logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சிக. வசந்தலெட்சுமி

சிறுகதை வரிசை எண் # 69


( அம்மாவுக்கு கல்யாணம் ) எழுதியவர் : சிக. வசந்தலெட்சுமி *************************************** " நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு. அப்பதான் நானும் என் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வேன்", அருண் திட்டவட்டமாய் தன் முடிவினை தெரிவிக்க, அவனது தாய் அமுதா ஆடிப் போய் நின்றாள். இருபத்து நான்கு வயதான அவளது மகன் அருண் இப்படி ஒரு அதிரடி முடிவினை சொல்வானென அவள் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. " சனியனே...! நீ என்ன பைத்தியமா?", அமுதா ஆங்காரமாய் கத்தினாள். " ஆமாம். நான் பைத்தியம் தான். நல்லதொரு கருத்தைச் சொன்னா, பைத்தியம்னு தானே எல்லோரும் முத்திரை குத்துவீங்க" " டேய்...! டேய்...! ஏன்டா இப்படி குதர்க்கமா பேசறே...?" " அம்மா...! உனக்கு கல்யாணம் ஆனப்போ எத்தனை வயசு?" " பதினேழு வயசுடா" " அப்பா கூட எத்தனை வருசம் நீ வாழ்ந்திருப்பே?" " ஆறே மாசம் தான். நீ வயித்துல தரிச்ச நான்காம் மாசமே, உன் அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாரு", சொல்லும் போதே அமுதாவின் விழிகளில் மெல்லிய ஈரம் கசிந்து பளபளக்கத் தொடங்கியது. " ஆறு மாசம் அவரோட நீ எப்படிப் பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன்னு உன் மனசுக்கேத் தெரியும்", அருண் தன் தாயின் கடந்த கால வாழ்க்கையை சற்றே கிளறி விட, அது நாள் வரை தன் மனதிற்குள் புழுங்கி, வேதனைகளில் தவித்துக் கொண்டிருந்த அமுதா விக்கித்துப் போய் நின்றாள். மகனின் வினாவிற்கு விடையளிக்க திராணியற்று மௌனமாய் அவனை வெறித்தாள். " அப்பா ஒரு லாரி டிரைவர். வெளி மாநிலங்களுக்கு சரக்கு எடுத்துட்டு போனா, பத்து நாள் கழிச்சி தான் வீட்டுக்கே வருவார்னு, நீயே பலமுறை என்னிடம் புலம்பி தள்ளியிருக்கே. விரல் விட்டு எண்ணிப் பார்த்தா, குறைஞ்சது பத்து நாள் அப்பா கூட நீ வாழ்ந்திருப்பியா?" " ம்", அமுதா மெல்ல முனகினாள். " எனக்காக இருபத்து நான்கு வருசம் வாழ்ந்திருக்கே. உனக்கான வாழ்க்கையை எப்போ தான் நீ வாழப் போறேம்மா?", அருண் கேட்க, அமுதா நிலைக் குலைந்து தான் போனாள். மகன் கேட்பது அத்தனையும் நூறு சதவீதம் உண்மை தான் என அவளின் மனசாட்சியும் ரகசியமாய் வக்காலத்து வாங்கியது. ஆனாலும் அவளால் வெளிப்படையாக அதனை ஒப்புக் கொள்ள இயலவில்லை. " டேய்...! நாட்டுல எந்தப் புள்ளையாவது, பெத்த தாய்க்கு மறுமணம் செய்யனும்னு துடிச்சிருக்கா? நீ ஏன்டா அருண் நம்ம சம்பிரதாயங்களை மீற துடிக்கறே?" " அம்மா, இருபத்து நாலு வயசான