தங்க கக்கூஸ்
புதுவை அருண். கோ
“த…ங்..க… க…க்… "
படிக்கும்போதே… மங்களகரமாய் ஒரு வார்த்தை... கூடவே... அமங்களகரமாய் மற்றொரு வார்த்தை.. ‘இதென்ன காம்பினேஷன்? ’ என வியந்து முகம் சுளிக்கிறீா்கள் அல்லவா… ?!?
தங்கத்தில் நேர்த்தியாய் செய்யப்பட்டிருக்கும் இந்திய முறை கக்கூஸின் மினியேச்சர், உள்ளங்கையில் அடங்கும் அளவில் பார்த்த அவனுக்கு எப்படி இருந்திருக்கும்?!? அதுவும் சொத்திற்கு ஈடாக.... அவனது தந்தை தரும் பரிசாக...!
85 வயது தந்தையை நேற்று இழந்து … உடன் பால் கொடுத்து விட்டு… இன்று காலை அஸ்தியை கடலில் கரைத்துவிட்டு… வீடு வந்து குளித்த ஈர உடலோடு வந்தவன்… தந்தையின் வக்கீல் நண்பர் ஹாலில் உட்கார்ந்திருப்பதைக் காண முடிந்தது. நேற்று செய்த சவரத்தில் இன்னும் மீசை அரும்பு வராத மேல் உதட்டுப் பகுதியில் முத்து முத்தாய் வேர்த்திருக்க… துடைத்தபடி அவரின் அருகே வந்தான்…
அவர் முகத்தில் எந்த சலனமுமில்லாமல் அவனது தந்தையின் உயிலின் நகலை கொடுத்தார். தான் இறந்த மறுநாளே கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாராம் அவரது தந்தை.
தந்தை உயில் தயார் செய்து அவரிடம் தந்திருக்கிறார் என்பதே அதிர்ச்சியாய் இருந்தது. மேலும் அந்த நகலைப் படிக்கையில்… அதில் தந்தையின் பெயரில் இருக்கும் ஒரே வீட்டை அதாவது தற்போது அவன் வசிக்கும்... இது நாள் வரை தாய் தந்தையோடு வசித்து வந்த வீட்டை அவனது தங்கைக்கும் அக்காவிற்கும் சரிபாதியாக எழுதிக் கொடுத்திருப்பது பேரதிர்ச்சியாக தான் இருந்தது.
அந்தப் பேரதிர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும் வகையில்.. அவனது பங்காக தந்தை தந்த அந்த அட்டை பெட்டியை கொடுத்திருந்தார்… அதை பிரித்துப் பார்த்ததில் தான் இந்த தங்கத்திலான மினியேச்சர் கக்கூஸை காண முடிந்தது. இது சற்றும் எதிர்பாராதது மட்டுமில்லாமல் மிகவும் விசித்திரமாக இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் தங்கையும் அக்காவும் அவனுக்கு சாதகமாக ஏற்கனவே தந்தையிடமிருந்து உயில் எழுதி வாங்கிவிட்டதாக சமீபகால சச்சரவுகளில் குத்திக்காட்டிக் கொண்டிருந்தார்கள்.
வக்கீல் நண்பர் அவரது மொபைலில் தங்க கக்கூஸை ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
அவர் கிளம்பிச் சென்றும், உட்கார்ந்திருந்த சேரிலிருந்து நகராமல் அவன் அந்த பொருளையே வெறி்த்திருந்தான்…
கடந்த இரண்டு ஆண்டுகளின் நினைவலைகளில் பயணிக்கத் துவங்கினான்...
முந்தைய திருமணம் தோல்வியில் முடிந்து, பின்னர் பெண் வீட்டாரிடமிருந்து சட்டரீதியாக விவாகரத்து பெறுவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. இரு வீட்டார் பிரச்சனை என்பதை தாண்டி, இரு வக்கீல்களின் மோதல் என்றாகி… அது இன்னொரு வர்த்தகம் என்கிற நிலையில்… ஒரு வழியாய் விவாகரத்து வாங்கி, அந்த கசப்பான அனுபவங்களிலிருந்து மீண்டு.. அப்படி இப்படி என 45 வயதை தாண்டிவிட… மறுமணம் வேண்டாம் என்றே நினைத்தான்.
