logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

விஜி முருகநாதன்

சிறுகதை வரிசை எண் # 50


பட்டணத்தில் ஒரு கேதம் _________________________ விஜி முருகநாதன் .. "மாராக்கா..மாராக்கா..தே..எங்கிருக்க..?" கருக்கலில் ஒதுங்கிட்டு சிமெண்ட் தொட்டில தண்ணி மொந்து கையக் கழுவிகிட்டுருந்தவளின் காதுல கூப்புடற சத்தம் விழுகவே ,"என்னலா ..முத்தா கோழிகூப்புட இந்தக் கூவு கூவற..?!"ங்கறா சிரிச்சுகிட்டே.. ‌."ஏலே.. காத்தவராயன் சொல்லிட்டு வரச் சொன்னான்..உன்னப் பொறப்பட்டு நிக்கச் சொல்லி.." .."ஏனாம்..எங்க கேதமாம்..?!" .."இங்கில்லியாமா..பட்டணத்துலியமாம்..நாளக்கி கறுப்பு முடிச்சுப்புட்டுத்தான் கெளம்ப‌முடியுமாம்..மாத்துத் துணி எடுத்துட்டு வரச் சொல்லிச்சு.நொம்ப ஒட்டுப் போட்டதக் கட்டாம ,நல்ல சீழியாக் கட்டிட்டு வரச் சொல்லிச்சு.." ..",நேத்து வாரத்துலதான் காஞ்சிபுரகண்டாங்கி எடுத்து வெச்சேன்.அத வேணா கட்டிட்டுப் போனாப் போகுது.."என்றவள் "தூ"என்று பெரிய சப்தத்துடன் காரினாள். .."தே..எளக்காரம் பேசாம போ ஆத்தா..எதோ பத்து ஐம்பது கெடக்குமில்ல.."என்ற அந்த முத்தா.. .."சரி..நா வாரேன் "ன்னு சொல்லிட்டே நடயக் கட்டினா. அவ போறதையே பார்த்துகிட்டுருந்த மாராக்காவுக்கு , மெல்லிய மேல்மூச்சு வந்துச்சு.காத்தவராயன் அந்த ஊருல வெட்டியான்" " ‌‌தொழில் செஞ்சுக்கிட்டுருந்தான். ஊருக்குக் கொஞ்சந் தள்ளி , மின் மயானத்தக் கட்டுனதிலிருந்து ,காத்தவராயனுக்கு அவ்வளவா சுடுகாட்டுல எரிக்கற வேல வர்றதில்ல. அத எரிச்சுத்தான் பொழப்பு நடத்துனங்கற நெலையில அவனும் இப்ப இல்லதான்.அவனோட பசங்க ரண்டையும் நல்லா படிக்க வச்சுபுட்டான். வேலயிலேயும் சேந்து நல்லா சம்பாதிக்குதுங்க. இருந்தாலும் வம்சமா இதத்தான் செஞ்சுட்டு வர்றாங்க.இவன வுட்டா செய்யறதுக்கும் ஆளில்ல.அதுனால அவனோட பசங்க சொல்லிக் கொடுத்த மாதிரி,குரூப்(பேக்கேஜ்) ஒண்ணு ஆரம்பிச்சுட்டான்.பொணம் வுழுந்திலிருந்து சொந்த பந்தங்களுக்கு சொல்லி,பானையிலிருந்து ,பொரி வாங்கி பாடை பின்ற வரைக்கும் எல்லா சடங்கையும் செஞ்சு மின்மயானத்துக்கு எடுத்துட்டு வந்து எரிக்கற வரை எல்லாம் அவம் பொறுப்பு.அதுவும் கொஞ்சம் பணங் காசுள்ள ஆளுங்க,கண்ணாலச் சாவுன்னா (எண்பது வயசுக்கு மேல) கேக்க வேண்டாம் .தார தப்பட்ட கிழிபடும். அதுபோக மயிலாட்டத்துக்கு ,கரகாட்டத்துக்கு, ஆளுங்கன்னு சும்மா அதிரி புதிரி பண்ணி ருவான்.சாரயத் தண்ணிய வேற வாங்கி ஊத்திருவான்.இப்பல்லாம் சிலபேரு பேண்டு வாத்தியங் கூட கேக்குறாங்க. மொத்ததுக்கும் சேத்து இத்தினி காசுன்னு பேசிக்குவான். எதும் பின்னாடியோ ஓடற சனங்களுக்கு எததான் எடுத்துச் செய்ய நேரமிருக்கு..இல்ல சடங்கு சம்பிராதயத்த கட்டி ஆளத்தான் ஆளிருக்கா..?