அண்டனூர் சுரா
சிறுகதை வரிசை எண்
# 52
அம்மையார் ஹைநூன்பீவி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2023
பிள்ளைக் கிணறு
அண்டனூர் சுரா
வலயத்தின் நடுவில் அக்கிணறு இருந்தது. வட்டமாக அமையப் பெற்ற குளம் என்பதால் அதற்கு இப்படியொரு பெயர், வலயம். சரளை நிலத்திலான குளத்தின் நடுவே ஆழமாய்த் தோண்டி கல், செங்கல், சுண்ணாம்பு இவற்றைக் கொண்டு கட்டப்பட்ட வாய் அகன்ற கிணறு. பெருமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுக்கையில் கிணற்றை விழுங்கி தண்ணீர் செல்லும். எந்தக் காலத்தில் வெட்டப்பட்ட கிணறோ, நாக்கைக் கடிக்கும் கோடையிலும் கிணற்றின் வாய் வரைக்குமாக தண்ணீர் கிடந்தது.
அவ்வூரில் எத்தனையோ நீர்நிலைகள் இருந்தன. இலஞ்சி, ஊருணி, ஊற்று, ஏரி, கம்மாய், கலிங்கு, கால், குளம், குட்டை, குண்டம், குமிழி, மடு, ஏம்பல் என்று. அத்தனையும் கோடைக்கு ஈரத்தைத் தொலைத்துவிட்டு தரை பித்த வெடுப்புகளாக வெடித்துக் காய்ந்துக் கிடக்க, பிள்ளைக் கிணற்றில் மட்டும் தண்ணீர் தழும்பிக் கிடந்தது. தாகம் தணிக்கத் தண்ணீர்த் தேடிக்கொண்டிருந்த அணிலி, அக்கிணற்றைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்து வாய்ப் பிளந்தாள்.
கோடை வெயில் பூமியைப் பொசுக்க தாவிக் கொண்டிருந்தது. அக்னியாறு தனக்குத் தண்ணீரற்று, நீண்டுக் காய்ந்து கிடந்தது. நீர்க்கொள்ளும் ஆறே தலைச்சுற்றி கானல் நீராக பெருமூச்சு விடுகையில் இந்த அணில்கள் எம்மாத்திரம்? வாலைத் தூக்கிக்கொண்டு தண்ணீர்த்தேடி ஓடவும் கையெடுத்து கும்பிட்டபடி வானத்தை பார்க்கவுமாக இருக்கையில்தான் அணிலிக்கு வாய் நிறைய தண்ணீர் கிடைத்திருந்தது.
கிணறு வட்டம் வட்டமாக அலையடித்துக் கிடந்தது. காளையின் முதுகில் ஈ அமர்கையில் அதன் தோல் சலனமிப்பதைப் போன்று கிணற்று நீர் சலனம் கட்டியது. அணிலி நினைத்துக்கொண்டாள், தன்னைப் பார்த்துவிட்டுதான் இந்தக் கிணறு இப்படியாக அலையடிக்கிறதென்று. வட்டம் வட்டமான அலைகள். எல்லைத் தாண்டாமல் கற்புக்கட்டும் அலைகள்.
அணிலிக்குத் தாகம் தீர்க்கும் தண்ணீராக மட்டும் அக்கிணறு இருந்திருக்கவில்லை. வானத்தின் வெட்கையை உள்ளிழுத்துக்கொண்டு நீரின் தண்மையைக் கொடுக்கும் கிணறாகவும் இருந்தது. அத்தண்ணீரைப் பார்த்ததும் அணிலி மட்டுமல்ல, அதன் பிள்ளைகளும் நீரைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் குதித்தார்கள்.
அக்கிணற்றுக்கும் அருகில் சற்றே தாழ்ந்த பள்ளத்தில் ஆணும் பெண்ணுமாய் இரு ஆக்காட்டி குருவிகள் அடையிருந்தன. அணிலியைப் பார்த்துவிட்ட அக்குருவிகள் யாருக்கோ செய்தி சொல்வதைப் போல டி, டி, டிட்டீ...என சத்தமிட்டன.
