ரா. அபுல் ஹசன்
சிறுகதை வரிசை எண்
# 38
தலைப்பு - விடுதலை
அதிகாலைத் தொழுகையை பெரியமேட்டில் இருக்கும் ஆனைக்கார் பள்ளிவாசலில் முடித்துவிட்டு நண்பர்களுடன் இருசப்பன் தெருவில் இருக்கும் டீக்கடையில் அருந்தும் தேநீருடன்தான் ஹமீதின் நாள் துவங்கும். "நிலாவில் சென்று இறங்கினால் அங்கும் ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார்" என்பது சென்னையைப் பொறுத்தமட்டில் நூற்றுக்கு இருநூறு சதம் சரியான கூற்று என்பதை இங்கு வந்தபிறகு புரிந்துகொண்டான். டாஸ்மாக் கடைகளுக்குப் பிறகு சென்னையில் அதிகமாக இருப்பது மலையாளிகளின் டீக்கடைகள்தான். அனுபவமில்லாமல் பழமொழி சொல்ல முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லையே!.
"காக்கா நாலு சுலைமானி" - தனக்கும் நண்பர்களுக்கும் சேர்த்து சொன்னான். பெரியமேட்டுக்கு வந்தபிறகுதான் சுலைமானியின் அறிமுகம் கிடைத்தது. அரபு தேசத்திலிருந்து மலபார் பகுதிக்கு வியாபாரம் செய்வதற்காக வந்த அரபுகளின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு அம்மக்கள் "அமைதிக்கான மனிதர்கள்" என்று பொருள்பட "சுலைமானி" என்று அழைத்திருக்கிறார்கள். மலபார் மக்களுக்கு அரபுகள் அறிமுகப்படுத்திய பானம் என்பதால் சுலைமானி என்ற பெயரே அதற்கும் நிலைத்துவிட்டது. சுடுநீரில் தேத்தூளைக் கலந்து அதோடு பாதி எலுமிச்சையைப் பிழிந்து சர்க்கரையுடன் புதினா இலைகளை மிதக்கவிட்டு தரும்போது அதன் முதல் சொட்டை நாவில் விட்டு ருசி பார்ப்பது ஹமீதுடைய பாணி. பிறகுதான் அதை மெல்ல உறிஞ்சிக் குடிப்பான். சுலைமானி உள்ளே சென்றபிறகு சிறிது நேரத்துக்கு அதன் சுவை நாவில் நர்த்தனமாட வேண்டும், அப்போதுதான் அதன் பிறவிப்பலனை அடைந்த திருப்தி கிடைக்கும்.
சுலைமானி கையில் கிடைத்ததும் அதனை மெல்ல அனுபவித்துக் குடித்துக் கொண்டிருக்கும்போது எதிரில் ஒரு வெள்ளைப் பேப்பரை சுவரோடு சேர்த்து இடது கையால் பிடித்துக்கொண்டு வாளியில் இருந்த பசையை வலது கையில் அள்ளி வேகவேகமாக தேய்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். பசையைத் தேய்க்கும் லாவகம் அவரது அனுபவத்தையும், அதில் இருந்த வேகம் விரைவாக ஒட்டி முடித்துவிட்டு அடுத்த இடத்துக்குப் போக வேண்டும் என்ற அவசரத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியது. சினிமா போஸ்டர்கள் வழமையாக இந்த குறுகிய சந்துக்குள் ஒட்டப்படுவதில்லை. சினிமா போஸ்டரை இரண்டு பாதியாகப் பிரித்து பசை தேய்த்து சுவரில் ஒன்றாக ஒட்டுவதுதான் வழக்கம். இது ஒரே போஸ்டர். போஸ்டர் என்று சொல்வதற்கு அறுகதையுடையதுதானா என்று சந்தேகம் ஏற்படுத்தினாலும் நானும் ரவுடிதான் கணக்காக போஸ்டர்களின் கூட்டத்தில் மஞ்சள் நிறத்தில் மூலம், விரைவீக்கம், பாலியல் நோய்களுக்கான சிகிச்சைகுறித்தான போஸ்டர் சிறிதாகவும், காகிதத் தரத்தில் படுகேவலமாகவும் இருக்கும். ஆனால் இது கருப்பு, வெள்ளையில் A3 அளவிலான, சற்றே பெரிய போஸ்டர். நிச்சயம் கண்ணீர் அஞ்சலி போஸ்டராகவோ, ஏதேனும் அரசியல் கட்சி தெருமுனைக் கூட்ட போஸ்டராகவோ இருக்கலாம். ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போஸ்டரின் நதிமூலம்-ரிஷிமூலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே பசை தேய்த்து முடிக்கப்பட்டு, சுவரில் ஒட்டுவதற்குத் தயாராகியிருந்தது. அவன் நினைத்ததுபோலவே அது ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.
