logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Bejo Shyline

சிறுகதை வரிசை எண் # 51


ஜாவ்லா அந்தக் கூடுகளுக்காக நா பட்டப் பாடு எனக்குத் தான் தெரியும். மழைக்கும், வெயிலுக்கும் தனக்க கம்பி வலைய மறைக்கத் துணியில்லாம குளிராலயும், காத்தாலயும் துருப்புடிச்சு போயிருந்துச்சு. என்னத்துக்கு இதெல்லாஞ் செஞ்சியோனு அம்மா அடிக்கடி திட்டுவா. அப்பா சாவதுக்கு முந்திச் சொன்னாரு பத்தாயிரம் ரூவாய தொலச்சிருப்பனு. தெரிஞ்சும் தெரியாமலும் தொலைச்ச பணமெல்லாம் அவரோட ஞாபகத்துக்கு வரல. ஹாஸ்பிட்டல்ல ஒரு பக்கமா படுத்திருந்து இதச் சொல்லும்போதே செத்துப்போவருங்கது எதிர்பார்த்தது தான். அப்பாவப் போல கூட்டுக்காக நா ஒருபோதும் வருத்தப்படல. அந்தக் கூடும் அப்பாவுக்காக வருத்தப்படாம இருக்கதுனாலத் தான் நா இன்னும் அத எடம் மாத்தி வைக்காம இருக்கேன். ஒருவேளை என்னை நானே அசச்சுட்டு இருக்கதாலயும். எல்லாவனும் உயிரோடிருக்கும்போதே அப்பாக்கள கொன்னானுவ. நானோ அப்பா செத்த பொறவு தான் அவரக் கொன்னேன். ஒரு தடவக் கூட அவருக்க பெயரோடி தோற்றம் மறைவுனு போட்டிருந்த கல்லறைய நா பாக்கப்போனதில்ல. சவப் பெட்டிய கயிறால கெட்டி எறக்கும் போது அம்மாக்காரி மண்ணள்ளி போடாம கதறிக் குழிக்குள்ள விழப்போனா. அவ விழுந்திருந்தா வருசா வருசம் எடுக்குற ஆண்டுச் செலவு மிச்சமாயிருக்கும். அதுக்காக நான் அவ மரணத்த விரும்புறேன்னு அர்த்தமில்ல. ஏற்கனவே செத்துப்போனவள திரும்பத் திரும்ப எப்படி ஒருத்தனால கொல்ல முடியும்?‌ ஒருவேளை செத்தும் போயிருக்கலாம். மரணம் யாரையும் விடாதே. இதுபோல ஒரு கூண்ட நா எட்டாயிரம் ரூவா குடுத்து செஞ்சேன். போவதுக்கு மட்டுமே வழிகளுள்ள அந்தக் கூண்டுக்குள்ள இதுவரைக்கும் நா வளத்தி; நா வளத்ததாலயே செத்துப்போன லவ்பேட்ஸ்களோட சரீரம் காய்ஞ்சி இத்துப் போய் ஞாபகங்களுக்கு அஞ்சியே இன்னும் உள்ள கெடக்கும். ஒருவேளை மக்கியும் போயிருக்கலாம். இருபத்தி நாலு மணிநேரமும் தெனைய தின்னுட்டு எந்நேரமும் புணர்ந்து திரியுற இந்த லவ் பேர்ட்ஸ் அசிங்கமான பிறவிகள்னு இப்போ எண்ணத் தோணல. கோவத்துல கூரிய அலகால கொத்திக் கொல்லவும் தயக்கங் காட்டாத இந்தக் கூதரைகளுக்காக வருத்தப்படக் கூடாதுனு தான் சுத்தம் செய்யாமப் போடலனு இல்ல. என்னால் சுத்தம் பண்ணி இன்னும் ஒரு அஞ்சு ஜோடி வாங்கி போட்டுருக்க முடியும். அதுபோல போவதுக்கு மட்டுமே வழிகளுள்ள அந்த