logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ஸ்ரீவாரி மஞ்சு

சிறுகதை வரிசை எண் # 33


வாடகைத் தாய்..... கனத்துப் போன மார்பில் கசிந்துக் கொண்டிருக்கும் பாலை காரை உதிர்ந்த சுவர் மீது பீச்சியதில் கொஞ்சம் கனம் குறைய.... காலை நீட்டி சுருக்கென வலிக்கும் அடிவயிற்றை நீவுகிறாள் மெதுவாக சிவகாமி... கனத்த வயிற்றில் கத்தி கீறிய தழும்பு.... சுருகென வலிக்கிறது அவளுக்கு... மூடிய கண்ணில் வந்து நின்றது அவளது பாரம் சுமந்த வயிறு.... குடித்துக்குடித்து குடலையும் கதற விடும் புருசன் சுந்தர்..... கம்பிகட்டும் வேலைக்கு ஒரு நாள் போனால் ....மீண்டும் ஆறு நாளைக்கு வேலைக்குப் போகாதவன்.... ரொம்ப வருட குடியில் எழுந்து கொள்ளாத நரம்புகளுக்காக... அவளை ஊரில் இருக்கும் அத்தனை ஆம்பளை களுக்கும் மாப்பிள்ளையாக்குவான்... பொண்டாட்டி சம்பாத்தியத்தில் மீசையை முறுக்கித் திரிபவன்.... அவன் செய்த ஏதோ புண்ணியத்தில்.... வீரியமான ஒருத்துளியில் ஜனித்தது ஒரே ஒரு ஆண் குழந்தை.... ஐந்து வயசு ரூபன்... புருசனின் நயந்த பேச்சில் மயங்கி... தன்னை வாழ வைப்பானென நம்பி ஒரு லட்சம் சொச்சம் வட்டிக்கு வாங்கி தந்தப்பணம் குட்டி போட்டு நிக்குது.... ஒவ்வொரு விடியலும் வட்டியின் கூறு போடும் வார்த்தைகளுக்காகவே நடுங்கி ஓடுகிறாள் அர்த்தநாரியாய் சிவகாமி.... அவளுக்குள் தொலைந்த சந்தோசத்தை பல வருடமாய் தேடுகிறாள்..... அந்த தெருவின் கடைக்கோடியில் இருக்கும் நர்ஸ் பாப்பாத்தி.... இவள் கண்ணீரை தரையில் இறங்காமல்...அவ்வப்போது பார்த்துக் கொள்வாள்.... தரையிறங்காத கண்ணீர் செந்நீராக பாட்டிலில் இறக்கி கொடுத்து... அவள் கொடுக்கும் பணத்தை அகமகிழ வாங்கிக் கொள்ளுவாள்..... அவளின் வீரியமான கருமுட்டைக்கும் வரவேற்பு அதிகமாகவே இருந்தது.... இந்த வாய்ப்பு அவ்வப்போது கிடைக்கும் மட்டன் பிரியாணிபோல் ..... ட்ரிங்...ட்ரிங்கென.... அலறியது கைப்பேசி .... ரணமாய் வலிக்கும் உடலோடு தூக்கத்திற்கு மல்லுகட்டிக் கொண்டிருந்த சிவகாமி கைப்பேசியை எடுத்து.... ஹலோ.... பாப்பாத்தியக்கா பேசுறேன் பா... சொல்லுங்க அக்கா.... உன் கிட்ட கொஞ்சம் பேசனும்... உன் கஸ்டமெல்லாம் இதோடு தீர்ந்திடும்.... என்னானு சொல்லுங்க அக்கா... போனில் வேணா காலைல நேர்ல வா... விபரம் சொல்றேன்..... சரிங்க அக்காவென கைப்பேசியை அணைத்தவள் அலுப்பில் அப்படியே உறங்கிப் போனாள்.... முகத்த பார்த்தாலே எரிந்து விழும் மாமியாருக்கு அவள் பெற்ற பிள்ளை மட்டும் வெல்லக்கட்டி..... மாமியார் வசம் குழந்தையை விட்டுவிட்டு துள்ளும் நடையில் பாப்பாத்தியக்காவை பார்த்து பேசிவிட்டு வரனும்னு கிளம்பினாள்.... உட்காரு சிவகாமி... ஏஜெண்ட் வடிவேலு தெரியும்ல... ம்ம்...