சூரியன் இன்னும் உதிக்காத அந்த அதிகாலை நேரத்திலும் செயற்கை சூரியனான சோடியம் தெருவிளக்கு இன்னும் அஸ்தமனமாகாததால் போஸ்டரில் இருந்த முகம் தெளிவாகத் தெரிந்தது. ஹமீது, இருசப்பன் தெருவுக்கு வந்து சில வாரங்கள்தான் ஆகிறது. காலையில் சென்ட்ரலில் இருந்தோ, பிராட்வேயில் இருந்தோ சிறுசேரிக்கு வேலைக்கு செல்லும் அவன் இரவு திரும்பி வரும்போது மணி பத்தைக் கடந்திருக்கும். இந்தத் தெருவில் சில முகங்களைப் பார்ப்பதே ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு இந்த டீக்கடையில்தான். நிச்சயமாக கண்ணீர் அஞ்சலிக்கான முகம் தெரிந்த ஆளுடையதாக இருக்க வாய்ப்பில்லை, ஆனால் அந்த முகம் அவனுக்குப் பரிச்சயமானதாக இருப்பதை அவன் உணர்ந்தான். பக்கத்து வீடுதான், ஆனால் நண்பரில்லை, நண்பர் இல்லை ஜஸ்ட் கலீக், தெரிந்தவர்தான், ஆனால் பெயர் தெரியாது, முகம் பரிச்சயமானது, ஆனால் யாரென்று தெரியாது இப்படிப்பட்ட உறவுகள்தான் நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் சென்னை போன்ற மெட்ரோ நகர வாழ்வின் சாபக்கேடு.
டீ கிளாஸை வாயை விட்டு கொஞ்சமாக உயர்த்தி சுலைமானியின் கடைசிச் சொட்டு வாய்க்குள் போனதை உறுதிப்படுத்திக்கொண்டே, போஸ்டரில் இருந்த முகத்துக்குள் ஊடுருவினான் ஹமீது. தலையில் இப்போதுதான் நரை ஆரம்பித்திருக்கிறது. காகிதத்தில் மண்ணைக்கொட்டி அடியில் காந்தத்தை வைத்து நகர்த்தி பேயோட்டும்போது, நீளவாக்கில் நகர்த்தினால் அத்தனை மண்ணும் ஒன்றுசேர்ந்து துருத்திக்கொண்டு நிற்பதைப்போல உதட்டின் மேலிருந்து மீசை உதட்டை லேசாக மறைத்திருந்தது. ஒரு மாதம் சவரம் செய்யாத தாடி. மரணிக்கும் வயதில்லை என்பது புகைப்படத்தைப் பார்த்தால் புரிந்தது.
ஹமீது, அலுவலகத்தில் இருந்து பெரும்பாலும் பேருந்தில் வருவான். சில நேரங்களில் சைதாப்பேட்டைவரை 19B பேருந்தில் வந்து, அங்கிருந்து மின்சார ரயிலில் பார்க் ஸ்டேஷனில் இறங்கி இருசப்பன் தெருவுக்கு நடந்து செல்வான். அன்று அப்படித்தான் ரயிலில் இருந்து இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தான். ரயில் நிலையத்தில் இருந்து மெயின்ரோட்டுக்குச் செல்லும் பாதை சற்று அகலமானது. பகல் முழுவதும் திருவிழாக் கூட்டம் போல காட்சியளிக்கும் அந்தப் பாதை, இரவு பத்து மணிக்கு திருவிழா முடிந்து சில நாட்களுக்குப் பிறகான கிராமத்தைப் போல வெறிச்சோடியிருந்தது. அதிகபட்சம் முந்நூறு மீட்டர், ஒன்றிரண்டு நிமிடத்தில் மெயின் ரோட்டை அடைந்துவிடலாம். சாலைக்கு அந்தப் பக்கம் ரிப்பன் கட்டிடம். சில நேரங்களில், அலுவலகத்துக்கு செல்லும்முன் அங்குதான் காலை உணவு. திணை, வரகு, கம்பு என ஒவ்வொரு நாளும் ஏதாவதொன்றில் தோசை, சட்னி, வடை எல்லாம் சேர்ந்து ஒரு வேளை உணவு பதினைந்து ரூபாய்க்குள் முடிந்துவிடும். அம்மா உணவகத்துக்கு அதுதான் முன்னோடி.