கூண்டுக்குள்ள என்னுடைய கைகள் நுழைஞ்சு வேதனையையும், வெப்ராளத்தையும் தாரத நா தவிர்த்தேன்னு சொல்லீர முடியாது. உண்மையிலேயே எனக்கு வேலை செய்ய பல விதங்கள்ல மடி. அதான் எல்லாத்தையும் நிறுத்தி பாஸ் பண்ரது போல அப்டியே விட்டுட்டேன். மனுஷங்க போலத் தானே நாமளும் இருக்கோம்? இல்லையா? செரி, மனுஷங்க எப்படி இருப்பாங்க? எப்படி நடப்பாங்க? யாரை ஏய்ப்பாங்க? யாரை தொலைப்பாங்க? யாரைக் கிழிப்பாங்க? யாரை ஒடைப்பாங்க? யாரை அறுப்பாங்க? இதெல்லாம் பறவைளுக்குத் தெரியுமா? அப்டியே தெரிஞ்சாலும் ஒரு காகம் மட்டும் தெனமும் சிகரெட் வலிச்சி பொகைய ஊதித் தள்ளும். பொகைய வெளிய ஊதித் தள்ளும் போது பரிகாசமா பல்லிளிக்கும்‌. திக்கத்து இருக்கும் போது இப்போ கணக்குப் போட்டு பாரு கூட்டுக்கு மட்டுமே பதினெட்டாயிரம் செலவு பண்ணி தொலச்சிட்டியேலனு என்னோட இன்னொரு அப்பா சொன்னாரு. காதுல வாங்காம இருந்தேன். அதக்கொண்டு மாடில வெச்சா என்னேணு அதே அம்மா அதட்டுனா. செத்துப் போனவங்கள பக்திப் பேசாதுங்கனு சொன்னேன். யாருக்கும் கேக்கல. எனக்கொரு கயிறும் இருபது முப்பது சிடேஷன் டேப்லட்ஸ்சும் வாங்கித் தர முடியுமானு கேட்டேன். எந்த பதிலும் இல்ல. என் பாக்கெட் வாய்ப் பொழந்து சிரிச்சுச்சி. நானும் சிரிச்சேன். யாருக்காவது கேக்கணும்னு ஒரு வசதிக்காகத் தான்னு மறுபடியும் சொன்னேன். சொன்னத கேட்டுக்கிட்டதப் போல வயசான என் செல்ல நாய் கொலச்சுது. அந்த நாய்க்கு உயிரே இல்ல. சீக்கிரமே சாவதுக்கான வாய்ப்புண்டு. நாளைக்கு ரெண்டு பூனைகள வாங்கணும். எனக்குப் பசிக்குது. சோறும் ரசமும் வேண்டாம் பரோட்டாவும் எறச்சியுமே வேணும். கடிக்கச் சில எலும்புகளும் வேணும். வரிசையா மேலோடி அடுக்கியிருக்க இந்த கூண்டுகளுக்குள்ள பின்சஸ், ஜாவா, ஆப்ரிக்கன்னு நா வாங்கி வளத்த பறவைகளுக்காக முட்டை போட்டு அடகாக்க வெச்சிருந்த பானைகளுக்குள்ள சிலந்தி கூடு கட்டியிருந்துச்சி. பிச்சிப் போட்ட சவரி நாருவ வடிவா சைக்கோ தெரப்பிய ஞாபகப்படுத்திச்சு. இது தான் வாழ்க்கைனு என்னை நானே ஒரு நொடி ஏமாத்திக்கிட்டேன். தண்ணிக்காவும் ஆகாரத்துக்காகவும் வெச்சிருந்த பாத்திரங்களெல்லாம் தன்னோட முழுசான வேஷங்கள எனக்கு காட்டிச்சு. ஓ…அதனாலத் தான் எதையுமே சுத்தம் பண்ணாம வெச்சிருக்குறேன்னு சொன்னா அதுவும் உண்மையில்ல. எது தான் உண்மையான பொய்? எல்லாமே உண்மையோட பொய். நெனச்சாலே கொமட்டுது. யாரை? யாருக்கு? வெறி! வெறி! கொலை