logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Chithra pagalavan

சிறுகதை வரிசை எண் # 57


தூமச்சீலை அடியே தெய்வானை! அடியே தெய்வானை! தலையில் கூடையைச் சுமந்துகொண்டுப் போறவளைப் பாத்து கத்திக்கொண்டே வேகமாகப் பின்னாலேயே போனாள் அவிழ்ந்த தலைமுடியை முடிஞ்சுக்கிட்டே எசக்கியம்மா. எசக்கி தட்டக்குச்சியாட்டம் இருந்தாலும் சுறுசுறுப்பாக இருப்பாள் முன் கொசுவத்தை ஏத்தி இடுப்பில் சொருகி இருந்ததால் விலா எலும்பு வரிச்சி வரிச்சியாக தெரிந்தன எக்ஸ்ரே படம் போல . சத்தம் வரும் தெசைப்பக்கம் திரும்பினாள் தெய்வானை. தெய்வானை ஆளு நல்ல ஓங்குதாங்கா செங்கறுப்பா இருந்தாள். காதுல கல்லுவச்ச மிஷியம்மா தோடு அவ நெறத்திற்கு தூக்கலா தெரிஞ்து. கல்லு வச்ச பேசரிமூக்குத்தி அவ மொடா மூக்கில துருத்திக் கொண்டிருந்தது,செம்பட்டைவிழுந்த கட்ட தலைமுடியை அரைகுறையா பின்னிப்போட்டிருந்தாள் தெய்வானை. ஓட்டமும் , நடையுமாக வந்த எசக்கியம்மாவைப்பாத்து என்னா ? " மதினி இம்புட்டு விரசா பின்னாடியே கத்திக்கிட்டே வாற, பாத்து வா, கீழ விழுந்துறபோற, இருக்கிற ரெண்டு எலும்பும் ஒடையப்போவுது. என்று சொல்லிக்கிட்டே பக்கத்தில் இருந்த வீட்டுத் திண்ணையில் கூடையையை இறக்கியவள் ஒனக்கு என்னா வேணும் வெள்ளைபூடா , புளியா ? கேட்டுகிட்டே புங்கமரத்தின் ஓரத்தில் நின்றாள் தெய்வானை . ஏளா செவிட்டுச் சிரிக்கி எத்தனவச கூப்புடுறது? நீ பாட்டுக்க போய்கிட்டே இருக்க கடுப்பாகினாள் எசக்கியம்மா. உச்சி வெயில் வருமுன்ன நாலு தெருவுல யாவாரத்தை பாக்கனும்ல ம்.... ஒனக்கென்னா எங்கண்ணே பொத்துனாப்பள வச்சிருக்கு ஒன்னை. எனக்கு அப்பிடியா? ம் .... சலித்து கொண்டாள் தெய்வானை. ஆமலு இத ஒன்ன சொல்லீருவிங்கடி. எல்லாத்துக்கும் என்னையப் பாத்தா பொசுபொசுனு இருக்கும்போல என்றாள் இறுமாப்புடன் எசக்கி . சரி, சரி எதுக்கு கூப்பிட்ட அதச்சொல்லு மொதல... ஏய் தெய்வானை "ஒனக்கு தெரியாதா சாமச்சாரம்?! இம்புட்டு நடந்துருக்கு, ஒம் புருஷனும் எட்டிக் கூட பாக்கலையாம்ல? "என்னா மதினி சொல்ற யாருக்கு என்னாச்சு விளங்குறாப்பள சொல்லு என தன் முந்திச் சீலையை எடுத்து மொகத்தில் வழிந்த வேர்வையை தொடைச்சுக்கிட்டே கேட்டாள் தெய்வானை . நம்ம அன்னமயிலு கர்ப்பப்பையை எடுத்துட்டாளாம், ஒரு மாசத்துக்கு மேலே படுத்தபடுக்கையா கெடக்கா ஏனு கேட்க நாதியில்லாம !. பொம்பள நல்ல உருளைகட்டையாட்டம் செவ செவனு இருந்தவ உருக்கொலைஞ்சு ஆளே அடையாளம் தெரியாம போனாடி... கர்ப்பப்பையை எடுக்கிற வயசா இது ? என உருகிச் சொன்னாள் எசக்கி . அதான் இந்தாளு கொஞ்ச நாளாவே ரவைக்கு வெல்லனவே வந்துறாப்பாள மதினி நாங் கூட கேட்டதுக்கு அவ ரூட் மாறிட்டானு சொன்னுச்சு ஒந்தம்பி என்று சொன்ன தெய்வானை, அவளுக்கு நல்லா வேணும் மதினி.. இன்னும் அவ சாகலையா ? வேகாலத்துடன் கேட்டாள் தெய்வானை. ஏன்டி அப்படி பேசுற ஒவாயில வண்ணப்புத்து வைக்க , அவ யாரு ஒங் கொழுந்தன் பொண்டாட்டிதான, கொழுந்தன் செத்ததுக்கப்பறம் அந்த கடையை ஒம் புருஷன்தான