Subi
சிறுகதை வரிசை எண்
# 64
சிட்டும்மா
**************
அவ்வளவு கோபமாக இருந்தது எனக்கு அன்று. ரேகா எப்போதும் போல வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் அதைச் சொல்லச் சொல்ல உடல் மட்டும் எனக்கும், அவளுக்கும் அழுகையில் குலுங்கியது. நல்ல வேளையாக அம்மா அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. மாவு மெஷினுக்கு கோதுமை அரைக்கச் சென்றிருந்தாள். அவளைத் தேற்றும் வழி என்னிடமும் இல்லை. இருந்தாலும் அவள் அழுவது அவளுக்கு ஏதோ ஒரு ஆறுதலைத் தந்தது என்று மட்டும் புரிந்தது. அவளின் கேவல் நிற்கும் வரை எனக்குப் பதட்டமாக இருந்தது. "அம்மா வேறு வந்துவிட்டால்.?" படிக்காமல் என்ன அரட்டை என்று கத்தித் தீர்த்து விடுவாள்.
நானும், ரேகாவும் பத்தாம் வகுப்புத் தோழிகள். ஆறாம் வகுப்பில் இருந்து நாங்கள் ஒரே பள்ளியில் சேர்ந்தே படித்தாலும் இந்த வருடத்தில் ஒரே செக்ஷனில் இருந்ததால் இன்னும் நெருக்கமான தோழிகளாக மாறியிருந்தோம். இந்த வருடம் பத்தாம் வகுப்பு என்பதால் நாங்கள் இருவரும் குரூப் ஸ்டடி செய்து கொண்டு இருந்தோம். அருகருகே இருக்கும் தெருக்களில்தான் இருந்தோம். சைக்கிளில் சென்றால் இருபது நிமிடம் . வண்டி என்றால் பத்து நிமிடம். நானும் அவளும் மாறி மாறி போய்க் கொள்ளலாம். குரூப் ஸ்டடி என்றாலே அரட்டை இருக்கும் என்று என் அம்மாவும், அவள் அம்மாவும் திட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். எப்படியோ கெஞ்சிக் கெஞ்சி சம்மதம் வாங்கிப் படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் ரேகா அந்தச் சம்பவத்தை ஒருநாள் கூறினாள்.
இன்று சனிக்கிழமை என்பதால் ரேகா எப்போதும் ஐந்து மணிக்கு வருபவள் நான்கு மணிக்கே வந்துவிட்டாள். சனி, ஞாயிறு மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கிப் படிக்கலாம் என்று பேசி வைத்திருந்தோம். அவ்வப்போது அம்மா சந்தேகப்படுவது போல எங்கள் ஸ்கூல் பற்றிய விஷயங்களையும், பையன்கள் வம்பிழுப்பது பற்றியும் பேசுவதுண்டு. ஆனால் அம்மா கவனத்தை இங்கேதான் வைத்திருப்பாள் என்பதால் அதிகநேரம் அதெல்லாம் பேச முடியாது.
ரேகாவின் அம்மா, அப்பா இருவரும் அரசு அலுவலகத்தில் வேலை செய்தனர். நல்ல சம்பளம் என்பதால் அவளுக்கு எந்தக் குறையுமில்லை. கேட்டதை வாங்கித் தருவார்கள். அவளுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் நாங்கள் படிக்கும் ஸ்கூலிலேயே. ரேகாவையும் எங்கள் வீட்டுக் குழந்தை போலத்தான் நடத்துவாள் அம்மா. அவள் வரும் போது அவளுக்கு பிடித்த ஸ்வீட் கூட அம்மா செய்து தருவாள். அவள் அம்மாவிற்கு நேரம் இருக்காது என்பதும் ஒரு காரணம். அதுவும் அல்லாது ரேகாவின் அம்மா தானும் பல நேரம் அலுவலகத்தில் இருந்து வரத்தாமதாமாவதால் இங்கே நம்பி விடுவதாக சொல்லி விட்டுப் போவார்.