வெறி இல்ல கொழுப்பு வெறி. ஆமா கொழுப்பு வெறினு தான் நார்மலான மக்கள் சொன்னது. நல்ல அடி குடுத்து வளக்காத கொறைனு அம்மா வருத்தப்பட்டா. அதே சமயம் நீயே ஒடஞ்சா எப்டிடேணும் அவ கேக்குறா? பதில் சொல்லுற தொலைவுக்கு நா இன்னும் போகல. ஏதாவது செஞ்சாகணுமேணு தூவப் பட்டிருந்த ரோஜா இதழ்கள பெறக்கி அது மக்குறதுக்காக டைரில பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன். அந்த டைரிய தெறக்கபோறதே இல்ல. அதுவொரு தேவையற்றதொரு டைரி. அதுடைரியோ? சவப்பெட்டியோ? ரெண்டும் ஒண்ணு. ஒருவேளை எனக்கேத் தெரியாமல் என்னை நானே அடக்கம் பண்ணத் தொடங்கிட்டேனா? மூணோ நாலோ முப்பதுல தொட்டுச்சு. டிங் டரடரிங்குனு பாட்டு பாடிச்சு. ஏன் முப்பதுல தொட்டதும் பாட்டு பாடுது? வழக்கமா பனிரெண்டுல தானே பாட்டு வரும்? இந்தப் பறவைங்க தான் பாடுதோ? என்னுடைய பறவைங்க என்னை ஒருபோதும் நன்றியுணர்வோடி பாத்ததில்ல. அதுனால அதுவ பாடுறதுக்கு நான் தகுதியில்லாதவன். இந்த பாட்டப் போல ஓசைங்க. ஓசைங்களப் போல தடத் தடத் தட நொட நொட தொடனு இரைச்சல். கண்ணு முழிச்சாலோ அந்தப் பறவைங்கள துடிதுடிக்க கொன்னுருக்கணும்னு ஏக்கத்துல அலறுவேன். ஏன் எனக்கு இப்படி நேர்ந்தது‌? ஏன் நோவுது? இப்படித்தான் என்னை மாதிரி ஒரு சோர்வான ஆளுகிட்ட மரத்திருந்த கோபத்தோட பெருவெடிப்பால என்னைப் போலயே எல்லாத்தையும் கொறஞ்ச விலைக்கே வித்தேன். எனக்கு நஷ்டம் தான் இருந்தாலும் வித்தேன். ஒருவேளை கோழி வளத்திருக்கலாம். காடை கூட நல்ல தேர்வுனு தெரிஞ்ச தெரியாதவங்கனு பலர் புகழஞ்சலிய செலுத்துனாங்க. எதுக்கு இது தேவை இல்லாத வேலைனு சொல்லுற ஒரே ஒருத்தர் மட்டுமே சொன்னாரு. அவர் பல இடங்கள்ல மரிச்சு போயிட்டதா விஷயத்தை கேள்விப்பட்டு அவருக்காக ஒவ்வொருத்தரோட வீடுகளுக்கா புகுந்தேன். போயிட்டு வாரேன்னு சொல்லக்கூடாதாம் போறேன்னு தான் சொல்லணுமாம் பிணங்களை போல. ஒரு சாக்பீஸ் நெத்தீல விழுந்ததும் கேள்வி வந்தது. கேன் யூ ரீபீட் வாட் ஐ செட் நவ்னு. நா பேத்தையன் மாதிரி நின்னதும் எல்லோரும் சிரிச்சாங்க. எல்லோரையும் பாத்து கேள்வி கேட்டக் கொரலும் சிரிச்சுது. நானும் சிரிச்சேன். என்னோட சிரிப்பு வித்தியாசமானது. ஜோசியத்த நம்புறவங்க இன்றைய ராசி பலன பாத்து சிரிக்கிறத போலயே சிரிக்கிறதுனால என்னை நானே தப்பள தாமஸ்னு சொல்லிப்பேன். அதுல ஏதும் தப்பிருக்கதா தெரியல. மாங்கா மடையனா இருக்கியேனு அப்பா