சாலைக்கு இந்தப் பக்கம் வழக்கமான கடைகள், நடுவில் ஒரு டாஸ்மாக் கடை. அந்தக் கடையைத் தாண்டிச் செல்லும் யாராக இருந்தாலும் மூக்கைப் பிடிப்பது அனிச்சையான செயல். அங்கு பார் இல்லாததால் கடைக்குப் பக்கத்திலேயே நடைமேடை பாராகவும், ரயில்பாதையையும், சாலையையும் தடுத்திருந்த சுவர் கழிவறையாகவும் மாற்றப்பட்டிருந்தது. சாராயத்தையும், தண்ணீரையும் கலந்து உள்ளே அனுப்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் அதை வெளியேற்றும் சுத்திகரிப்பும் அங்கேயே நடப்பதால் சிறுநீர், நடைமேடையில் இருந்து வழிந்து சாலையின் ஓரத்தில் வந்து கலக்கும். மது நாற்றமும், சிறுநீர் வாடையும் சேர்ந்து அந்தப் பகுதியையே ஒரு அசாதாரண சூழலுக்குத் தள்ளும்.
ஹமீது இருசப்பன் தெருவுக்கு செல்வதற்காக அந்தப் பகுதியைக் கடக்க முற்பட்டபோது அந்த வார்த்தைகள் அவன் காதில் விழுந்ததன. "மச்சான், குட்டிங்க சிக்குன்னு இருக்காங்கடா, கைபட்ருக்க வாய்ப்பே இல்ல", படித்தவர்கள் மாதிரி இருந்த இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் பேசியதைக் கேட்டு, அவர்கள் பார்வை போன பக்கம் தன் பார்வையைத் திருப்பினான் ஹமீது. இரண்டு பெண் பிள்ளைகள் குடிபோதையில் மயங்கியிருந்த தனது தந்தையை ஆளுக்கொரு பக்கம் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தனர்.
மது தீமைகளின் தாய். உடுக்கை இழந்தாலும் அதனைத் தடுக்க இயலாது. படித்தவர், பாமரர் வித்தியாசம் அதற்குக் கிடையாது, உள்ளே போய்விட்டால் மனிதன் மிருகமாவான், தாயோ, மகளோ காமத் தாகம் தீர்க்கும் தடாகமாகவேப் பார்க்கும். என்றோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. சத்தியமான வார்த்தைகள், சாத்தியமானதும்கூட.
"அப்பா, என்னதாம்ப்பா உனக்கு பிரச்னை, தெனம் இப்டி விழுந்துகிடக்குற, அம்மாவுக்கு இன்னிக்கு முடியல, மருந்து வாங்கியாறேன்னுதானே வந்த, அந்தக் காசுல குடிச்சுட்டு கிடக்குறியே?". கேட்ட பிள்ளைக்கு பதினைந்து, பதினாறு வயதிருக்கும். இன்னொரு பக்கத்துப் பிள்ளை அவளைவிட ஒன்றிரண்டு வயது சிறியவளாக இருக்கலாம். இவர்களைத்தான் "கை பட்ருக்க வாய்ப்பில்ல" என்று கமெண்ட் அடித்திருந்தனர் குடி வெறியேறியிருந்த அந்த ஜந்துகள்.
