SUSHI KRISHNAMOORTHI
சிறுகதை வரிசை எண்
# 331
கமுத்திப் போட்ட கரப்பான் பூச்சி
சுசி கிருஷ்ணமூர்த்தி
**********
“அம்மா ! உன் கனவு நினைவாகப் போகிறது – இன்று உன் மகள் சீஃப் ஜெனரல் மேனெஜராகப் பதவி ஏற்கப் போகிறாள். உன் கனவு நிறைவேறப் போவது மட்டுமல்ல – என்னுள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் பழி வாங்கும் நெருப்பும் அணையப் போகிறது”
தாயின் படத்திற்கு மாலை சூட்டிக் கொண்டிருக்கும் பொழுது, சினேகா மனதில் எழுந்த எண்ணங்கள் தான் இவை. மாலையை சூட்டி விட்டு தாயின் படத்தையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த சினேகாவின் கண்கள் கலங்கின. உடனேயே தன்னை சமாளித்துக் கொண்டு, தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் சினேகா.
சினேகா பெண்மையின் நளினமும் ஆண்மையின் கம்பீரமும் ஒருசேர அமைந்த மங்கை. கழுத்து வரை வெட்டி விடப் பட்ட அடர்த்தியான கூந்தலை அலட்சியமாக ஒரு கிளிப் கொண்டு அடக்கியிருந்தாலும், அப்படியும் அடங்க மறுத்து சில முடிகள் அவள் நேற்றியில் வந்து விளையாட, அதை அவள் ஒரு கையால் ஒதுக்கி விடும் அழகே ஒரு தனி ஸ்டைல் .
இது நாள் வரை அந்த நிறுவனத்தின் அமெரிக்கக் கிளையில் ஜெனரல் மேனேஜராக பணியாற்றி வந்த சினேகா, சீஃப் ஜெனரல் மேனேஜராக பதவி உயர்வு கிடைத்தவுடன், அமேரிக்காவிலேயே பணியாற்ற நிறுவனம் அவளுக்கு வாய்ப்பு கொடுத்த பொழுதும், அவள் இந்திய கிளையே வேண்டும் அதுவும் அந்தக் கிளையே வேண்டும் என்று விருப்பப் பட்டு, இன்று பதவி ஏற்கப் போகிறாள்.
சினேகா தன் வீட்டில் பதவி ஏற்கத், தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த அதே நேரம், நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் முகுந்த் முகர்ஜி கேபினில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. கலந்துக் கொண்ட கண்ணன், குல்ஜாரிலால், மஞ்சுநாத் மூவருமே ஜெனரல் மேனேஜர் ஆக இருந்தாலும் சீனியாரிட்டி முறையில், முகுந்த் பேனர்ஜி அந்த நிறுவனத்தின் முதன்மை ஜெனரல் மேனேஜராக இருந்தார். அவர்கள் அனைவருமே சினேகா சீஃப் ஜெனரல் மேனேஜராக அந்த நிறுவனதில் பதவி ஏற்பதை விரும்பாதவர்கள்.
அன்று அவர்கள் சேர்ந்து பேச உட்கார்ந்ததே சீஃப் ஜெனரல் மேனேஜர் சினேகாவிற்கு எந்தக் கேபின் கொடுப்பது என்பதை முடிவு செய்யத் தான். அந்த நிறுவனம் சொந்தக் கட்டிடத்தில் இயங்கியது.கட்டிடத்தின் 10வது மாடியில் தான் அலுவலகத்தின் மிக முக்கிய அதிகாரிகளின் கேபின்கள் இருந்தன.
அந்த 10 வது தளத்தில் அலுவலகத்தில் சீஃப் ஜெனரல் மேனேஜருக்கு ஒரு பெரிய கேபின், மற்றும் ஜெனரல் மேனேஜர்களுக்கான சற்று சிறிய கேபின் களும் அமைக்கப் பட்டிருந்தன. அதுவும் தவிர எல்லா தளத்திலும் இருந்தபடி ஒரு ஆண்கள் கழிப்பறையும் ஒரு பெண்கள் கழிப்பறையும் அமைக்கப் பட்டிருந்தது.