எனக்கு ஒரு வாழ்க்கைத் துணையை அமைச்சு வைக்கனும்னு நீ ரொம்பவே ஆசைப்படறே. ஆனா வாழ்க்கையை மொட்டிலேயே கருக்கிட்டு, பட்ட மரமா எனக்காகவே வாழ்ந்துகிட்டு இருக்கற உன் வாழ்க்கையை, சோலைவனமா மாத்தனும்னு நான் ஆசைப்படறேன்மா" " உன் ஆசை நிறைவேறாது அருண். ஊர் சனத்துக்கும், நம்ம சொந்தத்துக்கும் இது தெரிஞ்சா, என் முகத்துலேயே காறி துப்பிடுவாங்கப்பா" " உன்னையே நீ ஏமாத்திக்க வேணாம்மா", அமுதா எவ்வளவுக் கூறியும் மகன் அவன் முடிவிலேயே தீர்மானமாயிருக்க அவளின் நெஞ்சாங் கூட்டிற்குள் மெல்லிய பதட்டம் சூழத் தொடங்கியது. " இவ்வளவு நாளும் நல்லாதானே இருந்தே. ஏன்டா அருண் உன் புத்தி தடம் மாறிப் போகுது...?" " இன்னும் ஆறு மாசத்துல நான் ஜெர்மனி போகனும் " " ஆமா. ஏதோ டிரெயினிங் எடுக்க உன் கம்பெனியிலேர்ந்து உன்னை அனுப்பறாங்கன்னு போன வாரமே சொன்னியேப்பா" " அதற்கப்புறம் இந்தியாவிலே எனக்கு வேலை இல்லே. வெளி நாட்டுல தான் நான் வேலை பார்க்கனும். வெளிநாட்டுக்கு என்னோட வான்னு சொன்னாலும் வர மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறே" " எனக்கு ஜெர்மனியெல்லாம் ஒத்து வராதுடா. ஒரே குளிரா இருக்கும்" " அப்புறம் எத்தனை நாளைக்கு நீ இங்கே தனியா இருக்கப் போறே சொல்லு", மகன் வினவ அமுதா மௌனம் காத்தாள். " உன்னை இங்கே தனியா விட்டுட்டு, ஜெர்மனியிலே நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்" " அதற்காக நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?", அம்மாவின் வினாவில் சற்றே கடுமை பரவியிருந்ததை அருணால் உணர முடிந்தது. " உனக்கான வாழ்க்கை இன்னும் எவ்வளவோ இருக்குமா தெரியுமா?", தன் தாய், தந்தை, கூடப் பிறந்த அண்ணன் கேட்காத கேள்வியை தன் வயிற்றில் பிறந்த மகன், கேட்கும் போது அமுதா குழம்பித் தான் போனாள். " நான் சொல்றதை சொல்லிட்டேன். உனக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சிட்டு தான், நான் வெளிநாட்டுக்கு போவேன். பிறகு தான் என் கல்யாணம் பத்தியும் யோசிப்பேன். அது வரைக்கும் எனக்கு கல்யாணமே வேணாம்", சொல்லிய அருண் மேசை மீதிருந்த கைப்பையை எடுத்து தோள் பட்டையில் மாட்டிக் கொண்டான். தன் தாய் அமுதாவிடம் சொல்லாமலேயே வேலைக்கு கிளம்பி போனான். அமுதா வெளிறிப் போய் மகன் சென்ற திசையினையே வெறித்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்த அமுதா, வரவேற்பறை சுவற்றில் மாட்டியிருந்த அந்த ஆள் உயர கண்ணாடி முன் வந்து நின்றாள். கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை ஆழமாய் ஊடுருவினாள். வட்ட முகம். அகலமான விழிகள். செதுக்கிய மூக்கு. ஆரஞ்சு சுளை இதழ்கள். இயற்கையாகவே