D.MARIMUTHU
சிறுகதை வரிசை எண்
# 45
சேப்பு யண்ணா…
_ மதுக்கூர்மாரிமுத்து
நாப்பத்தேழு வயசு இருக்கும் . அஞ்சரை அடி ஒசரம் . கட்டுமஸ்தான உடம்பு . கருண கருணையா தெறண்டு உருண்டு இருக்கும். எப்ப தூங்கும் எப்ப எந்திரிக்கும் எதுவும் நமக்குத் தெரியாது . வெய்யிலு மழ குளிரு இதெல்லாம் நம்ம மாதிரி ஆளுங்களுக்குதான்... ஆனா சேப்பு யண்ணனுக்கு இதெல்லாம் ஒரு பெருசாவே தெரியாது . சேப்பு யண்ணா முழுப் பேரு செயப்பிரகாசம் ஆனா அந்த பேர யாரும் கூப்பிட்டதா நெனப்பு இல்ல.
இடுப்புல நாள் அங்குலத்துல ஒரு துண்டு .. இல்லன்னா அழுக்கான வேட்டி இது மட்டும்தான் இருக்கும். சட்டப் போட்டு நா பாத்ததே கெடயாது . ஒரு எடத்திலும் ஒக்காந்து அதிகம் பாத்ததில்ல நடந்தும் ...பேசிக்கிட்டே தான் இருக்கும் . ஆனா பதில் பேசதான் ஆளு இருக்காது . சேப்பு யண்ணன மதுக்கூருல இருக்கிற அத்தனைப் பேத்துக்கும் தெரியும் . ஒரு எடம் வுட்டாதானே எல்லா எடத்திலும் சுத்துனா அப்புறம் எப்படி தெரியாம இருக்கும் .
காலைல வூட்டவுட்டு கெளம்புனா காலு போன போக்குல நடந்துகிட்டே இருக்கும் . ஆனா மதுக்கூர விட்டுத் தாண்டாது . தெருவத் தாண்டுனதும் கப்பி ரோடுதான். அங்கங்க குண்டும் குழியுமா இருக்கும் . தார் போட்டு ஒன்பது வருஷமாச்சு . ஆச்சிதான் மார்றது ஒழிய ரோடு போட்ட பாடு இல்ல . இந்த கனகச்சிதமான சிக்கி முக்கு ரோட்லதான் கால்ல செருப்பு இல்லாம சேப்பு யண்ணனோட காலு பரபரப்பா போயிகிட்டு இருக்கும் . ரோட்டுக்குக் கெழக்க காசாங்காட்டார் தென்னந்தோப்பும் வலப்பக்கம் ஞானசேகரன் தென்னந்தோப்பும் வழிநெடுக வரவேற்கும் . நா சின்னபுள்ளயா இருந்தப்பா இந்த தோப்பு தோரவெல்லாம் முப்போகமும் வெள்ளாம பண்ணுற எடமா இருந்துச்சு. நெல்லு,நெலக்கடல,எள்ளு,உளுந்துன்னு மாறிமாறி வெளஞ்ச பூமி... பசுமையா கண்ணுக்குக் குளிர்ச்சியா எதம்மா இருக்கும். அரசாங்கத்துல எடம் இல்லாத எல்லா சாதி சனத்துக்கும் சமத்துவபுரம் கட்டலாம்னு அதிகாரிங்க வந்து பாத்துட்டுப் போனாவோ... அன்னைக்கு ராத்திரியே நெலந்துகாரங்களாம் ஒன்னு கூடி பேசீ... மறுநாளே தென்னம் புள்ளய போட்டுப்புட்டாவோ...
யண்ணனுக்குப் பெரமையா கோயிலிலதான் முதல் அட்டனன்ஸ் . கடவுள்ட்ட நாம பேசுறமோ? என்னமோ? சேப்பண்ண தெனமும் பேசிகிட்டு இருக்கும் . காலையில எழுந்ததுமே மொதல்ல கோயிலுக்குப் போயிரும். நமக்கெல்லாம் காரியம் ஆகணும் வவுத்துவலின்னு வந்தா மட்டும்தான் சாமி கும்பிட போவோம் . ஆனால் சேப்பண்ணனுக்கு அந்த கணக்கெல்லாம் இல்ல. கடவுளுடைய டெய்லி ரெகுலர் கஸ்டமர் .
