மா.கார்த்திகா
சிறுகதை வரிசை எண்
# 46
கார்குழலி
"இல்ல திஷா அப்பா நீங்க தமிழ் டீச்சர் ஒங்க சௌரியத்துக்குப் பேரு வைக்குறேன்னு சொல்லிப்புட்டு தூயத் தமிழ்ல கனிமொழி, தேன்மொழின்னு வைக்கப் போறீங்க . அதெல்லாம் முடியவே முடியாது . நான் தான் நேம் செலக்ட் பண்ணுவேன் "என்று ஒற்றைக்காலில் நின்றாள்... கார்த்திகா.
என் மனைவி கார்த்திகாவிற்கு வளைகாப்பு முடிந்த பிறகு.... தலைப்பிரசவம் என்பதால் மாமனார் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர் . டெய்லி போனில் பேசிக் கொள்வதும் உண்டு. இதற்கிடையில் வாரம் ஒரு முறை போய் பார்த்து விட்டு வருவேன் .
"ஏங்க உங்களுக்கு என்ன குழந்த புடிக்கும்" என்றாள் .
நான் வழக்கமா எல்லாரையும் போல "எந்த குழந்தையா இருந்தா என்ன? குழந்தை ஆரோக்கியமாக நல்லபடியா பொறந்தா சரிதான்" என்றேன் .
"சும்மா மழுப்பாம சொல்லுங்க... உங்கள பத்தி எனக்குத் தெரியாதா? ஆணா? பொண்ணா? என்றாள் மறுபடியும் ...
வேறு வழியில்லாமல் "முதல்ல ஒரு ஆண் குழந்தை பொறந்தா நல்லது அப்புறம்... ரெண்டாவது பொறக்கிற குழந்தை எதுவாக இருந்தாலும் ஓ.கே தான்"என்றேன்.
இதைச் சொன்னவுடன் அவளின் முகம் போன போக்கே சரியில்ல. "அட போங்க ...! நீங்களும் எல்லா ஆம்பள மாதிரிதான் பேசுறீங்க... என்னமோ தமிழ் வாத்தியாராம்... பெண்ணியம் அது இதுன்னு பேசுவாராம்.... பெண் குழந்த வேண்டாமாம், ஆம்பள புள்ளதான் வேணுமாம் " என்று என் காதுபடவே நறுக்கென்று கேட்டு விட்டாள்.
எனக்கு ரொம்ப கூச்சமாய் போச்சு . நானும் சராசரி ஆண் மகனைப் போல பேசி விட்டோமோ? சே... நான் இப்படியே பேசி இருக்கக் கூடாதுதான் என்று எனக்குள்ளே நொந்து கொண்டு அவள் முகத்தைப் பார்க்க தெம்பு இல்லாமல் திரும்பி விட்டேன் .
நாட்கள் உருண்டோடியது டாக்டர் டெலிவரிக்குக் கொடுத்திருந்த தேதியும் வந்து விட்டது . டெலிவரி தேதி ரெண்டு நாளுக்கு முன்னேயே நான் மாமனார் வீட்டுக்குச் சென்று விட்டேன் . மாமனார் வீட்டில் ஒரே பேச்சு எங்கு கொண்டு சேக்கலாமென்று ... பிரைவேட் ஹாஸ்பிடல்லையா? கவர்மெண்ட் ஹாஸ்பிடல்லையா ?
"எங்களுக்கு இவ ஒரே பொண்ணு . பணம் செலவழிக்கிறது பத்தி ஒன்னும் கவல இல்ல . நாம பிரைவேட் ஹாஸ்பிடலுக்கே கொண்டு போவோம்" என்றனர் அத்தையும் மாமாவும் .
நான்தான் பிடிவாதமாய் சொன்னேன் "வேண்டாம் மாமா கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல இப்ப எல்லாம் ரொம்ப நல்லா பாக்குறாங்க . எல்லா வசதியும் வந்துவிட்டது . சுத்தமாவும் இருக்கு . ஏன் காசை வீண செலவழிக்கிறீங்க" என்றேன் .