ரிப்பன் கட்டிடத்துக்குப் பக்கவாட்டில் இருக்கும் நேஷனல் ஹோட்டலை ஒட்டி வலதுபக்கம் நடந்துதான் எப்போதும் அறைக்குச் செல்வான் ஹமீது. அதுதான் பக்கமும்கூட. குடிகாரத் தந்தையைத் தாங்கிப் பிடித்துச் செல்லும் அந்தக் குழந்தைகள் நேஷனல் ஹோட்டலுக்கு இடதுபுறமாக சென்றார்கள். கமெண்ட் அடித்த இரண்டு கனவாண்களும் அவர்களைத் தொடர்ந்து பின் செல்வதை கவனித்த ஹமீது, அவனும் அவர்களைப் பின்தொடர்ந்தான். அந்த சாலையின் இடதுபுறம் அடித்தட்டு மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்புகள் அதிகளவில் இருப்பதால் இயல்பாகவே தெருவிளக்குகள் அந்தச் சாலையில் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்யும். பத்து மணியைக் கடந்துவிட்டதால் ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை. வலது புறம் ரிப்பன் பில்டிங்கை ஒட்டி சில தெருநாய்கள் மட்டும் குலைத்துக்கொண்டிருந்தன. அந்தக் குழந்தைகள் தந்தையைத் தாங்கியவாறே திரும்பி அவர்களைப் பார்ப்பதும், அவர்கள் திரும்பி அவனைப் பார்ப்பதுமாக நடந்தனர்.
இரண்டு பேரைத் தாக்கும் அளவுக்கு ஹமீது ஒன்றும் உடல் பலம் பெற்றவனல்ல. மூன்று மாதத்துக்கு முன்பு சென்னையில் வந்து இறங்கியபோது எடை காட்டும் இயந்திரத்தில் 47 கிலோ காட்டியது. ஒல்லியான உடல்வாகு. ஆனால் குடிபோதையில் இருப்பவர்களை அடிப்பதற்கு எடையோ, பலமோ தேவையில்லை, தைரியம் போதும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறான். கூடுதல் 'வலு'த்துணையாக சாலையில் கிடந்த கருங்கற்களை தனது லேப்டாப் பேகில் தண்ணீர் பாட்டில் வைக்கும் இடத்தில் கைக்கு வாகாக வைத்துக்கொண்டான்.
தொடர்ந்து நடந்த பெண்கள் கொஞ்ச தூரத்தில் ஒரு தெருவுக்குள் நுழைந்து அதன் நடுவில் இருந்த ஒரு வீட்டுக் கதவைத் தட்ட ஆயத்தமாகினர். பின்தொடர்ந்த ஜந்துகள் தெருமுனையில் நின்று அந்தப் பெண்கள் போவதை வெறித்துப் பார்த்துவிட்டு, திரும்பி, பின்னால் வந்த ஹமீதை வெறுத்துப் பார்த்தனர். அவர்கள் பார்க்கும்போது அவன் தனது பையில் வைத்திருந்த கற்களை எடுத்து வேகமாக கீழே எறிந்தான். இருவரும் கொஞ்சம் திடுக்கிட்டு, நேராக சென்றுவிட்டனர். கல்லைக் கண்டால் தெருநாய்கள் மட்டுமல்ல, சில குடிநாய்களும்கூட பயந்துவிடுவர் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.
இருசப்பன் தெரு குறுக்கும், நெடுக்குமானது. எங்கு பார்த்தாலும் தோல் பொருட்கள் மொத்த விற்பனைக் கடைகள், குடவுன்கள். அதற்கு ஏற்றாற்போல தோல் பொருட்களுக்கான வாடை மூக்கைத் துளைக்கும். பெரும்பாலும் உருது முஸ்லிம்கள் இங்கு அறைகள் எடுத்துத் தங்கி வியாபாரம் செய்பவர்கள். அதனாலேயே நிறைய வீடுகள், அவர்களுக்கு உணவு வழங்கும் BC என்று அழைக்கப்படும் பேச்சிலர் கேண்டீன்களாக மாற்றப்பட்டிருந்தன. ஹமீதும் அவனது நண்பர்களும் இப்ராஹிம் பி.சி யில் மதிய உணவு சாப்பிடுவது வழக்கம். அதிலும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பீஃப் பிரியாணி, க்ரேவி நாற்பது ரூபாயில் வயிறு நிறைய சாப்பிடலாம். மாலையில் அறைக்கு எதிரே இருக்கும் பீஃப் கபாப் கடை, எதிர்ச் சந்தில் நோன்புக் கஞ்சி, வடை, இரவு உறங்கும்முன் காஜா ஹோட்டலில் மசாலா டீ என எங்கு, எந்த நேரத்தில், என்ன சாப்பிடலாம் என்று பாய்ஸ் பட செந்தில் போல அட்டவணை போட்டு வாழ்ந்தனர் ஹமீது அன்ட் கோ.
