Vijinarayan
சிறுகதை வரிசை எண்
# 68
நிம்மதி பெருமூச்சு
கௌரி வேகமாக தனது வார நடுவில் நடுவில் செய்யும் ஷாப்பிங்கை செய்து கொண்டிருந்தாள் .லண்டன் மழை உடனே கொட்டுவேன் என்று பயமுறுத்தி கொண்டிருந்தது.புதன் கிழமைகளில் ஆபீஸ் மதிய உணவு நேரத்தில் டெஸ்கோ வருவதும் அவசரமாக ஷாப்பிங் முடிப்பதும் அவளுக்கு வாடிக்கை ஆகி போனது. செல்லக்குட்டி சூரஜ் ப்ராமில் அமர்ந்தபடி தனது பொம்மை நண்பன் ஸ்னோவ்யீயுடன் பேசிக்கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைத்தவாறே ,பனீர் விற்கும் ஷெல்ப்பினைநோக்கி நகர்ந்தாள் . இரண்டே வயதாகும் மகன் எவ்வளவு சமர்த்தாக எனக்கு ஒத்துழைக்கிறான் என்று பெருமையுடன் நினைத்த வாறே பில் போடும் இடத்திற்கு நகர்ந்தாள் .மீண்டும் இருண்டு உரும தொடங்கியிருக்கும் வானத்தை பார்த்து வீடு பொய் சேரும் வரை மழை வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள் .
பன்னாட்டு கம்பெனி ஒன்றில் டேட்டா என்ஜினீயராக பணிபுரியும் கௌரிக்கு எப்போதும் நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறப்பது போலவே இருக்கும் .வீடு ,ஆபீஸ் மற்றும் குழந்தையை திறம்பட நிர்வகிக்க முயலும் அவளுக்கு ஒரு நாளில் 24 மணி நேரம் போதுவதே இல்லை!எப்பொழுதும் பரபரவென்றே இயங்க வேண்டிய நிர்பந்தம்..
தனது அதி நவீன காரை திறம்பட வாசலில் பார்க் செய்துவிட்டு இறங்கும்போது குழந்தை தூங்க ஆரம்பித்து இருந்தான்.!அவனை சத்தம் போடாமல் அவனது படுக்கையில் போட்டுவிட்டு நிமிரும் நேரத்தில் மழை கொட்ட ஆரம்பிக்கவே கடவுளுக்கு அவசரமாக ஒரு தேங்க்ஸ் சொன்னாள் .
மளிகை சாமான்களை சமையல் ரூமில் அடுக்க ஆரம்பிக்கும் பொழுது ப்ரீத்தி கவுர் நினைவுக்கு வந்தார் .கடந்த ஒரு வருடமாக கௌரியின் வேலைப்பளுவை வெகுவாக குறைப்பதில் ப்ரீத்தி முக்கிய இடம் வகித்தார் .கடந்த ஒரு வருடமாக வாரத்திற்கு இரு முறை வந்து சமையல் செய்யும் பஞ்சாபி சமையல் பெண்ணான ப்ரீத்தி தனது வேலையில் மிகவும் திறமைசாலி .அவர் செய்யும் பாலக் பனீருக்கும் ,தால் மாக்கினிக்கும் ,கௌரியும் அவளது பெங்காலி கணவர் சைதன்யாவும் அடிமைகள்.லண்டனில் இப்படி ஒரு குக் கிடைத்ததை நினைத்து அவர்கள் மிகவும் மகிழ்ந்தனர் .
நாளை கவுர் வந்துவிட்டால் நிம்மதியாக வேலை பார்க்கலாம் .குட்டி பையனுடன் இன்னும் கொஞ்ச நேரம் செலவு செய்யலாம் என கணக்கு போட்டபடி காய்கறிகளை குளிர்சாதனப்பெட்டிக்குள் அடுக்க ஆரம்பித்தாள் கௌரி .கூடவே நாளை ஐந்து மீட்டிங்குகள் இருப்பதும் ,தான் முக்கியமான ப்ரெசென்ட்டேஷன் செய்ய வேண்டும் என்பதும் பய முறுத்தின .
வியாழன் காலையில் குழந்தையை நர்சரியில் விட்டுவிட்டு காலை உணவை முடித்ததும் தன மடிக்கணினியுடன் ஐக்கியமானாள் கௌரி.பத்து மணி அளவில் வந்த ப்ரீத்தி கவுர் தன் வேலையே மௌனமாக துவங்கினார் .சாதாரணமாக நிறைய பேசும் அவர் இன்று வித்தியாசமாக இருப்பதாக கௌரிக்கு தோன்றியது .கௌரிக்கு அதிகமாக பேசுவது அறவே பிடிக்காது .அதுவும் தன பணியாளர்களிடம் அதுவும் ப்ரீதியிடம்.!ஆறு மாதங்களுக்கு முன் தன அம்மா வந்த போது கூட அவரிடம் தான் எச்சரித்ததை நினைவு கூர்ந்தாள் கௌரி.பஞ்சாபிகளுக்கே நிறைய பேச பிடிக்கும் ,ஆகவே கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று அம்மாவிடம் சொன்னது நினைவு வந்தது.அம்மா ஆனால் நிறைய பேசதான் செய்தார் .
