உடன்பாடு
(சிறுகதை)
இராமகிருஷ்ண அய்யர், ஜானகி மாமி இருவரும் என்ன செய்வதென்றுத் தெரியாதவர்களாய் குழம்பித் தவித்து, மனம் சஞ்சலப்பட்டனர். அப்பொழுதுதான் அவர்களுக்கு ஆரிப்பின் ஞாபகம் வந்தது. சஞ்சலப்படுத்தும் அந்த விஷயம் ஆரிப்பிற்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை என்பது அவர்கள் எண்ணமாக இருந்தது. ஒருவேளை தெரிந்தும், கண்டும் காணாமல் இருக்கிறாரோ...! என்றும் யோசித்தார்கள். ஆனாலும், பிரச்சனையைச் சொல்வதிலொன்றும் தவறில்லையே...! ஆரிப்பிடம் சொன்னால், அவர்களை வராமல் தடுப்பதற்கு ஏதேனும் வழி கிடைக்குமென்று நம்பினார்கள்.
இருட்டத்துவங்கியிருந்த சாயந்திர நேரம். கல்லூரிக்குச் சென்றிருக்கும் மகளின் வரவிற்காக கல்லூரிப்பேருந்து வருகிறதாவென பார்த்தபடி வாசலில் நின்றிருந்தாள் ஜானகி. அப்பொழுது தொலைக்காட்சியில் அலறும்படியாய், கூடவே ஐந்தாறு பேர்களின் சிரிப்பும்சேர்ந்து வீடே கிடுகிடுக்கும்போல கேட்ட சத்தத்தினால் பக்கத்து வீட்டுப்பக்கம் அனிச்சையாகவே அவளின் பார்வை சென்றது.
கணேசன் வீட்டுக்காரி ஊருக்குச் சென்றுவிடுகிறபோதெல்லாம் யார்யாரோ வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், எப்போதென்றே யாருக்கும் தெரியாதவாறு மறைமுகமாக இருந்துக்கொண்டிருந்தார்கள். வெளியே நிற்கிற வாகனங்களை வைத்துதான் உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்பதே தெரியவரும். அவ்வளவு அமைதியாக வந்தும், போய்க்கொண்டுமிருந்தார்கள். அவர்களெல்லாம் எதற்காக வருகிறார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. நட்புரீதியாக பேசிக்கொண்டிருக்க வருவார்கள் என்றுதான் அக்கம்பக்கமுள்ளவர்கள் எண்ணினார்கள்.
ஒருநாள் என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக அய்யர், "என்ன கணேசா... பிரண்ட்ஸ் எல்லாம் வந்திருக்கா போலிருக்கு?" என்று கேட்டுக்கொண்டே திடுதிப்பென்று உள்ளே நுழைந்திருக்கிறார். யார் வந்துவிடப்போகிறார்கள் என்கிற எண்ணத்தில் கதவைத் தாழ்ப்பாள் போடாமல் ஒருக்களித்து வைத்து இருந்ததினால், அன்று வந்திருந்த நான்கு பேரோடு சேர்ந்து கணேசனும் டெக்கில் படம் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான். அவர்களெல்லாம் சுற்றியமர்ந்திருக்க நடுவில் பீர் பாட்டில், பிராந்தி பாட்டில், நெகிழி டம்ளர், தண்ணீர் பாட்டில், வருத்த கறி எல்லாம் இருந்திருக்கிறது. திடீரென்று ஒருவர் உள்ளே வந்துவிட்டதும் அதிர்ச்சிக்கொண்டவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நிலைமையைப் புரிந்துகொண்டு, "சரி கணேசா.... சும்மாதான் வந்தேன் " என்றபடி அவர்களிடமிருந்து மெல்ல நழுவி வெளியே வந்திருக்கிறார் அய்யர்.
அவர்மூலம் விஷயம் தெரிந்திருக்குமென்று எண்ணினார்கள். ஆனால், ஒருவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே... ஒருவேளை அய்யர் யாரிடமும் சென்று எதுவும் சொல்லவில்லையோ... என்றும் யோசித்தார்கள். யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதாலோ என்னவோ நினைச்ச நேரம் வருவதும் போவதுமாய் அவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டேயிருந்து, வீட்டினுள் ஒரே சிரிப்புச்சத்தமும், அசிங்கமான வார்த்தைகளால் பேசிக்கொள்வதுமாக, பெண்கள் கூச்சமற தெருவில் நடந்து போகமுடியாதபடிக்கு நாளுக்குநாள் அவர்களின் அட்டகாசம் அதிகரித்தபடியிருந்தது.