வில்லாய் வளைந்திருந்த புருவங்கள். அதன் மீது மேடிட்டிருந்த பரந்த நெற்றி. இரு புருவங்களுக்கு மத்தியில் மெல்லிய விபூதி பூச்சென பளிச்சென இருந்தாள் அமுதா. முற்பது வயதுக்கு மேல் மதிக்க முடியாத இளமை அவளை ஆக்கிரமித்திருந்தது. கணவன் ரவி விபத்தில் இறந்த பிறகு, வயிற்றில் நான்கு மாத கருவினை சுமந்துக் கொண்டு பிறந்தகம் வந்து விட்டாள் அமுதா. அவளது அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாது போக, வீட்டின் அத்தனை வேலைகளையும் அமுதாவே இழுத்து போட்டுக் கொண்டு செய்யும் படி ஆயிற்று. அடுத்து வந்த நான்கு வருடங்களில் அவள் அண்ணன் முருகன் திருமணம் செய்துக் கொண்டு, மனைவியோடு சிங்கப்பூர் சென்று அங்கேயே தங்கியும் விட்டான். தனக்கு தெரிந்த தையல் தொழிலை கொண்டு, அவ்வப்போது வரும் ஒன்றிரண்டு ஜாக்கெட்டுகளை தைத்துக் கொடுத்து, அப்பா கொண்டு வந்து தரும் சொற்ப வருமானத்தில் கட்டு செட்டாக குடும்பம் நடத்தி, தன் மகனையும் இஞ்சினியரிங் வரை படிக்கவும் வைத்து விட்டாள் அமுதா. கொரனோ காலத்தில் அம்மாவும், அப்பாவும் ஒவ்வொருவராக இறந்து விட, மகன் மட்டுமே அவளுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து வந்தான். அவனும் தற்போது பயிற்சிக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றான். இளம் விதவையென தெரிந்து, ஆண் வர்க்கத்திடமிருந்து வந்த அத்தனை வக்கிர பார்வைகளையும், ஆபாச பேச்சுக்களையும், காம வல வீச்சுகளையும் மிக நாசூக்காகவே தவிர்த்து வந்தவளுக்கு, கடந்த சில நாட்களாகவே மகன் அருண் கொடுக்கும் மறுமணம் என்ற நிர்பந்தம் மிகுந்த சங்கடத்தையே கொடுத்தது. மகன் சொல்வது போல் தனக்கான வாழ்க்கையை தான் இது வரை வாழவில்லையோ என எண்ணத் தொடங்கினாள் அமுதா. மறுமணம் என்ற சிந்தனையும் இது நாள் வரை துளிக் கூட அவளுக்கு எழவில்லை. அவளைப் பெற்ற தாய் தந்தைக்கும், உடன் பிறந்த சகோதரனுக்கும் அவளுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டுமென சிந்தனை எழாதது அமுதாவிற்கு தற்பொழுது மிகுந்த வியப்பினையே ஏற்படுத்தியது. " நீ உன்னையே ஏமாத்திக்கறேம்மா", மகன் அருண் சொல்வது அவளது செவிகளில் ரீங்காரம் இட்டபடியே இருந்தது. மகனின் ஆணித்தரமான வார்த்தைகள் அவளது மனதையும் மெல்ல அசைக்கவே செய்தது. தலைக்கு மேல் வளர்ந்த மகன் இருக்கும் போது, நாற்பத்து இரண்டு வயதில் தான் மறுமணம் செய்துக் கொண்டால் ஊரும், உறவும் காரி முகத்தில் உமிழ்ந்து விடுவார்களோ எனவும் அஞ்சத் தொடங்கினாள் அமுதா. ஒரு வாரம் அமைதியாகவே ஓடிக் கொண்டிருந்தது. அருணும் அவளிடம் எதுவும் பேசாது மௌனம் காக்கத் தொடங்க, அமுதா மிகுந்த விசனப்பட்டாள். அருணின் ஜாதகம் தங்கள் பெண்ணுக்கு