சுரேஷ் குமார்
சிறுகதை வரிசை எண்
# 49
உயர்ந்த உள்ளம் (சிறுகதை)
*************************************
" அம்மா..! நேத்து உடம்பு பூரா நோவுதுன்னு புலம்பிக்கிட்டு இருந்தீங்களே. முடக்கத்தான் கீரை கொண்டு வந்திருக்கேன். அரிசி உளுந்து ஊறப் போட்டு இதையும் சேர்த்து அரைச்சு நாளைக்கு தோசை சுட்டு சாப்பிடுங்க. லேசா கசப்பா பச்சைக் கலர்ல இருக்கும். ஆனா அப்புறம் பாருங்க. உடம்பு வலி, வாயுக் கோளாறு ஓடியே போயிடும்... " என்று தனலட்சுமியிடம் பேசிக் கொண்டே கீரைக் கூடையை இறக்கினாள் கண்ணம்மா. முடக்கத்தான் கீரைக்கட்டைப் பிரித்து உட்கார்ந்து இளம் கீரையாக சாவகாசமாக ஆய்ந்து கொடுத்தாள்.
மற்றொருநாள் சின்னச் சின்ன இலைகளுடன் ஒரு கிளையை உடைத்துக் கொண்டு வந்தாள் கண்ணம்மா.
" அய்யா மூட்டு வலியில கஷ்டப் படறார்னு சொல்வீங்களே... தேடிப் பிடிச்சு வாதநாராயணன் கீரையைக் கொண்டு வந்திருக்கிறேன். இலையை உருவித் தரேன். நெய் விட்டு வதக்கி, காஞ்ச மிளகாய், உளுந்து, பெருங்காயம் வறுத்து, உப்பு, புளி வச்சு துவையல் அரச்சு குடுங்க. மருந்து, மாத்திரை எதுவும் வேணாம். மூட்டு வலிக்கு சூப்பரா கேட்கும்... " என்று அக்கறையுடன் தனலட்சுமிக்கு அறிவுரை வழங்கினாள் கண்ணம்மா.
இப்படிதான் தனலட்சுமிக்கு கண்ணம்மா அறிமுகமானாள். தனலட்சுமியின் பிள்ளைகள் வெளிநாடுகளில் குடியேற, ஓய்வு பெற்ற தனது கணவருடன், எப்போதோ வாங்கிப் போட்டிருந்த ஊருக்கு ஒதுக்குப்புறமான முக்கால் கிரவுண்ட் நிலத்தில் வீடு கட்டி குடி வந்தாள். அப்போதுதான் வீடுகள் வரத் தொடங்கி இருந்தன. கடைகளுக்கு போக வேண்டுமென்றால் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்.
தனலட்சுமிக்கு நீரிழிவு நோய் ஆரம்பம் என்பதால் மருத்துவர் தினம் ஒரு கீரை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தினார். எப்போது கீரை வரும், காய் வரும், பழம் வரும் என்று வாசலையே தனலட்சுமி பார்த்துக் கொண்டிருப்பாள். தவற விட்டுவிட்டால் கடைக்கு நடக்க வேண்டும்.
தினமும் தனலட்சுமி வாசலில் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கீரைக்காரப் பெண்மணி கண்ணம்மா, " எதுக்குமா இப்படிக் காத்துக் கிடக்குறீங்க..? தினமும் தவறாமல் நானே கீரையைக் கொண்டு வந்து தாரேன்... " என்று வந்து ஒட்டிக் கொணடாள்.
அதுபோல தினம் ஒரு வகை கீரையாகப் பார்த்து எடுத்து வந்து கொடுப்பதோடு, அதை சுத்தம் செய்து நறுக்கி கொடுத்துவிட்டு போகும் அளவுக்கு பழகிவிட்டாள் கண்ணம்மா. அவளைப் பற்றிய விபரங்களையும் பேச்சோடு பேச்சாக தனலட்சுமியிடம் வெளியிட்டாள் கண்ணம்மா.
புருஷன் இறந்து இரண்டு வருடம் ஆகிறதாம். இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என்று நான்கு குழந்தைகள். தினமும் மூன்று வேளையும் ஐந்து ஜீவன்களும் அரை வயிராவது சாப்பிட வேண்டும். காலையில் கீரை வியாபாரம், மதியம் பூக்கடைகளுக்கு பூ கட்டி கொடுப்பது, மாலையில் கோவில் வாசலில் கற்பூரம், நெய்விளக்கு விற்பது என மூன்று தொழில்களை செய்து தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறாள் கண்ணம்மா. இவ்வளவு பாடுபட்டும் பிள்ளைகளுக்கு வயிறார சோறு போட முடியவில்லையே என்று சில நேரம் புலம்புவாள். கண்ணம்மாவின் நிலையை நினைத்தால் தனலட்சுமிக்கு பரிதாபமாகத் தோன்றும்.
