அன்பழகன்ஜி
சிறுகதை வரிசை எண்
# 7
அம்முக்குட்டியும் ஆசிரிய பெருந்தகையும்.
அன்பழகன்ஜி
ஆசிரியர் செல்வகுமார் ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. அவர் அம்முக்குட்டியை டாவடித்தது பண்ணையாருக்குத் தெரிந்து விட்டது.
பாவி மனுஷன் என்ன ஆனானோ. உயிரோட இருக்கானோ என்னவோ என்று ஊருக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
மர்ம குகைக்குள் நுழைய எவரும் விரும்பவில்லை.
பண்ணை இருக்கே அது உதிரிப்பூக்கள் விஜயன் சண்டக்கோழி ராஜ்கிரன் கலவை என்று சொல்லலாம். இதற்காக இந்த படங்களை பார்க்காதவர்கள் பார்க்க முயற்சிக்க வேண்டாம். அதுவும் உதிரிப்பூக்களை பார்க்க வேண்டாம். தமிழ் திரைப்பட வரலாற்றில் அது ஒரு தரமான திரைப்படம்.
கேரளாவுக்கு போய் மிளகு பறிக்கும் வேலை பார்த்து வந்த முனுசாமி அம்முக்குட்டியின் தமக்கை நிம்மியை கொய்துகொண்டு வந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.
அவளை அழைத்தது வந்த முனுசாமி இரண்டு ரூபாயுடன் கடைக்குப் போய் ஒரு ரூபாய்க்கு மஞ்சள் கயிறும் ஐம்பது காசுக்கு மஞ்சள் கிழங்கும் மீதமிருந்த எட்டணாவுக்கு சூடனும் வாங்கிக்கொண்டு நிம்மியுடன் ஐயனார் கோவிலுக்குப்போய் சூடன் ஏற்றி வைத்து வணங்கிவிட்டு பரிகார தெய்வங்களுடனான சாட்சியாக நிம்மியின் கழுத்தில் மூன்று முடிச்சி போட்டு அவளை மனைவியாக்கி நேராக வந்து இருவரும் பண்ணையார் காலில் விழுந்தார்கள்.
"இங்கே வேலையில்லாமலா கேரளாவுக்குப் போன?"
"இல்ல பண்ண. பசங்க போனாங்காளா அவங்களோட சேந்து போய்டேன். போனது தப்புதான்".
"தப்பு இல்ல. வேலைக்குதானே போனா. ஒருத்திய இழுத்துகிட்டு வரப்போனியா?"
முனுசாமிக்கு பதில் சொல்ல தெரியவில்லை. சொல்லத் தெரியவில்லை என்பதோடு சில கேள்விகளுக்கு பேசாமல் இருப்பதே நல்லது. ஒன்று கிடக்க ஒன்று சொல்லி வீண் வம்பாகிப் போனால் என்ன செய்வது.
"இந்த பொண்ண வச்சி காப்பாத்துவியா? இல்ல கேரளாவுக்கு அனுப்பிவிட்டு நீ வேற ஸ்டேட்டுக்கு வேலைக்குப் பொய்டுவியா?" என்றார்.
"இல்ல பண்ண . . . ! ரெண்டு பேரும் பண்ண வயல்லயே வேலை செய்யுறோம். பண்ண அனுமதி கொடுக்கணும்" என்றான்.
"எதாவது தப்பு தண்டா பண்ணுனிங்க சோலிய முடிச்சிடுவேன். ஆமா சொல்லிட்டேன். ஒழுங்க வேலைய பாத்து ஒழுக்கமா வாழுறத பாருங்க" என்று எச்சரிக்கை விடுத்தார்.
"அப்போ உத்தரவு பண்ண" என்று குழைந்தான்.
'கொஞ்சம் இரு' என்று உள்ளே போனவர், மனைவி சரஸ்வதியோடு வெளியே வந்து ஒரு தாம்புலத்தில் வேஷ்டி சட்டை புடவை சகிதமாக ஐயாயிரம் ரூபாய் பணத்துடன் மனைவி மூலம் அவர்களுக்கு கொடுத்தார். அது புதுமண தம்பதியருக்கு கல்யாணச் சீர்போல அமைந்தது.