தாய் தந்தையர் விடவில்லை. உடல் தேவையைத் தாண்டி தங்களுக்கு பிறகு ‘மாரல் ஸப்போர்ட்டாக’ வாழ்க்கைத் துணை ஒன்று வேண்டும் என்கிற அவசியத்தை வற்புறுத்தி.. சொந்தங்கள்… நண்பர்கள்.. மாட்ரிமோனியல் இணையத் தளங்கள் என அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து… பின் வசதி, அந்தஸ்து, சாதி என்கிற பாகுபாடுகளை கொஞ்சம் கொஞ்சமாய் தளர்த்தி… ஒரு வழியாய் 50-ஐ நெருங்கும் வயதில் மறுமணம் செய்து வைத்தார்கள்.
புதியதாய் வந்தவளும்… அவன் மனதிற்கும் குடும்பத்திற்கும் ஏற்றாற் போல் நன்கு அமைந்தாள். பண வசதியில் தாழ்ந்திருந்தாலும் குணத்தில் உயர்ந்திருந்தாள். எந்த வித குறையும் குடும்பத்தில் யாரும் சொல்லா வண்ணம் நடந்துக் கொண்டாள்… அவனது பெற்றோர்களை தனது பெற்றோராய் கருதி தாங்கவே செய்தாள்.
ஆனால், திருமணத்திற்கு பிறகு… பிரச்சனை யாரும் எதிர்பாராவண்ணம் வேறு விதமாக வர… உறவுகளும் எதிர்பாராவண்ணம் வண்ணம் மாறத் தொடங்கி விட்டன.
“பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் நல்ல விதமா கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு… பேரப் பிள்ளைகளும் எடுத்தாச்சு. இருக்கிற ஒரே சொத்தான இந்த வீட்டை உன் பேரில எழுதிக்கொடுத்திட்டா… எனது எல்லா கடமைகளும் முடிச்சுட்டு நிம்மதியாய் கண் மூடிடுவேன்” என்கிற தந்தையின் யதார்த்த வார்த்தைகளை அம்மா உள்ளுரிலேயே வசித்து வரும் மகள்களிடம் சொல்லிவிட… அன்று ஆரம்பித்தது ஏழரை!
எங்கிருந்தோ வந்தவளுக்கு அவனின் மூலமாக அந்த சொத்து கிடைப்பதில் தங்கைக்கோ… தமக்கைக்கோ துளி கூட விருப்பமில்லை என்பது அவர்களது நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது. தந்தையின் மனதை மாற்ற தாயைப் பகடைக்காயாகப் பயன்படுத்த இருவரும் திட்டமிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது… எப்போதெல்லாம் தாய் இருவரது வீட்டிற்கு போய்விட்டு வருகிறாரோ… அன்றைய தினம் கட்டாயம் இவனது வீட்டில் சண்டையிருக்கும். அது மட்டுமில்லாமல் அவ்வப்போது அவனது மனைவியிடமும் அவனது தாய் வெறுப்பை உமிழ்வதைப் பார்த்திருக்கிறான், என்றாலும் மனைவியின் மௌனம் வீட்டின் நிம்மதியை நிலையச் செய்தது..
ஆரம்பத்தில் அப்பா அம்மாவிடம் வாக்குவாதம் செய்து புரிய வைக்க முயற்சித்திருக்கிறார்… ஆனால் அது பிரயோஜனம் இல்லை என்பதால் சிறிது நேரம் புலம்பிவிட்டு அமைதியாகிவிடுவார். மேலும் இது தொடர்பாக அவர் பேசுவதையே நிறுத்திவிட்டார்.
இதற்கு நடுவே… தந்தைக்கு வயோதிக காரணத்தினால் உடலில் பல இன்னல்கள் வர துவங்கின… ஒரு நாள் பிபி குறையும்… ஒரு நாள் வீஸிங் அதிகமாகி நெபுலைஸர் தேவைப்படும் .. ஒரு நாள் பலஹீனம் அதிகமாகி ஐவி ஏற்ற வேண்டிய சூழ்நிலை வரும்… தன்னால் இயன்றவரை செலவு செய்து வந்து கவனித்து வந்தான்… அவனது மனைவியும் பெரிதும் இதற்கு துணைபுரிந்தாள். அவளது பெற்றோருக்கே இந்தளவிற்கு பணிவிடை செய்திருப்பாளா எனத் தெரியாது..அவனது அப்பாவின் மலம் கூட அள்ளி சற்றும் மனம் கோணாது பணிவிடை செய்வதை பார்த்து வியந்து பெருமை கொள்வான்.