ஒருநாள் வரும்போதே கண்ணம்மா சோர்வாக வந்து உட்கார்ந்தாள்.
" என்னாச்சு கண்ணம்மா..? ஏன் இவ்வளவு சோர்வா இருக்க..? " என்று கண்ணம்மாவிடம் தனலட்சுமி விசாரிக்க,
" நைட் பூரா தூக்கமில்ல. தலை ரொம்ப வலிக்குது... "
என்றாள் கண்ணம்மா முனகலாக.
" மாத்திரை போடறதுதானே... இரு சூடா காஃபி போட்டுக் கொண்டு வாரேன்... "
" அம்மா..! அதெல்லாம் வேண்டாம்மா... "
" பரவாயில்ல கண்ணம்மா..! எதுக்கு நீ இவ்வளவு கூச்சப்படுற... இரு கொண்டுவாரேன்... "
மாத்திரையைப் போட்டுக் கொண்டு காஃபியைக் குடித்தாள் கண்ணம்மா. தம்ளரைக் கழுவுவதற்காக போனவள் சமையலறையை எட்டிப் பார்த்தாள். நிறையப் பாத்திரங்கள் கழுவாமல் அழுக்காக இருந்தன.
" அம்மா..! நீங்க தப்பா நினைக்கலேன்னா தினம் இதே நேரம் நான் வந்து பாத்திரம் கழுவிட்டு, துணி துவைச்சிட்டு போகட்டுமா..? " என்று தனலட்சுமியிடம் கண்ணம்மா கேட்க,
அதுவும் சரியென்று பட்டது தனலட்சுமிக்கு. அவளின் வறுமையை ஒழிக்க தன்னால் இயன்ற சிறிய உதவியென்று தனலட்சுமி நினைத்தாள். தன்னுடைய கணவரைப் பார்த்தாள். அவரும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தார்.
அதுபோல தினமும் வரத் தொடங்கினாள் கண்ணம்மா. வந்ததும் கீரை, காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கிக் கொடுப்பாள். பாத்திரம் கழுவி, துணி துவைத்துக் காயப் போட்டுவிட்டு, தனலட்சுமி கொடுக்கும் காஃபியைக் குடித்து விட்டு போவாள். அதோடு நில்லாமல் செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை ஆகிய நாட்களில் வீட்டைத் துடைத்துக் கொடுப்பாள். வாரம் ஒருமுறை வீட்டை ஒட்டடை அடிப்பாள்.
பள்ளி விடுமுறை நாட்களில் கண்ணம்மாவின் பிள்ளைகள் அவளோடு வருவார்கள். அங்குமிங்கும் ஓடிச் சத்தம் போட்டு அமர்க்களம் செய்யாமல், அமைதியாக விளையாடுவார்கள்.
தனலட்சுமி கணவர் அவர்களிடம் அன்பாக " உங்க பெயர் என்ன..? என்னப் படிக்கிறீங்க..? " என்று விசாரித்தார்.
கண்ணம்மாவின் பெரிய பையன் கைகட்டி எழுந்து நிற்க, மற்றவர்களும் அதே போல் எழுந்து நின்றனர்.
" என் பேரு முத்து, ஆறாவது படிக்கிறேன். இவ மல்லிகா, நாலாவது படிக்கிறா. இவன் கோபி, ரெண்டாவது படிக்கிறான். இவ கவிதா, இன்னும் ஸ்கூலுக்குப் போகல... " என்று பணிவுடன் முத்து பதில் சொன்னான்.
முதல் நாள் கண்ணம்மாவின் பிள்ளைகள் வந்த போது மீதியிருந்த சாப்பாட்டைக் கொடுத்த தனலட்சுமி, பிறகு அவர்களுக்கென்றே அதிகமாக தயாரிக்கத் தொடங்கினாள். மாவு அரைக்க, மளிகை சாமான், பால் பாக்கெட் என்று ஏதேனும் அவசரத் தேவையிருப்பின், கடைக்குப் போய் வாங்கி வர முத்து உதவியாக இருந்தான். இப்படியாக கண்ணம்மாளும், அவளது பிள்ளைகளும் தனலட்சுமியின் குடும்பத்தில் ஒருத்தராக ஆகிவிட்டனர். ஒருநாள் சமையலறையில் சிங்க்கிள் தண்ணீர் கசிகிறதென்று ப்ளம்பர் முனியசாமியை அழைத்து வந்தார் தனலட்சுமியின் கணவர். அப்போது துவைத்த துணிகளுடன் வந்த கண்ணம்மா, ப்ளம்பர் முனியசாமியைப் பார்த்தாள்.