இருசப்பன் தெருவைச் சுற்றிலும் அடித்தட்டு மக்களின் குடியிருப்புகள். பெரும்பாலும் கூரை வேய்ந்து, அதன்மேல் தார்ப்பாய், பழைய ப்ளக்ஸ் பேனர்கள் போர்த்தப்பட்ட சிறியதும், பெரியதுமான வீடுகளில் குவியல் குவியலாக மக்கள் வசித்தார்கள். காலையில் வீட்டு வாசலிலேயே டிஃபன் கடைகள், மாலைகளில் இரத்தப் பொறியல், ஃபீப், சிக்கன் பக்கோடா கடைகள் பெருமளவில் பார்க்கலாம். மாலை நேரங்களில் குழந்தைகள், தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட தட்டுவண்டிகளில் ஏறி விளையாடிக்கொண்டிருப்பார்கள். அரசு கொடுத்த இலவசத் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் வைக்கப்பட்டு, கேபிள் கனெக்சனுடன் நாடகங்களும், படங்களும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும். கூடுதல் காட்சிகளாக மது அருந்திய கணவன்மார்களுடன் போராடிக்கொண்டிருக்கும் மனைவிகளையும் தினசரி காணலாம்.
ஹமீது அந்த குழந்தைகள் சென்ற தெருவுக்குள் நுழைந்து நடந்தான். இரவு நேரமென்பதால் அநேக வீடுகளுக்கு வெளியிலேயே பாய் விரித்து படுத்துறங்கிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் விளையாடும் அதே தட்டுவண்டிகள் இப்போது சில தந்தைகளுக்கும், குழந்தைகளுக்கும் பஞ்சு மெத்தையாகியிருந்தது. டெடி பியர் பொம்மைகள்போல பல குழந்தைகள் நிஜ நாய்க்குட்டிகளை அணைத்துத் தூங்கிக்கொண்டிருந்தனர். அரைத்தூக்கத்தில் எழுந்து அமர்ந்திருந்த ஒரு குழந்தை இவனை வித்தியாசமாகப் பார்த்தது. "அனுமதி இல்லாமல் என் வீட்டில் நுழைந்துவிட்டாய்" என்பது போல இருந்தது அந்தப் பார்வையின் அர்த்தம். அந்தக் குழந்தையிடம் ஒரு மெல்லிய புன்னகை மூலம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அந்தப் பெண்கள் நின்றுகொண்டிருந்த வீடுவரை மெதுவாக நடந்தான். அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டனர் என்பதை உறுதி செய்துகொண்டு தனது அறைக்குச் செல்லும் வழியில் நடக்கத் தொடங்கினான்.
சுலைமானி உள்ளே போனதும், அங்கு எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கும் நாய்களுக்கு பிஸ்கட் வாங்கிப்போட்டான். ஏழாம் அறிவு திரைப்படம் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்பே அதில் காட்டப்படுவது போன்ற உடல் நலிந்து, தோல் உரிந்த, புண்ணில் சீல் வடியும் நாய்களை பெரியமேடு முழுவதும் பார்த்திருக்கிறான். தெருக்களிலும், சாலைகளிலும் கேட்பாரற்று அலைய விட்டு, கல்லிலும், வாகனங்களிலும் அடிபட்டு, சித்திரவதை செய்வதற்கு ஜீவகாருண்யம் என்ற பெயர் நகைமுரண். டீக்கடைக்கு எதிரில் இருந்த தனது அறைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு, அலுவலகத்துக்கு கிளம்பினான் ஹமீது. வழக்கமாக செல்லும் பாதையிலிருந்து விலகி, வேறொரு பாதையில் நடக்க ஆரம்பித்தான். இப்ராஹிம் பி.சியைக் கடந்து வலதுபுறம் திரும்பிய சிறிது தூரத்தில் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. சாமியானா பந்தல், ப்ளாஸ்டிக் சேர்கள், கணிசமான தொலைவிலும் காதுக்கு எட்டியது ஒப்பாரிச் சத்தம். நடையில் இப்போது வேகத்தைக் குறைத்து மெல்ல நடந்து சென்றான்.
"கொஞ்ச நாள் முன்னாடி அவனோட கூட்டாளி ஒருத்தன் ஆறு மாச புள்ளத்தாச்சிய தவிக்க விட்டுட்டு, போதைல வீட்ல இருந்து வெளில ஓடி கூவத்துல விழுந்து செத்துட்டானாம்", "அப்போல இருந்து அவன் கூப்டுறான், நானும் போறேன்னு பொலம்பிட்டே இருந்துருக்கான்", "முந்தாநாள் நைட் திடீர்ன்னு ரோட்டுக்கு ஓடிப்போய் வேகமா வந்த லாரி குறுக்க விழுந்து ஸ்பாட் அவுட். ஜிஎச்ல போஸ்ட் மார்ட்டம் முடிச்சு நேத்து நைட்டுதான் குடுத்துருக்காங்க பாடிய".
