logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

கவிப்ரியா கஜேந்திரன்

சிறுகதை வரிசை எண் # 330


பிழை... கலைந்த தலைமுடியும்,கண்களில் பாதி தூக்கமும்,கையில் பல்துலக்க பிரஷ் பற்பசையுடன் பாசிப்பயிறு வண்ணம் பூசிய பாவாடையும் சட்டையும் அணிந்து கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்த மதியை பார்த்து தனக்குள் குறு புன்னகை ஒன்றை இதழுக்குள் பதுக்கிக் கொண்டான் வீட்டின் வாசலில் நின்றிருந்த பிருத்வி. 'மணி எட்டாச்சு,இவளப்பாரு இன்னும் தூங்கி வழியும் மூஞ்சியோட உட்கார்ந்திருக்கா' என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான் அவள் மீதான கண்களை அகற்றாமல். மதி என்பது வீட்டில் அனைவரும் அழைப்பது,முழுப்பெயர் வெண்மதி. அவளது தாய்மாமன் மகன் தான் பிருத்வி என்ற பிருத்விராஜன். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான் இருக்கும்.பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள் மதி.விடுதியில் தங்கி படிப்பதால் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறையில் வந்திருந்த மதியை தான் பிருத்வி பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த கிராமம் அது அவர்கள் வசிப்பது.வயல்களின் வனப்பில் தன்னையே மறந்து கிடப்பவன் பிருத்வி,தனது தாத்தாவுடனும் அப்பாவுடனும் எப்போதும் விவசாயம் பற்றி பேசவும்,வயல்களில் அவர்களுக்கு உதவியாகவும் இருப்பான்.இக்கிராமமும் மலையும் இயற்கையும் இவனை இங்கிருந்து செல்ல அனுமதிக்கவில்லை,அதனாலென்னவோ ஊருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு சிறிய டவுனில் பள்ளிப்படிப்பை தொடர்ந்தான். மதியின் அப்பாவிற்கு படிப்பு தான் எல்லாமே,அதனால் மதியை மிகப்பெரும் கனவோடு படிக்க வைத்துக் கொண்டிருந்தார்.பத்தாம் வகுப்பு வரை ஊருக்கு அருகிலேயே படித்தவளுக்கு, உயர்நிலை கல்வி விடுதியில் தான் என்று அப்பா உறுதியாகச் சொன்னதால் வேறு வழியில்லாமல் பிடிக்கவில்லை என்றாலும் விடுதியில் தங்கி படிக்கலானாள். இது தான் இருவருக்குமான சிறு கதைச் சுருக்கம்.மதியும் பிருத்வியும் பால்யத்தில் நண்பர்களாக இருந்தவர்கள்,வளர வளர பல்வேறு காரணங்களால் அவர்களது நெருக்கம் சுருங்கிப் போனது.மதி படிப்பில் கவனமாக இருந்தாள்.பார்க்கும் போது சிறு புன்னகை என்ன என்றால் என்ன அவ்வளவு தான் இருவருக்குமான பேச்சுவார்த்தை.ஆனால் பிருத்விக்கு மதியின் மீது அதீத அன்பு இருந்து கொண்டே இருந்தது குழந்தைப் பருவம் முதற்கொண்டு.அவன் அதை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. காலம் எதற்காகவும் நிற்பதில்லை,ஓடிக் கொண்டுதான் இருந்தது.பள்ளிப்படிப்பை முடித்தனர் இருவரும்.பிருத்வி அருகிலேயே கலைக்கல்லூரி ஒன்றில் பி.காம் படிப்பை தெரிவு செய்திருந்தான். மதி நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாள். அதனால் மருத்துவம் படிக்க நுழைவுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றாள். அரசு கல்லூரியில் மருத்துவம் பயில இடமும் கிடைத்தது.