Priya Milir Vannan
சிறுகதை வரிசை எண்
# 321
தலைப்பு : புள் குவளை
தடுப்புச்சுவரில் தன் மனம் தட்டுத்தடுமாறி ஏனோ நின்றிருந்த வேளையில் வெய்யோனின் அந்திமச் சுடர்கள் தன் முகத்தில் படர்ந்திருந்த நேரம்… “ம்மாஆஆ…..” என்ற அழைப்பிற்கு தன் அலைபாய்ந்த மனமானது மழலைக் குரலின் புன்னகை முகத்தின் முகம் நோக்கி அகத்துடன் புன்னகை முகையினின்று அரும்பிற்று….
“ம்மாஆஆ… ப்பூஊ” என்ற அளபெடை மொழியில் பேசும் தன் மழலையின் முகம் நோக்கி…
“பவன்… என்ன தங்கம்! என்ன வேணும்” என்ற கொஞ்சலுடன் தன் இரண்டு வயது குழந்தையை தன்னுள் அணைத்திருந்தாள். “ம்மாஆஆ… ப்பூஊ” என்று தடுப்புச்சுவரின் முன்னின்று தொட்டியில் அந்திமத்தில் அரும்பிய “அந்திமந்தாரை” யை கைக்காட்டிய பவனின் பிஞ்சுக்கையில், செந்தாமரை நிறமுடைய மந்தாரை மலரானது அவனது உள்ளங்கையை மேலும் செந்நிறமாக்கிக் கொண்டிருந்தது.
முற்றம் கடந்த வரவேற்பறையில் ஆதவனை வரவேற்கும் திசை நோக்கிய தெய்வீக ரசனைகளுக்கு தன் மழலைக்கைகளால் மலரால் அழகுப்படுத்திக்கொண்டிருந்தான் பவன்…
புன்னகை முகத்துடன் சிற்பவேலைப்பாடமைந்த விளக்கிற்கு மலர் சூட்டி “சுடர் ஏற்றிக்” கொண்டிருந்தாள் “சிற்பிகா…..” ஒளி வீசிக்கொண்டிருந்த சுடரானது சிற்பிகாவின் சிறிய இருள் போல் படர்ந்த எண்ண ஓட்டங்களுக்கு சிறிது நம்பிக்கை சுடரை அளித்தது என்பது அவளது புன்முறுவலில் பூத்திருந்தது.
“ம்ஆஆ” நானூஉஉ… என்று மணம் கமலும் அகில் குச்சிகளுடன் இல்லம் தோறும் நறுமணம் கமல சுற்றி வந்தான் பவன்…. தெய்வீக ரசனைகள் முடித்த சிற்பிகா பவனுடன் இல்லத்தின் வாயில் மாடிப்படியில் அமர்ந்து இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் இருந்த நிலாவை பற்றிய அறிவியல் புனைந்த கதைகளை பவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். தென்றலுடன் பவனின் எண்ண ஓட்டங்கள் மாடிப்படிகளில் அலைபாயத் தொடங்கின.
பூர்ண சந்திரனின் ஒளியில் சிற்பிகாவின் மென்மை பொருந்திய குணங்கள் பவனிடம் எதிரொளித்துக்கொண்டுதான் இருந்தது. நேர்த்தியான ஆடை, வளைந்த கூந்தலுக்கு இடையில் பூச்சரம். விரலில் இரண்டு பிறை ஆழிகள், மலர் சிற்பம் வேலைப்பாடமைந்த கைஅணிகள் சிற்பிகாவிற்கு மேலும் சிறப்பானதாக அவளது தோற்றத்திற்கு மெருகேற்றிக்கொண்டிருந்தது.
“ம்மாஆ.. மம் மம்” என்று என்று மாடிப்படியில் வைத்திருந்த மண்ணால் வனையப்பட்ட சட்டியை பவன் தன் கையில் எடுத்துக்கொண்டு வந்தபோது, சட்டியில் இருந்த வேலைப்பாடுகள் மட்டுமே அவள் கண்களுக்கு புலப்பட்டது. பச்சை வண்ணம் தீட்டப்பட்ட கொடிகளுக்கு இடையில் பட்டாம் பூச்சியின் இறக்கைகள் நீல வண்ணங்களால் புனையப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களாக வேலைப்பாடு மட்டுமே அந்த மண் சட்டியில் இருக்கிறது, அரிசி தானியம் ஏதும் வைக்கமுடியவில்லை என்பதை இரண்டு வயது பவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தன்னுள் தடுமாறிக்கொண்டிருந்தாள் சிற்பிகா.
