செல்லமுத்து பெரியசாமி
சிறுகதை வரிசை எண்
# 317
சாபமே வரமாய்!
“சாய்! சாய்!!” என்ற சாய்வாலாக்களின் குரலுடன் என்.ஜே.பி. ஸ்டேசன் என்னை வரவேற்றது! குவாஹட்டி வரை செல்லும் அந்த இரயில் வண்டி மெதுவாக ஊர்ந்து சென்று முதல் பிளாட்பாரத்தில் நின்றது. நான், என்.ஜே.பி என்று சுருக்கமாக அழைக்கப் படும் அந்த ‘நியூ ஜல்பைகுரி’ ஸ்டேசனில் இறங்கிக் கொண்டேன். புதிய இடம் முதல் முறையாக வருகின்றேன். அங்கிருந்து நான் போக வேண்டிய ‘டீஸ்ட்டா லோயர் ஹைடல் பவர் ப்ராஜெக்ட்’ சுமார் 50 கி.மீட்டர் இருக்கும். டாக்சி பிடிக்கலாமா? இல்லை பஸ்ஸில போய் பிறகு டாக்ஸிக்கு மாறலாமா என்று யோசித்தவாறே எக்ஸிட் அறிவிப்புப் பலகை இருந்த திசையில் நடந்தேன். இந்த ட்ராலி பேக் வந்த பின் தன் சுமையைத் தானே சுமக்கும் பண்பு அனைவருக்குமே கைவந்து விட்டது!
வெளியேறும் வழியை நெருங்கும் போது ஒருவர் பெயர் தாங்கிய அட்டை ஒன்றை வைத்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தேன். “சரி! யாரோ வி.ஐ.பி வருகின்றார்கள் போலும்! அவர்களை வரவேற்கச் செய்யப் பட்டிருக்கும் ஏற்பாடாக இருக்கும்” என்று எண்ணியவாறு முன்னேறினேன். பக்கத்துல போனதும் ‘நாராயணன்’ என்ற எனது பெயரைக் கண்டு ஒரு கனம் அசந்து போனேன். டிப்பார்ட்மென்ட் பெயரும் எழுதப் பட்டிருந்ததால் சந்தேகமே இல்லாமல் என்னை அழைத்துக் கொண்டு போகத்தான் இந்த ஏற்பாடு என்று தெரிந்ததும் மிகவும் நெகிழ்ந்து போனேன்.
நின்றிருந்தவர் அந்த ப்ராஜெக்ட் அலுவலகத்திலிருந்து அனுப்பப் பட்ட ஊழியர்தான் இருப்பார். பக்கத்துல நின்றவர் ஜீப் ஓட்டுநர். நான், “புதுசா வந்திருக்கும் ஹெட்-கிளர்க், நாராயணன்!” என்றேன் இந்தியில். இருவரும் சொல்லி வைத்தார்ப் போல், “நமஸ்த்தே சாப்!” என்றார்கள். “லக்கேஜ் ஹமே தேதீஜியே சாப்!” என்றவாறு என்னுடைய லக்கேஜ்களை எங்கிட்டயிருந்து வாங்கிக் கிட்டாங்க! இல்லையில்லை புடுங்கிக் கிட்டாங்க! வெளியே நிறுத்தப் பட்டிருந்த ஜீப்பை நோக்கி அவர்கள் நகரத் தொடங்குனாங்க! அவர்கள் பின்னால் நானும் முன்னே நடக்க என்னுடைய நினைவுகளோ பின் நோக்கி நகர ஆரம்பிச்சுது.
லோயர் டிவிசன் கிளர்க்காக (LDC ) இந்த வேலையில் சேர்ந்த அந்தக் காலம் பற்றிய நினவுகள் என் நெஞ்சில் அலைமோதின.
இப்ப நான் ஜாயின் பன்ன இருக்கின்ற இந்த ஹெட் கிளர்க் போஸ்ட்டுக்கு முப்பத்தி இரண்டு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது. இப்போது கூட நான் டெப்புட்டேசனில் தான் ஹெட் கிளர்க்காகப் போகிறேன். திரும்பவும் என்னுடைய டிப்பார்ட் மென்டுக்குத் திரும்பும் போது பழைய அதே அப்பர் டிவிசன் கிளர்க் காகத் தான்( UDC ) போகனும். நான் டிகிரி முடித்திருந்தாலும் லோயர் டிவிசன் கிளர்க்- காகத்தான் (LDC) இந்த வேலையில் சேர்ந்தேன்.
