Ammuraghav
சிறுகதை வரிசை எண்
# 34
வசந்தமுல்லை
~~~~~~~~~~~~~~~~~~~
-அம்முராகவ்
வசந்தமுல்லை என்கிற அவளின் பெயர்தான் எனக்குப் பிடித்திருந்தது.எனக்கென்று அல்ல, அவ்விடத்தில் நீங்கள் இருந்தாலும் வசந்தமுல்லையின் பெயரும், அவளின் பேச்சும், கதையும் கூட நிச்சயம் பிடித்துப் போகும்.இதை எப்படி இவ்வளவு அழுத்தமாக நான் சொல்கிறேன் என்றால், நான் அவளோடு இரண்டு மூன்று தினங்கள் உரையாடியிருக்கிறேன்.இன்னொன்று அவள் அச்சு அசப்பில் என்னைப்போல நல்ல உயரமாக அதே நேரத்தில் சாந்தமாகவுமிருந்தாள் என்பதனாலும் வசந்தமுல்லையை எனக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.அவள் கடினங்களை துயரங்களாக பேசாமல், மெல்ல கதை போல சொன்னாள்.
வசந்தமுல்லை எப்படியிருக்கிறீர்கள் என்று நான் மூன்றாம் முறை மதுரையின் ஒரு பிரதான மருத்துவமனையின் கேன்டீனில் காபி பருகிக்கொண்டே கேட்ட போது அருமையாக இருக்கிறேன் என்றார்.சொல்லும் போது முகத்தில் அவ்வளவு பொலிவு. என்னிடமெல்லாம் யாராவது இப்படிக் கேட்கும் போது 'ம்ம்' ஏதோ இருக்கிறேன் என்றுதான் சொல்லிவைப்பேன். ஏன் அடுத்தவரிடம் போய், ஆகாஓகோ என்றெல்லாம் சொல்லிக்கொள்ள வேண்டும் என்கிற மனம்தான்.இப்போதெல்லாம் ஆணோ பெண்ணோ கொஞ்சம் பொலிவான உற்சாகப் பேச்சு பேசுகிறவர்களெல்லாம் ரொம்பவும் அபூர்வம்தான்.அதுவும் மருத்துவமனைக் கேன்டீனில் இப்போது மூன்று நாட்களாகச் சந்தித்துக் கொள்ளும் வசந்தமுல்லை என்னிடம் முதலில் பேசியதைப்போன்ற அதே பொலிவுடனே இப்போதும் பேசுகிறாள் என்றால், ஏதோ மந்திர சக்தி வைத்திருக்கிறாள் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.
அம்மாவுக்கு உடல்நலமில்லை இன்னும் ஒன்றிரெண்டு நாட்கள் உள்நோயாளியாக இருந்துதான் வெளியே வருவாள். வேறுவழியில்லை எப்படியானாலும் இங்கிருந்து எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும்.வசந்தமுல்லையின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை அவள் எனக்கு முன்னமே இங்கிருக்கிறாள்.நான் அம்மாவோடு வெளியேறிப் போனப்பிறகும் கூட அவள் மேலும் சிலதினங்கள் இங்கிருக்க வேண்டியதிருக்கும் என்று சொன்னாள்.நேற்று மாலை கேன்டீனிலிருந்து பிரியும்போது, வசந்தமுல்லை அவளின் தொலைபேசி எண்ணைத் தந்துவிட்டு எனது எண்ணையும் பெற்றுக் கொண்டாள்.நாங்கள் இருவரும் இந்த மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளின் வழித்துணைவர்கள் என்கிற அளவில் புதிய பந்தமாகியிருந்தோம்.இதுஅல்லாது சில பொருத்தங்கள் இருந்தன.
எனக்கும் காபி பிடித்தமானது, அவளுக்கும் கூட அதே அளவில் கலவை,இனிப்பு என எல்லாம் அப்படியே அசலாகப் பிடித்தமானதாக இருக்கிறது.கேன்டீன் பால்கனியை ஒட்டி மரமல்லி பூத்துக் குலுங்கும். மரமல்லி வாசத்தை சுவாசித்துக் கொண்டே காபியை ரசித்துக் குடிப்பேன். இந்த மரமல்லி வாசத்தோடு காபி அருந்த தனக்கும் அவ்வளவு பிடிக்கும் என்றாள்.
