logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சௌந்தரராஜா லிசாந்தினி

சிறுகதை வரிசை எண் # 73


எதிர்பார்க்காத திருப்பங்கள்!!! “எதுக்கு தாத்தா விடியவிடிய முழிச்சிக்கொண்டு இந்த காற்றுப்போன டயருக்கு பஞ்சர் ஒட்டிக்கொண்டு இருக்குறீங்க? இந்த உடைந்துபோன சைக்கிளை எதிர்பார்த்துக்கொண்டு யாரும் இருக்கிறார்களா?” என்று சாணி கரைத்துப்போட வாசலுக்கு வந்த லட்சுமி சிரித்துக் கொண்டே கேட்டாள். டயருக்கு பஞ்சர் ஒட்டிக்கொண்டுடிருந்த இராசையா தாத்தா நிமிர்ந்து பார்த்து மெல்லச்சிரித்தப்படி,“உங்க வீட்டுக்காளைகளெல்லாம் கிழடாகி போய்விட்டதல்லவா! அப்படியிருந்தும் ஏன் அவை தண்ணியிறைக்குது? உழுவுகின்ற வேலையேல்லாம் செய்கின்றது? கஷ்டப்பட்டு வண்டி இழுக்கின்றது? ஏன்? நாம் வறுமையில் இருக்கின்றதால் வேறு மாடுகள் வாங்க வழியில்லாம பாவம் வாயில்லாத ஜீவன்களையும் தெம்பில்லாதமாடுகளையும் போட்டுத் தொல்லைப்படுத்துகின்றோம். அப்படியிருந்தும் அவை நன்றாகதான் வேலை செய்கின்றது. அதுபோல மனுஷனா பிறந்தா நாம சாப்பிடுகின்ற சாப்பாட்டிற்கும் குடிக்கின்ற கஞ்சிக்கும் உடம்பை வருத்தி ஏதாவது வேலை செய்யனும். என்னாலயேல்லாம் சும்மா வெட்டியா இருக்க முடியாது!!! ஏதோ என்னால முடிஞ்ச வேலையை செய்கின்றேன்!” என்று விவாதமாக பேசினார். “தாத்தாவுக்கும் பேத்திக்கும் காலையிலேயே வேற வேலையே இல்லையா?” என்று அவர்கள் பேசியவற்றையெல்லாம் பாட்டி காதில் வாங்கிக் கொண்டு சிரித்தபடி சொன்னார். “போங்க தாத்தா! உங்ககிட்ட ஒன்றும் பேசமுடியாது! எனக்கு நிறைய வேலையிருக்கு!” என்று லட்சுமி தன் வேலைகளெல்லாம் முடித்து விட்டு வீட்டினுள்ளே போய் செம்பில் நீராகாரத்தை ஊற்றி உப்பும்போட்டு கலக்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் தாகம் தீர்த்தாள். அப்போது சைக்கிளில் தீவிரமாக வேலையில் இருந்த தாத்தா,“ஏம்மா லட்சுமி, நேற்று வயல் காட்டுக்கு வேலைக்கு போன உங்க அம்மாவை இன்னும் வரக்காணலையே!!! வேலை ஏதாவது அதிகமா இருந்திருக்குமோ? பாவம் என் மகள். ஒரு பக்கம் நமக்காக பாடாதபாடு பட்டுக்கொண்டுயிருக்கிறாள்” இவற்றையெல்லாம் கேட்டு என் கண்கள் கலங்குவதற்கு முன்பே தாத்தாவிற்கு கண்கள் குளமாகி விட்டது… அப்படியே கண்களை துடைத்தபடியே, “லட்சுமி! உங்க அண்ணன் இன்றைக்கு ஊருக்கு வருவதாக கடதாசி போட்டானே! இவ்வளவு நேரத்திற்கு இங்கே வந்து சேர்ந்திருப்பானா? அவன நேரில் பார்த்து எவ்வளவு நாளாச்சு… இப்ப தான் நம்ம எல்லாரையும் பார்க்க அவனுக்கு நேரம் கிடைச்சு இருக்கு போல… வரட்டும் படுவா!!!” என்று ஆர்வத்தோடு தாத்தா பேசிக்கொண்டு இருந்தார். சூரியன் உதித்து வெகுநேரம் ஆனாதால் வானம் நீலமாக இருந்தது. இவ்வளவு பெரிய விரிந்த வானத்தைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இப்படிப்பட்ட அழகை ரசித்துப் பார்க்க விடாமல் தலைக்கு மேலே