சினேகா வரும் வரை அலுவலக முதன்மை அதிகாரி என்ற முறையில் முகுந்த் முகர்ஜி தான் சீஃப் ஜெனரல் மேனேஜருக்கான அந்த பெரிய கேபினை உபயோகித்து வந்தார். அது மட்டுமல்ல அந்த தளத்தில் அது வரை பெண் அதிகாரி யாரும் இல்லாததால், அவர் மட்டுமே பெண்களுக்கான அந்த கழிப்பறையை தன் பிரத்தியேக சொத்து போல் உபயோகித்து வந்தார். அவர் அலுவலகத்திற்கு வராத நாட்களில் அந்தக் கழிப்பறை பூட்டப் பட்டு இருக்கும்.
பந்தா பேர்வழியான முகுந்த் முகர்ஜி என்ன செய்து சினேகாவை வேறு தளத்தில் உள்ள கேபினை உபயோகிக்கச் செய்யலாம் என்பதைப் பற்றி யோஜிக்கத்தான், மற்ற ஜெனரல் மேனேஜர் மூவரையும் தன் அறைக்கு வரச் செய்திருந்தார். ஆனால்
அந்த ஆலோசனை மேலும் தொடர வேண்டிய அவசியமே இல்லை என்பது போல் வந்தது, தலைமை அலுவலகத்திலிருந்து டைரக்டரின் தொலைபேசி அழைப்பு.
முகுந்த் முகர்ஜியின் வெறுப்பு லிஸ்டில் முதலில் இருக்கும் பெயர் அந்த டைரக்டர் தான். தன்னுடைய அரசியல் செல்வாக்கு அந்த டைரக்டரைப் பொறுத்தவரை செல்லாக்காசு என்பதும் முகுந்த் முகர்ஜிக்கு தெரிந்த விஷயம் தான். அதுவும் தவிர,
அந்த டைரக்டரால் எந்த நேரமும் தன்னை வேறு ஒரு கிளைக்கு மாற்றல் செய்து விட முடியும் என்பதும் முகுந்த் முகர்ஜிக்கு தெரியும். இதே கிளையில் இருப்பது தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதும் முகுந்த முகர்ஜிக்குப் புரிந்திருந்ததால். அந்த டைரக்டரிடம் மிகவும் பவ்யமாகத்தான் பேசுவார். இன்றும் அதேதான்.
ஆனால் டைரக்டர் அவரிடம் தொலைபேசியில் சொன்ன விவரம், ஒரு நிமிடம் அவரை திகைக்க வைத்து விட்டது. டைரக்டர் அவரிடம் சொன்னது இதுதான். “சீஃப் ஜெனரல் மேனேஜர் இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளையில் வேலையில் சேர இருக்கிறார். அதனால் அவருடைய கேபினை தயாராக வைக்க வேண்டும்” என்பதுதான்.
முகுந்த் முகர்ஜிக்கு தெரியாத ஒரு விவரம் என்னவென்றால், அலுவலகத்தில் சினேகாவிற்கு நெருங்கிய ஒரு இடைநிலை ஊழியர் மூலமாக, அங்கு நடக்கும் எல்லா விவரங்களும் சினேகாவிற்கு அறிவிக்கப் படுகிறது என்பது தான்.
சினேகா அந்த டைரக்டரை தொலைபேசியில் கூப்பிட்டு பேசி, தனக்கு தெரிந்த விவரங்களைக் கூறி தனக்கு தன் பதவிக்கு உரித்தான அறை கிடைக்க வேண்டும் என்பதை உறுதிபடக் கூறினாள். ஏற்கெனவே முகுந்த் முகர்ஜியைக் கொஞ்சம் கூட பிடிக்காத அந்த டைரக்டர் உடனே அவரை தொலைபேசியில் கூப்பிட்டு பேசி செய்ய வேண்டியதைக் கண்டிப்பாக கூறினார்.
தொலைபேசியில் பேசும்பொழுது ‘சரி ஸார்” “ பண்ணி விடுகிறேன் ஸார்” என்று மட்டுமே அவர் சொல்லியதால், ஒன்றும் புரியாமல் மற்ற மூவரும் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு மட்டும் அமர்ந்திருந்தனர்.