---
அதிகாலையில் சூரிய உதயத்தின் போது முதல் மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு நல்ல எண்ணங்கள் நிறைந்த மனதுடன் கையில்
வண்ணங்களுடன் பூமியை அழகுப்படுத்த படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள் சிற்பிகா. பூமியில் பிறருக்கு சொந்தமான இல்லங்களையும் தன் இல்லம் போல் சிறப்பிப்பவள். வாடகைக்குத் தானே இருக்கிறோம் என்ற அலட்சியப்போக்கு மனப்பான்மை துளியும் இன்றி, பூமாதேவிக்கு தண்ணீர் துளிகளைத் தெளித்து, வண்ணங்களால் அழகுப்படுத்திச்சென்றாள் சிற்பிகா.
ஒருவார காலமாக அவள் கோலங்களைக் கடந்து செல்பவர்கள் ஒரு நிமிடம் நின்று எழில் கோலம் என்று வருணித்துத்தான் சென்றனர்.
படிகளில் ஏறும் வழிகளில் சிறிது அரிசித் துளிகளாக அங்கும் இங்கும் தெளிக்கப்பட்டிருந்ததை எடுத்து வாயில் படியில் ஓரங்களில் வைத்துவிட்டு மாடிப்படிகளை ஏற முயன்ற நேரம்…..
அசாத்திய 21ஆம் நூற்றாண்டில் 2023-இல் முற்றங்களுடன், வாயில் படியில் துளசி மாடமும், அழகு வேலைப்பாடுகளுடன் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட “அன்பு இல்லம்” என்ற பெயர் கொண்ட இல்லத்திற்கு உரித்தான ஐம்பது வயதைக் கடந்த “சிவகாமி” சிற்பிகாவின் முன் நின்றிருந்தார்.
“அம்மாடி…”
“நீங்க வந்து ஒரு வாரம் ஆகுது, தினமும் நீ மேல்மாடியில் தானியம் அரிசி பறவைகளுக்கு வைக்குறது பார்த்தோம். ரொம்ப நல்லது. ஆனால்…. (இங்க பாரும்மா! என்று துளசி மாடத்தினைச் சுற்றி சுட்டிக்காட்டினார்.)
மேல் மாடியில் நீங்க வைக்கிறது.. பறவைகள் கொத்தி கொத்தி சாப்பிடும் போது, இந்த முற்றம் முழுவதும் வந்து விழுந்துவிடுகிறது. நாங்கள் மாதத்திற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இங்கே தங்குகிறோம். மீதி நாட்களில் மகனின் வீட்டிற்கு சென்றுவிடுவோம்.
தினமும் இப்படி முற்றத்தில் சிதறினால் நாங்கள் வீட்டில் இல்லாத காலங்களில் “கூடு கட்டி அடைக்காத்துவிட்டால்” மிகவும் சிரமம் ஆகி விடும்…. ஏதும் இப்படி வைக்காதீங்கமா….”
என்று கூறிவிட்டு சென்றவரிடம் மொழிகளை உதிர்க்க மனமில்லாமல் நேரே மாடிப்படிகளை கடந்திருந்தாள். மேல்மாடியில் இருந்த மண் சட்டியைப் பார்த்த போது வெறும் வேலைப்பாடமைத்த மண்சட்டியாக மட்டுமே இருந்தது.
------
இரண்டு நாட்களாக அன்னிச்சையாக தன் அன்றாட வேலைகளை செய்தவள், இன்று பவனின் கையில் இருந்த அந்த மண் சட்டியைப்பார்த்த போது தன்னை அறியாமல் மனம் பதபதைத்து கண்ணீர் தன் சுரப்புகளை பெருக்கிக்கொண்டிருந்தது.