எப்பவும் கொங்கிறீட் கூரைகள் இருந்து என்னுடைய ரசனையையே கெடுத்து விட்டது… இனி என்னுடைய ஊரின் இயற்கைச்சூழல் மனதிற்கு நல்ல ஆறுதலை கொடுக்கும்” என்று மனதில் இயற்கை பற்றிய நினைவுகளுடன் பஸ்ஸிலிருந்து தன் ஊர்மண்ணில் காலை வைத்தான் மோகன். முதல்பஸ் தாமதமாக வந்ததால் தன் ஊர் செல்லும் இரண்டாவதுபஸ் வண்டியை தவற விட்டு விட்டான். வெயில் அகோரமாக ஆகிவிடும் நேரத்திற்கு முன் எப்படியாவது வீடு போய் சேர வேண்டும் என்ற எண்ணமே அவன் மனதிற்குள் இருந்தது. வெயிலில் வேளை செய்ததால் கரியத் தோலுடனும் வயதான உடலுடனும் ஒரு பெரியவர் மோகனை கடந்து சென்று விட்டு சட்டென்று சைக்கிளை நிறுத்தி தலையை திருப்பி பார்த்து,“யாரது? இராசையா பேரனா? ஏன்னையா இங்கே நிக்கின்றாய்? ஊரிலயிருந்து எப்போ வந்தாய்? வீட்டுக்குப் போகலையா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். “தாத்தா! நம்ம ஊருக்குப்போற பஸ்ஸ தவறவிட்டுடேன். அடுத்த பஸ் வரும் வரைக்கும் காத்துக்கொண்டு இருக்கின்றேன். நீங்க வெயில்ல நிக்காம போங்க தாத்தா” என்று சொன்னேன். “அதுவரைக்கும் இந்த வெயில்ல இங்கே நிற்க போறீயா? என்னப்பா நீ? இனி அடுத்த பஸ் ரெண்டு அரைக்குத் தான் இருக்கு. என்னோடு வா! நான் ஊருக்குள்ளே கூட்டிப்போறேன்” என்று மோகனை அவர் சைக்கிளில் ஏறச் சொன்னார். “தாத்தா! எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. அப்போ நீங்களா என்ன வச்சி ஓடப்போறீங்க? பாவம் நீங்க போங்க” என்று அவரை அவசரப்படுத்தினேன். சூரியனின் அதிரடி வெப்பம் உடம்பில் இறங்கிக் கொண்டிருந்ததால் முகத்தில் ஏற்பட்ட வியர்வையை கையால் துடைத்துக் கொண்டே, “என்னை யாரென்று நினைச்சாய்? இந்தா இந்த குடைய பிடிச்சிக்கொண்டு என்ற பின்னால வந்து ஏறி உட்காரு!” என்று உத்தரவு போட்டது மோகனுக்கு சிறு பயத்தை ஏற்படுத்தி விட்டது. நெடும் நேரமாகிய அந்தப் பயணத்தில் ஒரு உரையாடல்… “இப்போது பஸ்ஸில போயிருந்தால் சனநெரிசலுக்குள்ளையும் வியர்வை நாற்றத்திலும் மிதிபட்டு நசுங்கி போயிருக்கனும். வெயிலின் சூட்டின் மேலே உடலில் படும் இளங்காற்று எவ்வளவு சுகமாக இருக்கின்றது!!! உருண்டை கற்கள் மீது வேகமாக சைக்கிள் டயர் போகும் போது உடலில் ஓர் அதிர்வு வருவது என்னை சிலிர்க்க வைக்கின்றது… நகரத்திலே அடைப்பட்டு இருந்த எனக்கு இவை எல்லாம் மனதைக் கொஞ்சம் லேசாக மாற்றுகின்றது…” என்று உணர்வு பூர்வமான நினைவுகளை தாத்தாவிடம் பேசிக் கொண்டு வந்ததில் இருவரும் வீடு வந்து சேர்ந்து விட்டனர். “ரொம்ப நன்றி தாத்தா… தனியா நின்ற என்னை கவனமா கூட்டி வந்து விட்டீங்க. இந்த உதவிய எப்பவும் மறக்க மாட்டேன் என்றதும், “சரியப்பா. நீ உள்ளே போ! உனக்காக எல்லோரும் காத்துக்கொண்டு இருப்பாங்க” என்று மோகனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். தாத்தாவை வழியனுப்பிவிட்டு தன் உடலை திருப்பும் வேலை அவன் அம்மா லதா