logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

T. Rathineswamy

சிறுகதை வரிசை எண் # 37


அனுப்புநர் பெறுநர் லதானந்த் (டி.ரத்தினசாமி), உதவி வனப் பாதுகாவலர் (ஓய்வு), அமைப்பாளர்கள் 27, மூன்றாவது குறுக்குத் தெரு, முத்துநகர், துடியலூர், கோயமுத்தூர் 641034 அம்மையார் ஹைநூன் பீவி நினைவு சிறுகதைப் போட்டி, படைப்பு. மின்னஞ்சல் lathananth@gmail.com அலைபேசி எண்: 9442417689 அன்புடையீர், கொங்கு எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களின் தம்பி ஆர்.திருஞானசம்பந்தம் அவர்கள் என் தந்தையார். நான் காட்டிலாகாவில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி, உதவி வனப் பாதுகாவலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவன். பணி ஓய்வுக்குப் பிறகு கல்கி குழுமத்தின் ‘கோகுலம்’ இதழின் பொறுப்பாசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். ‘நீலப் பசு’ என்னும் சிறு கதைத் தொகுப்பு உட்பட 7 நூல்களை எழுதியிருக்கிறேன். அம்மையார் ஹைநூன் பீவி நினைவு சிறுகதைப் போட்டிக்காக நான் எழுதியிருக்கும், ‘கிரால்’ என்ற சிறுகதையை இத்துடன் இணைத்திருக்கிறேன். இது வரையில் எங்கும், எந்த வடிவிலும் இது வெளியாகவில்லை எனவும் வேறு எங்கும் பரிசு பெறவில்லை எனவும், இது எனது சொந்தப் படைப்பு எனவும் வேறு எந்தவிதமான தழுவலோ நகலோ இல்லை எனவும் போட்டி நடக்கும் முன் வேறு எங்கும் பதியமாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன். எனது சிறுகதை தேர்வுசெய்யப்பட்டால் ‘லதானந்த்’ என்ற எனது புனைபெயரில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கோயமுத்தூர், தங்கள் அன்புள்ள, 01.04.2023 லதானந்த் (டி.ரத்தினசாமி)   கிரால் லதானந்த் அந்த நீதிமன்றம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. கருப்புக் கோட்டு அணிந்த வழக்கறிஞர்கள் நான்கு திசைகளிலும் அவசரமாக நடந்துகொண்டிருந்தார்கள். தங்களுக்குச் சாதகமாக நீதி கிடைத்துவிடும் என்ற பதைபதைப்புடன் பல காலமாகக் காத்திருக்கும் மக்கள், சில காகிதங்களை உள்ளடக்கிய பைகளோடு ஆங்காங்கே நின்றுகொண்டும், தரையில் அமர்ந்துகொண்டும் மகிழ்ச்சியற்ற தோற்றத்தோடு இருந்தார்கள். அன்றுதான் நீலாவதியின் வழக்கிலும் தீர்ப்பு சொல்லப்போவதாக நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவளது மனம் முழுக்கப் படபடப்பு. ஏதோ அசம்பாவிதமான தீர்ப்பு வரும் என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. காலையில் இருந்து எதுவுமே சாப்பிடப் பிடிக்கவில்லை. அவளது அம்மாகூட சலித்துக்கொண்டாள். “நடப்பது நடக்கட்டும். என்னாகுமோன்னு நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டே இருந்தா நடப்பது நடக்காம போயிடுமா அல்லது கிடைக்காததுதான் கிடைச்சிடுமா? கொஞ்சமாச்சும் சாப்பிடேன். இப்படிப் பட்டினியோட