"மாப்பிள்ளை சொன்னா சரியாதான் இருக்கும் நாம கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கே போவலாம் " என்றனர்.
கார்த்திகாவுக்குப் பிரசவ வலி ஒன்னும் வரவில்லை . நானும் அவளும் பைக்கில்தான் சென்றோம் . போகும்போதே மீண்டும் கேட்டாள்...
"ஏங்க என்ன குழந்தை பொறந்தா உங்களுக்குச் சந்தோஷம்" என்றாள் . நான் அவளுக்கு வெறும் புன்னகை மட்டுமே பதிலாகத் தந்தேன் .
ஹாஸ்பிடல் போய் டாக்டர சந்தித்தோம் . டாக்டர் செக் பண்ணி பாத்துவிட்டு ... "நார்மல் டெலிவரி பண்றது ரொம்ப கஷ்டம் . நோ ப்ராப்ளம்... சிசேரியன் பண்ணி விடலாம் சார்".
"டாக்டர் நார்மல் டெலிவரிக்குக் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்களேன்"
"கவலைப்படாதீங்க சார்... இப்பெல்லாம் நார்மல் டெலிவரி ரொம்ப வர்றது இல்ல . அதுக்குக் காரணம் நம்ம முன்னோர்கள் காலத்துல இருந்த பெண்கள் மாதிரி இப்ப யாரு...? உடம்பையும் மனசையும் தெம்பா வச்சுக்கிறாங்க .. அதுக்கு அவங்களுடைய ஹெல்த்தும் ஒத்துவரனும்ல... பெரும்பாலும் ஆபரேஷன் தான் பண்றோம் கவலைப்படாதீங்க... தாயும் புள்ளயையும் சேப்டியா கொண்டு வந்து சேத்துறோம்" என்றார் டாக்டர் .
பல திரைப்படங்களில் வர்ற மாதிரி நானும் வராண்டாவில் குறுக்கும் நெடுக்கமாக நடக்கவில்லை . மாறாக ஒரே இடத்தில் அமர்ந்து விட்டேன் . சிறிது நேரத்தில் எங்க வீட்டிலும் மாமனார் வீட்டில் உள்ளவர்களும் வந்து விட்டனர் .என்னோடு சேர்த்து வரிசையும் நீண்டது .
ஆப்ரேஷன் தியேட்டரில் உள்ள போன கொஞ்ச நேரம் கழிச்சு நர்சம்மா தலை வெளியே தெரிந்தது .
"யாருங்க கார்த்திகா வூட்டுக்காரரு ...யாருங்க...? என்று அதட்டும் தொணியில் கூப்பிட்டார் . "நாந்தான் சிஸ்டர்" ...என்று நெஞ்சு படபடப்போடு ஓடினேன் .
"உங்களுக்குப் பெண் குழந்த பொறந்திருக்கு ஆல் த பெஸ்ட்" என்றார் .
எனக்கு முகமெல்லாம் ஒரே பூரிப்பு ரொம்ப மகிழ்ச்சி என்றேன் . வீட்டில் உள்ள எல்லோருக்கும் மகிழ்ச்சி . இந்த மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கு முன்னே மூளையில் இருந்து பாட்டியின் குரல் கேட்டது .
"ம்ம்ம்...ஆம்பள புள்ள பொறந்து இருந்தா நல்லா இருந்திருக்கும் . பரவாயில்ல.... தலைச்சம் பொண்ணு பொறந்தா குடும்பத்துக்கு நல்லதும்பாங்க" . என்றாள் பாட்டி.
"நீ சும்மா இரும்மா"என்று அதட்டினார் அப்பா .
சிறிது நேரத்தில் மனைவியை வெளியே கொண்டு வந்தனர் ... அரை மயக்கத்தில் படுத்த நிலையில் இருந்த அவள் என்னைப் பார்த்துக் கொண்டே சென்றாள் . எனக்கு மட்டுமே புரிந்த அந்த பார்வை என்னை ஏதோ செய்தது.