பணத்த நீட்டினமா காரியம் முடிஞ்சாதுன்னல்ல எல்லாமே போயிட்டு இருக்காங்க.அதுனால காத்தவராயனுக்கு நல்ல வரும்படி. இதுல மாரடிச்சு ஒப்பாரி வக்கிற பொம்பளங்களக் கூட அவனே ஏற்பாடு பண்ணி ருவான்.மொதல்ல எல்லாம் "குதி மாரு"அடிச்சுட்டு அழுதாங்கன்னா அவுங்களே போற பொணத்துக்குத் தொணையா போயிருவாங்களோங்கற மாதிரி "தொம் ..தொம்.."ன்னு மாரடிச்சுப்பாங்க.இப்ப எங்க அந்த வழமையெல்லாந்தான் ஒழிஞ்சு அழுகறதேயே சத்தமா அழுக மாட்டேங்கறாங்க. அதுலதான் "மாராக்கா "அவனோட குரூப்புல சேந்தது.மாராக்காவும் அவனோட சொந்தந்தானலும்,அவளோட புருஷன் "பொன்னான் "இருக்கற வரைக்கும் ரண்டு பேருமே பக்கத்துல ஒரு கம்பெனிக்குத்தான் வேலக்கி போயிட்டிருந்தாங்க.ரண்டு வருஷம் முன்ன வந்த பெருநோயி காலநேரத்தப் பாக்காம எல்லாத்தியும் வாரிச்சுருட்டிட்டுப் போனதுல ,பொன்னானும் போயிச் சேர்ந்துட்டான். மாராக்காவே தொல தொரத்துல நின்னுதான் ஒடம்பப் பாக்க முடிஞ்சது.ஒடம்பக் கூட எங்க முழுசாப் பாத்தா..? முழுக்க கண்ணாடிக் காயித்தப் போட்டு ,மூடி வச்சதுல மொகம் மட்டுந்தான் கண்ணுக்குக் கெடச்சது. "என்ன ஆள வந்த ராசாவே தட்டில மை இருக்க தாய் குடுத்த சீரிருக்க தாயி குடுத்த சீரிழந்தேன் தருந்தாலி தானிழந்தேன் தனி இருந்து வேலயென்ன..? புண்ணியர முன்ன வுட்டு நா பெண்ணிருந்து வேலயென்ன..?" ன்னு ஒரு சனமும் சாவுக்கு வராம தொத்து பயத்துல பேடிச்சு நிக்க,தனிச்சு நின்னு அவளே "மாரு மாரா"ப்போட்டு அழுதுகிட்டா.அவ வேலைக்கிப் போயிட்டு இருந்த கம்பெனியையும் இழுத்து மூடிட்டாங்க. அடுத்த வேள சோத்துக்கு என்ன பண்றதுன்னு தெகச்சுக் கெடந்தப்பத்தான்," ஏ..புள்ள மாரா ..எதுக்குக் கலங்கிக் கெடக்கற.உன்னயாட்ட ஒப்பாரி வக்க இந்த சுத்து வட்டாரத்துலயே எவ இருக்கா.நீ என்ற குரூப்ல சேந்துரு.எப்புடியும் ஒரு நாளக்கி ஒண்ணுணாச்சி எமங்கிட்ட கணக்குக் காமிக்க போயிருது.எனக்குக் கெடக்குறதுல உனக்கும் பிரிச்சுத்தாரேன்.."ன்னு காத்தவராயன் சொல்லவும் ரோசன பண்ணிப் பாத்துப்புட்டு "சரி"ன்னு ட்டா.. அன்னலேர்ந்து இன்னிவரக்கும் அந்த ஒப்பாரிதான் சோறு போடுது.பிறத்தியார் கஷ்டந்தான் அவளுக்கு படியளந்துகிட்டு இருக்குது.மாராக்கா எந்தப் பள்ளிக்கொடத்துலேயும் போய் படிக்கலைன்னாலும்,கண்ணு பார்த்தா கை செய்யுங்கற மாதிரி ,அவளுக்குப் பொறப்புலேயே நல்ல நாபகசக்தி .நானோதயம்.. வழிவழியாக ஒப்பாரி பாடறதக் கேட்டு ,மனசக்குள்ளாறயே தச்சு வச்சுக்கிட்டா.காத்தவராயன் குரூப்புக்குள்ள போறக்கு முன்னாடி இருந்தே ஊருக்குள்ள மட்டும் இல்லாம சுத்து வட்டாரத்திலயும் எந்தூட்டுல எழவு விழுந்தாலும்,"மாராக்கா" வல்லியாங்கறதுதான் மொதக் கேள்வியா இருக்கும்.