இரவுக்கு நல்ல முறுகலாக ஒரு தோசை வார்க்கும்படி கேன்டீனில் பவித்திராதேவி அம்மாவிடம் சொல்லியிருந்தேன்.அப்போது அங்கு வந்த வசந்தமுல்லை உனக்கும் என்னைப் போலவா என்றாள்.உனக்கும் என்னைப்போலவா!! என்ற வார்த்தை அவ்வளவு வாளிப்பாக இருந்தது.வசந்தமுல்லை இப்போதுதான் என்னை ஒருமையில் அழைக்கிறாள்.அதுகுறித்து அவள் ஒன்றும் பிரச்சனை இல்லையே என்ற போது,சிரித்துக்கொண்டு பிடித்திருக்கிறது என்றேன்.நாங்கள் முறுகலான தோசையை சாப்பிட்டுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.
இடையில் இரண்டு முறை எங்கள் மேசைக்கு பவித்திராதேவி அம்மா வந்து போனார்கள்.
நான் வசந்தமுல்லையிடம் அப்பாவுக்கு எப்படி இருக்கிறது என்றதும், அவள் அப்பா அருமையாக இருக்கிறார் என்றாள்.நான்தான் அவளின் முந்தைய கேள்விக்கு அம்மா அருமையாக இருக்கிறாள் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன்.
இப்படித்தான் எல்லாம் நிகழ்ந்தேறிய பிறகு அதுபற்றி யோசிக்கிறேன்.இனி வசந்தமுல்லையை இந்த மருத்துவ வளாகத்தில் சந்தித்தால் அவளைப்போலவே உற்சாகமான பதில் சொல்லிவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டேன்.வசந்தமுல்லை ஒருமுறை அம்மாவைப் பார்க்க வந்தாள்.அம்மாவும் இந்த உலகில் இல்லாத பிரச்சனைகள் எல்லாம் தமக்கு இருப்பதாகப் பேசிக்கொண்டாள்.புன்னகை
மாறாமல் வசந்தமுல்லை அம்மாவின் கரங்களைப்பற்றி நீவிக்கொண்டே நீங்கள் அருமையாக இருக்கிறீர்கள் என்றபோதும், அம்மாவின் முகத்தில் திருப்தியற்ற தன்மையே மேவியிருந்தது.அவள் அதனை புன்னகையால் கடந்துபோனாள்.
பின்னர் என்னிடம் வராந்தாவில் பேசும் போது அம்மா குணமாகிவிட்டார், நாளை அல்லது நாளை மறுநாள் வீட்டுக்குப் போகலாமென டாக்டர் சொல்லிவிட்டதை நான் வசந்த முல்லையிடம் சொன்னேன்.ஆஹா! அருமை அருமை என்று சிரித்துக்கொண்டு வராந்தாவில் நடந்தவள், காலையில் கேன்டீனில் பார்க்கலாம் என்றாள்.
என் போன் நம்பர் உங்களிடம் இருக்கிறது முல்லை, நீங்கள் ஒருமுறை கூட என்னிடம் பேசவில்லை என்று நான் குறைபட்டுக்கொண்டதையும் புன்னகையால் மறைத்துக்கொண்டு, வசந்தமுல்லை நடந்து கொண்டிருந்தபோது என் போன் ஒலித்ததும், நான் எடுத்து காதில் வைத்து ஹலோ என்றதும்.நான் வசந்தமுல்லை என்று சிரித்துவிட்டு என்னை நோக்கி திரும்ப நடந்துவந்தாள்.
நாங்கள் பேசுகிறோம், மருத்துவமனையின் கேன்டீனில் காபி மற்றும் முறுகலான தோசை உண்கிறோம், அருமை நலம் இப்படியான பேச்சுக் கடந்து அவளும் என்னைப்பற்றிக் கேட்கவில்லை நானும் கூட அவளைப் பற்றிக் கேட்கவில்லை.எங்களின் ஊர்கள் மட்டும் ஒரே மாவட்டத்தின் இருவேறு எல்லைகளில் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்கிறோம்.அவள் திரும்ப போனைத் துண்டித்துக் கொண்டு என்னை நோக்கிதான் நடந்து வருகிறாள்.