கொஞ்ச நாளக்கிப் பிறகு என்ன பேரு வைக்கலாம் என்று பேச்சு அடிபடத் தொடங்கியது.
" நம்ம குடும்ப ஜோசியர் சொல்லிட்டாரு த, தா ,தி வரிசயிலதான் பேரு வைக்கணுமாம்" என்றார் மாமனார் .
" நல்ல பெயரா தூயத் தமிழில் வைக்கலாம்" என்றேன் .
"போங்க உங்களுக்கு வேற வேலயே இல்ல . இந்த காலத்துல போயி தூயத் தமிழ்ல பேரு வக்கிறாராம் . தமிழ் வாத்தியாருன்னா அத ஸ்கூலோட வச்சுக்குங்க" என்று பொறுமிக் கொண்டே .... பார்வையாலே எரித்துவிடுவது போல் பார்த்தாள் கார்த்திகா.
ஏற்கனவே குழந்த விஷயத்துல வாய் கொடுத்து மாட்டிக்கிட்டோம் . இப்ப ஒன்னும் சொல்ல வேண்டாம் பிறகு பாத்துக்கலாம் என்று இருந்து விட்டேன் . மாமனார் வீட்டுல முடிவு செய்து "திஷா ஸ்ரீ" என்று பெயரிட்டனர் . "திஷா" என்றால் அதிர்ஷ்டம் என்ற பொருள். உண்மையிலேயே எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் மகள் வடிவில் வந்து சேர்ந்தது .
ஒப்புக்கு என்னிடம் வந்து "ஏங்க பேரு ரொம்ப நல்லா இருக்குல... நம்ம தெருவுல யாருக்குமே இந்த பேரு வைக்கலங்க... மார்டனா அழகாவும் இருக்குல"...
நானும் ஆமாம் என்பது போல் தலய ஆட்டினேன்.
காலம் உருண்டோடியது இப்போது இரண்டாவது டெலிவரிக்கும் அதே ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டோம் . இப்போதும் என் மனைவியிடமிருந்து ஒரு கேள்வி எழுந்தது.
"என்னங்க திஷா அப்பா..! ஆம்பள புள்ள பொறந்தா நல்லா இருக்கும்ல.. நீங்க என்ன நெனக்கிறீங்க"... என்றாள்.
இப்போது தீர்க்கமான பதிலோடு என் மனைவியை எதிர்கொண்டேன் .
"இத பாரு கார்த்திகா... வீணா நீ மனச போட்டு அலட்டிக்காதே . நான் தெளிவா இருக்கேன். ஆணோ...!பெண்ணோ ...! எதுவானாலும் ஓ.கே தான். குழைந்தையில என்ன பாகுபாடு ... ஆம்ள புள்ளதான் வேணும் அப்படீங்ற நெனப்பலாம் ஆண்டுமாறி ரொம்ப நாளாச்சு... "ஆசைக்கு ஒன்னு...ஆஸ்த்திக்கு ஒன்னுங்கற காலமெல்லாம் போச்சு... நல்ல ஆரோக்கியமா பொறந்தாலே போதுங்ற நெலமைக்கு ஒலகம் மாறிக்கிட்டு இருக்கு... இன்னமும் அதேயே...பேசிகிட்டு போப்..பா! " என்றேன் சற்றே நிதனாமாக.
"இப்பதான் நீங்க தமிழ் வாத்தியார் மாதிரி பேசுறீங்க"... என்றாள் புன்னகைத்தவாறு.
"எந்த குழந்தையா இருந்தாலும் பரவாயில்லங்க.... டெலிவருக்குப் பிறகு கருத்தடை பண்ணிக்கிறேன்" என்றாள். நானும் அதில் உறுதியாய் இருந்தேன்.
ஆபரேஷன் தியேட்டரில் இருந்து சிஸ்டரின் தல வெளியே தெரிந்தது .