அதுக்குத் தக்க மாதிரி அவளும் வளவு முக்குலேர்ந்தே தலையில முந்தானைச் சீலயப் போத்தி கிட்டு மாருலேயும் ,தலயிலேயும் அடிச்சுகிட்டே ஒப்பாரிப் பாட்டப் பாடிட்டே வந்தான்னா கல்லா இருக்கற கண்ணுங் கூட கலங்கி வழியும். சவம் வெளிய போற வரக்கும் மட்டும் இல்ல.. "ஊரோ ரண்டாச்சு அதனூடே கடலாச்சு நாலோ ரண்டாச்சு அத நடுவே கடலாச்சு ஓடுகிற தண்ணியில ஓடம் நீ விட்டிருந்தா ஓடோடி வந்திருப்பேனே.." ம்..ம்ஹூம்..ன்னு.. ரண்டா நாள்ல ஆரம்பிச்சி பதினாறு நாளும் கால ,மால ரண்டு நேரமும் பாடுவா.அப்பத்தான் போன உசுரு அமைதியாகும்னு சாங்கியம். .பட்டணத்துக்குப் போனா நாலஞ்சு நாளு தங்கிட்டு வரணும்னு காத்தாங்கிட்ட சொல்லணும்னு மாராக்கா மனசுக்குள்ளாற நெனச்சு கிட்டா.."உள்ளூர்ல கேதம்ன்னா நீ இல்லாட்டி எப்புடி மாரா..?"ம்பான்."எவளையோ வச்சுப் பாடிக்கோ..எவ பாடுனாலும் போன உசுரு திரும்பியா வரப்போகுது.இல்ல எம் பாட்டக் கேக்க எந்திருச்சு உட்காரத்தான் போகுதான்னு...?!"சொல்லிற வேண்டியதுதான். மாராக்காவுக்கு கொழந்த எதுவும் பொறக்கல. "கடவுள் புண்ணியம்"ன்னு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மேல பாத்து கை கூப்பிக்குவா.கண்ணாலமாயிக் கொஞ்ச வருஷத்துக்கு அவளும் கொழந்த..கொழந்தன்னு உள்ளூருப் பண்டிதன்கிட்ட இருந்து வெளியூரு, மரத்தடி ஜோசியம்னு ஒருத்தஞ் சொல்றது வுடாம செஞ்சுகிட்டு இருந்தா.அதுபோக மாரியம்மன் கோவிலுக்கு அக்னிச்சட்டியேலேர்ந்நது,அங்க பிரதட்சணம்,அடிவுளுந்து கும்புடறதுன்னு ஏகத்துக்கும் பண்ணி கடசீல"நாம என்ன பெரிய மிராசா..?ஏக்கராக்கணக்க கட்டி ஆளுறதுக்கு வாரிசு வேணும்னு தவங் கெடக்க.."ன்னு வுட்டுட்டா. அவளோட சின்னாயி மகன் சாமிக்கண்ணு பட்டணத்துல கார்ப்பரேஷன்ல வேல செஞ்சி வூடு வாசலோட நல்ல பொழப்பு பொழக்கிறான்.வாரப்பெல்லாம்.."அக்கா..எப்பப் பாத்தாலும் செத்த வூட்டக் கட்டிட்டே அழுகிற.எங்கூட்ல வந்து சந்தோஷமா ஒரு வாரம் இருந்துட்டு வா தாயி.."ன்னு கூப்பிட்டே கெடக்கான்.","நீ எப்ப வாரன்னாலும் சொல்லு ..நா வந்து கூட்டிட்டுப் போறேன்"ன்னு போனு நம்பரு எழுதுன காகிதத்த வேற குடுத்துட்டுப் போயிருக்கான்‌.அந்தக் காகிதம் பத்திரமா அவ சுருக்குப் பைலத்தான் கெடக்கு.."சரி..அங்க போயிட்டு சந்தர்பத்தப் பாத்துட்டு போனப் போட்டுச் சொல்லிரலாம்.."ன்னு நெனச்சுகிட்டா. சீக்கிரமே போகணும்னு ,கேதம் நடந்த வூட்டுக்காரங்க ,அவங்க சொந்தக்காரங்க போற வேனுலேயே இவுங்களயும் வரச் சொல்லிட்டாங்க.ஐம்பது வயசுதான் .. திடீர்னு மாரடிச்சு செத்துப் போயிட்டதுனாலயும்,இன்னும் சம்பந்தம் எடுக்காதுனாலயும் ,"கொட்டு ,மொழக்கு ,மத்த ஆட்ட பாட்டமெல்லாம் எதுவும் வேண்டாம்.நம்ம பக்கத்து வழமையான சடங்க மட்டும் செஞ்சாக்க போதும்" ன்னு சொல்லிட்டதுனால ,காத்தவராயனும் ,மாராக்காவுமா ரண்டே பேர் மட்டுந்தான் போனாங்க. போறப்பவே மணி பத்தரை ஆயிப் போச்சு.இவங்களக் கூட்டிட்டுப் போனவங்களுக்கே வழி தெரியல.