K Lalitha
சிறுகதை வரிசை எண்
# 70
எங்க நாடு
நினைக்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்து, எனது நண்பனை சந்திக்கப் போகிறேன். எங்க ஊர் அரசுப் பள்ளியில், நானும் சிவாவும், ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். அவனது அப்பாவுக்கு வெளிநாட்டில் வேலை என்று குடும்பத்துடன் சென்று விட்டனர். இருபத்து ஐந்து ஆண்டுகள் கழித்து, இன்று மாலை அவனை சந்திக்கப் போகிறேன். எந்த நாட்டிற்கு சென்றான், என்ன வேலை செய்கிறான்....எதுவுமே தெரியாது.
கண்ணா என்று என்னை கட்டியணைத்துக் கொண்டான். பேசினோம், பேசிக் கொண்டேயிருந்தோம். வேலை எல்லாம் எப்படி உள்ளது, என்றேன்.
எட்டு மணி நேர வேலை தான். காலை ஆறு மணி முதல் மதியம் மூன்று மணி வரை. காலை உணவு, மதிய உணவு எல்லாம் அலுவலகத்திலேயே. நான்கு மணி வரை நூலகத்தில். அதன் பின், மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு செல்வோம். நன்கு விளையாடுவோம்.வீட்டுக்கு வந்து ஏழு மணி வரை தொலைக்காட்சி யில் தொலைவோம். ஏன்னா, அங்கு மாலை ஆறு முதல் ஏழு மணி வரை மட்டுமே ஒளிபரப்பு. காய்கறி, பழங்கள் தான் இரவு உணவு. ஏழரை மணிக்கு குழந்தைகள் தூங்கி விடுவார்கள். நாங்கள் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்க வேண்டும். காலையில் நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே
.நான்கு மணிக்கா, நடுச் சாமத்திலா என்று அலறினேன்.
சென்னையிலுள்ள எங்க அக்கா , அடுக்களை புழுக்கத்திலும், பேருந்து நெரிசலிலும் வியர்வையில் குளித்து, பத்து மணிக்கு அலுவலக வேலையை தொடங்குவார்கள்.நாங்கள் ஆறு மணி முதல் பத்து மணி வரையிலான பிரதான நேரத்தை அலுவலக பணிக்கு முழுமையாக பயன்படுத்துவோம். இரண்டு வயது முதல் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பார்கள். ஐந்து வயது முதல் பள்ளிக்கு செல்வார்கள். அவர்களுக்கும் சாப்பாடு அங்கேயே…
வீட்டிலே சமைக்கவே மாட்டிங்களா...?இல்லை.. எல்லாமே பொது உணவகத்தில் தான். தி கிரேட் இந்தியன் கிச்சனையும், அந்த பழுதடைந்த சின்கையும் பார்க்கவே முடியாது.
எத்தனை பிள்ளைங்க, என்ன படிக்கிறாங்க, என்றேன்
....குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்பது அரசின் அறிவுரை. ஆணும் பெண்ணும் சம விகிதத்தில் இருப்பார்கள்
.இதிலெல்லாமா அரசு தலையிடும்?
அரசு சொல்கிற வரிகளை நாட்டுக்காக கட்றோம்..நிர்ணயிக்கிற கட்டணங்களை செலுத்துறோம். பையன் தான் வேணும்னு, நான்கு, ஐந்து பெண் குழந்தைகளை பெற்றுக் கொள்வீர்கள். அரசு சொன்னால் கேட்கக் கூடாதா..ஏன் பெண் குழந்தை வேண்டாம்னு சொல்றாங்க.. இன்னமும் தீர்க்கப்படாத, இரண்டு பெரும் பிரச்னைகள் இருக்கிறதால தான்... ஒன்னு வரதட்சணை கொடுமை எனும் அரக்கன். அடுத்து, பாலியல் ரீதியான கொடுமைகளிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு.. எங்க நாட்டுல இரண்டு பிரச்னைகளுமே கிடையாது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் படிப்பார்கள், வேலைக்கு செல்வார்கள். மாமியார் பத்த வைக்கும் போது வெடிக்காத ஸ்டவ், மருமகள் பத்த வைக்கும் போது மட்டும் எப்படி வெடிக்கிறது...என்ற பேச்சுக்கே இடமில்லை.அற வழியில் நிர்வாகம் செய்யும் தலைவன், அறத்தை போதிக்கும் ஆசிரியர்கள், அற வழியில் நடக்கும் பெற்றோர்கள், சமூகத்தினர்.... குழந்தைகளுக்கு வேறென்ன சிந்தனை வரக்கூடும்.கண்ணா..... இங்க மட்டும் ஏன் இத்தனை பிரச்னைகள்... பேருந்தில் செல்லும் பெண்களை உரசும், பிறன்மனை நோக்கா பேராண்மையற்ற மூத்தோரை கண்ட இளையோர் அதை விட மோசமாகவும், கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் செயல் படுகிறார்கள்..
