கே.என். இராமகிருஷ்ணன்,
சிறுகதை வரிசை எண்
# 58
காலவட்டம் சுழல்கிறது
கமலம் உன் பையன் அவன் கல்யாணத்தைப் பற்றி என்ன தான் சொல்கிறான்.
அவனுக்கு இப்போது கல்யாணம் வேண்டாமாம். சமயம் வரும்போது சொல்கிறானாம். அப்போது அவன் விருப்பத்திற்கு நாம் இணங்க வேண்டுமாம்.
எந்தப் பெண்ணையாவது காதலிக்கிறானா எனக் கேட்டாயா?
அதெல்லாம் கேட்காதீர்கள். அதை என் விருப்பத்திற்கு விட்டுவிடுங்கள் என்கிறான்.
சரி விடு. ஆண் தானே நாமும் விட்டுப் பிடிப்போம் என்று சங்கரமூர்த்தி தன் மனைவி கமல சரஸ்வதியிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பிச் சென்றார் தன் நண்பரைப் பார்ப்பதற்கு..
சங்கரமூர்த்தியின் ஒரே மகன் சுசில்குமார் கனடாவில் மென் பொருள் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை பார்க்கிறான்.
அவனிடம் ஸ்கைப்பில் பேசிய போது தான் தன் அம்மாவிடம் அவன் இப்படிச் சொன்னான்.
என்ன சுசி உங்கம்மா கேட்டதுக்கு இப்படி பதில் சொல்லுற?
நான் பின்னே எப்படிச் சொல்வதாம் பாமினி. எங்க சாதியிலே
உங்க சாதியை ஏத்துக்கவே மாட்டாங்க. உங்க பெற்றோர் ஏழ்மை நிலையிலேயிருந்து முன்னேறியவங்க. வறுமையில் வாடியதால் அவர்கள் எங்கள் பெற்றோருக்கு இணையாய்ப் பேச கூச்சப்படுவார்கள். இந்த இக்கட்டிலிருந்தெல்லாம் நான் எப்படி மீள்வது என்று கலங்குகிறேன் பாமினி.
என்னை காதலித்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறாயா சுசி.?
அப்படி நினைப்பதாயிருந்தால் கலங்குவேனா? இந்தப் பிறவியில் நீ தான் என் மனைவி என்று நான் நினைத்ததால் தான் நமது இரண்டு நண்பர்களும அவர்களுடைய மனைவிகளும் உதவ உன் கழுத்தில் கோயிலில் தாலி கட்டி உன்னை மனைவியாய் ஏற்றுக் கொண்டேன். நீயும் மகிழ்ச்சியுடன் இந்த எளிய திருமணத்திற்கு சம்மதித்தது எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.
ஆனால் இது திருட்டுக் கல்யாணம் என்றாகாதா? எங்கள் பெற்றோரிடமும் சொல்லவில்லையே
சுசில்குமாரும் பாமினியும் தஞ்சாவரைச்சேர்ந்தவர்கள் என்பது ஒரு ஒற்றுமை. என்றால் வேலையும் மென்பொருள் பொறியாளர்கள் கனடாவில் என்பது மற்றொரு ஒற்றுமை. சாதி ஒரு வேற்றுமை என்றால் அந்தஸ்தும் மற்றொரு வேற்றுமையாய் இருந்தது.
.குறுந்தொகைப் பாடல்களில் சங்க காலத்தில் களவொழுக்கம் என இதைத் தான் சொன்னார்கள். இப்போது அதையே லிவ்விங் டூகெதர் என்கின்றோம்.
திருடர்கள் போல் ஒளிந்து மறைந்து வாழ வேண்டியிருக்கிறதே.
கனடாவில் நாமிருக்கும் பகுதியில் முக்கால்வாசிப் பேர் இப்படிப் பட்டவர்கள். ஆனால் சட்டப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். நம் நாட்டுக்கு அறிவிக்காத திருமணம் என்பதைத் தவிர இதில் குற்றம் இருப்பதாக நான் நினைக்கவில்லை
பிறகேன் உங்கள் அம்மாவிடம் சமயம் வரும்போது சொல்கிறேன். அப்போது என் விருப்பத்திற்கு விட்டுவிடுங்கள் என்றீர்கள்.
