சுபாகர்
சிறுகதை வரிசை எண்
# 66
கேள்விகள்
(சிறுகதை)
சுபாகர்
பாலத்தை ஒட்டிய அந்த சாலையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்தது.அவ்வப்போது மொத்த வியாபார கடைகளிலிருந்து லாரிகளும், குட்டியானைகளும் ஓடு, மரம், கம்பிகளை ஏற்றிக் கொண்டு புகையை கக்கியபடி சென்றன.
பாலத்தின் அடியிலிருந்து அவன் உடலை குறுக்கி கைகளை தரையில் ஊன்றி வண்டியை தள்ளினான்.மூன்று மாதங்களுக்கு பிறகு சப்பணம் போட்டு உட்கார்ந்ததில் முழங்கால்களில் வலி தெரித்தது.மடியில் துணி சுற்றி வைக்கப்பட்டிருந்த கல்லின் எடையும் கூடியிருந்ததால் சக்கரம் மண்ணில் புதைந்து மெதுவாக நகர்ந்தது. மண்பரப்பிலிருந்து அரையடி உயர தார்சாலையில் வண்டியை ஏற்றுவதற்குள் இரு மூச்சும் வாங்கியது.
சித்திரை வெய்யிலில் சாலை கொதித்துக்கொண்டிருந்தது.அவன் துணியை தலையில் போட்டு, கழுத்தில் இறுக்கி கட்டிக்கொண்டான். இருகைகளிலும் சுற்றியிருந்த துணியை மீறி அனல் சுட்டது.மடியிலிருந்த கல் தொடையை அழுந்தியது.இரண்டு தூண்கள் தள்ளி அந்த கருப்பு நாய் அவனுக்கு முதுகை காட்டியபடி படுத்து தூங்கிக் கொண்டிருந்தது.அவன் அதற்கு எதிர் திசையில் வண்டியை மெல்ல தள்ளினான்.மூன்று மாதங்கள் இயங்கா நிலையில் இருந்தும், இப்போது சக்கரங்களில் கிரீச்சொலி கூட இல்லாமல் வண்டி இயங்குவது அவனுக்கு ஆச்சர்யமாயிருந்தது. இருநூறடி தள்ளி பாலத்தின் ஏறுமுகத்தை அடைந்த போது வியர்த்து வழிந்தது.
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகு வண்டியை பாலத்தின் மீது ஏற்றினான்.தரையில் உரசிய முழங்காலை உள்ளிழுத்துக் கொண்டான்.மடியிலிருந்த கல்லின் எடை கூடிக்கொண்டே வருவது போல் தோன்றியது.அந்தப் பாலம் அரை கிலோமீட்டர் தூரம் நீண்டிருந்தது.அதிக உயரமில்லாததால் சராலென்று சரியாமல் சற்றே தூக்கி வைக்கப்பட்ட சமதளம் போல இருந்தது.
நூறடி தூரம் சென்ற பிறகு அனலேறிய கை சற்று தயங்கிய போது வண்டி சட்டென்று பின்நோக்கி நகர்ந்தது. இதை எதிர்பார்த்துதான் பின் இரு சக்கரங்களை ஒட்டியபடி அந்த தலையனையை கட்டியிருந்தான். சரிந்த சக்கரங்கள் இரண்டும் தலையணையின் மீதேறி பொதிந்து நின்றன.
மூச்சிரைத்தபடி கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான். துண்டை கழட்டி முகத்தையும் உடம்பையும் துடைத்துக் கொண்டான்.
தொடரும் அந்த கெட்டக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் நூறடி தூரம்தான் செல்ல வேண்டும்.
உறுதியுடன் கைகளை ஊன்றி வண்டியை தள்ளினான் வண்டி அரையடி அரையடியாக முன்னேறியது.
ஒரு கார் ஹாரன் ஒலித்தப்படி கடந்து சென்றது.ஒரு பாதசாரி நின்று அவனை கவனித்து விட்டு நடந்து சென்றான் .
பாலத்தின் ஒரு இடத்தில் கைப்பிடி சுவற்றை மறைத்து அந்த விளம்பர பலகை சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த இடம்தான்.அவன் பலகையை அனைத்தபடி வண்டியை நிறுத்தி பின் சக்கரங்களை தலையனை மீது ஏற்றி பொதியவைத்தான்.