நடுங்கியது எனக்கு. வருடத்திற்கு பதினைந்து நாட்கள் வருகிறான். அங்கு தொடா்ந்து நம் செய்திகளை கவனிக்கிறான். அதற்கே இவ்வாறு சீறுகிறான். ஆனால், இங்கு சந்து பொந்துகளில் நடக்கும் அவலங்கள் முழுமையாக தெரிந்தால் என்ன சொல்வானோ? வீட்டுக்கு ஒரு குழந்தைன்னு சொல்ற. ... அப்ப நாம கொண்டாடுற தாய்மாமன், அத்தை, சித்தப்பா... இந்த உறவுகள் எல்லாம் இருக்காதே..போதும்.... தாய்மாமன் உறவு..... இல்லாதவன்கிட்டயிருந்தும் சீர் எதிர்பார்க்கிறதும், அத்தை பையன், மாமா பையனை கல்யாணம் பண்ணி, அசாதாரணமான குழந்தைகளை உருவாக்கி, குழந்தைகளோடு பெற்றோரையும் பரிதவிக்க விட்டதும் தானே நீங்கள் கண்டது.
பொது உணவகம்-னு சொல்ற.. கட்டுப்பாடுகள் அப்படின்னும் சொல்றே.. ஏதோ ஒரு கம்யூனிஸ்ட் நாட்டில இருக்குறேனு நினைக்கிறேன். எங்க நாடு, எங்க நாடுன்னு சொல்றியே, பேரை சொல்லு...
பேர்ல என்ன இருக்கு? ரோசாவை எந்த பெயரில் அழைத்தாலும், ரோசா தானே...
நம்ம ஊரைப் பத்தி குறைச்சு மதிப்பிடாதே.... குற்றம், குறைகளை மட்டுமே பார்க்கக் கூடாது. எவ்வளவு மேன்மைகளையும், மேன்மையான மனிதர்களையும் கண்ட நாடு..
ஆமாம், ஒத்துக்கறேன். காலம் தொட்டு நல்ல நெறிகளை போதிக்கும் எத்தனை, எத்தனை நூல்கள். திருக்குறளை விட ஒழுக்கத்தை போதிக்கும் சிறந்த நூல் உண்டா? எத்தனை, எத்தனை மகான்கள்,..நட்ட நடு இரவில் வேண்டாம்.. பட்டப்பகலில் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை எனில், பெருமை மட்டுமே பேசி என்ன பயன்... ?சிவா.. எங்கோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் குற்றத்திற்காக...
முப்பது கோடியும் வாழ்வோம்-வீழில்முப்பது கோடி முழுமையும் வீழ்வோம். என்று சொன்ன மகாகவி பாரதியை வசதியா மறந்துட்டிங்கல்ல..
அவன் உஷ்ணத்தை சற்று தணிக்க எண்ணி, அங்கே குளிர் எல்லாம் அதிகமா இருக்குமே, உங்களுக்கு ஒத்துக்குதா என்று கேட்டேன்.
