logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

வே.சங்கர்

சிறுகதை வரிசை எண் # 60


மரணநாள் வாழ்த்துகள் வே.சங்கர் வெள்ளைநிறச் சீருடை அணிந்திருந்த நர்ஸ் அவனது பெயரைச் சொல்லி அழைத்தாள். ”பிரசவ அறை” என்ற போர்டைப் பார்த்தவாறு வெளியில் காத்திருந்த வான்மதியன் தன் பெயரைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான். இருக்கையை விட்டு சாவகாசமாக எழுந்தான். கதவைத் திறந்து அனுமதித்தாள் அந்தப் பெண். உள்ளே நுழைந்தான். அறையின் வெளிச்சம் கண்களை உறுத்தாமல் இருந்தது, ஜன்னலுக்குத் தொங்கிய திரைச்சீலை அழுக்கில்லாமல் பளிச்சிட்டது. மெல்லிய மருந்து வாசனை அவனது நாசியைத் தடவியது. சிலம்புமதி, புதிதாகப் பெற்றெடுத்த குழந்தையின் அருகில் களைப்பாகப் படுத்திருந்தாள். அவளை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டான். அவள் உதடுபிரியாமல் சிரித்தாள். சற்று தள்ளி தொட்டிலில் வெள்ளைநிறத் துணிகொண்டு சுற்றிக்கிடத்தப்பட்டிருந்த குழந்தையைப் பார்வையால் சுட்டிக்காட்டினாள். அதிகாலை நேரத்துப் பனித்துளி போர்த்திய ரோஜா நிறத்தில் இருந்தது அந்தப் பெண்குழந்தை. நெற்றியில் 22.3.2089 என்று மெல்லிய கோடுபோல் எழுதப்பட்டிருந்தது. நெற்றியை ஒருமுறை சுருக்கி விரித்தது குழந்தை. ”குழந்தைக்கு ‘ஒலிவாணி’ என்ற பெயரைத்தானே பதிவு செய்திருக்கிறாய்?” என்று கேட்டாள். ”ஆம்” என்பதுபோல் தலையை அசைத்தான். ”இன்னிக்கு லீவ் போட்டிருக்கேதானே?” என்று கேட்டாள். “ஆம், ரெண்டு நாளைக்குச் சேர்த்துப் போட்டிருக்கேன்” “எதுக்குத் தேவையில்லாமல்?” என்றாள். ”நாளைக்கு அப்பாவை வழியனுப்பனும். நாள் முடிஞ்சிருச்சு” என்றான். “ஓ, அப்படியா! என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லிடு” என்றாள் உற்சாகமாக. குழந்தை எதையோ நினைத்துக் கொண்டு உதடுகுவித்து சிரித்தது. பார்க்க அழகாக இருந்தது. ”நாளை அப்பாவை அனுப்பி வைத்துவிட்டு வருகிறேன். டாக்டரிடம் கேட்டுவை. எப்போது இங்கேயிருந்து கிளம்பலாம் என்பதை” என்றான் ”சரி” என்று தலையை அசைத்தாள். குனிந்து குழந்தையின் நெற்றியில் உதடுகளை ஒத்தியெடுத்தான். குழந்தை ஒலிவாணி நெளிந்தாள். அறையைவிட்டு வெளியே வந்தான். பொதுப்பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். சாலை எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தது. எப்போதும் இப்படித்தான் இங்கே. யாரும் எதற்காகவும் அலட்டிக்கொள்வதில்லை. அவரவர் தங்களது வேலையைச் செய்வதும், உற்சாகமாக உரையாடுவதும், நிம்மதியாகத் தூங்குவதுமாக இருக்கிறார்கள். தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு குட்டிக்கவிதை புத்தகத்தை எடுத்து, விட்ட இடத்திலிருந்து வாசித்தான். ஒலியெழுப்பாமல் வந்துநின்றது பேருந்து. கூட்டமாக இருந்தால் அடுத்த பேருந்தில் செல்லலாம் என்று நினைத்திருந்தான். கூட்டம் இல்லாமல் இருந்தது. உள்ளே ஏறியதும் இரண்டாவது சீட்டில் அமர்ந்திருந்த பெண் அவனது நெற்றியைப் பார்த்துவிட்டுச் சிநேகமாகச் சிரித்தாள். வான்மதியனும் அந்தப் பெண்ணின் நெற்றியைப் பார்த்துவிட்டுப் பதிலுக்குச் சிரித்தான். இருவர் அமரும் இருக்கையில் சற்று நகர்ந்து உட்கார்ந்து வான்மதியன் அமர இடம்கொடுத்தாள். பாடல்வரிகளே இல்லாமல் வெறும் இசைமட்டும் பேருந்து முழுவதும் நிறைந்து ஒலித்துக் கொண்டிருந்தது. மீண்டும் வாசிப்பதற்காக மூடிவைத்திருந்த கவிதை புத்தகத்தை வெளியே எடுத்தான். அவன் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி அதன் தலைப்பைப் பார்த்தார் அந்தப் பெண். தலைப்பு “இன்னொரு உலகம்” என்றிருந்தது. ”நான் இதைப் பலமுறை வாசித்திருக்கிறேன். மிக அருமையான புத்தகம். 