இப்போதைக்கு தப்பிக்கும் வழி இது தான் என்று தோன்றியதால்.
அதற்கான தீர்வு கிடைக்கும்வரை காத்திருப்போம். வேறென்ன செய்வது?
நமது நண்பர்கள் சொன்னார்கள் என்றால்?
சீச்சீ அவர்கள் நம் உண்மை நண்பர்கள். நம் நலம் விரும்பும் நல்லவர்கள். அப்படியெல்லாம் நமக்கு தீங்கு செய்ய மாட்டார்கள். மனதை குழப்பிக் கொள்ளாமல் இரு பாமினி.
அவர்கள் உண்மையான கணவன் மனைவியாய்த் தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். இருவருமே உண்மை அன்பில் காதலில் திளைப்பவர்கள் என்பது மட்டும் உண்மை.
இரவு 10 மணி இருக்கும். கதவு தட்டப்படும் ஓசை. சட்டென்று எழுந்தான் சுசில். கதவை திறப்பதற்கு அருகில் சென்றான்.. சுசிலும் பாமினியும் இரவு உணவு முடித்துவிட்டு உறங்கச் செல்வதறகு தயாரான நேரமது.
பாமினி சுசிலின் அருகில் ஓடி வந்தவள் கதவு தட்டியவர் பாமினி என்று அழைத்தது காதில் விழுந்ததால் சுசிலை தடுத்து அவன் காதில் நீங்கள் அடுத்த அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்ளுங்கள். அங்கே இருக்கும் படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். எனக்கு தெரிந்தவர் யாரோ கூப்பிடுகிறார்கள் போலும். நானும் கட்டிலில் ஒரு தலையணையை எடுத்து வைத்து விடுகிறேன். பிறகு நான் அந்த அறையின் கதவைத் தட்டிக் கூப்பிடும்வரை கதவைத் தட்டாதீர்கள். சத்தமில்லாமல் படுத்திருங்கள் என்றவள் வேக வேகமாகச் சென்று தலையணையை வேறிடத்தில் வைக்கவும் சுசில் அடுத்த அறைக்கு தன் துணிமணிகளுடன் செல்வதும் ஒரே நேரத்தில் முடிய பாமினி கதவைத் திறந்தாள்.
அங்கே தஞ்சையில் தன் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் வீட்டிலுள்ள தன் வயதொத்த பெண் கவிதா நின்று கொண்டிருந்தாள்.
என்ன கவிதா இந்த நேரத்தில் இங்கே எப்படி நீ?,
எனக்கு இங்கே பன்னாட்டு வங்கி ஒன்றில் பணி கிடைத்திருக்கிறது. திடீரென்று புறப்பட்டதால் உன் முகவரியை உங்கள் வீட்டில் வாங்கிக் கொண்டு வந்தேன். அகாலத்தில் வந்து உன்னை தொந்திரவு செய்வதற்கு என்னை மன்னித்துவிடு. உன் தூக்கத்தை வேறு கெடுத்துவிட்டேன். நான் உன்னோடு தங்கிக் கொள்ளலாமென்று தான் வந்தேன்.
மனதில் திடுக்கிட்ட பாமினி. இன்று இரவு இங்கே தங்கிக் கொள். நாளை நான் உனக்கு இது போன்ற ஒரு அறையை வாடகைக்கு ஏற்பாடு செய்கிறேன். போய் குளித்து ஆடை மாற்றிக் கொண்டு வா என்றவள் அவள் குளியலறை சென்றதும் தன் அலைபேசியில் சுசிலைக் கூப்பிட்டு நடந்ததைக் கூறினாள்.
சரி. நாளை பார்த்துக் கொள்ளலாம். குளியலறையில் என் ஆடைகள் இருந்தால் அதை எடுத்து வைத்து விடு என்றான்.