ஏளனாமாச் சொன்னாரு. ஆமா, நான் மாங்கா மடையன் இல்லை ஆனை மடையன்னு வீராப்பாச் சொன்னேன். அப்பாவ காணோம். அம்மா எதுவுமே சொல்லேல. வீட்டக் கழுவி சுத்தம் பண்ணவும், பழைய துணிகள எரிக்கவும் சொந்தக்காரங்க வந்தாங்க. நல்ல வேளை எனக்கான ரோஜக்கள நா முன்கூட்டியே ஒதுக்கி வெச்சிருந்தது நல்லாதாப் போச்சு. மூட்டையாக்கி துணிகளை பத்த வெச்சதும் வெக்கைல மேலு சூடாச்சி. எனக்கு காய்ச்சலிடிச்சுது. யாருமே இல்லாம நா மட்டுமே எரிஞ்சேன். அப்படியா? இல்ல என்னோட சேரந்து ஒரு குட்டி ஆமையும் எரிஞ்சுது. அங்குல அங்குலமா அனல் வீசிச்சு. அதோட ஓட்ட ஒரு கம்பெடுத்து திரிப்பிப்போட்டேன். இன்னும் சரியா வெந்துருக்கல. அதச் சாப்பிட்டாலும் தொண்டைக்கு கீழ எறங்காது. வாய்க்கு கீழ‌ எறங்குனா நரகுலுல அதுக்கெதுக்குல அலவலாதியா இருக்கனு அம்மா கேட்டா. சும்மா இருக்க விட மாட்டியோனு ஒப்பாரி வைக்க ஆயத்தமானேன். எனக்கு தொண்டைல ஒரு பிரச்சினை உண்டு. எப்போயெல்லாம் ஒப்பாரி வைக்க மொயலேனோ அப்போயெல்லாம் தொண்டை அரிச்சு பழுத்துரும். வாயிலயிருந்து கெளம்புற வாடை எந்தவொரு முத்தத்தையும் ஏற்காது. என்னால முத்தமிடவும் அழவும் முடியாதுங்கத ரொம்ப சீக்கிரமாவே ஒணர்ந்தேன். முட்டு மடக்கி சொவர் முக்குல மூஞ்சானது தொடைய ஒரச உக்காந்திருந்தேன். நெடுநேரம் கால் மேல கால் போட்டு இருக்க ஏலாம கஷ்டப்படுற ஆபீஸ் ஆளா மாறுனத நெனச்சு துன்பப்பட்டேன். மிஸ்டர் ஷைலின் இந்த ப்ராஜெக்ட்டுல உதவுறதுக்குத் தான் விரும்புறேன். பட்…பட்….பட்…..அந்த கனவுக்குள்ள நீந்த விரும்பாம பைத்தியக்காரத் தனமா நா சிரிச்சேன். நீச்சலடிப்பது எப்பேர்ப்பட்ட தேச்சியமான வேலை. முந்தி ஒரு மொற ஒரு பைட்டர் மீன ஹார்லிக்ஸ் பாட்டுலுல வாளத்தேன். ஒரு வருஷம் என்கூடவே இருந்த அந்த மீனுக்கு கொசுனா ரொம்ப விருப்பம். தெனமும் ஆறுமணிக்கு ஜெபமாலை ஜெபிக்க வார்ர கொசுக்களை நசுக்காம கொன்னு மீனுக்கு போடுவேன். அதுவொரு கன்னி மீன். அதனால கொசுக்கள ரசிச்சு சாப்டிச்சு. அதுக்கொரு காரும் பங்களாவும் வாங்கிக் குடுக்க நா கனவு கண்டேன். என் கனவு பலிச்சுது. ஆனா, காரும் பங்களாவும் நா வாங்கிக் குடுக்கல. என்னை விட்டுப் பிரியும் போது சோகத்துல அது நீந்துன கழிவு நீர மடக் மடக்குனு குடிச்சேன். போதாக்குறைக்கு என்னை தேத்துறதுக்கு ஆளே மாட்டல. இதுல எந்த வித பயனும் இல்லேணு தெரிஞ்சதும் ஒத்த காதுள்ள முயல் ஒண்ண வாங்குனேன்.