பெரியாண்டிச்சி அம்மனும், பாலு பெரீப்பாவும் (அ) பாலு பெரீப்பா
--------------------------------------------------------------------------
பாலு பெரீப்பா.
போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாலு பெரீப்பா இனி இல்லை என்பதை ஒரு இன்ச் அளவு கூட என்னால் நம்பவே முடியவில்லை.
ஆபீஸ் வேலைகளும் கழுத்தை நெறிக்க, சிறுகதைப் போட்டிக்கும் கடைசித் தேதி நெருங்க, நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து எழுதி வைத்திருந்த கதையைப் புரூஃப் பார்த்துத் திருத்திக் கொண்டிருந்தேன். திடீர் என அந்த அகால வேளையில் போன் அலறியது. ஸ்கிரீனில் சதீஷ் அண்ணா. வியப்புக் குறியுடன் பச்சையைத் தொட்டுக் காதில் வைத்தால் "அப்பா போயிட்டாருடா" என்று கலக்கமாகக் கேட்டது அவரது குரல்.
லேசாக என் உடம்பு உதறியது. எதிர்பாரா தருணத்தில் திடீரென வெடி வைத்துத் தகர்க்கப்படும் பாரம்பரிய மாளிகையொன்று சீட்டுக்கட்டு போல சரிந்து விழுவது போலத் தோன்றியது. பெரீப்பா எங்கள் அனைவரது குடும்பத்தின் ஆணி வேர். எனது ஆதர்ச நாயகன். எனது உந்துதல் சக்தி.
நான்காண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு மிக நீண்ட கோமாவில் இருந்தார் பெரியப்பா. அவ்வப்போது லேசாக நினைவு திரும்பினாலும் பேச முடியாமல், கண்களும், கைகளும், உதடுகளும் மட்டும் லேசாக அசைந்து கொண்டிருந்தன. பெரியம்மாவின் ஊன் உறக்கமற்ற கவனிப்பில் எப்படியும் பிழைத்து எழுந்து விடுவார் என்று நம்பிக்கை இருந்த நேரத்தில்.. அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போகும்படி இப்படி ஒரு போன் கால்.
------------------
பெரியாண்டிச்சி அம்மன்.
பெரியாண்டிச்சி அம்மன் எங்கள் குலதெய்வம். ஆத்தாளுக்குப் பெரியாயி என்றொரு பெயரும் உண்டு. மயானத்தைக் காவல் காக்கின்ற, ஊர் எல்லைச்சாமிகளாய் இருக்கின்ற, படுத்த வாக்கில் இருந்து அருள் புரியும் மாசானி அம்மன் போன்ற தெய்வங்களின் வகைமையைச் சேர்ந்தவள் அவள். ஊரில் எத்தனையோ சாமிகள் இருக்க எப்படி இவள் நம் குலதெய்வம் ஆனாள் என்ற சிறுவன் என் கேள்விக்கு குடும்பத்தில் யாரிடமும் முழுக்கதை இல்லை. மூன்று தலைமுறைகளாக நாங்கள் சேலத்தில் வசித்து வந்தாலும், அதற்கு முந்தைய மூத்தவர்கள் ஆத்தூர் அருகிலிருந்த பெத்த நாயக்கன் பாளையத்தில் இருந்ததாகச் சொல்வார்கள். அப்படி இருந்தபோது வந்திருக்கலாம் என்பார் அப்பா.
எங்கள் குடும்பம் மட்டுமின்றி பல ஊர்களில் மேலும் எத்தனையோ குடும்பங்களுக்கு கோவிலில்லாத அவள் இடம் தான் குலதெய்வக் கோவில். சேலத்தில் இருந்து வாழப்பாடி தாண்டி துறையூர் செல்லும் பஸ் ஏறினால் வழியில் மல்லியக்கரை என்றொரு ஊர் வரும். அங்கே இருக்கிறது ஆத்தாளின் திருவுருவம். முன்பெல்லாம் மல்லியக்கரையை ஒரு ஊர் என்று சொல்ல முடியாது. பச்சைப் பசேல் என்றிருந்த பழைய கிராமம் அது. ஒரு காலத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த பூமி. தென்னை, கரும்புத்தோட்டங்களும், சோளத்தட்டையோடு குருவிகள் பறக்கும் வயல்களும், குச்சிக்கிழங்குச் செடிகளும், தக்காளியும், மிளகாய்ச் செடியும் பதியனிட்ட வயல்களும் என எங்கும் இயற்கை பார்க்கக்கிடைக்கும்.
