
நீ இங்க படிச்சுக்கிட்டு இருக்கர தம்பி தானே? நல்லா படி. நாங்க ரெண்டு நாள்ல வேறு இடம் தேடி போய்டுவோம் என மனதில் எழுந்த கேள்விக்கு சட்டென பதில் தந்தார். அச்சரியம் தான், பெரிதாக இல்லை. படமெடுக்கும் நல்ல பாம்பு தலையை திருப்புவது போல் அவரின் பார்வை நாலா பக்கமும் அலைந்தது. நான் எதிர்பார்த்தது பதிலாக வந்துவிட்டதால் சரிங்க என்பதோடு முடித்துகொள்ளலாம் என்று இருந்தேன். ஏம்பேர் ராமசாமி, இவ பேரு ராணி. கல்யாணம் ஆகி முப்பத்தஞ்சு வருசம் ஆகுது. இரு கைகளையும் குறுக்கி ராணி பக்கம் திரும்பி புன்னகைத்தார். ஏதோ கேட்க வேண்டும் என்பதால் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்றேன். ரெண்டு ஆண் பிள்ளை ஒரு பெண் பிள்ளை சொந்த ஊரிலேயே பெரியவன் பொண்ணு கட்டிக்கிட்டாண், படிப்பு ஏறல, ஏதோ உங்களை மாதிரி பெரியவங்க சொல்ற கூலி வேலையை செய்யரான். சின்னவனுக்கு அவங்க தாத்தா பேரை வச்சோம், அவர மாதிரியே கைகால் வாட்டசாட்டமா இருப்பான், ஒம்பதாம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கான், பக்கத்தில ஒரு கம்பெனியில வேலை பாக்கறான், மாதம் பத்தாயிரம் சம்பளம், என்ன ஒன்னு அவனுக்கு ரெண்டும் பெண்ணுங்க என்றவள் சொல்லி முடிப்பதற்குள், என் பொம்பளை பிள்ளைனா எனக்கு உசுரு மருமகனும் நல்ல பையன், நல்லா பார்த்துக்கரார் என்றவனின் குரல் ஏற்றமும் இறக்கமும் கண்டது. சிறிது உணர்ச்சிவசப்பட்டார். விழியோரம் கசிந்த கண்ணீரை கண்டதும் ஒரு நிமிடம் தயங்கி நின்றேன். புரிந்து கொண்டவர், அப்படியேல்லாம் ஒன்னுமில்லை தம்பி, எங்க பிள்ளைகளை பற்றி பேசியதால ஆனந்த கண்ணீர் என்றவன் ராணியை பார்த்து ஆமாம்தானே என்றான். உணமைதான் என்றவள் அரிசியை உமி எடுத்து உலையிலிட்டாள். கால் நீட்டினால் எட்டும் தொலைவில் அமர்ந்திருந்த ராமசாமி ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல... என்ற பாடலை முணுமுணுத்தான். அதற்கு இசைவு தந்து அடுப்படியில் நாணிக்கொண்டிருந்தாள் ராணி. இடையிடையே இருவரும் புன்னகைத்து கொண்டனர்.
ரெண்டு பசங்களும் எங்கேயாவது நீங்க போய் பொழைச்சுக்குங்கனு சொல்லிட்டாங்க, பெத்தவங்களுக்கு பிள்ளைங்க நல்ல இருந்தா போதாதா, வெளியே வந்துட்டோம தூரத்தில் எங்கேயோ வேடிக்கை பார்த்தபடி சொன்னார். உங்க பெண் பிள்ள மேல தான் ரொம்ப பாசமா இருக்கிறீங்கலே, அவங்க கூட உங்களை பார்க்கலையா என பரிதவிப்புடன் கேட்டேன். வரச்சொல்லிக்கிட்டுதான் இருக்கு, மாம, மச்சன வீடுனா ரெண்டு நாளைக்குதான் அதுவும் நல்லா இருந்தா போச்சு, நாளைக்கு பேண்டுக்கிடோ மொண்டுகிட்டோ கிடந்தா உங்க அப்பா, அம்மாவையும் சேர்த்து சோறு போடுவனாடினு எங்காளால் குடும்பத்தில சண்டைனா தாங்க முடியாது. அதுவும் நாம யாருக்கும் தொந்தரவா இருக்கக் கூடாது சொல்லும்போதே அவ்வளவு தியாகத்தை மனதில் நிறைத்து வைத்திருந்தார். பெத்த பிள்ளைகள் பெத்தவங்களை பார்த்துக்கிறது கடமைதானே என்றதும், இந்த காலம் வேற, யாரா இருந்தாலும் மனசு வச்சாதான், மீண்டும் மீண்டும் புன்னகைத்தார். ஆயிரம் அர்த்தங்களை அந்த இடைவிடாத புன்னகை எழுதிக்கொண்டிருந்தது. வாழ்கை மீது நான் வைத்து இருந்த நம்பிக்கை உடைய ஆரம்பித்தது. ராமசாமி சொன்ன நாம யாருக்கும் தொந்தரவா இருக்க கூடாது, என் மனதின் ஆழத்தில் கோவில் மணிபோல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு தூய்மையான வாழ்வு எனக்கு அறிமுகமானது, மனம் இளகிப்போனது. கடவுள் முன் பேசத்துடிக்கும் பக்தனைப் போல் நின்று கொண்டிருந்தேன்.