‌ ஒவ்வொரு தடவ புல்லயும் முருங்கை பச்சிலையையும் நறுக்கி நறுக்கி தின்னும் போது எனக்கு வயசு அதிகமாயிட்டே போச்சு. அத சுத்தமா ஒணராதவனா நா இருந்தேன். அல்லாட்டி வயசு கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சது மாதிரியும் அல்லாட்டி வயசு அப்படியே தனக்க பயணத்தை நிறுத்துனது போலயும். ஏன் எல்லார் முன்னாலயும் நடிக்கணும்? எம்பதா? இருபதா? திடீர்னு நூற்றி முப்பத்தி எட்டா? நூற்றி முப்பத்தி எட்டு எனக்கு புடிச்ச நம்பர். அதுவொரு விலை. அந்த விலையை கொடுத்து தான் வாங்குனேன். பிணத்துக்காக விஷேசமா செண்டு தயாரிக்குறாங்க இல்ல. அதத்தான் விலை கொடுத்து வாங்குனேன். அதோட வாசம் பிணத்த விட அருவருப்பா மணத்துச்சு. தரைய தேய்ச்சி தேய்ச்சி கழுவக் கழுவ தேய்ச்சியமா இருந்துச்சு. ட்ரிப்ஸ் ஏத்தும்போ என்னை ஏளனாம பாத்தவங்கள நா மறக்கல. ஒரு டாக்டர விடவும் உன்னிப்பா ஆராயுர அந்த மனுஷங்கள வெறுக்கவும் துணியல. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விரோதமா நா அப்டி வெறுக்கத் கூடாதாம். நாளைக்கு எந்த காரியத்துக்கும் அவங்க வரணும். குறிப்பா கல்யாணங்களுக்கு. நானும் கவருல நூறு ரூபா வெச்சுக் குடுக்கணும். பல வாட்டி அந்த நூறு ரூபாயா குடுக்காம ஒளிச்சு ஒளிச்சு சாப்டுட்டு வந்ததுண்டு. இனியும் அப்டியே நடந்துப்பேன். அம்பது வயசுக்கப் பொறவு மனுஷன் ஒரு துணையைத் தேடுவான்னு அவ சொன்னா. மேலும், நீ ஒரு பெட்டிக்குள்ள வாழுற அதவிட்டு வெளிய வான்னும் சொன்னா. நா ஆர்வமானதும் அவ என்னை வெறுக்கத் தொடங்கீட்டா. என்னோட அழுக்குள அவ பாத்துருக்கலாம். எனக்கு கோவம் வருது ஒரு பொண்ணோட வீட்டுக்கு எப்போ போன் பண்ணனும்னு தெரியாதானு சொன்னதும் நா பேசுறத கொறச்சிட்டேன். ஆசைகளத் தவிர மானக்கேடுனா என்னேணு எனக்குத் தெரியும். அதனால அவ என்னை காதலிக்கலனு சொன்னாலும் அவ எதுவும் எனக்கு பதிலளிக்கப் போறதில்ல. ம்ம்ம் மட்டுமே சொல்லுவா. அந்த ம்ம்ம்‌ ஓட அர்த்தங்கள் எனக்கு ஒருபோதும் புரிஞ்சதுல்ல. உள்ளத்துல இருக்கத அப்டியே சொல்லக்கூடாதாம், அதே சமயம் ஒரு கவிதை போலயும் நா பேசீரக்கூடாதாம், அவ என்னைத் தேடி வரணுமுமாம். நீயா போனா அவ என்னை மதிக்கமாட்டாளாம்னு நெறைய பேர் சொன்னாங்க. அவளுக்காக செல்லமா வளத்த தாடியையும் ஷேவ் பண்ணி ஒதுங்கியே இருந்தேன். மயிறு மாதிரி. ஆமா, மயிறு மாதிரி. சே! என்ன இது சிந்தனை அவள நெஜமா ஓக்குறது போல. சே! என்ன இது சிந்தனை