இருவரிடமும் தம்பதியர் ஆசி பெற்று சென்றனர்.
ஒரு வருடம் சென்று மீண்டும் பண்ணையாரை பார்க்க வந்தான் முனுசாமி.
"என்ன முனுசாமி என் சமாச்சாரம்" என்றார் பண்ணையார்.
"ஒண்ணுமில்ல பண்ண. . . . மாமியா இறந்து பொச்சி. அங்க கொழுந்தியா மட்டும் தனியா இருக்குது. துணைக்கி யாருமில்ல. அதான் அதை அழச்சிகிட்டு வரட்டுமான்னு பண்ணகிட்ட உத்தரவுக்கு வந்தேன்" என்றான் பம்மியவாறு.
"அவளையும் அழச்சிக்கிட்டு வந்து ரெண்டாந்தாரமா கட்டிக்கப் போறியா?" என்றார் கோபத்துடன்.
"ஐயோ . . . அதெல்லாம் இல்ல பண்ண. அங்க துணையும் இல்ல. வீடு வாசலும் இல்ல. அதான்".
"இங்க கொண்டுகிட்டு வந்து ஏதாவது வாலாட்டுனே. மூணு பேரோட வாலையும் நறுக்கிடுவேன். ஒழுக்கமா இருக்கணும். சொல்லிட்டேன்" என்றார்.
பண்ணையார் அனுமதி கொடுத்துவிட்டார். பின்னே என்ன! அம்முவை அழைத்து வந்தான். பயத்தில் வால் முளைக்கவே இல்லை. அப்புறம் என்னத்த வாலாட்ட !
அம்முக்குட்டி வந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன.
நிம்மிக்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு வருடம் வயல் வேலைக்குச் செல்லவில்லை. அம்முதான் பண்ணை வேலைக்குச் சென்று வருவாள். பிறகு குழந்தையை பார்த்துக்கொள்ள மாறிமாறி வேலைக்குச் சென்று வந்தார்கள்.
முனுசாமியின் மகனை பள்ளியில் சேர்த்து விட்டதும் அவனை அழைத்துக் கொண்டு விட பள்ளிக்கு போனபோது ஆசிரியர் செல்வகுமார் அம்முகுட்டியை லுக் விட அண்ணலுக்கு இணையாய் அவளும் நோக்கிட காதல் நெருப்பு பற்றி எரிந்து இருவரையும் இணைத்துவிட்டது.
அம்முவின் அழகும் ஒயிலான நடையும் ஆசிரியரின் மனதை ஆர்ப்பரித்திருக்க வேண்டும். வேறென்ன.
சக ஆசிரியர் வெற்றிவேலன்தான் இந்த காதல் விவகாரத்தை பண்ணையாரிடம் பற்ற வைத்தது.
"நாள பின்ன தெரிஞ்சியும் ஏன் சொல்லலன்னு பண்ண சொல்லக் கூடாதுன்னுதான் இத சொல்லுறேன் பண்ண" என்றார்.
"பள்ளிக்கூடத்துல பேசிகிடுறாங்களா இல்ல வெளியதான் பழக்கமா?"
"இப்பல்லாம் அக்கா பையன கொண்டாந்து விட ஸ்கூலுக்கு அவ வரதில்ல. அப்ப வந்தபோது சாடமாடையா பாத்தவங்க இப்பயெல்லாம் போம்போதும் வரும்போதும் சந்திச்சிகிடுறதா தகவல் வருது பண்ண"
"சந்திக்கிறது மட்டும்தான. . .?"
"ம் . . . . நாலு பேருக்கு பாடம் சொல்லிக் கொடுக்குற வாத்தியாரே இப்படி பண்ணினா என்ன பண்ண"
"சரி"
"நம்ம ஸ்கூல படிச்ச பசங்கல்லாம் இப்ப வெளிய எத்தன பேரு நல்ல போஸ்டல வேலை பாக்குறாங்க. அப்படிப்பட்ட ஸ்கூல்ல வாத்தியார இருக்குறது பெருமையில்லையா. இவருபோய் இந்த பொண்ணோட சுத்துனா அசிங்கமா தெரியுது பண்ண"
"அதெல்லாம் சரி. வாத்தியாருக்குன்னா ஆசை இருக்காதா என்ன. ஒழுக்கமா இருக்கணும். சரிதான். அவர வரச்சொல்லுங்க" என்றவர் யோசித்து "வேண்டாம் நீங்க சொல்ல வேண்டாம். நான் பாத்துகிடுறேன் போங்க" என்று அனுப்பி வைத்தார்.