சிலநேரங்களில் சன்னமாகப் பேச்சுக்குரல்கள் கேட்கும். சிலநேரங்களில் தொலைக்காட்சி சத்தம் காதைக்கிழிக்கும்படியாக இருக்கும். அப்பொழுதெல்லாம் மாமிக்கு கோபமாய் வரும். சிறிது நேரத்திற்கு ஆள் இருப்பதே தெரியாதவாறு சத்தமில்லாமல் அமைதியாக இருப்பதும். திடீரென்று ஒரே கூச்சலும் சத்தமுமாய் காது ஜவ்வு கிழிந்துபோகும்படியாக அலறுவதுமாய் அவர்களின் செய்கையினால் ஜானகி எரிச்சலடைவாள். அய்யர் வீட்டிலிருந்தால் உடனே சென்று, "ஏண்ணா... பக்கத்தாத்துல அவாள் போடற கூச்சல் நோக்கு கேக்கறதோனோ. இல்ல நேக்கு மட்டும்தான் கேக்கறதோன்னு சந்தேகம் வந்துட்து' என்று அய்யர் எதுவும் கேட்கவில்லையேயென்று தக்குத் தக்கென்றுக் குதிப்பாள் ஜானகி.
டெக் போட்டுப்பார்க்கிறபோது சத்தமில்லாமலும், தொலைக்காட்சிப்பார்க்கிறபோது ஒலி வேகமாக வைத்தும் கேட்கிறார்களோ என்றும் அய்யருக்கு சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் நமக்கு எதற்கு என்றெண்ணி, "ஏண்டி... அவாள் டிவி பார்த்துண்டிருக்கா. சத்தம் வரத்தானேச் செய்யும்". என்று அமைதியாகச் சொல்வார் அய்யர்.
அதேபோன்ற சத்தம் இப்பொழுதும் கேட்டுக்கொண்டிருந்தது. ‘கணேசன் ஆத்துக்காரி இதெல்லாம் தெரிஞ்சிண்டுதான் போடான்னுட்டு ஒரேயடியா கோவிச்சுண்டு போய்ட்றா. எத்தனை நாளைக்குத்தான் சகிச்சுண்டிருப்பா...? அதான் சாக்குன்னு இவன் ஒரேயடியா கூத்தடிச்சிண்டிருக்கான்’ என்று ஏதேதோ மாமி மனதில் நினைத்தவளாய் தெருவைப்பார்த்தபடியிருந்தாள்.
அப்பொழுது ஒருவன் தள்ளாடியபடி நடந்து வெளியே வந்தான். கணேசன் வீட்டிற்கு வருகிறவர்களை அவன்களின் பெயர்கள், என்ன வேலை செய்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்றெல்லாம் தெரியாவிட்டாலும்கூட இவன்களெல்லாம் அந்த வீட்டிற்கு வழக்கமாக வருகிறவர்களென்று அவன்களின் முகத்தை ஓரளவிற்கு ஞாபகத்தில் வைத்திருந்தாள் ஜானகி. ஆனால் இவன் புதியவனாகத் தெரிந்ததினால் அவனைப்பார்த்தாள். அவன், அவள் நிற்பதையோ, பார்ப்பதையோ அல்லது யாராவது வருகிறார்களா... போகிறார்களா... என்றுகூடப் பார்க்கவில்லை. தெருவில் நின்றபடியே கைலியைத் தொடையோடு வழித்துப் பிடித்துக்கொண்டு சிறுநீர் கழித்தான். இதனை எதிர்பார்த்திராத அவள், ‘பொம்மனாட்டி நிக்கிறாள்னுகூட இல்லாம இப்படி பன்றானே’ என்று எண்ணியவளாய், "ஈஸ்வரா... ரக்சிதோ" என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்து கதவைப் பட்டென்று சாத்தினாள்.
தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டிருந்த அய்யரிடம் நேரே சென்று, "ஏண்ணா... சித்த வாங்கோ... வந்து இந்த அநியாயத்தைப்பாருங்கோ... பக்கத்தாத்து கணேசன் அவன் கூட்டாளிகளோட சேர்ந்துண்டு லூட்டி அடிக்கிறத கண்டும் காணாமப் போயுண்டிருந்தா இன்னைக்கு புதுசா வந்த ஒருத்தன் தெருவுல என்ன பண்ணிண்டிருக்கான் பாருங்கோ..." என்று முகம் சிவக்க கோபமாய் படபடத்தாள்.
