logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

PMF. Nuhaisara

சிறுகதை வரிசை எண் # 67


தலைப்பு- அவன் மீண்டு வருவான்...... வையமெங்கும் சூழ்ந்தவற்றை விழுங்கிவிடும் கும்மிருட்டு. இந்த கும்மிருட்டிலும் நடுவானில் மின்குமிழை ஔிரச்செய்தது போல் காட்சியளிக்கிறது இந்த வட்ட நிலா! ஒரு நிலவை இன்னுமொரு நிலவு இரசிக்கிறது போலும்!வானதி நாற்பது வயதிலும் பிரகாசம் குன்றாமல் மிளிர்கின்ற பால் நிலா! இந்த நிலா வானத்தில் உள்ள நிலவுடன் கண்களால் எதையோ பேசிக்கொள்கின்றது போலும்! தன் மனக்குமுறல்களை அவள் ஒப்புவிப்பதை அவள் கண்கள் காட்டிக்கொடுக்கின்றன. "அம்மா! அம்மா! பத்து மணி அம்மா! பசிக்கிது. சாப்பாட தாவன்." இந்த அழகிய குரலுக்கு சொந்தக்காரி வேறாருமல்ல அனிதா! வானதியின் அழகை சற்றும் குறையாமல் வாங்கிக்கொண்ட அவளது மகள். சாப்பாட்டு மேசையில் வந்து உட்காருகிறாள் அனிதா. வானதியோ பதில் எதுவும் பேசாமல் சமையலறை சென்று சாப்பாட்டை எடுத்து வந்து பரிமாறுகிறாள்.சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே , "அம்மா நீயும் வந்து உட்காரன். டைம் போகுது." "நீ முதல்ல சாப்டு" அனிதாவின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறாள். அனிதாவோ சாப்பிட்டு முடித்து தூங்க செல்கிறாள். வானதி சமையலறை வேலைகளை முடித்து விட்டு கடிகாரத்தை பார்த்தவாறே கதிரையில் அமர்ந்து கொண்டிருக்கிறாள். அவளை அறியாமலே தூக்கம் அவளை ஆட்கொள்கிறது. ரிங் ரிங்.....ரிங் ரிங்....... திடீரென வீட்டின் அழைப்பொலி கேட்கிறது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்! சற்று பொறுத்திருந்து பார்ப்போம்! சத்தம் கேட்டு திடீரென கண்முழித்தவள், தன்னையறியாமலே தனக்கு தூக்கம் போனதை அப்போதுதான் சுதாகரித்துக்கொண்டவளாய், ஏதோ சட்டென்று நினைவிற்கு வந்ததும் எழுந்து கதவை திறக்கிறாள். கதவிற்கு வெளியே சிறு புன்னகையும் குழந்தை தனமும் கலந்த சிறிய வட்ட முகம் அவள் முகத்திலிருந்த அத்தனை சோகத்தையும் ஒரே நொடியில் புன்னகையாக மாற்றிவிட்டதே! "எவ்வளவு நேரம்மா பெல் அடிக்கிறது. அப்டி எங்கம்மா போன!" செல்லமாக சற்று கடிந்து கொள்கிறான். "இல்லடா டைம பாத்துட்டு இருந்தனா. அப்டியே கொஞ்சம் தூங்கிட்டன்." உள்ளே போனவனை பார்த்துக்கொண்டிருந்தவள், ஏதோ நினைவிற்கு வந்ததும் தன்னை சுதாகரித்துக்கொண்டு, "கார்த்திக்! நீ எங்க போன இவ்வளவு நேரம்?" வினாக்குறியுடன் உற்றுநோக்குகிறாள். வானதிக்கு அனிதாவும், கார்த்திக்கும் மாத்திரமே பிள்ளைகள். கார்த்திக் அனிதாவை விட மூத்தவன். கணவர் ஓர் விபத்தில் இறந்ததற்கு பிறகு தனி ஆளாக நின்று அவர்களை அவள் வளர்த்துக்கொண்டிருக்கிறாள். "பிரெண்ஸோட விளையாட போனம்மா" வானதியின் கேள்வி பிடிக்காதவனைப்போல் முகத்தை