Nandhini
சிறுகதை வரிசை எண்
# 44
அவளோடு நான்
-------------------------------
"ஐயா, சமையல் முடிந்தது சாப்பிடுகிறீர்களா" என்று வேலைக்காரி கமலா கேட்க , "உனக்கு பசிக்குதா மாதவி, சாப்பிடலாமா?" என்று கேட்டார் மோகன்.
பின்பு, "இல்லை கமலா, மாதவிக்கு இப்போ பசிக்கலையாம் நாங்கள் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறோம்" என்று கூறிவிட்டார்.
கமலாவும், "சரிங்க ஐயா!" என்று கூறிவிட்டு மற்ற வேலைகளை செய்ய சென்று விட்டாள்.
"அப்புறம் மாதவி உனக்கு ஒரு செய்தி தெரியுமா! நம்ம பக்கத்து வீட்டு சேகருக்கும் அவன் பொண்டாட்டிக்கும் நேற்று ஒரே சண்டையாம், அவன் பொண்டாட்டி கோபித்துக் கொண்டு அவள் அம்மா வீட்டுக்கு போயிட்டாளாம். ஏன் மாதவி, நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருடம் ஆகிவிட்டது, நான் உன்னை எவ்வளவோ திட்டியிருக்கேன் ஆனால் ஒரு நாள் கூட என் மேல் கோபப்பட்டு என்னை விட்டு நீ போனதே இல்லைல, என்மேல் உனக்கு அவ்ளோ பாசமா!" என்று மாதவியிடம் உள்ளம் நெகிழ்ந்தார்.
"என்ன நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன், நீ எதுவுமே பேசாம அமைதியா இருக்க? ஓ பசிக்குதா, சரி இரு நானே உனக்கு சாப்பாடு போட்டு எடுத்துட்டு வருகிறேன்"
சமையல் அறைக்குள் வந்த மோகன், 'இன்னைக்கு வெண்டைக்காய் பொரியலா! மாதவிக்கு பிடிக்கும்' என்று முகமலர்ந்து அதை நிறைய தட்டில் எடுத்து வைத்துக் கொண்டார். பின்பு, சிறிது சாதத்தில் பருப்பை ஊற்றி அதன் மேல் ரசத்தையும் ஊற்றி பிசைந்துக் கொண்டார். பருப்பையும் ரசத்தையும் கலந்து சாப்பிட்டால் தான் மாதவிக்கு பிடிக்கும் என்று அவருக்கு நன்றாக தெரியும். மேலும் கடித்துக் கொள்ள தனியாக அப்பளத்தையும் கையில் எடுத்துக் கொண்டார்.
"மாதவி, இன்னைக்கு உனக்கு பிடித்த சமையல்" என்றுக் கூறிக்கொண்டே படுக்கை அறைக்கு வந்தவர், "இன்னைக்கு நானே உனக்கு ஊட்டி விடறேன், எங்க 'ஆ..' காட்டு மாதவி" என்றார்.
"என்ன மாதவி இது,நான் தான் முதலில் சாப்பிடணுமா? உன் பிடிவாதத்தை மாற்றவே முடியாது. நல்லா பாரு உன் கண் முன்னாடி நானே சாப்பிடுகிறேன்" என்றுக் கூறி சாப்பிடத் தொடங்கினார்.
அதே நேரம் வீட்டு வாசலில் அழைப்பு மணி அடிக்கப்பட்டது.
"யாரோ வீட்டுக்கு வந்திருக்காங்க, இரு மாதவி யாருன்னு பார்த்துட்டு வருகிறேன்" என்றுக் கூறி வீட்டுக் கதவை திறந்தார் மோகன்.
வெளியில் சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள் கவிதா.
கவிதாவை பார்த்த மோகன், "வாமா கவிதா!" என்றுக் கூறி அவளை உள்ளே அழைத்தார்.
"மாதவி, யாரு வந்திருக்காங்க பாரு நம்ம பொண்ணு கவிதா வந்துருக்கா!" என்று மகிழ்ச்சியாக கூறினார் மோகன்.