மிகவும் பொருந்தியிருப்பதாக, திருச்சியிலிருக்கும் பெண் வீட்டார் அடிக்கடி அலைபேசியில் தொடர்பு கொண்டு அமுதாவினை ஒரு பக்கம் நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகளை தொடங்கினால், மகனோ பெற்ற தாய்க்கு மறுமணம் செய்யத் துடிக்கின்றான். பெண் வீட்டாருக்கு என்ன சமாதானம் சொல்வதென தெரியாமல் அமுதா விழி பிதுங்க தொடங்கினாள். அன்று மாலை அலுவலகம் முடித்து வந்த மகனிடம் கேட்டே விட்டாள். " டேய் அருண். என்னதான்டா உன் மனசிலே நினைச்சிருக்கே...? முடிவை சீக்கிரம் சொன்னா, பொண்ணு வீட்டுக்கு என் முடிவைச் சொல்வேன். அடுத்து ஆக வேண்டிய வேலையை நான் பார்க்கனும்ல" "என்ன முடிவு?" " உன் கல்யாணம் பத்தி தான்" " அதான் போன வாரமே என் முடிவை தீர்மானமா சொல்லிட்டேனே. நீ மறுமணம் பண்ணினா தான், நானும் கல்யாணம் பண்ணிப்பேன். இல்லைனா உனக்கு துணையா காலம் பூராவும் பிரம்மசாரியாகவே நானும் இருந்திடறேன்", அருண் திட்டவட்டமாய் சொல்ல, அமுதா நீண்ட மௌனத்தில் ஆழ்ந்தாள். ஒரு மணி நேர கரைதலுக்குப் பின் அந்த நெடிய மௌனத்தை அவளாகவே கலைத்தாள். " சரி...! மறுமணம் பண்ணிக்கச் சொல்லி, என்னை வற்புறுத்திக் கிட்டு இருக்கியே. இந்த வயசுல என்னை யார் கல்யாணம் பண்ணிப்பாங்க?" " நீ மறுமணம் பண்ணிக்கறேன்னு சொல்லு, உனக்கேத்த மாப்பிள்ளையை நான் கொண்டு வந்து உன் முன்னாடி நிறுத்தறேன்" " சரி பாரு", அமுதாவின் இதழிலிருந்து இப்படி ஒரு வார்த்தை சிந்தியதும், அருண் பூரித்து தான் போனான். குடுகுடு வென்று தாயிடம் ஓடினான். அவளின் மிருதுவான அழகிய கன்னத்தினை தன் இரு கரங்களால் மென்மையாய் ஏந்திக் கொண்டான். "ரொம்ப நன்றிம்மா. இது போதும் எனக்கு. உனக்கான நல்ல வாழ்க்கையினை, நிச்சயமா என்னால அமைச்சு தர முடியும்", தாயின் விழிகளை ஆழமாய் ஊடுருவியவன் அவள் நெற்றியில் அன்பான முத்தமொன்றை இழைத்தான். ஒரே வாரத்தில் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தான். " யாருப்பா இவர்?" "என்னுடைய கல்லூரி பேராசிரியர் . பேரு சுந்தரம்" " ஓ" " இரண்டு வருசத்துக்கு முந்தி இவருடைய மனைவி இறந்துட்டாங்க. ஒரே பெண்ணையும் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு. இப்ப தனிமரமா நிற்கறாரு", அருண் சொல்ல, தயக்கமாய் சுந்தரத்தை ஏறிட்டாள். நாற்பத்தைந்து வயதில் காதோர நரை முடிகளோடு, அடர்ந்த தாடிக்குள் இருந்து மென்மையாய் அவளை பார்த்து சிரித்தார் சுந்தரம். " உடல் சுகத்துக்காக நான் மறுமணம் செய்ய வரலே. யாருமே இல்லாத தனிமை என்னை ரொம்பவே வாட்டுது. நீங்க விருப்ப பட்டா, உங்களை எனது வாழ்க்கை துணையா ஏத்துக்க நான் தயார்", சுந்தரம் தயக்கமாகவே கூறினார். " யோசிச்சு