வயற்காட்டு வேலைகளெல்லாம் முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தாள். “ராசா! வந்திட்டியா? அம்மாக்கு வயல்காட்டுல சரியான வேலையாகிட்டு. உனக்கு வாய்க்கு ருசியா சமைச்சி வைக்கனும்னு நினைச்சன் கிடைக்காம போய்டுச்சே… சரி வா! எல்லோரும் உன்னை தேடிட்டு இருப்பாங்க…” என்று தன் மகனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். “அப்பா! அம்மா! உங்க பேரன் வந்து இருக்குறான் பாருங்க”. “ஐயா! சாமி வாயா! வாயா! எப்படி இருக்கின்றாய்? உன்னை பார்த்து எவ்வளவு நாளாகிட்டு… இப்படி இளைச்சு போட்டாய்” என்று மோகனை உற்றுப் பார்த்த படியே தாத்தாவும் பாட்டியும் அவனை கட்டித்தழுவி முத்தமிட்டனர். “ஆஹா!!! நீங்க கொஞ்சினது போதும். அண்ணா பயணக் களைப்பில நல்ல பசியில வந்து இருப்பான். முதல்ல அவனுக்கு சாப்பாட வைப்போம். பிறகு எல்லோரும் வட்டமாநாடு போட்டு பேசலாம்” என்று லட்சுமியும் அம்மாவும் சட்டென்று சமையல் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர். “நல்லெண்ணை கொதிக்க கொதிக்க சுவையான ஆட்டிறைச்சிக் குழம்பும், வெங்காயச்சம்பலும், சோறும்” என மனதை ஈர்க்கும் சாப்பாடு தயாரானது. குளித்து விட்டு இளைப்பாறி வந்த மோகனுக்கு வாழைஇலையில் உணவு பரிமாறப்பட்டது. வயிரு முட்ட முட்ட மனதார சாப்பிட்டுவிட்டு, தங்களது பல நாள் கதைகளெல்லாம் உரையாடலாக பொழுது சாயும் வரை பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த நேரம் மோகன்,“தாத்தா, நான் ஊருக்கு வந்த பிறகு நம்ம ஊர் பஸ்ஸை தவற விட்டுட்டேன். அப்போது ஒரு தாத்தா தான் என்னை அவரது சைக்கிள்ல இருக்க வைச்சி இவ்ளோ தூரம் ஓடி வந்தார். அந்த சைக்கிள் பயணம் எனக்கு ரொம்பவும் பிடிச்சி இருந்தது. இந்த வயசிலயும் இவ்வளவு ஆரோக்கியமா இருக்குறாறே!” என்றான். “பேரா! இந்த காலத்தில இருக்குற வாகனத்தால உடம்புக்கும் மனசுக்கும் என்ன பிரயோசனம்? நாங்கயேல்லாம் அப்போ சாப்பிடுற சாப்பாட்டுக்கு ஏத்த மாதிரி ஓடியாடி வேலை செய்வோம். இந்தகால போக்குவரத்துசாதனம் அப்போ இல்லாததால நாங்க காடு மலையெல்லாம் சைக்கிள்லேயேதான் போவோம். அவையேல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லதே!. இப்போ இருக்குற வாகனம் எல்லாம் சரியான விலையும்கூட. ஒருத்தன் வாங்கினான் என்றால் இன்னொருத்தனால வாங்க முடியாது. பணக்காரன் எவ்வளவு செலவு செய்தாவது ஒன்றுக்கு பத்து வாங்கிப் போடுவான். வசதி இல்லாதவன் என்ன பண்ணுவான்? ஐயோ! நம்மலால இப்பிடியெல்லாம் வாங்க முடியலையே என்று மனசுக்குள்ள புலுங்கி தினம் தினம் சாகுவான். இருக்கிறத வைச்சி சந்தோஷமா இருக்கனும் என்று யாரும் இப்போ நினைக்கிறதில்லையேப்பா! நகரத்து ஆட்கள் தான் எல்லாத்தையும் மறந்து ஆடம்பர வாழ்க்கை வாழுறாங்க என்று பார்த்தா இப்போ கிராமத்து ஆட்டகளும் பழசு எல்லாவற்றையும் மறந்து புதுவிதமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் நினைச்சா