ஒலகம் அழியது போல. சே! என்னவொரு சிந்தனை நா வாழ்றேன்னு நம்புறது போல. சே! என்ன இது விழிப்பு. சே! என்னவொரு பிறப்பிப்பதற்கான ஆசை. சே! என்னவொரு கருவுற்றல். நீ நெனைக்குறது போல கருவுருறது அவ்வளவு பயங்கரமான விஷயம் இல்லைனும் சொன்னா. எல்லாத்தையும் ஏத்துக்குற பக்குவம் வந்தாச்சு இனி என்ன? ஒருகட்டத்துக்க பொறவு அவ சம்மதிச்சா. நெடுங்காலமா அவள ம்ம்ம்- களின் ராணினு கூப்ட்டு வந்தேன். விர்ச்சுவல் செக்ஸ்ல ஒவ்வொரு தடவையும் ம்ம்ம் ம்ம்மம்னு தான் சொல்லுவா. அதனால அவள அப்டி கூப்ட தொடங்குனேன். மானக்கேடு பத்துன எந்த வித அசம்பாவிதமும் நேராத மாதிரி பாத்துகிட்டா. அது தான் முக்கியம். எல்லையில்லா தனிமையோட விந்தணுக்களாலயும் என்னோட அசட்டுத்தனத்தாலயும் நாளாக நாளாக எடை அதிகரிச்சுது. பிரசவத்தோட முன்னறிவிப்பு என்னை கலங்கடிச்சுது. மெளனமா ஏத்துக்கிட்டேன். மொளனமா…ரொம்ப மொளனமா. என்னைப்போல தனிமைல கருவுற்ற நா ஒரு ஆட்டை பிரசிவிச்சேன். அதுவொரு போராட்டமா தெரியல. ஊட்டத்துக்கு மட்டும் என்னால குடுக்குறதுக்கு எதுவுமே மிஞ்சல. ஆட்டுக்கு தீனியா என் வெரலக் கொடுத்தேன். பால் சுரக்காத ஆண் என்பதால என் ரெத்தத்தக் குடிக்கக் கொடுத்தேன். கொஞ்ச நேரத்துலயே அது மறுபடியும் கத்தத் தொடங்கிச்சு. தையல் மிஷின் தைக்குறது போல அது என்னை படபடக்க வெச்சுது. கால், தலை, வைராக்கியமான நெஞ்சு, நோய்வாய்ப்பட்ட மூளை எல்லாத்தையும் ஆட்டுக்குக் குடுத்தேன். பேத்தப் பயலேனு அம்மா எரிஞ்சு விழுந்தா. அப்பாவோட கொரல் கேக்கவே இல்ல. சபிக்கப்பட்ட ஆன்மாவா யாரும் யாரையும் இங்க மாத்தல. மேள தாளத்தோட ஒரு கல்யாண வீட்டுக்கு என்னை கொண்டு போனாங்க. நான் ஆடா மாறுனேனா அதுதான் இல்ல. ஒரு மாடு வாங்கி வளத்திருந்தா தெனமும் பாலாது கெடச்சுருக்கும் இந்த கீச் கீச் எழவ எதுக்குடே வாங்குனேனு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவுல நெலையா நின்னுட்டுருந்தவரு சொன்னாரு. அதே கல்யாண வீட்டுல எடுத்த போட்டோ தான். காலங்கள் மாறும் போது அந்த ஆளும் இடப்பக்கமாவோ, வலப்பக்கமாவோ எடத்தை மாத்தீட்டே இருப்பாரு. பச்சோந்தி பாத்துருக்கீங்களா? ஆனா அவரு அரணை. தொட்டாலே வெசம் ஏத்துற அரணை. அவரு தான் அத்தனை கஷ்டங்களுக்கும் காரணம். அவரெடத்துல நான் நின்னுருந்தாலும் எந்த வித்தியாசமும் தெரிஞ்சிருக்காது. எனக்கு பதில் இன்னொருத்தர் இங்க இருந்திருப்பாரு. அவரே தான் சொல்லுறாரு மூணு நாளைக்கு பொறவு பூசை வைக்கணும் நம்மள விட்டு பிரிஞ்சவங்கள நாம நெனைக்கணும்னு.