பட்டுக்கோட்டையிலிருந்து மன்னார்குடி செல்லும் மெயின் ரோட்டுல ... நாலு முக்கு சந்திக்கும் எடத்துல மேக்கு திசய பாத்த மொவமா கொடுவா மீசையோட கையில அருவா வச்சிக்கிட்டு கண்ணுல கனல் தெறிக்க காட்சி தர்றவர்தான் எங்க ஊரு எல்ல சாமி பெரமையா . பஸ்ல பயணம் செய்றவங்க, வெளியூருக்கு வெளிநாட்டுக்கு போறவங்க , புதுசா திருமணமான தம்பதிங்க எல்லாரும் வந்து முத மரியாதையும் வேண்டுதலையும் வச்சுட்டுப் போற எடம் எங்க பெரமையா அய்யாவுக்குதான் . ஆடி மாசம் ஒவ்வொரு திங்ககிழமயும் அய்யாவுக்கு விசேஷம்தான் . கணக்கில்லா ஆடுகள வெட்டி, சேவ அறுத்து பொங்கலிட்டு சுத்தப்பட்டு கிராமத்திலுள்ள அத்தன பேத்துக்கும் அருள் பாலிக்கும் அய்யா .
இந்த குலசாமிக்கு ஒரு கத வுண்டு . சின்ன வயசுல சின்ன பசங்கெல்லாம் சேந்து தளியகுளம் பக்கத்துல மாடுகளையும் ஆடுகளையும் மேச்சுப்புட்டுத் தண்ணீக் குடிப்பதுக்காகத் தளிய குளத்துப் பக்கம் ஒதுங்குவது வழக்கம் . அப்படி தண்ணீக் குடிக்க வரும் போது அங்க இருக்குற களிமண்ணுல விளையாட்டுப் பொம்மை செஞ்சி வெளயாண்டாங்க . அப்படி ஒரு நாளு வெளயாட்டு பொருளோட சேத்து களிமண்ணுல சின்ன அருவாவும் செஞ்சு வெளயாண்டாங்க . சாயங்காலம் வீட்டுக்குப் போவும் போது அந்த மண்ணு அருவா அங்கேயே போட்டுப்புட்டுப் போய்ட்டாங்க . மறுநா வந்து பாத்தபோ அந்த அருவா கொஞ்சம் பெருசா வளர்ந்து இருந்துச்சாம். அப்ப அதுல ஒரு சிறுவன் வெளயாட்டா செஞ்ச மண்ணருவாவ எடுத்து என்ன வெட்டுன்னு சொல்ல மற்றொரு சிறுவன் வெளயாட்டாய் வெட்ட தல துண்டிக்கப்பட்டு தனியாய்ப் போச்சாம் ... அப்ப அங்கிருந்த சின்னப்பசங்க பயந்தடிச்சிக்கிட்டு ஊருக்குள்ள வந்து விஷயத்தை சொல்ல ... கிராமத்துல எல்லாரும் போய் அந்த சிறுவன தளிய குளத்துக்கு அருகிலேயே அடக்கம் செய்து விட்டனர் . கொஞ்ச நாளைக்குப் பொறவு ஆடு மாடு மேய்க்கிற ஆளுங்கள பயமுறுத்துவதாகவும் அந்த பக்கம் போறவங்க செலபேரு ரத்த வாந்தி எடுத்து செத்ததாகவும் சொல்லப்படுது . பயந்து போன ஊர் மக்கள் கோடாங்கிய அலச்சு குறி கேட்க கோடாங்கி ஒடம்புக்குள்ள அந்த சிறுவன் வந்து பேசியதாகவும் சொல்றாங்க .
"என்ன அந்த இடத்தில் புதைத்துப்புட்டு அதோட என்ன மறந்துட்டீங்க . அதனாலதான் நான் ரெத்த காவு வாங்க வேண்டிய நெலம வந்துச்சி . என்னய நீங்க செலையா செஞ்சி வழிபட்டு வந்தீங்கன்னா .... உங்களையெல்லாம் காக்கிற காவல் சாமியா இருந்து உங்களுக்கெல்லாம் நல்லது செய்வேன்னு" சொன்னீச்சு . அந்த சிறுவனோட பேரு தான் நாங்க இன்னைக்கு வழிப்பட்டு வர்ற பெரமையா சாமி . கேட்டதையெல்லாம் கொடுக்கும் அய்யாவாக இன்னைக்கு எங்க கிராமங்களையெல்லாம் பாதுகாக்குற எல்லைச்சாமியா இருந்து எங்களயெல்லாம் காத்திட்டு வர்ராரு.
