logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Appusiva

சிறுகதை வரிசை எண் # 56


உறைநதி மென்மையாக இதமாக வருடிவிடுவது போலத்தான் இருந்தது. வலியே இல்லை. கடைசியாகத்தான் என் இதயத்தை எடுத்தேன். இதயத்தின் வெளிச்சுவரின் மேலே ஒட்டியபடி அந்த பூச்சி இருந்தது. எப்படி இது ஆரம்பித்தது என்பதை அறுதியிடமுடியவில்லை. கண்ணை விழித்தபோது எங்கும் இருள். முதலில் என் அறைமுழுதும் மூழ்கியிருந்த இருளை போக்க முயற்சித்தேன். எப்போதும் வைக்கும் இடத்தில் மெழுகுவர்த்தி இல்லை. இருளாக இருந்தாலும் கொஞ்சம் கண் பழகிய பிறகு சிறிதாவது உருவங்கள் தெரியும். ஆனால் இப்போது முழு இருள். கறுப்பு நிற வண்ணத்தை கலந்து, என் கண் முழுதும் கொட்டிவிட்டதுபோல. ஒரு துளிகூட நிழலாக எதுவும் தெரியவில்லை. இது போல் இருந்ததில்லை என்ற உணர்வே எனக்கு ஏற்படாமல் எப்போதும் பழகியது போல இருந்ததுதான் ஆச்சரியம். மெதுவாக கையால் தடவியபடி பூஜை அறையைத் திறந்தேன். அதன் கதவில் இருந்த சின்ன மணிகள் ஆடின. மோதிக்கொண்டன. ஆனால் அவையும் இருளின் உணர்வை தங்களுக்குள் பெற்றதுபோல் சத்தமில்லாமல் இருந்தன. அகல்விளக்கை தட்டுத்தடுமாறி தொட்டு அதை தடவிப் பார்த்தபோது அதில் திரியும் எண்ணெயும் இல்லாமல் இருந்தது. எனக்குள் சிரிப்பு வந்துவிட்டது. நான் பத்தினிதானே என்று தோன்ற, “விளக்கே எரி” என்று வாய்விட்டு சில தடவை சொன்னேன். என்னை மீறி சத்தமாய் மீண்டும் சிரிப்பு வந்தது. கையில் அங்கிருந்த எலுமிச்சை அறுக்கும் கத்தி தட்டுப்பட்டது. எதுவும் யோசிக்காமல் அதை எடுத்து என் கையில் சன்னமாக கோடு போட்டேன். சாணை பிடிக்கவேண்டும் போல. அழுத்தமாக போட வேண்டியிருந்தது. நரம்புகள் நாலைந்தை பிடுங்கி திரியாகத் திரித்து விளக்கில் இட்டேன். வழிந்த ரத்தத்தை அதில் ஊற்றி “ விளக்கே எரி” என்றவுடன் பக்கென்று பற்றி எரிய ஆரம்பித்தது அந்த தீபம். வெளிச்சத்தில் அங்கிருந்த பொருட்கள் துலங்க ஆரம்பித்தன. என் நிழல் அந்த அறையின் கதவு வழியாக வெளிச்சுவரில் விழுந்தது. என் உருவம் மிகவும் ஒடுங்கி ஒரு நேர்க்கோடு போல அங்கே தெரிந்தது. கைகளை நீட்ட அதுவும் குச்சி போலவே விழுந்தது. ஆனால் மற்ற பொருட்களின் நிழல்களில் மாறுதலில்லை. நான் மட்டுமே ஒடுங்கிப்போயிருக்கிறேன் என்பதாய் சமாதானம் செய்துகொண்டேன். ‘குண்டு என்று சொல்லிச்சொல்லி என்னை இகழ்வாயே, இப்போது பாரடா என அழகிய மெலிந்த தேகத்தை’ என்று உளற ஆரம்பித்தேன். ஆனாலும் வெறும் குச்சிபோல இருக்கும் என்னை அவன் மீண்டும் என்ன சொல்வானோ எனவும் தோன்றியது. பீரோவில் உடுத்தாமல் இருக்கும் புடவைகளை இனி என்ன செய்வது?!... யாருக்காவது கொடுத்துவிடலாமா எனவும் தோன்றியது. வெறும் ரிப்பன் போன்ற ஒரு துணி போதும், அப்படியே என்னை சுற்றிவிடலாம். வெளியே