இரவு விழுந்த பிறகு, இங்கு ஆள் நடமாட்டமே இருக்காது, பக்கத்திலேயே கல்லறை வேற, ஊர்ல தான் நிறையா இடம் இருக்கே அங்கு தங்கி இருக்கலாமே. மனம் நிறைந்த பாசத்துடன் கூறினேன். பஸ்டாண்டு சந்தை என நிறைய இடங்களில் தங்கிப் பார்த்துவிட்டோம், அங்கெயெல்லாம் பாதுகாப்பு இல்லை, அதுதான் சாமி மேல பாரத்தைப் போட்டு கோவிலில் தங்கறோம். ராமசாமியின் முகம் ஏதோ வலியால் துடித்தது உதட்டில் தெரிந்தது. ஏன் யாராவது தொந்தரவு செய்யறாங்களா? போலிஸ்காரங்க வந்து திட்றாங்களா? நீங்க இங்க தான் தங்கனும் அங்கதான் இருக்கனுமுனு யாரும் சொல்ல முடியாது. சொல்லுங்க நானும் கூட வர பார்த்துக்கலாம் கோபம் உச்சியை அடைந்தது. முச்சை வேகமாக இரண்டு முறை இழுத்துவிட்டுவிட்டு உடல் புடைக்க நின்றேன். தூங்கிக்கிட்டு இருக்கும்போது, இவள் மார்பு சேலையை விழக்கி மார்பை தொட பார்ப்பானுங்க, நாங்க இருவரும் இல்லாத பக்கம் திரும்பி தொண்டை வரை வந்த வார்த்தைகளை எச்சில் நனைத்து உள்ளே அனுப்பினார். நடுக்கம் கலந்த உடலில் சில நேரம் இவ பாவடையை தூக்கி பார்ப்பனுங்க இவ எழுந்து வீருனு கத்தும் போதுதான் இப்படி நடந்ததுதுனெ எனக்கு தெரியும், அழுகையை அடக்கவே முடியாது. அன்னைக்கு சோறும் திங்க மாட்டாள், நாள் முழுக்க அழுதுகிட்டே இருப்பா. சமாதனப் படுத்தவே முடியாது. நானும் கண்ணு தெரியாதவன் என்னால என்ன பண்ண முடியும் என ஒரு தூசி போல் மெலிந்து ராணி மேல் சாய்ந்தான்.
முதல் முறையாக வாழ்கை மீது பெரும் பயம் எனக்கு ஏற்பட்டது. ராணிக்கு தான் கண் நடுவில் பூ விழுந்து பார்வை இழந்தாள் எனத் தெரிந்திருந்தேன். தானும் பார்வையற்றவன் என்பதை அதுவரை ராமசாமி எந்தவிதத்திலும் காட்டிக் கொள்ளவில்லை. பார்த்ததில் இருந்தே நிமிர்ந்த பார்வை, சுறுசுறுப்பு, சுற்றிமுற்றி பார்த்தி கொண்டே இருந்தார். ஏதோ புதிதாக பார்த்துவிட்டதாக அடிக்கடி ராணியின் முகத்தில் சீண்டி எதையோ காட்டி, பேசி புன்னகைத்தார். அவர் புன்னகையை ஒரு நாள் சுமக்க நேர்ந்தாலும் ஒடிந்து விழுந்துவிடுவேன் அவ்வளவு கணம் அந்த புன்னகைக்கு.
இனிமேல் உங்களை நான் பார்க்க நினைத்தால் எங்குவந்து பார்க்க முடியும். என் கணகள் கலங்க ஆரம்பித்தன. போற இடமெல்லாம் எங்களுக்கு சொல்லத் தெரியாது, நாங்க பறவை மாதிரி, எல்லையில்லாமல் பறந்து கொண்டிருப்போம் என்றவள் புன்னகைத்தாள். கண் மூடி திறந்தேன், முதிர்ந்த இரு சிறகுகள் அவர்கள் முதுகில்முளைத்து, அசைந்து உயர பறந்து கொண்டிருந்தனர். எந்த பறவையும் இதுவரை பறந்திடாத உயரம். கழுத்து ஒடியுமளவிற்கு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நேரில் பார்க்கும் நான் உனமையான சாட்சி என சத்தம் போட்டு கத்திவிடலாம் போல் இருந்தது. என் மனம் ஒரு புதிய வாழ்வால் கழுவப்பட்டிருந்தது. இது வரை வாழ்கை மீது வைத்து இருந்த பிம்பம் முற்றிலும் அழிந்து சாக்கடை போல துர்நாற்றத்தோடு ஒழுகிக்கொண்டிருந்தது. வேலை, பணம் என திருமண வயதை தாண்டி பாதி வாழ்கையை ஏற்கனவே தொலைத்திருந்தேன்.