" கார்த்திகாவுக்குப் பெண் குழந்த பொறந்திருக்கு" என்றார் .
மிகுந்த மன மகிழ்வோடு சிஷ்டரை எதிர் கொண்டேன் ." நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க! நன்றிமா ..." என்றேன் ...கை கூப்பியபடியே.
இப்போது என் மனதில் எந்த வருத்தமும் இல்லை . தாயும் மகளும் ஆரோக்கியமாய் இருந்தாலே போதுமானது ... இதுவே கடவுளுக்கு நாங்கள் செலுத்தும் நன்றிக்கடன் என்று இறைவனை வணங்கி நின்றேன்.
இந்த நினைவலைகளை அசை போட்டுக்கொண்டிருந்த வேளையில் அது களையும் வண்ணம் என் மனைவியின் குரல் ஒலித்தது . "திஷா அப்பா நல்ல மார்டனா.... ஸ்டைலிஷ்ஷா நேம் செலக்ட் பண்ணுவோங்க "என்றாள்.
"முடியவே முடியாது இந்த முறை நான்தான் குழந்தைக்குப் பெயர் வைப்பேன்" என்று கரராக சொல்லிவிட்டேன் .
"சரி...சரி இந்த மொற நீங்களே ஒரு பேரு வைய்யுங்க . அதுவும் ஒரு நல்ல தமிழ்ப் பேரா இருக்கட்டும். சும்மா உங்கள மெறட்டிப் பார்த்தேன் " என்றாள் சிரித்துக் கொண்டே ...
"ஆனா ஒரு கண்டிஷன் நம்ம ஜோசியர் சொன்னபடி கா , கீ வரிசையிலதான் வைக்கனும் என்ன ஓ.கே வாங்க" என்றாள்.
"சட்டென என் நினைவுக்குள் பொறி தட்டியது இரண்டாவதாகப் பிறந்த எங்கள் செல்வ மகளுக்கு நான் சூட்டிய பெயர் கார்குழலி.
தனியார் பள்ளியில் தமிழாசிரியர் பணி என்பதால் வந்த வருமானம் போதவில்லை ...இப்போது சிங்கப்பூரிலிருந்து நான் தொலைபேசியில் அழைக்கும் பொழுது .....
"ஹலோ! யார் பேசுறது" ...!
"ம்... ம்...நாந்...நாந்..நாந்தான் பேச்சுறேன்"... என்றது மறுமுனையில் மழலையின் குரல் .
"நாந்தானா யாரு? பேரு... இல்லையா ? யாரு பேசுறது ?....என்றேன் மனதிற்குள் மகிழ்ச்சியில் திளைத்தபடியே...
"ம்..நாந்தாப்பா பேச்சுறேன்... "காக்குளலி"என்றாள் இரண்டரை வயது செல்வ இளைய மகள் .
நான் வைத்த தமிழ்ப் பெயரை (கார்குழலி) என் மகளின் மழலை மொழியில் கேட்கிறபோது உலகத்தின் ஒட்டுமொத்த சுகத்தையும் ஒரு சேர அனுபவிக்கும் உணர்வினை நான் பெற்றேன்.
மக்கட் செல்வத்தை விட்டுப் பிரிந்து பொருட் செல்வத்தைத் தொலை தேசத்தில் தேடும் ... மகளைப் பெற்ற ஒவ்வொரு அப்பாக்களின் செவிகளிலும் இது போன்ற ஏதோ ஒரு ஒற்றை நாதம்... தினந்தோறும் ஏதோ ஒரு மூளையிலிருந்து ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.
"ம்...நாந்தாப்பா பேச்சுறேன்... காக்குளலி...! காக்குளலி...! காக்குளலி...!
மா.கார்த்திகா
1/42அண்ணா நகர்
இராயபுரம் (அஞ்சல்)
நீடாமங்கலம் ( தாலுக்கா)
திருவாரூர் (மாவட்டம்)
தொலைபேசி : 9585130642
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்