அணிலி அக்குருவியின் அலகைப் பார்த்தாள். நீர்நிலையொட்டி வாழும் ஆட்காட்டிக் குருவிகளின் அலகு சிவப்பாக இருக்கும். இக்குருவிகளின் அலகு மஞ்சளாக இருந்தது. மஞ்சள் அலகுடைய குருவி வறண்ட நிலக்குருவி என்பதை அவள் தெரிந்து வைத்திருந்தாள். அக்குருவிகள் மீது இரக்கம் கொண்டவளாய், பற்கள் கடிபடுவதைப் போல கீச்சிட்டாள். பதிலுக்குக் குரல் கொடுக்கும் குருவியல்ல ஆக்காட்டிகள். சத்தமிடுவதற்கு அவர்களுக்குக் காரணம் வேண்டும். அக்குருவிகள் அணிலியைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தன.
கிணற்றை உற்றுப் பார்த்தாள் அணிலி. கிணற்றின் மொத்த நீரும் அவளது கண்களுக்குள் நிறைந்திருந்தது. தாகம் தணிக்கத்தான் அவள் பிள்ளைகளுடன் இவ்வளவு தூரம் வந்திருந்தாள், இவ்வளவு தண்ணீரைப் பார்த்ததும் அதற்குள் இறங்கி குளிக்க வேண்டும் போலிருந்தது. அணிலி முதலில் கிணற்றுக்குள் இறங்கினாள். அவளுக்கு நீச்சல் தெரியும். நீந்துவதற்கேற்ப அவளது முகம் கூம்பு வடிவம் கொண்டிருந்தது. அவளது வாலும்கூட நீந்துவதற்கேற்ப இருந்தது. வாலை மேலாகத் தூக்கிக்கொண்டால் எவ்வளவு தூரமானாலும் அணில்களால் நீந்திவிட முடியும்.
கிணற்றுக்குள் இறங்கி குளிக்க வேண்டும் என்பது அவளது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. குளித்தல் என்பது தண்ணீரில் நனைவதல்ல, நீராடுதல். நீருக்குள் கோலங்கள் வரைதல். நீரை இரு கைகளாலும் அள்ளி வானத்திற்கு இறைத்தல். நீந்துவதற்காகவும் படைக்கப்பட்ட கால்களை இத்தனை காலம் ஓட மட்டும் பயன்படுத்திவிட்டேனே, என்பதாக நினைத்தாள். தான் நீந்தாத கால்களில் தன் பிள்ளைகள் நீந்தட்டுமென ஆவல் பெருக்குக் கொண்டாள்.
அணிலி கிணற்றுக்குள் இறங்குகையில் பயமோ, அத்தோ இருந்திருக்கவில்லை. அவள் குடியிருக்கும் தெங்கு மரத்திலிருந்து கீழே இறங்குவதைப் போலதான் அவள் கிணற்றுக்குள் இறங்கினாள். அவள் இறங்கியதும் அவளது பிள்ளைகள் அவளைப் போலவே கிணற்றுக்குள் இறங்கினார்கள். ஓடுவதைப் போன்றதல்ல நீந்துதல் என்பதைப் பிள்ளைகள் முதன்முறையாக உணர்ந்தார்கள். ஓடுதல் பூமியைப் பின்னுக்குத் தள்ளுவது. நீந்துதல் என்பது மிதத்தல். இதை உணர்த்திய இந்நாள் அணிலிக்குப் பெருநாளாகத் தெரிந்தது.
கிணற்றுக்குள் துள்ளல் போடுகையில்தான், தொண்டைக்குள் உறைந்துபோயிருந்த தாகம் நினைவுக்கு வந்தது. நீந்துவது என்பது இரண்டாவது பட்சம். முதலில் தாகம் தணித்துக்கொள்ள வேண்டும், போலிருந்தது. குளிக்கும் நீரை முதலில் குடித்துவிடுவது உள்ளுடம்புக்கு நல்லது. நீரின் தண்மைக்கேற்ப உடம்பின் வெப்பத்தை சமப்படுத்தும், என்பதை அணிலி தன் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தாள். பிள்ளைகள் நீரைத் தாகம் தணியக் குடித்தார்கள். தாகம் தணிந்ததும் அவர்கள் முன்னே விடவும் உற்சாகமாகத் துள்ளினார்கள். வாலை தண்ணீரில் ஊன்றி கரணமடித்தார்கள். ஒருவர் மீது ஒருவர் ஏறிக்கொண்டு கோபுரம் அமைத்தார்கள். தண்ணீருக்குள் சொருகல் பாய்ந்து தரையை நோக்கிச் சென்றார்கள். பிறகு மேல்மட்டத்திற்கு வந்து வானம் பார்க்க மல்லாக்க நீந்தினார்கள்.