வெறுப்பு வருவதைவிட வேதனை தான் அதிகமா வருது.” இப்படியே போய்கிட்டு இருந்தா என்னதான் முடிவு? என்னதான் புதுசா வாகனம் வந்தாலும் எனக்கு எப்பவும் என்னோட சைக்கிள்தான் சாமி!!! எனக்கு எல்லா சுகங்களையும் நல்ல பாடத்தையும் புகட்டின ஆசான். ‘ஒரு பெரிய ஆணிவேர் இல்லாத ஆலமரம் தன் விழுதுகளையே நம்பி வாழ்வது போல’ எந்த ஆடம்பரமும் இல்லாத அந்த சைக்கிளை நம்பித்தான் என் வாழ்க்கையே ஆரம்பிச்சேன். “மன்னிச்சிடு ஐயா! இதையெல்லாத்தையும் ரொம்ப நாள் மனசுல வச்சு வச்சு யோசிச்சிக்கிட்டு இருப்பேன். யாருகிட்டயாவது இப்படி பேசினா மனசு கொஞ்சம் இலேசாக இருக்கும். இன்னைக்கு பேச நீங்க மாட்டீங்க. ம்ம்ம்… சரி! நீங்க பேசிட்டு இருங்க நான் கொஞ்சம் கோபாலுட கடைக்கு போட்டு வாரேன்” என்று தாத்தா கிளம்பிவிட்டார். சூரியன் தன் வேலைகளெல்லாம் முடித்துவிட்டு குளிர்ச்சியோடு மென்மையான காற்றை வீசியது. அது உடலில்படும்போது இதமான சுகத்தை உணரமுடிந்தது. அந்தநேரம் எனக்காக வேலை செய்து களைத்துப்போய் இருந்தவர்களை மேலும் வேலை சொல்லி கஷ்டப்படுத்த விருப்பமில்லை. அதனால் அனைவரையும் ஒன்று கூட்டி சில விடயங்கள் பேச ஆசைப்பட்டேன். அப்போது அம்மாவிடம், “ஏனம்மா! பின்னேரம் நான் தாத்தாகிட்ட சைக்கிள்ல வந்ததை பற்றி பேசினேன் தானே. அப்போது அவர் ரொம்பவும் வேதனையாக பேசினார்தானே. அதையெல்லாம் அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைப்போல தெரியலையே! அது அவர் மனசுல இருந்து வந்த காயங்கள் போல தெரியுது” என்று ஒரு கேள்வியை வைத்தேன். அதற்கு அம்மா, “தம்பி நீ செல்லுவது சரிதான். எங்க அப்பா எங்களுக்காகவும் குடும்பத்திற்காகவும் ரொம்பபாடுபட்டார். அவர் உழைக்கவே என்று பிறந்த மனுஷன். அதுக்கு அவருக்கு ரொம்பவும் உறுதுணையா இருந்தது அவரோட தன்னம்பிக்கையும் அவருக்கு அவங்க அப்பா வாங்கிக் கொடுத்த சைக்கிளும்தான்… அதனுடைய கறுப்புநிறஉடல் மேலேயிருந்து பேடல்ல காலைவைத்து சுற்றும்போது அதில் பொறுத்தின டைனமோ இயங்கி முன்விளக்கு பிரகாசமான வெளிச்சத்தை கொடுக்கும். அதையப்படியே பார்க்கும்போது சாமிய சோடித்து வைத்தது போல இருக்கும். அன்றைய நாட்களில் புடைச்சட்டியில் சோளமும் கேழ்வரகும் சேர்த்துக் காய்ச்சிக் கரைத்தக் கூழும் தீய வைச்ச கருவாட்டுக் குழம்பும் கமகமக்கும். அதோட குழம்பில் முதுகை காட்டிக் கொண்டிருக்கும் கத்தரிக்காய்த்துண்டு ‘கூழை வாயில் ஊற்றி என்னைக் கடித்துக் கொள்’ என்ற எண்ணத்தை வரவைக்கும் அளவிற்கு உங்க பாட்டி விடியவே சமையல் செய்திடுவாங்க… நான் சின்னவயசுல கிழமை கடைசி இரண்டு நாளும் அப்பா எங்கே போனாலும் கூடவே போயிடுவேன். அன்றைக்கு அதிகமாக சந்தை வியாபாரமாகத்தான் இருக்கும்.” “ஊர் பொதுமைதானத்தில்தான் சிறிய பெரிய வியாபாரிகளெல்லாம் தங்ககிட்ட இருக்கின்ற ரொம்ப ஆடப்பரமான அநாவசியமான பொருட்களை