மடியிலிருந்த கல்லை புரட்டி கீழே தள்ளி, சுற்றியிருந்த துணியை உருவியெடுத்தான்.
அந்த கருங்கல் இருபத்தைந்து கிலோ எடையிருக்கக்கூடும். வீடு கட்டும் போது அஸ்திவாரத்திற்கு பயன்படும் உளிக்கல்.
அது தொடையில் அழுந்தியிருந்த இடத்தில் வெட்டு போல் தடம்பதித்திருந்தது.
அவன் வண்டியிலிருந்து இறங்கி அமர்ந்தான்.பின் பக்கம் கொதித்தது.அந்த விளம்பர பலகை அவன் நினைத்ததுபோல் தகரமல்ல. ஃப்ளக்ஸ். சுலபமாக தள்ள முடிந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தில் ஒரு நீளமான கார் கைப்பிடி சுவற்றை உடைத்து முன்னேறி பாதி உடலை அந்தரத்தில் நீட்டி ஊஞ்சல் போல ஆடிக்கொண்டிருந்தது. தீயணைப்புத்துறை வந்து காரையும் பயணிகளையும் பத்திரமாக மீட்டது.
உடைந்த சுவற்றை மறைக்க அப்போது போலீஸ் கொண்டு வந்து வைத்த போர்டு அது.இத்தனை நாட்களாகியும் சுவரை சீர் படுத்த மாநகராட்சிக்கு நேரம் இல்லை.
அவன் ஆள் நுழையுமளவிற்கு சந்து கிடைத்ததும் உட்காந்த வாக்கில் மெல்ல நகர்ந்து எட்டிய பார்த்தான்.
நேர் கீழே அந்த நாய் படுத்திருப்பது தெரிந்தது.
மெல்ல அந்தக் கல்லை உருட்டி சுவரின் விளிம்பிற்க்கு கொண்டு வந்தான்.
மனமும் உடலும் பதறியது.இதோ சாதிக்கப்போகிறேன், என்னை உன்னால் கொல்ல முடியாது..போ..போய் உன்னை அனுப்பியவனிடம் சொல்..நான் என் விருப்பப்படியே சாவேன்...அவன் படைப்பின் மீது ஒரு கரும்புள்ளியாய் விழும் என் மரணம்..எந்த சமரசத்திற்கும் நான் தயாரில்லை.. நடுரோட்டில் நான்கு பேர் பார்க்கும்படி என் உயிர் பிரியும்...என் உடலை பார்ப்பவர்கள் அனைவரும் அவன் முகத்தில் காரி உமிழ்வார்கள் என்று சொல்.
அவன் கல்லை மெல்ல நகர்த்தினான்.
இதோ உன் தலை நிணமும், சதையுமாய் சிதறப்போகிறது..
ஒரு உந்து உந்தினால் போதும்..
இதோ..
கல்லை தள்ளி விட்ட அவனுக்கு நொடியில் அந்தத் தவறு புரிந்துவிட்டது.
தரையோடு தரையாக கல்லை நகர்த்தியது பிழையான செயல். உளிக்கல்லுக்கு அடியில் சிக்கியிருந்த சிறு கல் முந்திக்கொண்டுவிட்டது. சிறு கல்லைத் தொடர்ந்தே பெருங்கல் கீழிறங்கியது.
பதைப்புடன் எட்டிப் பார்த்தான்.
அவன் நினைத்ததுதான் நடந்திருந்தது.
சிறு கல் விழுந்த அதிர்ச்சியில் நாய் துள்ளியெழுந்த மறுநொடி விழுந்திருக்கிறது உளிக்கல்.
நாய் அண்ணாந்து பார்த்து உர்ர்ர்ரென்று பற்களை காட்டி சீறியது. அவன் பதறியபடி தலையை இழுத்துக்கொண்டான்.
எத்தனை நாள் திட்டம் இப்படி பொசுக்கென்று தோற்றுவிட்டோமே என்று மனம் குமைந்தது. கண்கள் கலங்கியது.
அரை மணி நேரம் கழித்து அவன் தன் இடத்திற்கு வந்து சேர்ந்த போது அந்த நாய் அங்கில்லை.
அதிக உடலசைவுகளோடு நரம்புகளுக்கு அழுத்தம் தந்த செயல்களால் கை, கால் புண்களில் ரத்தமும் சீழும் வழிந்தது.