இது போன்ற சூழ்நிலைகளிலும், தங்கையும் தமக்கையும். தந்தையின் நலனை தந்தையின் உச்சி குளிர நலன் விசாரித்தாலும், தந்தையின் மனதை மாற்றி கால் பங்காவது வாங்கிவிட வேண்டும் என்பதிலேயே குறியாய் இருப்பது போல் இருக்கும். அவர்கள் சென்ற பிறகு, அவர்களுக்கு ஏதுவாய் தாயும் ஒத்து ஊதுவாள் – ”நம்ம பிள்ளைக்கு குழந்தையா… குட்டியா..? மவள்களுக்கு ஏதாவது பண உதவி பண்ணினாலும் பேரங்களோட படிப்பு வசதிக்கு உதவியாயிருக்கும்”
கடந்த ஒரு மாத காலமாக தந்தையின் உடல் நிலை மேலும் மோசமாக… அவனால் எதைப்பற்றியுமே யோசிக்கக்கூடிய நிலைமையில் இல்லை.. சென்ற வாரம் தான் அவரது கடைசி வாரம் என்பதை அறியாமல் அவனும் அவனது மனைவியும் மாறி மாறி கவனித்துக் கொண்டார்கள்.. அவரால் சாப்பிடக் கூட முடியவில்லை. மனைவி கஞ்சி காய்ச்சித் தர.. இவன் ஊட்டுவான்…
“டேய்… மவனே… முடியலடா…”
“ஏய்.. தம்பி… எங்கடா இருக்க…?”
“மருமவளே.. கொஞ்சம் தண்ணி கொடேன்…”
“டேய்.. நெஞ்சை தடவிக் கொடுடா…”
இப்படி கத்திக்கொண்டே இருந்தவரின் உயிர் சட்டென அடங்கியது.
தங்கை மற்றும் தமக்கை குடும்பத்தினர்களுக்கு தகவல் தெரிவித்தபோது அவர்கள் ஏமாற்றமானது அப்பட்டமாய்த் தெரிந்தது. ஏமாற்றத்தின் வெளிப்பாடாய் தந்தையின் இறுதி சடங்கு சமயத்தில் ஏதாவது சண்டை சச்சரவு சொந்தக்காரர்கள் முன்னிலையில் நடந்துவிடுமோ என அவனது உள்மனம் பதறியது. ஆனால், நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை… ஆனால், சொந்தக்காரர்கள் முன்னிலையில் சாதியின் அந்தஸ்த்தைக் காட்டி, அப்பாவின் இறுதி ஊர்வலம் வெகு சிறப்பாக அமையவேண்டும் என கேட்டலாக்கில் 25000- கான மலர் பல்லக்கு பாடையைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு செலவு வைத்தார்கள்.
“என்னங்க.. அந்நியாயமா இருக்கு..? உயிரோடு இருக்கும் போது ஒரு 25 ரூபாய்க்கு பழம் வாங்கித் தந்ததில்லை… இப்போ உயிர்போன பிறகு…25000-த்திற்கு பல்லக்கு கேக்குதோ….. அதுவும் உங்க செலவில்...” மனைவி பொருமினாள்.
“16-ம் நாள் காரியம் முடியறவரைக்கும் கொஞ்சம் அமைதியாய் இரு” என அவளை அடக்கினான். ஒரு வழியாய் எந்தவித பிரச்சனையுமின்றி தந்தையின் இறுதி சடங்கு நடைபெற்றுவிட்டது.