முரண்டு பிடிச்சா எப்படி?” என்று கெஞ்சிகொண்டிருந்தாள். அந்தப் பழைய சம்பவங்கள் ஏனோ இப்போது நீலாவதியின் மனதில் நிழலாடின. அன்றொரு நாள் யானை முகாமில் தானும் லட்சுமி என்ற யானையைக் கெஞ்சிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது நீலாவதிக்கு. அப்போது அவள் டாப்ஸ்லிப் பகுதியின் உலாந்தி வனச் சரக அலுவலாராகப் பணியாற்றிக்கொண்டிருந்தாள். டாப்ஸ்லிப்பில் இருந்து சுமார் 20 கி.மீ.தூரத்தில் கோழி கமுத்தியில் இருக்கும் யானை முகாம் அவளது கட்டுப்பாட்டில் இருந்தது. பிரிட்டிஷார் ஆண்டபோது, கர்னல் கொமேதி என்பவர் கட்டிய பாலத்தின் நினைவாக அந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டு, ‘கோழி கமுத்தி’ என மருவி இருந்தது. கிணறு, பள்ளம் போன்றவற்றில் சிக்கிக்கொண்ட யானைக் குட்டிகளை மீட்டு, அவற்றைப் பேணிப் பாதுகாத்துப் பழக்கப்படுத்தியனவாக அவை மாறுவதற்கென்று அங்கே வளர்ப்பதுண்டு. சில சமயம் பொதுமக்களுக்கு மிகுந்த இடைஞ்சல் தரும் போக்கிரி யானைகளை அந்த முகாமுக்குக் கொண்டுவந்து சாதுவான யானையாக மாற்றிப் பழக்குவார்கள். பொதுமக்களுக்கு இடையூறாக மனித உயிர்ச் சேதத்தை விளைவிக்கும் அந்தக் காட்டு யானைகளைப் பிடிக்க முகாமில் இருக்கும் பழக்கப்பட்ட யானைகள் மிக உதவிகரமாக இருக்கும். ஏற்கெனவே முகாமில் இருந்து மீட்புப் பணிகளில் உதவிபுரியும் யானைகளை ‘கும்கி’ என்பார்கள். அந்த முகாமில் இருந்ததுதான் லட்சுமி என்ற பெண் யானை. நீலாவதின் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து மிகவும் பிரியமாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு அழகான பெண் குட்டி ஒன்றை ஈன்றெடுத்திருந்தது அந்த லட்சுமி யானை. அதன் வாழ்விலும் ஒரு முக்கியமான துயர நாள் அலுவலர்களால் குறிக்கப்பட்டது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது எனபதை முன்கூட்டியே உணர்ந்துவிட்டதோ என்னவோ… அந்தக் குறிப்பிட்ட நாளில் காலை ஆகாரம் எதையுமே லட்சுமி உட்கொள்ளவில்லை. வானை நோக்கிப் பிளிறிக்கொண்டே இருந்தது. தன் குட்டியை அடிக்கடி நுகர்ந்தும் தும்பிக்கையால் தடவியும் சுற்றிச் சுற்றி வந்தது. வனச் சரகர் நீலாவதியின் நெஞ்சிலும் அன்றைக்கு சோகம் மண்டிக் கிடந்தது. லட்சுமி யானையிடம் எவ்வளவோ நைச்சியமாகப் பேசிப்பார்த்தாள். வழக்கமாக ராகிக் களி, உப்பு, வெல்லம், சத்து மாத்திரைகள் அடங்கிய கவளத்துடன் லட்சுமிக்குப் பிடித்த மூங்கில் தளிர்களையும்கூடக் கொடுத்துப்பார்த்தாள். ம்ஹூம்… பிளிறிக்கொண்டே இருந்ததே தவிர ஆகாரம் எதையும் சாப்பிட மறுத்தது. அதேபோலத்தான் இன்றைக்கு நீலாவதிக்கும் சாப்பிடவே பிடிக்கவில்லை. நீதிமன்ற வளாகத்துக்கு ஒன்பது மணிக்கெல்லாம் வந்துவிட்டாள். அந்த வளாகத்தில் இருந்த செங்கல் கட்டிடங்களும், வராண்டாக்களில் அமர்ந்திருந்த பணியாளர்கள் தட்டச்சு