" அண்ணே..! நல்லா இருக்கீங்களா..? " என்று கண்ணம்மா நலம் விசாரிக்க,
ப்ளம்பர் முனியசாமி திரும்பினார்.
" அட... கண்ணம்மாவா..? இங்கேயா வேலை செய்ற..? கீரை வியாபாரம் என்னாச்சு..? " என்று முனியசாமி கேட்க,
" அதுவும் ஒரு பக்கம் இருக்குது. வருமானம் பத்தல அண்ணே... அதான் இந்த அம்மா வீட்ல வேலை செய்றேன்... " என்று கண்ணம்மா சொல்லிவிட்டு மாடியேறிப் போனாள்.
" கண்ணம்மாவ இதுக்கு முன்னாடி உனக்குத் தெரியுமா தம்பி..? " என்று முனியாமியிடம் தனலட்சுமி கேட்க,
" எங்க ஊர் பொண்ணுதாங்க. தங்கச்சி முறையும் கூட. நல்லா தான் கட்டிக் கொடுத்தாங்க. அதோட தலையெழுத்து புருஷங்காரன் சரியில்லை. முழு நேரக் குடிகாரன். இன்னொரு பொம்பள கூட பழக்கம் வேற. தினம் இவளுக்கு அடி உதைதான். அப்புறம் கண்ணம்மாவை விட்டுட்டு அந்த பொம்பள கூடவே போயிட்டான். கட்டட வேலை செய்றவன். அந்த பொம்பளைக்கும் அதே வேலைதான். ஒருநாள் புதுக் கட்டடத்தோட உத்திரம் இடிஞ்சு விழுந்து கண்ணம்மா புருஷனும், அந்தப் பொம்பளையும் அங்கேயே செத்துட்டாங்க. பாவங்க கண்ணம்மா. தனி ஆளா இருந்து கஷ்டப்பட்டு வேலை செஞ்சு பிள்ளைகள வளர்க்கிறா... " என்று முனியசாமி சொல்லி முடிக்க, கண்ணம்மாவின் மேல் பரிவும், பாசமும் தனலட்சுமிக்கு அதிகமாயிற்று.
ஒரு மாதம் கழித்து, வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிய கண்ணம்மா தயங்கி நின்றாள்.
" என்ன கண்ணம்மா..? " என்ற தனலட்சுமி கேட்க,
"அம்மா..! ஆயிரம் ரூபாய் முன்பணமா தாரீங்களா..? சம்பளத்துல கழிச்சுக்குங்க... அதோட வர புதன்கிழமை வேலை செய்ய வரமாட்டேன். சேர்த்து வைங்க. மறுநாள் செஞ்சு கொடுத்திடுறேன்..." என்று கண்ணம்மா சொன்னாள்.
" என்ன விசேஷம் அன்னிக்கி..? "
" அது வந்து... என் வீட்டுக்காரருக்கு திதி கொடுக்கணும். வேட்டி, புடவை, இனிப்பு, பழம் எல்லாம் வச்சு படைக்கணும். அதோட நாலு பேருக்கு அன்னதானம் பண்ணணும்... "
" உன்ன அம்போன்னு விட்டுட்டு இன்னொருத்தியக் கூட்டிக்கிட்டு ஓடின உன் புருஷனுக்கு நீ திதி கொடுக்கிறது ரொம்ப முக்கியமா..?
" என்னதான் இருந்தாலும், அவர் என் புருஷன். அவருக்கு திதி கொடுக்கணும்னு என் மனசுல தோணுது... "
" என்னமோ செய்... உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. அது சரி... உன் புருஷனுக்கு திதின்னா வேட்டி மட்டும் தானே வாங்கணும். எதுக்குப் புடவை..? "
" அந்தப் பொம்பளையும் அன்னிக்குத் தானே செத்துது. அதுக்காகத்தான்... "
" பைத்தியமா நீ..? அவ எக்கேடு கெட்டுப் போனா உனக்கென்ன..? உன் புருஷனுக்கு செய்றதே அதிகம்னு சொல்றேன். நீ அந்தக் கேடு கெட்டவளுக்கு சேர்த்து திதி கொடுக்கணும்னு சொல்றியே... அறிவிருக்கா உனக்கு..? "
" அவளோட புள்ளைகளும் நல்லா இருக்கணும்னு நெனச்சுத்தான்... "
" உனக்கு நாலு புள்ளைங்க இருக்காங்க. அவங்கள மட்டும் பாரு. அந்த பொம்பளையோட புள்ளைங்க எங்கோ கிடந்து சீரழிஞ்சா உனக்கென்ன..? " என்று கோபமாக தனலட்சுமி கேட்க,
" அம்மா..! அவளோடப் புள்ளைங்க வேற எங்கேயோ இல்லம்மா... எங்கிட்ட தான் இருக்காங்க... முத்துவும், மல்லிகாவும் தான் நான் பெத்தப் புள்ளைங்க. கோபியும், கவிதாவும் அந்தப் பொம்பளைக்குப் பொறந்த புள்ளைங்க... " என்று கண்ணம்மா சொல்ல, தனலட்சுமிக்கு குப்பென வியர்த்தது.
