logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Velmurugan

சிறுகதை வரிசை எண் # 63


யார் மலடு? மதியத்தில் சுட்டெரித்த சூரியன் மாலைப் பொழுதிற்காக தனது வீரியத்தைத் தென்றலைக் கொண்டு குறைத்துக் கொண்டிருந்தான். காரீருள் மேகங்களோ குவியல்களாக சேர்ந்து மாலை பொழுதை அடைமழையில் நனைக்க தயாராகிக் கொண்டிருந்தன. அவ்வப்பொழுது மின்னலும் மின்னி மழையின் வரவை உறுதிச்செய்துகொண்டிருந்தன. வழக்கமிகு தலைநகர் மாலை நேரத்துச் சாலை நெரிசலில் ஆலையில் சிக்கிய கரும்பாகச் சிக்குண்டு மகிழுந்துலே அமைதிச் சுவரை எழுப்பிய வண்ணம் சரணும் மாலதியும் அமர்ந்திருந்தனர். இருள் சூடிய வான்வெளியில் பறவைக்குலாங்கள் கூட்டை நோக்கி பறந்தன. சாலையிலோ சாரைச் சாரையாக எறும்பின் படையெடுப்பைப் போல வாகனங்கள் பயணித்தன. நீர்த்துளிகளால் கணத்திருந்தன காரிருள் மேகங்கள் மழைத்தூறலை பெருத்த இறைச்சலோடு இறக்கின. 3 வருடமாக தான் அனுபவித்த வலியும் வேதனையும் சொல்லண்ணா துயரமும் மாலதியின் தொண்டைக்குழியில் சிக்கிக் கிடந்து மடை உடைந்த வெள்ளமாய் பொங்கி வெளியில் பெய்யும் மழையைப் போல உரக்க கதறி அழுதாள். 3 வருடம்….3 வருட நரக வேதனை. உற்றார் உறவினர், அக்கம் பக்கத்தார், தெரிந்தவர் தெரியாதவர், நண்பர்கள் என பலர் கேட்டக் கேள்விக்கு விடை தெரியாது திக்குமுக்காடி அவமானத்தால் கூனிகுறுகி தன் துயரத்தைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், அவள் வாழந்த வாழ்க்கை நரகத்தினும் கொடியது. கேள்வியாவது பொறுக்கலாம்; ஆனால், கசக்கும் காயைப் போல் கடிந்த சொற்களாலான வசைகளையும் பொறுத்து, மறுத்து, அதை வெறுத்து வாழ்ந்த மாலதியின் வாழ்க்கை நரகத்திற்கு ஒர் எடுத்துக்காட்டு. வெறுப்பை உமிழும் வசைச்சொல்லுக்கு மாலதி வேறேங்கும் செல்ல வேண்டியத்தில்லை; தனது அருகில் இருந்த மாமியாரே போதும். கத்தியின்றி இரத்தமின்றி பிறர் மனதைப் புண்படுத்துவதிலும் புறம் பேசி உறவுகளுக்கிடையே புகை மூட்டுவதும் தனது வாயால் ஒருவருக்குப் பாடைக் கட்டி சொற்களால் அவருக்கு வாய்க்கரிசி போடுவதிலும் மாலதியின் மாமியார் சரோஜா கைத்தேர்ந்தவர். “நல்ல நிலமா இருந்துச்சுனா, விதைச்ச உடனே அறுவடை ஆயிருக்கும். நட்ட விளைச்சல் தங்காமா வீணாப்போனாக் கூட பரவாயில்ல. உழுதும் உறுபடாத கரிசல் காட்டு நிலத்த வாங்கிப்போட்டுடேன். ஒன்னுக்கும் உதவாத வெறும் மண்ணாக இருக்குது!,” என்று குதர்க்கமாகக் குத்திக்காட்டி பொதுவில் பலமுறை பேசிய போது, மாலதியின் உள்ளம் எரிமலையாகக் குமறினாலும் “தனக்குத்தான் குறை உள்ளதோ” என்ற எண்ணத்தின் விளைவால் வாயை மூடி கண்ணீரைக் கரைப்புரந்தோடவிடுவாள். ஆனால், இன்று இந்தப் பழைய குப்பைகளை மாலதி கிண்டி கிளரும் பொழுது, அவளுக்கு அவள் மீதே ஆதங்கமும் வசைபாடிய