சுளித்துக்கொண்டு உடனே அறைக்குள் விரைகிறான். அவன் வார்த்தைகள் அவளை காயப்படுத்தினாலும் அவள் அதை காட்டிக்கொள்ளவில்லை. அனிதாவை விட கார்த்திக் மீது சற்று அலாதி பிரியம் அவளுக்கு. "கார்த்திக்! மேசைல சாப்பாடு வெச்சிருக்கன் குளிச்சிட்டு சீக்கிரம் வா சாப்பிடுவம்" சற்று உரத்த குரலிலே பேசுகிறாள். "சரிம்மா" அறையிலிருந்தவாறே பதிலளிக்கிறான். பிறகு இருவரும் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சாப்பிடும் போது அவனை தயங்கி தயங்கி பார்த்துக்கொண்டிருந்தவள், பேச ஆரம்பிக்கிறாள். "தங்கம்! அம்மா நான் என்ன சொன்னாலும் உன் நல்லத்துக்கு தான் சொல்வன்டு உனக்கு நம்பிக்க இருக்குல!" "என்னம்மா கேள்வி இது! எனக்கு தெரியாதா?" "பிரெண்ஸோட சேர்ரது தப்பில்லப்பா. நல்ல பிரெண்ஸோட சேர்ந்துக்க. இப்டி லேட் ஆகி வீட்ட வராத. பொம்புள புள்ளயும் வீட்ட இருக்கு. பார்த்து நடந்துக்கப்பா." "அம்மா! நீ யோசிக்கிற மாதிரி பெரிசா ஒன்னும் இல்லம்மா. வீணா மனச போட்டு குழப்பிக்காத" "அதுக்கில்லடா தங்கம்....." அவளுக்கு முன்னால் கைகளை நீட்டி அவளை இடைநிறுத்தியவன், "இப்ப என்னம்மா! நான் லேட்டா வரக்கூடா அவ்வளவு தானே? நீ கவலய விடு. இனி அப்படி செய்ய மாட்டன்." என்றவாறே வானதியை பார்க்கிறான். அவள் சற்று கலக்கத்துடனே புன்னகைக்கிறாள். "என்னம்மா! இன்னைக்கு சமயல அசத்திட்ட போல!" "நீ புகழ்ற அளவு ஒன்னுமில்லடா. உனக்கு புடிக்கும்ன்டு தான் செஞ்சன்." அவளையறியாமலே முகத்தில் சிரிப்பு மலர்கிறது. "நீ எப்பயும் இப்படித்தாம்மா சொல்ற. நான் உனக்கு பெரிய ஒரு ரெஸ்டொரன்ட் வெச்சி தரலாம்ன்டு இருக்கன்." "அப்ப அதுல நீ வந்து மா பிசைஞ்சு தா” கலகலவென சிரித்துவிடுகிறாள். "அதுக்கு தான் ஒரு குண்டு பூசனிக்காவ வெச்சிருக்காய் தானம்மா!" "உனக்கு அவளோட சண்ட புடிக்காட்டி விடியாதுடா" "அப்டி இல்லம்மா. உன்ன வளர்த்து உடலாம்ன்டு தான்....." கலகலப்பாக பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்கிறார்கள். சிறிது நேரத்தில் இருவரும் உறங்கச்செல்கிறார்கள். அதிகாலை நேரம். சூரியன் தன் கதிர்களை நீட்ட விருப்பமில்லாதவனை போல் தயங்கி தயங்கி அவனியெங்கும் வீசிக்கொண்டிருக்கிறான். சமையலறையில் பாத்திரங்களின் உருட்டல் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. யாரென்ற சந்தேகம் எழுகிறதல்லவா! எனக்கும் அதே சந்தேகம் தான்! போய்த்தான் பார்ப்போமே! ஆ! சமையலறையில் வானதி பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். "வீட்டு வேலைகள கூட பாத்திரலாம் ஆனா இந்த பசங்கள எழுப்பாட்றத நினைச்சா தான் தலையே சுத்துது. எப்பதான் நேரத்தோட எழுந்திருக்க பழகிக்க போறாங்களோ தெரில" அவளது முனு முனுப்பும் காதுகளை எட்டவே செய்கிறது. விரைவாக அத்தனை