தெரியும் கா... நேத்து என்னை பாத்து ஒரு விபரம் சொன்னாரு... ரொம்ப வருடமாய் குழந்தையில்லா ஒரு தம்பதியாம்... அந்த பொண்ணுக்கு கர்ப்பப்பைல குறைபாடு ... அவுங்க வீட்டுக்காரர் விந்தணுவையெடுத்து உன் கருமுட்டையில் சேர்த்து உன் கருப்பையில் வளர விடுவாங்க... ஒன்பதாம் மாதம் வளர்ச்சியை பார்த்து.... சிசேரியன் பண்ணி குழந்தையை எடுத்துடுவாங்க... அவ்ளோதா.. நான்காம் மாச துவக்கத்திலேயே... காப்பகத்திற்கு போய்டனும்... குழந்தையை பெத்து கொடுத்துட்டு வந்துடலாம்.... ஒரு குழந்தைக்கு மூனுலட்சம் தருவாங்க.... சொல்லிக்கொண்டே இருக்கும் பாப்பாத்தியக்காவை வெளிரிய முகத்தோடு பார்த்தாள் சிவகாமி..... இது தப்பான விசயம் இல்லை உன்னால் ஒரு குடும்பம் மகிழும்...தளைக்கும் யோசியெனச்சொல்லி நகர்ந்தாள்.... மூனு லட்சத்தில் முப்பதாயிரம் கனவுகள் கண்ணில் மின்னிப் போனது சிவகாமிக்கு... நீண்டு கிடக்கும் வட்டிக்காரனின் கரத்தை ஒடுக்குவதும்... மகனின் எதிர்காலத்துக்கு சின்ன ஒரு சேமிப்பென... குழப்ப குட்டையானது மனது... சுந்தரிடம் விபரத்தை சொல்ல.... அப்படியொன்றும் நீ சம்பாத்தியம் செய்து கிழிக்க வேணாம்... எனக்கு கேவலமென போதையில் வார்த்தை வாந்தியெடுத்தவன்... நேற்று தெளிவில் உத்தமனாய் பேசியது வேறு கதை... கத்துபவன் கத்தட்டுமென தீர்க்கமான முடிவோடு கிளம்பினாள் ஏஜெண்டைப் பார்க்க.... ஏஜெண்ட் வடிவேலு ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றான் சிவகாமியை.... எடுத்த எல்லா டெஸ்டிலும் முதன்மை மார்க் பெற்றதால்... வெற்றி கரமாக முகம் தெரியா ஒருவனின் விந்தை அவள் கரு முட்டையில் இணைத்து ஒரு வித்தை அவள் கருப்பையினுள் விதைத்தார்கள்..... பல லட்சம் செலவு செய்து விதைக்கப்பட்டுள்ளது... கவனமாக பார்த்துக்கொள்ளனும்... நான்காம் மாசம் துவங்கியதும் எங்கள் காபகத்திற்கு வந்துவிட வேண்டும்.... ஒன்பதாம் மாசம் ஆப்ரேஷன் செய்து எடுத்து விடலாம் ... நீங்கள் எந்தவிதமான உரிமையையும் கேட்க கூடாது.... மாதா மாதம் வீட்டுச் செலவுக்கு ஐந்தாயிரம் அனுப்பிடுவோம்... மீதி பணத்தை குழந்தையை பெற்று கொடுத்த பின் வாங்கிக்கலாம்.... ஒப்பந்த கையெழுத்து போடுங்களென நோட்டை நீட்ட கையெழுத்தை போட்டாள்.... அத்தை உங்க பேரனை நாலு மாசம் பார்த்துக்குங்க... தோடு ஒன்னு கேட்டிங்கல்ல வாங்கித்தரேனு சம்மதிக்க வைத்தாலும்... புருசனின் வாந்திப் பேச்சால் அக்கம் பக்கம் அவளை வித்தியாச ஜந்துவாக பார்த்தது.... இந்த பொழப்புக்கு வேசிப் பொழப்பு எவ்வளவோ மேலனு போறப்போக்கில் ஜாடை பேசியது .....