" என்ன சொல்ற கண்ணம்மா..? நீ எதுக்கு அவங்கள வளக்குற..? தலையெழுத்தா உனக்கு..? " என்று தனலட்சுமி கேட்க,
" என் புருஷன் கட்டடம் இடிஞ்சி செத்துட்டாருன்னு சேதி வந்ததும் பதறி அடிச்சுக்கிட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். செத்துப்போன நாலஞ்சு பேரையும் ஆஸ்பத்திரிக்கு வெளியே பொட்டலமா கட்டி தூக்கி கிட்டு வந்து போட்டாங்க. என் புருஷன் உடம்பு மேலே விழுந்து கதறி அழுதேன். அப்புறமா மனசத் தேத்திக்கிட்டு அவர மயானத்துக்கு கொண்டு செய்ய வேண்டிய காரியங்கள செய்ய ஆரம்பிச்சேன். அப்பத் தான் பார்த்தேன். மத்தப் பொணங்கள அவங்க உறவுக்காரங்க தூக்கிக் கிட்டு, மயானத்துக்குக் கொண்டு போயிட்டாங்க. ஆனா அந்தப் பொம்பளையோட பொணத்த மட்டும் யாரும் தூக்கி கிட்டு போக வரல. அனாதையா கெடந்துச்சு. அந்தப் பொணத்துக்குப் பக்கத்துல கோபியும், கவிதாவும் 'அம்மா அம்மானு' கதறி அழுதுகிட்டு இருந்தாங்க. எனக்கு மனசு புழிஞ்சு எடுத்த மாதிரி ஆயிடுச்சு. நான் அப்படியே விட்டுட்டு வந்திருந்தா அவங்க ரெண்டு பேரும் ரோட்ல பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பாங்க. இல்லாட்டி கெட்டவங்க கையில கிடைச்சா சீரழிச்சிடுவாங்க. பெத்தவ பண்ணுன தப்புக்கு புள்ளைங்க என்ன பண்ணும்..? அவங்களையும் என் புள்ளைங்க மாதிரி நெனச்சேன். என் புருஷன் பொணத்தையும், அந்த பொம்பள பொணத்தையும் என் சொந்தக் காசுல அடக்கம் பண்ணேன். கோபியையும், கவிதாவையும் என் கூடவே கூட்டிட்டு வந்துட்டேன். நான் குடிக்கிற கஞ்சிய அவங்களுக்கு கொடுக்குறேன். அவங்களும் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க... " என்று கண்களில் கண்ணீருடன் கண்ணம்மா சொல்லி முடிக்க, வாயடைத்து நின்றாள் தனலட்சுமி.
அதுவரை கண்ணம்மா சொன்னதை ஒதுங்கி நின்று கேட்ட தனலட்சுமியின் கணவர் முன்னால் வந்தார்.
" கண்ணம்மா..! உன்ன எப்படி பாராட்டுறதுனு தெரியல... உன் நாலு புள்ளைங்க படிப்புக்கு நான் பொறுப்பு. எனக்கு தெரிஞ்ச டிரஸ்ட் ஒன்னு இருக்கு. அவங்ககிட்ட சொல்றேன். முழு பொறுப்பையும் அவங்களே ஏத்துப்பாங்க. இந்த ஆயிரம் ரூபா. இத வச்சு திதி செலவு செய். நீ இந்தப் பணத்த திருப்பிக் கொடுக்க வேண்டாம். என் அன்பளிப்பா வச்சுக்கோ... " என்று தழுதழுத்த குரலில் தனலட்சுமியின் கணவர் சொன்னார.
கண்ணம்மா கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
" ரொம்ப நன்றிங்க அய்யா..! பசங்க படிப்பு செலவ ஏத்துக்குறதா சொல்றீங்க... ரொம்ப சந்தோஷங்க... ஆனா இந்த ஆயிரம் ரூபா மட்டும் கடனாவே இருக்கட்டுங்க... என் புருஷனோட திதி செலவு என் சொந்தப் பணமாகவே இருக்கட்டுங்க... அப்பதான் என் மனசுக்கு சமாதானமா இருக்கும்... வரேங்க அய்யா... வரேன் அம்மா... " என்று சொல்லிவிட்டு கண்ணம்மா கிளம்பினாள்.
கூடையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து செல்லும் கண்ணம்மாவின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து, தனலட்சுமியும் மற்றும் அவளது கணவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
---- சுரேஷ் குமார், சிவகாசி
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்