logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சுஜய் ரகு

சிறுகதை வரிசை எண் # 332


சிக்னல் சிக்னல் நெருங்க நெருங்க பவித்திரனுக்கு உள்ளூர பதற்றம் பெருக்கெடுத்தது. உடல் நடுங்கத் தொடங்கியதை உணர்ந்தவனின் கரங்கள் அப்பாவின் இடுப்பை மேலும் இறுகப் பற்றிக்கொண்டன. கதிரேசன் புரிந்துகொண்டான். சிக்னல் நெருங்க நெருங்க பவித்திரனுக்குள் உண்டான பதற்றமும் நடுக்கமும் இன்னதென.அந்த நாற்சந்தி சிக்னல் காலை வெயிலை சுள்ளென்று வீசியபபடி பரபரத்திருந்தது. பவித்திரன் கண்களை இறுக மூடிக்கொண்டான். வாகன இரைச்சல் காதிற் பிளந்தது. வண்டி நகர்வதுபோல இருந்தாலும் சிக்னலைத் தாண்டவில்லை என்பதாகவே உள்ளுணர்வுக்குப்பட்டது. பள்ளியின் அகன்ற நுழைவாயிலுக்குள் வண்டி நுழைந்தபிறகும்கூட அவன் கண்களைத்திறக்கவேயில்லை.வண்டி நின்றபிறகு கதிரேசன்தான் உசுப்பினான். கண்களைத் திறந்தபோது ஒரு கணம் பூமி சுழன்று தள்ளாடி நின்றது. இரு சக்கர வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு வந்த கதிரேசன் பவித்திரனை ஆசுவாசிக்க முயற்சிப்பதுபோல முகத்தைப் பற்றி நெற்றியில் முத்தத்தை ஆழப்பதித்தான். பவித்திரனுக்கு அந்த கணத்தில் அது தேவையாகவும் தணிந்துகொள்ள ஏதுவாகவும் இருந்தது. நா தளுதளுக்க "அப்பா.." என்றான் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பள்ளி என்பதால் வந்த அழுகை தொண்டையோடு இருத்தி விழுங்கிக்கொண்டான். வகுப்பறைக்குள் நுழைந்தபோது சக மாணாக்கர்கள் எல்லோரும் அவனை சூழ்ந்துகொண்டு அவரவர்க்குத் தெரிந்த மொழிகளில் ஆற்றுப்படுத்தினர். ரகு மட்டும் வரவில்லை அவன் தூரத்தில் இருந்தபடியே நடக்கின்றதைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் இருவரது கண்களும் கூட்டத்தை விலக்கி சந்தித்துக்கொண்டன. ரகுவின் ஆறுதலலைத்தான் பவித்திரனின் மனம் பெரிதாய் வேண்டி நின்றது. ரகுவும் அதனை உணராமலில்லை. வகுப்பு ஆசிரியை நுழைந்தபோது எல்லோரும் விலகி அவரவர் இருக்கைக்கு ஓடினார்கள். பவித்திரன் இரண்டு எட்டு வைப்பதற்குள் ஆசிரியை அவனை நெருங்கி வந்துவிட்டாள். ஒரு "ஹக்" கொடுத்து அவன் தலையை வருடிவிட்டாள்.அந்தப் பிரபல தனியார் பள்ளியில் பவித்திரன் இரண்டரை வயதில் வந்து "ஃபிரி கேஜி"யில்சேர்ந்தான் இன்றைக்கு ஆறாம் வகுப்பு படிக்கிறான். இத்தனை காலத்தில் எந்த மிஸ்ஸிடமும் இப்படியொரு "ஹக்"ஐ வருடலை அவன் பெற்றதில்லை. இருந்த கொஞ்ச நடுக்கமும் அந்த நொடிப்பொழுதில் கரைந்தோடி மனதை இலகுவாக்கியது. மதிய உணவு வேளையில் வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்ததது. ரகுவும பவித்திரனும் மரத்தடியில் உட்கார்ந்திருந்தனர். சில மணித்துளிகள் மௌனமாகக் கடந்தன. இருவரும் கொண்டு வந்த மதிய உணவு டிபன் கேரியரில் அப்படியே இருந்தது. சாப்பிடுவதுபோல பாவனை செய்துவிட்டு மூடி வைத்திருந்தனர். பவித்திரனின் தோளைப் பற்றி தன் தோளோடு சாய்த்துக்கொண்டான் ரகு. "பவித்ரா உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியலடா .....விபத்துல உங்கம்மா இறந்த அன்னிக்கு நான் உன்கூட வரமுடியல. என்னை மன்னிச்சுடுடா...