தட்ப வெப்ப நிலை எங்களை பாதிப்பதில்லை. நாங்கள் இயற்கையை பாதுகாக்கிறோம். இயற்கை எங்களை பாதுகாக்கிறது. எங்கு திரும்பினாலும் பசுமை....இயற்கை விவசாயம்....காய்கள், கனிகளுக்கு பஞ்சமில்லை. நிலத்துக்கு தனிமனித உரிமை கிடையாது. அரசின் வசம் இருக்கும். விவசாயம் என்பது மிக பெரும் வேலை வாய்ப்பு. அதற்கான நல்ல ஊதியம் உண்டு. கூட்டுப் பண்ணை முறையில் குறைந்த செலவில் உற்பத்தி அபரிமிதமாக இருக்கும்.
அதெப்படி? அரை ஏக்கர் இருந்தாலும் நமக்குனு ஒரு நிலம், அதுல பாத்து, பாத்து பயிரிட்டு, விளைச்சலை பார்த்து அடைகிற மகிழ்ச்சிக்கு ஈடுண்டா...?
ஒரு பெரிய தொழிற்சாலை இருக்கு. பெரிய பெரிய இயந்திர சாதனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யுது. வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யுது. நீ, அதுல நல்ல ஊதியத்துடன் ஒரு முக்கியமான பொறுப்பில இருக்க. அதுக்காக பெருமை படுவியா.. பத்துக்கு பத்துல ஒரு சின்ன கடை வச்சிருந்தா கூட நல்லா இருக்குமேன்னு யோசிப்பியா.? எல்லாத்துக்கும் மன நிலை தான் காரணம். மக்கள் நலனுக்காக, நாட்டு நலனுக்காக என்று எல்லாவற்றையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். நில மிராசுதாருக்கோ, பண்ணை அடிமைக்கோ வாய்ப்பில்லை. தனி மனித சொத்துக் குவிப்பு இல்லை. பினாமிக்கோ, ஜாமீனுக்கோ வேலையில்லை
.கல்வி, வேலை வாய்ப்புக்கும் ஏதாவது திட்டங்கள் வைச்சிருப்பீங்களே...
அங்கு கல்வி என்பது சுமையாகவோ மிகவும் அலுத்துக் கொள்ளும் விஷயமாகவோ இருக்காது. பதினாறு வயது வரையிலான பள்ளி பருவத்திலேயே, தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்வார்கள். விவசாய விளை நிலங்களுக்கு, பூந்தோட்டங்களுக்கு, அலுவலகங்களுக்கு, வங்கிகளுக்கு, விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு, எல்லா கள பணியிடங்களுக்கும்... அதில் ஆர்வம் கண்டறியப்பட்டு, நான்கு வருடங்களுக்கான கல்லூரி படிப்பில் சிறப்பான பயிற்சியுடன் போதிக்கப்படும். கம்யூட்டர் என்ஜினியர் ஆகனும்னு ஆசை, ஆனா, மெக்கானிக்கல் குரூப்ல சேர்த்து விட்டுட்டாங்க, எனக்கு மேல படிக்கணும், சிறந்த அதிகாரி ஆகனும்னு ஆசை, வீட்ல கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்கன்னு புலம்பறதுக்கு வாய்ப்பே இல்லை.இளைஞர்கள் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார்களோ, அதில் இரண்டு வருடங்கள் சிறப்பான பயிற்சி ஊதியத்துடன் வழங்கப்படும். 22 வயதில், இரு பாலரும் நல்ல ஊதியத்துடன் பணியை தொடங்கி விடுவார்கள். அரச மரத்தடியில் உட்கார்ந்து, ஊர் கதை பேசறதுக்கோ, டீக்கடைக்கு பக்கத்தில கட்டை சுவத்துல உட்கார்ந்து இளைஞர்கள் நேரத்தை வீணடிக்கறதுக்கோ, வாய்ப்பில்லை கண்ணா, வாய்ப்பில்லை.
இதுல இட ஒதுக்கீடு. .... சமூக நீதி இல்லை என்பதால் தானே இட ஒதுக்கீடு கேட்கிறோம். பிறப்பிலிருந்தே, சாதியும் இல்லை, மதமும் இல்லை. கூடுதலான இளைஞர்கள் குறிப்பிட்ட துறையில் படிக்க விரும்பினால், கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்படும். அது தான் அங்கு இட ஒதுக்கீடு.