என்னைப்போல முல்லைக்கும் நடுத்தர வயது. ஒருவேளை அவளுக்கும் மகனும் மகளும் இருக்கக்கூடும்.ஒரு காபிகூட எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை வசந்தமுல்லையிடம் கதைகேட்கலாம் என தீர்மானித்தபடி அப்படியே நின்றிருந்த போதுதான் அவள் கிட்டே வந்ததும் கேட்டாள். "உங்களுக்கு எத்தனை குழந்தைகள்" நான் கேட்க நினைத்த கேள்வி.இந்த முல்லைக்கு மந்திரம் தெரியுமா!! அல்லது நமது மனதை வாசிக்கும் வல்லமை கொண்டவளா..?மீண்டும் அவள் கேட்டபோது நான் பதில் சொன்னேன்.
நாம் ஒரு காபி எடுத்துக் கொள்ளலாமா? என்று கேள்வியாகக் கேட்டாள்.அடப்பாவி இதுவும்கூட எனது கேள்விகளில் உள்ளவைதான்.எனக்கு அவளை இன்னும் பிடித்துப் போய்விட்டது.சந்தோசத்தில் திழைத்துக் குலுங்குபவளைப்போலத் துலங்குகிறாள்.நானோ அம்மாவின் மூட்டு வலிக்காக மனம் உடைந்து கிடக்கிறேன்.உறவுகள் என்று எத்தனைக் கிடந்தாலும் அவசரத்தில் ஏதேனும் ஒரு கரம் நீண்டு வருவது அபூர்வமாகிவிட்டது.
கேன்டீனிலிருந்து முல்லையிடம் கேட்டேன் அப்பாவுக்கு எப்படி இருக்கிறது.நேற்று அறைக்கு வந்தபோது ஐசியுவில் அப்பாவைப் பார்க்க முடியாது என்றார்கள்.
அப்பாவுக்கு ஒன்றுமில்லை... சும்மாதான் இருக்கிறார்...
சும்மா எதற்கு ஐசியுவில்...
அங்கிருப்பது சவுகரியமானது என்பதனால்... உனது அம்மாவுக்கோ ஒரு மூட்டு வலியாவது இருக்கிறது.இங்கு அப்பாவுக்கு அப்படியாக ஒன்றுமில்லை.அருமையாக இருக்கிறார்.
உங்களுக்கு எல்லாமே அருமைதான்...
அப்படி சொல்ல முடியாது இந்த மருத்துவமனைக் கேன்டீனில் பவித்திராதேவி அம்மா போடும் மெதுவடை உலக அதிசயம்போல அருமையாக இருக்கும், கீரைவடை அவ்வளவு மேன்மை என்று சொல்ல முடியாது.... சொல்லிவிட்டு வசந்தமுல்லை சத்தமாகச் சிரித்தாள்.அப்போது மருத்துவமனையின் பக்கவாட்டில் ஒரு பெண் தலையிலடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்த ஓலச்சத்தம் கேட்டது.ஸ்ட்ரெச்சரில் துணியால் மூடப்பட்ட ஒரு மனிதரைக் கிடத்தித் தள்ளிக் கொண்டு போனார்கள்.ஸ்ட்ரெச்சரில் கிடக்கும் மரித்துப்போன மனிதரை அந்த பெண் பிடித்திழுத்து எடுப்பதுபோல ஓலமிட்டுக் கதறியபடி ஓடிக் கொண்டிருந்தாள்.நான் பதறிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்னை வலுக்கட்டாயமாக இந்தபக்கமாகத் திருப்பிய வசந்தமுல்லை, பவித்திராதேவி இடியாப்பம் பிழிந்தால் அவ்வளவு அருமையாக இருக்கும் என்றாள். எல்லாவற்றிற்கும் துலக்கமாக இருக்கிறாள் என்பதற்காக ஒருத்திக்கு இவ்வளவு கூடாது.அங்கொருத்தி கதறி துடிக்கிறாள் இவள் அனாயசமாக இடியாப்பம் குறித்துக் கதைக்கிறாள் என்றால் எவ்வளவு கல்நெஞ்சக்காரி.... இவளோடு சரிப்படாது.நாளை இங்கிருந்து போய்விட்டால் அவள் யாரோ நாம் யாரோ.இரயிலில் பக்கத்து இருக்கைப் பயணிபோல.