சொல்றேங்க" " சரிங்கம்மா. நன்றி", கூப்பிய கரங்களுடன் விடைப்பெற்றார் சுந்தரம். " எனக்கு கொஞ்ச நாள் அவகாசம் கொடு அருண். யோசிச்சு சொல்றேன்" " இவரைத் தான் நீ மறுமணம் செஞ்சுக்கனும்னு எந்த ஒரு நிர்பந்தமும் உனக்கு இல்லம்மா. நாளைக்கு சுந்தரம் சார் உனக்கு போன் செய்வார். நீயும் தயங்காம பேசு. ஆறு மாசம் கழிச்சி உன் முடிவை நீ சொன்னா போதும்", என்றவன் சுந்தரத்தின் அலைபேசி எண்ணையும் தாயிடம் கொடுத்தான். மகன் சொன்னது போலவே அடுத்த நாள் சுந்தரம் அலைபேசியில் அமுதாவை தொடர்பு கொண்டார். சின்ன சின்ன அறிமுகங்கள். கடந்த கால நினைவுகளென அவர்களின் அலைபேசி உரையாடல் தொடர்ந்தது. மூன்றே மாதங்களில், சுந்தரம் அவள் நெஞ்சினில் ஆழ பதிந்து விட்டார்.அலைபேசியில் அவர் தொடர்பு கொள்ளாத நாட்களில் மிகவும் தவித்து தான் போனாள் அமுதா. அம்மாவின் தவிப்பினைக் கண்டு மனதுக்குள் நமட்டு சிரிப்பொன்றை உதிர்த்து வைப்பான் அருண். " டேய்....! இன்னிக்கு அவரிடமிருந்து இதுவரை போன் வரலை. அவரை செத்த பேசச் சொல்லேன்டா", அமுதா, தன் மகனிடம் சில நேரங்களில் வெட்கத்துடன் முனகவும் செய்தாள். ஆறு மாதங்களின் அலைபேசி உரையாடல்களுக்கு பின், சுந்தரத்தை மறுமணம் செய்துக் கொள்ளவும் முடிவு செய்தாள். இருந்தாலும் அவளது மனதில் சிறிய தயக்கம். " ஏம்மா தயங்கறே?", அருண் புரியாமல் அமுதாவிடம் வினவினான். " உனக்கு பொண்டாட்டியா வரப் போறப் பொண்ணு, என்னை தவறா பேசிட்டா, என்னால தாங்கவே முடியாது அருண்" " உன்னுடைய மறுமணத்தை ஏத்துக்கற பொண்ணை தான் நானும் கல்யாணம் முடிப்பேன்", திட்டவட்டமாய் கூறிய அருண் அம்மாவின் மறுமண வேலைகளில் தீவிரமாய் இறங்கினான். அம்மாவின் ஒரே உறவான சிங்கப்பூரில் வசிக்கும் தாய் மாமன் முருகனை அலைபேசியில் தொடர்பு கொண்டான். " சொல்லு அருண். என்ன விசயம்? திடீர்னு போன் பண்றே?" " கல்யாண விசயம் தான் மாமா" " ரொம்ப சந்தோசம். பொண்ணு எந்த ஊரு?" " பொண்ணு இல்லை மாமா. மாப்பிள்ளை பார்த்திருக்கேன்" " மாப்பிள்ளையா? என்னடா உளர்றே?" " ஆமா மாமா. அம்மாவுக்கு மறுமணம் செய்ய முடிவு செஞ்சிருக்கேன்" " அடி செருப்பாலே. நாய்களா...! எங்க அப்பன் ஆத்தா செத்தவுடனே ஆட்டம் போட ஆரம்பிச்சிட்டீங்களா?", அலைபேசியின் எதிர்முனையில் முருகன் ஆங்காரமாய் கொதிக்க, அருண் மெல்லமாய் நகைத்தான். " மாமா. நீங்க செய்ய வேண்டிய நல்ல காரியத்தை நான் என் அம்மாவுக்கு செய்ய வேண்டியதாயிருக்கு. அதற்காக பெருமைப் படுங்க" " என்ன நக்கலா? பிளைட்டை பிடிச்சி நாளைக்கே ஊருக்கு வர்றேன். அமுதாவையும், உன்னையும் வெட்டி பொலி போட்டுடுவேன். ஜாக்கிரதை" " சரி வாங்க. என் கையும் பூப்பறிச்சு கிட்டு வெட்டியா