ஆனால், அதேசமயம் வெறும் டிப்ளமோ முடித்து வரும் சின்ன வயசுப் பசங்க சேரும் போதே ஜூனியர் இஞ்சினியராகச் சேர்ந்து ஒரு ஹெட் –கிளார்க் வாங்கற சம்பளம் வாங்கறாங்க . அவங்களுக்குச் சமமாச் சம்பளம் வாங்கறதுக்கு நாங்க 35-வருடம் காத்திருக்க வேணும். அதுவு மில்லாமல் இந்தச் சின்னப் பசங்க ஈவினிங் காலேஜுல சேர்ந்து பி.ஈ டிகிரி முடிச்சிட்டுப் புரொமோசனுக்கு ரெடியாகிக் கிறாங்க!
இதனால, கிளர்க்குகளாக இருக்கும் எங்களுக்கு அவர்கள் மேல் ஒரு இனம்புரியாத பொறாமை!
டிகிரி முடித்த கையோடு நான் முதன்முதலில் எல்.டி.சி-யாக நுழைந்த அந்தக் கோயமுத்தூர் அலுவலகம். ஒரு நாள் காலை பத்து மணியிருக்கும்.!
“வணக்கம் சார்!” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். நல்ல கருப்பா ஒரு பையன் நின்னுக்கிட்டு இருந்தான். வயசு ஒரு பதினெட்டோ பத்தொம்பதோ இருக்கலாம். “நீ யாருப்பா? உனக்கு என்ன வேணும்?” – ன்னு கேட்டேன். “இந்த அப்ளிக்கேசன சார் உங்க கிட்டக் குடுக்கச் சொன்னாரு !” –ன்னான் “நாங்கேட்ட கேள்விக்குப் பதிலே சொல்லலியே! மொதல்ல நீ யாரு? எங்க இருந்து வர்ரேங்கற விவரத்தச் சொல்லு!”
“சார் நான் பரமக்குடில இருந்து வர்ரேன். எம்பேரு கந்தசாமி.” –ன்னு சொன்னான்.
அவங்கொடுத்த அந்தக் கவரப் பிரிச்சுப் பாத்தேன். அது கார்ப்பென்டர் வேலையில சேரருதுக்கான ஒரு அப்ளிக்கேசன். அந்த டிவிசன்ல உள்ள மெக்கானிக்கல் யூனிட்டுல கார்ப்பென்டர் போஸ்ட்டுக்கு ஒரு வேக்கன்சி இருந்தது. அதுல சேர விண்ணப்பம் போட்ருக்கறான்.
அதுக்குள்ள இராமசாமி பியூன் வந்து, “சார்! உங்கள டி.இ. சார் கூப்பிடராருங்க!” –ன்னு சொன்னான். நான் சாருடைய சேம்பரில்,”குட் மார்னிங்க் சார்!” என்றவாறு நுழைந்தேன். கையில் அவன் குடுத்த அப்ளிக்கேசன் இருந்தது! எனது வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாத் தலைய மட்டும் ஆட்டுனார்!
“இந்தக் கந்தசாமிங்கற பையன் புதுசாக் கலாசியாச் சேந்தவன். நல்லாக் கார்பென்டர் வேல பாக்கறான். சேந்ததுல இருந்து நெறையா வேல செஞ்சிருக்கறான்! நல்ல பையன்! நம்ம மெக்கானிக்கல் யூனிட்ல கார்ப்பென்டர் அப்பாயின்மென்ட் போட்டுக் கொடுத்துருவம்!” –ன்னு சொல்லி எம்மொகத்தப் பார்த்தாரு. “சார்! இப்பத்தா அப்ளிகேசனக் கையில வாங்குனேன். பாத்துட்டுச் சொல்றன் சார்!”–ன்னு சொன்னேன்.
“சரி! சரி!! இந்தப் பையனுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டரக் குடுக்கறதுக்குத் தேவையானதச் செய்!” னு சொன்னவாறே, “நீ போலாம்!” –னு சொல்றமாதிரித் தலைய ஆட்டுனாரு.