அதெல்லாம் அவள் குரல் கேட்டவுடனேயே எடுத்து வைத்து விட்டேன். கவலைப் படாதீர்கள். இன்று ஒரு இரவு தானே. சமாளிப்போம் என்றாள்
வேக வேகமாகக் குளித்து உடை மாற்றி வந்த கவிதா பாமினி எடுத்து வைத்திருந்த பிரட் ஜாமைக் கூட எடுக்காமல் அவள் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவள் பாமினியிடம் ஏதோ சொல்ல வருகிறாள் என அவள் முகம் எடுத்துரைத்தது பாமினிக்கு.
கவிதா முதலில் பிரட் சாப்பிடு. பிறகு உறங்கலாம். காலையில் எழுந்து பேசிக் கொள்ளலாம் என்றாள்.
இல்லை பாமினி உன் உதவி எனக்கு இப்போது அவசர அவசியமாய் தேவைப்படுகிறது. எனக்கு நீ செய்வாய் என்று தான் நான் மகிழ்ச்சியோடு இங்கு வந்துள்ளேன்.
என்னடி பெரிய பீடிகையாய் போடுகிறாய்.
உன் அண்ணனை நான் காதலிக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதல்லவா?
நீ வழியும் வழிசலைத் தான் நான் பார்த்திருக்கிறேனே. என் அண்ணன் நவீனும் உன்னைப் பார்த்ததும் கிறங்கிப் போவதையும் நான் பார்த்திருக்கிறேனே அதற்கு இப்போது இந்த இரவில் என்ன அவசரம்
நவீனுக்கும் இங்கேயே ஐ டி பீல்டில் வேலை கிடைத்து நேற்று டொரோண்டாவில் பணியில் சேர்ந்திருக்கிறார். உன்னிடம்கூட சொல்லவில்லை என்றார் என்னிடம். நான் தான் உன்னிடம் சொன்னால் தான் எங்களின் திட்டம் சரிப்படும் என்று தான் உன்னை நம்பி வந்தேன்.
கவிதா உனக்கு இங்கே ஒண்டாரியோவில் தான் பணியா?
இல்லை பாமினி எனக்கும் டொரோண்டாவில் தான் பணி.
ஓ. சரியான கில்லாடியடி நீ. காதலைத் தொடரப் போகிறீர்கள். அப்படித்தானே.
எங்கள் வீட்டில் தான் எங்கள் காதலை ஏற்கமாட்டார்களே. அதனால்..
அதனால் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.
என்ன முடிவு அது
இங்கே திருமணம் செய்து கொண்டு லிவிங் டூகெதராய் வாழ்வது என்று.
உன் அண்ணனுக்கு இது தெரியுமா?
தெரியாது இது வரை. அவனும் கனடாவில் தான் இருக்கிறான். ஆனால் அவன் எங்கிருக்கிறான் என்று கூட வீட்டிற்குச் சொல்ல வில்லையே.
நீங்கள் இப்படி இருக்கப் போகிறீர்கள் என்று உங்கள் வீட்டிற்குத் தெரிந்தால் என்னாகும் என்று கொஞ்சமாவது யோசித்தீர்களா?
முடிந்த வரை இதை மறைத்து வாழ்வது. மனமாற்றங்களுக்கு எங்கள் பெற்றோரை. அதுவும் என் பெற்றோரை எப்படியாவது மாற்ற முயற்சிப்பது என திட்டங்கள் வைத்துள்ளோம். உடனே நடக்காது என்றாலும் பொறுத்திருப்போம். எங்கள் காதல் உண்மைக் காதல், எதனாலும் அதற்கு தீங்கு நேர விடமாட்டோம்.
ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறாய். சரி உன் பெற்றோர் ஒப்புக் கொள்வதிருக்கட்டும். உன் அண்ணன் ஒப்புக் கொள்ள வில்லை என்றால்?