அங்கேதான் ஊருக்கு உள்ளே அமைந்து இருந்தாள் எங்கள் பெரியாண்டிச்சி அம்மன். இருந்தாள் என்பதா? படுத்துக்கிடந்தாள் என்பதா? வயக்காடுகளுக்கு நடுவே, ராஜ வாய்க்கால் ஓரத்திலே பரந்து விரிந்து நின்றிருக்கும் பெரும் ஆலமரம் ஒன்றின் வேர்ப்படுக்கையில் படுத்ததுபோலக் கிடக்கும் ஓங்கிய மண் உருவம் தான் எங்கள் பெரியாயி. அந்த அம்மனுக்குக் கூரை கிடையாது, பீடம் கிடையாது, சுற்றுச் சுவர் கிடையாது, வாசல் கிடையாது, கோவிலும் கிடையாது. கோவில் கட்டவும் கூடாது என்று தெய்வ வாக்கு இருந்ததாகச் சொல்வார்கள். அதனால் மழைக்காலத்தில் பெருமழை பெய்கையில் ஆத்தாளின் மண் உருவம் கரைந்து வயல்களுக்குள் வழிந்தோடும்.
அவ்வப்போது சில மாதங்களுக்கொருமுறை, பூசைக்காக வேண்டி உருக் கலைந்த மண்ணைக் குவித்து தண்ணீர் குழைத்து, மீண்டும் அம்மனின் உருவத்தை உருவாக்கிப் பூசை செய்வார்கள் மக்கள். அமாவாசை, பெளர்ணமியன்று பூசைகள் நடக்கும். வெளியூரில் இருந்து கூடும் குடும்பங்கள் வந்து வணங்கிப் போவார்கள். ஆனால், எவ்வளவு கெட்டியாக உருவாக்கி வைத்தாலும் மீண்டும் பருவ மழை நேரத்தில், ஆயி உருவம் மறுபடிக் கரைந்து வழிந்தோடும். அடுத்த பூசைக்காக மீண்டும் யாரேனும் ஒரு குடும்பத்தினர் முன்னெடுத்து, ஊர்க்காரர்கள் உதவியுடன் மண் உருவத்தை முழுமையாக்கிப் பூசை செய்து வணங்கிவிட்டுச் செல்வார்கள். மீண்டும் பருவ மழை, மீண்டும் கரைதல், மீண்டும் உருவாக்கல், மீண்டும் பூசை என மறுபடி மறுபடி வருடா வருடம் சுழற்சியாய் இதே கதை தொடரும்.
"மழைக்கும், புயலுக்கும் ஆத்தா கரையுறா, நமக்கு நல்லது செய்யுற அவளுக்கு நாம ஒரு நல்லது செய்ய வேண்டாமா?" என்று புலம்பி அவளுக்குக் கோவில் எடுத்துக் கட்ட முயற்சித்த பலருக்கும் என்ன காரணமோ ஆயி அருள் தரவில்லை, கோவில் கட்ட அனுமதி தரவில்லை என்றும் சொல்வார்கள். மீறி அதை முயற்சித்தவர்களுக்கும் பல தடங்கல்கள் வந்தன என்றும் கதைகள் உலவும். எனவே கிராமத்து தேவதைகளின் பொல்லாப்புக்கு உள்ளாகக்கூடாது என்று பேசிவிட்டு மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் கலைந்து சென்று விடுவார்கள்.
அனைத்தையும் மீறி சில வருடங்களுக்கொருமுறை அவ்வப்போது ஊரில் யாரேனும் கூட்டம் போட்டுக் கோவில் கட்ட முயற்சி எடுத்த படியே இருப்பார்கள். பல குடும்பங்களுக்கும் இது குலதெய்வம் என்பதால், நாங்கள் வெளியூரில் இருந்தாலும், பெரியப்பாவிடமும் மரியாதை நிமித்தமாகக் கருத்துக் கேட்பார்கள். சாமி காரியங்களிலும், ஆன்மீக வழக்கங்களிலும் அதீத நம்பிக்கை இருந்த பெரீப்பா "ஆத்தாளின் வாக்கு இல்லாமல் கோவில் கட்ட வேண்டாம்" என்ற கருத்துக்கே ஆதரவாக இருப்பார். அவருக்கு பெரியாண்டிச்சி தான் எல்லாம்.