பையிலிருந்த பஞ்சு உருளையையும், துணியையும் எடுத்து கட்டுகளை மாற்றினான்.
சோற்றுப் பொட்டலம் பிரிக்கப்படாமல் கிடந்தது. தண்ணீரை மட்டும் குடித்து விட்டு சுருண்டு படுத்துக்கொண்டான்.
விம்மலுடன் கூடிய அழுகையை தொடர்ந்து கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
கண்ணீர் வழியே கலங்கலான அசைவு தெரிய நிமிர்ந்து பார்த்தான்.
கருப்பு நாய் நெருங்கி வருவது தெரிந்தது. அதைத் தொடர்ந்து மேலும் மூன்று நாய்கள் தலை தாழ்த்தி முகர்ந்தபடி அவனை அணுகின.
அவன் பதட்டத்துடன் எழுந்து, அமர்ந்த நிலையில் சுவரோடு ஒட்டிக்கொண்டான் .
கருப்பு நாய் சிரித்தது.
‘’அன்பு, கருணை என்று வார்த்தை அளவில்தான் உலகில் உள்ள அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே தவிர நடைமுறை வாழ்க்கையில் அதை யாரும் கடைபிடிப்பதில்லை" என்றது.
அவன் பேசாமலிருந்தான்
‘’சொல் நான் கூறியது சரிதானே..’’
அவன் தயக்கத்துடன், " அப்படி ஒட்டுமொத்தமாய் சொல்லிவிட முடியாது" என்றான்.
நாய் பெரியதாய் சிரித்தது.
"ஒ.. நீ ரொசாரியோ ஃபாதரின் காப்பகத்தை நினைவு கூர்கிறாய் என்று நினைக்கிறேன். உண்மைதான். அன்பும் கருணையுமான மனிதர் இந்த பெரு நோய் முற்றி இனி காப்பாற்ற முடியாது என்ற நிலையிலுள்ள மனிதர்களை அரவனைத்து பணிவிடைகள் செய்து அமைதியாய் இயற்கையெய்தும் பாக்கியத்தை அளிக்கும் இன்னொரு புனிதர்"
நெருங்கி வந்த மூன்று நாய்களில் பெருத்த உருவத்துடன் இருந்த சாம்பல் நிற நாய் கருப்பு நாயிடம் கேட்டது.
"பிறகு ஏன் இவன் அங்கிருந்து ஓடி வந்தான்"
"அதை நானே சொல்கிறேன்" என்றான் அவன்.
"நான் என மனைவியைத் தவிர பிற பெண்டிரை தீண்டியவனல்ல, பொறுமையே உருவாகக் கொண்ட உத்தமர்களை நிந்தனை செய்தவனுமல்ல, இருமனம் ஒத்த ஸ்நேகிதர்களை வஞ்சகமாக பிரித்தவனுமல்ல, கற்புள்ள மாதர்களை களங்கப்படுத்தி இம்சித்தவனுமல்ல...பிறகு ஏன் எனக்கு இந்த உடல் அழுகும் நோய் வர வேண்டும்"
"இதையெல்லாம் சொன்ன ஆயுர்வேதம் பூர்வ வினைகளின் விளைவாக கூட..என்றும் சொல்கிறதே" என்றது கருப்பு நாய்.
"அது எல்லையில் முட்டிக்கொண்டவர்களுடைய கையலாகததனத்தின் சமாதானம்.. பூர்வ வினைகள் என்னைத் தீண்ட நாற்பதாண்டுகள் காத்திருந்தது ஏன் "
"நியாயமான கேள்வி" என்றது சாம்பல் நாய்.
"ப்ச்" என்று சலித்துக்கொண்ட கருப்பு நாய் சொன்னது.
"பகுத்தறிவின் பலனே கேள்விகள்தான்"
"உண்மை" என்ற சாம்பல் அவன் பக்கம் திரும்பியது.
"நாற்பது வயதில் இந்த உரு சிதையும் நோய்க்கு ஆளானாய், உற்றார் உறவினர்களின் அச்சத்திற்கும் அருவருப்பிற்கும் உள்ளாகி புறக்கணிக்கப்பட்டாய், மனைவி, மக்களின் நலன் கருதி நீயே அவர்களை விட்டு விலகி ஊர் ஊராய் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து பிழைத்தாய்...எல்லாம் சரி..இறுதியாய் நீ வந்து சேர்ந்த காப்பகம் உன் மீது அன்பு செலுத்தி அரவணைத்துக்கொண்டதே...உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க இடம் கூடவே மருந்து, மாத்திரைகள் வழங்கி பராமரித்ததே...அங்கிருந்து ஏன் ஓடி வந்தாய்.."