"என்னப்பா இது! ஏன் இப்படி இருக்கீங்க" என்று கவலையாக கவிதா கேட்டாள்.
"ஏன் எப்படி இருக்கேன்? எனக்கென்ன நான் நல்லா இருக்கேன்" என்றுக் கூறி தன் கைக்கால்களை எல்லாம் மடக்கிக் காண்பித்தார்.
"உண்மையை சொல்லுங்க நான் எதைப்பற்றி கேட்கிறேன்னு உங்களுக்கு புரியலையா" என கவிதா ஏக்கமாக கேட்க, "எல்லாம் அப்பாக்கு புரியுதுமா, ஆனால் அப்பாக்கு இப்படி இருக்கிறது தான் பிடிச்சிருக்கு" என்றார் மோகன்.
"அதுக்காக இல்லைபா, இப்படியே போனால் நீங்கள் வேற மாதிரி மாறி விடுவீர்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது"
"என்ன எனக்கு பைத்தியம் பிடித்துவிடும்னு பயப்படுறையா" என்றுக் கேட்டார் மோகன்.
அதைக் கேட்ட வேலைக்காரி கமலா கவிதாவை பார்த்து, "பாருங்கமா நான் எதை சொன்னாலும் இப்படித்தான் பேசறாரு, அதனால இப்போலாம் நான் ஐயா கிட்ட எதுவுமே பேசறது இல்லை" என்றாள்.
"அப்பா தயவுசெய்து எனக்காகவாவது கொஞ்சம் புரிந்துக் கொள்ளுங்கள் அப்பா” என்று பாவமான முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள் கவிதா.
"இப்போது உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சணை, ஆமாம் மாதவி இறந்து பதினெட்டு வருடம் ஆகிவிட்டது. அவள் இல்லாமல் பதினெட்டு வருடம் எப்படியோ கழித்து விட்டேன், இனிமேல் இருக்கும் என் மீதி வாழ்க்கையை கற்பணையாய் அவளோடு வாழ நினைக்கிறன். இதில் என்ன தவறு இருக்கிறது?" என்று மோகன் கேட்டார்.
"இவ்வளவு நாள் எப்படி அம்மாவோட நினைவு இல்லாமல் வாழ்ந்தீர்களோ அதே மாதிரி இருங்களேன்" என்று கவிதா கேட்க, "இவ்வளவு நாள் எனக்கு மாதவி நினைவு இல்லைன்னு யாரு சொன்னது? ஒரு நாள் கூட அவளை நினைக்காமல் நான் இருந்ததில்லை. என்ன ஒன்னு மாதவி இறக்கும்போது நீ சின்ன பொண்ணா இருந்ததுனால உன் முன்னாடி வருத்தப்பட்டடா நீ உடைஞ்சு போயிடுவேன்னு நான் கவலைப் பட்டதை வெளியில் காட்டிக் கொண்டது இல்லை அவ்ளோதான்" என்றுக் கூறினார் மோகன்.
"இதுக்குதான் நான் கல்யாணமே வேண்டாம் உங்ககூடவே இருந்தறேன்னு சொன்னேன். நீங்க தான் என்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்க வெச்சுடீங்க" என்று கோபம் கொண்டவளாய் திரும்பிக் கொண்டாள் கவிதா.
அதைக் கண்ட மோகன் புன்னகைத்து விட்டு, "சரி, உன் விருப்பப்படியே விட்டுருந்தா எத்தனை நாளுக்கு என் கூட இருப்ப நான் சாகுற வரைக்கும், அதுக்கு அப்பறம் உனக்குன்னு யாரு இருப்பா? ஒரு பொண்ணு தனியா இருந்தா ஒன்னு ஊரு அவளை தப்பா பேசும் இல்லைனா பலரும் அவளிடம் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுவாங்க, இதெல்லாம் நடக்கக் கூடாதுன்னு தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன்" என்றார்.