அப்ப மருத்துவ படிப்பு, பொறியியல் படிப்புக்கு தடை எதுவும் இல்லை, அப்படித் தானே. ..?மருத்துவர்களுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ அங்கு அதிக தேவை கிடையாது. ஆரோக்கியமான உணவு. அனைத்து குடிமக்களுக்கும் மாதம் ஒரு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, என்ன மாதிரி உணவு உண்ணலாம் என அவர்களுக்கு உரிய அட்டையில் குறிப்பிடப்படும். பொது உணவகத்தில் அதை கொண்டு உணவு வழங்கப்படும். உணவே மருந்தாக இருப்பதால், மருந்துக்கு அதிக வேலை கிடையாது
. இவன் நல்லா ரீல் வுடுறானா..? இல்லைன்னா, உண்மையிலேயே, ஐரோப்பா அல்லது ஆஸ்திரேலியாவின் மூலையில் உள்ள ஒரு சின்ன நாட்டைப் பத்தி சொல்றானா.. எதுவுமே புரியல.. சரி, பொறுத்திருந்து பார்ப்போம்... ஆரோக்கியமான வாழ்க்கை.. கேட்கவே நல்லாருக்கு. ஆனா விபத்து நேர்ந்தா சிகிச்சைக்கு, அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் வேண்டுமே..
எங்க நாட்டின் முக்கியமான சிறப்பம்சம் உனக்கு தெரியாதுல்ல.
இன்னும் சிறப்பா...
.அடுக்குமாடி குடியிருப்புகள் பெரிய வட்ட வடிவில் இருக்கும். மையப் பகுதியில் எல்லா அலுவலகங்களும், கடைகளும் இருக்கும். குடியிருப்பிலிருந்து 10 நிமிடங்களில் நடந்து சென்று சேரும் தூரம். பெரும்பாலும் மக்கள் நடந்து தான் செல்வார்கள். சற்று தொலைவு என்றால் மிதிவண்டி. அரிதாக தான் வாகனங்கள் காணப்படும்.அதிலும் எல்லோரும் சாலை விதிகளை மதிப்போம். மக்கள் சட்டம், ஒழுங்கை முறையாக கடைப்பிடிக்கும் போது வழக்கறிஞர்களுக்கு மட்டுமில்லை.. காவல் துறைக்கும் அதிக வேலை இல்லை. லாக் அப் மரணமும் இல்லை..
பாரின்ல இருந்து வந்திருக்கானே சாக்லேட், டி-சர்ட், வாட்ச்.. இதெல்லாம் வாங்கிட்டு வந்திருப்பான். பாட்டில் ஏதாவது கொண்டு வந்திருப்பான். உட்கார்ந்து தண்ணியடிச்சிட்டு ஜாலியா பேசிக்கிட்டு இருக்கலாம்னு நினைச்சி வந்தேன். ஏதோ ஸ்கூல்ல, மாரல் சயின்ஸ் கிளாஸ்ல உட்கார வைச்ச மாதிரியே இருக்கே..அதுக்குன்னு இளைஞர்களுக்கு படிப்பு, வேலைன்னு தொடர்ந்து கொடுத்து.. கொஞ்சமாவது பொழுது போக்கு வேண்டாமா?
மற்ற செயல் திறன்களுக்கும் குறைவில்லை. கலை, இலக்கியம் என்று மிக ஆர்வத்துடன் செயல்படுவார்கள். "நிலா இரவு" என சிறப்பாக கொண்டாடப்படும்.இளைஞர்கள் பல்வேறு வாத்தியங்களை இசைப்பார்கள். ஆடல், பாடல் என களைக் கட்டும்.
ஆடல், பாடல் மட்டும் தானா..? விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பீங்களா?
விளையாட்டு வீரர்கள், அரசின் பிள்ளைகள். அரசே தத்தெடுத்துக் கொண்டு சிறப்பாக பயிற்சி கொடுக்கும். விளையாட்டில் அரசியலோ, அரசியலில் விளையாட்டோ அங்கு கிடையாது.
