Kalaichezhiyan. T
சிறுகதை வரிசை எண்
# 329
இயற்கைக்கு முரணான மூடன்
அவன் பெயர் ரத்திரன்.கொஞ்சம் கோமாளித்தனத்தை தன்னுள்ளே வைத்திருந்த அவன் மிக உணர்ச்சிவசப்படக்கூடிய மனித உயிர் என்பது அவனுடன் பழகும் யாராயினும் சிறிது நேரத்தில் தெரிந்துவிட்டது.அது அவன் வீட்டு பூனை முதல் இரக்கமற்று உறக்கமுமின்றி அவன் மீதேறும் எறும்புக்குக் கூடத்தெரியும்.சில நாட்களாக அவன் மனதில் ஒருவித சலன எண்ணம் ஊடாடிக்கொண்டிருக்கிறது.அது வேறொன்றுமில்லை ஒரு இடத்தில் பரிசுத்தருவதாகச் சொல்லி ஒரு சிறுகதையை எழுத சொல்லியிருக்கிறார்கள்.அந்த சின்ன விடயமே அவனை சராசரியாக செயல்பட அனுமதிக்கவில்லை போல இரண்டு நாட்களுக்கு முன்தான் தான் இவ்வாறு இருப்பதையே அவன் உணர்ந்திருக்கிறான்.எந்தக் காட்சியைப் பார்த்தாலும் இதை எழுதினால் பரிசு கிடைக்கும் இந்தக் காட்சியை இவ்வாறு வடிவமைத்து எழுதினால் பரிசுக்குக் கிடைக்கும் என்றெண்ணி எண்ணி தடுமாறிப்போய் ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் எதையும் குறிப்பிட்டு எழுத முடியாமல் தவிக்கிறான்.பரிசுக் கிட்டாமல் போய்விடும்போல என்று எண்ணி பயப்படுகிறான்.எல்லா எழத்தாளனையும் போல அவன் எழுத்தின் மீது அதீத நம்பிக்கைக்கொண்டவனாய் இருக்கிறான்.சிறப்பாக எழுதுவேன் என்று கூறிக்கூறி அவன் நிலை இப்போது சிரிப்பாக மாறிப்போனது.அடிப்படையில் அவன் ஒரு ஏழை.அந்தப் பரிசுக்கு அவன் ஆசைப்படுவதற்கு ஒரு வகையில் அவனது ஆடைகளும் காரணம்.தன்னைப் போன்றத் தனக்குத் தெரிந்த அனைவரிடமும் அவ்வாறு ஒரு போட்டி நடக்க இருக்கிறது என்று எப்போதும் குறிக்கொண்டே இருந்தான் அவன்.யாரும் எழுதாத கதையாக,யாரும் பேசாத கதையாக இது இருக்க போகிறது என்று திரும்ப திரும்ப பேசி பேசி அந்தக் கதையையே பல பேர் பேசிய கதையாக நினைத்துக்கொள்கிறான்.அதேப் போல தனக்குத் தெரிந்த ஒவ்வொரு கதையையும் அவன் நிராகரித்து விடுகிறான்.அவனுக்கு பல கதைகள் தெரிந்தே இருந்தது.அந்தப் பெட்டைக்கோழியின் கதை,குதிரைக்குஞ்சியின் கதை,கூப்பி நாயின் கதை,விற்காத விபச்சாரியான ஷீலாவின் வாழ்க்கைக் கதை,அந்த ஏரியோரத்து மனக்கோளாறுடைய பெண்ணின் கதை இன்னும் பல கதைகள் அவனுக்குத் தெரிந்தே இருந்தது.பல உவமைகளையும் தன் கைக்குள் வைத்திருந்தான்.எனினும் அவனால் எந்தக் கதையையும் எழுத முடியவில்லை.பணத்திற்காக அவன் இதுவரையும் எழுதியதியில்லை. தன்னை பாதித்த ஒரு நிகழ்விற்கு சமூகத்திடம் இருந்து பதில் கிடைக்கவில்லையெனில் அவன் அதனை புனைவாகவோ அபுனைவாகவோ எழுதத் தவறியதில்லை. எழுத்தாணிகளும் சில வலிகளுக்கு ஆறுதல் தேடியே ஏட்டினுடன் கூடி அழுகின்றன.அதேப்போல் அவனும் தனது வழக்கமான வலிகளைத் தவிர்த்து தன்னை உலியால் உடைக்கும் வலியெதுவோ அவற்றையே படைப்பாக்குவான்.