அவனை நான் எப்படியாவது மாற்றுவேன். நம்பிக்கையிருக்கிறது. என்மீது மிகுந்த அன்பு கொண்டவன். எனக்கு உதவத்தான் செய்வான். நவீன் பணியில் முன்பே சேர்ந்தாயிற்று, நான் நாளை பணியில் சேர்வேன். இரண்டு நாட்களில் வார விடுமுறையில் உன் உதவியுடன் திருமணமும் முடித்துக் கொள்வேன்.
நான் உதவுவேனா இல்லையா என்று இன்னும் முடிவு செய்யவில்லையே. நீ எப்படி இவ்வளவு உறுதியாய்ச் சொல்கிறாய்.
நீ என் உயிர்த் தோழி அதனால்தான். சங்ககாலத்திலும் தலைவிக்கு ஒரு தோழி தான் உதவி செய்வாள்.
சரி சரி பொழுது விடியட்டும் யோசிப்போம். நீ பிரட் சாப்பிட்டு படுத்துத் தூங்கு என்ற பாமினி தனக்குள் சிரித்துக் கொண்டே படுக்கையில் அவளுடன் படுத்துக் கொண்டாள்.
உறங்குவதற்று முன்பு இரவே சுசில்குமாரிடம் குறுஞ்செய்தி மூலம் நாளை நாங்கள் இந்த அறையை விட்டுச் செல்லும் வரை நீ கதவைத் திறக்காதே என்று சொல்லிவிட்டாள். அந்த அறைக்கு என்று தனியாக
கழிப்பறையும் குளியலறையும் அட்டாச்டு ஆக இருந்தது நல்லதாயிற்று.
சுசில் எட்டரை மணிக்குச் செல்ல வேண்டுமென்பதால் பாமினி கவிதாவை முன்பே எழுப்பி தானும் காலைக் கடன்களையும் குளியலையும் முடித்துக் கொண்டு சரியாக எட்டு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டாள்.
பாமினி நீ சமைப்பதில்லையா என்றாள் கவிதா.
இல்லை. நாம் டொரோண்டாவுக்குப் பஸ் ஏறும் வழியில் ஒரு ஓட்டலில் டிபன் சாப்பிட்டுக் கொள்வோம்.
ஆமாம், நீ எப்போது ஆபீஸ் போவாய்?
நான் இன்று அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்கிறேன். உன்னை உன் ஆபிஸ் கொண்டு விட்டுவிட்டு உனக்கும் உன் உட்பிக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீடு பார்த்துக் கொடுத்துவிட்டு தான் என் ஆபிஸ் திரும்புவேன்.
இன்றே என்னை டொரோண்டோவில் தள்ளி விட்டு உன் வீட்டுக்கு என்னை கூப்பிட்டுப் போக மாட்டாய் அப்படித்தானே
ஆமாம். நீங்கள் இருவரும் பல கனவுகளோடு வந்திருப்பீர்கள். அதை நான் கெடுக்கக் கூடாதல்லவா?
உன் அண்ணனைக்கூட, நவீனைச் சொல்கிறேன். பார்க்க வரமாட்டாயா?
அவன் என்னிடம்கூட சொல்லவில்லையே. அதனால் இன்னும் ஒரு வாரத்திற்கு அவனோடு பேசவோ பார்க்கவோ நான் வருவதாயில்லை. நீயும் அவனை என் வீட்டுக்கு அழைத்து வராதே. நான் சொல்வதைச் செய்வாயல்லவா கவிதா
சரி சரி உன் கோபமும் தணிய வேண்டுமலலவா. உன் உத்திரவை ஏற்றுக் கொள்கிறேன்.
ஓட்டலில் டிபன் சாப்பிட்டு அங்கிருந்து பஸ் பிடித்து கவிதா சொன்ன அவள் ஆபிஸ் சென்றார்கள் இருவரும்.
கவிதா ஆபிசில் பணியேற்றுக் கொள்ளும் வேலையில் இருந்தாள். அவளுக்கு அங்குள்ளவர்களை அந்த ஆபிஸ் பணியாளர்கள் அறிமுகம் செய்து வைத்து மேலதிகாரியிடமும் கூட்டிச் சென்றனர்.