முகுந்த் முகர்ஜி தொலைபேசியை அதன் இடத்தில் படாரென்று வைத்து விட்டு, அவர்களிடம் “ எல்லாம் முடிந்து விட்டது. பேசிப் பயனில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் மகாராணி வருகிராளாம். அதற்குள் இந்தக் கேபின் அவளுக்காக தயாராக இருக்க வேண்டுமாம்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு, இன்டர்காமில் நிர்வாக அதிகாரியைக் கூப்பிட்டு அந்த கேபினை சீஃப் ஜெனரல் மேனஜருக்கு தயார் செய்யும்படி கூறினார்.
அதே சமயம் பக்கத்தில் காலியாக இருந்த சிறிய கேபினை தனக்குத் தயார் செய்யும்படியும் கூறிவிட்டு கோபமாக அந்த தளத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டார். அந்த நேரத்திலும் முகுந்த் முகர்ஜிக்கு ஒரே ஒரு திருப்திதான். தன்னுடைய கேபினை எடுத்துக் கொண்டாலும், கழிவறை தன் கையை விட்டுப் போகவில்லை என்பது தான் அது. கழிவறை பூட்டப் பட்டு சாவி தன் கையில் இருப்பதால், சினேகா வேறு தளத்தில் உள்ள பெண்கள் கழிவறையைத்தான் உபயோகிப்பாள் என்பது அவர் எண்ணம்.
சிறிது நேரத்தில் இரண்டு கேபினும் தயாராகி விட, அவர் தன்னுடைய புதிய கேபினில் போய் அமர்ந்துக் கொண்டார். அவரால் எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை என்பது தான் உண்மை.
திடுமென்று அவர் எண்ணங்களைக் கலைத்தது பியூனின் குரல். “சார் ! உங்களை மேடம் தன் அறைக்கு உடனே வரும்படி சொன்னார்” என்று கூற, முதலில் ‘மேடம் யார்’ என்று புரியாமல திகைத்த, முகுந்த் முகர்ஜி, சீஃப் ஜெனரல் மேனேஜர் கேபினுக்கு அரை மனதுடன் சென்றார். கதவை திறக்க முயலும் முன்,
“ உள்ளே வாங்க” என்ற கனத்த அதிகாரமான குரல் கேட்க. உள்ளே நுழைந்தார். உள்ளே நுழைந்தவுடன், அவரை உட்காரக்கூட சொல்லாமல் கோபமாக “ எங்கே போய்விட்டீர்கள்? நான் வந்தவுடன் என்னை வந்து பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? “ என்று கேட்டுவிட்டு, அவர் இருப்பதையே மறந்து விட்டது போல், தன் வேலையில் மூழ்கி விட்டாள்.
முகுந்த் முகர்ஜி வெளியில் காட்டிகொள்ளாவிட்டாலும், அவர் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ‘இன்றுதான் புதிதாக வந்த சீஃப் ஜெனரல் மேனேஜர் சினேகாவிற்கு தன் மேல் ஏன் இத்தனை கோபம்? “ என்பதுதான் அது.
அவருடைய மனதில் ஓடிய கேள்விகளுக்கு பதில் சி சொல்வது போல் தான் இருந்தன சினேகாவின் மனதில் அதே நேரம் ஓடிய எண்ணங்கள். ஆம் ! சினேகாவிற்கு முகுந்த் முகர்ஜியை பார்த்தவுடனே அவரை கத்தி எடுத்து அணு அணுவாக வெட்டி சித்திரவதை செய்ய வேண்டும் என்ற ஆக்ரோஷம் தான் வந்தது. அவள் மனம் அவளுடைய இளமை காலத்தை நோக்கி அவளை இழுத்துச் சென்றது.