கொண்டுவந்துதான் வியாபாரம் செய்வாங்க. ஆனா எங்கப்பா அன்றைக்கு சனங்களுக்கு என்ன தேவையா இருக்கும் என்று யோசிச்சி தேவையான பொருட்களை மூட்டைகட்டி சைக்கிள்ல ஏத்திட்டு என்னையும் முன்கம்பில தூக்கி வைச்ச பிறகுதான் சந்தோஷமா வெளிக்கிறங்குவம்.” காலையில நேரத்தோட இயற்கையோடையே எங்க பயணத்தை ஆரம்பிச்சிடுவோம். அப்போது அப்பாகிட்ட பேச்சு குடுத்தவாறே போவேன். அவர் பொருட்களின் பாரத்தை தாங்கிக்கொண்டும் வலியை காட்டிக்கொள்ளாமல் எனக்கு பதில் சொல்லிக்கொண்டே வருவார். எங்க அப்பா முன்னமே என்ன வேலை செய்தாரு என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு தபால்காரர். அந்த வேலையில கண்ணும் கருத்துமா இருப்பாரு. ஒரு கடிதம் மனிஷன்ட வாழ்க்கையையே மாற்றக்கூடியது. அது ஒரு நாளும என்னால் மாறிடக்கூடாது என்று வெயில்,மழை,உடம்பு கஷ்டம் பார்க்காம உரிய இடத்துக்கு கொண்டே சேர்த்துவிடுவார். வேலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாரு! ஒருநாள் எங்க பெரியம்மா வீட்டுக்கு போய் திரும்பிவர இரவாய் போய்விட்டு. அப்போது அப்பா, “நல்லா இருட்டிவிட்டது! நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க. நான் நாளைக்கு வேலைக்கு போய்ட்டு வந்து கூட்டிப்போறன்” என்றார். அதுக்கு நான்,“அப்பா! இருட்டுபட்ட நேரம் நான் சைக்கிள்ல போனதே இல்லை. இரவுப்பயணம் எப்பிடியிருக்கும் என்று எனக்குத் தெரியாது. இன்றைக்கு எனக்கு சந்தர்ப்பம் வந்திருக்கு. நாம ஒன்னாவே போவோம்” என்று பெரியம்மா வீட்டைவிட்டு வெளிக்கிறங்கினோம். அன்றைக்கு பூரணை என்றதால நிலா முழுசாக பாக்கவே அழகாயிருந்தது. வீதிக்கே விளக்கு போட்டது போல பளீச்சென்ற வெளிச்சம். இதையெல்லாவற்றையும் சைக்கிள் முன்கம்பியில இருந்து ரசித்துக்கொண்டே வந்தேன். அப்போதுதான் வானத்திலிருக்கும் நிலவை பார்த்தேன். “என்னடா இது! நாங்க போகின்ற வேகத்துக்கும், இடத்திற்கும் பின் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கு? ஏன் இப்படி வருகின்றது”என்ற புரியாத யோசனையுடன் அப்பாவிடம் கேட்டேன். அதற்கு அப்பா,“அம்மா லதா! உலகத்திற்கே நிலா ஒன்று தான். அது வானத்தில அதற்கேற்றவாறு அசைந்து கொண்டிருப்பது நமக்குத்தெரியாது. ஆனால் அது ஒரு இடத்தில்தான் இருக்கும். நாமதான் நம்ம மனசுல அது பின்னுக்கே கூடவே வருகின்றது” என்று நினைக்கின்றோம். இதை பார்த்து நீ ஒன்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில எப்போதும் நிலா போல ஒரே மாதிரியான கொள்கையோட இருக்க வேண்டும்” என்று வாழ்க்கை தத்துவத்தையும் சொல்லித் தந்தார். “இப்படியே எங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் யோசித்து யோசித்து அந்த சைக்கிளை வைத்தே வாழ்க்கையை கழித்துவிட்டார். இப்போது தபால்வேலை பென்சன் காசு கொஞ்சம் வருகின்றது. அந்தக் காசுலையும் நாமயெல்லாரும் வேலை செய்கின்ற