தொலைக்காட்சிப்பார்க்கும் சுவாரசியம் குறையாதவராய், “பக்கத்தாத்துல அவன் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டாளோனோ... அவன் சகாக்களோட வந்து ஏதோ ஜாலியா தண்ணி அடிச்சிண்டு, டிவி பார்த்திண்டிருக்கான் ... இதுல உமக்கு என்னடி ஆயிடுத்து... ஜானகி" என்றார் அய்யர்.
“இப்படியே சொல்லிண்டிருங்கோ... அவா பண்றதெல்லாம் நோக்கு எங்க தெரியறது. நாமளும் ஆத்துல ருதுவானப் பொண்ண வைச்சிண்டிருக்கோம். நம்மத்தெருவுல, நம்மக்கண்ணு முன்னால நடக்கிற அநியாயத்தை கேக்க முடியலேன்னா எப்படிண்ணா...? வாங்கோ... வந்து பாருங்கோ..." என்று அய்யரை முதுகில் குத்திச் சீண்டினாள் ஜானகி.
அய்யரும் என்னமோ ஏதோவென்று பதறியவராய், ஆனாலும், "என்னத்தடி பாக்கச்சொல்றேள்...?" என்று கேட்டபடி கதவைத் திறக்கப்போனார்.
"பாருங்கோ... தெருவிலே வந்து நின்னுண்டு எரும கணக்கா சொடசொடன்னு… கருமம்... கருமம்...” என்று முகம் சுழித்து தலையிலடித்துக்கொண்டவளாய், கதவைத் திறக்கப்போன அய்யரைத் தடுத்து மெதுவாய் ஜன்னலை மட்டும் திறந்துவிட்டு பார்க்கச்சொன்னாள் ஜானகி. மெதுவாக ஜன்னலோரம் முகத்தை வைத்து கண்களை வெளியே பாவினார் அய்யர். அதற்குள் அந்த ஆள் சிறுநீர் கழித்துவிட்டு காதில் அலைபேசியை வைத்து யாரிடமோ சத்தமாய் பேசியபடி வீட்டிற்குள் போக வந்தான். உர்ரென்று அவனைப்பார்த்ததில் ஜானகி மாமிக்கு கோபம்கோபமாக வந்து அவளின் முகம் செக்கச்செவேறென்று சிவந்தது.
அவ்வாறு அவளின் முகத்தைப்பார்த்த அய்யருக்கும் முகம் சிவந்து ஆள் யாரென்று உற்றுப்பார்த்தவருக்கு, வந்த கோபம் போன இடம் தெரியாமல் மூச்சே நின்றுவிட்டதுபோல வெடவெடத்துப்போனது. முகத்தில் ஆச்சர்யம் தெரிய மனைவியைப்பார்த்து, "ஏய்... ஜானகி... அவர் யார் தெரியுமோ? தொழிற்சங்கத்தலைவர் ஜாபர் ஹுசைன்டி...? என்று சொல்லியபடி பக்கத்தில் இருந்த நாற்காலியில் ஸ்தம்பித்து அமர்ந்தார்.
“யாரா இருந்துட்டுப்போவட்டும்... இப்படிச்செய்யறாளே... இது அடுக்குமா...?” என்று கோபக்கனல் வீச அய்யரைப்பார்த்து முறைத்தாள் ஜானகி.
‘ம்... இந்த ஆள் எப்படி இங்க...!’ என்று யோசித்தார் அய்யர்.
அது பணியாளர்களுக்கான குடியிருப்பு. அதிகாரிகளுக்கு உள்ளதுபோல தனித்தனி வீடுகளாக இல்லாமல் நான்கு வீடுகள் ஒரு தொகுப்பாக, ஒவ்வொரு தொகுப்பிற்கும் சிறிது இடைவெளி இருக்கும்படியாக ஐந்து தொகுப்புகளில், தெருவிற்கு மொத்தம் இருபது வீடுகள் என ஏ-வகைக் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. தெருவின் நடுவிலிருந்த ஒரு தொகுப்பில் ஒரு ஓரம் அய்யர்-ஜானகி மாமியின் குடியிருப்பு. இன்னொரு ஓரம் ஆரிப் வீடு. நடுவிலிருக்கிற இரு வீடுகளில் ஒரு வீட்டில் கணேசன் குடியிருந்து வந்தான். கணேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தன் நண்பர்களில் ஒன்றிரண்டு பேரை வீட்டிற்கு வரவழைத்து தண்ணியடித்து கும்மாளமிடும் பழக்கத்தினால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டை சச்சரவு இருந்து வந்தது. அடிக்கடி கோபித்துக்கொண்டு ஊருக்கு சென்று விடுவாள். அவள் ஊருக்குச் சென்றிருக்கிற சமயங்களில் கூடுதலான நண்பர்களுடன் அவனின் அட்டகாசம் அதிகரித்திருந்தது. அவன் மனைவி கோபித்துக்கொண்டு சென்றுவிடுவதால் பக்கத்திலிருப்பவர்களுக்குத்தான் தொந்தரவாகயிருந்தது.