பொருளாதாரப் பின்னணியற்ற மிக மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தில் இருந்து வந்து, தம்பி, தங்கைகள் எனும் கடமைத் தளைகளைத் தாண்டி, மெள்ள மெள்ள முன்னேறி நிலையான வேலை பெற்று, ஒரு வங்கி மேலாளராகி நல்லதொரு வாழ்க்கையை வாழ அவளது அருள் தான் மிக முக்கியக் காரணம் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.
சேலத்தில் இருந்தவரை நினைத்த போதெல்லாம் கோவிலுக்குச் சென்று வந்தது எங்கள் பெருங்குடும்பத்தின் முந்தைய தலைமுறை. காலப்போக்கில் வீட்டில் பல திருமணங்கள் நடந்து சிறு சிறு குடும்பங்களாகப் பிரிந்ததாலும், பலர் வேலை, பிழைப்பு நிமித்தமாக கோவை, திருச்சி, சென்னை, ஓசூர் என்று பிரிந்ததாலும் அடிக்கடி ஆத்தாளைத் தரிசிப்பது முடியாது என்றானது. ஆனால் குலதெய்வ வழிபாடு தவிர்க்கக் கூடாத ஒன்று என்பதால், அனைத்துக் குடும்பங்களும் எங்கிருந்தாலும் ஒன்று சேர்ந்து வந்து ஆண்டுக்கொரு முறை சிவராத்திரி அன்று அம்மனைத் தரிசிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவு யாருடையது? வேறு யார்? பெரீப்பா தான்.
தாத்தாவின் மூத்த பிள்ளை அவர்தான். பொறுப்பான பிள்ளை வேறு. என் கஸின்கள், தம்பி, தங்கைகளுக்குத் தான் அவர் "பாலு பெரியப்பா". ஆனால், என் அப்பா இரண்டாமவர் என்பதால், எனக்கு "பெரீப்பா" என்றாலே அவர் ஒருவர் தான். அவருக்கு ஆறு தம்பிகள், ஒரு தங்கை, அது போக பிறந்து குழந்தையாகவே இறந்தவை இரண்டு என்று பத்துக் குழந்தைகள் பிறந்த மிகப்பெரிய குடும்பம் தாத்தாவுடையது. அவர்களில் நன்கு படித்ததும், பொறுப்பாக இருந்ததும், கடைசி வரை நல்லதொரு உத்யோகத்தில் நிலையாக இருந்ததும் இவர் ஒருவரே. தம்பிகள், அவர்தம் மனைவிகள், அவரவர் பிள்ளைகள் எனக் குடும்பத்தில் கும்பல் 25 ஐத் தாண்டும்.
வீட்டின் முதலிரண்டு திருமணங்களுக்குப் பிறகு பக்க வாதத்தில் விழுந்தார் தாத்தா. அவருக்குக் கை கால் முடியாமல் போனதால், முதல் சித்தப்பாவின் திருமணத்தைப் பெரியப்பா தான் நடத்தி வைத்தார். நானறிந்த வரை அதுதான் அவர் நடத்திய முதல் திருமணம். அதற்கடுத்து வரிசையாக அத்தை, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது என வரிசையாக கடைசி சித்தப்பா வரை அவர் நடத்தி வைத்தவை தான் எங்கள் குடும்பத்தின் மற்ற அனைத்துத் திருமணங்களும். அடுத்த தலைமுறையிலும் தன் மகன் திருமணம். பிறகு என் தங்கையின் திருமணம் என இது தொடர்ந்தது.