அவன் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். அன்றொரு நாள் ஆரம்பித்து, திடீரென்றுதான் தோன்றியது அந்த வலி. தொடர்ந்து சில நாளாய் இருந்த வலியின் வீரியம் என் உடலையே ஆட்டிப்போட்டது.. அடிவயிற்றில் இருந்து கிளம்பிய வலி வயிறு முழுவதும் பரவி நெஞ்சை அடைக்கும் அளவுக்கு இருந்தது. இதோ இந்த அறை முழுவதும் உருண்டேன். உள்ளே யாரோ புகுந்து கையில் கிடைக்கும் ஆயுதங்களால் என் வயிற்றின் உள் உறுப்புகளை குத்திக்கிளறும் வலி. தண்ணீரை முகம் கழுத்து என சிந்திக்கொண்டு குடித்துக்கொண்டே இருந்தேன். வெந்தயம் கை நிறைய அள்ளி வாயில் போட்டு விழுங்கினேன். சதுர சதுரமாய் இருக்கும் அந்த தானியம் எப்போது எனக்கு ஆச்சரியமளிக்கும் வஸ்து. வலி குறையவில்லை. இதுபோல அழகாக என்னை மயக்கும் ஒரு பொருள் ஆமணக்கு விதை. அதன் வண்ண ஜாலங்கள் எனக்கு பட்டாம்பூச்சியின் இறகுகளை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். விளக்கெண்ணெய் எடுத்து என் தொப்புளில் கொட்டிக்கொண்டேன். கை நிறைய எடுத்து உள்ளங்காலில் தேய்த்தேன். சூட்டுவலியாகவும் இல்லை இது. அடங்கவில்லை. துணியை எடுத்து வயிற்றை இறுக்கக் கட்டிக்கொண்டு அப்படியே மயங்கியவாறு படுத்திருந்தேன். அன்று அவன் தாமதமாகத்தான் வந்தான். வந்தவன், நான் அலங்கோலமாய் படுத்திருப்பதை, வீடு முழுதும் பொருட்கள் இறைந்து கிடப்பதை, தண்ணீர் சாரை சாரையாக ஓடிக்கொண்டிருப்பதை கண்டு என்ன புரிந்துகொண்டானோ, கத்த ஆரம்பித்தான். வெறும் வயிற்றுவலிக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்பதாக இருந்தது அவன் கத்தலின் தொனி. உட்கார்ந்து சாப்பிட இடம் சுத்தமாக இல்லை என்று கடைசியாக முணுமுணுத்தான். சாப்பிடவில்லை. வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கி வருவதாக சொன்னான். அப்போது மணி இரவு எட்டு இருக்கும். திரும்ப அவன் வரும்வரை என்னால் நகரமுடியவில்லை. பத்து மணிக்குமேல் வந்தான், அவன் மேல் ஹோட்டல் கடையின் மசாலா வாசனை அடித்தது. மருந்துகடைகள் மூடியாகிவிட்டது என்றான். எதுவும் நடக்காதது போல அறைக்குள் நுழைந்து அசந்து தூங்க ஆரம்பித்தான். இன்றுவரை அசந்து துங்கிக்கொண்டிருக்கிறான். நான் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். டேபிளில் அவனது செல்போன் இருந்தது. அதில் வெளிச்சம் வைக்கலாம் என்று ஆன் செய்தேன். அனால் அதில் டார்ச் இருந்த இடத்தில் ஒரு கறுப்பு புள்ளிதான் இருந்தது. ஆனால் ஆன் செய்த செல்லில் அந்த உருவம் தோன்றியது. அது என்னைப்போலவே அழகாக இருந்தது. என்னோடு பேசியது. “கையில் காயம் அதிகமா?” என்றது அந்த உருவம். நான் என் கையை பார்க்க, நரம்புகள் எடுக்கப்பட்ட கையில் ஒரு மெல்லிய கோடு மட்டுமே இருந்தது. “இல்லை…கொஞ்சம்தான்… நீ யார்?” அவள் அந்த கேள்விக்கு பதில் சொல்வதாக இல்லை. என் கேள்வியை அவள் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. அவள் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாள். சமயத்தில் சில வரிகள் மட்டும் எனக்கு புரிந்தது. மருத்துவம் தெரியுமாம் அவளுக்கு. நான் டாக்டர் ஆகவேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு. என் வயிற்றில் இருக்கும் உறுப்புகளை நீக்கச்சொன்னாள். நான் மெதுவாக அவளை பார்த்துக்கொண்டே வயிற்றின் உள்ளே கைவிட்டு வரிசையாக எடுத்து அந்த டேபிள் மேலே வைத்தேன். என் உள் உறுப்புகள் வைரம் போல மின்னின. அங்கே எந்த விளக்கும் தேவைப்படவில்லை. இயற்கையாகவே அங்கே ஒரு ஒளி பரவியது போல இருந்தது. அவன் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். “இதோ இதான் உனக்கு வலி தந்த இடம்… இதை சரி பண்ணிடலாம்…” என்றாள் அவள் “எப்படி? டாக்டர், முத்திடுச்சு… ஆபரேஷன் பண்ணினால்தான் சரியாகும்னு சொன்னாரே….. இவர் கூட அதுக்கு பணம் ஏற்பாடு செய்து தரேன்னு…” “அவங்களுக்கு தெரியாது. பணம் வந்தால்கூட வலி மறையாது… எனக்குதான் தெரியும்” “எப்படி சொல்ற… நீ ரொம்ப படிச்சவளோ?” “உன் மூளையை கேள்” என்று சொல்லிவிட்டு அவள் சட்டென்று மறைந்துபோனாள். என்னோடு அவளும் கோபித்துக்கொண்டாள் போல. அந்த உள் உறுப்புகளை தொட்டுப்பார்த்தேன். அவற்றில் நீல நிறமாக ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இரத்தம் சிவப்பு நிறமாகத்தானே இருக்கும்? ஒரு வேளை கனவோ என்று தோன்றியது. கனவு என்பது மனதில் உணர ஆரம்பிக்கும்போது அந்த கனவு தொடராது எனவும், விழிப்பு வந்துவிடும் எனவும் படித்ததாக ஞாபகம். ஆனால் எனக்கு விழிப்பு வரவில்லை. வயிற்றில் வலி இருந்துகொண்டே இருந்தது. கையில் கூட கிழித்த இடத்தில் வலித்தது. இது கனவில்லை. தலையில் தட்டி என் கைகளால் பிளந்தேன். மூளையை எடுத்து டேபிளில் இருந்த புத்தகம் மேல் வைத்தேன். வரிவரியாக குழப்பமான மடிப்புகளுடன் இருந்தது அது. அதில் ஒவ்வொரு பகுதியும் என் உடலில் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மய்யம் என்பதை உணர்ந்திருந்தேன். அப்படியானால் என உடலில் வலி ஏற்படுத்தும் இடத்தை கட்டுப்படுத்தும் பகுதியை கொஞ்சம் தட்டி சரி பண்ணினால் வலி போகும் என்று தோன்றியது. மெதுவாக மூளையை தொட்டுத் தடவினேன். அது ‘ஈஈ’ என்று என்னைப்பார்த்து சிரித்தது. முகம் போல எல்லாம் அது காட்டவில்லை. அது சிரிப்பதை என்னால் உணர முடிந்தது. “ஏ மூளையே… நீதான் என்னை ஆட்டுவிப்பாயாமே… நீ வெளியே இருக்கும்போது கூட என்னால் இயங்கமுடிகிறது… நீ என்ன மூளை…பொய் மூளை” என்றேன் நான். “ஆமாம்… அதென்னவோ நிஜம்தான். ஆனால் நான் உள்ளே இருக்கும்போது மட்டும் நீ புத்திசாலியாகவா