என்னோட சீட்டுக்குத் திரும்புன என்னப் பின் தொடர்ந்து வந்தான் அவன். “தம்பீ நீ என்ன படிச்சிருக்கே?” ன்னு கேட்டேன். அதுக்கு அவன் “நான் எஸ் எஸ் எல் சி படிச்சிருக்கிறன் சார்!” ன்னு சொன்னான். “தச்சுத் தொழில் எங்கே படிச்சே?” இது எனது அடுத்த அஸ்த்திரம். “அது வந்து சார்! எங்க அப்பா கிட்டத்தான் கத்துகிட்டன் சார்!” அப்டீனான். “அது பத்தாதே தம்பி! ஐ.டீ ஐ-ல படிச்சிருக்கனும். ஐ.டீ.ஐ.-ல கார்பென்டர் ட்ரேடுல படிச்சுப் பாஸ் பன்னின சர்டிஃபிகெட் இருந்தாக் கொண்டுவா! அப்பத்தான் உனக்கு அப்பாயின்மென்ட்டு கிப்பாயின் மென்ட்டு எல்லாம்! இல்லையா அடுத்த பஸ்ஸப் புடிச்சு நேரா ஊரு போயிச் சேரு!” ன்னு கொஞ்சம் கடுமையாவே சொல்லீட்டேன்.
அந்தப் பயபுள்ள நாஞ்சொன்னத அப்படியே போயி டிவிசனல் இஞ்சினியரு கிட்டச் சொல்லீட்டான். சார் என்னக் கூப்பிட்டார்! நான் அவர் அறைக்குள் நுழைந்ததும் “ஏப்பா இப்படிப் பன்றே…? பேருதா நாராயணன்! பன்றதெல்லாம் ஏறுக்கு மாறு! “! ன்னு ஆரம்பிச்சு என்ன லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கீட்டாரு….!
அவரு சொல்றதப் பொறுமையாக் கேட்டுக்கிடிருந்த பிறகு, “ட்ரேடு சர்டிபிகேட் இல்லாமல் அப்பாயின்மென்ட் லாம் போடமுடியாது சார்!” ன்னு தீர்க்கமாச் சொல்லீட்டேன். அதுக்கு அவரு, “என்ன செய்வியோ? ஏது செய்வியோ? எனக்குத் தெரியாது. அவனுக்கு கார்ப்பென்டரா அப்பாயின் மென்ட் போடறது உன்னுடைய வேலை!” ன்னு சொல்லி என்ன அனுப்பிச் சிட்டாரு.
அவனிடம், “எதாவது ஐ.டீ.ஐ.-க்குப் போயி காசு குடுத்து ஒரு ட்ரேடு சர்ட்டிஃபிகேட் வாங்க முடியுமன்னு பாரு!” ன்னு அவன அனுப்பிச்சி ட்டாரு. ஓரு ஆறு மாசம் கழிச்சு அவனும் ஒரு சர்ட்டிஃபிக்கேட்டோடு வந்தான். அதை வாங்கிப் பார்த்து விட்டு, அதை பைலில் வைத்து நோட் எழுதி சாருக்கு அனுப்பிச்சிட்டேன். அதில் ‘அவன் படித்த அந்த ஐ.டீ.ஐ. அப்ரூவல் இல்லாத ஒரு கல்வி நிறுவனம். ஆகவே அவன் கொண்டு வந்த அந்த சான்றிதழ் செல்லாது.’ என்று எழுதியிருந்தேன். இவ்வாறு பைலில் நோட் எழுதிவிட்டால் டி.இ. விரும்பினாலும் அவனைக் கார்ப்பென்டர் போஸ்ட்ல சேர்க்கவே முடியாது. இதத் தெரிஞ்சுக் கிட்டுத் தான் அந்தக் காரியத்தைச் செய்தேன்.
இந்தப் பையனுக்கு அப்பாயின்மென்ட் போட்ட உடனே ஒரு எல்.டி.சி. வாங்கற சம்பளம் வாங்குவான். எல்.டி.சி-ஆகறதுக்கு நானெல்லாம் ஒரு டிகிரி முடிச்சுட்டுத்தான் வரவேண்டியிருந்தது. எனக்குள்ள இருந்த அந்தப் பொறாமை தான் அந்தப் பையனுக்கு அப்பாயின்மென்ட் போடவிடாமத் தடுத்து நிறுத்துன்னு சொல்லிக்கிட்டே இருந்துது.
