அசன் ஃபாத்திமா
சிறுகதை வரிசை எண்
# 74
நாட்குறிப்பு
"ஆச்சி நானும் வரட்டுமா?" என்று என் காலை சேர்த்துக் கட்டிக் கொண்டு நின்ற பேரனை
"வேண்டாம் நீ கொஞ்ச நேரத்தில் உன் அம்மாவை தேடி அழுவே" என்று அவனைநகர்த்தி விட்டு அவசர அவசரமாக வெளியே கிளம்பினேன்
நாங்கள் படித்த பள்ளிக்கூட வளாகத்தில் முப்பத்து மூன்றுஆண்டுகள் கழித்து என்னுடன் படித்த தொழியரை இன்று சந்திக்க இருக்கிறோம். மனம் குதூகளித்தது. எங்கள் பள்ளி பெண்கள் மேல் நிலைப்பள்ளி.அதில் 1989 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து
பள்ளியை விட்டு வெளியே வந்தது தான். அதன் பிறகு படித்து முடித்த ஓரிரு வருடங்கள் எங்கள் ஆசிரியர்கள் சிலரை கடைவீதியில் பார்த்து வணக்கம் தெரிவித்து இருக்கிறேன். தோழியர் ஒரு சிலரையும் அப்போது பார்த்துப் பேசியது தான். திருமணமாகி வெளியூர் சென்றபின் கணவர், அவரது குடும்பம், பிள்ளைகள், இதோ இப்போது பேரன் என பள்ளிக்கூட நினைப்பே மறந்து விட்டது.
இப்போதுகூட என் அலைபேசி என்னை மிகவும் சிரமப்பட்டு யார்யாரிடம் எல்லாமோ விசாரித்து என் தோழி மூலம் தகவல் கிடைத்து கிளம்பிக் கொண்டு இருக்கிறேன்.ஒரு மணி நேர பயணத்தில் தான் நான் படித்த பள்ளிக்கூடம் இருக்கும் ஊர் என்றாலும் கூட நான் அங்கு செல்வதே இல்லை.குடும்ப சூழ்நிலை அப்படி இருந்தது. . வசதிகளுக்குப் பஞ்சம் இல்லை. நடுத்தர வர்க்கம் கட்டுப்பாடான குடும்பம்.
ஒரு மணி நேர பயணம் தான் என்றால் கூட கணவன் மற்றும் எண்பது வயது மாமியாரிடம் அனுமதி பெற்று கிளம்புவதற்கு போதும் போதும் என்றாகி விட்டது. கணவரையும் கூப்பிட்டேன். "எனக்கு வேலை இருக்கிறது வர முடியாது" என்று சொல்லி விட்டார்.
பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே தொடர்வண்டி நிலையம் இருந்ததால். எங்கள் ஊரில் இருந்து தொடர்வண்டி மூலம் எங்கள் பள்ளிக்கூடம் சென்றேன். புதிதாக பல கட்டிடங்கள் கட்டி இருந்தார்கள். நாங்கள் படிக்கும் போது பாடம் கற்பித்த ஆசிரியர்கள் பணி நிறைவு பெற்று இருந்தார்கள். அவர்களிலும் வர முடிந்த ஒரு சில ஆசிரியர்கள் வந்து இருந்தார்கள். வயது மூப்பில் ஆசிரியர்கள் மட்டும் அல்ல சக தோழியர் களையும் அடையாளம் காண முடியவில்லை. படிக்கும் பொழுது பருமனாக இருந்தவர்கள் மெலிந்து இருந்தார்கள், மெலிந்து இருந்தவர்கள் சற்று பருமனாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்ட பிறகே இன்னாரென யூகிக்க முடிந்தது.
எங்கள் வகுப்பறையில் அவரவர் இடத்தில் அமர்ந்து பழம் நினைவுகள் பகிர்ந்து கொண்டோம்.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிஷமாக நெஞ்சு புதைத்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே ....என்ற பாடல் வரிகள் மனதிற்குள் ஒலித்தது.