கிழவிகள்..... செவிகளில் கண்ணீர் பூத்தது சிவகாமிக்கு...... காப்பகம் செல்ல தயாரானாள் சிவகாமி..... நான்காம் மாதம்..... வாழ்வில் கிடைக்காத ராஜ உபசாரமாய்... கண்ணில் காணாத பழங்களும்.... சூப்புகளும்... ஆட்டுகறி...முட்டை.... பருப்புகளுமாக நாளும் பொழுதும் உள்ளங் கையில் தாங்கினார்கள்.... படுக்கையை விட்டு அசைந்தால் கூட அதிராமல் அசையனும்.... தன் கருமுட்டையில் தன் கர்ப்பப் பையில் தான் மென்று முழுங்கும் எச்சிலில் வளரும் குழந்தை குறையின்றி பெத்து தந்திடனுமென்று உருகிப் போனாள் சிவகாமி..... நாட்கள் நகர நகர........ எல்லாம் அறிந்தும் குறு குறுவென அடிவயிற்று நரம்புகள் அறிப்பெடுக்கும் பொழுதும்... பருத்த மார்பில் பால் கசியும் பொழுதெல்லாம் கண்ணில் நீர்கசியும்...... இதில் ஒரு துளியைக்கூட சுமக்கும் பிள்ளை ருசிக்கப் போவதில்லையே என... தளர் நடையில் தொடைகள் உரச.... அங்கும் இங்குமாய் உதைத்து உருளும் அந்த பூப்பந்து கருவறையைத் தடவும் நொடிகளெல்லாம்..... தன்னிச்சையாய் கைகள் அடி வயிற்றைத் தழுவிக்கொண்டு ஆனந்தித்தது.... காலத்தை கணித்து நாளொன்றை கழித்துக்கொண்டிருக்கும் காலண்டர் மேல் கோபம் கொண்டாள் அவள்.... பெருத்த வயிற்றின் பாரம் இறக்கும் நேரம் நெருங்க நெருங்க.... இறுக்கமாய் அடிவயிற்றை கட்டிக்கொண்டது கைகள்.... புரண்டு புரண்டு உதைக்கும் உதையை மனப்பூர்வமாய் சுவாசித்துக் கொண்டாள்.... பாரம் இறங்கிட வேண்டாமென போராடும் மனசோட.... பூ முகத்தையும் காட்டாமல்.... பிஞ்சு விரல் தடவிய கர்ப்பச்சுவரின் தடங்களை மட்டுமே விட்டுச் செல்லப் போகும் அதன்மேலான பாசப் போராட்டத்தில் தவித்தவள்.... நாளை தொப்புள் கொடி அறுக்கும் நாள் பரிதவித்தது இதயம்.... தூக்கம் வராத விடியலில் அவள் விழித்துக் கிடக்க.... அடிவயிறு புடைப்பது போல் முண்டியது ..... ஏதோ சம்பாஷணைக்கான ஓசைக் குறிப்போ..... இவளைப் போலவே குழந்தையும் தூங்காமல் கிடக்க.... பொங்கும் ஆவலில் வயிறைத் தடவி முத்தமிட்டாள்.... துளிர்த்த விழி நீர் அவள் வயிற்றில் வழிந்தோட... நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும் என் செல்லமே... மீண்டும் ஒரு