என் அம்மாவின் இறப்பால், என் அப்பா மனையில் அமர முடியாமல் போக, ஆண்டவன் என் திருமணத்தையும் நடத்தி வைக்கும் வாய்ப்பைப் பெரியப்பாவுக்கே கொடுத்தான். எனவே, நான் பெரியப்பாவுக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டவன். அவர் இல்லாவிட்டால் என் திருமணம் அவ்வளவு சீரும் சிறப்புமாக நடந்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. திருமணத்தன்று பெண் வீட்டினரிடம் யாரோ "பொண்ணுக்கு நல்ல அருமையான இடமாப் பாத்து முடிச்சிட்டீங்க" என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது என் அருகில் அமர்ந்திருந்த பெரீப்பாவின் பிம்பத்தைக் கண்டு கிடைத்த பாராட்டு. அந்தப் பெருமை அவரையே சாரும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் சராசரியாக மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையேனும் யாருக்கேனும் திருமணம் நடத்தி வைத்துக் கொண்டிருப்பார் அவர். பெரியாண்டிச்சி சந்நிதியில் எல்லாரும் கூடி மகிழ்வாக இருக்கும் சமயத்தில் நான் ஜாலியாக "மூணு வருஷம் ஆச்சே. யாருக்காவது கல்யாணம் பண்ணி வைக்கணுமே" என அவரது மைண்ட் வாய்ஸ் சொல்வதாக சொல்வதைக் கேட்டு வெடித்துச் சிரிப்பார்.
------------------
சிவராத்திரி பூஜை
வருடா வருடம் குலதெய்வ சந்நிதிக்குப் போவதற்காக சென்னையில் இருந்து குடும்பத்துடன் கிளம்பி சேலம் சித்தப்பா வீட்டிற்கு முதல் நாளே வந்து விடுவார் அவர். அங்கே பூஜை சாமான்களுக்கென ஒரு பெரிய லிஸ்ட் போடப்பட்டு, பொருட்கள் வாங்கப்பட்டு, பெரியப்பாவின் மேற்பார்வையில், பெரியம்மாவின் தலைமையில், அம்மாக்கள், சித்திகள், பிள்ளைகள் புடை சூழ பிரசாதங்கள், பலகாரங்கள் செய்ய, எலுமிச்சை மற்றும் பூமாலைகள் கட்ட என எல்லா வேலைகளும் கனஜோராக நடக்கும்.
ஆரம்ப வருடங்களில் மல்லியக்கரை செல்ல அனைவருக்குமான பஸ் டிக்கெட் உட்பட அனைத்து ஸ்பான்ஸரும் பெரியப்பா தான். பிற்பாடு அவரவர் முடிந்த பங்கினைக் கொடுப்பதுண்டு. மேலும், அனைவரும் "சாமி உண்டியல்" வைத்து அவ்வப்போது சில்லறைகள் போட்டுக் காசு சேர்த்து வைத்திருப்பார்கள். அதைக் கொண்டுபோய் கொடுத்தால் அதை பூஜை சாமான்கள் வாங்கச் சேர்த்து விட்டு "புண்ணியம் எல்லாருக்கும் போகணும்டா" என்பார் பெரீப்பா.
ஊருக்கு வரும்போதெல்லாம் தனது பொறுப்பில்லாத தம்பிகளை அதட்டுவது, சிலருக்குப் பண உதவிகள் செய்வது, எங்கள் அம்மாக்கள், சித்திகள் தங்கள் கணவன்மார்கள் பற்றிச் சொல்லும் பஞ்சாயத்துகளை விசாரிப்பது, பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், எப்படிப் படிக்கிறார்கள் என விசாரிப்பது, முடிந்தால் சேலத்தில் இருந்த தனது பழைய நண்பர்களைச் சந்திப்பது என அந்த இரண்டு நாட்களும் மிகுந்த பிஸியாகவே இருப்பார் பெரியப்பா. நான் சின்னப்பிள்ளையாக இருந்ததால் அப்போதெல்லாம் அவரைப்பார்த்தாலே நடுங்கும். சோபாவில் அமர்ந்த படி என்னைப்பார்த்து "என்னடா?" என்று ஒரே வார்த்தைதான் கேட்பார். அதில் இருக்கும் கம்பீரத்தில் எந்தத் தப்பும் செய்யாமலே எனக்கு உதறும்.