இதற்கிடையில் பாமினி அங்கிருந்த தன் தோழி ஒருத்தியிடம் அவள் வசிக்கும் பகுதியிலேயே ஒரு வீடு பார்த்துத் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதிர்ஷ்ட வசமாக நீ கேட்கும் இரண்டு அறை வீடு புதிது வாடகைக்கு ரெடியாக இருக்கிறது.என்றாள் அவள் தோழி நந்தினி.
நீ கவிதாவை இன்றைய பணி முடிந்ததும் அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று வாடகைக்கு பேசி முடி. எனக்கும் அலைபேசியில் தகவல் சொல்லிவிடு என்றாள்.
பிறகு கவிதாவை அவள் இருப்பிடம் சென்று பார்த்தாள் பாமினி.
நந்தினியை அவளுக்கு அறிமுகம் செய்து வீடு ரெடியாகி விட்டது. நீ இவளோடு போய்ப் பாரு. உனக்குப் பிடிக்கும். புதிய வீடு. இன்றே அந்த வீட்டிற்கு செல்லவும் செய்யலாம். அப்புறம் அதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல வேண்டாம் தானே. நீ மற்றதைப் பார்த்துக் கொள்வாயல்லவா என்று மர்மப் புன்னகை செய்தவள் நந்தினியிடம் சொல்லிக் கொண்டு தன் ஆபிஸ் புறப்பட்டாள்.
தன் அலுவலக வேலை முடிந்ததும் வீட்டை அடைந்தாள் பாமினி.
அங்கே தனக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்த சுசீல் பரபரப்புடன் காணப்பட்டான்.
என்ன சுசி பரபரப்பாய் இருக்கிறாய். என்ன செய்தி.?
உன் தோழி யாரோ வந்தாள் என்று என்னிடம் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டாய். அதையாவது இப்போது உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இன்னொரு விஷயம் தான் ஆபத்தை விளைவிக்குமோ என்று பயமாக இருக்கிறது.
என்ன என்ன அது? என்று பரபரப்பானாள் பாமினி இப்போது.
எனது அப்பாவும் அம்மாவும் என்னையும் கனடாவையும் சுற்றிப் பார்க்க வருகிறார்களாம்.. ப்ளைட்டில் கிளம்புகிறோம். கனடா நேரப்படி நாளை காலை 5 மணிக்கு ஒண்டாரியோ சர்வதேச விமானநிலையத்திற்கு எங்கள் ப்ளைட் வந்து சேருமாம். தவறாமல் வந்து விடு சுசீல். என்று வாட்ஸ் அப்பிலும், என் போன் நம்பரிலும் தகவல் சொல்கிறார்கள் பாமினி. இப்போது நாம் என்ன செய்வதாம். எப்படியும் குறைந்தது 10 நாட்களாவது தங்குவார்கள் என நினைக்கிறேன். நம் இரண்டு அறை வீட்டில் நாம் எப்படி சமாளிப்பதாம்?
கவலையை விடு சுசி. நம் பக்கத்து போர்ஷனில் இரண்டு அறை உள்ள வீடு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் காலியானது. அவர்களிடம் நான் முன்பே சொல்லி வைத்துள்ளேன். எங்களுக்கு அவசரத் தேவையேற்படும்போது இந்த வீட்டையும் எங்களுக்கு வாடகைக்குக் கொடுங்கள் என்றிருக்கிறேன். இப்போதே அதைக் கேட்போம்.
அவர்களிடம் என்ன சொல்வதாம்.?
அவர்களிடம் மட்டும் நம் கதையை சொல்லியுள்ளேன். அவர்கள் நமக்கு உதவுவார்கள். வா போகலாம் என்ற பாமினி வீட்டு சொந்தக்காரரின் வீட்டிற்கு சென்றாள்.