காசுலையும் தான் இப்ப இந்த குடும்பம் ஓடிக்கொண்டு இருக்கின்றது…” என்று ஆழ்ந்த கனவுகளுடன் அம்மா தாத்தாவின் வாழ்க்கைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார். இருந்தும் அன்றைக்கு நான் அம்மாவை விடுவதாக இல்லை… உரையாடல் சுவைப்பட்டு விட்டது. “அம்மா! ஒருநாள் சைக்கிள் பயணம் செய்ததையே என்னால் மறக்க முடியவில்லை. நீங்க சின்ன வயசிலயிருந்து அந்த சைக்கிள் கூடவேயிருந்து இருக்கீங்க. உங்களுக்கு அந்த நேர அனுபவம் எப்படியிருந்திருக்கும்? சொல்லுங்க அம்மா!”ஹஎன்று அம்மாவை ஆர்வப்படுத்திவிட்டேன். அதுசரி! நீ கேட்டதால் எனக்கு இப்போது பழைய ஞாபகங்களெல்லாம் வருகின்றது. ஒருநாள் எனக்கு சரியான காய்ச்சல் என்று பள்ளிக்கூடத்திற்கு போகவில்லை. ஜாமத்தில் எழும்பிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தான் ஒரு யோசனை வந்தது! அப்போது என்ற முன்னுக்கே சைக்கிள் இருந்தது. நாமளும் எத்தனை நாளைக்குத்தான் அப்பாக்கு பாரமாக சைக்கிள்ள போயிக்கொண்டு இருப்பது? இன்றைக்கு சைக்கிள் பழகிப் ஓடிபார்ப்போம் என்று, சைக்கிள் முன்கம்பிக்கு கீழே வலதுகாலை விட்டு தெத்தித்தெத்தி பழகிப் பார்த்தேன். அப்பிடியே ஓடிடுவம் என்று கொஞ்ச தூரம் ஓடிப் போய்விட்டேன். ஆனால் அதில் சரியான பக்குவம் எனக்கு இல்லையென்றதால் என்னவோ ஒரு மரத்தில் முட்டி குப்பைக்குள்ளே விழுந்துவிட்டேன். கைகாலில்ல நல்ல காயம் அந்த வேதனையில் சத்தமாக கத்திட்டேன். என்னோட சத்தம் கேட்டு அம்மாவும் அப்பாவும் ஓடி வந்து முதல்லே என்னையத்தான் தூக்கினார்கள். “என்ன லதாம்மா இது? இது பெரியவங்க ஓடுகின்ற சைக்கிள். நீ இப்ப சின்னபிள்ளை. உன்னோட வயசுக்கு ஓடிப்பழக இந்த சைக்கிள் சரிவராதும்மா. சரி! அப்படி உனக்கு ஓடிப்பழக ஆசையா இருந்தா அப்பாக்கிட்ட சொல்லியிருந்தா அவர் உனக்கு பழகித் தந்திருப்பார்தானே”என்று அம்மா பதற்றப்பட்டார். “இல்லையம்மா! அப்பா பொருட்களையும் ஏத்திக்கொண்டு எவ்வளவு தூரம் கால் வலிக்கவலிக்க சைக்கிள் ஓடிப்போகின்றார். ஆனால் அவர் ஒருநாள் கூட நம்மகிட்ட அவர் வலிபற்றி ஒன்றும் சொன்னதுமில்லை. அப்பாக்கு வேலையெல்லாவற்றிற்க்கும் இந்த சைக்கிள் உதவியா இருக்குற போல நானும் அவருக்கு உதவியா இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அப்பாவை கொஞ்சம் தூரமாவது உட்கார வைத்து கூட்டிப் போகலாம், அவருடைய வேலைகள் எல்லாவற்றிற்கும் துணையா இருக்கலாம் என்று நினைத்துதான் நானே தனியாக சைக்கிள் ஓடிப்பழகப் போனேன்” என்று நான் சொன்னதால் அம்மாக்கும் அப்பாக்கும் கண்கள் நனைந்து விட்டன. அப்போது அப்பா ஓடிவந்து என்னை கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு, “என்னபெத்ததாயே! என்னோட கஷ்டங்களை புரிந்து எனக்கு உறுதுணையா இருக்க வேண்டுமென்று நினைக்கின்ற நல்ல மனதை கடவுள் உனக்கு தந்திருக்கின்றாறே! அப்பாக்கு அது போதும். உன்னோட இந்த ஒரு