கிணற்றுக்குளிலிருந்தபடி வானத்தைப் பார்க்கையில் வானம் அத்தனை விசாலமாகத் தெரிந்தது. மேகங்கள் மலையாக, குன்றாக, முகடாக திரண்டு மிதந்துக்கொண்டிருந்தன. அவ்வளவு மேகமும் ஒன்றுகூடி மழையாகக் கொட்டினால் எப்படியிருக்குமென அணிலி ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள். மழைக்கு ஒரு விசேசக் குணமுண்டு. பூமியை ஈரப்படுத்துவது இரண்டாவது பட்சம். பள்ளங்களை மேட்டிற்கு நிகராக சமப்படுத்துவது அதன் முதன்மைக் குணமாக இருந்தது. அதை நினைக்கையில் அவளால் மேகத்தைக் கையெடுத்து கும்பிடாமல் இருக்க முடியவில்லை.
வாலை நீரில் ஊன்றி, தலையை அலையில் அணைத்து கையெடுத்துக் கும்பிட்டாள். அப்போது, ஆக்காட்டிக் குருவி இறக்கையை வேகமாக அடித்துக்கொண்டு டி, டி, டிட்டீ எனச் சத்தம் கொடுத்தப்படி கிணற்றின் வாயை ஒரு சுற்றுச்சுற்றி மறைந்தது. முன்பு ஒலித்ததைப் போல இந்தக் கீச்சிடுதல் இருந்திருக்கவில்லை. யாரையோ எச்சிரிக்கைப் படுத்துவதைப் போல அதன் சத்தமிருந்தது. அணிலி, சுதாரிப்பானாள். அவளைச் சுற்றி நீந்திக் கொண்டிருந்த பிள்ளைகளை அரற்றினாள். அவளது அரற்றலில் பிள்ளைகள் குதியாட்டம் நிறுத்தி அமைதிக்கு வந்தாரகள்.
கிணற்றின் பொந்து, துளை, வெடிப்புகளிலிருந்து சாரையன்கள் வெளியே எட்டிப் பார்த்தார்கள். அத்தனை பேரும் ஒன்று போல பார்க்கையில் அணிலி சற்றே நடுங்கிப் போனாள். ஒரு சாரையன் பொந்திலிருந்து இறங்கி, தண்ணீருக்குள் குதித்தான். அவனது வாய் ஆ..வென திறந்தே இருந்தது. அணிலியின் முகத்தைப் பார்த்து இரண்டாக வகுபட்ட நாக்கை நீட்டிப் பயங்காட்டினான். அவனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக நீருக்குள் குதித்தார்கள். சற்றுநேரத்தில் கிணறு முழுக்கவும் சாரையன்களாக இருந்தார்கள். அலையோடு அலையாக, நுரையாக நீரில் மிதந்தார்கள்.
சாரையன்களைக் கண்டுவிட்ட அணிலி, தன் பிள்ளைகளை இறுக அணைத்துக் கொண்டாள். அவர்களைத் தைரியப்படுத்தினாள். தன் மீதும் வால் மீதும் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு கிணற்றின் சுவரில் ஒடுங்கினாள்.
" அம்மா, இந்தச் சாரையன்களுக்கு நஞ்சு பல்லிலா, நாக்கிலா?” கேட்டான் ஓர் அணிற்பிள்ளை.
" எதன் நஞ்சையும் முறிக்கும் சக்தி தண்ணீருக்குண்டு. தண்ணீரில் வாழும் சாரையன்களுக்கு நஞ்சில்லை" என்றாள் அணிலி.
" ஆனாலும் பயமாக இருக்கிறதே?"
" இந்நேரத்தில் தைரியம் முக்கியம் "
" தைரியம் என்பதென்ன?"
" பயமில்லாத மாதிரி நடிப்பது"
அணிலி இதைச் சொன்னதும் பிள்ளைகள் அத்தனை பேரும் வீரம் கொண்டவரைப் போல நிமிர்ந்தார்கள்.