வகுப்பறையில் எனக்கு இடது புறம் அமர்ந்து இருக்கும் அஜா வையும் வலது புறம் அமர்ந்து இருக்கும் பிரேமாவையும் கண்கள் தேடின. அவர்கள் முகம் மட்டும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. அவர்கள் எந்த தோற்றத்தில் இருந்தாலும் கண்டுபிடித்து விடுவேன். அவர்கள் இருவரும் ஏன் வரவில்லை? மனது கிடந்து தவித்தது. அஜாவிற்கு பன்னிரண்டாவது வகுப்பு பாதியிலேயே திருமணம் . பரீட்சை எழுத வரும்போது வயிற்றுப் பிள்ளையுடன் வந்து எழுதினாள் .
மோகனபிரியா வக்கீலாக முப்பது ஆண்டுகள் பணிபுரிவது பற்றிய தன் அனுபவங்களை சொல்லிக் கொண்டு இருந்தாள். கீதா தான் பொறியாளராக அரசு துறையில் இருப்பதாகக் கூறினாள். அணு அரசு மருத்துவர், பானு அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை பிரிவில் இருப்பது பற்றிக் கூறினாள். நிஷா பத்தாம் வகுப்பு ஆசிரியராக அரசுப் பள்ளியில் இருபத்து ஐந்து ஆண்டுகளாக பணியாற்றுவது பற்றி சொன்னா ள். சிசிலி நாங்கள் படித்த இந்தப் பள்ளிக் கூடத்தில் இடை நிலை ஆசிரியையாக இருந்து வருகிறாள்.
சுற்றும் முற்றும் பார்த்தேன். பிரேமா, அஜா இன்னும் வர வில்லை. சற்று நேரத்திற்கு பிறகு ஒரு முப்பது வயது மதிக்க பெண் எழுந்து வந்து " தான் பிரேமா மகள் என்றும், அம்மா மூன்று வருடங்களுக்கு முன்பு கேன்சர் வந்து இறந்து விட்டதாகவும். கூறினாள். மனது கனத்தது . மற்றவர்கள் வருத்தப் பட்டர்களா என்ன என்று தெரியவில்லை. எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.
எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் மகிழ்வினை தெரிவித்தார்கள். அவர்களிலும் ஓரிருவர் உயிருடன் இல்லை என்ற செய்தி அறிவிக்கப் பட்டது.
பதினைந்தே வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி எழுந்து வந்தாள். அஜா வை சிறு வயதில் பார்த்தது போல இருந்தது. " நான் அஜா ஆச்சிக்கு பேத்தி . ஆச்சிக்கு பதினாறு வயதில் கல்யாணமாம் எங்க அம்மாவுக்கு பத்தாம் வகுப்பு முடித்த உடன் பதினைந்து வயதில் கல்யாணமாம்.. அம்மாவும், ஆச்சி யும் சமீபத்துல தான் கொரானா வில் இறந்து போனாங்க. என்று சொன்னதுமே எனக்கு அழுகை முட்டியது.அவங்களுக்கு சின்ன வயசில் இருந்தே டைரி எழுதற பழக்கம் உண்டு. பள்ளி நாட்களில் அவங்க எழுதிய டைரியை சமீபத்தில் படித்தேன். அதில் மலர் என்ற பெயரில் உள்ளவங்க பற்றி தினமும் எழுதி இருந்தாங்க.