வாய்களை இழுத்துத் தைத்துவிடவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கிருந்தன. இருப்பினும், காயப்பட்ட இதயம் ஆற காலம் கடக்கும் தானே. ஆனால், “எது எப்படியாக இருந்தாலும் இனி என்பாடுக்கு எள்ளளவும் கவலையில்லை!,” என்ற ஆணித்தரமான உறுதிநிலை தன் ஆழ்மனத்தில் கொண்டு வழிந்த கண்ணீரைக் தன் கரங்களினால் துடைத்து அருகில் மகிழுந்தைச் செலுத்திக்கொண்டிருந்த சரணைப் பார்த்தாள். குழப்பம் எனும் புதைமணலில் சிக்குண்டு அபயக்கரம் தேடும் அபலையாய் சரணின் மனம் பதைபதைத்துக்கொண்டிருந்தது. அது அவன் கண்களின் படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தது. முழுதாய் வெளுத்தும் முக்காடு ஏன் என்றதாற் போல் தன்னைத் தற்காக்க அவன் உள்ளம் அயறாது முயற்சி செய்தாலும், தன் தவற்றை உணர செய்வதிலும் அந்தத் தவற்றின் மூலம் குற்றவுணர்ச்சியை மேம்படுத்துவதிலும் சரணது அறிவு அவனைத் தயார்செய்துகொண்டிருந்தது. அவனது கண்கள் செய்வதறியாது நிலைக்குத்தி நின்றன. உள்ளத்தில் புயலும் குழப்பும் மாறி மாறி பேரிடர் நிகழ்த்திக்கொண்டிருந்தன. இதையெல்லாம் கண்டு, உணர்ந்த மாலதி சரணின், வலக்கையைப் பிடித்தவுடன் அவள் விரல்கள் சரணின் கண்ணீரால் நனைந்தன. “சாரி, டியர்.” என்று விம்மியபடி கூறினான் சரண். மாலதி அழுவது சரணுக்கு வழக்கம். ஆனால், சரண் மாலதி முன்பு அழுதது இல்லை. ஆனால், இன்று வழக்குநிலை மாறி மேற்கில் சூரியன் முளைப்பது போன்று, சரண் “ஓ!” என்று அழதான். மாலதி, “சரண், அழாதீங்க. கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நெனச்சிகோங்க. எல்லா வினை. உங்க வினை; என் வினை. ஊழ்வினை உறுத்த வந்தூட்டுது!,” என்று விரக்தியின் விளிம்பில் நின்று சொன்னாள். அதற்கு, சரண்,” இல்ல, மாலதி! இவ்வளவு காலமா இந்த ஊரும் உலகமும் உன்ன மலடினு சொல்லி தூத்துச்சே. இப்ப நான்தானே மலடு. உண்மையில நிலம் சுகமா இருக்கு, உழவந்தான் ஒன்னுமில்லாம இருக்கானு தெரியாம போச்சே! எப்படி மனசு வலிச்சிறுக்கும் உனக்கு!” என்று அழுதான். தன் குறைக்கண்டு கரையாமல், தன் மனைவிமேல் படர்ந்த கரைக்குத் தான் காரணம் என்பதை காலம் கடந்து அறிந்து சரண் வேதனை படுவது மாலதிக்கு அழுகை பீறிட்டு வந்தது. “விடுங்க, உலகத்த மாத்தமுடியாது. புள்ள பொறக்கலைனாலும் புள்ள பெத்துகலனாலும், பலியாடு ஆவுறது பொம்பளதான். சரி விடுங்க. அம்மாகிட்ட எப்படி?,” என்று மாலதி இழுத்தாள். சரண், “சொல்லிட போறேன்.,” என்று இரத்தின சுருக்கமாகச் சொன்னான். “பிரச்சன வந்தா பாத்துக்கலாம்!,” என்று மாலதிக்கு தைரியத்தை ஊட்டினான். மாலதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஆனால், தன் வீட்டில் பூகம்பம் வெடித்துக் குடும்பம் உடைந்துவிடபோகும் என்பதை அகத்திலே