அங்கெல்லாம் நல்ல ஊதியம். அதே நேரத்தில் நல்ல வரி விதிப்புன்னு கேள்விப் பட்டேன், சரியா?
எங்க நாட்டில் வரியே கிடையாது
.நினைச்சேன்.. இப்படித் தான் சொல்வான்னு..
அபரிமிதமான வேளாண் உற்பத்தி, தொழில்கள் மூலம் உற்பத்தி. மக்களுக்கு தரும் பொருள்களுக்கு நியாயமான விலை.. அதிக ஏற்றுமதி மூலம் நல்ல வருவாய்.
.உண்மைய தான் சொல்றியா? அரசுக்கு எவ்வளவு செலவு. சாலை போடணும், பராமரிக்கணும், அப்பறம்.
தரமான சாலை ஒரு முறை போட்டால் போதும்...ஊழலுக்கு தான் பல முறை போட வேண்டும். கல்லணையை தினமுமா கட்டுறீங்க.
. போட்டுத் தாக்குறான்.. வேற ஏதாவது கேட்கலாம்.. சனி, ஞாயிறு விடுமுறையா?
சனிக்கிழமை அரை நாள் அலுவலகம், பள்ளிக்கூடம் உண்டு. நூறு பேர் கொண்ட ஒரு நட்பு வட்டாரத்தில், ஒவ்வொரு சனிக்கிழமையும் ஏதாவது ஒரு கொண்டாட்டம் இருக்கும். குழந்தைகள் தங்கள் தனித் திறனை வெளிப்படுத்துவர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஒரு இயற்கை சார்ந்த பயணம். மானும், மயிலும் ஆடுவதை, குழந்தைகள் தொலைக்காட்சியின்றி நேரே பார்ப்பார்கள். மலை சார்ந்த பகுதி, கடல் சார்ந்த பகுதி, பசுமை நிறைந்த பகுதிக்கு பஞ்சமில்லை.
நீ சொன்னதிலே யிருந்து, வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு வேலையே இல்லைன்னு தெரியுது
. உண்டு. வேலை வாய்ப்பு அலுவலகம் என்பது, பதிவு செய்து காத்திருக்க அல்ல.. யார், யாருக்கு, என்ன வேலை, எந்த இடத்தில் என்பதை சொல்வதற்கு.. அங்கு வேலை செய்வது என்பது அவரவர் விரும்பி ஆத்ம திருப்தியுடன் செய்வது. இலாப நோக்கில் செயல்படும் எந்த முதலாளிகளும் இல்லாததால், தொழிலாளர் பிரச்னைகளும் இல்லை, தொழிற்சங்கங்களும் இல்லை.
அப்ப அங்கே போராட்டங்களே நடக்காதா?
பசிக்கிற குழந்தை தானே அழும். பசியறிந்து உணவூட்டும் போது, அழுவதற்கு வாய்ப்பேயில்லையே.அலுவலகம் என்பது போட்டியும், பொறாமையும், போட்டுக் கொடுத்தலும் இல்லாத இடமாக இருக்கும். வேலை செய்பவனுக்கு வேலையை கொடு, செய்யாதவனுக்கு சம்பளத்தை கொடு என்ற பேச்சுக்கே இடமில்லை. சக ஊழியர்கள் நண்பர்களாக பழகுவதால் அலுவலகப் பணி அலுப்பின்றி, களைப்பின்றி முடியும். பணி முடிந்து வீட்டிற்கு வந்தால், இல்லறம் என்பது நல்லறமாக தான் இருக்கும். ஏன்னு கேளு..
என்ன எங்க கேட்க வுட்டே.. நீ தான் சொல்லிக் கிட்டேயிருக்கியே..
கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் இரண்டு பெரும் பிரச்னைகள்...
ஆரம்பிச்சிட்டான்டா...