எடுத்துக்கிட்டான் . அதுக்குதான் எம் பாயப் பகிர்ந்துகிட்டாள அந்த எடுவட்ட சிரிக்கி மேலும் ஆங்காரமாய் பேசினாள் தெய்வானை . அது யாருனால? முப்பது கழிஞ்சன்னைக்கு , அன்னமயில கூப்புட அவ ஆத்தாவோட நானு வந்தேன் எல்லாரும் முன்னாடியும் என்னா சொன்னான் ஒம் புருஷாலு ஏந் தம்பி குடும்பத்தை எங்களுக்குப் பாத்துக்க தெரியும் கஞ்சி ஊத்த வக்கில்லைனு நெனச்சீங்களா !? அவுக அவுக ஜோலிய பாத்துக்கிட்டு போங்கன்னு சொன்னப்ப நீயுந்தான இருந்த வாய்ப் பொத்திக்கிட்டு எல்லாமறந்துப்போச்சோ என கேட்டாள் எசக்கி. அப்ப வெவரம் தெரியல.இந்த தூமச்சீலை உள்ளுக்குள்ள இம்புட்டு சூது வச்சுருப்பானு ஓசிக்காமா வெள்ளந்தியா இருந்து தொலைச்சுட்டேன். சரி நாந்தான் அப்படி இருந்தேனா இவளும் அந்த தூமச்சீலையோட சேர்ந்து என்னை மோசம் பண்ணிட்டா அவ செஞ்சது சரியா நீ சொல்லு என குமுறினாள் தெய்வம். ஏளா நல்லவமாறி நடிக்காத அன்னைக்கு வீட்டுக்குள்ள ஒன்னுமண்ணா புழங்கவிட்டுபுட்டு இப்ப ஒஞ்சவுரியத்துக்கு பேசுற நறுக்கென கேட்டாள் எசக்கி. நீயென்ன இப்படி ரோட்டுல நின்னுக் கொட்டித் தீக்கிற நம்ம சின்னத்தா மகதானே ஒன்னுமண்ணுமா வளந்தோம் .! நமக்கு ஒத்தாசைக்கு இருக்கட்டுமேனுதான எங்கொழுந்தனுக்கு கட்டிவச்சேன் சீர்செனத்தி எதுவும் வேண்ணாமுனு அதுக்கு எம்புட்டு பெரிய துரோகத்தை பண்ணிட்டா இந்த முண்ட .! எனக்கு வாச்சவன் சரியில்லயென ஆத்திரத்தைக் கொட்டினாள் தெய்வானை. அவ ஒன்னும் துரோகம் பண்ணல்லடீ ஓம் புருஷனும் நீயும்தான் அவளுக்கு துரோகம் பண்ணிருக்கீங்க என வெலமெடுத்துச் சொன்னாள் எசக்கி . ஏய் இங்கபாரு எம் புருஷன எதுக்கு வம்பிழுக்கிற உனக்கு மரியாதையில்ல பாத்துக்க, என்று ஆத்திரமாக பேசினாள் தெய்வானை. என்னாடி பெரிசா நல்ல புருஷனுக்கு வக்காலத்து வாங்குற!? ஒங்கவகுசி தெரியாதுன்னு நெனச்சியா ? சீக்காலி கொழுந்தனுக்கு கட்டிவச்சு ஒங்க வீட்டுப் பண்ணைக்கு ஆளு வேணுமுனு அவ பொழப்ப நாசம்பண்ணிட்டீங்க சொல்லும் போதே எசக்கிக்கு தொண்டையடைக்க அடியே அந்த கடையில தண்ணீ மோந்துட்டு வா என்றாள். இந்தா தண்ணீய குடி நான் கிளம்புறேன் கடுப்புடன் சொன்னாள், இருடி கொறய கேட்டுட்டுபோ இதெல்லாம் வீதியில பேசுற பேச்சா வீட்டுக்கு வா என்றாள் தெய்வானை . நா வீட்டுக்கு வர்றதிருக்கட்டும் உண்மையிலே நீ நல்ல மனுசியா இருந்தா கடேசியா அவள ஒருக்கப்பாரு என்று சொல்லும் போதே எசக்கியின் குரல் ஒடைஞ்சு அழுக ஆரம்பிச்சாள், அவளின் இந்த நெலமைக்கு நானுந்தான காரணமாயிட்டேன் புலம்பிக் கொண்டே மூக்கைப் சிந்தினாள் எசக்கி . ரோட்டில் போறவர்கள் இவர்களை வேடிக்கைப் பார்க்க டீ கடைப் பாண்டி யக்காவோவ் கொள்ளநேரமா நாத்தியும் நாத்தியும் மும்முரமா என்னதான் பேசுறீங்க, வாங்க டீக்குடிச்சுகிட்டேப் பேசுங்க நானும் கேட்டுக்கிறேன் என்றான் நக்கலாக . இங்கிருந்தவாறே மூடிக்கிட்டு வேலயப்பாரு சாடையாகச் சொன்னாள் தெய்வானை. என்ன மதினி இப்படியெல்லாம் பேசி மனச சங்கடப்படுத்திற ரொம்ப முடியாமவா இருக்கா என ஆதங்கமா கேட்டாள் தெய்வானை . ஆமா தெய்வானை இரண்டு வச கழிச்சுருக்கா மூனாவது நின்னப்போ ஆசுபத்திரியில் திட்டி திருப்பி அனுப்பிச்சுட்டாங்க ஒடம்பு வீணாப்போயிருமுனு அதுனால பெத்துக்கிறேனு சொன்னதுக்கு என்ன உரிமை கொண்டாட திட்டம் போடுறீயா ? ஒங்கக்காளுக்கு தெரிஞ்சு அம்புட்டுதான் (என்னமோ ஒனக்கு ரொம்ப பயப்படுறமாறி) மிரட்டியிருக்கான் ஒம் புருஷன் .