வேலைகளையும் செய்கிறாள். அடுப்பில் காய்கறிகளை சமைக்க போட்டுவிட்டு சமையலறையை விட்டு வெளியே வருகிறாள். "அனிதா! அனிதா! தூங்குனது போதும்! எழுந்திரு! ஸ்கூல் போகனுமா இல்லையா? கார்த்திக் நீயும் எழுந்திரு." இருவரும் எழுந்து தயாராகி விட்டு பாடசாலைக்கு செல்கிறார்கள். வானதி வேலைகளை முடித்து விட்டு கதிரையில் அமர்ந்து ஒரு பெருமூச்சு விடுகிறாள். நேரம் நகர்கிறது. காலை பத்து மணி ஆகிவிட்டது. எதிர் வீட்டு மாலதி அக்கா வருவது போல் தெரிகிறதே! "வானதி என்ன செய்துட்டிருக்க?" "இருக்கேன்கா. பசங்கள அனுப்பி போட்டு இப்பதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தன்" "எனக்கும் தான்டி வீட்டு வேலைகள செய்யவே நேரம் பெய்த்து. உன்ட ஞாபகம் வரையும் உன்ன பாத்துட்டு போகலாம்ன்டு வந்தன்." "இருங்கக்கா காபி போட்டுட்டு வாரன்" என்றவளை, "அதலாம் வானாடிமா. நீ இங்க இரு நாம பேசிட்டு இருப்பம்." என்றவாறே அவர்களது சம்பாஷனைகள் நீண்டு கொண்டு செல்கிறது. சற்று நேரத்தில், "வானதி! நீ ஒன்னு கேள்விபட்டியாடி! நம்ம அனிதாட ஸ்கூல்ல சரியான பிரச்சனையாம்." இடியை தூக்கிபோடுகிறாள் மாலதி. வானதி சற்று பயந்த குரலில், "இல்லையே அக்கா. அனிதா அப்படி ஒன்னும் சொல்லலியே." அவள் கண்கள் யோசனையோடு தரையில் நிலைகொள்கின்றன. "அவளுக்கு தெரிஞ்சிருக்காதுடி. நம்ம பசங்க நல்ல புள்ளைங்க தானே!" "என்னக்கா விஷயம்?" என்றவளிடம், கிசுகிசுத்த குரலில் எதையோ சொல்கிறாள் மாலதி.வானதிக்கு வார்த்தை எதுவும் வரவில்லை. அவள் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகளும், குழப்பங்களும் ஊசலாடிக்கொண்டிருப்பதை அவளது முகம் தெளிவாக காட்டிக்கொண்டிருக்கிறது. "நிச்சயமாக இருக்காது. நிச்சயமாக இருக்காது." அவளது மனம் புலம்பிக்கொண்டிருக்கிறது. "பாருடி! உலகம் எப்டி போகுது." மாலதி புலம்பியதும், "என்னக்கா செய்ற! இப்பைய பசங்கள நம்பவே முடில!" என்று பெருமூச்சு விடுகிறாள். "சரிடி. மதியம் சாப்பாடு செய்யல. பசங்கெல்லாம் வந்துருவாங்க. நான் போறன்." "சரிக்கா நேரம் கிடைச்சா பசங்கெலயும் கூட்டி கொண்டு பிறகு வாங்க." என்றவளிடம் ஒப்புதல் கொடுத்தது போல் தலையசைத்து விட்டு செல்கிறாள் மாலதி. பிற்பகல் ஆறு மணி ஆகிவிட்டது. எல்லோரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். முற்றத்தில் நின்ற வானதி வீட்டினுள் நுழையும் போது வீட்டு பின் வாசல் பக்கம் யாரோ முனுமுனுப்பது கேட்கிறது. விரைந்து சென்று ஜன்னல் வழியாக பின் வாசலை நோக்குகிறாள். கார்த்திக் மதில் அருகே நின்று கொண்டிருக்கிறான். "யாருடன் பேசிக்கொண்டிருக்கிறான்?" என்ற எண்ண ஓட்டங்களுடனே தலையை நிமிர்த்தி பார்க்கிறாள். மதிலுக்கு அந்தப்பக்கம் ஓர் உருவம் இவளை கண்டவுடன் சட்டென்று தலையை அந்தப்பக்கம் எடுத்துக்கொள்கிறது. உடனே