ரேகா நல்ல நிறம் இல்லை. மாநிறம் தான். இருந்தாலும் முகம் அவ்வளவு லட்சணமாக இருக்கும். அப்படியே அவள் அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள் என்று அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள். அவளுடைய அப்பாவுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடிக்கமாட்டார் என்றாலும் வெள்ளிக்கிழமை இரவு அன்று அவருக்கு வார இறுதியைக் கொண்டாட வேண்டும். அன்றைய இரவு அவருக்கு மட்டன் , சிக்கன் இப்படி ஏதாவது சாப்பிட வேண்டும். ரேகாவின் அம்மா வரத்தாமதாகும் என்பதால் இவரே ரோட்டு முனியாண்டி விலாசில் வாங்கி வந்து சாப்பிட்டுக் கொள்வார்.
நேற்றிரவு வெள்ளிக்கிழமை என்பதால் அவர் வழக்கம் போல
குடித்துக்கொண்டு இருந்திருக்கிறார். எங்களுடன் படிக்கும் வாசு எங்களுக்கு நல்ல நண்பன். எந்தச் சந்தேகங்களைக் கேட்டாலும் பள்ளியில் பொறுமையாக சொல்லித் தருவான். நேற்று நாங்கள் இங்கிலீஷ் கிராமர் படித்துவிட்டுக் கிளம்பும் போது ரேகா அவனிடம் நோட்டை வாங்கிக் கொள்ள மறந்து விட்டாள். அவன் அதைக் கொடுப்பதற்காக வீட்டுக்கு போயிருக்கிறான். வாசலில் காலிங் பெல் அடித்தவுடன் ரேகா வந்து பார்த்தவள் வாசுவுக்கு அப்பா குடிப்பது தெரியக்கூடாது என்று நினைத்து கதவைச் சாத்திவிட்டு அவனோடு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள். அவனும் மறுநாள் இங்கிலீஷ் டெஸ்ட் என்பதால் பத்து நிமிடங்கள் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
ரேகா வாசுவிடம் பேசிவிட்டு உள்ளே நுழைந்த போது அவள் அப்பா தட்டில் இருந்த மட்டன் காலியாகி இருந்தது. அவர் கண்கள் சிவந்து கோபத்தில் தலைக்கேறி இருந்தது. எப்போதும் குடித்தால் அவர் சத்தமாக ஏதாவது பேசி உளறுவது வழக்கம். மற்ற நேரங்களில் இருக்கும் இடம் தெரியாது. வெளியே போய் குடிப்பதற்கு இதுவே பரவாயில்லை என்று அம்மாவும் சில வருடங்களாக விட்டுவிட்டாள்.
"ரேகா?"
"சொல்லுங்கப்பா?"
"யாரது, வந்துட்டுப்போறது?"
"நம்ம சுப்ரமணி அங்க்கிள் வீட்டு வாசுப்பா… நான் அவன் கிட்ட இங்கிலீஷ் நோட்டு வாங்க மறந்துட்டேன். அதக் குடுத்துட்டு போறான்."
"இந்தத் தட்டையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் போடு."
"ம்ம், சரிப்பா!..." எடுக்கக் குனிந்தவள் கைகளை கெட்டியாகப்பிடித்துக் கொண்டார்.
எப்போதும் போலில்லாமல் பிடி இறுக்கமாகத் தோன்ற ரேகாவுக்கு என்னவோ போலிருக்க
"கைய விடுங்க" என்று வெடுக்கென்று உதறினாள்.
"ஓஹோ, வாசு கூப்டா மட்டும் தான் போய் பேசுவியா, நான் கூப்டா பேச வரமாட்டியா?"
உடம்பின் சர்வமும் ஒடுங்க ஒரு விதமான கோரக்கத்தலுடன் வார்த்தைகள் வராமல் தடுமாற அவள் கேவியபடி கேட்டிருக்கிறாள்.
"என்ன பேசறீங்க நீங்க? "
"உன் ப்ரண்ட்ஸ்ட்ட மட்டும் தான் போவியானு கேட்டேன்? "
"அச்சோ, அப்பா என்ன பேசறீங்கனு உங்களுக்கேத் தெரியலியா? இருங்க நான் அம்மா வந்தா சொல்லி வைக்கறேன். ஏன் உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுது?" என்று அலறிவிட்டு அழுதுகொண்டே இன்னொரு அறைக்குள் சென்று கதவைச் சார்த்திக் கொண்டிருக்கிறாள் ரேகா.