"அப்போ, நீங்களும் என்கூட வந்து இருக்க வேண்டியது தான, அதுக்கும் ஒரே பிடிவாதமா வரமாட்டேன்னு சொல்லறீங்க" என்று கவிதா கேட்க, "பொண்ணைக் கட்டிக் கொடுத்தா அதோட நிறுத்திக்கணும், அவள் கூட வந்து சம்பந்தி வீட்ல இருக்கறது நாகரிகம் கிடையாது. அது உன் அப்பாவுக்கு தான் அவமானம்" என்றார் மோகன்.
"இப்படி சொன்னா நான் என்ன பண்ணட்டும், உங்களை தனியா விடவோ இல்லை முதியோர் இல்லத்தில் சேர்த்தவோ எனக்கு உடன்பாடு இல்லை" என்றுக் கண்கலங்கினாள் கவிதா.
"எனக்கும் அதில் விருப்பம் இல்லை. இங்க பாருடா கண்ணு, இப்போ எனக்கு என்ன குறை சொல்லு! எனக்கு சமைத்துக் கொடுத்து இருபத்தி நான்கு மணி நேரமும் கூட இருந்து தேவையானதை செய்துத் தர சம்பளம் கொடுத்து ஆள் வைத்திருக்கிற, அது மட்டும் இல்லாம சாப்பிட்டாச்சா, தூங்கியாச்சான்னு ஒரு நாளைக்கு நாளு தடவை போன் பண்ணி விசாரிக்கிற, பத்தாததுக்கு நேரம் கிடைக்கும் போது நேரில் வந்து என்னை பார்த்துட்டு போற, இதைவிட வேற என்ன வேண்டும்" என்று தன் மகளின் கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினார் மோகன்.
"நான் மட்டும் பையனா பிறந்ததிருந்தா, நீங்க என்கூடவே இருந்திருப்பீங்க தான?" என்றுப் பரிதாபமாய் கேட்டாள் கவிதா.
"பெண்பிள்ளையாய் பிறந்ததுனால தான் என்னை இவ்வளவு பாசமா பாத்துக்குற, இதே பையனா பிறந்திருந்தா எனக்கு பிடிக்குதோ இல்லையோ தொல்லை விட்டதுடா சாமின்னு என்னைக்கோ கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விட்டுட்டு வந்திருப்ப" என்றார் மோகன்.
"அதெப்படிபா, எந்த கேள்வி கேட்டாலும் அதுக்கு ஏத்தமாதிரி ஒரு பதிலை சொல்லி வாயை அடைத்துவிடறீங்க! உங்ககிட்ட பேசி வெற்றி பெற யாராலையும் முடியாது" எனக் கூறினாள்.
"உங்க அம்மா மாதவியும் இதேதான்மா சொல்லுவா, உங்ககூட பேசி யாராலையும் வெற்றி பெற முடியாதுன்னு"
"அம்மா சரியாத்தான் சொல்லியிருக்காங்க, அவுங்க உங்களை நல்லா புரிந்து வைத்திருக்காங்க" என்று கவிதா கூறினாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு கவிதா மோகனிடம், "சரிப்பா எனக்கு நேரம் ஆகிவிட்டது நான் கிளம்பறேன், நேரத்துக்கு மறக்காம ஒழுங்கா சாப்பிடுங்க, உடம்பை பார்த்துக்கோங்க நான் மறுபடியும் வருகிறேன். கமலா, அப்பாவை நல்லா பார்த்துக்கோ" என்று கூறி விடை பெற்று சென்றாள்.
கண்ணில் இருந்து மறையும் தொலைவு வரை தன் மகள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மோகன் மீண்டும் படுக்கை அறைக்கு வந்து, "நம்ம பொண்ணு என்ன சொல்லிட்டு போறா பார்த்தியா மாதவி, நீ என்னை நல்லா புரிந்து வைத்திருக்கியாமாம். அதனால தான் என்னை தனியா விட்டுட்டு போனயா" என்று தன் கற்பணை உலகில் மாதவியுடன் உரையாடலைத் தொடர்ந்தார்.
-நந்தினி மோகனமுருகன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்