காற்றின் மீது கைகளை விரித்துக் காட்டி கொண்டிருந்தவர் ஏதோ கிடைத்துவிட்டதாக ராணியிடம் காட்டி புன்னகைத்தார். அது என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என மனம் துடித்தது. வாய் விட்டுக் கேட்டேன், இருவருமே கேட்கத் தயங்கிய நீண்ட நேரத்திற்கு பின், நீங்க கேட்டதே உதவி செஞ்ச மாதிரி இருக்கு என ஆனந்தப்பட்டார் ராமசாமி. பெரிய ஆசை எல்லாம் இல்ல நேரத்துக்கு ஒரு வேளை சோறு, கால் நீட்ட ஒரு சின்ன இடம், என நிம்மதிப் பெருமுச்சு விட்டாள் ராணி,
அப்ப நீ ஜெயிலுக்குத்தான் போகனும் நேரத்துக்கு சோறு தங்க இடம் எடுத்த எடுப்பில் அவளை ஒரு கையால் சீண்டியவாறு சொன்னான் ராமசாமி. நான் அப்படிச் சொல்ல வரல என அவளும் பின்ன இப்படி சொல்ல வந்தியா என உதட்டை கோணயாக்கி அவனும் வெடித்துச் சிரித்தனர், என் கால்கள் தானாகவே பின்னங்கால் வைத்து தொலைவில் சென்றது. அவர்கள் என்னிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. அடுத்த வேலை என்ன செய்யப் போகிறார்கள் என்ற வருத்தம் என்னுள் ஆறாய் ஓடியது. திரும்பிப் பார்த்தேன், வெகு நேரம் ஆகியும் அவர்களின் சிரிப்பு அடங்கவில்லை. நல்ல வேளை இந்த முறை அவன் புன்னகைக்கவில்லை. ஆமாம் உண்மையில் இந்த முறை அவன் புன்னகைக்கவில்லை. வெள்ளந்தியான சிரிப்பில் நான் அலைக்கழித்துப் போனேன். விழியில் கசிந்து வாய் வரை வழிந்த கண்ணீர்ல் நனைந்து கொண்டிருந்தேன். என்னால் அங்கு இருக்க முடியவில்லை. வீடு வந்து சேர்ந்தேன்.
விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை, நானே கறியெடுத்து அவர்களுக்கும் சேர்த்து சமைத்து பக்கத்து வீட்டு செல்வராஜ் அண்ணன் சைக்கிள் வாங்கி மிதித்துக்கொண்டு கோவில் வாசலை அடைந்தேன். இரண்டு நாட்களாக முளைத்திருந்த ஒற்றை குடிசை காணாமல் போயிருந்தது. கொண்டு வந்திருந்த சாப்பாட்டு பாக்சை திறந்து அங்கேயே வைத்து விட்டு கோவில் பின்புறம், ஓடையைத் தாண்டி அவர்களை தேடிக்கொண்டிருந்தேன். மரத்தில் இருந்து வந்த இரு காகங்கள் ஒரு சாப்பட்டு பருக்கையும் சிந்தாமல், மீதி இல்லாமல் சாப்பிட்டு நான் வருவதற்குள் பறந்த சென்றது. எங்கு தேடியும் அவர்களை காணவில்லை. ராமசாமி அமர்ந்து இருந்த இடம் கோவில் கருவறை போல தூசி இல்லாமல் கூட்டி சுத்தமாக இருந்தது. அங்கேயே தலை நேராக நின்ற வண்ணம் அமர்ந்தேன். வெகு நேரம் என் கண்கள் சிமிட்ட முடியாமல் போனது போல் இருந்தது. வெயிலில் பன்னீர் மாமா வந்து கேட்டதற்கு நான் அழுது கொண்டே இருந்தேன். நாம யாருக்கும் தொந்தரவா இருக்க கூடாது, அந்த புன்னகையின் ஆழத்தை எனக்கு விளக்கிச் சொல்ல தெரியவில்லை. என் கண்கள் இடைவிடாது கலங்கி கொண்டே இருந்தது.
இப்போது விளக்கம் கேட்கும் இந்த நேரத்தில் கூட என் கண்களைப் பாருங்கள்......
செந்தாரப்பட்டி இரா செல்வக்குமார்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்