பஞ்சாபில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த ப்ரீத்தி கடந்த ஆறு வருடங்களாக லண்டனில் வசிப்பதாகவும் .அவர் கணவர் ஒரு கட்டிட தொழிலை என்றும் ,பத்து மற்றும் பன்னிரண்டு வயதுள்ள இரண்டு மகன்களுக்கு அவர் தாயார் என்றும் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது .இன்று ஏன் இவரை பற்றி இவ்வளவு நினைக்கிறேன்?என்று தன்னை தானே கேட்டுக்கொண்டாள் கௌரி .பேச்சுவாக்கில் அம்மா ஒரு நாள் ப்ரீத்தி சந்தோஷமான பெண் அல்ல என்று கூறியது நினைவுக்கு வந்தது .கூடவே கொஞ்சம் சிரிப்பும் வந்தது.தன் எழுத்தாளர் அம்மாவிற்கு கற்பனை அதிகம் என்று அவளுக்கு தெரியாதா ?
ஒரு மணி நேரம் போனதும் கௌரிக்கு ஏதோ சரி இல்லை என்று பட்டது.எதோ ஒரு ஹிந்தி பாட்டை முணுமுணுத்தபடி வழக்கமாக வேலை செய்யும் கவுர் இன்று மௌனமாக வேலை செய்வது என்னமோ செய்தது.அடுத்த பத்து நிமிடத்தில் தனது மீட்டிங் ஒன்றை கேன்சல் செய்த கௌரி சமையல் அறைக்குள் நுழைந்து ,புன்னகையுடன் 'ஏதவது பிரச்சினையா 'என்று மெதுவாக கேட்டாள் .இதற்காகவே காத்துக்கொண்டிருந்தாற்போல் ப்ரீத்தி விம்மி அழ ஆரம்பித்தார் கூடவே பேசவும் செய்தார் .
பஞ்சாபின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் வறுமையான குடும்பத்தில் பிறந்த அவர் ,திருமணத்திற்கு பிறகு மிகவும் சிரமங்களுக்கு ஆளானதாகவும் ,கணவன் மற்றும் மாமியார் அவரை அடிக்காத உதைக்காத நாளே இல்லை என்ற நிலையில் தான் தன் கணவனுக்கு லண்டன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது .இது தனக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்று தீவிரமாக நம்பினார் ப்ரீதி .ஆனால் நடந்தது என்னவோ அப்படி அல்ல .லண்டனிலும் அவரது கணவனது அடி உதை தொடரவே செய்தது.
ப்ரீத்தியின் மூத்த மகனின் டீச்சர் ,ஒரு மனிதன் இன்னொரு மனிதனை துன்புறுத்துவது எவ்வளவு கேவலமான செயல் என்பது பற்றி அடிக்கடி சொல்வாராம்.வாழ்நாள் முழுவதும் தன் அன்னையின் வேதனைகளை பார்த்து வளர்ந்த அவன் பொறுக்காமல் ஒரு நாள் தனது வீட்டில் நடப்பதை டீச்சருக்கு தெரிவித்துவிடவே ,அவர் போலீஸில் புகார் அளித்து ப்ரீத்தியின் கணவனை போலீஸ் கைது செய்து விட்டார்கள்.இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தாலும் ,ஒரு வாரமாக தான் நன்றாக தூங்குவதாக ப்ரீத்தி சொன்னார்.மேலும் இந்த லண்டன் மாநகரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது .இங்கு என் மகன்கள் பிறரை துன்புறுத்தாதவர்களாக வளர்வார்கள்.இந்த நகரத்தில் தான் நான் மனிதம் என்றால் என்ன என்று அறிந்து கொண்டேன் . ஒரு வேளை என் கணவருடன் நான் திரும்ப வாழ்ந்தாலும் ,அது ஒரு திருந்திய மனித நேயம் மிக்க ஒருவருடனாகவே இருக்கும்.கடைசி வரை நான் இங்கேயே வாழ்வேன் என்று சொல்லி முடித்த ப்ரீத்தியின் முகத்தில் ஒரு அசாதாரண நிறைவு தென்பட்டது .
தனது மடிக்கணினியை எடுத்த கௌரி , அதற்க்கு முன் கைபேசியை ஆன் செய்தாள் .முதலில் அம்மாவிற்கு சொல்ல வேண்டும் ப்ரீத்தி சந்தோஷமான பெண் தான் என்று !
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்