அவர்கிட்ட போயி பேசிட்டு பஸ்ல போற வர்ரவங்க போடுற காச உரிமையோடு எடுத்துக்கிட்டு .. கோயிலுக்குப் பக்கத்துல இருக்குற சண்முகம் யண்ண டீக்கடையாண்ட டீ வடையும் சாப்புடுவது யண்ணனுக்கு வழக்கம் .. சில நாளைக்குக் காசு கொடுக்காட்டிக் கூட சண்முகம் யண்ணே டீ கொடுத்துடுவாரு .
"எல பெரமாச்சி மவனே இந்தாடா டீய புடி" என்று அன்பாய்க் கொடுக்க.. அவர பார்த்து "பாம்பு வருது..ம்ம்..ஆஆ...பாம்பு வருது.. வுட்டோ சலோ.. பாக்குறாம்பாரு ங்ங்...கூங் .. மம்ம்ம் ஆஆங் பாக்குறான் பாரு" ... என்று தனக்குத்தானே பேசிக் கொள்ளும். தெரிஞ்ச ஆளா இருந்தா கரெக்டா போயீ உரிமையோடு காசு கேட்கும்.
" என்ன மாரிமுத்து சில்லறையா இருக்கு ... டீக் குடிக்கலாமா என்ன? என்ன பிரபு போன் பண்ணுலாப்லயா"...என்று வெளிநாட்டுல வேல பாக்குற தம்பிய பத்தியும் இடையில ஒரு விசாரிப்ப போடும் .. ஒன்பதாவது வரையும் படிச்சிருக்கு ... இங்கீலீசும் தமிழும் எழுதுனா அவ்வளவு அழகா இருக்கும். எண்பதுகளில் வெளிவந்த அத்தன சினிமா பாட்டும் யண்ணனுக்கு அத்துபடி . பாட்டோட அடி மறந்து போனாலும் ராகம் மாறாது . கேட்கிறவங்களுக்கு அவ்வளவு இனிமையா இருக்கும் . ரெண்டு மூணு பாட்ட மிக்ஸ் பண்ணி பாடுறதுல இளையராஜா கூட தோத்து போயிருவாரு ... அப்படிப் பாடும். சேப்பு யண்ணனோட தம்பி முருகானந்தத்துகுப் பம்பாய்ல வேல. அங்க போய் கொஞ்ச நாள் வேல பார்த்துச்சு சேப்பு .. அங்க புடிச்சது தான் .... சனியன் . அப்புறம் கொஞ்ச மாசத்துக்குப் பொறவு ஊருக்கு வந்துருச்சு . அதிலிருந்து இப்படித்தான் ..
அப்படியே நடயப் போட்டு ஐயப்பா தியேட்டரு ஆத்து பாலம் வழியா போயி அவயாண்டி குளத்துல ஒரு குளியல் போடும் . அதுவும் நெனச்சாதான் உண்டு . இல்லன்னா இது மாதிரியான சம்பவம் ரெண்டு மாசத்துக்கு ஒருதரையோ ரெண்டு தடவையோதான் நடக்கும் . பல்லு கில்லு வெளக்கறது கிடையாது . ஆனா மனுஷன் ஒரு நாலு கூட நோயினுப் படுத்தது கெடயாது . அமாவாசை பௌர்ணமி வந்தா சேப்பு யண்ணா ரொம்ப உச்சத்துக்கு போயிரும் . கெடக்கிற பொருள எடுத்து அடிக்கிறது உடைக்கிறது . இப்படி பல நாலு போயிட்டு இருந்துச்சு . அப்புறம் சொந்தக்காரங்க எல்லாம் சேந்து முத்துப்பேட்டை தர்காவுக்குக் கொண்டு போய்ட்டாங்க. இரும்புச் சங்கிலி கொண்டு கொஞ்ச நாலு கட்டிப் போட்டு மந்திருச்சு வைத்தியம் பாத்தாங்க . அப்புறம் கொஞ்சம் தெளிவான பொறவு ஊருக்கு அழைச்சுகிட்டு வந்தாங்க.