கணித்தப்படியே இருந்தாள். மாலை நேரத்து அடைமழை, அழுகை, ஆதங்க பேச்சு என நேரம் கடந்து சாலை நெரிசலையும் கடந்து வீட்டை நோக்கி கிளம்பினர். இரவு 7 மணிக்கெல்லாம் தனது மாலை வேளை கடமைகளை முடித்து, இரவு பூசையை முடித்துத் தொலைக்காட்சியின் முன் செய்தி பார்ப்பது சரோஜாவின் வழக்கம். சரணும் மாலதியும் சரியாக இரவு 7 ஆகுவதற்கு முன்பதாக வீட்டினுள் தலையைக் காட்டினர். மகனிடம் புன்முறுவலை பூத்தார். வயிற்றில் பூக்காத மருமகள் மாலதிக்கு, சரோஜா முகத்திலிருந்து புன்னகை கூட பூக்கவில்லை. சரண், கைக்கால்களைக் கழுவி நேரே வரவேற்பரையில் தன் தாய் முன்பு அமர்ந்தான். விசயம் ஆறபோடுவது அதன் கதைக்கதைப்பை இன்னும் கூட்டச்செய்யும். ஏங்கேங்கோ தன் உடம்பில் உள்ள மூலைமுடுக்குகளில் ஒட்டியிருந்த துணிச்சல்களைத் தட்டி எழுப்பி தாயிடம் முன் வந்து அமர்ந்தான். “அம்மா, இனிமேல எங்களுக்குப் பிள்ளையே பொறக்காதுனு டாக்டர் சொல்லிடாரு,” என்று சரண் சொன்னான். சொன்ன மறுகணமே, சரோஜா, “ போச்சா! எனக்கு வாரிசு இல்லாம போச்சா? என் குடும்பத்து வாழைக்குலை விடலயா? ஐயையோ, கரிசல் காட்டு நிலத்த உன் தலையில கட்டி உன் வாழ்க்கைய பாழாக்கிட்டேனே என் ராஜா! இவள மொத வெட்டிவிடு,” என்று சூடான எண்ணையில் போட்ட கடுகைப் போல வெடித்துப் படபடத்தார். மாலதிக்கும் சரணுக்கும் கையும் காலும் உதறி போய்விட்டன, அதிலும் குறிப்பாக மாலதிக்கு. இனிக்க இனிக்க பேசிய கணவன், தாயின் முதலை கண்ணீரில் மூழ்க்கிவிட்டானோ என்றெல்லாம் மாலதியின் மூளை அவளை யோசிக்கத்தூண்டியது. தாயின் சொல்லுக்குக் கடிவாளம் போடவில்லையெனில் உள்ளங்கள் பல உடைந்துவிடுமே என்பதை மனத்திற் கொண்டு சரண், “ பிரச்சின மாலதிக்கிட்ட இல்ல. என்கிட்டதான். அவள் தாய்மையோட இருக்கா. நான் தான் ஆண்மையற்று கிடக்கிறேன்.,” என்று சொன்ன மறுகணம் சரோஜாவின் புருவ வில் உயர்ந்து விரிந்தன. உண்மையை ஏற்காத சரோஜா, “ ஒழுங்கா, செக்கப் பண்ணியாடா? நீ நல்ல வித்துடா. உனக்கு இப்படிலா ஆகாதே!,” என்று ஒப்பாறி வைக்கதொடங்கி வைத்தார். அதற்கு, சரண், “ இல்லமா, செகண்ட் ஒபீனியன் கூட கேட்டுட்டேன். எனக்குதா பிரச்சின; அவளுக்கு இல்ல!,” ஆணித்தரமாகச் சொன்னவுடன் சரோஜாவின் ஓலம் இன்னும் அதிகரித்தது. “குறையுள்ள தன் மகனை நிறையான பெண்ணிற்கு தாரை வார்த்துவிட்டோமே!,” என்ற உண்மையை ஏற்காது, சரோஜா, “ எல்லா இவ வந்த ராசி. நீ நல்ல வித்துடா. இவளோட கலந்து எல்லாமே போச்சே!,” என்று பழிக்கல்லைப் பாவக்கல்லாய் மாலதி மேலே எறிய, மாலதி, தன் தலையிலும் மாரிலும் மாறி மாறி அடித்த வண்ணம் தரையில் அழுது புரண்டினாள். உண்மை வெளிச்சத்திற்கு வந்தும் குற்றவாளி என்று குற்றஞ்சாற்றப்ப்பட்டால் என்ன செய்வது? தன் தாய் மீண்டும் தன் மனைவியைக் குறைச்சொல்வதைப் பொறுக்காத