கார்த்திக்கும் எதுவும் நடக்காதது போல் தன்னை காட்டிக்கொண்டு உள்ளே வருகிறான். வானதி எதையும் தான் கண்டது போல் காட்டிக்கொள்ளாமல் சமையலறை பக்கம் விரைகிறாள். ஆனால், அவள் உள்ளம் மட்டும் அந்த இடத்தில் நிலை கொள்கிறது. "யாராக இருக்கும்?" "எதற்காக அவன் ஒழிந்து கொண்டு பேசுகிறான்?" "என்னை கண்டதும் ஏன் அந்த உருவம் மறைய வேண்டும்?" "கார்த்திக்கிடமே கேட்போமா? இல்லை அவன் ஏதாவது தவறாக நினைத்துக்கொண்டால்?" "இல்லாவிட்டால் என்னிடம் மறைத்தால்?" இப்படி பல எண்ணங்கள் அவளை ஒரு இடத்தில் நிற்க விடாமல் நிலைகுலையச்செய்கின்றன. "இப்போதைக்கு அவனிடம் எதுவும் கேட்க வேண்டாம். பொறுத்திருந்து பார்ப்போம்" இறுதி முடிவுக்கு வருகிறாள். இன்றைய நாள் அவளது உள்ளம் அவளிடம் இல்லை. குழப்பத்துடனே இன்றைய நாள் முடிந்தும் போகிறது. அடுத்த நாள் பிற்பகல் நேரம். வானதி காப்பி போட்டுக்கொண்டு வருகிறாள். "அனிதா இந்தா காபி எடு. கார்த்திக் எங்க?" "தெரில மா." "கார்த்திக்...!" அவன் அறைக்கு செல்கிறாள். அங்கும் அவன் இல்லை. ஏதோ நினைவிற்கு வர கோப்பையை மேசையில் வைத்துவிட்டு பின் வாசல் பக்கம் விரைகிறாள். கார்த்திக் மதில் பக்கமாக யாருடனோ பேசிக்கொள்கிறான். தான் நிற்பதை காட்டிக்கொள்ளாமல் உரையாடலுக்கு செவிசாய்க்கிறாள் வானதி. "மிச்ச நேரம் இங்க நிக்கிறது சரியில்ல. நான் போறன்." மர்ம நபரின் குரல். "ஹா! சரிடா." கார்த்திக். "கவனமா இரிடா." நிசப்தம் ஊசலாடுகிறது. வானதி ஜன்னல் வழியே தலையை விட்டு பார்க்கிறாள். கார்த்திக் வந்து கொண்டிருக்கிறான். கையில் ஏதோ மறைத்து மறைத்து வருகிறான். உடனே அவள் உள்ளே செல்கிறாள். ஆனாலும் அவள் கண்கள் கார்த்திக் மீதே இருக்கின்றன. அவன் முகம் கழுவ குளியலறைக்கு செல்வதை கண்டவள், அவன் அறைக்குள் விரைகிறாள். மும்முரமாக எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள். அங்கே அவள் கண்டது, அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருக்கிறது. கைகள் நடுங்க நடுங்க அதை மீண்டும் எடுத்து பார்க்கிறாள். முகத்தில் வடியும் வியர்வையை துடைத்துக்கொண்டு சமையலறையை நோக்கி விரைகிறாள். உணர்வுகள் அத்தனையும் செத்துவிட்டது போல் விரைத்துப்போய் நிற்கிறாள். வீரிட்டு கத்தவேண்டுமென்று உள்ளம் ஊசலாடுவதை பொத்திக்கொள்ளும் கைகள் காட்டிக்கொடுக்கின்றன. அத்தனை போராட்டங்களையும் தாண்டி அவள் கண்களிலிருந்து கண்ணீர் வீரிட்டுக்கொண்டே இருக்கிறது. இன்றைய நாளில் அவள் யாருடனும் பேசவில்லை. எதையோ இழந்ததைப்போல் சிந்தனையிலே மூழ்கியிருக்கிறாள். தூக்கம் அவள் கண்களை எட்டவே இல்லை. ஒவ்வொரு நொடியும் அவளுக்கு பாரமாகவே இருக்கிறது. விரைத்துப்போய் அழுகிறாள். பின் கண்களை துடைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறாள். மீண்டும் அவளை கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறாள். இப்படியே இரண்டு நாட்கள் ஓடிவிடுகின்றன. இன்று மதியம் யாரிடமும் சொல்லாமல் வெளியே எங்கோ சென்றுகொண்டிருக்கிறாள். அவள் செல்வதை பார்க்கும் போது மனதுக்குள் ஓர் இனம்புரியாத அச்சம் குடிகொள்கிறது. "வானதி! வேண்டாம்!" என தடுக்கவேண்டும் போலிருக்கிறதே! இவள் எங்கே செல்கிறாள்? யாருக்கு தெரியும்! பார்ப்போம்! சிறிது நேரத்தில் ஓரிடத்தில் நிற்கிறாள். தலையை சற்று நிமிர்த்தி அங்கே மாட்டப்பட்டிருந்த பதாதையை பார்க்கிறாள். "காவல் நிலையம்" உள்ளே செல்ல விருப்பமின்றி சிறிது நேரம் அவ்விடத்திலே நிற்கிறாள். பின் தன்னை தேற்றிக்கொண்டு உள்ளே செல்கிறாள். "யாரும்மா? என்ன வேணும்?" அதிகாரி கேள்வி தொடுக்க, அவளுக்கு வார்த்தை வரவில்லை. "உன்னதான்மா என்ன வேணும்?" "அய்யா நான் இங்க உக்காந்து பேசலாமா?" "ம்ம்...." என்று அவர் தலையாட்ட உட்காருகிறாள். சிறிதுநேரம் அவள் எதுவும் பேசவில்லை. விரைத்து போய் இருக்கிறாள். "சொல்லுங்கம்மா" தன்னை சுதாகரித்துக்கொண்டவள், நடந்தவற்றை அவரிடம் ஒப்புவிக்கிறாள். அதிகாரியின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் ஊசலாடுகின்றன. "நீங்க சொன்னத ஒரு கம்ப்லைன்டா எழுதி தாங்க. கான்ஸ்டெபிள் இவங்களுக்கு ஒரு பேனாவும் பேப்பரும் கொடுங்க" அவள் எழுத ஆரம்பிக்கிறாள். கண்களில் வடியும் கண்ணீரை அவள் துடைப்பதை ஒட்டுமொத்த காவல்நிலையமும் பார்க்க தவறவில்லை. காவல் நிலையத்திலிருந்து திரும்புகையில் ஏதோ நினைவில் வர சட்டென்று அதிகாரியை பார்த்து , " தந்தையில்லா பையன் அய்யா கொஞ்சம் பார்த்து....." என்று வீரிட்டு அழுது தன் கைகளால் வாயை மூடிக்கொண்டு நடக்கிறாள். அவளுக்கு கடந்த சில தினங்களாக நடந்த அத்தனை விடயங்களும் நினைவிற்கு வந்து வந்து செல்கின்றன. "மாலதி அக்காவிடம் தான் எப்படி முகம் கொடுப்பேன்! அவர் என்ன நினைப்பார்?" செய்வதறியாது புலம்புகிறாள். மாலதி அன்று கூறிய வார்த்தைகள் அவள் கண் முன்னே வந்து போகின்றன. "ஸ்கூல்ல சில பசங்க கஞ்சா பாவிக்கிறத புடிச்சயாம்டி. ஒருத்தன் தான் அதெல்லாம் சப்லை பன்றானாம். அவன ஒருத்தரும் காட்டி கொடுக்கலடி. அவன தான் இப்ப போலீஸும் தேடிட்டிருக்காம்." அவள் கார்த்திக் அறையில் பார்த்த பொருள்! அதை நினைக்க நினைக்க உள்ளத்தால் உடைந்து கொண்டிருக்கிறாள். கஞ்சா! ஆம்! அதே தான்! அழுது அழுது கண்களில் கண்ணீர் வற்றிப்போகிறது. அவளது அப்பாவி உள்ளம் காய்ந்த பாலைவனத்தில் பூக்கின்ற சிறு பூ போல சிறு நம்பிக்கையொன்றை புகட்டிக்கொண்டே இருக்கிறது. "அவன் மீண்டு வருவான்...." என்று. கரு- வீட்டின் சேவகி மட்டுமல்ல பெண். அவள் சமூகத்தின் சேவகி.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.