ஆசிரியர் செல்வகுமார் அம்முவை திருட்டுத்தனமாக காளியம்மன் கோவில் மதிலுக்கு வெளியே மறைவில் சந்தித்துள்ளதை விடிவதற்குள் விசாரித்து தெரிந்து கொண்டார்.
மறுநாள் காலை வகுப்பறையில் இருந்தபோது பண்ணையார் அழைப்பதாக தகவல் வர மதிய உணவு இடைவேளையில் போய் பார்த்துக்கொள்வதாக தெரிவித்தார் செல்வகுமார்.
"அதெல்லாம் வேண்டாம். உடனே போய் பாருங்க. நான் கிளாஸ பார்த்துகிடுறேன். அவர பத்தி உங்களுக்கு முழுசா தெரியாதுன்னு நெனக்கிறேன்" என்று அனுப்பி வைத்தார் தலைமை ஆசிரியர்.
போனவர் போனதுதான் பள்ளிக்குத் திரும்ப வில்லை.
இதுவே பண்ணையாரில் தந்தை காலமென்றால் ஆசிரியப் பெருந்தகையின் உடலை பண்ணையின் தேக்குமர தோப்பில் புதைத்திருப்பார்கள். அந்த தோப்புக்குள் யார் நுழைய முடியும் !.
அரசு அதிகாரிகளே அவர் வீட்டிற்கு வந்தால் கைகட்டிதான் நிற்க வேண்டும். வீட்டின் முன்பாக உள்ள பெரிய ஷெட்டில் ஒரே ஒரு நாற்காலிதான் கிடக்கும் அதில் அவரைத் தவிர வீட்டில் உள்ளவர்களே யாரும் உட்கார மாட்டார்கள். ஒரே ஒருமுறை மத்திய அமைச்சர் வந்தபோது இன்னொரு நாற்காலி அந்த ஷெட்டுக்கு வந்ததோடு சரி. கலைக்டர் வந்தாலும் நின்றுதான் பேச வேண்டும். இல்லையென்றால் பக்கத்தில் உள்ள அவரது கட்டிடத்தில் போய் அமரச் சொல்லிவிட்டு அவர் அங்கு போய் நின்றுகொண்டு பேசுவார். வந்த அதிகாரி மரியாதை நிமித்தம் எழுந்து நின்றால் உட்காரச் சொல்லி கட்டாயப் படுத்துவார். அவர்கள் பயத்தில் நாற்காலியில் தொத்திக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.
ஆனால் பஞ்சம் பசி பட்டினி என்றால் பெரிய பண்ணையார் ஏழைகளுக்கு உதவுவதில் தாராள குணம். தனது பண்ணையில் வேலை செய்பவர்களுக்கு முறையாக கூலி கொடுப்பார். வேலை இல்லை என்றால்கூட அடிப்படை தேவையை பூர்த்தி செய்திட ஏதாவது வெட்டியான வேலை கொடுத்து கூலி கொடுப்பார். என்ன அவரை எதிர்த்து யாரும் பேசக்கூடாது. ஒழுக்கம் கட்டுப்பாடு ரொம்ப எதிர்பார்ப்பார். மீறியவன் தொலைந்தான்.
காலம் வெகுவாக மாறிவிட்டது. பெரிய பண்ணையார் காலத்தை விட இப்போது ஊரில் பலர் தலையெடுத்து சின்ன பண்ணையாரை நேரிலும் மறைமுகமாகவும் எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். இவரும் நீக்கு போக்காக தந்தை காலத்து பழைய கம்பீரத்தை தளர்த்தத் தொடங்கிவிட்டார். இவரது நாட்டாமையெல்லாம் இவரது பண்ணையில் வேலை பார்ப்பவர்களிடமே என்று சுருங்கி போய்விட்டது.