தந்தை இறந்த அடுத்த நாள் அந்த நாற்காலியில் உட்கார்ந்தபடி எல்லாவற்றையும் அசைப்போட்டுக் கொண்டிருந்தவனுக்கு…
“மவனே… மவனே..… ” என அப்பாவின் குரல் மீண்டும் கேட்காதா என ஏங்கினான். அவரை பெரிதும் மிஸ் பண்ண... துக்கம் தாளாமல் விம்மினான்.. விம்மல் சப்தம் கேட்டு வந்த அவனது மனைவி… அவனை சமாதானம் செய்துவிட்டு.. தந்தையின் இந்த நடவடிக்கையைத் தெரிந்துக் கொண்டு…
“நான் தான் முன்னமே சொன்னேனே.. பிரச்சனையே வேண்டாம் .. நாம வாடகைக்கு வெளியே போயிரலாம்னு.. காக்கா வாயில இரையை பிடிச்சுகிட்டிருக்கிற வரைக்கும் தான்… மத்த காக்கா… பருந்துகள் எல்லாம் துரத்தும்… இரையை விட்டுட்டா எல்லாம் இரைய நோக்கி போயிடும்…” மனைவி பிரச்சனையை தெளிவாக உள்வாங்கி கொண்டு அதற்கான தீர்வையும் எளிதாக கூறிவிட.. உற்சாகமானான்.
ஆனால்… அப்பா எதற்காக அந்தப் பொருளை தனக்காகத் தர வேண்டும்… யோசித்த போது-
“மவனே… பத்தர் மவனே…” தந்தையே சொல்வது போல் கேட்டது…
“பத்தர் தொழில் செய்தவரின் மகனா இருக்கிற நீ வெளித் தோற்றத்தையா பார்ப்ப..? அதன் மதிப்பத் தானே பார்க்கணும்.!. கையில இருக்கிற பொருளை தங்கமா பாரு… அது போல.. கூடப் பிறந்த உறவுகள் என்னதான் சொத்திற்காக ஆட்டம் போட்டாலும்… அந்த உறவுகளின் மதிப்பைப் பாரு..”
தந்தை சூசகமாக உணர்த்தியது புலப்பட… உடனே தெளிவானான் அவன்.
*****
அதே நேரம்… அவனது தங்கையின் வீட்டில்…
தந்தையின் வக்கீல் நண்பர் கொடுத்த உயிலின் நகலைக் கண்ட அவனது தங்கை மற்றும் தங்கையின் கணவர் முகங்களில் ஈயாடவில்லை. இவர்களும் சற்றும் எதிர்பாராதது தான் இந்த உயில். அண்ணன் எப்போதோ தனக்குச் சாதகமாய் அப்பாவிடமிருந்து உயிலெழுதி வாங்கிவிட்டான் என்றே இந்த நொடிவரை நம்பியிருந்தார்கள்.
அப்பாவின் காரியம் முடிந்ததும்... தனக்குச் சாதகமான சொந்தங்களைக் கூட்டி மெதுவாய் பஞ்சாயத்தை ஆரம்பிக்கலாம் என்றிருந்தவர்களுக்கு, இறந்த மறு நாளே முகத்தில் அறைந்தாற்போல்... வீட்டின் பாதியை உயிலெழுதி அதற்கு அவசியமே இல்லாமல் பண்ணிவிட்டார் அவளது தந்தை. நகரத்தின் முக்கிய பகுதியில் வீடு இருப்பதால், தனது பங்கு கட்டாயம் 50-60 இலட்சங்களைத் தாண்டும்.. அவளது மனம் கணக்குப்போட்டது.
இது நாள் வரை, அடுத்தவர் தங்களைவிட அதிகமாய் பெற்றதைக் கண்டு… பொறாமையில் வயிரெறிந்ததே வழக்கம். முதன்முறையாக, அடுத்தவர் அதாவது தனது அண்ணன் பெற்ற சொற்ப பலன் மிகத் தீவிரமாய் தொந்தரவு செய்து உறுத்தியது… உலுக்கியது.
இதுநாள் வரை அப்பா எப்பேற்பட்ட கோபத்திலும் மூவரையும் ஒரு சிறிய தட்டு கூட தட்டியதில்லை. தற்போது தந்தையின் சூசகமான இந்த அடியில்… அவளுக்கு பிடறி கலங்கிவிட்டது.
பள்ளிக்கூட நாட்களிலிருந்து இன்று வரை அண்ணன் தனக்கு எந்தளவிற்கு பக்க பலமாய் இருந்திருக்கிறான் போன்ற அண்ணனின் பாசப் பக்கங்கள் நினைவிற்கு வந்து அவளை வாட்டியது. தாமாவது குழந்தை குட்டியென பெற்று வாழ்ந்தாகிவிட்டது. அண்ணன் இன்னும் வாழ்க்கையையே துவங்கவில்லை எனத் தோன்றியதில் அழுகை வந்தது.