செய்யும் ஓசையும், பிரம்மாண்டப் படிக்கட்டுகளும், ஆங்காங்கே இருந்த உயர்ந்த மரங்களும், அவற்றில் அமர்ந்திருந்த காகங்களின் ஒலியும் அவளது மனக் கிலேசத்தை அதிகப்படுத்துவதாகவே இருந்தன. சரியாகப் பத்து மணிக்கு அவளுக்காக வாதாடும் வழக்கறிஞர் மாதப்பன் அருகில் வந்தார். “அம்மா, தைரியமா இருங்க. நாம முடிஞ்ச வரைக்கும் நம்ம தரப்பை முன்வச்சு வாதாடியிருக்கோம். ஆனால் சில சட்ட நுணுக்கங்கள் நமக்கு எதிரா இருக்கு. தீர்ப்பு எப்படி வந்தாலும் மனதைத் தளர விட்டுடாதீங்க” என்றார். அவரது வார்த்தை ஆறுதலைத் தருவதைவிட நீலாவதிக்கு அச்சத்தையே அதிகம் ஊட்டியது. “இன்னிக்கு மாலா சொல்லப்போற விஷயத்தில்தான் வழக்கின் தீர்ப்பே இருக்கும்” என்று சொல்லிவிட்டுத் தமது இதர வேலைகளைக் கவனிக்க வளாகத்துக்குள் சென்றுவிட்டார் மாதப்பன். தனது பத்து வயதுப் பெண் குழந்தை மாலாவை நினைக்கும் போது நெஞ்சு கனத்தது நீலாவதிக்கு. தன்னுடன் வர மறுத்துத் தன் தந்தை மருதநாயகத்துடனேயே இருப்பேன் எனச் சொல்லிவிடுவாளோ என்று மனம் அலைபாய்ந்தது. தன்னைவிட்டுத் தனது ஆசை மகளை நீதிமன்றம் பிரித்துவிடுமோ எனக் கலங்கினாள். அன்றைக்கும் இதே போலத்தான் முகாம் யானை லட்சுமிக்கும் இருந்திருக்குமோ? அதனிடம் இருந்து அதன் குட்டியைப் பிரிக்கும், ‘வீனிங்’ என்ற சடங்கைச் செய்யும் பொறுப்பு வனச் சரகர் நீலாவதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த வீனிங் சடங்கு … நீலாவதிக்கு இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் திரண்டது. பல வருடமாக யானை முகாமில் இருக்கும் பாகன் சக்கண்ணனை அழைத்தாள். “எல்லாம் ரெடியா இருக்கில்ல? எந்தப் பிரச்னையும் வந்திடக் கூடாது. கும்கி யானைகள் கலீம், ஐஜி, சுஜித் இதுங்க மூணையும் முன்கூட்டியே கூட்டிகிட்டு வந்தாச்சில்ல? குட்டிக்குக் கரும்பு, மூங்கில் தளிர், வெல்லம் எல்லாம் போதுமான அளவு ஸ்டாக் வச்சுக்குங்க. அதிகமா ஆதிவாசிகள் யாரும் கிட்ட இருக்க வேண்டாம். வெட்டரினரி டாக்டர் மனோகரன் பக்கத்திலேயே இருக்கட்டும்” என உத்தரவுகளை மளமளவெனப் பிறப்பித்தாள். “எல்லாம் ரெடிங்க மேடம். வாங்க கோர்ட் ஹாலுக்குப் போயிடலாம்” என்ற மாதப்பனின் குரல் அவளை இன்றைய தினத்துக்கு மீண்டும் அழைத்து வந்தது. பார்வையாளர்கள் வரிசையில் ஏற்கெனவே நீலாவதியின் கணவனும், மகள் மாலாவும் அமர்ந்திருந்தனர். இவளது பக்கமே இருவரும் திரும்பவில்லை. திருமணமான புதிதில் ஆரம்பித்த மருதநாயகத்தின் கொடுமைகள் நாளாக நாளாக அதிகமாகிக்கொண்டே போயின. எதற்கெடுத்தாலும் சந்தேகம். யாரோடு பேசினாலும் அடி உதை. அலுவலகப் பணி மாறுதல் நிமித்தமாகக் கொல்லி மலை, கொளப்பள்ளி போன்ற அதிக வசதிகள் அற்ற பகுதிகளிலேயே நீலாவதி தனியே குவார்ட்டர்ஸில் தங்கிப் பணியாற்ற வேண்டியிருந்ததால் அவளது பெண் மாலாவுக்கும் அவள் மீது பெரிய அளவில் ஈடுபாடோ ஒட்டுறவோ இருக்கவில்லை. மாலாவுக்கு எட்டு