ஒரு சாரையன் அணிலியைச் சுற்றி வந்தான். அவனது நாக்கை மீசையைப் போல சுழற்றிப் பயங்காட்டினான். நீண்ட வாலால் தண்ணீரை ஓங்கியடித்தபடி சொன்னான். "தண்ணீரை நீங்கள் தீட்டாக்கி விட்டீர்கள்"
சாரையன் சொன்னது அணிலிக்கு வியப்பாக இருந்தது. தீட்டு என்கிற சொல் அவளது செவியைத் தீய்ப்பதாக இருந்தது.
" தண்ணீரையும் நெருப்பையும் யாராலும் தீட்டாக்க முடியாது” என்றாள் அணிலி.
" நாங்கள் குளிக்கிற குளத்தில் நீங்கள் எப்படி குளிக்கலாம்?"
" நீர் என்பது எல்லாருக்கும் பொதுதானே?"
" நீர் பொதுவாக இருக்கலாம். கிணறு எப்படிப் பொதுவாகும்?"
"கிணறு வெறும் கிடங்காக இருந்தால் அது ஒருவருக்கு உரிமையுடையதாக இருக்கலாம். தண்ணீர் வானம் தருவது. ஆமையன், தவளையன், மீனாள்,.. என்று பலருக்கும் அது உரிமையானது”
"எங்கள் கிணற்றில் இறங்கி குளித்ததோடில்லாமல் வாதம்வேறு செய்கிறாயா?" என்ற ஒரு சாரையன் தன் வாயைத் திறந்துகொண்டு அணிலி முன்னே வந்தான். பதிலுக்கு அணிலி தன் நீண்ட பற்களைக் காட்டினாள்.
" தண்ணீரைத் தீட்டாக்கிவிட்டு மிரட்டவும் செய்கிறாயா?" சாரையன்கள் அணிலி மற்றும் பிள்ளைகளை வட்டம் கட்டினார்கள். அணிலியின் முகம் முள் கொண்ட காயாக மாறியது. எதற்கும் பயப்படாதவளைப் போல நிமிர்ந்து நின்றாள்.
" உன்னை நாங்கள் என்ன செய்கிறோமென பாரும்" என்ற ஒரு சாரையன் காற்றின் ஒரு கிளையைப் பிடித்துக்கொண்டு வானம் நோக்கி ஏறினான். அவனது வாலைப் பிடித்துக்கொண்டு மற்றொருவன் ஏறினான். அவனைப் பிடுத்துக்கொண்டு அடுத்தடுத்தவர்கள் ஏறினார்கள். நீண்ட கொடியாக அவர்கள் வானத்திற்கும் பூமிக்குமாகத் தொங்கிக் கிடந்தார்கள்.
ஒரு சாரையன் வானத்தை நெருங்கியிருந்தான். " நாங்கள் குளிக்கிற கிணற்றில் அணிலும் அதன் பிள்ளைகளும் குளித்து நீரைத் தீட்டாக்கி விட்டார்கள் " என்றவாறு வானத்திடம் முறையிட்டான்.
வானம் இதைக் கேட்க மின்னல் வெட்டியது. சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, "நீர் என்பது எல்லாருக்கும் பொதுதானே" என்றது. இந்தப் பதிலைச் சாரையன் எதிர்பார்த்திருக்கவில்லை. அடுத்து அவன் மேகத்திடம் முறையிட்டான். மேகம் நின்று நிதானமாக பதில் சொன்னது.
"நான்தானே பூமியில் மழையாக பெய்கிறேன். நல்லார் ஒருவர் இருப்பின் அவருக்காக எல்லாருக்குமாக பெய்கிறேன்"
சாரையனின் கண்கள் கட்டிக்கொண்டன. அவனது முகம் சிவந்து கோரமுகம் கண்டது. மேகங்கள் திரண்டும் இருண்டும் வந்தன. மேகக்குன்றுகள் ஒன்றையொன்று மோதிக்கொண்டு மின்னல்களாக வெட்டின.
இப்போது ஒரு சாரையன் விபரீதமாக நினைத்தான். தன் இரட்டை நாக்கை நீட்டி, மின்னலைப் பிடித்தான். மின்னோட்டத்தை தன் உடம்பின் வழியே அடுத்தடுத்த சாரையன்கள் வழியே கிணற்றுக்குள் பாய்ச்சினான்.