‌ இதுக்கெல்லாம் பைசா இருக்கானும் கேக்குறாரு. நீரு தான் ஓய் எல்லாத்துக்கும் துடுப்புனு கத்துனேன். ஒமக்கு இதெல்லாந் தேவ தான் ஓய்; நீரு நக்கீட்டு தான் நடப்பீரு வேணும்னா பாரும் கேவலம்னு காறி துப்புவானுவனு தோத்து போயிட்ட கடுப்புல எரிஞ்சி விழுந்தாரு. இந்த நெலமைல அவருக்கு சமாதானம் சொல்லதுக்கு எனக்கு தெம்பில்ல. ஒரு வகைல பாத்தா அவரு தான் என்னைய தேத்தீர்க்கணும். அதுக்கு இதுக்குனு உருவி உருவி வாங்குனதெல்லாம் எங்கயோனு கேட்டேன். இந்த சம்பளவத்த வெச்சிட்டு நொட்டவா முடியும்னு மூஞ்சு கோணிட்டாரு. பெருத்த மவுனத்துக்க நடுவுல எனக்கு தூக்கம் வந்துச்சு. நா அப்டியே ஒறங்கீட்டேன். யாரும் யாரையும் பாக்கல யாரும் யாரப்பத்தியும் பேசல யாராது கேட்டா எனக்குத் தெரியாது சார் நா பாக்கலனு உறுதியா மறுத்துருனு பேண்ட் சிப்ப தெறந்துட்டே சொன்னாரு. சரி நா வரட்டுமானு குஞ்ச புடிச்சு ஆட்டும் போது ரெண்டு சொட்டு மோளு என் கன்னத்துல தெறிச்சி விழுந்தது. முழிப்பு வந்து தலை கனமா வலிக்க எழும்புனேன். சின்னச் சின்னச் சதுரங்களா ஒரு கண்ணாடி போல எல்லாத்தையும் என்னால பாக்க முடிஞ்சுது. என் கன்னத்தை அழுத்தியழுத்தி வெரல் நுனில மாட்டி ஜஸ்ட் மிஸ்சுல தப்புன என்னால நான் சுறுசுறுப்பானேன். நா நெலையா ஒரெடத்துல இருந்தபடி ஓடிக்கிட்டே இருந்தேன். திரும்பத் திரும்பத் என்னையே புடிக்க மொயற்சி பண்ணப்பண்ண எனக்கு அதீத உற்சாகமாகிட்டு. என்னை புடிக்கிறதுலயே எல்லாத்தையும் மறந்துட்டேன். இது தான் வைத்தியமோணு கூட அந்த தீவிரத்துல நெனச்சிருக்கேன். என்னை நானே புடிச்சுப் புடிச்சி என்னை நானே வளத்தி வளத்தி…அப்போவோ இல்ல கொஞ்சம் காலம் கழிச்சோ ஒரு நெடிய உண்மை எனக்கு தெரிய வந்துச்சு. அதச் சொல்லுறதுக்கான மொழிய எனக்கு இன்னும் யாரும் தரல.‌ இல்லேணா நா யாருக்கும் குடுக்கல. அத ஆழமா புரிஞ்சுகணும்ங்குறதுக்காக அங்கேயிருந்து இங்க இங்கிருந்து அங்கனு தாவித் தாவி வலைக் கம்பிய புடிப்பேன். ஓய்வில்லாம என்னை நானே புடிக்க மொயற்சி பண்ணுவேன். களைப்பில்லாமலும் அவசரமில்லாமலும் இதுவாவே நானாகிட்ட நெனைப்பு கூட இல்லாம… ரொம்ப அழகா இருந்து பறக்குது இல்ல? கூண்டோடு சேர்த்து வெல என்னேணு கேக்குறதையும் பொருட்படுத்தாம..

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.