பவனின் விரல்கள் சிற்பிகாவின் கண்களை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த போது….
மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்த அகிலனை நோக்கி “ப்பாஆஆ” என்று தழுவிக்கொண்டான் பவன். சிற்பிகாவின் கண்களை நோக்கிய அகிலன் தன் மதிய உணவு பையுடன் உரையிடப்பட்ட மற்றொரு பையையும் சிற்பிகாவின் கையில் தந்துவிட்டு மொட்டை மாடிக்கு சென்றுக்கொண்டிருந்தான்.
அனைத்தையும் இல்லத்தி;ன் வரவேற்பறை இருக்கையில் வைத்து விட்டு தானும் மொட்டை மாடியை நோக்கி நகரத் தயாரானாள் சிற்பிகா.
பௌர்ணமி நிலவொளியில் என்றும் தன் நேரத்தை செலவிடாத அகிலனோ இன்று சிற்பிகாவிற்காக மேல்மாடியில் உலா வரும் பொழுது அவளுக்கு சற்று ஆறுதலாகவே இருந்தது.
மண்சட்டியுடன் நிலவொளிக்கீற்றில் பவனி வந்துக்கொண்டிருந்தான் பவன். “ம்மாஆஆ மம் மம்” என்று தன் கையில் சமிஞ்சையுடன் அரிசியை இறைத்து விட வேண்டும் என்ற ஆவலுடன் சொல்லிக்கொண்டிருந்தவனிடம் ஏதும் பேசாமல் பவன் கண்ணத்தில் தாய்மை முத்தங்ளுடன் தன் மனம் ஆறுதல் அடைந்ததாக திருப்தி அடைந்திருந்தாள் சிற்பிகா.
இரவு உணவிற்காக வீட்டிற்குள் வந்தவர்கள், தொலைக்காட்சியினை காட்சிபடுத்திவிட்டு தம் வேலைகளுக்குள் தயாரானார்கள். பவன் தன் கையில் இருந்த மரத்தால் ஆன பறவைகள் வடிவங்களை அடுக்கிக்கொண்டிருந்தான்.
“புள்ளினங்கால்….. என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்த அந்நேரம் வேலையினின்று சிறிது விலகி நமட்டுச் சிரிப்பை உதிர்த்துச் சென்றாள் சிற்பிகா”…. கவனித்தும் கவனியாதது போல் பவனுடன் மழலைச்சொல் வளம் சேர்த்துக்கொண்டிருந்தான் அகிலன்.
இரவுத் தூக்கத்திற்கு சென்றவள் தன் கையில் இருந்த அலைபேசியுடன் சிறிது நேரம் பேசா மொழிகளுக்கு சென்றிருந்தாள். ஆம்…. சமூக ஊடகங்கள் வழியே போட்டித்தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தவளுக்கு….
“புலனம்” என்ற செயலி புலப்படுத்தியது அவளது சற்று இருள் அகத்திற்கு புலன் புறம்.
“கவித்தென்றல்” என்ற குழுவானது போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதாகவும், அக்குழுவில் இணைவதற்கு பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்ட புலனக்குழுவின் பதிவுகளை படித்துக்கொண்டிருந்தபோது தனது மனதிற்குள் ஓர் உணர்வு பெற்றவளாய் எழுந்து சென்று தண்ணீரை பருகிவிட்டு எவ்வித மனஇருளும் இன்றி பௌர்ணமி ஒளிசூழ்ந்த நள்ளிரவில் கண்ணயர்ந்தாள்….
ஐந்து வருடங்களாக காதலித்து கரம் பிடித்த மனைவியாக இருந்தபோதும், சிற்பிகாவைப் பற்றி முழுவதுமாக உணர்ந்திருந்ததாக நினைத்துக்கொண்டிருந்த அகிலன் அவளது தெளிவான மனதைக் கண்டபோது, இவனுள் குழப்பம் தொடங்கிவிட்டது….