சரண், “அம்மா, நிப்பாட்டு. எங்களுக்கு இனிமே குழந்த பொறக்காது. அதற்கு நாந்தான் காரணம். இதா சாட்சி!,” என்று மருத்துவக் கோப்புகளை மேசையில் வைத்துவிட்டு மாலதியை ஆற்றுப்படுத்தினான். உண்மையை உணர சில நொடிப்பொழுது தேவைப்பட்டது அனைவருக்குமே. அமைதி மெல்ல மெல்ல சுவர் எழுப்பிய வண்ணம் இருந்தது. பிரமை பிடித்தவர்களைப் போல மூவரும் மூன்று கோணத்தில் அமர்ந்திருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு இப்படியே. அமைதிச்சுவரை உடைத்தான் சரண். “அம்மா, டாக்டர் 2 வழி சொன்னாரு. ஒன்னு, நாங்க ரெண்டு பேரும் தத்து எடுக்கனும். இல்ல, இன்னொன்னு மாலதிக்கு வேற ஆளோட விந்தணுவ நன்கொடையா வாங்கி, செயற்கை முறையிலே கருத்தரிக்க செய்யலாம்” என்று கூறியவன் தான், சரோஜா, கோபக் கணலின் உச்சிக்குச் சென்றுவிட்டார். உடனே, “ என்னடா சொன்ன? தத்து எடுத்து இந்தக் குடும்பத்தோட வழிவழி இரத்தத்தைக் கெடுக்கப்போறியா? எவனோ ஒருவனோட விந்துவ இவளுக்கு விதைச்சுதான் புள்ள வரணும்னா அப்பேற்பட்ட புள்ளயே வேணாம். அதுக்கு நீங்க புள்ள இல்லாமே ஒன்டிக்கட்டையாவே இருந்துருங்க. கோவில் குளத்துக்குப் போங்க, சாமியே வேண்டிக்கோங்க. கண்டிப்பா பிள்ளை பிறக்கும்” ஆத்திரம் கலந்து குதர்க்கத்தோடு சொன்னார் சரோஜா. “ஏம்மா, உன் புத்தி இப்படி இருக்கு. சாமியே வேண்டிக்கிட்டா புள்ள ஆகாயத்துலேந்து விழுந்திடுமா? நாமும் முயற்சி செய்யனும். அதான், நாங்க செய்றோம்னு சொல்றேன்”என்று தன் தரப்பு நியாயத்தை முன்னிறுத்தி தன்னிலையை நிறுத்தினான். அதற்கு சரோஜா, “தத்து எடுக்குறதோ, விந்துவ மாத்தி கருத்தரிக்கதோ? இல்ல வேற எதாச்சும் செஞ்சி இந்தக் குடும்பத்தோடு குல பெருமைய கெடுக்கப்பாத்தீங்க அவ்ளோதான். இந்த சரோஜாவ பொனமாத்தான் பார்ப்பீங்க” என்று வீடே அதறக் கத்தினாள். இதைக் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்தனர் சரணும் மாலதியும். இருவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மாலதி குலுங்கி அழுதாள். அத்தையின் கொடூர வார்த்தைகள் அவளைச் சித்தரவதைச் செய்தன. தன் மூளை வெடிக்கும் அளவுக்கு அழுந்தப்பட்ட மாலதி, “அத்த, ரொம்ப நல்லா இருக்கு! இவ்ளோ காலமா நான் மலடினு நீங்க நெனசீங்க, ஊரு நினைச்சிச்சு. நேத்து டாக்டர் செக்கப்ல உங்க பையன் மலடன்னு தெரிஞ்சிருச்சி. ஆனா, இப்பதான் தெரிஞ்சிருக்கு உண்மையிலே யாருனு மலடுனு! இப்படி உங்க கிட்ட ‘சீ’ பட்டு வாழ்ற வாழ்க்கைய வாழ்றத விட உங்க மகன வெட்டிவிட்டு நான் வாழ்ந்துக்குறேன்” உரக்கக் கத்தி சொல்லிவிட்டு அறைக்கு ஓடிவிட்டாள். உடன், சரணும் ஓடினான். முகத்தில் ஈயாடாமல் விழிகள் நிலைக்குத்தியபடி அமர்ந்திருந்தார் சரோஜா.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.