"படைத்தவன் எனக்கிழைத்த நம்பிக்கை துரோகத்திற்கு மாற்றாகத்தான் அந்தக் கருணை என் மீது பொழியப்பட்டிருக்கிறது என்பதை என் கேள்விகள் வழியாக விரைவில் புரிந்து கொண்டேன் அந்தக் கருணையை நான் வெறுத்தேன்..அன்பும் ஆறுதலும் எனக்குத் தேவையில்லை..என் மாமிசம் அழுகட்டும், தோல்,எலும்பு, நரம்பு முதலானவைகளை இந்த நோய் தின்னட்டும்..அங்க உறுப்புகள் மேலும் குறையட்டும்.வலியும் வேதனையும் பெருகி துடி துடித்தபடி என் உயிர் பிரிய வேண்டும்..அதுவே அந்த காரணகர்த்தா மீது நான் உமிழும் எச்சில் "
தரையை முகர்ந்து கொண்டிருந்த வெள்ளை நிற நாய் நிமிர்ந்து சத்தமாய் சிரித்து விட்டு சொன்னது.
‘’பாவம் பழி என்ற பயத்திலிருந்து மனிதனால் எப்படி விலக முடியும். அறிவு, புத்தி இவைகளுக்கு உருவம் கிடையாது. மற்ற ஜீவன்களுக்கு ஐந்து அறிவு என்றும், மனிதனுக்கு ஆறறிவு என்றும் வழங்கியுள்ளது இயற்கை. அந்த ஆறாவது அறிவை உணர்வதால் வந்த வினையா இது.. அல்லது, இந்த உடல் தனக்கே உரியது என்ற எண்ணத்தினால் வந்ததா..’’
சாம்பல் நாய் சிறிது நேரம் அமைதி காத்து விட்டு, "சரி இவனை ஏன் கொல்ல முயன்றாய் "என்றது கருப்பனை காட்டி.
"கருணையின் மூலம் நான் ஏற்காத மரணத்தை இவன் கடியின் மூலம் ஏற்படுத்தத்தான் இவன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான் என்று நான் சந்தேகப்பட்டேன்.. பாய்ந்து என் கழுத்தை கவ்வுவதுபோன்ற இவன் பார்வை என் கனவுகளில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. என் உயிரை இந்த பெருநோய்க்கு மட்டுமே பலியாக்குவேன்,ஒரு தெரு நாய்க்கு அல்ல என்கிற உறுதிக்காகவே இவனை கொல்ல முயன்றேன்.."
கருப்பு நாய் பெருமூச்சு விட்டது.
"ரேபிஸ் தாக்கத்தால் வெறி கொண்டு சுயத்தையும், கட்டுப்பாட்டையும் இழந்த என்னால் பல மனிதர்கள் கடிபட்டு துன்பத்திற்குள்ளானார்கள் கல்லால் அடித்து என்னைக் கொல்ல முயன்றார்கள்.அவர்களிடமிருந்து தப்பித்து இருபது நாட்களுக்கு முன்புதான் இங்கு வந்து சேர்ந்தேன்..இவன் உடல் புண்களிலிருந்து வீசும் மாமிச வாடை எனக்கு பிடித்திருந்தது.. உண்மையில் இவன் உடல் துணியால் சுற்றப்பட்ட இரை போலத்தான் தோன்றியது..இவன் உயிர் சக்தி வற்றி உடல் இயக்கம் குறைந்த பிறகு பாயலாம் என்று என் உள்ளுணர்வு காத்திருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.."
சாம்பல் நாய் சொன்னது.
"ஒரு பக்கம் அழகையும் அற்புதங்களையும் காட்டிக் கொண்டிருக்கும் உலகம், இன்னொரு பக்கம் இது போன்ற அழுக்கு, வஞ்சம், துரோகம் போன்ற கொடூரங்களையும் கொண்டிருக்கிறது... மாயையை நாம் அறியமுடிவதில்லை மானுடத்தின் கேள்விகள் வானும், மண்ணும், காற்றும் வெளியும் எல்லா உயிர் மூச்சுகளும் கலந்த அந்த ஒருமையைத்தேடி வெளியெங்கும் அலைந்து கொண்டிருக்கின்றன..என்ன செய்வது...அங்கே பார்வை போவதில்லை... பேச்சு நுழைவதில்லை, மனம் செல்வதில்லை..அதை எப்படி தொடுவதென்று நமக்கு தெரியாது.. நமக்கு புரியாது.."