நல்ல வேளையாய் அவரிருந்தார். அவர் மனைவியும் இருந்தார்கள். இருவரிடமும் தங்கள் இக்கட்டைச் சொல்லி உதவி கேட்டனர். பரவாயில்லை அவர்கள் இங்கே வருவது உங்களுக்கு நன்மையில் முடிந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நலமுண்டாகட்டும் என்று வாழ்த்து அந்த வீட்டின் சாவிகளையும் கொடுத்தார்கள்
அப்பாடி, பாமினி நீயே என் தெய்வம் என்றான் சிரிப்புடன் சுசீல்.
ஆமாம், நேற்று வந்த உன் பிரண்டு பற்றி நீ சொல்லவேயில்லையே
அது பற்றி இப்போது சொல்வதற்கில்லை. அதில் சில சங்கடங்கள் இருக்கின்றன.
என்னிடம் கூடவா?
ஆமாம். என் அன்புக்கு உகந்தவரிடம் இப்போது சொல்லாமல் நலம் விளைந்த பின் சொல்லலாமே என்று தான். அதை இப்போதைக்கு மறந்து விடுங்கள். சரியா
நீ சொன்னால் சரியாகத் தானிருக்கும். சரி வா. நான் டீ போடுகிறேன். நீ டிரஸ் மாற்றி வா என்றவன் சமையலறைக்குச் சென்றான்.
சுசீலை விமான நிலையத்திற்கு விடியற்காலை 4 மணிக்கே அனுப்பி வைத்து விட்டு, புதிய சாவிகளைக் கொண்டு அந்த வீட்டிற்கு வேண்டிய பொருட்களை அழகு செய்தாள் பாமினி. அந்த வீட்டில் பர்னீச்சர்கள் முன்பே இருந்தது வசதியாயிற்று. எல்லாம் முடித்து சாவிகளை வீட்டு சொந்தக்காரரிடம் கொடுத்து விவரம் சொல்லிவிட்டு தன் வீட்டை அவளுடைய அலைபேசி சிணுங்குவதற்கும் சரியாயிருந்தது. இந்த அகால வேளையில் தன்னைக் கூப்பிடுவது யாராயிருக்கும் என்று பார்த்தபோது அது கவிதா என்றிருந்தது. அலைபேசியை காதுக்குக் கொடுத்தாள்.
உன்னை விடியற்காலையில் தொந்திரவு செய்வதற்கு என்னை மன்னித்து விடு என்று கவிதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளை இடைமறித்து உன் பெற்றோர் இன்று வருகிறார்கள் என்ற செய்தி தானே என்றாள்.
திடுக்கிட்ட கவிதா உனக்கு எப்படி அது தெரியும்.
நான் முக்காலம் அறிந்த பெண் ஞானி என்றாள் சிரிப்புடன் பாமினி.
நானே பயந்து போயிருக்கிறேன். நீ விளையாடுகிறாயா?
எதற்கு பயப்படுகிறாய். நீ தான் வீரப் பெண்மணியாயிற்றே. எங்கு பணியேற்கப் பேகிறேன் என்றுகூட சொல்லாமல் பாதி வழியில் பெற்றோரிடம் நான் வெளிநாட்டில் பணியேற்கப் போகிறேன். ப்ளைட் கிளம்புகிறது. விவரங்கள் பிறகு தெரிவிக்கிறேன் என்று சொன்னவளாயிற்றே.
நான் பயத்திலிருக்கிறேன். நீ விளையாடுகிறாயே பாமினி.
எதற்கு பயம். நீ தான் எங்கு வந்துள்ளாய் என்று உன் பெற்றோருக்குத் தெரியாதே.
பிறகு ஏன் அவர்கள் கனடா வருகிறார்கள்.?
நீ கனடாவில் இருந்தால் அவர்கள் இங்கு வரக்கூடாதா? உனக்கு என்னைத் தவிர வேறு தோழிகளோ தோழர்களோ உன் வீட்டருகே இருக்கிறார்களா?