*****
அதே நேரம்… அவனது அக்காவின் வீட்டிலும் தங்கையைப் போன்றே மனநிலை… சற்றும் எதிர்பாராத அப்பாவின் இந்த நடவடிக்கை சிறிதளவு கூட ஜீரணமாகவில்லை அவனது அக்காவிற்கு.
கணவர் எந்தவொரு அபிப்பிராயமும் சொல்லாததால், மனசு தாங்காமல், டிகிரி முடித்து வெளிநாட்டில் வேலை செய்யும் அவளது மகனுக்கு போன் அடித்து, இந்த விபரங்களைச் சொல்ல...
“நான் அப்பவே சொன்னேன்... நீங்க தான் கேட்கலை... உரிமை.. உரிமை ...ன்னு சொல்லி என் வாயை அடைச்சிட்டீங்க.. சித்தியும் நீங்களும் பண்ண டார்ச்சர்ல...செத்த மறு நாளே அவருடைய ஒரே வீட்டை தூக்கி ‘இந்தா பிடி’ன்னு போட்டுட்டார்... தாத்தா செத்ததை நினைச்சு துக்கப்படுவீங்களா... இல்ல... சொத்துல பாதி கிடைச்சதை நினைச்சு சந்தோஷப்படப் போறீங்களா...?”
ஸ்பீக்கரில் போட்டிருந்ததால்... மகன் கேட்ட கேள்வி மனசாட்சியின் அலறலாய் வீடு முழுக்க ரீங்காரமிட்டது... அவளது கணவனுக்கும், அக்காவின் வீட்டிற்கு வந்திருந்த தாயிற்கும் கேட்டது.
“அப்போ... தாத்தா மாமாவிற்கு என்ன தான் கொடுத்தார்...?
அப்பாவின் நண்பர் மொபைலில் காட்டிய பொருள் நினைவிற்கு வர... போட்டோவில் பார்த்ததை விவரித்தாள். உடனே அவன் சொன்னது –
“டாப் – நாட்ச்... தாத்தா படு பிரிலியன்ட்”
“என்ன தான்டா சொல்ல வர்றே... உன்னோட தாத்தா எதுக்குடா இந்த பொருளை கொடுக்கணும்...?”
“தாத்தா மாமா கிட்ட கொடுத்தது க்ளோஸட் மட்டும் தான்... மலம் எது தெரியுமா...?”
உடனே தொடர்ந்தான் – “பணம் பணம்னு அலஞ்ச உங்க பேராசை தான் மலம். அந்த சொத்துக்கு நீங்க தகுதியில்லாததினால... அந்த சொத்தும் மலம் தான்”
“தாத்தாவுடைய சாவுக்கு வர முடியலயேன்னு கவலைப்பட்டேன்... நல்ல வேளை... இப்போ வரலை...”
“நான் என்னடா எனக்கா கேட்டேன்… உங்க எல்லாருக்குந் தானே…”
”வால்மீகி மகரிஷி ரத்னாகர் என்கிற பெயரில் முன்னால் கொள்ளைக்காரனாய் இருந்தாராம்….நாரத மகரிஷி அவரிடம் ஒரு நாள், ”இப்படி குடும்பத்திற்காக கொள்ளையடிக்கிறியே.... குடும்ப உறுப்பினா்கள் உன்னுடைய பாவத்தில் பங்கெடுப்பார்களா என கேட்க, யாருமே பாவத்தில பங்குகொள்ள முன் வரவில்லையாம்…அது போல் என்னால நீங்க பண்ற பாவத்தை என்னால் சுமக்க முடியாது ”
எனச் சொல்லி போனைத் துண்டிக்க...
மகன் முகத்தில் அடித்தாற்போலிருந்தது. அவன் சொன்ன வார்த்தைகள் மனதைக் கொய்து... என்னவோ செய்தது. மொபைலை மேஜையில் வைத்து, பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள்.
