கீர்த்தனாதேவி
சிறுகதை வரிசை எண்
# 6
கலியின் விளிம்பில்.
ஒரு சக்கரத்தை போல தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கும் சக்தி வாய்ந்தது காலம். அந்த காலத்தை நிறுத்த கூடிய சக்தி யாரிடமும் இல்லை.
அவற்றின் கணிப்பிலும் தற்போதுள்ள நிலையிலும் கலிகாலத்தின் முதலும் அதன் தாக்கமும் பின்பு முடிவும் அதைத்தொடர்ந்து வரும் காலமும் எப்படி இருக்கும் என்பதை எழுத்துகள் மூலம் கொணர்கிறேன்.
சக்கரவர்த்தி,
நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த ஒருவன். அவனுக்கு ஏற்படுகின்ற மாற்றத்தையும் அவனால் ஏற்படுகின்ற மாற்றத்தையும் தான் இச்சிறுகதை முழுக்க சுமந்து கொண்டு செல்கிறது.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் சக்கரவர்த்தி. தாத்தா பாட்டி அம்மா அப்பா தங்கை தம்பி என்று கூட்டுக் குடும்பமாய், குதூகலமாய் வாழ்கின்றனர்.
ஒரு நாள் மாலை பொழுது, அவ்வாறு இல்லாமல் மாற்றத்துடன் இருந்தது. சக்கரை கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவன்.
வீட்டிற்கு வருகிறான். வீட்டிற்கு வந்ததும் யாருடைய முகமும் சரி இல்லை என்பதை உணர்கிறான். எப்போதும் துரு துருவென்று இருக்கும் பாட்டியிடம் , என்ன பாட்டி! எல்லாரும் இருக்குற இடம் தெரியாம இருக்கீங்க, இந்த நேரத்துல எல்லாருமே பேசிக்கொண்டு தானே இருப்போம், என்ன ஆச்சு இன்று? என்று கேட்க, விளைஞ்ச நெல் விலையே போகல என்று புலம்பிவிட்டு சென்றாள் அம்மா.
அடுத்த நாள் தருவதாக இருந்த கடனும் அவன் வாசலில் வந்து நின்றது. எப்பவும் போல் இல்லாமல் இன்னும் இரண்டு நாட்களில் மொத்த கடனையும் தந்து விடுகிறோம் என்று அப்பா கூற , வட்டிக்காரர் கடனையும் வட்டியையும் ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றார். அவரின் குரலில் கண்டிப்பும், கடனைத் திருப்பாவிட்டால் அதற்கான தண்டிப்பும் தெரிந்தது.
வட்டிக்காரரின் வார்த்தைகளில் அன்பு மொத்தமும் அழிந்துவிட்டது. ஆணவமும் அகங்காரமும் அலங்கரித்து நின்றன.
அந்த அலங்கரிப்பு சக்கரையை முழுவதும் பாதித்தது. அன்பினால் இயங்கிய அவன் மனம் அடியோடு சரிந்துவிட்டது.
சரிந்ததைச் சரி செய்ய நினைக்காமல்,
அந்த அகங்கார அலங்காரத்தை சரிய வைக்க நினைத்து
அவனும் அந்த அலங்காரத்தை அணிந்து கொள்ள துடித்தான்.
அகங்கார அலங்காரத்தை அவன் அரிதாரமாகப் பூசிக்கொண்டான்.
அந்த அரிதாரம் அரியதாக இருந்தது.
ஒரு நாள் அவன் பூசிக்கொண்ட அரிதாரத்தை அனைவருமே பூசிக் கொண்டனர்.
நாட்கள் செல்லச் செல்ல, அந்த அரிதாரத்தைப் பூசிக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது. பணம் மட்டுமே உயர்ந்ததாகவும் மனம் எல்லாம் தாழ்ந்ததாகவும்
இருந்தது.
பணத்தின் முக்கியத்துவம் அதிகமாக இருப்பதால் மிருதர்கள் மிகுந்து விட்டனர்.
மனிதனை மனிதனே தின்றுவிட்டான்.
இவ்வாறே தொடர்ந்து மொத்த மனிதமும் அடியோடு சாய்ந்துவிட்டடது. உலகம் சிறிது சிறிதாக அழிந்து கொண்டே வந்தது.
இவற்றை எல்லாம் பார்த்த சக்கரை, என்ன செய்வது என்று தெரியாமல் சிதைந்து போனான்.
எதைச் சரிய வைக்க அவன் நினைத்தானோ, அதுவே மொத்தமாய் வளர்ந்து நின்றது.
அன்பைத் தேடி அலைவாரும் இல்லை, அன்பைக் கொடுப்பாரும் இல்லை.
இவற்றை எல்லாம் தாங்க முடியாத இப்புவியானது சூரியனுக்கு அருகாமையில் சென்று தன்னை முழுவதும் எரித்துக் கொண்டது. அதாவது இப்பிரபஞ்சம் தன்னில் உள்ள மனிதர்களை எல்லாம் எரித்துவிட்டது . அதன் ஒரு துகள் மட்டும் மிச்சம் இருந்து மீண்டும் காலத்தையும் பிரபஞ்சத்தையும் இயக்கியது. அதில் அன்பு மனிதநேயத்தைப் பிரசவித்தது. அன்பு மட்டுமே ஆதாரமாக அந்த பிரபஞ்சத்தில் நிலையாக இருந்தது.
சக்கரையின் மாற்றம் தான் இவ்வளவிற்கும் காரணம் என்றால் அவனின் மாற்றத்திற்கு காரணமான சிலர்தான் இவற்றுக்கு எல்லாம் முக்கிய காரணமாக இருந்தார்கள்.
சிலரின் வார்த்தைகள் பலரின் வாழ்க்கையை மொத்தமாக சீரழித்துவிடும். ஒரு சிலரின் வார்த்தைகள் சிலரின் வாழ்க்கையைச் சீர்தூக்கியும் விடும்.
வார்த்தைகள் தான் பலரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
சீர்தூக்கும் வார்த்தைகளாகவே அனைவரின் வார்த்தைகளும் இருக்கட்டும்.
மனிதநேயமும் அன்பும் மட்டுமே இவ்வுலகை ஆளட்டும்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்