சந்தோசத்திற்கு அளவேயில்லை குடும்பத்திலிருக்கும் அனைவருக்கும்.பிருத்விக்கும் ஏக சந்தோசம்.அவனது மகிழ்ச்சி அவனது உற்ற நண்பன் செங்குட்டுவன் ஒருவன் மட்டுமே அறிவான். காலங்கள் கடந்து கொண்டு தான் இருந்தது.பிருத்வி அவனது எண்ணங்களை செங்குட்டுவனின் மட்டுமே உணர்த்திக் கொண்டிருந்தான் அவ்வபோது.அவனது நண்பன் இன்னும் கொஞ்சம் அவனை ஏத்தி விட்டுக் கொண்டிருந்தான்.உன் அத்தை மகள் தானே மதி,முறைப்பெண் தானே,உனக்கில்லாத உரிமையா என்றெல்லாம் பிருத்வியிடம் அவளுக்கான அன்பை காதலாக மாற்றி விட்டிருந்தான். தினம் தினம் அவளது நினைவுகள் மெல்ல மெல்ல துயில் கொள்ள விடாமல் வாட்டியது.மதியின் அம்மா அதாவது அவனது அத்தை மீது மிகுந்த பாசம் அவனுக்கு,அத்தைக்கும் அப்படித்தான்.ஆனால் அவளது அப்பா என்றால் தான் கொஞ்சம் பயமும் கூட.அதுமட்டுமல்ல மருத்துவர் படிப்பு படிக்கும் அவள் எங்கே,நான் எங்கே ..நான் ஆசைப்படுவது வீண் அல்லவா என்று தனக்குத்தானே பல இரவுகள் சொல்லிக் கொண்டு தூங்காமல் கிடந்தான் பிருத்வி.மதியின் நினைவுகள் அதிகமாகத்தான் செய்ததே தவிர குறைந்த பாடில்லை.அவளைப் பற்றி எண்ணக்கூடாது என்று நினைக்கும் போதெல்லாம் அதிகமாய் சிந்தித்தான். அவனது குழப்பம் கண்டு தோழன் தான் சமாதானம் செய்தான். 'என்னாலும் உன்னோட மதி டா அவ,அவளுக்கும் உன்னைப் பிடிக்கும் தான,சின்ன வயதிலிருந்தே நானும் பார்த்திருக்கேன் டா,நிச்சயம் உனக்கு ஓகே சொல்லுவா பாரு..' என்றான் நண்பன். 'இல்லடா எனக்கென்னவோ கஷ்டமா இருக்கு,அவளுக்கு நான் பொறுத்தமானவனா இருக்க முடியுமானு தெரியல,படிப்பு ஒரு பக்கம் ,மாமா வ பத்தி நெனச்சாலும் பயமா இருக்கு,அத்தைக்கு இதுல சந்தோசம் தான்...இருந்தாலும்..' ' என்ன இருந்தாலும்....' 'மதிக்கு என்னைய புடிக்கனுமே டா..' 'ஏன்டா ,புடிக்காது னு நெனைக்கிறியா ' 'விவரம் தெரியாத வயசுல புடிக்கும்ங்கறத வெச்சுக்கிட்டு இப்பவும் அவளுக்கு இஷ்டம்னு எப்படிடா எடுத்துக்க முடியும்..'என பிருத்வி கலக்கத்தடன் தடுமாற,உடனே செங்குட்டுவன் 'உனக்கென்ன அவளுக்கு உன்ன புடிக்குமா இல்லையானு தெரியனும் அவ்ளோ தான...' என்றான். 'ம்ம்ம்ம் ,ஆனா அதெப்படி அவகிட்ட கேக்குறது,ஒரு வேளை இல்லனு சொல்லிட்டா என்னால தாங்கிக்கவே முடியாது டா..' 'ஆமாடா இப்ப சொல்லு, மொதல்லயே அவ எண்ணமெல்லா தெரியாம ஆசைய வளத்துக்க வேண்டியது,இப்ப வந்து சொல்லு ,தாங்க முடியாதுன்னு..' என்று முறைத்துக் கொண்டான் செங்குட்டுவன் செல்லமாய். அமைதியின் உருவாய் இருந்தான் பிருத்வி.கனவில் அவளுடன் பயணிக்கத் தொடங்கியிருந்தான்.அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.மதியின் தங்கை துர்காவிடம் பேச்சுக் கொடுத்து பார்த்தால் நிலவரம் விளங்கும் என்று எண்ணினான்.அப்படியே அவளிடம் சாதாரணமாக பேச ஆரம்பித்து பிறகு மதியைப் பற்றி அவ்வபோது நலம் விசாரிப்பது போல கேட்டுக் கொண்டிருந்தான். துர்கா படு சுட்டிப் பெண்.