‘என்ன மனுஷன் இவன்… கண்டவாளையெல்லாம் கொண்டாந்து...! இவன் புத்தி ஏன் இப்படிப்போறதுன்னுத் தெரியலையே...! இவன் இப்படியெல்லாம் பண்றதுக்காகவே அவன் ஆத்துக்காரிகிட்ட சண்டைப் போட்டிண்டிருப்பான்னு தோன்றது.’ என்று கணேசனை எண்ணியவராய், அதேசமயத்தில் மாமியின் கோபத்தைக் குறைக்கும் விதமாகவும், அவள் சிந்தனையை மடைமாற்றும்விதமாகவும், “அனுஷா வந்துட்டாளோன்னோ...” என்றார்.
“இல்லண்ணா... அவளைப்பாக்கத்தான் தெருவிலே போய் நின்னேன். அப்போதான்...” என்றிழுத்தாள் ஜானகி.
“கருமம்... கருமம்... அவன் நிக்கும்போது நீ வெளியே போலாமோ...?” என்று ஜானகியை முறைத்தார் அய்யர்.
“இல்லண்ணா... நான் நின்டுண்டு இருக்கும்போதுதான் அவன் வந்தான்” என்றாள் ஜானகி.
அய்யருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சங்கடத்தோடு அவளைப்பார்த்தார்.
‘குடியிருக்கிற இடத்திலே வந்து இப்படி அசிங்கம் பண்ணிண்டிருக்காளே... இவாள் எல்லாம் கேக்க ஆள் இல்லையா...? ஈஸ்வரா...’ என்று புலம்பும் ஜானகியுடன் சேர்ந்து தானும் தலையில் கைவைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவராக இருந்தார் அய்யர்.
நகர நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் வந்து விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் அவ்வாறுச் செய்ய துணிச்சல் இல்லை. காரணம். கும்மாளமிடுபவர்களில் தொழிற்சங்கத்தலைவர் ஜாபர் ஹுசைனும் ஒருவன். தலைவரை எதிர்த்து புகார் கொடுத்தது தெரிந்தால் அவனின் ஆதரவாளர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதனையெல்லாம் சமாளிப்பதற்கு தைரியமில்லாதவராக அய்யர் இருந்தார். ஆனால், மனதில் பொருமினார்.
அப்பொழுதுதான் அவர்களின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஆரிப் நினைவு வந்தது ஜானகிக்கு. அவரும் அலுவலகத்திலிருந்து வருகிற நேரம்தான். அவரிடம் சொல்லலாமே என்கிற யோசனை வந்து, "ஏண்ணா... ?" என்று அய்யரிடம் கிசுகிசுத்தாள்.
அய்யருக்கு உடன்பாடில்லை. அதற்கு ஹுசைனிடமே நேராகச் சென்று, "இப்படிப்பண்றேளே. இது உமக்கே நன்னாருக்கா?" என்று கேட்டுவிடலாம் என்று எண்ணினார். ஹுசைனை அவருக்கு நன்றாகத்தெரியும். ஆனால், ஹுசைன் தொழிற்சங்கத்தலைவர் என்பதினால் ஹுசைனிற்குத்தான் இவரைத்தெரியுமாவென்று தெரியவில்லை. அய்யர் கடைநிலை ஊழியர். தன்னைத் தெரிந்திருக்க மாட்டார் என்பது அவரது எண்ணமாகயிருந்தது. யோசித்தார்.
அப்பொழுது முகத்தைச் சுழித்தபடி உள்ளே வந்த அவர்களது மகள் அனுசுயா இருவரும் பேசிக்கொண்டிருப்பதனைக் கண்டவுடன் வாசலில் ஒரு ஆள் அசிங்கமான வார்த்தையில் அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதினால்தான் இருக்கும் என்று எண்ணினாள்.