அப்பாவை எப்படி ஹேண்டில் செய்வது என்று புரியவில்லை. அவர் முகத்தில் இனிமேல் எப்படி விழிப்பது. இனிமேல் எப்படி இங்கே நிம்மதியாக இருப்பது. என் வீடே எனக்கு இப்படி அந்நியமாகிப் போகியிருக்கிறது. அம்மாவிடம் இதை எப்படிச் சொல்வது.. அம்மாவிடம் சொன்னாள் தாங்குவாளா? பாவமாக இருக்கிறது அம்மாவை நினைத்தால். வேறு யார் வம்பிழுத்தாலும் அம்மா வந்து என் கிட்ட சொல்லிடு கண்ணு என்பாளே… வீட்டுக்குள்ளே இப்படி நடந்ததை அம்மாவிடம் எப்படிச் சொல்வது. இதனை மறைப்பதுதான் எப்படி… கேள்விகள் துளைக்க கோபம் உந்த பென்சில் சீவ வைத்திருந்த பிளேடை எடுத்து இடது கை முழுவதும் முழங்கையில் இருந்து உள்ளங்கை வரை கோடுகளைப் போட்டுக் கீறினாள். ரத்தம் சொட்டச்சொட்ட அம்மாவிற்குத் தெரிந்தால் அழுவாளே என்று அவசர அவசரமாக கதவைத்திறந்து சமையல் அறையில் இருந்த கரித்துணியை எடுத்துத் துடைத்து விட்டு அதைக் கொல்லையில் கொண்டு போய் வீசிவிட்டு வந்து கைகளில் கொஞ்சம் மஞ்சளை எடுத்து அப்பினாள். ஆனாலும் எரிச்சல் நிற்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் மீண்டும் வாளியில் இருந்த தண்ணீரில் கைகளைக் கழுவி சமையல் அறையில் அம்மா வைத்திருக்கும் தீக்காயக் களிம்பைத் தடவிக் கொண்டாள்.
அந்தக் காயத்துடன் என் வீட்டில் வந்துதான் அழுது என்னிடம் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள் ரேகா. எனக்கும் அழுகையும் கோபமும் தலைக்கேற அவளைத் திட்டினேன். இப்படிக் கூட அப்பா இருப்பாராடி என்று கேட்டுவிட்டு உடல் நடுங்கி அழுதேன். எரிச்சல் தலைக்கேற நீ எதற்கு பிளேடில் கிழித்துக் கொண்டாய்? அவர் கையை கிழித்து விட்டு இருக்கணும் என்று திட்டினேன்.
"ப்ளீஸ், சித்து நானே என்ன பண்றதுனு புரியாமல் குழப்பத்தில் தாண்டி வந்து உன்ட்ட சொல்றேன், நீ வேற இப்படிப் பேசற?"
"அதுக்குப் பிறகு அம்மா வந்து ஏதும் கேக்கலியாடி உன்ட்ட? "
"இல்லடி, நேத்து நைட் அம்மா வரும் போது நான் தூங்கற மாதிரி புரண்டு புரண்டு நடிச்சிட்டேன். நிறைய முறை எழுப்பினாங்க. எழுந்துக்கல நானு. தங்கச்சிய மட்டும் எழுப்பி சாப்பாடு கொடுத்துட்டு எல்லாரும் தூங்கிட்டாங்க. அப்பா வேற ஹாலில் ஏதோ உளறிட்டு இருந்தார்? "
"இன்னொரு முறை அந்தாள அப்பான்னு சொல்லாத? "
"என்னடி பண்ணச் சொல்ற, அப்படித்தானே கூப்பிடுவேன் இத்தனை நாளும்?"
"எனக்கு ரேகாவைப் பார்க்க பாவமாக இருந்தது. கட்டிக்கொண்டு அழவேண்டும் போலத் தோன்றியது. இனிமேல் எங்கள் வீட்டில் இருந்துக்கறியா என்றுசொல்லிவிடலாம் போல தோன்றியது. ஆனால் எல்லாரும் கேட்டால் என்ன பதில் சொல்வது என்று புரியவும் இல்லை."
"இப்ப என்னடி பண்றது? இதை யாரிடம் சொல்வது? " என்றேன்.