மாமா பிருத்வி இப்பல்லாம் அடிக்கடி அக்காவைப் பத்தியே கேட்டுட்டிருக்கே என்று எண்ணிக் கொண்டு,சமயம் கிடைக்கும் போது கேட்டுவிட வேண்டியது தான் என்று காத்திருந்தாள்.அவளது அக்கா மதியிடம் அவ்வபோது பிருத்வி விசாரிப்பதையும் காதில் போட்டு வைத்தாள்.ஆனால் மதி அதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.மருத்துவப்படிப்பு முடிந்து பயிற்சியில் இருந்தாள்.அவளது முழு கவனமும் படிப்பில் மட்டுமே இருந்தது. பிருத்வியும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தான்.துர்காவிடம் அவனுக்கு நீண்ட நாட்களாக இருந்த சந்தேகத்தைக் கேட்டு தெளிவு பெற விரும்பி,கேட்டுவிட்டான்.'மதிக்கு காதல் கீதல் னு காலேஜ் ல ஏதும் இருந்துச்சா துர்கா',அப்படி ஏதும் இருந்தா சொல்லிடு 'என்றான். 'ஏன் மாமா இப்படி கேக்குற, நீ அக்காவ லவ் பண்றியா ' என்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை அவன் துர்காவிடமிருந்து. பதில் ஏதும் தராமல் அமைதி காத்தான். 'என்ன மாமா,இந்த அமைதி கூட ஆமாம் னு எடுத்துக்கலாமா ' சிறு இடைவேளை விட்டு பேச்சைத் தொடர்ந்தான் அவன். 'ஆமா துர்கா, மதி னா எனக்கு ரொம்ப இஷ்டம்,சிறு வயதிலிருந்தே அவளை பிடிக்கும்,அவ இல்லனா எனக்கு லைஃபே இல்ல, செத்துருவேன் ' என்று தன் மனதிலிருந்த மொத்தத்தையும் கொட்டிவிட்டான். வாயடைத்துப் போன துர்கா,'ஹயோ மாமா,இதென்ன செத்துருவேன் அது இதுன்னு சொல்லிக்கிட்டு...உங்களுக்குள்ள இப்படியொரு காதல் இருக்கும்னு நெனச்சது தான்,பட் இவ்ளோ சீரியஸ்ஸா இருக்கும்னு யோசிக்கல..' 'இப்ப என்ன சொல்ல வர்ற துர்கா..' 'இல்ல மாமா, அக்கா கிட்ட பேசிப் பாக்கலாம், லவ் எல்லாம் அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லனு சொல்லிட்டா, சொல்லப் போனா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டிருக்கா..அதான்....' 'என்ன சொல்ற...கல்யாணத்துல இஷ்டமில்லயா...அப்படியெல்லாம் நான் விடமாட்டேன்,என்னோட லவ் அவ புரிஞ்சுப்பா, அவளுக்காக தான் இந்த ஜென்மம் எனக்கு,நல்லபடியா பாத்துப்பேன், அவ இஷ்டம் போலவே நான் இருப்பேன்..அவ எனக்கு மட்டும் தான் வேணும்,நிச்சயமா வேற யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்..' கேட்ட துர்காவிற்கு ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும், மறுபுறம் அக்கா வை எண்ணி கவலையும் கொண்டாள்.'சரி மாமா,பேசிப் பாப்போம்..கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க..டிரெயினிங் முடியட்டும் அப்புறமா பேசுவோம்..' என்றாள் துர்கா. மதியின் நினைவுகளிலும், அவளது விடுமுறை நாட்களில் அவளைக் காண்பதுமாக நாட்கள் நகர்ந்து.நண்பனும் ,துர்காவும் இவனது காதலுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை ஆழமாகப் பதிவு செய்திருந்தான் பிருத்வி. நாட்கள் நகர்ந்தோடி அவன் எதிர்பார்த்த நாளும் வந்தது,மதி ஊர் வந்து சேர்ந்தாள்.