அந்த பைலப் பார்த்த `உடனே என்னைக் கூப்பிட்ட டி.இ. ஆகாயத்துக்கும் பூமிக்குமாக் குதிக்க ஆரம்பிச்சுட்டார். “ஏப்பா அவன் தகப்பனில்லாத பையனாச்சேன்னு உதவி பன்னலாம்னு பாத்தா இப்படிப் பன்னீட்ட யேப்பா? ம்… சரி! சரி போ! எதோ உன்னால முடிஞ்ச உதவிய நீ செய்யறே… ம்..!” அப்டீன்னாரு.
அப்புறம், கொஞ்ச நேரங்கழிச்சு என்னைக் கூப்பிட்டு, “சரி சரி! அவனுக்குக் கலாசியாகவே கோயமுத்தூருக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் போட்ரு !” அதுவும் இன்னைக்கே போட்டு அவன் கையில ஆர்டரக் குடுத்தனுப்பு!” என்றார். அதுக்கு, “சரீங்க சார்!” என்றேன்.
“அவனுக்கு என்ன செய்யனும் ஏது செய்யனும்கறத நாம்பாத்துக்கறேன் விடு…!” என்றார் மீண்டும்.
நான் அவனுக்கு மாறுதல் உத்தரவு போட்ட அன்னைக்கே எனக்கு மாறுதல் உத்தரவு வந்துருச்சு குஜராத்துக்கு! பாலக்காட்டுப் பக்கத்துல சொந்த ஊருல இருந்து தினம் கோயமுத்தூர் வந்து போயிக்கிட்டு இருந்த எனக்குப் பெரிய சம்மட்டி அடியா இருந்துச்சு!
எனக்கு மூணும் பெண்குழந்தைங்க! மூணு பொண்ணுகளையும் படிக்க வெச்சுக் கல்யாணம் செய்து வைக்க வேண்டிய பெரிய பொறுப்பு! ஒரு வாரத்துல என்னை ரிலீவ் பன்னீட்டாங்க! நானும் வேற வழியில்லாம குஜராத்துல போயி ஜாயின் பன்னவேண்டீதாப் போச்சு!. அங்கிருந்து மீண்டும் கோயமுத்தூருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கறது அவ்வளவு சுலபமான காரியமா இல்ல! அங்க ஏழெட்டு வருடம் குப்பை கொட்டுன பிறகும் ஹைதராபாத்துக்குத் தான் போக முடிஞ்சுது!
அதுக்கப்புறம் கோயமுத்தூருல என்ன நடந்ததுங்கற விவரம் எதையும் தெரிஞ்சுக்கிற வாய்ப்பு எனக்கு இல்லாமப் போயிருச்சு!
ஹைதராபாத்துலயிருந்து மறுபடியும் சிக்கிமுக்கு இவ்வளவு தூரம் ஏன் வர்றேன்னு நீங்க கேக்க நெனைக்கிறதும் சரிதான்! இங்க வர்றதுக்குக் காரணம் எனக்கிருந்த பணத்தேவை ஐயா! பணத்தேவை! சிக்கிம் வந்து வேலை செய்யறதால டெபுட்டேசன் அலவன்சு, பேட் கிளைமேட் அலவன்சு, டிபிக்கல்ட்டு ஏரியா அலவன்சு இப்படி எல்லாமாச் சேத்து இப்ப வாங்கற சம்பளத்தப் போல இருமடங்கு சம்பளம் எனக்குக் கெடைக்கும். அதில்லாம ஹெட்-கிளார்க் போஸ்ட் வேற!
இதற்குள், நான் ஜாயினிங்க் ரிப்போர்ட் குடுக்க வேண்டிய டன்னல் டிவிசன் ஆபீஸ் முன்பு ஜீப் நின்றது. மூன்று மாதம் முன்பு எனக்கு ஆர்டர் வந்தபோதே விசாரிச்சேன். முன்பு கோயமுத்தூரில் இருந்த சண்முக நாதன் என்பவர்தான் அங்கு டிவிசனல் இஞ்சினியராக இருக்கறதாச் சொன்னாங்க ... ! ரொம்ப நாளைக் கப்புறம் அவரச் சந்திக்கற ஆவலோடு அவரது அறைக்குள் போனேன்.
ஆனால், அந்த அறையினுள் நுழைந்ததும் என்னை வரவேற்றது யார் தெரியுமா? முன்பு கார்ப்பென்டர் போஸ்ட்டுக்கே தகுதி யில்லன்னு யார நிராகரிக்க வெச்சேனோ அதே கந்தசாமிதான்! அந்தக் கந்த சாமிதான் சுழல் நாற்காலியில் அமர்ந்தவாறு டிவிசனல் இஞ்சினியராக என்னை வரவேற்றான். இல்லையில்லை வரவேற்றார்! அவர அந்தப் போஸ்ட்டுல பார்த்த உடனே அவமானத்துல என்னுடைய எண் சாண் உடம்பு ஒரு சாணாக் கூனிக்குறுகிப் போனது போல இருந்தது எனக்கு! அவர் முகத்தப் பாத்துப் பேசவே வெட்கமா இருந்தது.
நான் என் மகள் திருமணத்துக்காக கடந்த இரண்டு மாசம் லீவுல இருந்தபோது சண்முகநாதன் மாறி அந்த இடத்துக்கு இந்தக் கந்த சாமி வந்திருக்கறார் போல! இந்த விவரம் எனக்குத் தெரியாமப் போயிருச்சு!
“வணக்கம் சார்! என்னை ஞாபகம் இருக்குதுங்களா?” என்றேன்.
“உங்கள மறக்க முடியுங்களா சார்?” என்றவர் “கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்க!” என்று தன்னருகில் அழைத்தார். இங்க பாருங்க சார் நான் தினமும் கும்பிடற சாமிய!
அவர் சுட்டிக் காட்டிய திசையில் என் பார்வை சென்றது. அங்கே இருந்த என்னுடைய அந்தப் பழைய புகைப்படம் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது!
நீங்க மட்டும் அன்னைக்கு கார்பென்டரா அப்பாயின்மென்ட் போட்டிருந்தீங்கன்னு வெச்சுக்கங்க …! இன்னமும் நான் கார்ப்பென்டராக வேதான் இருந்திருப்பேன். எல்லாம் உங்க புண்ணியம் சார்!” என்றார்
“இது எப்படி சாத்தியமானது?” என்ற எனது மனதில் தோன்றிய கேள்விக்கான பதிலை அவரே சுருக்க மாகச் சொன்னார்!
அன்று கோயமுத்தூருக்கு மாற்றல் உத்தரவு போட்ட அன்னைக்கு அவரக் கூப்பிட்ட டி.இ. , “கார்பென்டர் வேலையெல்லாம் உனக்கு வேண்டாம்! நீ பார்ட்-டைம் டிப்ளோமாப் படி! நான் உன்னைய ஜேயியா ஆக்கிக் காட்டறேன். அதுக்கு உனக்கு என்ன உதவி வேணுமுன்னாலும் என்னக்கேளு!” ன்னு சொல்லி அனுப்பிட்டார்.
அவர் சொன்னது போலவே டிப்ளோமாவில் சேர்ந்து அதை முடிச்சுட்டான். முடிச்ச ஒடனே அவனோட அதிர்ஸ்ட்டம், எங்க டிவிசன்லேயே நிறைய ஜே.இ. வேக்கன்சி வந்தது. அவரும் ஜே.இ. ஆயிட்டார். அத்தோடு நிற்காமல் பார்ட் டைம் பிஈ கோர்ஸில் சேர்ந்து கிரஜுவேட்டும் ஆகிவிட்டார். ஏ.இ. புரொமோசனும் உரிய காலத்தில கெடச்சுது. ஏ.இ-யா மூணு வருசம் அனுபவம் இருந்ததால இந்த ப்ராஜெக்ட்டுக்கு டி.இ – யா டெபுட்டேசன்-ல வந்துட்டார்
“இப்படியும் நடக்குமா?” எனச் சந்தேகப்பட்டு என்னையே ஒருதரம் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். நான் காண்பது கனவல்ல நிஜம்தாங்கறதை உறுதி செஞ்சுக்கிட்டேன்.
சாபத்தைச் சாபமாகவே ஏத்துக்கிட்டு துன்பத்தில் உழல்றவங்க மத்தியில அதையே வரமாக மாத்திக்காட்டிய அந்தக் கந்தசாமி மட்டுமில்ல அதுக்குப் பக்கபலமா இருந்த டி.இ அவர்களும் என் மனதில் உயர்ந்து நின்றனர்.
~~செல்லமுத்து பெரியசாமி
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்