வயதாகும்போது விவாகரத்துக் கேட்டு மருதநாயகம் வழக்குத் தொடர்ந்திருந்தான். இப்போது மாலாவுக்கு பத்து வயதும் ஆகிவிட்டது. இரண்டாண்டுகளாக நடந்த வழக்கு இதோ இன்றைக்குத் தீர்ப்பை நோக்கி நிற்கிறது. நடக்கப்போகும் விபரீத ‘வீனிங்’ சடங்கின்போது சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துவந்த தன்னைத் தந்திரமாக ஒரு கூண்டுக்குள் அடைத்துவிடுவார்கள் என்பதை அறியாமல் குட்டி யானையும் கும்மாளமாகத்தான் அன்றைய நாளை ஆரம்பித்தது. முகாம் அருகிலேயே ஓடும் வரகளியாற்றில் பாகன் குளிப்பாட்ட, ஆனந்தமாக நீரைத் தும்பிக்கையால் உறிஞ்சிப் பாகன் மீது பீச்சியடித்து விளையாடியது. தாய் யானையிடம் வயிறு முட்டப் பாலும் குடித்தாயிற்று. முகாமில் இருக்கும் குட்டி ஈனாத பெண் யானைகள, ‘ஆன்டி (அத்தை)’ யானைகள் என்பார்கள். தாயைப் போலவே அந்த அத்தைமார்களும் குட்டி யானையைக் கொஞ்சுவது, பொய்ச் சண்டை போடுவது என்று அன்றும் குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தன. முகாமில் பிறக்கும் குட்டி யானைகளுக்கு ஒரு வயதாகுபோதோ அல்லது அது 125 செ.மீ. உயரத்தை எட்டும்போதோ குட்டியை அதன் தாயிடம் இருந்து பிரித்துவிடுவார்கள். தாய் தனக்கிடப்படும் கட்டளைகளுக்கேற்ப முகாம் பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுலா வருபவர்களைச் சுமந்து செல்லவும், இயல்பு வாழ்க்கை வாழவும் குட்டி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதும், குட்டி யானைக்கும் பொறுப்புக்கள் வரவேண்டும் என்பதற்காகவும்தான் அதைத் தாயிடம் இருந்து பிரிக்கும் ‘வீனிங் (Weaning)’ என்ற சடங்கு நடத்தப்படும். அன்றைய தினத்தில் தாய் யானையை மூன்று கும்கி யானைகளும் மெதுவே நகர்த்தி, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட பாதையில் செலுத்தித் தொலை தூரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டன. ஒரு புறம் கும்கி ஐஜி, இன்னொரு புறம் கலீம், பின்புறத்தில் சுஜித் என்ற மூன்று வலிமையான கும்கிகளைத் தாண்டி வேறு பாதையில் ஓரடிகூட லட்சுமியால் எடுத்துவைக்க முடியவில்லை. தனது குட்டியைக் காணாமல் பிளிறிக்கொண்டிருக்கும் லட்சுமியைக் கோழிகமுத்தி யானை முகாமை விட்டுத் தொலைதூரத்தில், குட்டியின் குரல் கேட்காத தேரிமெட்டு என்ற இடம் வரை கொண்டுபோய்விட்டார்கள். அத்தை யானைகளும் அவ்வப்போது குட்டிக்கான அழைப்புப் பிளிறலை ஏறபடுத்திக்கொண்டிருந்தன. அதே சமயம் குட்டிக்குத் தேவையான தீனிகளைக் கொடுத்து, அதன் உடல் முழுக்க எண்ணெய் பூசினார்கள். குட்டி யானை மிகவும் விரும்பும் வெல்ல உருண்டைகள், மூங்கில் துளிர்களைக் காட்டி மெதுவாக வரவழைத்து, அதை ஒரு கூண்டில் அடைத்தார்கள். தன் தாயிடம் இருந்து பிரிக்கப் போகிறார்கள் என்ற சூழ்ச்சியை அறியாமல் வெல்லத்துக்காகவும், மூங்கிலுக்காகவும் குட்டி கூண்டுக்குள் புகுந்துகொண்டது. 