Hariharan Shankaran
சிறுகதை வரிசை எண்
# 35
தலைப்பு : முதுமையின் இளமை
வழக்கம் போல ஞாயித்துக் கெழம அதுவுமா கோழி வாங்கலாமுனு பக்கத்துல இருக்க கடைக்கிப் போயிருந்தன்.
“வா அத்தா எங்க இந்தப் பக்கம்?”
“உங்க கடைக்கி எதுக்கு பாய் வருவாங்க?”
அவர் சிரிச்சிக்கிட்டே அஞ்சிக் கோழி போடட்டுமானு கேட்டாரு. அஞ்சிக் கோழி வாங்கி நா என்ன பாய் பண்ண போறன் ஒரு கோழி போடுங்க நல்ல பிஞ்சிக் கோழியா போடுங்கனு சொன்னன். உடனே அவர் என்னத்தா இப்புடி சொல்லிட்ட உனக்கு அல்வா துண்டு மாதிரிப் போட்டுத் தரன் அப்படினு சொல்லிட்டு எனக்கு முன்னாடி வந்தவங்க கோழிய உறிச்சிக்கிட்டே பேசிட்டு இருந்தாரு. அதே நேரம் பாயோட பால்ய சினேகிதன் சீனு மாமா அங்க வந்தாரு.
“டேய் மாப்ள என்னடா சொல்றான் கறிக்கடக்காரன்”
நா வாய தொறக்குறதுக்குள்ள பாய் பேச ஆரம்பிச்சிட்டாரு வாடா கெழப் பயலே உன்ன யாருடா இங்க வர சொன்னது? உன் மவன் உன்ன அங்க தேடிட்டு திரியிறான் நீ இங்க வந்து நின்னுட்டுருக்க.
அவன் கெடக்கான் வெட்டிப்பய அவன் வயசுல நாம சைக்கிள உருட்டிக்கிட்டு ஊரூரா சுத்தி வெங்காயம் வித்துட்டு இருந்தோம், நாளு காசு சம்பாதிச்சிட்டு இருந்தோம். இவனப் பாரு பொறுக்கிட்டிருக்கான். இந்தா என் மாப்ளய பாரு இந்த வயசுலயே ஒரு தொழில் பண்ணி சம்பாதிச்சி வீட்டுக்கு ஒத்தாசையா இருக்கான். எனக்குனு வந்து வாச்சிருக்கு பாருனு மாமா பொலம்பிக்கிட்டே... இருடா அந்த நாய போய் கவனிச்சிட்டு வரனு கிளம்பிட்டாரு.
சும்மாவே பாய் பேசிட்டே தான் இருப்பாரு இப்போ சொல்லவா வேணும் மாமா போனதும் பாய் வெங்காயம் வித்த கதைய சொல்ல ஆரம்பிச்சாரு.
பாருத்தா அப்போலாம் நான் ஆர்பருக்கு போயி வெங்காய மூட்ட வாங்கிட்டு வருவன். இந்தா கெடக்கு பாரு சைக்கிளு இந்த சைக்கிள்ள தான் போவன்.
“என்ன பாய் சொல்றிங்க அவ்ளோ தூரம் இந்த சைக்கிள்ளயா போவிங்க?”
ஆமாத்தா காலைலயே போயிடுவன் சாந்தரம் ஆயிடும் வரதுக்கு. ஒரு மூட்ட அப்போ மூன்றுபா தான் எல்லாத்தையும் விக்க முடியாது மிச்சத்த ஆத்துல கொட்டிட்டு அப்படியே வந்துடுவன்.
ஆத்துல கொட்டிடுவிங்களா? ஏன் பாய் அத எடுத்துட்டு வந்து மறுநாள் வித்துருக்கலாமே?
அவர் சிரிச்சிக்கிட்டே எதுக்குத்தா அப்படி கஷ்டப்பட்டுக்கிட்டு... இறைவன் எனக்கு வேணுங்குறத முன்னாடியே குடுத்துடுவான் அது போதும் எனக்கு.
“இருந்தாலும் ஆத்துல கொட்டாம வேற யாருக்காச்சும் குடுத்துருக்கலாம்ல...”
எனக்கு மட்டும் அத கொட்டணும்னு ஆசையா?
யாருக்கும் இலவசமா எதும் குடுத்து பழக்கக்கூடாதுத்தா அதுக்கு மதிப்பில்லாம போயிடும், அதுமட்டுமில்லாம நம்ம ஊரு அங்க இருந்து எவ்ளோ தூரம்னு உனக்கே தெரியும் நாள் முழுக்க அந்த சுமைய வெச்சிட்டு மிதிக்க முடியாதுத்தா.
என்னால அதுக்கு மேல சைக்கிளு கூட ஓட்ட முடியலத்தா முட்டி வலி வர ஆரமிச்சிட்டு அப்பறம் தான் அப்படி இப்படினு இந்த கடைய வெச்சன், அதையும் சும்மா வெச்சிடலத்தா அவ்ளோ பேர்ட்ட வேல பாத்துருக்கன். இப்போ வயசாகிட்டு முன்னலாம் ஒரு மணி நேரத்துல நூறு கோழி சுத்தம் பண்ணி கொடுத்துருவன் அத்தா இப்போ முன்ன மாதிரி வேலயே பாக்க முடியல.
இன்னும் கொஞ்ச நாள் தான் நானும் அந்தா கெடக்கு பாரு என்னோட பழைய சைக்கிளு... அந்த மாதிரி தூக்கி ஓரமா வெச்சிடுவாங்க. பழச மறக்காம இருக்க நா அந்த சைக்கிளு வச்சிருக்கன், ஆனா என்ன எல்லாம் மறந்துருவாங்க அத்தா.
அவரோட கதைய சொல்லிட்டு சிரிச்சிட்டே கோழிய உறிச்சி என் கைல குடுத்துட்டாரு. எனக்கு அங்க இருந்து வெளில வரப்போ என்னோட முதுமைக்காலம் என் கண்முன்னாடி வந்துட்டுப் போனுச்சி
ஆமாங்க... முதுமையில கூட அவங்க நட்பு ஒருவித தனி உணர்வ சொல்லுச்சி, வெறும் ஒரு நிமிட பேச்சும் அவங்களோட இளமையான நட்போட ஆழத்த அழுத்தமா சொல்லிட்டுப் போனுச்சி.
பழச மறக்காம இருக்குறதும் ஒருவகை இன்பம் தான் அதனால தான் அவர் அந்த பழைய விஷயத்த உணர்வோட சொன்னாரு.
நம்ம பார்வையில அது பழைய சைக்கிளா தெரியலாம். ஆனா, அது தான் அவர பொறுத்த வரையும் அவரோட இளமைக்காலம்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்