அந்தன்னைக்கு மதியத்துக்கு மேல பள்ளிக்கூடம் லீவு விட்டுட்டாங்க. நான் எங்கப்பாட்ட போலாம்ப்பான்னு எவ்வளவோ சொன்னேன். "அவங்கம்மாவ ஆஸ்பத்திரியிலிருந்து கொண்டு வர்ரதுக்கே நைட் ஆயிடும். நீ வேணாம் இங்கயே இரு நான் போய்ப் பார்த்துட்டு வர்ரேனுட்டாரு. நான் என்னடா பண்ணமுடியும் ... தோளில் சாய்ந்தபடி பவித்திரன் தேம்பிக்கொண்டிருந்தான். கண்ணீர்த்துளிகள் கதகதப்போடு ரகு வின் தோளில் இறங்கி விரவின. ரகுவின் கண்களிலும் நீர்கோர்த்துக்கொண்டன. "அந்தன்னைக்கு அம்மா லீவு போடறயாச் செல்லம் அம்மாவுக்கு வெளில போக வேண்டிய வேல இருக்கு. எங்கூட நீ வந்தா எனக்கு போய்ட்டு வர அலுப்பு தெரியாது . ஜாலியா பேசிட்டே போலாம். அப்பா வரலைன்னு சொல்லிட்டாருன்னு ரொம்ப கேட்டாங்க ....நான் தான் அடம்புடுச்சு ஸ்கூலுக்கு வந்தேன். என்னை பள்ளிக்கூடத்தில விட்ட பத்தாவது நிமிசத்துல அம்மா ஆக்ஸிடென்னு தகவல் வருது. அந்த சிக்னல்ல திரும்பும்போது வேகமா வந்த ஒரு பஸ் அடிச்சுடுச்சு .....அம்மாவுக்காக அன்னைக்கு நான் லீவு போட்டிருந்தேன்னா ....இன்னைக்கு அம்மா உயிரோட இருந்திருப்பாங்க ...நான் தான் தப்பு பண்ணிட்டேன் .... காற்றில் நடுங்கி இறங்கியது பவித்திரனின் குரல் .. ஓடிவிட்டது காலம். இப்போது பவித்திரன் நகரின் பிரரதான வீதியில் குழந்தைகளோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறான். ரகு எங்கே இருக்கிறான் என்ன செய்கிறான் போன்ற எந்தத் தகவலும் இல்லை. கல்யாணத்திற்கு அழைப்பதற்காக வீடு தேடிப் போனபோது வீடு பூட்டிக்கிடந்தது. பல. நாட்களாகப் பூட்டியே கிடக்கிறதென அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது.ரகுவின் குடும்பத்தைக் குறித்த எந்தத் தகவலும் யாருக்குமே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பவித்திரன் தேடிப்போய் விசாரிப்பதையே நிறுத்திக்கொண்டான். கடைசியாக கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போது பவித்திரனைத் தேடி ரகு அவனின் கல்லூரிக்கே வந்திருந்தான். தேகம் மெலிந்து நோய்வாய்ப் பட்டவனைப்போல இருந்த ரகுவைக்கண்டு பவித்திரன் அதிர்ச்சியில் உறைந்துபோனான். "டேய் ....என்னடா ஆச்சு ஏன் இப்படி இருக்க....என்று பவித்திரன் கேட்டபோது நோய்வாய்ப்பட்டு அம்மாவும் அப்பாவும் கொரோனாவுக்குப் பலியாகிவிட்டதாக ரகு சொன்னான். மேலும் ஊரடங்கு தொடர்ந்து இருந்ததால உனக்குத் தகவல் தெரிவிக்க முடியவில்லை என்றான். என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்டதற்கு ஒரு டீ மட்டும் போதுமென்று டீயை வாங்கி நிதானமாகக் குடித்துவிட்டு விடைபெற்றவன்தான் .மறுபடியும் அவனைப் பார்க்கவே முடியவில்லை.அவ்வப்போது அவனுடைய நினைப்பு வரும். அந்த சிக்னலைக் கடந்துபோக அவன் சைக்கிள் கொஞ்சம் நிதானித்திருந்தால் அவன் மீது மோதாமலிக்கத் திரும்பிய பேருந்தில் அம்மா நசுங்கிப்போயிருக்கமாட்டாள். ஒவ்வொரு தருணமும் ரகுவை பவித்திரன் இப்படித்தான் நினைவுகூறி இருந்திருக்கிறான். தன்னுடைய இளைய மகனுக்கு "ரகு ' பெயர் சூட்டும் அந்தத் தருணத்திலும் கூட. சுஜய் ரகு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.