. ஒன்னு நிதி பற்றாக்குறை.. அடுத்து நீதி பற்றாக்குறை... அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி கூடங்களும் இல்லை, தனியார் மருத்துவமனைகளும் இல்லை. கல்வி, மருத்துவ செலவை அரசே ஏற்கும்.ஒரு திருத்தம்.. மருத்துவ பரிசோதனை செலவுன்னு சொல்லு.. மருத்துவ செலவே இல்லைன்னு சொல்லிட்டியே.
. சரியாகச் சொன்னாய்... புரியுது.. புரியுது.. வேலையில்லா திண்டாட்டம்விலைவாசி ஏற்றம்வரதட்சணை கொடுமை சுயநல அரசியல்......... இல்லாததால் பொருளாதார நெருக்கடி இல்லை, அப்படித்தானே..? இவுங்க நாட்டை பத்தி நான் பேச ஆரம்பிச்சிட்டேன்..நிதி, ஓகே.. அது என்ன நீதி..?
சமையல் மற்றும் நச்சரிக்கும் வீட்டு வேலைகளை யார் செய்வது, எப்படி பகிர்ந்துக் கொள்வது என்பதில் நீதி இல்லாதது..அதே போல விவசாயத்தை பொறுத்தமட்டில், கண்ணா...
அதையும் நானே சொல்லிடுறேன். விவசாயி தற்கொலை இல்லை, விவசாய போராட்டம் இல்லை, அதானே..பொறாமையில் பொங்க வுடுறானே...
அது மட்டுமில்ல. இயற்கை சீற்றங்கள் முன்னதாக கணிக்கப்படும். மீறி வந்தாலும், தனி மனித பாதிப்பு இல்லை, அரசே சமாளிக்கும்.
தேர்தல், தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் உண்டா..?
குறைவான மக்கள் தொகை, கண்ணா. எனவே பிரச்னைகளும் மிக மிக குறைவு. நம்ம சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு மக்களோ, அது எங்க நாட்டின் ஒரு மாவட்ட மக்கள் தொகை. மொத்த மக்கள் தொகை ஒரு கோடி மட்டுமே..1000 பேருக்கு ஒரு தலைவர். அப்பழுக்கற்ற தலைவர். பல கட்சி முறை கிடையாது. 25 பேர் கொண்ட ஒரு குழு உள்ளது. அது தான் நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை. சிறப்பாக ஆட்சி செய்வார். எல்லோருக்கும் வீடு. ஒரு சிலருக்கு பல மாடிகளுடன் வீடு, ஏனையோருக்கு பல ஓட்டைகளுடன் வீடு என்ற நிலையில்லை. நாட்டின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர் வரை.. ஒரே மாதிரியான வீடு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரு அறைகள் கொண்ட வீடு. ஒன்று படுக்கையறை, மற்றொன்று படிக்கும் அறை. ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே இருப்பர்
.கணவன், மனைவி, ஒரு குழந்தை ஓகே.. அம்மா, அப்பா, வயதானவர்களை முதியோர் இல்லத்தில் விட்டு விடுவீர்களா..?முதியோர் இல்லமா? முதியோரே கிடையாது. பெரியவர்களுக்கு அதிக பட்ச வயது 50 மட்டுமே. 50 வயதுக்கு மேற்பட்டவர்களை பார்க்கவே முடியாது. ஐம்பதாவது பிறந்த தினத்தோடு அவர்களது வாழ்வு முடிவு பெறும்
.அதிர்ச்சியில் உறைந்தேன். என்ன சொல்லப் போகிறானோ, திக், திக்கென்றது.
50 வயதிற்கு மேல் எத்தனை விதமான நோய்கள் மனிதனை தாக்குது.. பல விதமான நோய்களால், மனித சமுதாயம் சொல்லொணாத் துயர் அடையுது..