இவர் நடத்திய பள்ளியின் மீதுள்ள ஆதிக்கத்தை மட்டும் கொஞ்சமும் குறைத்துக்கொள்ள மாட்டார். ஆசிரியர்களிடம் ஒழுக்கம் வேண்டும் அர்ப்பணிப்பு வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். சரிப்பட்டு வரவில்லையென்றால் கூப்பிட்டு திட்டுவதில் மாற்றல் வாங்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். இல்லையென்றால், நெஞ்சு வலியெடுத்து மருத்துவமனையில் சேர்ந்து விடுவார்கள்.
பள்ளியை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டாலும், எப்போதாவது சொல்லிக் கொள்ளாமல் திடீரென பார்வையிடுவார். மற்றபடி அடிக்கடி சென்று பரபரப்பை ஏற்படுத்த மாட்டார். பங்களாவில் இருந்தபடியை எல்லாவற்றையும் மோப்பம் பிடித்து விடுவார். எல்லாவற்றிக்கும் மேலாக இங்கே படித்தவர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாக வெளியில் செல்வார்கள். கட்டுப்பாடுதான் இளம் பருவத்தை சீர்படுத்தும் என்ற எண்ணம் கொண்டவர். இந்த பள்ளியில் பயின்றவர்கள் பலர் பெரிய பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் ஊருக்கு வரும்போது மரியாதை நிமித்தமாக வந்து பார்க்கும் போகும்போது இவருக்கு ஓர் ஆத்ம திருப்தி ஏற்படும்.
இப்போதெல்லாம் பண்ணையார் வீட்டு ஷெட்டில் கூடுதலாக நாற்காலிகள் வந்துவிட்டன.
பக்கத்து ஊர்தான் செல்வகுமார் இருப்பிடம் என்பதால் ரகசியமாக விசாரித்தபோது பண்ணையாரை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் சென்னைக்கு ஓடிவிட்டதாக வெற்றிவேலனுக்கு தகவல் கிடைத்தது.
"மெட்ராஸ் போய் உங்க டைரக்டர பாருங்க. நான் அவருகிட்ட பேசிட்டேன். ட்ரான்ஸபெர் கொடுப்பாரு வாங்கிகிட்டு இந்த ஸ்கூல்லருந்து பொய்டுங்க" என பண்ணையார் கட்டளையிட்டதை தொடர்ந்து, திருவான்மியூரில் இருக்கும் தன் தங்கை வீட்டிற்கு போன செல்வகுமார் ஒன்.ஜே. பேருந்தில் ஏறி மவுண்ட் ரோடு நோக்கி பயணித்தார்.
நகரப் பேருந்து டாக்டர் முத்துலெட்சுமி சாலைக்கு நுழைய சிக்னலில் நின்றபோது ஒரு பெண்மணி நடந்து பேருந்தை கடந்து போனாள். பின்னால் பார்ப்பதற்கு அசப்பில் அம்முக்குட்டியை போல இருந்தாள்.
பச்சை விளக்கு விழுந்ததும் பேருந்து நகர்ந்து அந்த பெண்மணியை கடந்து போனது. முன்புறத்தை பார்க்க இயலவில்லை. ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள ஜெயந்தி தியேட்டர் நிறுத்தத்தில் மீண்டும் பேருந்து நின்றபோது அவள் பேருந்தை கடந்ததால் தலையை சாய்த்து அவள் முன் அழகை பார்த்ததும் மலைத்துப்போனார் செல்வகுமார். அச்சு அசலாக அம்முக்குட்டியைப்போல இருந்தாள். செல்வகுமாருக்கு கிரக்கம் வந்தது. பேருந்தை எடுத்ததும் அவளை கடந்து போனபோது ஆகாயத்தில் மிதப்பது போல் பட்டது. மேகங்கள் தழுவி முத்தமிட்டு நகர்வது போன்ற ஒரு குளிர்ச்சி. எங்கே போகிறோம் என்பதை மறந்தார். அடையாறு டிப்போவில் பேருந்து நிற்க கீழே இறங்கி கால் போன போக்கில் நடந்தார்.
குடியிருப்பு பகுதியில் மக்கள் நடமாட்டத்திற்கு மத்தியில் தன்னந்தனியே நடந்தார். முதுகிலும் முன்புறமும் வெயில் அடித்து சுல்லென சுட்டது.