7 மீட்டர் உயரமும், 9.4 மீட்டர் நீளமும், 5.3 மீட்டர் அகலமும் கொண்டு மரத்தால் அமைக்கப்பட்டிருக்கும் கூண்டு அது. அதன் சட்டங்கள் உருளை வடிவில் கூர் முனைகள் மற்றும் முடிச்சுகள் இல்லாமல் இருக்கும். அவற்றிலும் எண்ணெய் பூசி இருந்தார்கள். கூண்டில் குட்டி மோதும்போது காயம் அதிகம் படாமலிருக்கத்தான் இந்த ஏற்பாடு. தான் கூண்டுக்குள் அடைக்கப்பட்டது கொஞ்ச நேரம் கழித்துத்தான் குட்டிக்கு உறைத்தது. பிஞ்சுக் குரல் மூலம் கூச்சலை எழுப்பிக்கொண்டிருந்தது. வெளியேறும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கூண்டை அடைத்திருந்த பலகைகளில் தனது நெற்றியைப் பலமாக மோதியது. ஒரு கட்டத்தில் ரத்தம்கூட அதன் சின்ன முகத்தில் வழிய ஆரம்பித்துவிட்டது. இப்போது நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்த நீலாவதி பதட்டத்தில் கைகளைப் பிசைந்தபோது, கைகளில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் உடைந்து வெளியான ரத்தம், நீலாவதிக்கு அன்றைய தினத்தில் குட்டி யானையின் நெற்றியில் இருந்து வழிந்த ரத்தத்தைத்தான் நினைவூட்டியது. நீதிபதி நிதானமாகத் தமது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். விவாகரத்து வழங்குவதற்குப் பல விதமான காரண காரியங்களையும் விளக்கிய அவர், “வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் பெற்றோரான மருதநாயகம் மற்றும் நீலாவதியின் குழந்தை மாலாவின் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தமது தந்தையுடனே வசிக்க விரும்புவதாகவும், தாயைப் பார்க்கக்கூட விரும்பவில்லையெனவும் அவள் சொல்வதைக் கவனிக்கவேண்டும்” என்றவர், மேற்கொண்டு வாசித்த பல நிபந்தனைகள் எதுவும் நீலாவதியின் காதில் ஏறவில்லை. நீதி மன்றத்தைவிட்டு வெளியில் வந்த அவளது நடை தள்ளாடியது. அந்தப் பகல் நேரத்திலும் சுற்றிலும் புகை மூட்டம் சூழ்ந்திருப்பதைப் போல உணர்ந்தாள். பக்கத்தில் வந்த அவளது அம்மா தாங்கிப் பிடித்து வழிநடத்தினாள். அன்றைக்கும் கும்கி யானைகள் வழிநடத்தலில் சென்ற லட்சுமி யானையை எண்ணிப்பார்த்தாள் நீலாவதி. கொஞ்ச காலம் குட்டியைப் பிரிந்த லட்சுமி சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் பிளிறிக்கொண்டே இருந்தது நீலாவதியின் நினைவுக்கு வந்தது. காலக் கிரமத்தில் கும்கி யானைகளின் ஆதரவின்றியே லட்சுமி நடக்கத் தொடங்கியது. முகாமில் அதற்கிடப்பட்ட வேலைகளையும் செய்யத்தொடங்கியது. புதிதாக முகாமில் பிறந்த யானைக் குட்டிகளுக்குத் தானும் ஓர் அத்தையாக மாறிப்போனது. இப்போது நீலாவதின் நடையிலும் ஒரு நம்பிக்கை பிறந்தது. ஆதரவாக அணைத்துக்கொண்டு, கூட நடந்து வந்த அம்மாவின் கைகளைத் தட்டிவிட்டாள். கண்களைத் துடைத்துக்கொண்டாள். இப்போது நகரமே வெளிச்சமாக அவளுக்குத் தோன்றியது. ************

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.