அதனாலென்ன? அதான் மருத்துவ உலகம் நன்கு முன்னேறி உள்ளதே.. புது புது மருந்துகள், புது புது சிகிச்சை முறைகள்.. என்றேன். நோய்களை தீர்ப்பதற்கு புது, புது வழி முறைகள். .. ஆனால் நோயற்ற மனித சமுதாயத்தை உருவாக்க முடியுமா? ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான சூழலுடன் ஒரு 50 வருடங்கள் வரை நோயற்ற மனித சமுதாயத்தை கட்டமைக்கிறோம். ஐம்பதாவது பிறந்த தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் அவர் யாரிடமும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல், அந்த சிறப்பு இல்லத்திற்கு சென்று விடுவார். சில தினங்களில், ஒரு நாள் தூக்கம், அவரது நீண்ட தூக்கமாகி விடும்.
இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை? உங்க சிஸ்டமுக்கு ஒரு அளவே இல்லையா? மனிதனுக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாளை குறைப்பதற்கு உங்களுக்கு எல்லாம் யார் அதிகாரம் கொடுத்தா?
உங்களுக்கு மட்டும் யார் அதிகாரம் கொடுத்தா? நான் ஒரு முறை, இங்கு வந்த போது... தாம்பரம்-பீச், மின்சார ரயிலில், வெளியே தொங்கிச் சென்ற இளைஞன், போஸ்ட்டில் அடிப்பட்டு, தலத்திலேயே மரணம். அந்த பெற்றோர் கதறிய கதறல் உன் காதுகளில் விழவில்லையா? எத்தனை, எத்தனை சாலை விபத்துகள். சிகரெட், குடியினால் மரணங்கள்... உங்க சிஸ்டம், உங்களுக்கே சரின்னா, வைச்சுகங்க.. எங்களால மரண ஓலத்தை எல்லாம் கேட்க முடியாது.
அப்படியே இருந்தாலும், ஒரு 60,70 வயது என்றால் கூட ஏத்துக்கலாம்.
. எந்த வயதானாலும், தாய், தந்தை இழப்பு கொடுமையானது தானே.. 90 வயதில் இறக்கும் போது, "மேலும், மேலும் நோயினால் சிரமப்படாமல், நல்ல முறையில் போய் சேர்ந்துட்டாங்க" என்று எப்படி ஏற்றுக் கொள்வார்களோ, அப்படி 50 வயதை எங்கள் நாட்டில் ஏற்றுக் கொள்வார்கள்
.நீ, ஆயிரம் தான் சொன்னாலும், ஒரு வீட்டில, அனுபவம் மிகுந்த முதியோர்கள் இருப்பது, ஒரு சொத்து.. அவர்களது ஆசீர்வாதம் பெறுவது எவ்வளவு பெரிய...
போதும், நீங்க ஒரு நாலு முதியோர் கிட்ட ஆசிர்வாதம் வாங்குவீங்க. 40 முதியோர்களை கஷ்டப்படுத்துவீங்க.. நீ வைச்சுக்க, நான் வைச்சுக்க என்று பிள்ளைகள் போட்டி போடுவீங்க.. அங்க 50 வயதுக்கு மேல கஷ்டப்பட்டு வாழ மாட்டாங்க, இஷ்டபட்டு வாழ்வை நிறைவு செய்துடுவாங்க. சிறு நோய் கூட இல்லாத வாழ்வு என்பதற்காக, மற்றவர்கள் நல்ல வாய்ப்புகளுடன் வாழ வேண்டும் என்பதற்காக, தனக்காக, நாட்டிற்காக. நீண்ட நாட்களாக, இது நடைமுறையில் உள்ளதால், நெஞ்சை பதற வைக்கும் மரணங்கள் கிடையாது.
ஆமாம் மரணம் கிடையாது. கொலை மட்டும் தான்.. முணுமுணுத்தேன். 50 வயதிற்கு மேல் எத்தனை சாதனையாளர்கள் தோன்றியுள்ளார்கள்.. அதனை முற்றிலும் தவிர்ப்பதா என்ற கேள்வியை முன் வைத்தேன், 50 வயது வரை வாய்ப்பு கொடுத்தும் செய்யாததையா, அதுக்கு மேல செய்யப் போறீங்க என்று அவன் சொல்வான் என தெரிந்தும்..