பண்ணையாரின் மைத்துனர் செல்வகுமார் வசிக்கும் கிராமத்தின் பஞ்சாயத்து பிரஸிடெண்ட். அவரது மகனுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. காதல் திருமணம்.
காதலில் அவனுக்கு ஒரு சட்டம் தனக்கு ஒரு சட்டமா? வாத்தியாருக்குன்னா காதல் வரக்கூடாதா? பண்ணையார் வச்சதுதான் சட்டமா? இந்த காலத்திலும் ஓட ஓட விரட்டி எல்லோரையும் அடிக்கிறார். என்ன திமிர்? கேக்க யாரும் இல்லையென்ற ஆணவம். எல்லாம் பயந்தாங்கொள்ளிகள்.
வெகுண்டு எழுந்தார். நேராகப் போய் நாலு பேர் கைகட்டி நிற்கும் போது நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேக்கணும். ஆளை வச்சி அடிச்சி கொன்னு தேக்குமர தோப்பிலோ தென்னந்தோப்பிலோ பொதக்கட்டும் பரவாயில்லை என்ற வீரம் வந்தது. பூனைக்கு மணி கட்ட முடிவெடுத்து ஆவேசத்துடன் ஊருக்குத் திரும்பினார்.
மறுநாள் மதியம் பண்ணையார் வீடுக்குப் போனார். வெளியே ஷெட்டில் ஆணவத்துடன் அமர்ந்திருந்தார் பண்ணையார். நினைத்தது போலவே ஏழெட்டு பேர் சுத்தி நின்று கொண்டிருந்தனர்.
செல்வகுமாரை பார்த்ததும் "வாங்க வாத்தியாரே! மெட்ராஸ் போனிங்களா?" என்றார்.
"போனேன்" வார்த்தையின் உச்சரிப்பு இழுப்பாக இருந்தது. தயங்கியதை பார்த்து நமட்டு சிரிப்பு மூடிய உதடுகள் வழியே பண்ணையாருக்கு வழிந்தோடியது. "ஆனா நான் அந்த பெண்ண காதலிக்கக்கூடாதா பண்ண" என்றார் துனிதல் கொண்டு.
"யாரு காதலிக்கக் கூடாதுன்னு சொன்னது? வாத்தியாருக்கு காதல் வரக்கூடாதா என்ன! அவங்களும் மனுஷங்கதானே. திருட்டுதனமா சந்திக்கிறது கல்யாணத்துக்கு முன்னாடியே அங்க இங்க சுத்துறது அசிங்கமில்லையா? அதத்தான நான் சத்தம் போட்டேன்"
செல்வகுமாரின் வீரமெல்லாம் புஸ்சென சப்பையானது.
கன்னத்தில் சுளீரென அரைவது போல் பட்டது. வலி இதயத்தில் இறங்கியது.
"நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கப் போறேன் பண்ண"
"பேஷா பண்ணிக்கிடுங்க. அத அன்னக்கே சொல்லிருந்தா பிரச்சனையே இல்லையே. ட்ரான்ஸ்பரே வேண்டியதில்லையே.
"சென்னைக்கு பேன நான் ஆபீஸ்க்கு போகாம திரும்பி வந்துட்டேன் பண்ண"
"பின்னாடிதான் யோசனை வந்துருக்குப்போல. ஆசிரியர்னா எல்லாத்துலயும் பர்பெக்டா இருக்கணுமில்ல. இனியாவது புத்திசாலியா இருந்துகிடுங்க. மேரேஜ் பண்ணிகிட்டு நல்ல ஹேப்பியா வாழுங்க. கொழுந்தியாள கொடுக்க முடியாதுன்னு முனுசாமி மொரண்டு புடிச்சா வந்து சொல்லுங்க. நான் அவன் கிட்ட பேசுறேன்" என்றார் மகிழ்வுடன் பச்சை கொடியசைத்து.
"மேரேஜ்க்கு எனக்கு சொல்லுவிங்களா வாத்தியாரே?"
"பண்ணை இல்லாம எனக்கு மேரேஜா?" என கூறி சிறிது வெட்கத்தோடும் கொஞ்சம் கூனி குறுகியவாறும் பள்ளி நோக்கி நடையை கட்டினார் ஆசிரியப் பெருந்தகை.
><
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்