இதற்கு முன்னாலும் கூட சில முறை இந்த மருத்துவமனையின் வாசத்தில், சிலரைப் பார்த்து மெலிதாக அதுவும் உதடு விரியாத புன்னகை, ஆமாம் இல்லை என்பதைக் கடந்து மேலதிக வார்த்தைகளைக் கூட யாரோடும் ஒரு பேச்சுப் பேசிக் கொண்டதில்லை.என்ன காரணமோ முல்லை முதல்பார்வையிலேயே கொஞ்சம் ஈர்த்துக் கொண்டாள்.சகஜமாகப் பேசினால் இவ்வளவு பெரிய கல்நெஞ்சக்காரியாக இருக்கிறாள்.அந்த பெண் கதறி துடித்தபோது என் கண்கள் கண்ணீரை வடித்துவிட்டது.பாவி பவித்திராதேவியின் இடியாப்ப மகிமையைப் பேசுகிறாள்.நான் காபி குடிக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு மேலே அறைக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன்.
யோசனை பலமாக இருக்கிறதே... சரி வந்தது வந்தாகிவிட்டது ... காபியைக் குடித்துவிட்டு மேலே அறைக்குப் போங்கள்... என்கிறாள்.இவள் சூனியக்காரிதான் நம் மனதை வாசிக்கிறாள்.என் யோசனையே என்னை பயமுறுத்தியது.
இது மருத்துவமனை இவ்வாறு நிறைய நிகழும் ... அந்த பக்கமாக ஒரு லேபர் வார்டு இருக்கிறது... இன்று காலை எனக்கு அங்கிருந்து ஏழுபேருக்கு குழந்தைகள் பிறந்ததற்கு, நல்ல தரமான மிட்டாய்கள் வந்திருந்தன.இது ஒரு வினோத உலகம்... நான் இதை நன்கு புரிந்திருக்கிறேன்.எனப் பேசிக் கொண்டே இருவருமாக நடந்து கேன்டீன் வந்துவிட்டோம்.
பவித்திராதேவி, என்ன இரண்டு காபியா என்கிறாள்.இவளும் சூனியக்காரி போலத்தான் கேட்கிறாள்.
பவித்திராதேவியிடமும் ஒரு அதீத வசீகரமிருந்தது.இந்த உலகில் அவளைப்போல சந்தோசம் கொண்டாடுபவள் இல்லை என்பது போல, அவளின் ஒவ்வொரு செயல்களும் அமைந்திருக்கும்.நான் இந்த மருத்துவமனைக் கேன்டீனில் இதற்கு முன்புகூட அவளை அவ்வகைப்பாட்டில் பார்த்திருக்கிறேன்.நான் இப்போது வசந்தமுல்லையிடம்,பவித்திராதேவியின் இந்த குணநலன் பற்றி சொன்னபோது அவள் ஒப்புக்கொள்ளாமல், பவித்திராதேவியைக் குறிப்பிட்டு, அவள் ஒரு லூசு என்றபடி நன்றாகச் சிரித்துக்கொண்டாள்.
நான் வசந்தமுல்லை கல்நெஞ்சக்காரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
பவித்திராதேவி பத்து ஆணுக்கு நிகராக இந்த கேன்டீனை நடத்துகிறாள்.அதில் எனக்குகூட ஒரு பெண்ணாக கர்வம் இருந்தது.கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் முழுமையான வியாபார நோக்கம் என்றும் சொல்ல முடியாது, அதற்காக சேவை நிலையமும் இல்லை.பவித்திராதேவி இரண்டுக்கும் நடுத்தரத்தில் இதை நடத்திவருவதாக யாராக இருந்தாலும் பார்த்த உடனே புரிந்து கொள்ளலாம்.அங்கு மேலும் சில பெண்கள் வேலை செய்கிறார்கள்.நடுநாயகமாக அதிக ஔிவீச்சுடன் பவித்திராதேவியின் இருப்பு அமைந்திருப்பதால் மற்றவர்கள் இயல்பாகவே மங்கிப்போய் கிடக்கின்றனர்.