இருக்காது. எங்கம்மா வாழ்க்கையை இத்தனை நாளா வீணடிச்ச குற்றத்துக்காக, உங்களை வெட்டியே தீரனும்னு கொலை வெறியிலே நானும் இங்கே இருக்கேன். மனசிருந்தா எங்கம்மாவோட மறுமணத்துக்கு ஆசிர்வாதம் செய்யுங்க. இல்லைனா போனை வைங்க", ஆங்காரமாய் கூறிய அருண் அலைபேசியினை துண்டித்தான். சிங்கப்பூரிலிருந்த முருகன், இந்தியாவில் உள்ள முக்கிய உறவுக்காரர்களுக்கு இச் செய்தியினை அலைபேசி மூலம் வத்தி வைத்து விட, சொந்தங்களும், தெரு சனங்களும் சாடை மாடையாகவும், நேராகவும் அமுதாவை ஏளனம் செய்யத் தொடங்கினர். அமுதாவின் காது படவும் சிலர் பேசினர். " தடி மாடாட்டம் புள்ள வளர்ந்து கிடக்கறான். இவளுக்கு கல்யாணம் கேட்குதோ", எதிர் வீட்டு சாந்தா, அமுதாவின் காதுகளில் விழும் படி சத்தம் போட்டு சிரித்தாள். " இந்த வயசுலேயும் உடம்பு அரிப்பு தீரலை பாரேன்", பக்கத்து வீட்டு தனபாக்கியம் கிழவி வெற்றிலை பாக்கினை பொக்கை வாயில் குதப்பியபடியே தனது மருமகளிடம் சொல்ல, அமுதா கூனி குறுகி நின்றாள். " மண்ணு திங்கற உடம்பை மனுசன் தின்னாதான் என்னன்னு, நானும் சாடை மாடையா எத்தனையோ தரம் உன்னிடம் கேட்டிருப்பேன். எனக்கு சம்மதிக்காத நீ, காலேஜ் லெக்சரரை மடக்கி முந்தி விரிக்க போறீயா", சில வருடங்களுக்கு முன் அமுதாவிற்கு காம வலை வீசிய தூரத்து உறவுக்காரன் விநாயகம், பற்களை நற நறத்த படி அவளிடம் கொடூர வார்த்தைகளால் அனல் கக்கினான். அமுதா குமுறிக் குமுறி அழுதாள். இத்தனை நாட்கள் தான் கட்டிக் காத்த கற்பு, மானம், மரியாதை, கௌரவம் அனைத்தும் காற்றில் பறப்பதாய் உணர்ந்தாள். " அம்மா அழாதே. வேலை வெட்டி இல்லாதவங்க எதை வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் பேசுவாங்க. அடுத்த விசயம் அவங்களுக்கு கிடைக்கிற வரை, வெறும் வாய்க்கு அவல் கிடைச்ச கதையா, உன்னை பத்திதான் பேசிக்கிட்டே இருப்பாங்க. இதற்கெல்லாம் நீ அழக் கூடாது. உனக்கு நானிருக்கேன். தைரியமாயிரும்மா", அருண் தாயின் கண்ணீரை துடைத்தப் படி கூற, தனது மகனின் மன முதிர்ச்சியைக் கண்டு அமுதா பிரமித்து தான் போனாள். அம்மாவின் திருமணத்திற்கு நாள் குறித்து பத்திரிக்கையும் அடித்தான். வீடு வீடாகச் சென்று சொந்தம், பந்தம் அக்கம் பக்கமென ஒருவர் விடாமல் விநியோகித்தான். " கலி முத்திடுச்சு அருண். கல்யாண வயசுல நீ இருக்கறப்போ, உன் அம்மாவுக்கு கல்யாணம் கேட்குதா", பத்திரிக்கையை பெற்றுக் கொண்ட ஒன்று விட்ட பெரியப்பா சண்முகம், நீண்ட பெருமூச்சினை இழுத்து விட்ட படியே விசனப் பட்டார். " பெரியப்பா...!" " சொல்லுப்பா அருண்" " உங்களுக்கு இப்போ எத்தனை வயசு?" " ஐம்பத்தி ஆறு" " பெரியம்மா இறந்து எத்தனை வருசமாச்சு...?" " இரண்டு