வார்த்தை என்னை இந்த உலகத்தையே சுற்ற வைத்திடும் பாரு!!! எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உங்களுக்காக நான் பாடுபடுவேன். எனக்கு நீ சாமி தந்த வரம்மா!!! எனக்காக நீ மனமிறங்கினதே போதும்மம்மா!” என்று அப்பா உணர்ச்சியோசப்பட்டார். பிள்ளைக்கு குடும்பத்தைப்பற்றி யோசிக்கின்ற பருவமும், சைக்கிள் ஓடவும் ஆசை வந்துவிட்டது என்பதை தெரிந்துகொண்ட அப்பா எனக்காக ஒரு அதிர்ச்சியான விஷயம் செய்ய காத்துக்கொண்டு இருக்கின்றார் என்று அன்றைக்கு எனக்குத் தெரியவில்லை! ஒருமாதம் கழிந்து ஆவணி இருபத்திநான்கு என்னுடைய பிறந்தநாள். காலையிலேயே எழுந்து பள்ளிக்கூடம் போக வெளிக்கிட்டு அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பிறகு அவர்களிடம், “சரி! என்ற பிறந்தநாளைக்கு என்ன பரிசு தரப் போறீங்க?” என்று உரிமையாக கேட்டேன். அவர்களும், நீ பள்ளிக்கூடம் போட்டு வா! பிறகு ஒரு அழகான பரிசு தருவோம்” என்று சொல்லி என்னை வழியனுப்பி வைத்தார்கள். பள்ளிக்கூடம் போனதும் நண்பர்கள் வாழ்த்தி பரிசு தந்தார்கள். இருந்தும் எனக்கு வீட்டில் என்ன பரிசு கிடைக்கப்போகின்றது என்ற ஆர்வமும் யோசனையும் தான் அதிகமாகிக்கொண்டே இருந்தது. பள்ளி முடிந்து மணி அடிச்சதும் நேராக வீட்டுக்குத்தான் ஓடிப்போனன். வீட்டுக்குள்ளே போன பிறகு அம்மா வந்து என்ற கண்ணை மூடிவிட்டாங்க. கொஞ்சம் நேரத்துல அப்பா வந்து, “லதா குட்டி! இப்பே கண்ணைத்திற” என்று சொல்லவும் கண்ணை திறந்து பார்த்தால், கறுப்புநிறத்தில், நடுத்தரளவான, பொம்பள பிள்ளைகள் ஒடும் சைக்கிள் அது. பார்க்கவே பளீச்சென்று இருந்தது. அப்பிடியே சந்தோஷத்தில் திகைத்து போயிருந்த என்னிடம், “மகள் உனக்கு நான் சைக்கிள் ஓடப்பழகித்தருகின்றேன். எந்த விஷயம் என்றாலும் முதல் அடி விழத்தான் செய்யும். அதை நாம் தோல்வியாக நினைத்தல் கூடாது. நம் வழி சரியாகயிருந்தால் போய்க்கொண்டேயிருக்கனும். ஒரு தடவை கூட விழாமல் சைக்கிள் ஓடப்பழகினம் என்றால் அதிலொரு சுவாரஸ்சியம் இருக்காது” என்று அப்பா நல்லகருத்துக்களை எனக்கு சொல்லித்தந்தார். அன்றைய நாளிலிருந்து மனதிலும் உடம்பிலும் தைரியத்தை வரவைத்து நானே பள்ளிக்கூடத்திற்கும் வீட்டு வேலைகளுக்கும் சைக்கிளை உபயோகித்து வந்தேன். அதை என்னுயிர் தோழியா நினைத்துக்கொண்டேன் அதனால் அதுற்கு சின்ன அடி விழுந்தாலும்கூட என்ற மனது நொந்து போய்விடும். அதனுடனே என்னோட பாதிவாழ்க்கை போய்விட்டது. இனி எனக்கு குமரிபருவம் வரவும் அப்பா அம்மா கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க. என்னோட கல்யாணவாழ்க்கை என்ட மனுஷனோட நன்றாகதான் போயிக்கொண்டு இருந்தது. அப்போதுதான் நீங்க ரெண்டு பேரும் பிறந்தீங்க. அவரும் அப்பா போல சந்தைவியாபாரம் தான் செய்தவர். அவருடைய வேலைக்கு என்னுடைய சைக்கிள் நல்ல துணையாக இருந்தது. “கத்தியெடுத்தவன் கத்தியால்தான் சாகுவான்” என்று