மொதல்ல ஒரு பெரிய அடுக்கு மாடிக் கட்டத்து முன்னால போயி விசாரிச்சாங்க. கருக்கல்லயே விழிச்சதுல மாராக்கா நல்லாத் தூங்கிட்டா.வண்டி நின்னதுலதான் டக்குன்னு முழிச்சு கிட்டா."..எத்தனாம் பெரிய மாடி .‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எத்தன சனம் சாரிசாரியா..பஸ்ஸும் காருமா..ஏ..அப்பா.."தெறந்த வாய மூடல மாராக்கா. .."எங்க இங்க ராஜலிங்கம் ன்னு கேதமாயிருச்சுங்களா..?!" .."கேதமா.. அப்படின்னா..வண்டியெல்லாம் வரப் போக இருக்கும் .இங்கல்லாம் நிறுத்தக் கூடாது"ன்னு தொரத்தரான் வாட்சுமேனு.." ‌."அதாங்க..இறந்துட்டாரு.."ன்னு இழுக்கறாங்க.. .."அப்படியெல்லாம் எதுவும் நடக்கல..போங்கய்யான்னு.." மறுக்காவும் வெரட்டறான். மறுபுடியும் போனப் போட்டுக் கேக்கறாங்க.,"அட..அடுத்த தெருவப்பா.."ங்கற பதில வாங்கிட்டு அங்க போயி நின்னா, அங்க ஆகாசத்துக்கும் பூமிக்குமா செங்கல வச்சுக் கட்டுனாப்படி முட்டிட்டுக் கெடக்குது அந்தக் கட்டடம்.நல்லவேளயா முகப்புலேயே இறந்து போன மனுஷனோட போஸ்டர வச்சிருந்தாங்க. மூணாவது மாடிலதான் கேதம்.லிப்ட்ல கூட்டிட்டுப் போனாங்க.லிப்ட்லர்ந்து வெளிய வந்தவங்க தெகச்சு நின்னாங்க.ஏன்னா..சாவு நடந்த அறிகுறியே எதுவுமில்லாம மசான அமைதியாக் கெடக்கு. .."இங்கதான சொன்னாங்கன்னு.."தனக்குத்தானே பேசிக்கிட்டு நடக்கறாங்க.அவுங்க சொன்ன நம்பரு முன்னாடி நெறய செருப்புக் கெடக்கறதப் பாத்ததும்தான் இந்த எடந்தான்னு தீர்மானமாச்சு எல்லோருக்கும்.இருந்தாலும் ஒரு சத்தத்தையும் காணுமேன்னு சந்தேகத்தோடவே பெல்ல அமுக்குனாங்க. மெதுவா முழுசாக்கூட இல்லாம,பாதிக்கதவ தெறந்து எட்டிப் பார்த்தவங்ககிட்ட ,"இங்க"ன்னு இழுத்தொன்னிமேதான் முழுக்கதவையுந் தொறந்து உள்ள வுட்டாங்க. மாராக்காவுக்கு ஆச்சரியத்துல மூச்சே அடச்சிப் போச்சு.கண்ணாடிப் பொட்டில சடலம் பாட்டுக்கு தனியாக் கெடக்கு.ஒரு சனம் பக்கத்துல இல்ல‌.விசேசஷ வூடாட்டம் வரிசியாச் சேரப் போட்டு உக்காந்துட்டு இருந்தாங்க. இவங்கள கூட்டிப் போனவங்க மெதுவா காதுக்குள்ள கூடக் கேட்காத கொரல்ல விசாரிக்குறாங்க.செத்துப் போனவரு சொந்தக்காரங்களும் வாய்க்குள்ளாற மொனகுறாங்க‌.சவப்பொட்டியோட முன்னாடி வச்சிருக்கற பூவ எடுத்து மரியாத செஞ்சாங்க. மரியாத செஞ்சவங்கிட்ட‌ ,.."மேல மொட்ட மாடில டிபன் போடுறாங்க.போயி சாப்பிட்டு வாங்க.."ன்னாங்க..இவங்கள கூட்டி வந்தவரு .."வாங்க போயி சாப்பிட்டு வந்துரலாம்ங்கறாரு.." காத்தவராயன் தலையைச் சொறிஞ்சுகிட்டே.."ஏஞ் சாமி எத்தினி மணிக்கு எடுக்குறாங்க.."ன்னு கேக்கறான். .."ஒரு மணிக்கு எடுத்துருவாங்களாம்.. இன்னிக்கு வெசாழக்கெழமங்கறதுனால கறுப்ப ஆறுமணிக்கு வச்சிராங்களாம்.. நாம ஒரு ஏழு ஏழைக்கு கெளம்பிரலாம்.."