விக்னேஷ் முத்துசாமி
சிறுகதை வரிசை எண்
# 48
**நாடெங்கும் நரிக்கூட்டம்**
ஒரு அடர்ந்த காட்டில் அடுத்து காட்டை ஆளப்போகும் அரசன் யார் என்பதற்க்கான தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.சிங்கங்களில் சில தனி தனியாக தேர்தலில் நிற்க ஆலோசனை செய்துகொண்டிருந்தது.தங்களது வேட்டையாடும் திறமையை, உடல் வலிமையை, கர்ஜிக்கும் பெருமையை காட்டில் அனைவருக்கும் காட்டி அரசனாக ஆதரவு கேட்டு கொண்டிருந்தது.
அந்த பரபரப்பான வேளை வெளியேயிருந்து ஒரு வெள்ளை நிற மிருகம் காட்டிற்குள் வந்தது. பார்க்க பளிச்சேன்று இருந்தது அதன் கண்கள் கூர்மையாக இருந்தது,பிடரிகள் வெயிலில் வெள்ளி கம்பிகளை போல ஒளிர்ந்தது. அதன் குரலோ அனைவரையும் கவர்ந்திழுத்தது.
வந்தது யார்? என்று சிங்கங்கள் வினவிய போது.தன்னை ஒரு 'சிங்கம்'என்றும்,பக்கத்து காட்டில் இருந்து வருவதாகவும் அறிமுகப்படுத்தி கொண்டது. மேலும் தேர்தலில் தானும் நிற்க ஆசைப்படுவதாகவும் கூறியது.
முதலில் மறுத்த சிங்கக்கூட்டம் பின் முடிந்தால் வெற்றி பெற்றுக்கொள் என அனுமதி கொடுத்தது. மற்ற சிங்கங்கள் தங்களின் பராக்கிரமங்களை காட்டி ஆதரவு கேட்டுக்கொண்டிருந்த போது 'வெள்ளைச்சிங்கம்' எல்லோருக்கும் சுவையான 'மாமிசங்களையும்,எலும்பு தூண்டுகளையும் பரிசாக கொடுத்து'ஆதரவு கேட்டது. எலும்புத்துண்டின் மனம் மூக்கில் ஏற காட்டு மிருகங்களுக்கு நாவில் எச்சில் ஊறியது.இலவசமாக கிடைத்தவற்றை கண்மூடிதனமாக ருசித்தன.
வெள்ளைச்சிங்கம் தான் அரசனானால் தனது ராஜ்ஜியத்தில் யாரும் வேட்டையாடி கஷ்டப்பட வேண்டாம்,அனைவருக்கும்'இலவசமாக மாமிசம் கொடுக்கப்படும்',என வாக்குறுதி கொடுத்தது. அனைத்து சிங்கங்களும் ஆர்ப்பரித்தன அளவில்லா மகிழ்ச்சியில் வெள்ளைச்சிங்கம் தான் சரியான தலைவர்,தங்களை காக்க வந்த விடிவெள்ளி என்று கூச்சலிட்டு அதை அரசனாக தேர்ந்தெடுத்தது.
அரசனாகபதவி ஏற்ற வெள்ளை சிங்கம் பதவி ஏற்றபின் தனக்கு காவலுக்கு என்று ஒரு பெரும் கூட்டத்தை காட்டிற்கு வெளியேயிருந்து கொண்டு வந்தது. சிங்கங்களுக்கு ஒரே அதிர்ச்சி வந்தவை எல்லாம் 'நரிகள் நூற்று கணக்கான நரிகள்'. அரசனிடம் கேட்கலாம் என்று பார்த்தால் அதன் பக்கத்தில் கூட போக முடியவில்லை கடுமையான கட்டுப்பாடுகள் போட்டன நரிக்கூட்டம்.
வெள்ளைச்சிங்கம் சொன்னதைப்போல இலவசமாக எலும்பு துண்டுகளாவது கிடைக்கும் என நம்பியிருந்த சிங்கங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது அப்படி எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் ஒரு அதிர்ச்சியாக புதிய சட்டம் ஒன்றை போட்டது வெள்ளைச்சிங்கம்.இனி அனைவரும் வேட்டையாடி அதில் சரி பாதியை அரசுக்கு வரியாக கொடுக்க வேண்டும் என உத்தரவு வந்தது. வேட்டையாடாவிட்டால் நரிக்கூட்டம் சிங்கங்களை கடித்து குதறியது.
படாதபாடு பட்ட சிங்கங்கக்கூட்டத்திற்கு ஒரே குழப்பம் வெள்ளைச்சிங்கம் ஏன்? இப்படி செய்கிறதென்று.சிங்ககூட்டம் ஒரு திட்டம் தீட்டியது.இருட்டிய பின் யாருக்கும் தெரியாமல் அரசனின் குகையை நோட்டம் விட முடிவுசெய்தது.அங்கு கண்ட காட்சி அவைகளுக்கு பெரும்அதிர்ச்சியாகவும்,சினமூட்டுவதாகவும் இருந்தது.அங்கு இருந்தது 'வெள்ளைச்சிங்கம் இல்லை வேடமிட்ட நரி'. கோவம் உச்சிக்கு ஏறிய சிங்கங்கள் ஏமாற்றபட்டத்தை நினைத்து நரி அரசனிடம் சண்டை போடச்சென்றன.
அரியசானத்தில் அமர்ந்திருந்த நரியிடம் 'நீ ஏமாற்றி விட்டாய், பொய்சொல்லிவிட்டாய்,துரோகம் செய்து விட்டாய்,சிங்கக்கூட்டத்துக்கு அரசன் ஒரு நரியா?'என கூச்சலிட்டது. பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நரி 'அனைவருக்கு முன்பாகவும் கண்ணாடிகளை வையுங்கள்'என உத்தரவிட்டது.ஆளுயர கண்ணாடிகள் வைக்கப்பட்டன. அனைத்து சிங்கங்களுக்கும் பேரதிர்ச்சி கண்ணாடியில் தெரிவது எல்லாம் நரி முகங்கள்.
'நரி அரசன்'சுடக்குப்போட்டு பேசியது.'எனதுயிர் சிங்கங்களே குழம்பவேண்டாம், அஞ்சவேண்டாம் நீங்கள் சுயமாக உழைத்து உண்டபோது சிங்கமாகவே இருந்தீர்கள் நான் கொடுத்த எலும்பு துண்டுகளை அறம் தவறி நீங்கள் ருசித்த வேளை "அனைவரும் நரியாகி"விட்டீர்கள்.
அதிர்ச்சி அடைய வேண்டாம் "சிங்ககூட்டத்திற்கு தான் சிங்கம் தலைவராக தேவைப்படும்.நரி கூட்டத்திற்கு நரி தந்திரங்களே போதுமானது"என்றது.
அறம் தவறி இப்படி வீழ்ந்துவிட்டோமே என தங்களது விதியை எண்ணி "ஊளையிட்டன முன்னாள் சிங்கங்கள்".
நீதி:நேர்மையாளர்கள் தலைவராக வேண்டும் என்றால் மக்களாகிய நாமும் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்.
-முத்து.விக்னேஷ்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்