குணமும் அன்பும் தனித்துவமானது என்றும் அதை யாரும் வலிந்து தூக்கிச் சுமக்க இயலாது என்றும் "என்னவன்" அடிக்கடிச் சொல்லுவான்.அது நூறு சதம் உண்மைதான்.நான் யோசித்து யோசித்து காபியை பருகி முடித்திருந்தேன்.வசந்தமுல்லையும் அவ்வாறே பருகிக் கொண்டிருந்தாள்.அவளிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன. ஆனால் அவள் பவித்திராதேவியை லூசு என்று சொன்ன பிறகு கேள்விகளை மடக்கிக்கொண்டேன்.
ஆனால் அவள் விடுவதாக இல்லை.
மெல்லமாகக் கேட்டாள்."அம்மாவோடு மூன்று நான்கு நாட்களாக நீதான் இருக்கிறாய்... வேறு யாரும் இங்கு வரவில்லையே..யாருமே அருகில் இல்லையா...
அருகில் நிறைய பேர் இருக்கிறார்கள்.. அதுதான் யாரும் வரவில்லை...குடும்ப அமைப்பு என்பதே... வலுவற்றவர்களின் தலைமீது பாரத்தை ஏற்றுவதுதானே...
"ஒரு கழுதை என்றால் முதுகி்ல்.இரண்டு மாடுகள் என்றால் நுகத்தடியில்.." இதுதானே நியதி...
அடடே.. நீ பரவாயில்லை... நல்ல கவித்துவமாகப் பேசுகிறாயே... இரண்டு மூன்று நாட்களாக நீ இவ்வாறு என்னிடம் பேசியதில்லை... அருமை ...அருமை...
நான் கடைசி சொட்டுக் காபியை உறிந்து எடுத்தேன்.காபியின் அலாதி ருசி அதில்தான் மறைந்துகிடக்கிறது.
வசந்தமுல்லை இல்வாழ்க்கைப் பற்றி மேலும் பேச முயன்ற போது சரியாக தடியை வெட்டிப்போடுவதுபோல பவித்திராதேவி வந்து நின்றாள்.நல்ல போளி சூடாக வந்திருக்கிறது...இருவரும் ஆளுக்கொன்று சாப்பிடுகிறீர்களா...
வேண்டுமென்றால் நாங்கள் சொல்ல மாட்டோமா... உங்களுக்கு மூக்கு கொஞ்சம் நீளம்... நீங்கள் அங்கிருக்கும் போதே அது இங்கு வந்து விடுகிறது.
அவ்வளவுதான் அவள் அப்படியே போய்விட்டாள்.நானும் எழுந்தேன்.நல்ல வேளை நாளை நான் இங்கிருந்து விடைபெற இருக்கிறேன்... இல்லையென்றால் இந்த வசந்த முல்லையோடு சண்டை வந்தாலும் வந்துவிடும் என்று யோசித்துக் கொண்டு காபிக்கான பணத்தை பவித்திராதேவியிடம் கொடுத்துவிட்டு வலிந்துகட்டிய நல்ல பிரகாசமான சிரிப்பை முல்லைக்கு கடத்திவிட்டு, அம்மாவின் அறையை நோக்கிப் படியேறிப் போய்க் கொண்டிருந்தேன்.
நான் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறி இன்றோடு இரண்டு மாதங்களாவது கடந்து போயிருக்கும்.வசந்தமுல்லையின் தொலைபேசி எண் என்னிடமிருக்கிறது. இந்த இரண்டு மாதங்களில் குறைந்தது அறுபது முறையாவது அவளின் அலைபேசி எண்ணை எடுத்துப் பார்த்திருப்பேன். அழைக்கலாமா என்று யோசிப்பேன்.என்ன காரணமோ அழைக்காமல் வைத்துவிடுவேன்.நாளொன்றுக்கு இரண்டு மூன்று முறையாவது அவளின் நினைவு வந்துவிடுகிறது.
"ஒருவரை ஒருவர் புரிவது என்பது அவர்களின் இல்லாமையிலிருக்கிறது...."