சிவராத்திரியன்று விடியலிலேயே சுத்தபத்தமாக தலைக்குக் குளித்து விட்டு, வாசனையாக ஜவ்வாது போட்டுக் கொண்டு, நல்ல பளபளக்கும் பட்டு மல் ஜிப்பா ஒன்றைப் போட்டு வந்து நிற்பார் அவர். இதற்காகவே நான்கைந்து வைத்திருப்பார் போலும். கழுத்தில், தங்கப் பூண் போட்ட ருத்ராட்சம் வைத்த தங்கச் சங்கிலி, வலது கையில் யானை முடி கோர்க்கப்பட்ட தங்கக் காப்பு, இடது கையில் தங்க நிற ரோலக்ஸ் வாட்ச், இடது மோதிர விரலில் ஒரு சதுர நவரத்தின மோதிரம், உபரியாக இன்னும் சில விரல்களில் தங்க மோதிரங்கள், காதோரம் மின்னும் ஒன்றிரண்டு இழை வெள்ளி முடிகள், பாட்டா பிராண்ட்டில் பளபளக்கும் தோல் செருப்பு என அவர் வந்து நின்றாலே தேவர் மகன் சக்திவேல் போல கம்பீரமாக இருப்பார். ஆளும் தகதகக்கும் தங்க நிறம் வேறு.
பூஜையன்று ஆத்தாளின் சந்நிதியில் கைகளைப் பின்னால் கட்டியபடி ஒவ்வொருவருக்கும், “மகேந்திரா நீ மண்ணைக் குழை, கங்கா நீ பூ கட்டு, கார்த்தி நீ பெரியம்மாவோட சேர்ந்து சாமிக்கு கலர் பண்ணு, சீனி நீ மொட்டைக்கு ஆளைக் கூட்டிட்டு வா” என அவர்கள் வயதுக்கும் தகுதிக்கும் ஏற்றபடி வேலை கொடுத்தபடி மேற்பார்வை செய்து கொண்டிருப்பார் பெரியப்பா.
—-------------------------------------------------------------
அம்மனின் கால்புறத்தில் இரண்டடி அகலத்தில் ஒரு சிறு ஓடை ஓடும். அதில் தான் பிள்ளைகள் கால் நனைத்து தண்ணீர் சிதறடித்து விளையாடுவோம். அம்மனுக்குப் பின்னால் இருபதடி அகலத்தில் இருந்த ராஜ வாய்க்காலில் பல ஆண்டுகளுக்கு முன்பு நன்றாகத் தண்ணீர் ஓடும் என்றும் அதில் தாம் குளித்து விளையாடுவோம் எனச் சொல்வார் ஜனா சித்தப்பா. இப்போது அந்த ஓடையில் வெறும் புதர்களே மண்டியிருக்கின்றன.
குடும்பத்தில் பிறக்கும் எல்லாப்பிள்ளைகளுக்கும் முதல் மொட்டை அம்மனின் வயல் மண் சந்நிதியில் தான். நாங்கள் 8 குடும்பங்கள், பெரியப்பாவின் பங்காளிகளிக் குடும்பங்கள், வெளியாட்களின் குழந்தைகள் என மொட்டை போட வரும் குழந்தைகள் எண்ணிக்கை வருடம் மூன்று, நான்கேனும் தேறும். ஒற்றைப்படை வயதில் தான் மொட்டை போட வேண்டும் என்பது சம்பிரதாயம். அவ்வயதில் ஏதேனும் சமயத்தில், உறவில் ஏதேனும் சாவு காரியம் ஆகி விட்டால் இரட்டைப் படை வயதில் மொட்டை போடக் கூடாதென சில குழந்தைகள் காத்திருக்கும். அவைகளும் சேர ஒவ்வொரு வருடமும் தவறாமல் மொட்டை வைபவம் நடக்கும் அம்மனின் அருள் பார்வையிலும், பெரியப்பாவின் மேற்பார்வையிலும்.
சிவராத்திரி அன்று, கரைந்து போய் அருவமாக மாறிக் கிடந்த பெரியாண்டிச்சி அம்மன் எங்கள் அனைவரின் கைவண்ணத்தில் எண்ணெய், சீயக்காய் தெளித்துக் குளிப்பாட்டப்பட்டு, மண் உருவம் திருத்தப்பட்டு, கூரைச் சேலை அணிவிக்கப்பட்டு, அணிகலன்கள் திருத்தப்பட்டு, மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு, எலுமிச்சை மாலை சாத்தப்பட்டு, பூமாலைகள் போடப்பட்டு, மெள்ள மெள்ள உருமாறி, முழுதாகத் தயாரானதும் பூஜை துவங்கும். பூசாரி? வேறு யார்? பெரியப்பாவே தான்.