விடுமுறை ஞாயிறு அன்று புலர்ந்த சூரியனின் ஒளிக்கீற்றுக்கு முன் தடுப்புச்சுவரின் மீது கைவைத்து கண்களை சுற்றும் அலசிக்கொண்டிருந்தாள் சிற்பிகா. பறக்கும் “குருவிகளையும், பறவைகளையும்” பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். பரவசம் பலரசக்கலவையாக அவளது முகத்தில் மின்னிக்கொண்டிருந்தது.
ஒன்றும் புரியாத குழம்பிய மனதுடன் அன்றைய மாலைப் பொழுதில் நெற்களஞ்சிய நகரின் “பெரிய ஆலயத்தின்” தோற்ற வியப்பை மீண்டும் ஒரு முறை வியப்பு என்பது போல் கடந்து சென்றனர் மூவரும்.
“கான் கடந்து விரிந்து வரும் கா-விரி” நதிக்கரையின் நீருடன் தன் ஓட்டங்களைக் கடந்திருந்தாள் சிற்பிகா… அவளது பார்வைகளோ ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கை நோக்கிக் கொண்டிருந்தது….
“சிற்பி….” என்று அழைத்த அகிலனை நோக்கி…
“புரியுது அகில்”…. ஒன்னும் இல்லை… என்று தன் புலனத்தின் பதிவை காண்பித்தாள். அகிலனுக்கு மேலும் குழப்பம் தான் ஏற்பட்டிருந்தது. ஆம், பால் காய்ச்சி நாம் குடிபெயர்ந்த ஒரு வாரமாக தான் பறவைக்கு தானியம் வைக்க பவனுக்கு சொல்லிக்கொடுத்தோம்” இப்போது, உனது போட்டித்தேர்வு பயிற்சியில் இணைவதற்கு நிச்சயமாக இந்த செயல் செய்ய வேண்டும். ஆனால், சிவகாமி அம்மாஆஆ… என்று அகிலன் முடிப்பபதற்குள்….!
“ஒரு வாரம் தான் தானியம் வைத்தோம் என்பதைத் தாண்டி… பவன் மனதில் பதிந்த உணர்வு தான் என்னை சிறிது கலக்கம் அடையச்செய்திருந்தது”.
“இரண்டு வயது குழந்தைக்கு இந்த பழக்கத்தை உண்டாக்கி விட்டு இப்போது அவன் அந்த மண்சட்டியுடன் “ம்மாஆஆ மம் மம்” என்று கையை சமிஞ்சை மூலம் அரிசி போட வேண்டும் என்று கேட்பவனிடம் என்ன சொல்லி புரியவைப்பது என்பது மட்டும் தான் நான் யோசித்துக்கொண்டிருந்தேன்"
“ஆனால்”…..
“இந்தப் பதிவை பார்க்கும் போது… அரிசி தானியம் என்பதெல்லாம் தாண்டி… பறவையை பாதுகாக்கும் எண்ணம் கொண்ட நிறைய மானிடர்கள் பூமியில் வலம் வந்துதான் கொண்டிருக்கிறார்கள். நல்ல செயல் நாம் செய்தாலும் பிறர் செய்தாலும் என்றும் நல்ல செயல் தானே…” என்று சிற்பிகா முடிப்பதற்குள்….
சிற்பிகாவின் கையைப் பற்றி ஓடும் காவிரி நீரை மூவரும் ஒன்றாக கையில் திளைத்து மகிழ்ச்சி களிப்பில் வானோக்கி தெளித்துக்கொண்டிருந்தனர்….
நீரைப் போல் வாழ்வு…. என்று உணர்ந்தவளாய்! அகிலனின் கரம் பற்றி…. “பவனுக்கு புரியவைப்பதற்கு வழியும் இருக்கிறது என்றவளாய்”….
நதிக்கரையில் குயவரால் வனையப்பட்ட “குவளையை” பவன் கையில் வாங்கிக்கொடுத்து காவிரி நீரால் நிரப்பி பத்திரமாக இல்லம் சேர்க்கும் கலையையும் பவனிடம் புரியவைத்திருந்தாள் தன் உணர்வு மூலம்.
வாயிலில் நுழைந்த உடன் படிகளில் இருந்த மண்சட்டியை எடுத்திருந்த பவன் “ம்மாஆஆ மம் மம்” என்று கூறுவதற்குள்….