நேற்று நான் ஒரு உறுதி பூண்டிருந்தேன் நாளை எப்படியும் வசந்தமுல்லையைப் போனில் தொடர்பு கொண்டு நலன் விசாரித்துவிட வேண்டுமென.என் உறுதிப்பிரகாரம் நான் போனை கையிலெடுத்தபோது அது ஒலித்தது.பாவிமக... அவள்தான் அழைக்கிறாள்.
ஹலோ எப்படி இருக்கீங்க...
ம்ம் நல்லா இருக்கேன்...
இந்த இரண்டு மாசமா உங்கள நினைக்காத நாளில்லை...
சும்மா எதாவது சொல்லணும்ணு சொல்லாதீங்க... போய் ஒரு போன்கூட பண்ணலியே...
சும்மானாலும் கேட்டிருக்கலாம்.சந்தர்பங்களைத் தொலைத்து விடுகிறோம் என்று யோசித்துக் கொண்டே... நீங்களும்தான் என்னிடம் பேசவில்லை... என்று பந்தை திருப்பி உதைத்தேன்.
உண்மைதான்... நானாவது நலம் விசாரித்திருக்கலாம்... ஸாரி ஸாரி ஸாரி
அய்யய்யோ என்ன ஸாரி... சரி விடுங்கள் ... அப்பா எப்படி இருக்கிறார்
அப்பா இல்லை... இறந்துவிட்டார்...
எப்போ...
நீங்கள் மருத்துவமனையிலிருந்து போன மறுநாள் காலையில்...
எனக்குப் பதட்டமாகி விட்டது.ஏன் என்னிடம் சொல்லவில்லை...
சரி அதையெல்லாம் விடுங்கள்... நான் ஒரு வேலையாக உங்கள் சிறுநகரத்துக்கு வந்திருக்கிறேன்.இன்று மாலை வரை இங்குதான், நேரமிருந்தால் வாங்க ஒரு காபி சாப்பிடலாம்... ஆனால் காபி பவித்திராதேவி அம்மாவுடைய காபியைப் போல இருக்க வேண்டும்..
சந்திக்கலாம் ... வருகிறேன்.. பவித்திராதேவியின் காபியைவிட ஐந்துமடங்கு சுவைகூடிய காபி இங்கு கிடைக்கும்...
அப்படியா... என்னால் நம்ப முடியவில்லை... இந்த உலகின் தலைசிறந்த காபியை பவித்திராதேவி போல யாரும் போட முடியாது...
அன்று மருத்துவமனைக் கேன்டீனில் வைத்து அவங்களை லூசு என்றீர்கள்...
அது எனக்கு மட்டுமேயான அன்பின் சொல்... லூசு என்றால் சாமி என்றும் ஒரு அர்த்தம் உள்ளது...
பவித்திராதேவி சாமியா..
ஆமாம்... தேவி என்று இருக்கிறதல்லவா...சரி வாங்க சந்திக்கலாம்.
சூரியன் இன்னும் முழுமையாக மறையாத பொழுது.கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு காபிஷாப்பின் எதிர் எதிர் இருக்கையில் நானும் வசந்தமுல்லையும் அமர்ந்திருந்தோம்.அப்பாவின் இல்லாமைக் குறித்த துயரப்பகிர்தலுக்குப் பிறகு, அவரின் வருகையின் அவசியம் வந்த வேலையின் முழுமையான நிறைவு என எல்லாம் பட்டென சொல்லிவிட்டு புன்னகையாய் பார்த்த வசந்தமுல்லையிடம் எப்படி போகிறது வாழ்க்கை என்றதும்...
அருமையாகப் போகிறது என்றார்.காபி வந்துவிட்டது.சூடாக ஒரு மிடறு பருகிக்கொண்டே, ம்ம் பரவாயில்லை ஆனாலும் பவித்திராதேவி அம்மாவுடையது போல வரவில்லை.சற்று கீழேதான்.என்று சிரித்தார்.
அப்பாவுடைய இழப்பு வலி நிறைந்தது...
அப்படியெல்லாம் இல்லை... மரணம் ஒரு அர்த்தத்தில் விடுதலைதான்... அப்பா மனதளவில் மரணித்து நீண்ட காலமாகிவிட்டது... எனவே அது ஒரு பொருட்டல்ல...