முறை முத்தமிட்டு ..... பிரசவ அறை நோக்கினாள்.... சுகப்பிரசவம் செய்த அவளின் வயிற்றில் ..... கத்தி கொண்டு கிழித்து குழந்தையையும் அவள் தொப்புள் கொடி பந்தத்தையும்... அறுத்தெடுத்தார்கள்.... மயக்கம் தெளிந்தவள் பாரம் குறைந்துப்போன வயிற்றில்... சுள்ளென்று வலி தெரிய மெதுவாக வயிற்றை நீவியவளின் கண் அவளை கேளாமலே கண்ணீரை தரையிறக்கியது.... தன்னிச்சையாய் கைகள் இடப்புறமும் வலப்புறமும் அந்தரத்தில் அசையும் பிஞ்சு கைகால்களை தேடியது.... கனம் கூடிப்போன மார்பும் கண்ணீராய் கசிந்தது.... உணர்வுக்கு வந்தவள் மாறி மாறி வந்த செவிலியர்களிடம்... சிஸ்டர்...ஒரே ஒரு தடவை அந்த குழந்தை முகத்தை காட்டுங்களேன்... கெஞ்சினாள்..... காசுக்காகதானே பிள்ளை பெத்துக்க வந்த.... இத்தனை கரிசனம் எதுக்கு உனக்கு.... உன் வேலை முடிஞ்சுது இரண்டு நாட்கள் உனக்கு உன் உடம்பை பார்த்துக் கொள்ள அனுமதி... அமைதியாய் இருந்துவிட்டு கிளம்பென சொன்னாள் செவிலியரில் முதிர்ந்தவள்.... கடமையை முடித்து கொடுத்தவள்... தளர் நடையில் நான்கு மாதம் கழித்து வீட்டின் படியேற.... வாடி...வாடியென் செல்லம் மச்சானுக்கு நாலுமாசமா ராஜ வாழ்க்கைதான்டீ... இந்த தொழிலு நல்லாருக்குடி... மறுபடியும் வயித்த எப்போ நிறைப்பாங்கனு கேளு..... சிறகின்றி பறந்து கொண்டிருந்தான் போதையில்..... சட்டென்று கைப்பையை பிடிங்கியவன்... பணக்கட்டில் இருந்து ஐநூறு ரூபாய்தாள் இரண்டை உருவியவன் கால்கள் டாஸ்மாக் கடை நோக்க... ஓடி வந்து கட்டிப்பிடித்த அவள் மகன் இந்த பேப்பரில் கப்பல் செஞ்சு குடுமாவென ஒரு ஐந்நூறு ரூபாய் தாளை உருவ.... எப்போ தோடு வாங்க போகலாமென .... அவளை மேலும் கீழுமாக நோட்டமிட்டாள் மாமியார்...... வாசலில் முகமெல்லாம் பல்லாய் நின்றான் வட்டிக்கடைக்காரன் ..... வலது கையில் வாங்கி இடது கை மாறும் முன்... கைமாறியது பணக் கட்டுகள்.... நல்ல தொழில்தான் போல நக்கலாய் பேசிச்சென்றது வட்டிக் காசு.... பெருங் கூட்டமொன்று ஆவலாய் நின்றது வாசலில் அவளின் வாடகைக்கு விட்ட கர்ப்பபையை விசாரிக்க..... ரணம் கூடிப்போன அவளின் மார்பு திசுக்களில் கசிந்து வெளியேறி முறிந்த பால்.... அவளது தொப்புளை நனைக்க..... பாலுக்காக என் முகம் தெரியா குழந்தையும் ஏங்குமோ... கனத்துப் போனது மார்புகள் மட்டுமல்ல அவளது நெஞ்சாங்கூடும்..... ஸ்ரீவாரி மஞ்சு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in