சொல்வது போல “வாகனத்தில போறவனுக்கு வாகனத்தாலதான் சாவு” என்பதும் உண்மைதான்… வேலை முடிஞ்சு ராத்திரி நேரத்தில வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தவரை ஒரு லொறிக்காரன் மோதிட்டு மனசாட்சியில்லாமல் இவரோட நிலைமையை பார்த்தும் அப்படியே விட்டுவிட்டு போய்விட்டான். பிறகு அந்த வழியா வந்தவர்கள் பார்த்த நேரம் உங்க அப்பா உயிர்போய் கிடந்தார் என்று சொன்னார்கள். அன்னைக்கு நடந்த அந்தச்சம்பவத்திலிருந்து என்னோட சைக்கிளை பார்க்கும்போதெல்லாம் உங்க அப்பா ஞாபகம்தான் வரும். அதனாலையே அதை தொட்டுக்கூடப் பாக்குறதேயில்லை… சிலநேரம் சரியான கோபம் வரும்! அப்போதுதான் யோசிப்பேன்! “அது உயிரில்லாத சைக்கிளோட தப்பில்லையே! உயிருள்ள ஐந்தறிவு ஜீவன்ற தப்புதான்!” என்று நினைச்சிக்கொண்டு என்னோட மனசை நானே தேற்றிக்கொள்ளுவேன் என்றவாறே கண்கலங்கி அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றையேல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார். ஏம்மா லட்சுமி! நீ காலையில தாத்தாவிடம், “ஏன் இந்த உடைஞ்சு போன சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள்? இந்த சைக்கிளை யாரும் எதிர்பார்த்துகிட்டு இருக்கிறார்களா?” என்று கேட்டியே அது உண்மைதானம்மா… நாங்க மூனுபேரும் வாழ வேண்டிய வயசுல மேலபோன உங்க அப்பா திரும்பிவரமாட்டாரா? இந்த சைக்கிள்ல உங்களையேல்லாம் ஏத்திக்கொண்டு சந்தோஷமா ஊர் சுற்றமாட்டாரா? நம்மகூடயேல்லாம் இருக்கமாட்டாரா? என்றே தினம் தினம் மனசுக்குள்ள புழுங்கிக்கொண்டு இருக்கின்றோம்மா” என்று சொல்லி பாட்டி தேம்பிதேம்பி அழத் தொடங்கிவிட்டார். இத்தனை வருஷமாக மறைமுகமாகயிருந்த இந்த கதையேல்லாவற்றையும் புதுசா கேட்ட எனக்கும் தங்கச்சிக்கும் பெரிய இடிவிழுந்த சேகமாக இருந்தது. அந்த இடத்திலிருந்து நாங்க ரெண்டு பேரும் எழுந்து அந்த சைக்கிள் கிட்டப்போய் நின்றோம். இத்தனை நாளாக எங்கள் கண்ணுக்கு வெறும் ஓட்ட உடைந்த சைக்கிளாக தெரிந்த அது இன்றைக்கு,“வேலைக்குச் சென்று களைப்புடன் திரும்பி வந்து நிற்கும் எங்கள் அப்பாவாகவே தெரிந்தது!. பிறந்ததிலிருந்து அப்பா பாசமே தெரியாம வளர்ந்த எங்களுக்கு அன்றைக்கு எவ்வளவு விஷயங்களை இழந்து நிற்கின்றோம் என்பது தெளிவாக புரிந்தது. “அப்பா!!! இனி உங்களுக்காக இந்த வீட்டில் மூன்று பேரு ஏங்க மாட்டார்கள். எங்களையும் சேர்த்து மொத்தமாக ஐந்து பேர் ஏங்குவோம் அப்பா” என்று இதயம் கனக்க கனக்க அழுது கொண்டே அந்த சைக்கிளை இருவரும் கையால் தொட்டுக் கொண்டோம். அந்த தொடுகையின் போது ஓர் இளங்காற்று… “பிள்ளைகளே!!! கவலைப்படாதீங்க… நான் எங்கேயும் போகவில்லை, அப்பா எப்போதும் உங்க எல்லோர் கூடவும் இருப்பேன்” என்று சொல்லுவது போல காற்று எங்கள் மீதுபட்டதால் உடல் சிலிர்த்துப்போய் நின்றோம்…

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.