ங்கறாரு. மாராக்காவுக்கு இப்பமே அடிச்சுட்டு அழுகறதா..இல்ல சாப்புட்டுப் போட்டு வந்து அழுகறதா?ன்னு சந்தேகமா இருந்துச்சு.சரி..காத்தான் சொல்ற மாதிரி பண்ணிக்கலாம்னு மனசுக்குள்ளாற நெனச்சுகிட்டா.ஆனா அவளுக்கு அதுக்கு மேல பிரச்சினையா காலோட ஊத்திர்ற மாதிரி 'ஒண்ணுக்கு' முட்டிகிச்சு.யார்கிட்டக் கேக்கறதுன்னு தெரில.சுத்தும் முத்தும் பாக்கறா.. இளந்தாரியா ஒரு பொண்ணு உட்கார்ந்துச்சு."ஏம் பாப்பா..இங்க எங்க ஓதுங்கற ரூமு..?"ன்னு கேட்டா. .."என்ன ஆண்ட்டி கேக்குறீங்க..புரியல.."அப்படிங்குது. அப்பத்தான் ஊரு பாஷைல கேட்டுட்டோமேன்னு தன்னத்தானே திட்டிகிட்டு.."இல்ல கண்ணு..பாத்ரூமு எங்க இருக்கு..?ன்னா திருப்பியும். அதோ அந்தப்பக்கம்ன்னு கை காட்டுது.அங்க மொத்தமும் ஆம்பள சனமா உட்கார்ந்துகுது.இதத் தாண்டி எப்புடிப் போறதுன்னு ரோசன பண்ணிட்டே இருக்கறப்ப.."மாரா..வா..சாப்புட்டு வந்துரலாம்.."ன்னு காத்தான் காதுகிட்ட வந்து சொல்லுறான். இவளும் ,"ஒதுங்கலாம்னு பாத்தேன்.ஒரே ஆம்புளைங்களா உட்கார்ந்துகிட்டு இருக்கு.."ங்கறா மெதுவா. .."மொட்ட மாடில எப்படியும் தனியாகப் கட்டிப் போட்டுருப்பாங்க ..அங்க போயி போய்க்கலாம்..எனக்குந்தான் அவசரம்.."ங்கறான்., சொன்ன மாரியே லிஃப்ட்ல போயி எறங்குன எடத்துலேயே ரண்டு கட்டிப் போட்டு இருந்தாங்க.."அப்பாடா.."ன்னு கனத்த எறக்கிட்டு மட்டைத்தட்டுல போட்ட இட்லியையும் ,உப்புமாவையும் தின்னுட்டு கீழ எறங்கி வந்தோன்னிமே..தலையில முக்காடப் போட்டுட்டு.."ஏ..ராசா.."ன்னு நீளமா ஆலாபிச்சா. .."ஐயோ..நிறுத்துங்க.." ன்னு தலய ஆம்புள மாதிரி வெட்டிட்டு இருந்த பொம்பள ஓடி வந்து கையைப் புடிக்குது."ஏங்க.."ன்னு முழிக்கறா மாராக்கா. ..",இங்கெல்லாம் இப்படி சத்தம் போட்டுப் பாடினா அசோசியன்ல புகார் பண்ணிருவாங்க..அடுத்தவங்களுக்குத் தொந்தரவா இருக்குதுன்னு.. அப்புறம் பெரிய ப்ராப்ளம் ஆயிரும்.."ங்கறாங்க அந்தம்மா. .."கதவெல்லாந்தான் அடஞ்சு கெடக்குதே.வெளில எப்புடிக் கேக்குங்கறா.."மாராக்கா.. .."சன்னல்லாம் தொறந்து தானே இருக்கு..வேண்டாம்..பாடாதீங்க.."ன்னு சொல்லிட்டுப் போயி உக்காந்துட்டாங்க அந்த அம்மா. மாராக்காவுக்கு பொசுக்குன்னு போனாலும்,வேற வழி இல்லாம அடக்கிக்கறா.வாயி வேற நமநமங்குது . அவளுக்கு அரமணிக்கு ஒருக்கா வெத்தல போடலன்னா அவ்வளவுதான் உசுரே போற மாரி இருக்கும். எப்பவும் சுருக்குப் பைல ஒரு கவுளி வெத்தல ராவுத்தரு கடைல வாங்கி வெச்சிகிட்டே இருப்பா.ஊருக்குப் பொறப்படறப்ப வெத்தலக் கட தெறக்கல."சரி ..அத்தனாம் பெரிய பட்டணத்துல வெத்தலக்கா பஞ்சமாப் போச்சுன்னு.." மனசுக்குள்ள சொல்லிட்டேதான் வேனுக்குள்ள ஏறுனா. சுருக்குப் பைக்குள்ளாற கைய வுட்டு எடுத்தவளுக்கு ,"போட்டா எங்க துப்பறது.."