எப்படி நீங்கள் எல்லாவற்றையும் பட்டென கடந்துவிடுகிறீர்கள்... நானெல்லாம் நானூறு துண்டுகளாக ஒன்றுக்கு உடைந்து போகிறேன்.உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும்..
உங்கள் குடும்பம் பற்றி?..
எனக்கு கல்யாணமாகவில்லை...
இரண்டு குழந்தைகள் இருப்பதாகச் சொன்னீர்கள்...
ஆமாம், இப்போது மூன்று....
புரியாமல் பார்த்தேன்.வசந்தமுல்லை என்னை கேலி செய்வதைப்போல காபி பருகிக் கொண்டே "அப்படியெல்லாம் குழப்பமாக பார்க்காதீர்கள்... நான் மூன்று குழந்தைகளை வளர்க்கிறேன்..."அவ்வளவுதான்.அப்பாவின் பூர்வீகச் சொத்து இந்தப் பகுதியில் இருந்தது அதை இன்று விற்றுக் காசாக்கிக் கொண்டோம்...
கொண்டோம் என்றால் கூட ஆட்கள் இருக்கிறார்களா...
இல்லை.... யாருமில்லை... யாரேனும் பெண்பிள்ளைகள் படிக்க உதவி தேவைப்பட்டால்... தேவை என்றால் எனக்கு தகவல் சொல்லுங்கள் என்றாள்.
நான் ரொம்பவும் குழப்பமாக இருந்தேன்.எனக்கு வசந்தமுல்லை அச்சமூட்டுபவளாகத் தோன்றினாள்.பிறகு எனது முக்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தமுல்லை மனதை வாசித்துவிட்டவளைப்போல சரளமாகப் பேசத்துவங்கினாள்.
வசந்தமுல்லைக்கு நாலு வயது வசந்தமுல்லையின் அக்காவுக்கு பதினாலு வயது என்பதால் அக்கா ஒரு அம்மாவாக உருமாறுகிறாள்.அவள் அப்பாவுக்கு வணிகம்.வணிகம் என்றால் பணம் கொடுத்து பணம் பெறுவது.செழிப்பான வாழ்க்கை. அவள் அப்பா சொல்லுவார் மனிதர்களில் மோசமானவர்கள் என்று தனியாக யாரும் இருப்பதாகத் தெரியவில்லை, சூழல்தான் பலவற்றையும் தீர்மானித்துவிடும் என்பதால், அவர் எல்லாவற்றிலும் சூழலைக் கணக்குகூட்டிப் பார்த்துவிடுவார்.
வசந்தமுல்லையின் அம்மாவின் உறவினருக்கு பெருந்தொகை கடனாகக் கொடுக்கப்பட்டிருந்தது.அவற்றின் மீதான இயல்பான வரவு செலவுகள் சுமூகமாக நடந்தேறிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு கடினம் வந்து சேர்ந்தது.அந்த உறவினர் சொன்னபடி தர்மம் பாலிக்க இயலாமல் திடீரென தினறத்துவங்கினார்.அவருக்கு நிலபுலன்கள் இருந்தது ஆனால் பணம் திரும்ப வராமல் காலதாமதமாகுவதை முன்னிட்டு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டைகள் தொடர்ந்த வண்ணமிருந்தன.ஓயாத சண்டை இயல்பு வாழ்க்கையை இல்லாமலாக்கியிருந்தது.அப்பாவுக்கு தனது சூழ்நிலைக் கணக்கு தோற்றுப் போவதைத் தாங்க இயலவில்லை.பணத்தை வாங்கிக் கொண்டு வந்தால் வீட்டுக்கு வா.. இல்லை என்றால் உன் பிள்ளைகளோடு வெளியேறிவிடு என்று அப்பா, அம்மாவையும் பிள்ளைகளையும் துரத்திவிட்டார்.
