Poongothai kanagarajan
சிறுகதை வரிசை எண்
# 47
விதை
பீரோ இருக்கும் அறையில் லைட் போட்டேன்.முணுக் என்று வரும்
முன்கோபம் போல ஒரே நிமிடத்தில் சிவப்பாக எரிந்து அணைந்து போனது.ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகாவிட்டால் சிறிது சாய்த்து உதைப்போமே அது போல் அந்த பல்பை லேசாக ஆட்டிப் பார்த்தேன்.ம்கூம்... எரியவில்லை.கழற்றிப் பார்த்தேன்.கருப்பு கட்டி விட்டது.இனி எரியாது.
பாத்ரூமில் ஒரு லைட் எரியவில்லை.இன்னொரு லைட் இருப்பதால் உடனடித் தேவை இருக்கவில்லை.அத்தோடு படியேறும் இடத்திலும் ஒரு லைட் எரியவில்லை.மொட்டை மாடியில் தண்ணீர் வரும் பைப் துரு ஏறி உடைந்து விட்டது. இதெல்லாம் கூட இன்னொன்று இருந்ததால், உடனே வாங்காமல் ஆறப் போட்டாயிற்று.
இப்போது பீரோ அறையில் இன்னொரு லைட் இல்லாததால் எலக்ட்ரீசியனை அழைத்து லைட் போடும் வேலை, பைப் போடும் வேலைகள் ஒன்றாகவே செய்யச் சொல்லி எப்போதும் வரும் எலக்ட்ரீசியன் ஜானிடம் கூப்பிட்டுச் சொல்லியாயிற்று.
ஜான் கொஞ்சம் பெரிய வேலை மட்டும் எடுத்துச் செய்யும் ஆளாதலால், இந்த சிறிய வேலைகளுக்கு யாரோ அவருக்குத் தெரிந்த புது ஆளை அனுப்புவதாகக் கூறிச் சென்றார்.காலையில் ஒன்பது மணிக்கு அனுப்புவதாகச் சொன்ன ஆள் மூன்று மணிக்கு வந்தான்.
என் மகனை விட கொஞ்சம் வயது அதிகமிருக்கும்... அவ்வளவு தான்.சிறிய வயது என்றாலும் அவனுக்கு நூறு கிலோவிற்கு மேல் உடல் எடை இருக்கலாம்.அவனின் மினியேச்சர் போல ஒரு சிறுபையனுடன் வந்தான்.அது அவன் மகன் சித்தார்த் என்று கூறி எடுபிடி வேலைகள் கூடமாட செய்ய வைத்துக் கொண்டிருந்தான்.
மாடிப்படி ஏறுமிடத்தில்,லேண்டிங் ஸ்பேஸில் வெளியே தெரிவதற்காக கண்ணாடி இல்லாத கிரில் ஒர்க் சன்னல் பூந்தொட்டியோடு இருக்கும். அதில் நிறைய பூச்செடிகள் இருக்கும்.அதில் குருவிகள் கூடு கட்டியிருப்பதை குருவிகள் வந்து போவதை தினமும் பார்ப்பேன்.தினமும் காலையிலும் மாலையிலும் காச்மூச் என்று குருவிகள் ஏதோ பேசிக்கொண்டு இருக்கும் சத்தம் கேட்க, அசையாமல் படிகளில் உட்கார்ந்து கேட்டு ரசிப்பேன்.
எட்டாத உயரத்தில் எரியாத லைட்டைக் கழற்ற எலக்ட்ரீசியன் மணி கிரில்லில் கால் வைக்க அன்னாரது பூத உடலின் கனம் தாங்காமல் சுவற்றிலிருந்து காரை பெயர்ந்து இரும்புக் கம்பி உடைந்தது.குருவிக்கூடு மணியின் கால் பட்டுக் கீழே பிய்ந்து கிடந்தது.
சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தேன்.தெருவில் முறுக்கு, கடலைப்பொறி விற்றவர் சைக்கிளை நிறுத்தி நின்று, அண்ணாந்து பார்த்தார். பக்கத்து கடையிலிருந்து இரும்புக் கம்பி முறிந்த சத்தத்தில் கடையில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் திரும்பி மாடியைப் பார்த்தார்கள்.
நான் தான் பதறினேன்... அவர்களுக்கு டீ வைக்கச் சென்ற சிறிய நேரத்தில் ஏணி வைக்காமல் இத்தனை பெரிய உடம்புடன் ஏறினால் கம்பி தாங்குமா என்று யோசிக்காமல் ஏறிய மணிக்கு ஏதாவது ஆகி இருந்தால்...நினைக்கவே மனம் நடுங்கியது.
நல்ல வேளையாக மணிக்கு ஒன்றும் ஆகவில்லை.
மணி பக்கத்திலிருந்த திட்டில் கால் வைத்து பத்திரமாக இறங்கி விட்டான்.அந்த திட்டு மேல் ஏறிக் கூட லைட்டைக் கழற்றி இருக்கலாம்.ஒட்ட வைத்த பட்டைக் கம்பி தாங்குமா என்ற யோசனை மணிக்கு இல்லை.
ஏணி எடுத்து வேலை செய் என்று நான் கூறியது கேட்காமல் ஒரு அவசரம்.
மாலை வந்தால் குருவிகள் முட்டை வைத்த கூட்டைக் காணாமல் அலையுமே என்று
குருவிக் கூட்டை, உடையாமல் இருந்த சன்னல் கம்பிகளில் சுற்றிப் படர்ந்திருந்த செடிகளில், ஒயரில் பிணைத்துக் கட்டி விட்டேன்.