"என்ன... நான் சொல்லிண்டிருக்கேன். பேசாம இருக்கிறேள்...?" என்றாள் ஜானகி.
அய்யர் சிறிது தயக்கத்துடனே ஜானகி சொன்னதற்கு ஒப்புக்கொள்ளும்விதமாக வேறு வழித் தெரியாதவராக மெல்லத் தலையாட்டினார்.
"என்ன தலையாட்டிண்டு யோசனையா இருக்கிறேள். போங்கோ... உங்க நண்பர் ஆரிப் ரொம்ப நல்லவர். அவாளுக்கும்தானே இந்த கஷ்டம். சொன்னா கேப்பா... போங்கோ..." என்று பிடிவாதம் பிடித்தாள்.
“ஆரிஃபும், ஹுசைனும் ஒரே மதத்தவராச்சேனோ... அதிலயும், ஹுசைன் தொழிற்சங்கத் தலைவரா வேற இருந்துண்டிருக்கான். ஏதாவது பிரச்சனை வந்துடுத்துன்னா... அதான் யோசிச்சுண்டிருக்கேன்” என்றார் அய்யர்.
“சும்மா சும்மா எதையாவது யோசிச்சுண்டு இருக்காதீங்கோ. ஆரிப் ஆபீஸ்ல வேலை செய்யராரோன்னோ. அவருக்கு அல்லாம் தெரியும்” என்றாள் ஜானகி.
அவள் சொல்வதும் உண்மைதான். ஆரிப், அலுவலகத்தில் வேலை செய்கிறவர். அவரிடம் கலந்து ஆலோசிக்கும் அந்த யோசனை அவருக்கும் சரியெனப்பட்டது. ஜானகி சொல்கிறபடி ஆரிப்பிடம் சொல்லி இதனைத் தடுப்பதற்கு ஏதேனும் வழி கிடைக்குமாவென்று கேட்க உத்தேசித்தார் அய்யர்.
அய்யரும், அவர் மனைவி ஜானகியும் திட்டவட்டமாக பேசி ஒரு முடிவிற்கு வந்தபிறகுதான் ஆரிப்-தபசுவிடம் அந்த விஷயத்தைச் சொல்ல முன்வந்தனர். ஆரிப் பண்புள்ளவர். ஒருவருக்கும் தீங்கிழைக்காதவர். கூடுமானவரையில் நல்லது கெட்டதை ஆராய்ந்து பிறருக்கு தம்மாலான உதவிகள் செய்யக்கூடியவர். முழுமையாக நம்பி அவரிடம் சொன்னால் சரியான தீர்வு கிடைக்கும் என்றெண்ணினார் அய்யர்.
“ஏண்ணா... அவா வந்திட்டா போலிருக்கு. வண்டிச்சத்தம் கேக்கறது. அவா உள்ளே போறத்துக்குள்ளே சித்த போங்கோ. வாசல்லயே நிறுத்தி விஷயத்தை சொல்லிண்டு வாங்கோ” அவசரப்படுத்தினாள் ஜானகி.
“ஏண்டி... காதும் காதும் வைச்சி பேசற விஷயத்தை எல்லாம் வாசல்ல வைச்சிப் பேசலாமோ...?”
“எல்லாம் பேசலாம்ண்ணா. அவா உள்ளே போய்ட்டாள்னா உங்களையும் உள்ளே கூப்பிடுவா. நீங்களும் போய்ட்டு வந்து... ஒரே கவுச்சி நாத்தம்னு சொல்லிட்டு குடலே புடுங்கி வெளியே போடறாப்பல வாந்தி எடுத்துண்டிருப்பேள். நான் ஆத்தை அலம்பிண்டிருக்கணும். பேசிண்டிருக்காதீங்கோ...போங்கோ...”
“ஏண்டி... ஒரு யோசனைப்படறது...!”
“உங்களுக்கு ஒரு யோசனை இல்லைண்ணா... பல யோசனை அப்பப்போ வந்துண்டுதான் இருக்கு. இப்ப என்ன யோசனை சொல்லுங்கோ...?”
“அவா பொம்மனாட்டியோடெல்லாம் நல்லாப் பேசிண்டு சிநேகமா இருக்கியோனோ... நீயே போய் இந்த விஷயத்தை அவாள்ட்ட சொல்லிடப்படாதோ... அவா அவ ஆத்துகாரர்ட்டே சொல்லிடப்போறா... எப்படி நாஞ்சொல்றது....!” என்றார் அய்யர்.