"அதான் எனக்கும் புரியல? "
"என் அம்மாட்ட வேணா சொல்லுவமா ரேகா? "
"அய்யோ வேணாம்டி, எங்கப்பாவத் தப்பா நினைப்பாங்கல்ல? "
"ச்சைய், எனக்கு நீ அப்படி சொல்றதே எரிச்சலா இருக்கு? "
"இன்னிக்கு காலைல எழுந்த பிறகு அப்பா என்னத் திரும்பி கூப்டாருடி? "
"எதுக்கு திரும்பி இந்தக் கை முழுக்க கிழிக்கவைக்கலாம்னா? "
இல்ல, சித்து "நேத்து நைட் நான் என்ன பேசினேன்னு எனக்குப் புரியல? நீ ஏன் கத்துனே? இனிமேல் அப்படிப் பேச மாட்டேன்னாரு."
"இனிமேல் அப்படி பேசமாட்டேன்னா அவருக்குத் தெரிஞ்சு இருக்கும்னு தான அர்த்தம் "
"தெரில, அவர் முகத்தை பாத்துப் பேசவே எனக்கும் புடிக்கல. அதனால சரிப்பானு சொல்லிட்டு ரூமுக்கு போயிட்டேன் டி. "
"ஆனால் இனிமேல் அப்படி நடக்காதுனு என்ன நிச்சயம் ரேகா? "
"எதுவுமே எனக்குப் புரியல புரியல, கேள்வி கேட்டுக் கொல்லாத சித்து நீயும்? "
புரியாத பாடம் போல இதற்கு தீர்வும் தோன்றவில்லை. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை.
மறுநாள் மாலை ரேகா வந்த போது
நாங்கள் படிக்கவில்லை. மீண்டும் நடந்தது பற்றியே பேசினோம்.
நேற்றிரவு அப்பா ஏதேனும் பேசினாரா
ரேகா என்றேன். என் அம்மாவின் கண்ணில் மண்ணைத் தூவுவது சிரமமாக இருந்தது. ஒரு பக்கம் படிப்பதுவும் பிறகு அது பற்றி விவாதிப்பது போலவும் குசுகுசுவெனப் பேசிக் கொண்டோம்.
" எதுவுமே பேசலடி. ஆனால் அம்மா வேலையா இருந்தாங்க. அதனால் அப்பாவுக்கு டிபன் எடுத்துக் குடுன்னாங்க. எனக்கு பயத்தில் உடம்பெல்லாம் நடுங்குச்சு. தட்டை எடுத்துட்டுப் போகும் போதே நடுஹாலில் கை தவறி போட்டுட்டேன்."
"அச்சச்சோ, அப்பறம்? "
"அம்மா என்ன இதக்கூட செய்யத் தெரிலயான்னு திட்டிட்டாங்க. எல்லாம் க்ளீன் பண்ணி நானே வச்சிக்கறேன் போன்னு அனுப்பிட்டாங்க. நானும் இதான் சாக்குனு ரூமுக்குள் வந்து
படிக்கற மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன்.
ஆனால் ஹார்ட் மட்டும் நான் தப்பு பண்ற மாதிரி படபடனு துடிச்சது சித்து. எனக்கு இந்தப் பிரச்சினையில் இருந்து மீள வழி இல்லையாடி? இப்படி தினமும் பயப்படறது தான் எனக்கு ரொம்ப அழுகை அழுகையா வருது. "
"இனிமேல் அம்மா வரும் வரைக்கும் நீ
துணைக்கு வந்து படிக்கறியாடி எங்க வீட்ல? "
"ஏய், என்னடி இப்படிச் சொல்ற? நானே காய்ச்சல் வந்துருமோங்கற மாதிரி நீ சொன்னதில் இருந்து பயந்து போய் இருக்கேன். அதுவும் இல்லாமல் அங்கே அம்மாவும் இல்லன்னு, நீங்க இங்கே படிங்கம்பாங்களே அம்மா. இப்ப என்ன செய்றது? "
"ஏய், ப்ளீஸ் டி எனக்கு வேற வழி தெரியல. கொஞ்ச நாள் இப்படி ஓட்டுவோம். நான் ஆன்ட்டி கிட்ட கேட்கிறேன். தங்கச்சி தனியா இருக்க அழறா கொஞ்ச நாள் மட்டும் ஆன்ட்டி னு சொல்றேன். "
"என்ன பிள்ளங்களா? ரொம்ப நேரமா பேசிட்டிருக்காப்லயே தெரியுதே? படிக்கறீங்களா இல்லியா? மார்க் வந்தா தெரிஞ்சிடும் நீங்க குரூப் ஸ்டடி பண்ண லட்சணம் எல்லாம். " அம்மா கத்திக்கொண்டே எங்களிடம் வந்தாள்.