கணவர் வெளியில் செல்லும் போது மட்டுமே யாராவது வந்தால் கடுப்பாகிறது.அவர் வேலைக்குச் செல்லும் முன் வந்திருந்தால் மெட்டீரியல் வாங்கப் பணம் கொடுத்து... இந்தந்த வேலை என்று சொல்லி வேலை வாங்கிக் கொள்ளலாம்.அதென்னவோ கார்பெண்டர், பிளம்பர்,எலக்ட்ரீசியன்,வீட்டுவரி,கொரியர்,அயர்ன்....என்று எல்லோருக்கும் பதினோரு மணிக்கு மேல் தான் நாட்கள் ஆரம்பமாகின்றன.
இவர் சரியாக கிளம்பிச் சென்ற பிறகு தான் எல்லோரும் வந்து நம்மிடம் வேலை வாங்குவார்கள் எப்போதுமே.
எல்லாவற்றிற்கும் கொடுப்பினை வேண்டும்...என்ன செய்வது? பெயிண்ட் அடிக்க ஆள் வந்தால் கூட, கூடவே நின்று நாம் தான் வேலை வாங்க வேண்டும்.வீடு கட்டும் போது நாள் முழுவதும் கூடவே நின்று விட்டு, சனிக்கிழமை ஆனால் கணக்குப் பார்த்து மேஸ்திரிக்குக் கூலி கூட நாம் தான் தரவேண்டும்.
நல்ல வேளையாக வீடு கட்டும் வேலைகளில் இன்ட்ரஸ்ட் இருப்பதால் எது ஒன்றும் பெரிதாகத் தெரிவதில்லை.ஆனாலும், சமையல்,கிளீனிங் வேலைகளோடு, மற்ற அத்தனை வேலைகளையும் செய்து விட்டு யாராவது என்ன செய்கிறீர்கள் என்று கேட்கும் போது நான் ஹவுஸ் ஒய்ஃப்.சும்மாதான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டுதான் உள்ளேன்.
லைட், பைப் மெட்டீரியல் வாங்க எவ்வளவு என்று கேட்டு விட்டு பணம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.உடனே வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றவன் மூன்று மணி நேரம் கழித்து வந்தான்.மதிய நேரம் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று இருந்தேன்.உடனே வருகிறேன் என்றதால், கதவைத் திறந்து வைத்து விட்டு உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டே, மொபைலை நோண்டிக் கொண்டிருந்தேன்.
ஏன் லேட் என்று கேட்டதும், அவசரமாக இன்னொரு வேலை முடித்து விட்டு வந்தேன் என்று கூறவும், கோபப்பட்டால் வேலை கெடும் என்று அமைதியாகவே லைட் போடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். பில் கேட்டபோது, வாங்க மறந்து விட்டேன் என்றான். ஒவ்வொரு பொருளையும் யானை விலை, குதிரை விலையாகக் கூறினான்.
பைப் விலை எவ்வளவு என்கையில் சிறிய பையன் சித்தார்த் வாயில் இருநூறு என்றும்,அதே நேரத்தில் மணியின் வாயில் முன்னூறு என்றும் வந்தது.நான் கண்ணில் கேள்விக் குறியாக பார்க்கவும்...குழந்தையை முறைத்துப் பார்த்தான் மணி.
வயலில் மரவள்ளிக் கிழங்கு காட்டில் எங்கேனும் வேர்க்கடலை விதை தவறி விழுந்து, கடலைச்செடி முளைத்திருக்கும். தப்பி வந்ததால் அதை தப்புச் செடி என்பார்கள்.தண்ணீர் பாயும் வாய்க்கால் ஓரத்தில் வளர்கையில் கொத்துக் கொத்தாய் காய்த்திருக்கும்.
சித்தார்த் மணியின் மகனாக வளர்கையில், இவன் எதிர்காலம் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
பாத்ரூமில் லைட் போட சிறிய பையன் உதவிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக திறந்து கிடந்த அவன் பையைப் பார்த்து அதிர்ந்தேன்.நான் கம்பி வெட்டவும், பூச்செடி வெட்டவும் பயன்படுத்தி வந்த என் இனிஷியல் போட்டு வைத்த கத்தரிக்கோல் மணியின் பைக்குள் கிடந்தது.
எப்போதும் வீட்டு நுழைவாயிலில் பூச்செடி அருகே ஒரு பெஞ்சில் வைத்திருப்பேன்.அவசரமாக வெளியே வந்து பார்க்கையில் கத்தரிக்கோல் இல்லை. நான் நினைத்தது சரிதான்.எடுத்த அவன் மலர்ந்த முகத்துடன் வேலை செய்து கொண்டிருந்தான்.எனக்குத் தான் கேட்க நா எழாமல் முகம் சூம்பிப் போனது.
சிறிய பையனின் முகம் காட்டிக் கொடுத்தது.அப்பா அவங்க பாத்துட்டாங்கப்பா என்று கிசுகிசுப்பான குரலில் பேசியது கேட்டது.நானும் முகம் மாறாமல் மணியிடம்,நாசூக்காக தம்பி எங்கள் கத்தரிக்கோல் உங்கள் பையில் மாறி வந்து விட்டது பார் என்றவுடன் ஓ... அப்படியா அம்மா? உங்களுடையதா எடுத்துக் கொள்ளுங்கள் அம்மா என்றான்... ஒரு தவறும் செய்யாதது போல அதே மலர்ந்த முகத்துடன்.
இப்போது எலக்ட்ரீசியன் மணி தவறான முன்னுதாரணமாக இருக்க, அவன் மகன் சித்தார்த் கம்பியில் தொங்கிய குருவிக்கூடாகத் தெரிந்தான்.
பூங்கோதை கனகராஜன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்