உடம்பு சரியா வந்து தெளிவாத்தான் இருந்துச்சு . வேலைக்கு எல்லாம் கூட போனுச்சு . எல்லாத்துக்கிட்டேயும் சிரிச்சு பேசிகிட்டு . வீட்டு வேல எல்லாம் இழுத்துப் போட்டுப் பாத்துச்சு . ஊர்ல உள்ள எல்லாருக்கும் ஆச்சரியம் . "பரவாயில்லையே பெரமாச்சி மொவன் நல்லாய்யிட்டான். அந்தக் கடவுளு கண்ண தொறந்துட்டான்" என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டனர். யண்ணனோட அப்பா பெரமாச்சி யண்ணனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி பாக்க ஆசைப்பட்டாரு . சொந்தக்காரங்க எல்லாம் சேந்து ஒரு பொண்ணும் பாத்துட்டாங்க . பொண்ணு வூட்டுக்காரங்களும் யண்ண வீட்டுக்கு வந்து மாப்பிள்ளையப் பார்த்து புடிச்சுப் போய் .... சாப்பாட்டுல கையும் நனைச்சுட்டாங்க . ஊருக்குப் போய் தகவலு சொல்றனு சொல்லிட்டு போனவங்க ...யாரு கண்ணு பட்டுச்சோ என்னவோ "கிறுக்கு பயலுக்கு எல்லாம் பொண்ணு தர முடியாது . எம் பொண்ணோட வாழ்க்கையே கெடுத்துபுட பாத்தீங்களடா" ன்னு ... பொண்ணோட அப்பா கூச்சல் போட ஆரம்பிச்சுட்டார் . சேப்பு யண்ணனோட பங்காளி பயலுவ யாரோ இடயில பூந்து வேளய பாத்துவுட்டானுவோ.. அப்புறம் என்ன சேப்பு யண்ணனுக்கு சொல்லவா வேணும் . மீண்டும் பழைய நிலய விட மோசமான நிலைக்குப் போயிடுச்சு ...
அது அப்படி ஆனதுக்கு வேறொரு காரணமும் சொல்லுறாங்க ... “அவ அப்பன் பெரமாச்சி செஞ்ச பாவந்தான் மொவனப் போட்டு இந்த பாடுபடுத்துது”...அப்படின்னு ஊருக்குள்ள பல பேரு பேசிக்கிட்டாங்க . என்னான்னு வெசாரிச்சுப் பார்த்தா . சேப்பு யண்ணனோட அப்பா பெரமாச்சி அந்த ஊரு வீரமாகாளியம்மன் கோவிலுடைய பரம்பரை பூசாரி குடும்பத்தைச் சேர்ந்தவர் . தண்ணிப் பழக்கம் உள்ளவர் . தண்ணி அடிக்க காசு இல்லாத நேரத்துல கோயில் சாமான் சட்டுகளைக் கொஞ்சம் கொஞ்சமா எடுத்து வித்துப்புட்டுடாப்ள.. அந்த பாவம் தான் அவங்க குடும்பத்தைப் போட்டு இந்த ஆட்டு ஆட்டுது ..அப்படீன்னு ஊர்ல உள்ள பெருசுக ஆளுக்கொரு கதய சொல்ல ஆரம்பிச்சுடாங்க .
என்னடா இது யண்ணன் சேப்புக்கு வந்த சோதன... இது தெய்வ குத்தமா? இல்ல இந்த மனச பயலுவலோட குத்தமா? ன்னு... எனக்கு ஒன்னும் புரியல . இன்னைக்கும் நீங்க .. மதுக்கூரு போனீங்கன்னா ஏதாவது ஒரு எடத்துல சேப்பு யண்ணனோட வரவு நிச்சயம்.
மதுக்கூர் மாரிமுத்து
1/43 கீழத்தெரு
மதுக்கூர் வடக்கு
பட்டுக்கோட்டை( தாலுகா )
தஞ்சாவூர் ( மாவட்டம்)
614 903
தொடர்புக்கு : 9786810226
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்