அவர் நடுநாயகமாக நின்று மந்திரங்களை உச்சரிக்க, ஆயியைச் சுற்றி அனைவரும் கைகளில் பூக்களோடு நின்று மந்திரங்களைத் திரும்பிச்சொல்ல, பிள்ளைகள் காண்டா மணிகளை அடிக்க, ஓங்காரம் கேட்டு ஊர்க்காரர்களும் கூடி நிற்க, பிரசாதத்தை எதிர்பார்த்து ஊர்ப்பிள்ளைகளும் வந்து நிற்க, ஜகஜோதியாய் உச்சிகாலப் பூஜை நடக்கும். சற்றேறக்குறைய இரண்டு மணி நேரங்கள் தொடரும் பூஜை, மந்திரங்கள் முடிய, பூக்கள் தீர சிறப்பாக முடிவு பெறும். தீர்த்த நீர் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்படும். அனைவரும் அங்கங்கு சிதறி அமர்ந்து, ஓடி விளையாடி சந்தோஷமாக நேரம் கழியும் அனைவருக்கும்.
எத்தனையோ வருடங்கள் இந்த சந்தோஷ நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பெரீப்பா இருந்த வரை அம்மனுக்குக் கோவில் கட்டவும், கூரை வேயவும் உத்தரவு கிடைக்கவே இல்லை. உத்தரவு கிடைக்காமல் கோவில் கட்ட அவரும் அனுமதி தரவில்லை. காரணம் பாரம்பரியத்தின் மீதும், கிராமக் காவல் தெய்வத்தின் மீதும் அவருக்கு இருந்த பக்தியும், நம்பிக்கையும். ஊர்க்காரர்கள் பலரும் அவரோடு ஒத்துப்போக, பெரியாண்டிச்சி அம்மன் பாரம்பரியம் மாறாத கிராமத்து இயற்கை மண் தேவதையாகவே வெகு காலமாக அருள் பாலித்துக் கொண்டிருந்தாள். அவளை அப்படியே இருக்க விட்டு ரசிப்பதில், பூஜிப்பதில், சந்நிதியில் வந்தமர்ந்து கையெடுத்துக் கும்பிடுவதில் பெரியப்பாவிற்கு அவ்வளவு சந்தோஷம். அவரையே ஆதர்சமாக நினைத்திருந்த எனக்கும் அதுவே விருப்பமும்.
------------------
பெரீப்பா இருக்கையில் ஒரு முறை தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டி நான் சென்னைக்குச் சென்ற போது, என்னை டிராப் செய்ய ஸ்டுடியோ வரை தன் வண்டியில் அழைத்துப் போனார். பொதுவாக அவர் அப்படிச் செய்யும் ஆள் இல்லை. கதைகள் எழுதுவது, படங்கள் வரைவது என எனக்குச் சில உபரித்திறமைகள் இருந்ததாலும், ஆசிரியப் பணியில் இருந்ததாலும், என் மேல் அவருக்கு ஒரு சிறப்புப் பாசம் இருந்தது. அந்த நிகழ்ச்சியில் இன்னும் சிலருக்கு வாய்ப்பு உண்டு என்று தெரிந்ததும் வேடிக்கை பார்க்க வந்தவரை நான் உள்ளே அழைக்க "வெர்ர்ரி குட்" என்று பெருமையாகச் சிரித்த படியே மேடையேறினார் அவர். நிகழ்ச்சி ஒளிபரப்பான அன்று தன்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்து பெருமிதமாகவும் சந்தோஷமாகவும் தான் கலந்து கொண்டிருந்ததைச் சொல்லிக்கொண்டிருந்தார். பெரிய ஆபீசராக இருந்தாலும், அவருக்கு இதுபோன்ற மேடை அனுபவங்கள் வாய்த்ததில்லை. என்னுடைய ஆதர்ச நாயகனான அவருக்கு ஏதோ என்னால் முடிந்த ஒரு பெருமையான தருணத்தை வழங்கி விட்டேன் என்று எனக்கு எப்போதும் மிகுந்த சந்தோஷம் உண்டு.