மலர் நல்லா படிப்பாங்கள். அஜா ஆச்சிக்குபடிப்பில் புரியாத பாடங்கள் பற்றி மலர் அவங்கதான் தெளிவு படுத்தி படிக்க வைப்பாங்கள். பண உதவி அவ்வப்போது அவங்க தான் செய்வாங்க. அவளை ஒரு முறையாவது பார்க்கணும்னு எழுதி வெச்சு இருந்தாங்க. கடைசியாக எங்க பாட்டி எழுதுன டைரி குறிப்பு கூட மலர் அவங்களைப் பற்றித்தான் இருந்து. தினமும் அவங்க டைரில இடம்பிடிச்ச மலர் யார்னு பார்க்கணும்னு தான் நான் இந்த நிகழ்வுக்கு வந்தேன். " என்று அந்தப் பெண் சொல்ல சொல்ல தேம்பித் தேம்பி அழுத வண்ணம் எழுந்து சென்று அந்தப் பெண்ணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதேன்.அரங்கமே சிறிது நேரம் கண்ணீர் விட்டது.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன். நமக்கு நெருக்கமாணவர்கள் நண்பர்கள் உறவினர்கள் யாராக இருந்தாலும் அடிக்கடி சென்று பார்க்க வேண்டும் என்று இந்த நிகழ்வு நமக்கு கற்றுத் தந்து இருக்கிறது. அதனால் இன்றுமுதல் நாம் அனைவரும் மாதம் ஒருமுறை சந்திப்போம். நாம் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருப்போம் என்று நமக்கே தெரியாது. வாழ்கின்ற நாட்களை இனியேனும் பயனுள்ளதாக ஆக்குவோம்."
தொடர்ந்து நானே பேசினேன்
" இன்றைய சந்திப்பில் இருந்து இன்னொரு விசயம் விளங்கியது. எழுபது பேர் படித்ததில் பத்து பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கிறார்கள். பத்துப்பேர் டிகிரி முடித்து விட்டு வேலைக்கு செல்லவில்லை. மீதி ஐம்பது பேர் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடராமல் வீட்டில் தான் இருக்கிறார்கள். நம் பெண் பிள்ளை களுக்கு இந்த நிலை வரக்கூடாது. என்று உறுதி மொழி எடுப்போம். நாம் அனைவரும் சேர்த்து சிறிய அளவிலான முதலீட்டில் தொழில் துவங்கி வேலை வாய்ப்பு கிடைக்கா பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம்". என்று மலர்விழி யாகிய நான் சொல்லச் சொல்ல அனைவரும் கைதட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
எல்லோருடைய அலை பேசி என்னுடன் பிரேமா மகள் மற்றும் அஜா பேத்தியின் எண் மறக்காமல் வாங்கிக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் அலை பேசியில் எடுத்துக் கொண்டு பிரியாவிடை பெற்றுக் கிளம்பினேன்.
வீட்டிற்குச் சென்று இரவு உணவு முடித்து என் நாட்குறிப்பு எழுத ஆரம்பித்தேன். இன்றைய நிகழ்வு பற்றி எழுதினேன். முப்பத்து ஐந்து ஆண்டுகளாக என்னுடைய நாட்குறிப்பில் தவறாது இடம்பிடித்த அஜா வைப் பற்றி இன்றும் எழுதினேன். இதயம் மட்டும் கணத்தே இருந்தது.
இருவரும் ஒவ்வொருவர் மனதிலும் மற்றவர் நீங்கா இடம் பெற்றுள்ளது என்பது எங்கள் நாட்குறிப்பில் இருந்ததை நினைத்து மெய் சிலிர்க்க, கண்களின் ஓரங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
பழைய நாட்குறிப்பு தேடி எடுத்துப் புரட்டினேன். அஜா வின் இளமைக்கால காதல் கடிதங்கள் வந்தது பற்றி எழுதி இருந்ததைப் படித்தேன். அதனாலேயே படித்துக் கொண்டு இருக்கும் போதே அத்தை மகனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள். பழைய நாட்குறிப்பில் ஒவ்வொரு பக்கங்கள் திருப்பி திருப்பி படித்து மலரும் நினைவுகளில் மூழ்கிப் போனேன். நிறைய பக்கங்களை வாசிக்க வாசிக்க பழம் நினைவுகள் எட்டிப் பார்க்க கண்களில் இருந்து நீர் மட்டும் மடை திறந்த வெள்ளமாக வழிந்து கொண்டே இருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்