“ம்... இந்த விஷயத்தை நான் போய் அவா பொம்மனாட்டியால்ட்ட சொல்லணும்ங்கறேள்”.
“ம்...”
“தலையெழுத்து... ஒரே சங்கடம். சிவசிவா” என்று தலையில் அடித்துக்கொண்டாள் மாமி.
“சரிடி... நானே போறேன்”. அய்யர் தயங்கித் தயங்கி வாசலில் வந்து நின்றார்.
இரவு ஒன்பது மணி. வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருந்த ஆரிப் தனது இரு சக்கர வாகனத்தை ஷெட்க்குள் நிறுத்திக்கொண்டிருந்தபொழுது பக்கத்து வீட்டு அய்யர் வாசலில் நின்றிருப்பதைக் கண்டு, "வாங்க அய்யர்... என்ன திடீர்ப்பிரவேசம். ஏதாவது விசேஷமா...? உள்ளே வாங்கோ... அய்யரே... இதுலே பாருங்கோ... உம்மோடபேசிப்பேசி உம்ம பாஷ எனக்கும் ஒட்டிண்டுடுச்சி. தயங்காதீங்கோ... உள்ளே வாங்கோ...” என்றார் ஆரிப்.
“இல்ல இப்படி இங்கேயே நின்னு பேசிடலாம்னு தோன்றது”.
“அட என்ன அய்யரே நீங்க... வாங்க உள்ள உக்காந்துப்பேசுவோம்”.
இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் காதும் காதும் வைச்சாப்பல பேசிடறதுதான் நல்லது. வேறு வழியில்லையென்று அய்யர் தயங்கித் தயங்கி அவர் பின்னால் சென்றார். அன்று திங்கள் கிழமை. முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை சமைத்துச் சாப்பிட்டிருந்த செம்மறியாட்டுக்கறியின் வாசனை இன்னும் கலையாமல் வாடை வீடு முழுக்க சுற்றிக்கொண்டிருந்தது. அய்யருக்கு குமட்டுவதுபோலிருந்தது. ஆனாலும் இதனைவிட குமட்டலான சமாச்சாரத்தை சொல்லி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றால் இதனைத் தாங்கித்தான் ஆகவேண்டும் என்று எண்ணியவராக வீட்டினுள் சென்று நாற்காலியில் அமர்ந்தார்.
“தபசு... அய்யர் வந்திருக்கிறார். நல்லா பேஷா காபி ஒன்னு போட்டு கொடுக்கலாமே...” என்றார் ஆரிப்.
“தோ...” என்ற ஆரிப்பின் மனைவி தபசு, அய்யர் நாற்காலியில் அமர்ந்திருப்பதனைப்பார்த்து புன்முறுவலோடு, "வாங்கண்ணா..." என்றாள்.
“ஏய்… அவாள் பாஷையில அண்ணான்னா வேற அர்த்தமடி... போய் காபியைப் போட்டு எடுத்தாறுவியா...”! என்று சிரித்தபடி கிண்டலடித்தார் ஆரிப்.
“போங்க உங்களுக்கு கிண்டல் பண்றதுக்கு விவஸ்தையே இல்ல…” என்று முகத்தைத்திருப்பியபடி கிச்சனுள் சென்றாள் தபசு.
அய்யர் தாம் வந்த காரியத்தில் கவனமாகயிருந்ததில் இவர்களின் கிண்டல், தமாஷுகளில் கவனம் செலுத்தியிருக்கவில்லை. ஆரிப்பின் முகத்தையே பார்த்தார். ஆரிப் தமது மனைவியிடம் தனக்கு காபி போடச்சொன்னதை மட்டும் நினைவில்கொண்டு, “அதெல்லாம் வேண்டாம்... இப்பதான் காபி குடிச்சிண்டு வ ந்தேன். ஒன்னும் செய்யாதீங்கோ” என்றார்.
“அய்யரே... பயப்படாதீங்கோ. காபிதானே...! சொல்லுங்கோ... ஏதோ சொல்ல வந்தேளே...!” என்றார் ஆரிப்.
அய்யர் விஷயத்தை சொல்லி முடித்தார். தபசு காபியுடன் வந்து அய்யரிடம், “அண்ணா காபி எடுத்துக்குங்க" என்று நீட்டினாள். எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமாக ஆரிப்பும் தபசும் வற்புறுத்த கையில் வாங்கிக்கொண்டார் அய்யர்.