ஒருத்தி இருக்கிறாள். நீலிமா என்று. அவளிடம் மட்டும் தான் நான் எங்கு போகிறேன் என்று சொன்னேன். அவளிடமும் நவீன் பற்றியோ என் எதிர்கால வாழ்வு பற்றியோ எதுவும் சொல்லவில்லை.
அவள் நீ எங்கிருக்கிறாய் என்று சொல்லியிருக்கலாம்.
நான் இப்போது எங்கே தங்கியிருக்கிறேன் என்று அவளுக்கும் தெரியாதே. உனக்கும் அவள் தோழி தானா?
ஆமாம். அவளிடம் நான் எல்லாமும் சொல்வேன். என் வாழ்வு பற்றிக்கூட சொல்லியிருக்கிறேன். அவள் மிகவும் நல்லவள். யாருக்கும் உதவும் நல்லெண்ணம் கொண்டவள்.
விட்டால் என்னைப் பற்றியும் சொல்லி விடுவாயோ?
சொன்னால் என்ன?
விளையாடுகிறாயா? வேண்டாம் அதெல்லாம். சரியா. இப்போது நான் எப்படி செயல்படுவதாம்.
நீ ஒன்றும் செயல்படவேண்டாம். எல்லாம் தானே செயல்படட்டும். காத்திரு. நான் நாளை பேசுகிறேன் என்று அலைபேசியை அணைத்தாள்.
ப்ளைட்டிலிருந்து இறங்கிய பெற்றோரைப் பார்த்தவன் அவர்களுக்குப் பின்னால் வந்த நீலிமாவையும் பார்த்து துணுக்குற்றான். இவள் ஏன் கூட வருகிறாள். என்னைப் பார்த்து சிரிக்கிறாளே. திகிலுடன் அவளைப் பார்த்தான்.
நீலிமாடா அவள். பேயைப் பார்ப்பது போல் பார்க்கிறாயே என்றார் அவன் தந்தை.
சரி வா சுசீல் உன் வீட்டிற்குச் செல்வோம்.
இங்கேயே டிபன் சாப்பிட்டுப் போவோமே
வேண்டாம் உன் வீட்டில் தான் டிபன். என்றவர் அவனுடைய காரில் மூவருமாய் ஏறி அமர்ந்தனர்.
இன்று மாட்டிக் கொள்வோம் என பயந்த அவன் வேறு வழியில்லாது காரை செலுத்தினான்.
முன்னேற்பாட்டின்படி வீட்டு சொந்தக்காரரிடம் சாவி வாங்கி புது வீட்டைத் திறந்தான். வீடு பொருள்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டு அழகாக இருந்தது. வீட்டுக்கார அம்மா நால்வருக்கும் டிபன் கொண்டு வந்து வைத்தார்கள்.
ஒரு பெண் இருக்கும் வீடு போல் மிக நேர்த்தியாக இருக்கிறதே. நீங்கள் தான் செய்தீர்களா?
இல்லை என்று தொடங்கிய அந்த அம்மாள் ஆமாம் என்று இழுத்துச் சொன்னாள்.
மூவரும் சிரித்தனர். சுசீலுக்கு மட்டும் வயிற்றில் நெருப்பு எரிந்தது.
டிபன் சாப்பிட்ட பின்னர் அவன் தந்தை சொன்னார். சுசீல் நீ எங்கள் உதவியில்லாமலே திருமணம் முடித்துக் கொண்டாய் என்று இவள் சொன்னாள். எங்களிடம் ஏன் மறைத்தாய்? நாங்கள் அவ்வளவு கொடியவர்களா? பாமினியைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா? நம் கவிதாவின் உயிர்த் தோழியாயிற்றே. எங்கே பாமினி எங்கள் மருமகளைக் கூப்பிடு என்றாள் அவன் தாய்.
பேச்சு மூச்சற்று நின்றான் சுசீல். வீட்டுக்காரம்மாவே பாமினியை அங்கே அழைத்து வந்தாள். பாமினி சுசீலின் பெற்றோரைக் கண்டதும் வேகமாக வந்து அவர்கள் காலில் விழுந்தாள். எங்களை மன்னித்து விடுங்கள் என்று அழுதாள்.