இருந்தாய்? இதே அமைதி.. இதே அடக்கம்… லூசுபோல அவனுக்கு வேலை மட்டுமே செய்து கொடுக்கும் ஜடம். நான் உனக்குள்ளே இருப்பதும் இங்கே ஹாயாக இந்த புத்தகம் மேலே இருப்பதும் ஒன்ணுதான்…ஈஈஈஈ” “ஹேய்…ஓவரா பண்ணாதே… மூளை இல்லாமல் பேசக்கூட முடியாது. என் உடல் முழுதும் இயங்குது…அப்ப இது கனவுதான்னு புரியுது…” “புரிஞ்சா வச்சுக்கோ…என்னை இப்பவாவது நிம்மதியாவிடு” என்று சொல்லிவிட்டு அந்த புத்தகத்தின் பக்கத்தை புரட்ட ஆரம்பித்தது அந்த மூளை. எனக்கு மனம் முழுதும் பய ரேகை அப்பிக்கொள்ள ஆரம்பித்தது. கனவு என்று வலுக்கட்டாயமாக விழிக்க முயற்சித்தாலும் என்னால் முடியவில்லை. வலியை உணரவில்லையென்றாலும் கொஞ்சமாகவாவது உணர்கிறேன். ஒரு வேளை நான் இறந்துவிட்டேனோ எனவும் தோன்றியது. பீரோ முழுதும் இன்னமும் அணியாமல் இருக்கும் உடைகள், இவனின் தொழிலுக்கு கொடுத்த, அடகில் இருக்கும் இன்னமும் அணிந்துகூட பார்க்காத நகைகள், இவனும் நானும் சிரித்தபடி பேசும், சாப்பிடும், கனவுகள், இவன் என்னிடம் சிரித்து கொஞ்சி பேசுவதாக என் மனதில் எழுதிப்பார்த்த வரிகள் எதுவுமே அனுபவிக்காமல் இறந்துவிட்டேனா நான்? பயம் திகுதிகுவென்று எரிய ஆரம்பித்தது. சட்டென்று அந்த கத்தியை எடுத்து என் இதயதின் அருகில் கிழித்து அதை வெளியே எடுத்தேன். சிவப்பான அந்த இதயம் மெல்ல பச்சை நிறமாக மாறியது. அதன் மேலே இருந்து அந்த சின்ன பூச்சி வெளியே வந்தது. அது ஒரு கரப்பன் போலவும் ஆனால் பட்டையாக பேப்பர் போலவும் இருந்தது. ஒரு சாயலுக்கு இலைப்பூச்சி போல. ஆனால் வெறும் நீள்வட்ட வடிவம். அதன் முதுகை ஒட்டி ஒரு பட்டை போல இருந்தது. எலக்ரானிக் பொருட்களில் பார்த்திருக்கிறேன் அதை. வரிவரியாக…சர்க்யூட் போல… “நான் உன்னை கொஞ்சம் கிண்டல் செய்துவிட்டு வேறு எங்காவது போறேன்” என்றது அந்த பூச்சி. “ஏன்…நானென்ன தப்பு செய்தேன்…ஏன் என்னை கிண்டல் செய்யணும்?” “நீ எதுவுமே செய்ய மாட்டேங்கிறே… நீயும் ஒரு உயிர்தானே….உனக்கு வேண்டியதை கேட்கணும்…ஓடணும் …ஆடணும்… ஆனா நீ என்னவோ பொம்மை மாதிரி அவன் சொல்றதுக்கு தலையாட்டறதும்… படிச்சும் வேலைக்கு போக பயப்படறதும்… நீ சுத்த போர்… எனக்கு பிடிக்கலை…” மெல்லிய குரலில் ஆனால் எகத்தாளமாக சொன்னது அந்த பூச்சி. “ஆமாம்…ஆமாம்….” என்று குரல் எதிரொலித்தது. மூளையும். கிட்னியும்…இதயமும்..இன்னமும் அந்த அகலில் நரம்புகளும் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே போல கத்த ஆரம்பித்தன. அறையே கிடுகிடுப்பதை போல. அவற்றின் கேலிச்சிரிப்பு என் காதில் பளீர் பளீர் என்று குத்தியது. இவ்வளவு சிரிப்பு இவைகளுக்கு என என் மேலேயே வெறுப்பு வந்தது. நிச்சயம் நான் இறந்துவிட்டேன் என்பதை உணர ஆரம்பித்தேன். “நான்தான் உன் ஞாபகச்சின்னம். உன் ஆசைகள், கனவுகள் எல்லாமே