நாங்கள் விட்டுப் போன பாடப்பகுதியை
மீண்டும் படிப்பது போல மறுபடி நடித்தோம்.
ரேகா அம்மாவிடம் விழுந்து புரண்டு ப்ளீஸ் ஆன்ட்டி ப்ளீஸ் ஆன்ட்டி எனக் கெஞ்சி சம்மதம் வாங்கி விட்டாள்.
பள்ளி விட்டு வந்து ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விட்டு நான் அவள் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அம்மா இப்படி விடுவாள் என்று நானும் யோசிக்கவில்லை. எனக்கு அவர்கள் வீட்டுக்குச் செல்லவே அருவருப்பாக இருந்தது.
ரேகா வீட்டுக் காலிங்பெல்லை அழுத்தி விட்டுக் காத்துக் கொண்டிருந்தேன்.
அவளுடைய அப்பா தான் நின்று கொண்டிருந்தார். அவள் சொன்ன பிறகு அன்று தான் அவரைப் பார்க்கிறேன்.
எப்போதும் வந்தால் "வாம்மா ரேகா ரேகா யார் வந்திருக்கா பாரு" என்று
அழைப்பார். என்னையும் இப்படி நினைத்துப் பழகினாரோ என்று படபடத்தது. ரேகாவின் நிலைமை எனக்கு இப்போது புரிந்தது.
"அங்க்கிள் ரேகா? "
"உள்ள இருக்கா… வரச்சொல்றேன்" என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார்.
நாங்கள் பேசியது இவருக்கு எப்படியும் தெரிந்திருக்குமோ? அதனால் தான் இப்படிப் பேசிவிட்டுச் செல்கிறார்.
ச்சே ச்சே அப்படி இருக்க வாய்ப்பில்லை
என்று என்னை சமாதானம் செய்து கொண்டேன்.
ரேகா வந்தவுடன் அவளைத் திட்டிவிட்டேன்.
"நான் இங்கே வரும் முன்
ரெடியாகிடுடி. நம்ம மாடிக்குப் போய் படிச்சுக்கலாம் " என்றேன்.
"என்னடி உனக்கும் பயமாருக்கா? "
"தெரில. அவர்ட்ட பேசவே எரிச்சலாருக்கு. உனக்காக வரேன்."
"என் நிலைமைய யோசிச்சயா சித்து?
இப்போ புரியுதா உனக்கு.? "
"சரி விடு. நம்ம மேலே போலாம். வீட்டுக்கு போனா திடீர்னு அம்மா என்ன படிச்சீங்கனு கேள்வி கேட்பாங்க. அதுக்காகவாச்சும் கொஞ்சம் படிச்சிட்டுப் போறேன்."
இப்படிப் பேச்சும் பாதிப் படிப்புமாக
அந்த வாரம் கழிந்தது. மாடியில் சென்று கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பினோம். வார இறுதி வந்தவுடன் மறுபடியும் ரேகாவிற்குப் பயம் அதிகமானது.
வெள்ளிக்கிழமை பள்ளியிலேயே புலம்ப ஆரம்பித்து விட்டாள்.
அவளுக்குப் பதட்டம் அதிகமானால் உள்ளங்கைகள் வியர்த்து ஊற்ற ஆரம்பித்து விடும். ஸ்கூலில் டீச்சர்கள் யாராவது திட்டினாலே கர்ச்சீஃப் முழுவதும் நனைந்து விடும். இன்று
காலையில் இருந்தே அவளுக்குப் பதட்டம் குறையவில்லை.