எழுந்திரம்மா. நீ எங்கள் பையனுக்கு மிகப் பொருத்தமானவள் தான்.
சரி நீங்கள் அங்கு வாருங்கள் உங்கள் திருமணத்தை மீண்டும் அங்கேயும் பதிவு செய்வோம் என்றனர் மகிழ்வுடன்.
இன்னும் ஒரு வேண்டுகோள்கூட இருக்கிறதம்மா, அப்பா என்றாள் கண்ணீரை நிறுத்தாமலே.
என்னம்மா சொல்லு என்று ஊக்குவித்தார் சுசீலின் தந்தை.
கவிதா....
தெரியுமம்மா, நீலிமா சொன்னாள். அவள் எங்களிடம் சொல்லாமலே இங்கே வந்து விட்டாள். உன்னிடம் அவள் வருவாள் என்று எனக்குத் தெரியும். அவளுடைய மணாளனும் உன் அண்ணன் தான் என்றும் தெரியும் அம்மா. எல்லோருமே நல்ல பிள்ளைகள் என்பதால் இதில் சாதியோ வேற்றுமையோ வராது. கவலைப் படாதேயம்மா. அவள் எங்கிருக்கிறாள் என்று உனக்குத் தெரியும் என்பதால் தான் நாங்கள் நேராக இங்கே வந்தோம். வாருங்கள் அவர்களையும் பார்ப்போம் என்றனர் அவர்கள்.
பாமினி நேரம் வரும்போது சொல்வேன் என்றாளே அது இதுதான் என்றறிந்த சுசீலின் மனம் தான் தேர்ந்தெடுத்த பாமினி சொக்கத் தங்கம் என மனதிற்குள்ளேயே உருகினான்.
சங்ககால களவொழுக்கம் இந்த நூற்றாண்டிலும் உயிர் பெறுகிறது.என்று பெருமிதப்பட்டாள் நீலிமா
நீயும் இவர்கள் போல் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லையா நீலிமா
எனக்கு நல்ல தலைவன் கிட்டியதும் என் தோழிகள் இருவரின் உதவியோடும் உங்கள் உதவியோடும் நானும் சங்ககால நாயகியாவேன் என்று சொல்லிச் சிரித்தாள் அவள்.
கவிதாவிற்கு அலைபேசியில் நாங்களும் உன் பெற்றோரும் அங்கு வருகிறோம். பிறகு திருமண நிலையம் போகலாம் என்றாள் பாமினி.
என்ன என்ன என்று திகைத்தாள் கவிதா.
ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. வருகிறோம் உன் உட்பியோடு காத்திரு என்று அலைபேசியை அணைத்தாள் பாமினி.
இவர்கள் கவிதாவின் வீட்டிற்குள் நுழையும்போதே சுசீலின் நண்பன் சகிதம் நவீனின் பெற்றோரும் நுழைந்தனர்.
எல்லோருமே வியப்பில் ஆழ்ந்தனர்.
மற்றவற்றை சொல்ல வேண்டியதில்லை தானே.
சங்க கால களவொழுக்கத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் அவர்களுடைய தோழ தோழியர் உதவியது போலவே இந்த நவயுகத்திலும் தோழ தோழியர் உதவியது குறிப்பிடத் தக்கது.
நட்பின் அடித்தளம் நன்கு கட்டமைக்கப்படுகிறது மீண்டும்.
சாதிகளின் வேற்றுமை விரைவில் குறைந்து சமூகநீதி தழைத்தோங்கும் எங்கும் இனி.
காதல் டேட்டிங்காய் வண்டுக்கு வண்டு தாவும் நோக்கிலில்லாது
தேர்ந்தெடுத்த இணையாய் களவொழுக்கம் கட்டமைக்கப்பட்டால் அது சிறப்பே.
புல்லாங்குழலன்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்