பலமுறைக் கேட்டுக் கேட்டு கிடைக்காத வேதனையில் அம்மா மண்ணெண்ணெய் நிரம்பிய ஒரு கேனையும் எடுத்துக் கொண்டு, தனது இரண்டு பெண்மக்களையும் இழுத்துக் கொண்டு, அந்த உறவினர் வீட்டுக்கு முன்னால் போய் நின்றாள்.வாங்கிய பணம் தரவில்லை என்றால் இங்கேயே நானும் பிள்ளைகளும் சாகப்போவதாகச் சொன்னாள்.அம்மா நடிப்பதாக அந்த உறவினர் கதவைத் தாழிட்டுக் கொண்டார்.உண்மையில் அம்மா அவரை பயமுறுத்தவே விரும்பினாள்.ஆனால் எல்லாம் கைமீறியது.ஆவேசமாக அம்மா மண்ணெண்ணையை என் தலையிலும், அம்மாவின் தலையிலுமாக விட்டுக் கொண்டு நெருப்பை பொருத்திய அந்த நொடியில், அக்கா என்னை இழுத்துக் கொள்ள, எங்கள் கண்களின் முன்னமே அம்மா இறந்து போனாள்.
இப்படியாகும் என்று எதிர்பார்த்திராத அப்பா கதறியபடி, எங்களோடு இங்கிருந்து போனார்.எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு எங்களுக்காகவே வாழ்ந்தார்.
வசந்தமுல்லை ஒரு கதை போலவும், சிலஇடைவெளிகளில் ஒரு செய்தி போலவும் பேசிக்கொண்டிருந்தாள்.நான் சலனமற்று அமர்ந்திருந்தேன்.அவள் அப்போது கதை அருமையாக இருக்கிறதா? என்று கேள்வியாகக் கேட்டாள்.நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
அப்பா எனக்கொரு கல்யாணம் பண்ணி வைக்க ரொம்பவும் விரும்பினார்.நான் அப்போது விருப்பப்படவில்லை.நான் கல்யாணப்பருவத்தைக் கடந்து வந்துவிட்டேன்.அப்பாவின் மரணத்துக்குப் பிறகு ஒரு கல்யாணம் பண்ணினால் நல்லதுதான் என்று தோன்றுகிறது.
வசந்தமுல்லை சத்தமாகச் சிரித்தாள்.ஆனாலும் அது நல்லதா என்று தெரியவில்லை.உண்மையில் நான் இன்று உங்களை இங்கு சந்திக்க விரும்பியது இதைப்பற்றி ஒரு ஒப்பீனியன் கேட்பதற்குத்தான்...
எனக்கு மலைப்பாக இருந்தது.உண்மையாகவா சொல்கிறீர்கள்... என் ஒப்பீனியன் பிரகாரம் நடப்பீர்களா என்ன...
ம்ம் நடக்கலாம் என்றுதான்... ஆலோசனை கேட்கிறேன்...
வாழ்வில் இப்படியான தருணத்தை நான் ஒரு போதும் சந்தித்ததில்லை.வசந்தமுல்லைக்கு நாற்பது வயதுக்கு மேலாக இருக்கும்.அவர் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வெட்கப்படுகிறார்.
உங்கள் வெட்கம் அருமையாக இருக்கிறது என்றேன்.மரணம் வரையிலும் நமக்கு வாழ்வு உண்டுதானே... நீங்கள் விரும்பியவாறு வாழ்ந்துவிடுங்கள்.உங்கள் அக்காவின் துணை இப்போது உங்களுக்கு இருக்கிறதுதானே...
ஆமாம் ஆமாம்... அவர்களிடம் பேச வேண்டும்... நீங்கள் இதை அவர்களிடம் பேசினால் அருமையாக இருக்கும்...
ம்ம் பேசலாம்... எங்கே இருக்கிறார்கள் சொல்லுங்கள்... நேராகவே வந்து விடுகிறேன்.
உங்களுக்குத் தெரியும் கேன்டீனில் இருக்கிறார்களே... பவித்திராதேவி அம்மா.
எனக்கு காபியின் கடைசி சொட்டு அவ்வளவு இனிமையானதாக இருக்கிறது.வசந்தமுல்லை திடிரென ஒரு குழந்தையைப் போல நாணி, என்முன்னே அமர்ந்திருக்கிறாள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உறுதிமொழிக் கடிதம்
இந்தக் கதையை நான் வேறு எந்த அச்சு இதழுக்கோ,இணைய இதழுக்கோ அனுப்பவில்லை. இது எனது சொந்த படைப்புதான் என்பதை உறுதியளிக்கிறேன்.
-அம்முராகவ்
31.03.2023
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்