63வது கவிதையைப் படித்திருக்கிறாயா? மரணநாளே தெரியாத உலகம் என்ற ஒன்று இருக்கிறதாம். அங்கே உள்ள மனிதர்கள் மட்டும் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறார்களாம். ஆனால், ஒரு விநோதம், அந்த உலகத்தில் உள்ள மற்ற எந்த உயிரினமும் அவர்களைப் போல் பரபரப்பாக இல்லையாம்” அவர் அதைப்பற்றி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே வந்தார். பேருந்து அலுங்காமல் குலுங்காமல் சென்றுகொண்டே இருந்தது. அவ்வப்போது நிற்பதும் ஊர்ந்து செல்வதுமாக இருந்தது. தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சிநேகமாகச் சிரித்துவிட்டு பேருந்திலிருந்து வெளியேறி தன் தந்தை இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான். அவர் தனது நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். வான்மதியனைப் பார்த்ததும் எழுந்து வந்தார். அவனது நெற்றியைத் தொட்டுச் சிரித்தார். அவனும் அவரது நெற்றியைத் தொட்டுச் சிரித்தான். ”நாளை என்னை வழியனுப்பக் கூடவே இருப்பாய்தானே?” என்றார். “கண்டிப்பாக” என்றான். எப்போதும்போல் அன்றைய தினமும் வெய்யில் மங்கி இருள் படிந்தது. எவ்வித அங்கலாய்ப்பும் இல்லாமல் அடுத்தநாள் காலை விடிந்தது. காலை உணவு தயார் செய்தான். சுவைத்து உண்டார். ரசித்துத் தேநீர் குடித்தார். தன்னுடைய நாட்குறிப்பையும் மற்ற பொருட்களையும் எடுத்து வான்மதியனின் கையில் கொடுத்தார். “நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆட்களுக்குச் சொல்லிவிடு”.என்றார். வான்மதியன் அதற்குரிய அலுவலகத்திற்குத் தெரிவித்தான். அரைமணிநேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும், அதிலிருந்து இரண்டு சீருடை அணிந்த அலுவலர்களும் வந்திறங்கினார்கள். அவர்களுக்குத் தேநீர் வைத்துக் கொடுத்தான். ஹாலில் இருந்த இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டே ரசித்துக் குடித்தார்கள். எழுந்து சென்று தந்தையின் அருகில் அமர்ந்தான். இன்றைய தேதி எழுதப்பட்டிருந்த அவரது நெற்றியை முத்தமிட்டான். பதிலுக்கு அவர் வான்மதியனின் நெற்றியில் முத்தமிட்டார். அவர் படுக்கையில் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் மார்பு மேலேறி இறங்குவது தெரிந்தது. பிறகு எவ்வித சலனமும் இல்லை. வந்திருந்த அலுவலர்களில் ஒருவர், தன் கையோடு கொண்டுவந்திருந்த கருவியால் அப்பாவைச் சோதித்தார். சென்றுவிட்டதாக உறுதியளித்தார். அந்த அலுவலர் வான்மதியனைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டார். பதிலுக்கு அவரது நெற்றியில் முத்தமிட நெருங்கியபோது கவனித்தான் அவரது நெற்றியில் நாளைய தேதி பொறிக்கப்பட்டிருந்தது. ”அட்வான்ஸ் மரணநாள் வாழ்த்துகள்” என்றான். அவர் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுத் தனது பணியை மும்முரமாக செய்யத் தொடங்கி இருந்தார். மற்றொருவர் மிகச்சிரத்தையுடன் அவருக்கு உதவிக்கொண்டிருந்தார். கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் வான்மதியன். முற்றும்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.