மேலே என்ன செய்யலாமென்று வீட்டில் அனைவரும் ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்.வேலைக்கு மருத்துவமனைக்கு செல்லலாமா இல்லை சுயமாக கிளினிக் போடலாமா என்ற ஆலோசனை தான் அது.வெகு தூரம் அனுப்ப வேண்டாம் என்று எண்ணினார்கள் குடும்பத்தார். சில நாள் வெளியில் சென்று வந்தால் நல்ல பயிற்சி கிடைக்குமென்று மதி வீட்டில் எடுத்து சொல்லிக் கொண்டிருந்தாள்.அவளது அப்பாவிற்கும் அது சரியென்றே பட்டது,உடனே ஒரு தனியார் மருத்துவமனையில் இணைந்தாள். முதன்முதலாய் அலைபேசி வாங்கித் தந்திருந்தார் அவளது அப்பா. மதியின் எண்ணைப் பெற்றுக் கொண்டான் துர்காவிடமிருந்து,அவ்வபோது ஒரு ஃபார்வர்ட் மெசேஜ் அனுப்புவது நலம் விசாரிப்பது எனத் தொடங்கினான் பிருத்வி.தெரிந்தவன் என்ற முறையில் பதில் அனுப்புவதை பழக்கமாக்கி இருந்தாள் மதி.சில மாதங்கள் கடந்தது. ஆண்டின் முதல் நாளன்று பிருத்வி தனது விருப்பத்தை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிவைத்தான் மதிக்கு.அதைப் பார்த்தவள் மிகுந்த கோபம் கொண்டாள்.'மாமா மகன் என்ற முறையில் உன்னிடம் பழகினால் நீ இப்படி சொல்லுவனு எதிர்பார்க்கல...'பொறிந்தாள். அவனது காதல் மொத்தத்தையும் அவளுக்காக என்பதை எடுத்துச் சொன்னான்.ஆனாலும் அவள் மறுத்து விட்டாள். சில தினங்கள் கழிந்தது.மறுபடியும் பேச ஆரம்பித்தான்,'என்ன பிரச்சனை என்றாலும் சொல்லு நான் பாத்துக்கறேன்,அத்த மாமா கிட்ட நான் பேசுறேன் இல்ல அப்பாவ பேச வைக்கிறேன்,நீ மட்டும் சரினு சொல்லு மதி...ப்ளீஸ் ' கெஞ்சலாய் பேசிக் கொண்டிருந்தான் பிருத்வி. மதி தெளிவாய் சொல்லிக் கொண்டிருந்தாள்,'எனக்கு கல்யாணம் பண்ணிக்கவே இஷ்டமில்ல,அப்புறம் உனக்கு எப்டி நான் ஓகே சொல்ல, என்ன விட்று பிருத்வி,நீ வீட்ல பாக்குற பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணிக்க..' 'என்ன காரணம் மதி ,அத சொல்லு' 'பிடிக்கல,அவ்ளோ தான்...' 'நீ இல்லாமல் எனக்கு லைஃப் இல்ல மதி,இத நான் சும்மா சொல்லல,உண்மைய தான் சொல்றேன்' 'நீயென்ன பைத்தியமா,இஷ்டமில்லாத ஒருத்திய எப்டி கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கைய நடத்துவ,ஏன் சொல்றத புரிஞ்சுக்காம இப்டி என்னையும் கஷ்டப்படுத்துற' 'என்ன கல்யாணம் பண்ணிக்க,உனக்கு எப்போ என்ன பிடிக்குதோ அப்ப சொல்லு மதி,அதுவரைக்கும் நா காத்துட்டிருப்பேன்...' 'நீ இப்படியே பேசிட்டிருந்தா நான் மாமா கிட்ட தான் விஷயத்த சொல்லனும் பிருத்வி' என்றாள் மதி. 'நல்லது தா,நீயும் சொல்லு,அப்பா என்ன புரிஞ்சுப்பார்,நானும் பேசுறேன் அவர்கிட்ட..' என்றான் பிருத்வி. தினம் தினம் இப்படியான சிறு சிறு வாக்குவாதங்களோடு நாட்கள் நகர்ந்து கொண்டு தான் இருந்தது. இரு குடும்பத்தாருக்கும் விசயம் தெரியவில்லை, பிருத்விக்கு ஆறுதலாக இருந்தவன் அவனது நண்பன் மட்டுமே.ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தான். ஒரு நாள் மதிக்கும் பிருத்விக்கும் மிகுந்த வாக்குவாதம் வந்தது,இவை எல்லாமே அலைபேசியில் நடப்பது தான்,வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். முடிவில் மதி மிகுந்த கோபத்தில் ' நீ ஆனதைப் பார்,என்னால் முடியாது என்று கட் செய்து விட்டாள்.' இரண்டு நாட்களாக எந்த குறுஞ்செய்தியோ ,அழைப்போ இல்லை அவனிடமிருந்து.இத்தோடு பிரச்சனை முடிந்தது என்று எண்ணிய மதிக்கு ஒரு இடி காத்திருந்தது.அவளது அப்பாவிற்கு மாமாவிடமிருந்து அழைப்பு வந்தது,பிருத்வி தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும்,அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் பேசி முடித்தார்.உயிரின் ஆழம் வரை நடுங்கியது மதிக்கு.அவள் அம்மா அழ ஆரம்பித்து,உடனே அவளது அம்மாவும் அப்பாவும் மருத்துவமனை விரைந்தார்கள். சற்றும் எதிர்பார்க்காத அவளால் எதுவும் செய்ய முடியாமல் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.அவளது பெற்றோர் பார்த்து விட்டு இரவு வந்தனர் வீட்டிற்கு.விபரம் கேட்டு அறிந்து கொண்டாள்.வயலுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தினை உட்கொண்டதாக சொன்னதும் அவளுக்கு மனம் பதறி விட்டது.அவள் மருத்துவர் என்பதால் அதன் வீரியம் பற்றி அறிந்திருந்தாள்.மனம் பதறியபடி இருந்தது.இரவெல்லாம் துயில மனம் வரவில்லை,இரண்டு நாட்கள் கடந்தது,உடல்நிலை மோசமாகத் தொடங்கியது,உடனே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டான் பிருத்வி.செய்தி அறிந்து அப்பா உடன் சென்றிருந்தார். மதிக்கு என்ன செய்வதென்று புரியாமல் யாருக்கும் தெரியாமல் மனதால் அழுது கொண்டிருந்தாள். மருத்துவரென்பதாலும் மறுநாள் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றாள்,அவனைப் பார்க்க அவள் மனம் கொள்ள வில்லை, வெண்டிலேட்டரில் செயற்கை சுவாசத்தில் இருந்தான்.மனம் வலித்தது.என்ன தவறு இழைத்தேன் இறைவா என்று கத்தி அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அடக்கிக் கொண்டு வீடு திரும்பினாள்.இரண்டு நாட்கள் அப்படியே கடந்தது.கொஞ்சம் முன்னேற்றம் இருப்பதாக தகவல் வந்ததும் கொஞ்சம் ஆறுதலடைந்தாள் மதி. மறுபடி நேரில் சென்று பார்த்து வர சென்றாள் மதி.அவனுடன் அவனது அம்மா இருந்தாள்.செயற்கை சுவாசத்திலிருந்து விடுபட்டிருந்தான். இவள் சென்ற நேரத்தில் ஆழ்ந்த தாக்கத்திலிருந்தான் அவன்.பார்த்து விட்டு வீடு திரும்பினாள் அவள் சற்றே நிம்மதியாக. நள்ளிரவில் கைபேசி ஒலித்தது,பிருத்வி இவ்வுலகை விட்டுச் சென்றதாக வந்த அழைப்பு தான் அது. என்ன நடந்தது ஏது நடந்தது என்று நினைத்துப் பார்ப்பதற்குள் எல்லாம் அடங்கியது. உயிரைப் பிடுங்கியது போல உணர்வோடு கண்களில் நீரோடு பிரம்மை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள் மதி.உடன் தங்கை துர்கா கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். இதில் யார் பிழை...??

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.