அவன் அழுதான். மூக்கிலும் வாயிலும் நீர் வடிய கதறி அழுதான்.நான்கு நாய்களும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. பெருமூச்சுடன் தோள் தளர்ந்தவன், நிமிர்ந்து நிதானமாக சொன்னான்.
"நான் தோற்றுவிட்டேன் நம் புலன்களுக்கும் சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்ட வெளியில் எறியப்படும் கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்பதை இப்போது ஒப்புக்கொள்கிறேன். விடையேயில்லாத கேள்விகளின் விடையாக,...கையலாகததனத்தின் சமாதானமாக, இங்கிருப்பது ஒரே வார்த்தைதான்..விதி..இதுவே என் விதி, இந்த வலியும், வேதனையும், பெருகும் புண்களும், வழியும் சீழும், ரத்தமுமே என் விதி.."
வெள்ளை நாய், ‘’ஆத்மா சிறைப்படுத்த பட்ட இருட்டறை என்பது நம் உடம்புதான் உள்ளிருக்கும் ஆத்மாவானது உடலையே உலகம் என, அறியாமையில்யே மூழ்கிக் கிடக்கிறது. இந்த அறியாமைக்கு காரணம் நம்மை நாமே உணராத காரணம்தான்..’’ என்றது.
அதை கண்டு கொள்ளாத சாம்பல் நாய் "விதி என்பது சரிதான், பூர்வ வினை என்பதில்தான் ஏதோ தொக்கி நிற்கிறது" என்றது.
‘’உடல் தற்காலிகமான அறியாமையின் தோற்றம் என்றால் ஆத்மா அழிவில்லாதது அல்லவா.. பிரிந்த உயிர் வேறு உடலில் நிலை கொண்டு மறுபிறவி எடுக்குமே.." என்று சொல்லிவிட்டு தன்னைத்தானே மறுதலிப்பது போல தலையசைத்தது,
காய்ந்த மரப்பட்டை நிறத்திலிருந்த நாய் ‘’நாமெல்லோருமே பாஸ்பரஸ், கார்பன், நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன்தான்..’’ என்று முணுமுணுத்தது.
கருப்பு நாய், ‘’எல்லாம் வெறும் வார்த்தைகள்" என்றது.
"ஆம் அத்தனையும் வெறும் வார்த்தைகள் " என்ற அவன் தலை குனிந்தபடி சற்று நேரம் அமைதியாயிருந்தான். தீர்மானித்தது போன்ற உறுதியுடன் நிமிர்ந்து கருப்பு நாயை பார்த்து கை கூப்பி கண்ணீருடன் இரைஞ்சலாக சொன்னான்.
"கால பைரவனின் வாகனமே..உன் உள்ளுணர்வே என் விடுதலை வா..நான் உன் இரை..உன் கூரிய பற்களால் என்னைக் கிழி..உன் நண்பர்களுக்கு பகிர்ந்தளித்து உண்.."
கண நேரம் உறைந்து நின்ற சலனத்தை கலைத்து, காலடியை முன்னெடுத்த கருப்பு நாயை பின் தொடர்ந்து மூன்று நாய்களும் அவனை நெருங்கின.
நெருங்கி வந்த நாய்கள் குட்டிகளாக மாறி மலர்ந்த முகத்துடன், வாலை குழைத்தப்படி தன் மீது ஏறி விளையாடுவதை திகைப்புடன் பார்த்தபடி அவன் கண் விழித்தான்.
மறுநாள்.
பாலத்தின் அடியில் அவன் உறைந்த புன்னகையுடன் செத்துக் கிடப்பதையும், சுற்றி நின்று நான்கு நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருப்பதையுமே மக்கள் பார்த்தார்கள்.
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
முகவரி : கே.முருகன் (சுபாகர்),
211,கன்னங்குறிச்சி மெயின் ரோடு,
அஸ்தம்பட்டி – (அஞ்சல்),
சேலம் – 636 007.
தொடர்பு எண் : 92453 24255
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்