"ஏய், சித்து நான் எங்காவது ஓடிப் போயிரட்டுமாடி? "
"அடிப்பாவி , ஏன் இப்படி எல்லாம் பேசறே .. எங்கே போவ? "
"தெரிலடி? "
"எங்காவது என்ன மாதிரி ஓடி வர்றவங்களுக்கு ஹாஸ்டல் இருக்கும்ல? "
எனக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
" வேணாம் ரேகா. நான் இன்னைக்கு சாயந்திரம் உங்க வீட்டுக்கு வரேன். எதுவும் போட்டுக் குழப்பிக்காதே. "
மாலை ஐந்து மணி. நான் காலிங் பெல் அடிக்காமலே ரேகா வாசலுக்கு வந்து தயாராக இருந்தாள்.
நான் அவளுடைய அப்பா எங்கே என்றேன். ஜாடையில் கதவை மெதுவாக திறந்து காண்பித்தாள். அவர்
எல்லாவற்றையும் ரெடியாக டீபாயில் வைத்துக் கொண்டிருந்தார்.
நாங்கள் இருவரும் மிகவும் மெதுவாக
பூனை போல நடந்து மாடிப்படி ஏறி மேலே சென்று விட்டோம். இன்று படிக்கவேண்டாம் என்று உட்கார்ந்து
மெதுவாக ஏதாவது பேசுவோம் என்று பேசிக்கொண்டு இருந்தோம். இருந்தாலும் இருவர் மனமும் ஒன்றை மட்டுமே சுற்றிக்கொண்டு இருந்தது.
அரை மணி நேரம் கழித்து ரேகாவை
அவளுடைய அப்பா கீழே இருந்து அழைத்தார்.
"ரேகா, இங்கே வா? "
ரேகாவின் உள்ளங்கைகளில் மீண்டும் வியர்வை சொட்டியது. எனது கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
"ஷ்ஷ்ஷ், பயப்படாமல் போ? "
"இன்னைக்கும் அப்படிப் பேசினா என்னடி பண்றது? நான் காது கேட்காத மாதிரி இருந்துக்கவா? "
"நோ, நீ போ. எதுனா பேசினா பாத்துக்கலாம்."
மெதுவாக இறங்கி ரேகா கீழே போனாள்.
மாடியில் இருக்கும் ஜன்னலில் இருந்து பார்த்தால் கீழே ஹால் தெரியுமாறு அவர்கள் வீடு இருந்தது. அதனருகே மணல், கற்கள் என்று வேலை செய்ய கொட்டி வைக்கப்பட்டிருந்தது பெரிய திட்டாக. அவள் சென்ற பிறகு நான் யாரும் அறியாதவாறு மெதுவாக நகர்ந்து அந்த இடத்தில் அமர்ந்து கொண்டேன்.
" ரேகா, என்ன பண்ற? "
"சொல்லுங்கப்பா? "
"கிச்சன்ல இருந்து இன்னொரு ப்ளேட் எடுத்துட்டு வா."
அவளுக்கு திக்திக்கென அடித்துக் கொண்டது.
நான் மேலே இருந்து பொறுமையாக
பார்த்துக் கொண்டிருந்தேன். ரேகா இன்னொரு தட்டை எடுத்துக் கொண்டு வந்தாள். அவர் இன்னொரு தட்டில்
மட்டன் பீஸ்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். எடுத்து ரேகா கையில் கொடுத்து ஏதோ சைகை செய்தார். இவள் அருகே போகாமல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தாள். அவர் கண்கள் சிவந்து இருந்தது. எனது கைகள் மணலை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டன. தொண்டை விக்க ஆரம்பித்தது. என்னை அறியாமல் கத்திவிடுவேனோ என்று தோன்றியது.
நான்கைந்து நாட்களாகவே என் அப்பாவிற்கு வேலை அதிகமாக இருந்ததால் அவரை தினமும் இரவு நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் வேலை முடிந்து வருவதற்குள் நான் தூங்கிப் போயிருந்தேன்.