ன்னு வெசனம் வரவே அப்புடியே எடுத்த வெத்தலய மறுக்காவும் உள்ளாரவே வெச்சிட்டா. என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டே அப்படியே தலய செவுத்துல சாச்சுகிட்டா.வந்த சனம் யாரும் உக்காரவே இல்ல.ரண்டு நிமிஷம் குசுகுசுன்னு பேசிட்டோ ,இல்ல கையைப் பிடிச்சு நின்னுட்டோ கெளம்பிட்டாங்க.இதே நம்மூரா இருந்தா அந்த வட்டாரமே கதிகலங்குமேன்னு மெல்லிசா பெருமூச்சு வுட்டுட்டே கண்ண மூடிகிட்டா.எப்படிக் கண்ணசந்தான்னே தெரியல.யாரோ "என்னங்க"எழுப்பறாங்க. .."யாரு..?!"ன்னு வாரிச்சுருட்டிட்டு எந்திருக்கறா."எல்லோரும் சாப்பிடப் போறாங்க.நீங்களும் போயி சாப்பிட்டு வாங்க.."ன்னு கலியாண வூட்ல சொல்றாப்புடி சொல்லுது ஒரு அம்மா. அவுங்க ஊர்ல கேதத்துக்கு வந்தவங்கள "சாப்புடு"ன்னு கூப்பிட மாட்டாங்க.கேதம் நடந்த வூட்டுல சவத்த எடுக்கற வரைக்கும் தீ மூட்ட மாட்டாங்கறதுனால பக்கத்தால எங்கியாச்சும் சோறாக்கிப் போடுவாங்க.அதுலயும் பல பேரு தீட்டு வூட்ல கைய நனைக்க மாட்டோம்னு தட்டிக் கடையில போயி சாப்பிட்டு வருவாங்க."இங்க பாரு.."ன்னு மனசுக்குள்ள நெனச்சுகிட்டே காத்தானத் தேடுனா. இவளுக்கு முன்னாடியே போயி உக்காந்துருச்சு.."இனிமேதான சடங்குல அவனுக்கு வேல அதுனாலதான் முந்திகிட்டு திங்க வந்துருச்சு போல "ன்னு ரோசிச்சிட்டே தட்டுல சோத்த வாங்கிட்டா.இவளப் பாத்தோன்னியும் சாட காமிச்சான் காத்தான். பக்கத்துல போனவகிட்ட,"தே..புள்ள.. மத்தியானம் இங்க சடங்கு பண்றதோட முடிச்சுக்கச் சொல்றாங்க.மின்மசானத்துல அங்க இருக்கற ஆளுங்களத் தவிர ,நம்ப ஆளுங்கள வுட மாட்டாங்களாம்.நம்மள கூட்டிட்டு வந்துச்சே பாலு அண்ணந்தான் சொல்லுச்சு.பாப்போம் அனேகமா மூணு மணிக்கே கெளம்பிருவோம் போல.. "ன்னு சொல்லிட்டே .."நீ வேற சாமி.."ன்னு கேக்கறதுக்குள்ள .‌."ஏப்பா.."யாரோ கூப்பிடவே நகர்ந்துட்டான். போனவன்.."ஏஞ் சாமி..ராப் பொணமா கெடந்துருக்கு .கோழி காவு குடுக்கணுங்களே..?வாங்கியாந்துட்டாங்களா..?"ன்னு வெசாரிச்சான். .."அட..எங்க ராப் பொணம்..வெடிக்காலந்தானந்தான செத்தாரு.அப்புறமென்ன கோழியும்,கீழியும்.."ங்கறாரு அவரு. தனக்குள்ளாறவே மொனங்கிட்டு வாரான் காத்தான். சரியா ஒரு மணிக்கு ,எடுக்க ஆரம்பிச்சாங்க.அப்பனாச்சும் யாராவது அழுகவுங்களான்னு பாக்கறா மாராக்கா.யாரும் ஒரு சொட்டுக் கண்ணீரு வுடல .செத்துப்போனவரு பொண்டாட்டி மட்டும் சேலத் தலப்ப வாயில வச்சிட்டு விம்முது. பழக்க தோசத்துல ‌‌ .. "ஏ.‌.ஐயா.. சொல்லாம கொள்ளாம போறதென்ன.. பொன்னாரம் பூவாசம் வுட்டு புட்டு போனீரோ. சொர்க்கரதம் ஏறி சொர்க்கந்தான் போனீரோ.. சோத்த மறந்து புட்டு வானந்தான் ஏகினீரோ.. சொல்லாம கொள்ளாம போறதென்ன..ஏ..ஐயா..சொல்லாம கொள்ளாம போறதென்ன..போறதென்ன..ஏ..