வருசம்" " போன வருசம் உங்களோட ஐம்பத்து அஞ்சு வயசுல, நீங்க ஏன் பெரியப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டீங்க" " எனக்கு புள்ளைங்க இல்லே. சோறு, தண்ணி கொடுக்க, பேச்சு துணைக்கு ஆளே இல்லே. அதனால நான் இரண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டேன். உன் அம்மா பொம்பளை தானே...? அவளுக்கு ஏன் ரெண்டாம் கல்யாணம்?" " எனக்கு கல்யாணம் ஆகி, நான் என் பொண்டாட்டி புள்ளையோட வெளிநாடு போயிட்டா, அம்மாவுக்கு துணையா யார் இருக்கா?", அருண் வினவ, பெரியப்பா சண்முகம் சற்றே நெளியத் தொடங்கினார். " அதென்ன ஆணுக்கு ஒரு சட்டம்? பெண்ணுக்கு ஒரு சட்டம் பெரியப்பா?" " எக்கேடோ கெட்டு தொலைங்கடா. நம்ம சாதி பெருமையை அழிக்கனும்னே கங்கணம் கட்டிகிட்டு திரியுறீங்க. நடத்துங்க...! நடத்துங்க...!", பெரியப்பா தன் வயிற்றெரிச்சலை ஏகத்துக்கும் கொட்டினார். விதவை பெண்ணுக்கு மறுமணமா? அதுவும் தோளுக்கு உயர்ந்த பிள்ளை இருக்கும் போதா...?", என்ற ஆதங்கமே அவரின் பேச்சினில் வெகுவாக வெளிப்பட்டது. சுற்றமும், உறவுகளும் மிக கொடூரமான விமர்சனங்களை கொட்டி தாளித்து கொண்டிருக்க, எதனையும் சட்டை செய்யாத அருண், தன் அம்மாவின் திருமண வைபத்தில் மிகத் தீவிரமாய் இருந்தான். ******* அதே ஊரில் இருந்த பிள்ளையார் கோவிலில் திருமணம். சொந்த பந்தமென யாரும் வரவில்லை. அருணின் நண்பர்கள் ஒரு சிலர் வந்திருந்தனர். சுப முகூர்த்தம் ஒன்றில் சுந்தரம் அமுதாவின் கழுத்தில் தாலி கட்டினார். மாலையும் கழுத்துமாக, தலை நிறைய மல்லிகையை சுமந்து, இரு புருவங்களுக்கு மத்தியில் செக்கச் சிவந்த குங்கும பொட்டுடன், கை குலுங்கும் கண்ணாடி வளையல்களுடன் மங்கல கோலத்தில் இருந்த தன் அம்மாவின் அழகினை ஆழமாக ரசித்தான் அருண். " ஹய்யோ...! இன்னைக்கு நீ எவ்வளவு அழகாயிருக்கே தெரியுமா? என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. வீட்டுக்கு போய், உனக்கு முதல்ல சுத்தி போடனும் அமுதா", அருண் தன் தாயின் கன்னங்களை வழித்து திருஷ்டி முறிக்க, அங்கிருந்தவர்கள் அனைவரும் நமட்டு சிரிப்பை உதிர்த்தனர். " வாழ்க்கையிலே துன்பங்களையே சுமந்தவங்க எங்கம்மா. அவங்களை கண் கலங்காம நல்லா பார்த்துங்கங்க சார்" " என்னது...? இன்னும் உனக்கு நான் சார் தானா ?", சுந்தரம் மென்மையாய் கடிந்துக் கொள்ள, அருண் மெல்ல முறுவலித்தான். " சரி...சரி...! இன்னையிலேர்ந்து நீங்க எனக்கு அப்பா சார். போதுமா?", அருண் சொல்ல, வெகு நாட்களுக்கு பின், அமுதா " ஹாஹாஹா " வென தன்னை மறந்து முதன் முறையாக சிரிக்க ஆரம்பித்தாள். ********

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in