மெல்ல நடந்துகொண்டிருக்கும்போதே இழவு வீட்டைச் சுற்றிலும் இரண்டிரண்டாக, மும்மூன்றாக நின்று, பேசிக்கொண்டிருந்தவர்களின் உரையாடலைக் கோர்த்து ஹமீது மரணத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்டான். அது எப்படி அடித்தட்டு மக்கள் குவியலாக குடியிருக்கும் இடங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் தவறாமல் இடம்பெற்றுவிடுகின்றன? கடை அமைப்பதற்கான இடத்துக்கான தகுதிகளில் ஒன்றாக அரசு அதையும் சேர்த்திருக்கின்றதா? நியாயப்படி பார்த்தால் தரமான அரசுப் பள்ளிக்கூடங்களும், மருத்துவ வசதிகளும்தான் அவர்களுக்கு அருகில் கிடைக்க வேண்டும். வாழ்வையளிக்கும் வசதிகளுக்காக அல்லல்பட விட்டுவிட்டு வாழ்வை அழிக்கும் விசயங்களைக் கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருக்கும் இழிநிலை என்று மாறுமோ என நொந்துகொண்டான்.
இப்போது ஒப்பாரிச் சத்தம் அருகில் கேட்டது இழவு வீட்டை நெருங்கிவிட்டதை அறிவித்தது. ஹமீது இன்னும் மெதுவாக நடந்தான். வீட்டைக் கடக்கும்போது யதார்த்தமாக பார்ப்பது போல வீட்டுக்குள் பார்த்தான். 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அழுதழுது சோர்ந்துபோய் சாய்ந்திருந்தாள், இறந்தவனின் மனைவியாக இருக்க வேண்டும். அழுத மயக்கத்தில் இருந்த தாயை இரண்டு பக்கமும் தாங்கியிருந்தனர் பருவமடைந்த இரண்டு பெண் குழந்தைகள். அன்று இரவு, குடி மயக்கத்தில் இருந்த தந்தையைத் தாங்கியிருந்த அதே குழந்தைகள்தான். பெற்றவர்களின் அரவணைப்பு கிடைக்க வேண்டிய வயதில் இவர்களைப் போன்ற பல குழந்தைகள் பெற்றவர்களை அரவணைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள், காரணம் மது.
ஹமீது கணப்பொழுதில் அந்த இரு குழந்தைகளையும் ஆழமாக கவனித்தான். அழுவதற்கு தெம்பின்றி, தேம்பிக்கொண்டிருந்தனர். ஆனாலும் தந்தை இழந்த சோகத்தையும் கடந்த ஒரு விடுதலை உணர்வு அந்த இரு பெண் குழந்தைகளின் முகத்திலும் தெரிந்தது. நீண்ட நாள் நோய்ப் படுக்கையில் கிடப்பவர்களும், குடிநோயால் தானும் அழிந்து குடும்பத்தினரையும் சீரழிப்பவர்களும் மரணம் மூலம் தாங்கள் விடுதலை அடைவதுடன், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் விடுதலையளிக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
விறுவிறுவென அந்தத் தெருவில் இருந்து வெளியேறி, அலுவலகத்துக்கான பேருந்தைப் பிடிப்பதற்காக சென்ட்ரலை நோக்கி நடந்தான் ஹமீது. பார்க் ஸ்டேசனைக் கடக்கும்போது கடை திறப்பதற்காக காலையிலேயே ஆஜராகிக் காத்திருந்தனர் சில தகப்பன்கள். முந்தைய நாள் இரவு குடிமயக்கத்தில் அங்கேயே இருந்தவர்கள் சிறுநீரில் மிதந்துகொண்டு இன்னும் தெளியாமல் கிடந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி, குழந்தை பிறந்திருக்கக்கூடாது என்று தன்னையறியாமல் அனிச்சையாக பிரார்த்தித்துக்கொண்டே நாற்றத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக வேகமாக அந்த இடத்தைக் கடந்தான்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்