“பவன் குட்டி”….
“குருவி அரிசி மம் மம் சாப்புடும். ஆனா அது தண்ணீ தான் குடிக்காது”
“பவன் குட்டி தண்ணீ குடுத்தா கண்டிப்பா தண்ணீ குடிச்சுக்கும்”…
என்று பவனிடம் கூறியபோது, அகிலனின் கையில் கொண்டுவந்திருந்த குவளையை தன் கையில் பவன் வாங்கிய போது….
“சிற்பி… இன்று தான் உன் மேல் நிறைய காதல் கொண்டது போல் உணர்கிறேன்”… என்றான் அகிலன்…
சிறிது புன்னகையை உதிர்த்தவளிடம் முத்தங்களை சைகையுடன் தந்துவிட்டு சென்றான் அகிலன்….
வாயிற்படியில் நின்றிருந்த பவன் “ப்பாஆஆஆ” என்று கத்தியபோது பதற்றத்துடன் வந்த அகிலன்…
“குவளையின் விளிம்பில் நீரைப் பருகும் புள்” கண்டபோது தன் அலைபேசியின் அந்நிகழ்வை பதித்திருந்தான். சாதாரண நிகழ்வு தான் ஆனால், அகிலனுக்கு அது சிற்பிகாவின் சிற்பம் போன்ற பதிந்த மாறா நிகழ்வாக உணர்ந்திருந்தான்…
அகிலன் அடுத்தநாள் பட்டிமன்றத்தில் உரையாற்ற “புவியும் புலனமும்” என்ற கருப்பொருளை யோசித்துவிட்டு குறிப்பேதும் தோன்றாமல் உறங்கிவிட்டதைக் கண்டிருந்தாள் சிற்பிகா…
“புவி வலம் வரும் வனம், வானம் தினம்…. பூமி என்னும் நிலைபெற்ற புலத்தில் நிலையில்லா உயிர் நாம். இது என்னுடையது, அது என்னுடையது… என்றெல்லாம் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் நம்முள்.. ஆர்ப்பரிக்கும் கடல் முத்துக்களை அள்ளித்தருகிறது. சொத்துக்களை தரவேண்டாம் வித்துக்களை தாருங்கள் புள் என்னும் இனங்களுக்கு!”
என்று குறிப்பேட்டில் குறித்திருந்தாள் சிற்பிகா….
எதார்த்தமாக சூரிய உதயத்தின் முன் மாடிப்படிகளைக் கடந்திருந்தாள் தனது பார்வையால்… ஆம் அன்று அவளது பார் “புள்ளாக” நீரை அருந்திக்கொண்டிருந்த அந்நேரம்….
மற்றுமொரு குவளையில் “தன்கையில் தண்ணீருடன் வந்திருந்தான்” பவன்…. “அம்மா”… “இது கீழ் முற்றத்தில் விழுந்தாலும் தண்ணீர் தான்” … என்று கோர்வையாக பேசிய பவனைச் சுற்றி அணைத்திருந்தாள் சிற்பிகா…
இவர்கள் உரையாடல் புரிந்தது போல் “சிட்டுக்குருவியும்” படபட சத்தத்துடன் இறக்கையை அடித்துக்கொண்டு சிட்டாய் பறந்திருந்தது….
அந்நேரம் “காவிரியால் நீர்மடிக்கு……. என்ற பாடல் தொலைக்காட்சியில் ஒலிக்கத்தொடங்கிய போது…
கதவருகில் நின்று கவனித்த அகிலன்… சிற்பிகாவின் தோள் சாய்த்து பவனையும் அணைத்திருந்தான்… சிற்பிகாவின் கையில் “காவிரியின் புள்” என்ற தலைப்பில் “சர்வதேச பறவைகள் தின கருத்தரங்கத்திற்கான” அழைப்பிதழை வைத்தபோது, அவள் கண்ணீர் இப்போது தண்ணீர் குவளையாக மாறிப்போயிருந்தது! காதல் புன்னகையுடன்…
பிரியமுடன்…
பிரியா மிளிர்வண்ணன்….
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்