இன்று அவள் வீட்டில் இருந்து வந்ததில் இருந்து எனக்கு உலகத்து அப்பாக்கள் எல்லாரும் அப்படித் தானா என்று திடீரென்று தோன்றியது. முதல் முறையாக என் அப்பா மீதும் சந்தேகம் வந்தது. அப்பா இதற்குத் தான் நம்மைக் கொஞ்சுகிறாரா என்றெல்லாம் தோன்றியது. நேற்று கூட என் "சிட்டும்மாவ" ஏதாச்சும் சொன்ன அப்பறம் பாரு என்று அம்மாவிடம் சொல்லும் போது என் மேவையைக் கொஞ்சி முத்தி வைத்தாரே? "
"வயசுக்கு வந்த கொமரி அப்பனாவே இருந்தாலும் தள்ளி நிக்கணும்னு அம்மா இதற்குத்தான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாளா.?" எத்தனை நாட்கள் அம்மா திட்டினால் கூட அப்பாவோடு சேர்ந்து அவர் கால்மேல் என் கால்களைப் போட்டுத் தூங்குகிறேன். இனிமேல் அதல்லாம் செய்யக்கூடாதா? அப்பாவின் தோள்களில் ஏறி கரகரவென்று சுற்றுவேனே? அதையெல்லாம் நிறுத்திவிட வேண்டுமா? நாங்கள் இருவரும் என்ன செய்வது என்ன செய்வது…அவள் அப்பா அப்படி நடந்து கொண்டது, என் அப்பா மீது சந்தேகம் வந்தது என்று மேலும் மேலும் குழப்பமாகவே இருந்தது. இப்போது எனக்கும் ரேகா போல பிளேடு எடுத்துக் கிழிக்கவோ இல்லை என்றால் சுவற்றிலாவது போய் டங்டங் என்று முட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது.
அப்பா இன்று இரவு வீட்டுக்கு வந்த பிறகு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புரியாமல் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
முதல் முறையாக அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு விஷயத்தை மறைக்கப் போகிறேன் என்பதே உறுத்தியது. அப்பாவிடம் மட்டுமாவது இதைப் பற்றி சொல்லலாம் என்றால் ரேகா கெமிஸ்ட்ரி மீது சத்தியம் வாங்கிக்கொண்டது கோபமாக இருந்தது.
அப்பா வீட்டுக்குள் நுழைந்தவுடன் "சிட்டும்மா" என்றழைத்தார். எனது பெயர் சித்ரா என்றாலும் நான் சிட்டு போல துள்ளி ஓடிக்கொண்டே இருக்கிறேன் என்று ஆசையாய் சிறுவயதிலேயே அப்பா வைத்த செல்லப்பெயர் அது.
"உனக்குப் புடிச்ச ஜாங்கிரி சூடா இருக்கும்னு வாங்கிட்டு வந்தேன்.. வாம்மா… அப்பா ஊட்டிவிடவா?"
எனக்கு அப்பாவிடம் வாங்கிக் கொள்ள முதல் முறையாக பயம் வந்தது. வேறு வழியில்லாமல் எழுந்து போனேன்.
"ம்க்கும். இன்னும் கொழந்த பாருங்க
கொமரியாகி இன்னும் ஊட்டிக்கிட்டு என்று எப்போதும் போல அம்மா திட்டிக்கொண்டே தட்டுகளை எடுத்து வந்தாள்."
“அவ எவ்வளவு வளர்ந்தாலும் எனக்கு குழந்தை தானடி” என்று அம்மாவிடம் சொன்னவாறே என்னிடம் பேச ஆரம்பித்தார்.
"என்ன சிட்டும்மா படிச்சிங்களா நீயும், ரேகாவும் இன்னிக்கு அவ வீட்ல.? "
எனக்கு அவர் கேட்டதற்குப் பதில் சொல்லவே தோன்றவில்லை. நான் திடீரென வெறிகொண்டவள் போல அப்பாவை அவர் கழுத்தோடு இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அழுதேன்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் என்னை விலக்கி "ஏம்மா, எதுக்கு இப்படி அழறே. என்னாச்சு, அம்மா ஏதாவது திட்டினாளா? ரேகாவோட சண்டை போட்டுக்கிட்டியா? ஸ்கூல்ல ஏதாவது பிரச்சினையா? எதுன்னாலும் அப்பாட்ட மறைக்காமல் சொல்லு சிட்டும்மா" என்றார்.
ஒண்ணுமில்லப்பா "ஐ லவ் யூப்பா" என்றேன்.
சுபி.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்