*****
அன்று மாலையே… அவனது வீட்டில் சொல்லி வைத்தார் போல் தங்கையும் தமக்கையும் அவர்களது கணவர்களோடு ஆஜராகியிருந்தனர்…
“அப்பா உயிரோட இருக்கும் போது புரியாத விஷயம்… இப்போ புரிய வந்திருக்கு... அப்பா வாழ்ந்த இந்த வீட்டில்… கடைசிகாலம் வரைக்கும் அப்பாவை மனதாரத் தாங்கிய நீங்க இருவரும் தான் வாழத் தகுதியிருக்கு…” கண்கள் கலங்கி உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள் தங்கை.
“நாங்க எல்லாரும் பேசி எடுத்த முடிவு தான்… உனக்கே எழுதி தந்துடறோம்” ஆதரவாய் குரல் கொடுத்தாள் தமக்கையும்.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைத்தது பார்முதற் பூதம்
என்கிற சித்தர் பாடல் நினைவிற்கு வந்தது. மனிதன் பரம்பொருளை காணமுடியாமல் பஞ்ச பூதத்தில் கட்டுண்டுள்ளான் என்பதற்கு உவமையாக மரத்தால் செய்யப்பட்ட பொம்மையை காட்டுகிறார் திருமூலர். ஒரு குழந்தைக்கு அந்த பொம்மையைக் காண்கிற போது வடிவத் தோற்றமான யானை மட்டுமே தெரியும். அதுவே ஒரு ஆசாரிக்கு வடிவத் தோற்றத்தை தாண்டி மரம் என்கிற அதன் உருபொருள் தெரியும்...
இது போல் ஒவ்வொருவருக்குள்ளும் மறைக்கின்ற திரையை சூசகமாய் இறந்த பின்னும் தன்னுடைய உயில் பரிசு மூலம் அமைதியாய் அழகாய் விலக்கியதில்...விளக்கியதில்... மங்களத்தை அமங்களம் மூலம் கொடுத்த ஷாக் டீரீட்மென்ட் தெளிவாய் வேலைச் செய்ய... அப்பா மாமேதையாகத் தான் தோன்றியது அவனுக்கு.
மாலையிட்ட அப்பாவின் புகைப்படத்தைப் பார்க்க... பத்தர் அப்பா சித்தராய் சிரித்தார்.
அவன் அவர் தந்த பரிசைப் கையிலெடுத்தான்... எடைப் பார்ப்பது போல பிடித்துப் பார்த்தான். அப்போது நிலவியிருந்த அமைதியை உடைத்து, தங்கை, தமக்கையைப் பார்த்து சொன்னான்…
“இந்தப் பொருளோட எடை சுமார் 4 பவுன் இருக்கும்… அப்பா இந்த ஊருக்கு வந்து பத்தர் தொழில் செய்ய வந்த போது கையில் 4 பவுன் மட்டும் தான் இருந்ததுன்னு எனக்கு தொழில் கத்துக் கொடுக்கும் போது சொல்வார். இப்போ பாங்கல அப்ரைசரா இருக்கிற நான், கையில இருக்கிற தொழிலயும் வளர்த்துக்கன்னு சொல்றது போல இருக்கு. அதனால கடையுடன் கூடிய ஒரு வீட்டை வாடகை எடுத்து கூடிய சீக்கிரம் போயிடலாம்னு இருக்கேன்.. அப்பாவின் உயில்படியே நடக்கட்டும். யாருக்கும் எந்தவித மனஸ்தாபமும் வேண்டாம்… அப்பா-அம்மா ஆசிர்வாதம் மட்டுமில்லாம உங்க எல்லாருடைய ஆசிர்வாதமும் வேணும்”
சொல்லிவிட்டு, பதிலேதும் எதிர்பார்க்காமல்… அப்பா தந்த பரிசை.. அப்பாவின் போட்டோவின் முன் வைத்து கும்பிட்டான்..
அனைவரின் கண்களுக்கும் அந்தப் பொருளின் வடிவம் தெரியவில்லை, தங்கம் மட்டுமே தெரிந்தது... அவனின் மனதைப் போலவே !
*** *** ***
பெயர் - புதுவை அருண். கோ (கோ. அருணாசலம்)
முகவரி - ‘கோகுலம்’, 8, 9வது குறுக்குத் தெரு விரிவு,
ரெயின்போ நகர், புதுச்சேரி-605011.
அலைபேசி – 94425 49994
மெயில் – arungg97@gmail.com
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்