பெறகு டவுன் ஆசுபத்திரிக்கு அவனே கூட்டிட்டுப் போய் வாம்பா கழிக்க வச்சுட்டு குடும்ப கட்டுப்பாடு பண்ணணும் விசாரிச்சதுக்கு டாக்டரம்மா சொல்லிருக்காங்க ஒடம்பு ரொம்ப வீக்கா இருக்கு குடும்பத்திலயும் இருக்கக்கூடாது , குடும்ப கட்டுப்பாடு இப்போதைக்கு பண்ணமுடியாதுனு சொல்ல., அதோடு வீட்டல விட்டுட்டுப்போனவந்தான். அப்பருந்தே இவளுக்கு தீட்டு நிக்காம ஊத்திக்கிட்டே இருக்கு போன் போட்டா எடுக்கல, மககிட்ட பெரியப்பாவை கடையில பாத்துக்கூட்டிவானு அனுப்பியிருக்கா .ஒம் புருஷாலு பொட்டப்புள்ள கடைக்கு வர்றது என்ன பழக்கம் ஐநூறு ஓவாயை கொடுத்து பெரியப்பாவுக்கு வேலக்கெடக்கு போ போ, இனிமே வரக்கூடாது புள்ளைய விரட்டியிருக்காரு மதினி . ஒத்த மகள வளக்கத்தானே, பொறந்த வீட்டுக்கு நீங்கெல்லாம் வந்து கூப்பிட்டப்பக்கூட , நா வரமா இவரு சொன்ன வார்த்தைக்காகத்தானே கூடவே இம்புட்டு இம்சையிலும் இருக்கேன் நாளைக்கு என்னக்கு ஏதோ ஒன்னு ஆயிருச்சுனா எம்புள்ளைய யாருப்பானு பாதகத்தி அம்புட்டு அழுகை அழுதா . வயித்தெரிச்ச என்னால சகிக்க முடியல தெய்வானை என கண்ணீர் சிந்தி பேச்சை நிப்பாட்டினாள் எசக்கி. இவ்வளவையும் கேட்ட தெய்வானை அய்யோவென நெஞ்சில் அடித்துக்கொண்டு மரத்தில் சாஞ்சவாறு கீழ உட்காந்தாள், இந்த தூமச்சீலை ஒரு வீட்டுக்குள் பண்ற இம்ச தாங்கமத்தான் பாவிமக அன்னமயிலுகிட்ட சண்டையைப் போட்டு வீட்டவிட்டு தொரத்தினேன், இந்தப்பாவத்தை நான் எங்கபோய் கழுவ.... தெய்வானை கதறினாள் . வெலங்காத பய வெளில இம்புட்டு அட்டூழியம் பண்ணுனது எனக்கு நெசமாவே தெரியாது மதினி. இன்னும் என்னென்ன பித்தலாட்டம் இருக்கோ அந்த சீலக்காரிக்குதான் வெளிச்சம். இந்த எடுவட்டபயகிட்ட நாமட்டும் என்ன பெரிசா பொழப்பு நடத்திக் கிழிச்சுட்டேன் அதெல்லாம் ஒன்னுமில்ல. சீசனுக்கு கிடைக்கிறத வாங்கி யாவாரம் பாக்குறேன். சரி விடு எழுந்திரு தெய்வானை என்னையச்சொல்லிப்புட்டு தெருவுல அழுது ஊறக் கூட்ற டீக்கடையில எல்லாரும் பாக்குறாங்க பாரு ., போனது போகட்டும் நீ மொதலபோய் ஒந்தங்கச்சியப்பாருனு சொன்னாள் எசக்கி. எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு நா போக வேதனைப்பட்டாள் . அன்னமயிலுக்கு ஒம்புருஷன் மேலதான் கோபம். அது சரிக்கா நான் போய் பாக்குறேன், அவளுக்கு ஒன்னும் ஆகாது, தைரியமா இருக்கச் சொல்லு யேன் ரெண்டு மக்களோடு அவ மகளையும் ஆளாக்குவேன். இது முக்காலும் சத்தியம் மதினி, என தீர்க்கமா சொல்லிக்கிட்டே கூடையையை தலையில் வைத்தாள் தெய்வானை... க.பாண்டிச்செல்வி மதுரை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.