ஏ.." வாய் வரைக்கும் வந்த பாட்ட மனசுக்குள்ளயே பாடி ஒப்பாரி வக்கிறா. செத்துப் போனவரு அவளுக்கு சொந்தமும் பந்தமும் இல்லாதவருதானுன்னாலும்,சவத்த எடுக்கறப்ப அவளையும் அறியாம மாலையா எறங்குச்சு கண்ணீரு. கண்ணாடிப் பொட்டியோடவேதான் தூக்கிட்டுப் போனாங்க.லிப்ட்ல வச்சுப் பாத்தாங்க.எடம் புடிக்கலைன்னதும் படியிலேயே எறக்கறாங்க‌.மாராக்காவுக்கு ஆச்சிரியம்னா ஆச்சிரியம்..ஏன்னா..இது அத்தனயுமே ஒரு துளி சத்தங் காட்டாம ஆர்பாட்டமில்லாம நடக்குது.படியில சவத்தத் தூக்கிட்டு நடக்கறவங்களப் பார்த்தவ.." எதோ கள்ளமாரு திருடிட்டு ஓடறாப்படியல்ல ஓடறாங்க..." ன்னு மொனகிக்கறா. நல்ல வேளையா ,கீழ கார் நிறுத்தற எடத்துக்கு பின்னாடி இப்புடி சடங்கு பண்றதுக்குன்னே தடுத்து வச்சிருந்தாங்க.காத்தனுக்கு இப்பத்தான் வேலையே ஆரம்பமாச்சு."கோடி போடற மக்க மருமக்கமாரு வாங்க.."ன்னு அடித் தொண்டைலேர்ந்து கத்தறான்..."எப்பா..சத்தம் போடாதே..மெதுவாக் கூப்பிடு.."ன்னு அவன அடக்கறாங்க. மறுக்காவும் மெதுவா கூப்பிடறான்.அவுங்க ஊருலயா இருந்தா தெருக்கோடில இருந்து தப்பட்ட தட்டறவங்க தப்பட்டய அடிச்சி கூப்பிட்டு வருவாங்க.இங்க சத்தமே இல்லாம ,அதே" குசுகுசு" கொரல்லயே எல்லாம் நடந்துச்சு. எல்லா அபிஷேகமும் தான் பண்ணினாங்க.ஆனாத் தண்ணி சத்தங்கூட பயந்துகிட்டு மெதுவாத்தான் கேக்குது. பேரமாரு ,பேத்திமாரு பொற வழிக்கு பாத தெரிய நெய் பந்தம் புடிக்க , எண்ண அரப்பு வக்கிறவங்கள்ளல்லாம் வக்கறாங்க.ஊரா இருந்தா சாரயத்தக் கொஞ்சமா சாச்சுகிட்டு அதட்டி ,சத்தம் போட்டு ஏக அமர்க்களம் பண்ணுவான் காத்தான்.இங்க பொட்டிப்பாம்பா அடக்கிக்கறான்.அவனோட கெடா மீச கூட துடிப்படங்கிக் கெடக்கு. பொறந்தூட்டு,புகுந்த வூட்டுக் கோடி போடறாங்க. "போற பாத இருட்டடிச்சுக் கெடக்குமுன்னு வெளக்கெத்தி வக்குறாங்க. வெளக்கேத்தி வக்குறாங்க.. எஞ் சாமி தெரியுதய்யா.. எஞ்சாமி தெரியுதய்யா.. பன்னீரும் சந்தனமும் மாருல மணக்குதய்யா.. மாருல மணக்குதய்யா.. கோடித் துணி நீ உடுத்தி கோடித் துணி நீ உடுத்தி.. மங்கலத்த மட்டுமே அள்ளீட்டுப் போனீரோ.. அள்ளீட்டுப் போனீரோ.. ஏ..ஐயா..அள்ளீட்டுப் போனீரோ.. மனசுக்குள்ளாறவே..நெஞ்சு நெஞ்சா அடிச்சுக்கறா பாத்துகிட்டு இருந்த மாராக்கா. எல்லாம் முடிஞ்சு,சவத்த கீழ போட்டு சூடம் பத்தி சாமி கும்பிடவும் ,"கொய்ங்"ன்னு ஒரே அமுத்தல் ஹாரன அமுக்கிட்டு ஆம்புலன்ஸ் வந்து நிக்கவும் சரியா இருந்துச்சு‌.ஒரே பச்சை தென்ன ஓலயப் போட்டு பாடைன்னு அது மேல ஒரு நிமிஷம் வச்சுப்புட்டு ஸ்டெரச்சர்ல எடுத்து உள்ளாற வச்சிட்டாங்க‌. மெதுவா அதுல ஏர்ற சனம் ஏறிக்குச்சு.நிமிச நேரத்துல நின்னுகிட்டு இருந்த காரு ,வண்டின்னு எல்லாம் போயி அந்த எடமே காலியாயிருச்சு. காரு ஏறப் போன பாலு அண்ணன்.." காத்தவராயா..நீயும் மாராக்காவும் வேணா பஸ்ஸில போயிருங்க.