அவளுடைய 13 வயது வரை அவள், அவள் இல்லை அவன். ஆம்! சுந்தர் பத்மினி தம்பதியரின் செல்லப் பிள்ளை சித்தார்த். படிப்பில், விளையாட்டில் எல்லாவற்றிலும் முதல் என்பதால் அவன் தந்தை சுந்தருக்கு அவன் ரொம்ப செல்லம். எங்கு சென்றாலும் அவனைக் கூட்டிக் கொண்டு சென்று எல்லோரிடமும் அறிமுகப்படுத்துவார். ஆனால் இந்த மகிழ்ச்சிக் கெல்லாம் ஒரு நாள் முடிவு வரும் என்று யார்தான் நினைத்தார்கள்.
13 வயதில் சித்தார்த்தின் நடை உடை பாவனைகள் மாற ஆரம்பித்தன. பெண்கள் போல் நளினமான நடை, பெண்கள் உடை அணிய வேண்டும் என்ற ஆர்வம் இதெல்லாம் அவனை மட்டுமல்ல அவன் பெற்றோரையும் குழப்ப ஆரம்பித்தன. பள்ளியிலும் வெளியிலும் அவன் ஒரு கேலிப் பொருளாக ஆகிவிட்டான். திருநங்கை என்று யாரும் அவனை வேளிப்படையாக சொல்லா விட்டாலும், அவர்கள் அவனை அப்படித்தான் பார்த்தார்கள் என்பது அவர்கள் முகத்திலிருந்து தெரிந்தது.
ஒரு நாள் அவன் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்பொழுது தன் தாயும் தந்தையும் பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டான். உள்ளே நுழைய பயந்துக் கொண்டு வாசலிலேயே நின்றுக் கொண்டு அவன் கேட்டது இதுதான்.
அவன் தந்தை உரத்த குரலில் “ எனக்கு வெளியில் தலை காட்ட முடியவில்லை. எல்லோரும் பரிகாசம் செய்கிறார்கள். நான் அந்த அனாதை ஆஸ்ரம டிரஸ்டியுடன் பேசிவிட்டேன். அவர்கள் அவனை ஆஸ்ரமத்திற்கே திருப்பி அனுப்பி விடும்படி சொல்லி விட்டார்கள். நாம் இந்த வாரம் அவனை அங்கு திருப்பிக் கொண்டு விட்டு விடுவோம். மாசாமாசம் அவன் செலவிற்கு பணம் அனுப்பி விடலாம். அவனும் அங்கே சந்தோஷமாக இருப்பான்” என்று சொல்ல, அவன் தாயார்,
“ இப்படி கத்த வேண்டாம். குழந்தை பள்ளியிலிருந்து வரும் நேரம். இப்படி அனாதை ஆஸ்ரமம் அது இது என்று பேசாதீங்கோ. குழந்தை கேட்டால் குழம்பிக் போய்விடுவான். எப்படி இருந்தாலும் அவன் நம்ம குழந்தை. அவனை எங்கேயும் அனுப்பமுடியாது “ என்று திருப்பிச் சொல்ல, அவன் தந்தை,
“ அவன் வேணுமா ? நான் வேணுமான்னு தீர்மானம் பண்ணிக்கோ” என்று சொல்லி வாசலுக்கு வர, அங்கு சித்தார்த்தைப் பார்த்து ஒரு நிமிடம் திடுக்கிட்டாலும், பிறகு ஒரு வார்த்தை கூட பேசாமல் இறங்கிச் சென்று விட்டார்.
சித்தார்த் உள்ளே நுழைந்தபொழுது அவன் தாயார் கண்ணைத் துடைத்துக்கொண்டு எதுவும் நடக்காதது போல் அவனுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வர உள்ளே சென்றாள்.
சித்தார்திற்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. உள்ளே தன் தாயிடம் சென்று “அம்மா ! உண்மையை சொல்லு. நான் உன் மகன் இல்லையா? அனாதை ஆஸ்ரமத்திலிருந்து என்னைக் கொண்டு வந்தாயா? “ என்று கேட்க அவன் தாயார், உண்மையைச் சொல்ல இதுதான் நேரம் என்று முழு விவரமும் கூறினாள்.
