logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

இந்திரலேகா

சிறுகதை வரிசை எண் # 316


முதிர்ந்த வேரின் பக்கவாட்டுக் கிளைகள் ----------------------------------------------------- பேருந்து நிறுத்தத்திற்கு சம்பந்தம் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் நிழற்குடைதான் எங்கள் ஊர் கிழடுகளின் பாராளுமன்றம். தீர்த்துவைக்க முடியாத சிக்கல்களை புலம்பித் தீர்ப்பதற்கெனவே எல்லா நாட்களிலும் தன்னைத்தானே நலம் விசாரித்துக்கொள்ளும் அந்த கட்டிடம்தான் கிழடுகளின் தற்காலிக முதியோரில்லம். அவர்களுக்கென்று எழுதிவைத்தது போல் இளவட்டங்களையும், சிறுவர்களையும் வாசலோடு அனுப்பிவிடும். இப்படியான சூழலில்தான் முதல்முறையாக மயங்கிக் கிடந்த தாத்தாவை தூக்கி வருகிறவர்களோடு சென்றிருந்தான் நிரஞ்சன். இரண்டாவது முறையாக அங்கே செல்லும்போது அவனது தாத்தாவும் பாலுவின் தாத்தாவும் பேசிக்கொண்டிருந்தார்கள் அவனைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திய அவனது தாத்தா முதல்வாரம் பார்க்க வந்த அத்தை கொடுத்துவிட்டுப் போன பலகாரத்தை மறைத்தபடி வெற்றிலை பொட்டலத்திலுருந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுத்து எதாச்சும் வாங்கிக்கடா நிரஞ்சா என்றபடி வேட்டியை இன்னும் கொஞ்சம் சுருட்டிக்கொண்டார். தாத்தா ஏன் இப்படி இருக்காரு அத்த நம்ம வீட்டுலையும்தான பலகாரம் கொடுத்துட்டு போனுச்சு தாத்தா எதுக்கு மறைக்கணும் இப்படி யோசித்துக்கொண்டே நின்றவனை ஜோதி அதட்டினாள் போடா போய் அந்த கெழவன தெண்டசோறு சாப்பிடக் கூட்டிட்டு வா மேலும் கத்தினாள். இவன் எழுந்து வாசலுக்கு செல்லும் முன் தாத்தா திண்ணையில் அமர்ந்திருந்தார் விழப்போகும் சருகைப்போல் சலனமின்றி அவரைப் பார்த்தபடி யோசித்தவன் அம்மா சொல்றதும் சரிதான் இவரு நம்மகிட்டயே பலகாரத்த மறச்சு சாப்பிடுறாரு பொழுதுக்கும் அந்த பஸ் ஸ்டாண்ட்ல எதாச்சும் பேசிட்டு சாப்பிடமட்டும் கரெக்ட்டா வந்துடுறாரு அப்பாதான் வேலைக்கு போயிட்டு எல்லாம் செய்யுறாரு ஆனா இவரு யாரு பணம் கொடுத்தாலும் அப்பாகிட்டக் கூட தராம வச்சிக்கிறாரு இப்படியும் அப்படியுமாக யோசித்துக்கொண்டே உறங்க சென்றான். மறுநாள் அதிகாலையிலே அவனும் அவன் அப்பா, அம்மா மூவரும் பாத்து ஊருக்கு போய்விட்டு இரண்டுநாள் கழித்து வீடு திரும்புகையில் எல்லாம் அப்படியே இருந்தது ஆனால் விளக்கி வைத்துவிட்டுப் போன பானை ஒன்று அடுப்பங்கரையில் காய்ந்த சோற்றோடு சாய்ந்துக் கிடந்தது இந்தக் கெழவன ரெண்டு நாளு வீட்டுல விட்டுட்டுப் போனா யாரு வீட்டுலயாச்சும் கஞ்சி வாங்கிக் குடிக்காம இஷ்டத்துக்கு எதாச்சும் பண்ணி வைப்பாருனு திட்டிக்கிட்டே தோட்டத்துக் கதவை திறந்தவள் அய்யோ!மாமா என்று அலறினாள். நிரஞ்சன் பந்தலின் ஒரு மூலையில் நின்றுக்கொண்டே எல்லோரையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் முதல் ஆளாக அத்தை ஓடிவந்தாள் அதுவரை இருந்த சத்தம் அப்போது அலைகளாக பேரலைகளாக ஊர் முழுக்க பரவியது. இதற்குமுன் வரை அத்தை அழுவதையும், அப்பா அழுவதையும் முக்கியமாக தன் அம்மா அழுவதையும் பார்க்காதவன் தானும் அழத் தொடங்கினான் அவன் அழுவதற்கு வேறெந்த காரணமும் இல்லை. அடுத்ததாக தட்டுத்தடுமாறி கைத்தடியோடு வந்து சேர்ந்த பாலுவின் தாத்தா அழவில்லை புலம்பத் தொடங்கினார் யாருக்கோ கேட்கவேண்டும் என்பதற்காகவே புலம்பினார் மீண்டும் மீண்டும் புலம்பினார் அடேய் கோவிந்தசாமி என்ன விட்டுட்டுப் போக உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு எனக்குனு நீ இருக்கனு இருந்தேன் இப்படி விட்டுட்டு போயிட்டியே உனக்காச்சும் பாசமான பையன், மருமக, பேரப்புள்ள நீயே இவ்வளவு சீக்கிரம் போயிட்ட நான்லாம் எப்படிடா வாழமுடியும் எப்போ பாத்தாலும் தெண்டசோறுனு சொல்ற புள்ளய பெத்துட்டு ,கெழவன் எப்ப சாவப் போறானோனு தெனமும் சொல்ற மருமக, பேரனையும் வச்சிட்டு பொலம்பக் கூட நீ இல்லாம என்னப் பண்ண போறேனோ என்று ஒரு விசும்பலோடு கீழே விழுந்தார். நெஞ்சில் அடித்துக்கொண்டு வந்த சாந்தி அக்கா இப்படிதான் அழுதா, அய்யோ தாத்தா நானும் மேகலாவும் வீட்டு செலவுக்கும் குழுவுக்கு காசுக் கட்டணும்னு அழும்போதுலாம் காசுக் குடுப்பியே! அதத் திருப்பிக்கூடக் கேட்டதுல்ல உனக்கு என் கையால ஒரு நாளாச்சும் சமைச்சி எடுத்துவரேனு சொன்னேன் நீதான் மருமக இரண்டு நாளுக்கு சாப்பாடு செஞ்சு வச்சிட்டு போயிருக்கா வீணாப் போயிரும் வேணாம்னு சொல்லிட்ட.. ஜோதி அக்கா இல்லாதப்போக்கூட உனக்கு சாப்பாடு எடுத்து வந்துக் குடுக்குற பாக்கியம் எனக்கு இல்லையே என அழுதாள். இப்போது நிரஞ்சன் கோவிந்தசாமிக்கு அருகில் வந்தான் அவரது கையைப் பிடிக்க சென்றவனின் கைப்பட்டு விழுந்தது ஐந்து ரூபாய் நாணயம். அவன் அழவதற்கு இப்போது கரணங்கள் இருக்கின்றன ஆனால்,அவனுக்கு அழுகை வரவில்லை.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in