அய்யர் சொன்ன விஷயத்தைப்பற்றி யோசித்தபடியிருந்த ஆரிப், "அய்யரே... ஒன்னும் கவலைப்படாதீங்கோ... ஸ்டேஷன்ல ஒரு கம்பளைண்ட் கொடுத்திடுவோம்” என்றார்.
“அய்யய்யோ வேணாம். நான்தான் சொல்றேனே... அதுல உங்க ஆளும் ஒருத்தர். அதிலயும் தொழிற்சங்கத்தலைவர் வேற...”
ஆரிப் திடுக்கிடும்படியாக, “என்ன அய்யரே சொல்ற...? எங்க ஆளா...?” என்றார்.
“சரியாப்போச்சு போங்கோ... இன்னமுட்டும் என்னதான் சொல்லிண்டிருக்கேன்னு நினைச்சேள்”.
“அய்யரே... காலிப்பசங்க எவனோ சேர்ந்து கூத்தடிச்சிண்டிருக்கான்னுதானே சொன்னேள்!” என்றார்.
“ஆமாம் ஆரிப்... அதுல இவரும் ஒருத்தர். நீங்க காலையில எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி ஆபீஸ் போயிடுறீர்... பிறகு ராத்திரிக்குத்தான் வர்றேல்”.
“ஆமாங்க... அப்படித்தான் இங்க அந்தாளைப்பார்த்தவங்க எல்லாம் சொல்றாங்க" என்றாள் தபசு.
ஜாபர் ஹுசைன் பெயரைக்கேட்டவுடன் ஆரிப் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தார். பிறகு மௌனத்தைக் கலைத்துக்கொண்டு, “அய்யரே... இந்த விஷயத்தை அப்படியே மறந்திடுங்கோ. நீங்க எதுவும் பாக்கல. எங்கிட்டயும் எதுவும் வந்து நீங்க சொல்லல. அதுதான் நமக்கு நல்லது. கணேசன் பொண்டாட்டிக்கு போன் பண்ணி ஊருக்கு வரவழைக்கிறதுதான் சரி” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
அய்யருக்கு முகம் சுருங்கிப்போனது. ‘இது சாத்தியமா...?’ என்பதுபோல அவரை பரிதாபமாய்ப்பார்த்தார் அய்யர்.
முகக்குறிப்பிலிருந்து அவரின் நிலைமையைப் புரிந்துகொண்ட ஆரிப், “ஆமாம் அய்யரே... அந்தம்மா வந்துட்டாங்கன்னா... கணேசனைத்தேடிண்டு ஒருத்தனும் வரப்போறதில்ல. எதுக்கு அய்யரே வம்பு. மாமிகிட்டச் சொல்லி அந்தம்மாகிட்ட போன் பண்ணச் சொல்லுங்கோ. ஏன்னா... மாமியும் கணேசன் பொண்டாட்டியும்தான் கொஞ்சம் குளோஸ் ரிலேஷன்” என்று அய்யரை சமாதானப்படுத்தும் விதமாக சொன்னார்.
அய்யருக்கு இருந்த சிறிது நம்பிக்கையும் போனது. வேறென்ன செய்வது...? அவனோ... அவன் சார்ந்திருக்கும் கட்சியோ பலம் வாய்ந்தது. ஆரிப் சொல்வதும் சரிதான். ஆனால் கணேசன் மனைவிக்கு போன் செய்கிற விஷயம் உடன்பாடில்லாததாய், ஜானகியிடம் சொன்னால்தான் அது எந்தளவிற்கு சாத்தியம் என்பது தெரிய வரும் என்பதாய் எதையெதையோ யோசித்தவராக வீட்டிற்கு வந்தார் அய்யர்.
"என்னங்க இப்படிச் சொல்லி அனுப்பிட்டீங்க...? அய்யரு ரொம்பவும் உங்களை நம்பி வந்தாருங்க" என்றாள் தபசு.