அவ்வாறக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவனுக்கு பணம் சார்ந்தோ பரிசு சார்ந்தோ செயல்பட முடியாத மனநிலையில் தற்போது இருக்கிறான். அவனது இன்ன பிற நண்பர்களுக்கும் கூட கதைகளை வகுத்துக்கொடுத்தவன். தற்போது அரைகுறை மனநிலையில் அடிக்கடி சபலப்படுகிறான். பேனாவைப் பிடித்து தாளோடு ஒட்ட வைக்கும் நேரங்களிலெல்லாம் பரிசு பாதி மனதைப் பிடித்துவிடுகிறது. மீதிமனதை வைத்து எழுதும் வாக்கியங்களுக்கு வலிமையில்லை. சிந்தாதிரிப்பேட்டை எனும் இடத்தின் ஆத்தோர மக்களின் சிக்கலான வாழ்க்கையை எழுத எடுத்த தகவல்களை இணைக்கும்போது கூட இப்போதெல்லாம் திருப்தி கிடைப்பதில்லை."பரிசுக்காகத் தானே எழுதுகிறாய்" என்று பேனா அவனிடம் கேட்பதாக அவனேக் கருதிக்கொள்கிறான். "அந்த மக்களைக் காட்டி காசு வாங்கி உன் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளப்போகிறாய்! அப்படித்தானே ; செய் ! செய் ! " என்று அவன் மனது கூறி கேலி செய்வதாய் கற்பனைச் செய்துக்கொள்கிறான்.
இப்போதெல்லாம் அவனுக்கு ஏழை மக்களைப் பார்த்தாலோ பாவப்பட்ட யாரையோ பார்த்தால் கூட கற்பனையில் அவர்கள் மேல் பரிசுத்தொகை தொங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.அவ்வாறு தோன்றும்போதெல்லாம் அவர்களைப் பார்க்காதவண்ணம் கண்களை மூடிக்கொள்கிறான்.இதயம் கனத்து காணப்படுகிறது அவனுக்கு . "யாம் எழுத வந்தக் காரணமே காசாகிக்காணப்படுகிறதே" என்று வருந்துகிறான்.இனிமேல் எழுதுவதில்லை என்று ஒரு கணமும் இனிமேல் காசுக்கு எழுதுவதில்லை என்று மறு கணமும் சிந்தித்து இரண்டாம் சிந்தனைக்கு செவிகொடுத்து அவன் ஒரு முடிவுக்கு வருகிறான்.இந்தப் போட்டிக்கு கதையை அனுப்பப்போவதில்லை என்றும் நான் அனுப்பும் கதையைப் படிப்பவனும்; காசு கொடுப்பதைக்
கருதிப் படிக்கத் தேவையும் இல்லை என்றும் முடிவு செய்துவிட்டு சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறான்.
... பின்பு ஒரு நாள் சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி ஒரு வயதான பாட்டியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து அதேப்பேருந்தில் பாடிக்கொண்டு வந்த இளையராஜாவின் இசைக்குரலையும் அதேப்பேருந்தில் பனங்கிழங்குகளை விற்கும் ஏதோ ஒரு மகனின் தந்தையாகிய அவரதுக்குரலையும் தன் செவிகளின் வழியே சிந்தனைக்கு கொடுத்துவிட்டு தனது அருகாமையில் உள்ள பாட்டி கூறும் அவள் வரலாற்றுச் சிறு சிறு கதைகளைக் கேட்டுக்கொண்டும் அவள் கூறும் அதே பழைய அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டும் சென்று அகல் மையம் என்னும் அரவணைப்பு மையத்திற்குள் செல்கிறான்.அங்கே மாணவர்கள் தங்கும் விடுதிக்குச் சென்று பல மாணவர்களுடன் கலந்துரையாடுகிறான்.அங்கு ஒரு மாணவன் தனது இலட்சியம் மருத்துவராக வேண்டும் என்றுக் கூறியதையும் அதே மாணவன் முன்பு "இங்க சாப்பாட்டுக்கு மட்டும் 300 ரூவா வாங்குறாங்கண்ணா மாசத்துக்கு"என்று கூறியதும் படியில் ஒரு ஒடுங்கிப் போன தண்ணீர் குடுவையோடு ஒல்லியாக இருந்த மற்றொரு 8-ஆம் வகுப்பு மாணவன் கால்பந்து வீரராக வேண்டும் என்றதும்;இவர்களெல்லாம் பக்கத்தில் இருக்கும் 'மேல்பாப்பாம்படி அரசுப் பள்ளி'யில் படிக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரிகிறது.