அப்பேர்ப்பட்ட பாலு பெரீப்பா தான் இப்போது இல்லை. சுமார் நான்கு வருடங்கள் கிட்டத்தட்ட கோமாவிலேயே இருந்து நினைவு திரும்பாமலேயே இறந்து போயிருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆத்தா பெரியாண்டிச்சியைச் சந்திக்காமலேயே அவரது உயிர் பிரிந்தது. அனைவரும் சேர்ந்து அவரது காரியங்களை நடத்தி வைத்தோம். அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மல்லியக்கரை பக்கம் செல்லவே கூடாது என்றும் பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள். அதன் பிறகும் பெரியப்பா வந்து நிற்காத சிவராத்திரி பூஜைகள் மூலவர் சிலை இல்லாத சந்நிதியாய், வெறுமையாகக் கடந்து போயின எங்களுக்கு.
------------------
அதற்குப்பிறகு சுமார் நான்கு வருடங்கள் கழித்து இன்று தான் மறுபடி மல்லியக்கரை வருகிறேன். ரூட் பஸ்ஸில் "மல்லியக்கரை ஊருக்குள்ள" என்று டிக்கெட் வாங்கியதுமே "என்ன சார், பெரியாயி கோயிலுக்கா?" என "கோயிலை" அழுத்திச் சொன்னார் கண்டக்டர். "கோயிலா?" எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் முகத்தைப் பார்த்து "அஞ்சி வருஷம் முந்தி மழையப்ப பெரிய இடி விழுந்ததில்ல சார், அப்ப ஆத்தாக்கு கோயில் எடுத்துக் கட்டிட்டாங்க சார்" என்றார். பைபாஸ் பஸ்ஸ்டாப் தாண்டி ஊருக்குள் நுழைந்ததும், பஸ் வேகம் குறைய, பஸ்ஸிலிருந்து ரன்னிங்கிலேயே இறங்கி வேகவேகமாக வயல்களுக்குள் நடந்தேன். நடக்கையிலேயே ஏதோ மாற்றத்தை உணர்ந்தேன்.
இருநூறு மீட்டர் நடந்ததும் தூரத்தில் கோவில் தெரிந்தது. கோவில்? ஆம். பெரியாயிக்கு சிமெண்டில் ஒரு பட்ஜெட் கோவில் எழுப்பி வைத்திருந்தார்கள். பெரிய நீள் சதுர மேடையும், அதன் மேலே வேயப்பட்ட நீல நிற ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் தூரத்தில் இருந்தே தெளிவாகத் தெரிந்தன. காண்டா மணிகள் மாறியிருந்தன. புதிய சூலாயுதங்கள் பதிக்கப் பட்டிருந்தன. சிறிய பலிபீடம் ஒன்றும் எழும்பியிருந்தது. அதில் ஒரு சேவல் வெட்டப்பட்ட இரத்தம் சிதறியிருந்தது.
செருப்பைக் கழற்றி விட்டு, கைகூப்பியபடி அருகில் போய்க் கிட்டத்தில் பெரியாண்டிச்சியைப் பார்த்தேன். பெரிய செவ்வகப் பீடம் ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. அதன் மேல் சிமெண்டினால் செய்யப்பட்ட, பிளாஸ்டர் ஆஃப் பாரீஸில் பூசப் பட்ட, உடலெங்கும் விதவிதமாக, பளபளவென்று மின்னும் ஏஷியன் பெயிண்ட்ஸ் வண்ணங்கள் அடிக்கப்பட்ட, மழையில் கரையவே வாய்ப்பில்லாத, அழகான வடிவத்தில் புதிய பெரியாண்டிச்சி படுத்திருந்தாள். அவள் தலைக்கு மேல் வண்ணம் தீட்டப்பட்ட ஐந்து தலை நாகம் ஒன்றும், தலைக்கு நேர் மேலே ஒரு கூரையும் இருந்தது.
ஆனால் அங்கே, காலம் காலமாய் பாலு பெரீப்பாவின் பின் வரிசையாய் பய பக்தியுடன் கைகள் கூப்பி நின்று வருடா வருடம் நாங்களே செப்பனிட்டுத் தொழுத, பாரம்பரியம் மிக்க, பழைய தெய்வீகமும், தேஜஸூம் கொண்டிருந்த எங்கள் மண் ஆத்தாளைத்தான் காணவில்லை.
எனக்குப் பெரீப்பாவின் நினைவும் இரண்டு சொட்டுக் கண்ணீரும் வந்தன.
- கங்கா பையன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்