சுந்தர் பத்மினி தம்பதிகளுக்கு 10 வருடங்களாக குழந்தை பிறக்காதலால், அவர்கள் ஒரு ஆஸ்ரமத்திலிருந்து அவன் தத்தெடுத்து தங்கள் மகனாக வளர்த்து வந்தனர். அந்த நேரம் அவர்கள் வேரு ஊரில் இருந்ததால் யாருக்குமே சித்தார்த் அவர்கள் பிள்ளை இல்லை என்ற விவரம் தெரியாது,
எல்லாவற்றையும் கூறிய பத்மினி, சித்தார்த்திடம் இன்னும் ஒன்றும் கூறினாள். “யார் என்ன சொன்னாலும், நீ எப்படி இருந்தாலும் நீ என் குழந்தை. நீ என் கூடத்தான் இருப்பாய்” என்று.
ஆனால் அவன் தந்தையால் அப்படி இருக்க முடியவில்லை. அவர் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். அவன் தாய் தான் அங்கே இங்கே வேலை செய்து அவனைப் படிக்க வைத்தாள்.. படிப்பில் முதல் மாணவனாக இருந்ததால் அவனுக்கு எஞ்சினியரிங்க் காலேஜில் ஸ்காலர்ஷிப்புடன் சீட் கிடைத்துவிட்டது.
காலேஜிலும் அவன் ஒரு கேலிக்குத்தான் ஆளானான். ஆனால் தன் தாய்க்காக அவன் எதையும் கண்டுகொள்ளாமல் படித்தான். ஆனால் காலேஜில் அவனுக்கு ஒரு சங்கடம் இருந்தது. பெண்கள் கழிப்பறைக்கு ஆண் உடையில் செல்ல முடியவில்லை. ஆண்கள் கழிப்பறையிலோ அங்கு இருந்த ரௌடி மாணவர்கள் அவனை கேலி செய்து மனதை வருந்தச் செய்தார்கள்.
நல்ல வேளையாக, காலேஜ் பிரின்சிபால் அவன் நிலைமையைப் புரிந்துக் கொண்டு தன்னுடைய அறையின் உள்ளேயே இருந்த கழிப்பறையை உபயோகப் படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தார்.
அன்று ஒரு நாள் – அவனுடைய துரதிருஷ்டம் – பிரின்சிபால் வேறு ஊருக்கு செல்ல வேண்டி வந்து விட்டது. முக்கியமான பத்திரங்கள் அறையில் இருந்ததால் , அவர் அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார்.
அன்று பார்த்து சித்தார்த்திற்கு அவசரமாக கழிப்பறை உபயோகப் படுத்த வேண்டிய நிலைமை. என்ன ஆனாலும் சரி என்று ஆண்கள் கழிப்பறைக்குச் சென்றான். அங்கு அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இதே முகுந்த முகர்ஜி கழிப்பறையில் கை கழுவிக் கொண்டு இருந்தான்.
சித்தார்த்தைப் பார்த்தவுடன் “ நீ பெண்கள் கழிப்பறைக்கு போ – இது ஆண்கள் கழிப்பறை” என்று சொல்லி அவ்னை வெளியில் தள்ள, கூட இருந்த மற்ற மாணவர்கள் மற்றும் சில மாணவிகள் அவனைப் பார்த்து கேலியாக சிரிக்க, சித்தார்த்துக்கு அந்த நிமிடம் தற்கொலை செய்து கொண்டு விடலாமா என்று கூட தோன்றியது.
அப்படியே தன் பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். தாயைப் பார்த்ததும் துக்கம் தாங்காமல் கதறி அழத் தொடங்கிய அவனை அவன் தாய் தேற்றி, “ யார் என்ன சொன்னால் என்ன? உன்னிடம் படிப்பு இருக்கிறது. படித்து நல்ல வேலை தேடிக் கொண்டு வெளிநாடு சென்று விடு. அங்கே போய் உனக்கு பெண்ணாக மாற வேண்டுமென்றாலும் பெண்ணாக மாறலாம். ஆனால் உன்னை கேலி செய்த முகுந்த் முகர்ஜியை மறக்காதே, ஒரு நாள் அவனை நீ இதேமாதிரி பழி வாங்க வேண்டும்,.” என்று சொல்லி அவன் மனதில் ஒரு உறுதியைக் கொண்டு வந்தாள்.