பின்னர் அனைவரும் சேர்ந்து உணவருந்திக்கொண்டே கதைகள் பல பேசிச்சிரித்துக்கொள்கிறார்கள். அதில் ஒருவன் கூறிய 'கௌதாரி' பற்றினக் கதை மட்டும் பற்றிக்கொள்கிறது ரத்திரனை.
இப்போது அவன் மனது அமைதியை உள்வாங்கிய நிலையில் சீரான வேகத்தில் திசைத்தெளிந்த ஒளியில் இருப்பதை உணர்கிறான். அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்திசையில் கிழக்கு நோக்கி நடக்கின்றான். நெடுந்தூர நடையில் அந்த இடத்தின் அழகையும் அந்தச்சாலையில் வண்டிகள் செல்லும் வேகத்தையும் பார்த்தபடியே கிடக்கிறான். கடைசியாக சாலையின் இடதுபுறம் ஒருவர் வெள்ளைத்தாடியுடன் தனது தோட்டத்தை சீர்படுத்திக்கொண்டிருக்கும் ஒருவரைப் பார்க்கிறான்.பப்பாளி மரங்கலுடன் அந்தத் தோட்டம் மிக அருமையாக இருந்ததை கவனித்தவன் அந்த வெள்ளைத்தாடியை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு சாலையைப்பார்க்கிறான்.வேகமாக சென்று கொண்டிருந்த வாகனங்களிடம் இடதுகை பெருவிரலை காட்டி உதவிக்கேட்கிறான். மஞ்சள் நிற பங்கு தானி அவனருகில் நிற்கிறது.பங்குப்போட்டுக்கொள்ள உள்ளே யாருமில்லாததால் அவன் கேட்கிறான் "செஞ்சிக்கு போவ்னும் எவ்ளோ" என்று.சற்றே சரக்கு ஏற்றிக்கொண்டு வந்திருந்த அவர் "தட்டி ருப்பீஸ்" என்றார். பின்பு இருபது ரூபாய்க்கே ஒத்துக்கொண்டார் இரக்கத்தின் காரணமாக என்று கூற வேண்டியதில்லை இறங்கும் போது அதையும் அவர் வாங்கவில்லை அவருக்கும் இறங்கிக்கொண்டிருந்தது வண்டியிலிருந்து சரக்கு. அவரிடம் திணித்து விட்டு வந்தான் இருபது ரூபாயை.வண்டியில் அவருடன் அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றியும் மாணவர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே அகல் மையத்தில் அவன் சந்தித்த சிறுவன் கூறிய 'கௌதாரி' களைப் பற்றிய அவனுக்கு நடந்த நிகழ்ச்சியை ஒரு சிறுகதையாக மாற்றியிருந்தான் ரத்திரன்.அந்தக் கௌதாரி தப்பித்துப் போன கதையினையும் அவை தப்பித்துப் போன பின் திரும்பவும் அவர்கள் வைத்த கண்ணியில் எந்த ஒரு கௌதாரியும் சிக்காமல் போனதற்கு அந்த தப்பித்துப் போன இரண்டு கௌதாரிகளே காரணம் என்று அவற்றை திட்டி அவன் கூறிய கதையை அந்த கௌதாரி பறவைகளின் பக்கம் நின்று ரத்திரன் அவற்றை ஆமோதித்து எழுதுகிறான்."தன் சமூகத்தை காப்பது தானே அச்சமுகத்தில் வாழும் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையே" என்று அவன் எழுதியிருந்தார்.
அவரிடம் அந்த இருபது ரூபாயைத் திணித்து விட்டு அவன் நடக்கும்போது வழியில் அவன் பார்த்துக்கொண்டு வந்த ஆலமர காளிக்கோயிலும் ஈஸ்வரன் கோயிலும் நினைவில் வந்து வந்து போனது.அதற்கு ஊடாக வெள்ளைதாடி கிழவனும் இருந்தான்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்