இரு மின்சுமைகள் மின்னல்கள் உரசிக் கொண்டதில் கிணற்றுக்குள் மின்னல் மூன்று கொடிகளாக வெட்டின. மின்னோட்டம் நீரின் வழியே பிள்ளைகளைப் பற்றின. கிணற்றுக்குள் நீர் தீப்பிடித்துக் கொண்டது. அணிலிக்கு என்னவோ புரியவந்தது. அதை நினைக்கவும் கண் கொண்டு பார்க்கவும் தலைச்சுற்றியது. அத்தனை வேகமாக கிணற்றிலிருந்து தாவினாள். பிள்ளைகளை வாறியணைத்து தூக்கினாள். அதற்குள் அவளது நான்கு பிள்ளைகள் கிணற்றுக்குள் செத்து சருகு போல மிதந்தார்கள். இரு பிள்ளைகளின் முதுகில் தீ பற்றிக் கொண்டது.
அணிலி முகுது எரியும் பிள்ளைகளைக் கையில் ஏந்திக்கொண்டு ஓடினாள். அவளால் எல்லாப் பிள்ளைகளையும் காப்பாற்ற முடியவில்லை. பிள்ளைகளை வாழை இலைகளில் படுக்க வைத்து, கிணற்றுப்பாசான் பூண்டைத் தேடி பறித்து, அதைப் பிழிந்து தீக்காயங்கள் மீது வடியவிட்டாள். கற்றாழை ஒடித்துவந்து அதன் தோலை உரித்து, அதன் சதையைப் புண் மீது உலர்த்தினாள்.
பிள்ளைகள் வலியால் துடித்தார்கள். கைகளால் வயிற்றில் அடித்துக்கொண்டார்கள். வானத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எங்கள் உயிரைப் பறித்துக்கொள்ள கெஞ்சி மன்றாடினார்கள். உயிர் வதையை விடவும் உயிரை இழப்பது அவர்களுக்குத் தேவலாம் போன்றிருந்தது.
என்ன நடந்ததென்று அணிலிக்குத் தெரியவில்லை. தீயை அணைக்கும் சக்தி நீருக்கு உண்டு, என்றே இத்தனை நாட்களும் அவள் நினைத்துவந்தாள். நீர் அவர்களைச் சுட்டுவிட்டதை அவளால் நம்ப முடியவில்லை. நீருக்குள் நெருப்பு உண்டு என்பதை அவள் முதன்முறையாக உணர்ந்தாள். தீக்கு ஆயிரம் கால்கள். அத்தனையும் அவர்களின் முதுகில் ஓடுவதைப் போலவும் ஊர்வதைப் போலவும் இருந்தன. தீக்குப் பற்களும் இருக்கும் போலும். அவர்களின் முதுகைக் கோரைப் பற்கள் கடித்துக் குதறி பிராண்டின. தீக்குள் நஞ்சும் இருக்கும் போலும். அதன் வீரியம் முதுகு வழியே உடம்பெங்கும் பரவுவதாக இருந்தது.
அவர்களின் உடம்பு அவர்களுக்கு நாறியது. மயிர் பொசுங்குவது உயிர் பொசுங்குவதைப் போலிருந்தது. சற்றுமுன் தணித்த தாகம் எங்கே போனதென்று தெரியாது மறுதாகமெடுத்தது. தண்ணீர்க்காக நாக்கு தவியாய் தவித்தாலும் தண்ணீரை நினைக்க அவர்களுக்குப் பயமாக இருந்தது.
பிள்ளைகளை அவள் கையில் ஏந்திக் கொண்டு திசை கண்ட பக்கம் ஓடினாள். ஒவ்வொரு வீட்டின் கதவுகளைத் தட்டி நீதி கேட்டாள். யாரும் அவளுக்காக கதவைத் திறக்கவோ, குரல் கொடுக்கவோ இல்லை. எதிர்படும் யாரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, அவளுக்கு ஏற்பட்ட இன்னலைச் சொன்னாள். யாரும் அவளுக்காக இரங்குவதாக இல்லை.