அந்த எடத்தயெல்லாம் நல்லா சுத்தமா கழுவி வுட்டுரு.. இங்க கொஞ்ச தூரத்துல போனா பஸ்ஸ்டாப்பு வரும்.நம்ம ஊரு போற நேர்பஸ்ஸே வரும்..போய்க்கிவீங்கள்ன்னு.."ரூபாய எடுத்து நீட்டறாரு. .."போயிருவங்க"ன்னு சொல்லிட்டே பணத்த வாங்கி டிரவுசர் பாக்கெட்டுல வச்சுக்கறான் காத்தான்.மத்த நாளா இருந்தா எவ்வளவு வாங்கறான்னு கண்கொத்திப் பாம்பா கணக்குப் பாப்பா மாராக்கா. அன்னிக்கு என்னமோ தோணல. அவரு சொன்ன மாதிரி ,எல்லாத்தையும் சுத்தம் பண்ணிட்டு பஸ் ஸ்டாப்புக்கு நடக்க ஆரம்பிச்சாங்க ரண்டு பேரும். நடக்கப் சொல்லவே,"ஏ..மாரா..நீ என்னவோ சாமிக்கண்ணா னூட்டுக்கு போகோணும்னு சொன்ன.இப்ப என்ன எங்கூடவே நடயக் கட்டற.."ன்னான் காத்தவராயன். .."போகல..காத்தா..ஊருக்கே வாரங்கறா.."மாராக்கா சலுச்ச கொரல்ல. சொன்னவ.. "பட்டணந்தான் பாக்கணும் பாழும் மனசு தவிச்சதென்ன. தவிச்ச நெனப்ப.. நெருப்பள்ளிப் போனதென்ன.. அடுக்கு மாடிக் சாவுந்தான் அவலமாப் போனதென்ன.. பேரவலமாப் போனதென்ன.. சிங்காரமும்..பொன்னாரமும் பகடி பண்ணி சிரிச்சதென்ன.. பகடி பண்ணி சிரிச்சதென்ன.." ன்னு மனசுக்குள்ளாறயே பாடிகிட்டே நடந்தவளுக்கு கண்ணுல நீரும் ,உதட்டுல சிரிப்புமா வெடிக்க ஆரம்பிக்குது ஊருக்குப் போற பஸ்ஸூ தொல தூரத்துல தெரிய, வெரசா நடக்க ஆரம்பிச்சா மாராக்கா.. __________________________________________

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • K.RAJASEKARAN Avatar
    K.RAJASEKARAN - 2 years ago
    மிக மிக அருமையான நடையில் விறுவிறுப்பாக சென்றது.ஒப்பாரி பாட்டுகள் அனைத்தும் சூப்பர்.கேதம் என்ற சொல்லுக்கு பொருள் அறியாத பட்டணத்து அடுக்குமாடி வாசிகள். இறுதிச் சடங்கை பிழைப்பாகச் செய்யும் கிராமத்து ஏழைகள். கதை மிகப் பிரமாதமாய் செல்கிறது.பாராட்டுகள்.வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்! அன்புடன் மயிலாடுதுறை க.இராஜசேகரன்

  • VARADHARAJAN A Avatar
    VARADHARAJAN A - 2 years ago
    பழமைக்கும் புதுமைக்கும் பாலம் போட்ட மிகச் சிறந்த சிறுகதை. "பட்டணந்தான் பாக்கணும் பாழும் மனசு தவிச்சதென்ன. தவிச்ச நெனப்ப.. நெருப்பள்ளிப் போனதென்ன.. அடுக்கு மாடிக் சாவுந்தான் அவலமாப் போனதென்ன.. பேரவலமாப் போனதென்ன.. சிங்காரமும்..பொன்னாரமும் பகடி பண்ணி சிரிச்சதென்ன.. பகடி பண்ணி சிரிச்சதென்ன.." ன்னு மனசுக்குள்ளாறயே பாடிகிட்டே நடந்தவளுக்கு கண்ணுல நீரும் ,உதட்டுல சிரிப்புமா வெடிக்க ஆரம்பிக்குது. இயல்பான முடிவு. நிச்சயம் பரிசு பெறும் வாய்ப்பு உள்ள கதை. வெற்றி பெற பரிசு பெற வாழ்த்துக்கள். ஜூனியர் தேஜ்

  • ஸ்ரீவாரி மஞ்சு Avatar
    ஸ்ரீவாரி மஞ்சு - 2 years ago
    சிறப்பு.....வாழ்த்துக்கள் 💐

  • இளமதி பத்மா Avatar
    இளமதி பத்மா - 2 years ago
    அருமை விஜி