1882-1921 என்பது மகாகவி பாரதியின் காலம். 1930-1959என்பது பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார் காலம். நாம் கொண்டாடும் புதுமைபித்தன் 42 வயதில் மறைந்தார். இவர்கள் எல்லாம் மறையவில்லை. மக்கள் மனங்களில் இன்னமும் வாழ்கின்றனர். 80,90 வயது வரை பிரச்னைகளுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதற்கு, 50 வயது வரை வாழ்வாங்கு வாழ்வது சிறப்பு அல்லவா?வயதான தம்பதியர் தானே ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பார்கள்.
. என் தாத்தாவும், பாட்டியும் 20 முதல் 70 வயது வரை 50 வருடங்கள் எலியும், பூனையுமாக வாழ்ந்து மறைந்தார்கள். ஆனால் அங்கு 25 வருடங்களும் அன்பான இல்வாழ்க்கை.
. ரொம்ப நேரமாகி விட்டது. பசிக்குது.. சாப்பிடப் போகலாம். கடைசியா, இப்படி ஒரு நாடே கிடையாது. இதெல்லாம் எனது கற்பனை உலகம்னு சொல்லி முடிக்கப்போறே.. அதானே..?
நிச்சயமாக இல்லை. இப்படி ஒரு நாடு கட்டமைக்கப்பட்டு, அதில் வாழ வேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் இலட்சியம். இந்த கட்டுமானப் பணியில் ஒரு செங்கல்லை என்னால் எடுத்து வைக்க முடியும் என்றால் கூட எனக்கு ஆத்ம திருப்தி. எங்களுக்கு ஒரு குழந்தை மட்டுமே. ஏழு வயது ஆகிறது.
இதெல்லாம் சாத்தியம்னு நினைக்கிறியா?
நீங்கள்லாம் அநீதியுடன் வாழ பழகிட்டிங்க..எல்லாத்தையும் சகிச்சுக்கிறீங்க... ஆண்கள்னா இப்படித்தான் இருப்பாங்க.. பெண்கள்னா இப்படித்தான் இருக்கணும்னு, நீங்களா வரையறை வச்சுக்கிட்டு, பின்பற்றணும்கிறீங்க..
. ஏதாவது நடக்கற மாதிரி பேசுறியா?
இரண்டு வருடங்களுக்கு முன்பு, இப்படி ஒரு வைரஸ் வரும்.. உயிர் பலி கேட்கும்.. உலகை முடக்கிப் போடும் என்று யாராவது சொன்னால் நம்பியிருப்போமா? கெட்டது நடக்கும் போது, நல்லது நடக்காதா..?நீ சொல்ற மாதிரி மாற்றங்கள் எல்லாம் ஏற்படணும்னா, பல நூறு வருடங்கள் ஆகும்.
கணினி, கைபேசின்னு, அசுர வேக வளர்ச்சியுடன் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட, உங்களுக்கு 20,25 வருடங்கள் போதுமானது. இதற்கு மட்டும் ஆயிரம் ஆண்டுகள் வேண்டுமோ?
எப்படியும் இந்த மாதிரி ஒரு நாட்டை, நீயோ, நானோ பார்க்கப் போவதில்லை.
அதுக்கு ஏன்... உருட்டிக்கிட்டுன்னு கேட்கிற.. ஒரு இலக்கை நோக்கிய பயணம் முடிந்து, வெற்றி கிடைக்கும் போது ஏற்படுவது மகிழ்ச்சி. ஆனால் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும், கனவுகளுடனும் வெற்றிக்காக பயணிக்கும் போது ஏற்படுவது மட்டற்ற மகிழ்ச்சி.. அதை தான், நான் இப்போது உணர்கிறேன்..
கே.லலிதா
F 5 Shreyas flats6 th Street 1 st cross Lakshmi Nagar Vandalur Chennai 48.
9843664460
இக்கதை எனது சொந்த படைப்பு என்றும் வேறு எந்த தழுவலோ, நகலோ கிடையாது எனவும், இதற்கு முன் வேறு எங்கும் எந்த வடிவிலும் பிரசுரமாகவில்லை, பரிசு எதுவும் பெறவில்லை எனவும் உறுதியளிக்கிறேன்..
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்