“இல்ல தபசு... ஜாபர் ஹுசைன் தொழிற்சங்கத்தலைவர். அவருக்கு எதிரா ஏதாவது செய்யப்போனம்னா அது நம்மளுக்குத்தான் தீங்கா முடியும். அதிலேயும், இந்த அய்யர் சும்மா இல்லாம எங்கியாவது போய் நான்தான் பெரிய இடத்துலச் சொல்லி அந்த ஆளை வரவிடாம ஆப் பண்ணிட்டேன்னு உளறி எம்பேரை ரிப்பேர் ஆக்கிடுவாரு. ஜாபர் ஹுசைன் பண்ற அட்டூழியம் நாலுபேருக்குத் தெரிய ஆரம்பிச்சுதுன்னா பேர் கெட்டுடுச்சேன்னு அந்த ஆள் கோபம் நேரா நம்மமேலத் திரும்பிடும். இதுலேயெல்லாம் நாம தலையிடக்கூடாது தபசு" என்றார் ஆரிப்.
“அதுக்கில்லீங்க... அந்த ஆள் பகல்லயும் இங்கதான் இருக்கான். ராவுலயும் சிலநாள்ல இங்கியே டேரா அடிச்சிக்கிறான். எந்தநேரமும் சிரிப்புச்சத்தமும், டிவி சத்தமுமா கேட்டுக்கிட்டேயிருக்கு”.
“தெரியுது தபசு. பக்கத்துவீட்டுக்காரன்கிட்டப் போய் என்ன பேசறதுன்னு கண்டும்காணாமப் போகவேண்டியதாயிருக்கு. ஒருத்தர் முகத்துல ஒருத்தர் முழிக்கணும்”.
“எந்த கருமமாவது பண்ணிட்டுப்போவட்டும். ஒருநாள் பாக்கறேன். விடிகாலை அந்த வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பொம்பள வெளியேப்போறா. குடித்தனம் இருக்கிற இடத்துல இதையெல்லாம் எப்படிங்க சகிச்சிக்கிட்டு இருக்கிறது...?”
ஆரிப்பிற்கு முகம் சுருக்கென்று மாறியது. சுதாரித்துக்கொண்டு, புன்முறுவல் பூத்தவராய், "பாப்போம்... அய்யர்கிட்ட சொல்லியிருக்கோம். எப்படியும் ரெண்டொரு நாள்ல கணேசன் பொண்டாட்டி வந்திடுவா. அதுக்கு அப்புறம் இந்தப் பிரச்சனையெல்லாம் இருக்காதில்ல...! என்று சொல்லி தபசுவின் கவனத்தை வேறு பக்கம் திருப்பும் விதமாக, "ஏய்... இன்னைக்கு ஆபிஸ்ல என்ன நடந்தது தெரியுமா...?" என்றார்.
“அதெல்லாம் அப்புறம் கேக்கறேன். மொதல்ல போய் குளிச்சிட்டு வாங்க” என்று அவள் கிச்சனுள் நுழைந்தாள்.
இரண்டொரு நாட்களுக்குப்பிறகு ஒருநாள் அய்யரும், அவர் மனைவி ஜானகியும் கல்லூரிக்குச் சென்றிருக்கும் மகளின் வருகைக்காக எதிர்பார்த்து வாசலில் காத்திருந்தனர். அப்பொழுது அலுவலகம் முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார் ஆரிப்.
ஆரிப் வந்தவுடன் தபசு மகிழ்ந்தவளாய், "கணேசன் வீட்டுல லூட்டியடிச்சிக்கிட்டு இருந்த ஒருத்தனும் இப்ப இல்லீங்க. என்ன நினைச்சாணுங்களோ தெரியல. இல்ல… அந்த அண்ணன்தான்போய் யார்ட்டயென்ன சொன்னாரோ… எல்லாரும் கிளம்பிட்டாணுவோ" என்றாள்.
ஆரிப் தான் வேலை செய்யும் அலுவலகம் மூலமாக காவல் உயரதிகாரியிடம் ரகசியமாகச்சொல்ல, அவர்களும் யதேச்சையாக ஜாபர் ஹுசைனை சந்திப்பதுபோல சந்தித்து, 'என்ன ஜாபர்... ரௌண்ட்ஸ் வரும்போது அந்தத் தெருவுல உன்னைப்பார்த்தேனே...' என்று காவலதிகாரி குறிப்பிட்டுச்சொல்ல, தனது சீரற்றச் செயலை அவன் எண்ணியிருக்கவேண்டும். இது மனைவி தபசுவிற்கும்கூட தெரியாமல் போகட்டுமென்று நினைத்தவராக, "அப்படியா...?" என்ற ஆரிப் தான் வரும்போது அய்யர் நெகிழ்ச்சியோடு ஜாடையாக தன்னை பார்த்தப்பார்வையை எண்ணி புன்முறுவலலித்தார்.
*****
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்