இந்த சிப்பில் பதிச்சு வச்சிருக்கேன். இது வேஸ்ட். உன்னோட ஆகாது எனக்கு, அதான் எங்காவது குப்பைக்கு கூட போலாம்னு வெளியே வந்திட்டேன்” என்று சொல்லிவிட்டு கபகபவென்று சிரித்தது அந்த பூச்சி. எனக்கு வெறுப்பு அதிகரித்தது. நேற்று அவன் ஒரு பெரிய ஹாஸ்பிடலில் நேரம் வாங்கியிருந்தான். கொஞ்சம் செலவாகும் என்றாலும் ஆபரேஷன் செய்துவிடலாம் என்றும் சொன்னான். எனக்காக வெளியில் பணம் கேட்டிருப்பதாகவும் சொன்னான். கையில் இருந்த பணம் முழுவதும் சமீபத்தில் அவன் பெயரில் வாங்கிய இடத்துக்கு சரியாக போய்விட்டது, அவனும் என்ன செய்வான்? இறந்துவிட்டேனா என்பது வேறு பயமாக இருக்கிறது. மதியம் அவன் ஹாஸ்பிடலில் வாங்கிவந்திருந்த அப்பாயின்மெண்ட் காட்டிவிட்டு அவன் பேகில் வைத்தான். அதை எடுத்து வந்து இந்த மூளைகெட்ட மூளை , இதயம் இந்த ஞாபகப்பூச்சி இவற்றின் மூஞ்சியில் தூக்கி எறிய வேண்டும் போல் இருந்தது. அவை ஆரவாரமாய் கைகோர்த்தபடி ஆடிக்கொண்டிருந்தன. அவன் இன்னமும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். மெல்ல எழுந்து அவன் பேகை திறந்தேன். அந்த தாளை எடுத்துவந்து மூளையின் மேல் விட்டெறிந்தேன். என்னை கேள்வியாய் பார்த்தது அது. அவையெல்லாம் இணைந்து அந்த தாளை பிரித்து படித்து என்னை நிமிர்ந்து பார்த்தது. “உன் பேர்ல இருபது லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுக்க அப்ளிகேஷன் …இதை ஏன் எனக்கு காட்டற?” என்றது மூளை. ஒரு நிமிடம் அதிர்ந்துபோனேன். அடுத்த நொடி அவர்களின் சிரிப்பு என்னை தொற்றிக்கொண்டது. அந்த வீடே குலுங்கும் அளவுக்கு… இந்த உலகே ஆடும் அளவுக்கு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தேன். பயம் தொலைந்து சிரித்த என்னைக் கண்டு என் உடல் உறுப்புகளுக்கு பயம் வந்துவிட்டது. நான் சிரிப்பதை தாங்கமுடியாமல் அவையெல்லாம் அதனதன் இடங்களில் புகுந்துகொள்ள ஆரம்பித்தன. இதயம் மெதுவாக சத்தமில்லாமல் உள்ளே புகுந்து மூச்சு வாங்கியது. அந்த ஞாபக பூச்சி அன்னநடைபோட்டு தலைகுனிந்தபடி என்மேல் ஏறி இதயத்தின் சுவருடன் ஒட்டிக்கொண்டது. நான் இன்னமும் சிரித்துக்கொண்டிருந்தேன். அந்த பேப்பர்கள் என் கையில் இருந்து பறந்தன. தூக்கம் கலைந்து எழுந்த அவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு… போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்து திரும்பவும் தூங்க ஆரம்பித்தான். 1240words

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • C.Puvana Avatar
    C.Puvana - 2 years ago
    அருமையான கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • KALAYARASSY G Avatar
    KALAYARASSY G - 2 years ago
    கதை சிறப்பு. போட்டியில் வெல்ல வாழ்த்துகள்!