தாய் கூறியபடி, சித்தார்த் படித்து, வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டு, அங்கேயே யாரும் எந்தக் கேள்வியும் கேட்காமல், ஆபரேஷன் மூலம் பெண்ணாக, சினேகாவாக மாறி விட்டாள். ஆனால் எந்த நேரமும் , எங்கு சென்றாலும், முகுந்த முகர்ஜி பற்றிய தகவலை மட்டும் சேகரிக்க மறக்கவில்லை.
அவள் வெளிநாட்டில் பெண்ணாக மாறும் சிகிச்சையில் இருக்கும் பொழுது தாய் இறைவனடி சென்றுவிட்டாள். இப்பொழுது தாய் அவள் கூட இல்லாவிட்டாலும். அவள் கூறிய வார்த்தைகள் ஒன்றையும் சினாகாவால் மறக்க முடியவில்லை.
மறுநாள் சிறிது முன்னதாகவே அலுவலகம் வந்து முகுந்த் முகர்ஜி உபயோகப் படுத்தி வந்த பெண்கள் கழிப்பறையின் பூட்டை உடைக்கச் செய்தாள். கழிப்பறை கதவின் மேல் ‘பெண்கள்’ என்று சிறியதாக கண்ணில் படாமல் ஒரு போர்ட் மாட்டச் சொல்லிவிட்டு, முகுந்த் முகர்ஜி வருவதற்காக காத்திருந்தாள்.
முகுந்த் முகர்ஜி தன் கேபினில் பையை வைத்து விட்டு கழிப்பறைக்குத் தான் வருவான் என்று அவளுக்கு விவரம் தெரிவிக்கப் பட்டு விட்டதால், அவன் வருவதற்கு முன் அவள் அந்த கழிப்பறையில் சென்று காத்திருந்தாள்.
முகுந்த் முகர்ஜி கழிப்பறையின் பூட்டு உடைத்திருப்பதைப் பார்த்து விட்டு கோபமாக உள்ளே நுழைந்தான். நுழைந்தவன் சினேகாவைப் பார்த்து திகைத்து அப்படியே நின்று விட்டான்.
அப்பொழுதுதான் சினேகாவின் மனதின் அடியில் அமுக்கி வைத்திருந்த எரிமலை சீறி எழுந்தது. “ என்ன இது? இது பெண்கள் கழிப்பறை. இங்கு வர உனக்கு வெட்கமாக இல்லையா? “ என்று இரைந்து கத்த, அங்கு பல தலைகள் எட்டிப் பார்த்தன.
முகுந்த் முகர்ஜி அவமானத்தில் தலை குனிந்து நின்றான். அவனைப் பார்த்து, சினேகா “ நான் யார் தெரியுமா? சினேகாவாக மாறிய சித்தார்த். அன்று நீ என்னை அதாவது சித்தார்த்தை இப்படித்தான் அவமானப் படுத்தினாய். உனக்கு மறந்துப் போயிருக்கும். ஆனால் நான் மறக்கவே இல்லை. இன்று உன்னை பழி வாங்குவதற்காகவே சினேகாவாக மாறி இங்கு வந்திருக்கிறேன். இனி உன்னைப் பார்த்து நீயே பரிதாபப் படும் நிலைதான் உனக்கு” என்றவுடன்
அப்படியே கூனிக் குறுகி நின்ற முகுந்த் முகர்ஜியைப் பார்த்தவுடன், சினேகாவிற்கு “ கமுத்திப் போட்ட கரப்பான் பூச்சி “ தான் ஞாபகம் வந்தது, ஒரு பக்கம் அருவருப்பு, ஒரு பக்கம் கரப்பான் பூச்சி திரும்ப முடியாமல் தவிப்பதைப் பார்த்து பரிதாபம், மறு பக்கம் அடித்துக் கொல்லலாமா என்று கோபம் என்ற பல உணர்வுகள் சினேகாவினுள் எழுந்தன. இனி முகுந்த முகர்ஜியின் நிலை என்ன?
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்