அணில்கள் வாழ்ந்திருந்த நத்தம் சற்றுநேரத்தில் துக்கக் காடானது. வானத்தில் கழுகுகள் வட்டங்கட்டின. காக்கைகள் மார்பில் அடித்துக்கொண்டும் கரைந்துகொண்டும் செய்திச் சொல்லிச் சென்றன. ஆந்தைகள் பகலிலும் அலறின. தொட்டாற்சிணுங்கிகள் செய்திகள் கேட்டு நடுங்கி, தழைகளை மண்ணில் புதைத்துக் கொண்டன. ஊமத்தம் பூக்கள் பூத்து மாலையாகாமல் உதிர்ந்தன. வெள்ளையாகப் பூக்கும் காகித பூக்கள் சிவந்து உதிர்ந்தன. சில்வண்டு கோரமாய் அந்த இரவிலும் உரக்க ஓலமிட்டது. அணிற்பிள்ளைகள் வாழிடமாகக் கொண்ட தெங்கு மரங்கள் தன் காய்களை முற்றவிடாமல் குரும்பைகளாக உதிர்த்துத் தள்ளின.
அணிலிக்குத் தண்ணீர் மீது கோபமும் வெறுப்பும் பிறந்தது. தண்ணீரின் கற்பு மீது அவளுக்குச் சந்தேகம் வந்தது. தண்ணீருக்கும் என் கண்ணீருக்கும் என்ன வித்தியாசமென்று அவளுக்குத் தெரியவில்லை. பிள்ளைகளை ஏந்திக் கொண்டு வயல்வெளி, காடு, கழனிகளைச் சுற்றி வந்தாள். பிள்ளைகளின் முதுகில் விழுந்திருந்த தீக்காயங்களை மருத்துவச் செடிகள் ஆற்றிக் கொடுத்தன. காற்று தன் கைக்குட்டையால் ஒத்தடமாகத் துடைத்து உலர்த்திக் கொடுத்தது.
புண்கள் மெல்ல ஆறி வந்தன. புண்கள் ஆறியென்ன, தழும்புகள் ஆற வேண்டுமே? தழும்புகள் பெரிய சுவடாக தோலில் அப்பிக் கிடந்தன. தழும்புகள் மீது அவள் ஆலிவ் இலைகளாலான எண்ணெயைத் தடவி ஒத்தடம் கொடுத்தாள். இலையோடு மஞ்சளைச் சேர்த்து அரைத்து பற்றிட்டாள். தண்ணீர் தன் இனத்தின் மீது நிகழ்த்திய இப்படியான அரங்கேற்றத்தை நினைத்து மனதிற்குள் புழுங்கினாள். அணிலியின் மகவு, பேரன், பேத்தி, தலைமுறை தாண்டியும் பிள்ளைகளின் முதுகில் விழுந்திருந்த கோடுகள் மறைவதாக இல்லை.
ஒரு நாள் ஒரு அணிற்பிள்ளையான் கேட்டான், “நம் முதுகில் கோடுகள் எப்படியாம் விழுந்தது?”
அணிலி, அக்கோடுகளை அருகம்புற்களால் நீவிக் கொடுத்தபடி சொன்னாள், “கடவுள் நமக்குக் கொடுத்தக் கொடுகள் இவை”
“ நம் முதுகில் மட்டுமேன் இந்தக் கோடுகள்?”
“ ஏனென்றால் நாம் கடவுளின் பிள்ளைகள்”
பிள்ளைகள் இதை நம்பினார்கள். நாங்கள் கடவுளின் பிள்ளைகளென சக உயிரிகளிடத்தில் சொல்லித் திரிந்தார்கள். தான் கடவுளின் குழந்தைகள் என்கிற பெருமிதத்தில் காடு, கழனிகளைச் சுற்றி வந்தார்கள்.
இப்படியான ஒரு நாளில் அந்தக் கடவுளின் பிள்ளைகள் மீது அடுத்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. நிறைய அல்ல, கொஞ்சம். கொஞ்சம் கூட இல்லை, இவ்வளவேதான்.
அணிற்பிள்ளைகள் வசிக்கும் தெங்கு மரத்தில் ஏறிய சிலர் விரியன்கள் அவர்கள் அருந்தும் இளநீரில் மலப்புழை வழியே புழுக்களைக் கழித்துச் சென்றிருந்தார்கள்.
- அண்டனூர் சுரா
மகாத்மா நகர்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை – மாவட்டம்
-613301
அலைபேசி - 9585657108
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்