logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Jaya NaVi

சிறுகதை வரிசை எண் # 315


தலைப்பு ------------------         கனலும் கந்தக பூமியும் கசியும் மனதும் -----------------------------------------------------------------   " ஏய்!  தேனு  நேரமாச்சு பிள்ள இன்னும் என்ன பன்னுற? வண்டி கிளம்பிடப் போகுது சீக்கிரமா ஓடியாடி" என கத்தினாள் செண்பகம்.                    "தோ வந்துட்டேன்டி" என்று  அரக்க பரக்க சாப்பாட்டுத் தூக்கோடு ஓடி வந்தாள் தேன்மொழி.                 இருவரும் சிவகாசியில் இருக்கும் பட்டாசு ஆலையில் வேலை செய்பவர்கள். ஆலையின் பேருந்து அதிகாலை ஆட்களை ஏற்றிக் கொண்டு போகும். வேலை முடிந்து வர இரவாகிவிடும்.                " இவ்ளோ நேரம் என்னடி பண்ணுன. டிரைவர் வேற முனங்கிட்டே இருந்தான்" கேட்டாள் செண்பகம்.          "என்னத்தடி சொல்ல,  பிள்ளைங்களுக்கு பள்ளிக்கூடம் லீவு விட்டுட்டாங்க. வீட்ல தான் இருக்கனும். இந்த மனுஷன் வேற வளர்ந்த புள்ளங்க இருக்காங்கேன்னு பாக்காம கண்ணுமண்ணு தெரியாம குடிச்சிட்டு கிடப்பான். இதே விசனமா இருந்திச்சிடி அதான் கஞ்சி காய்ச்ச கொஞ்ச லேட்டாகிடுச்சி. பெரியவள எழுப்பி பாத்து சூதானமா தங்கச்சிங்கள பாத்துக்கோன்னு சொல்லிட்டு வாரேன்" என்றாள் முக வாட்டத்தோடு.                முன்று பெண் குழந்தைகளோடு குடிகார கணவனை வைத்துக் கொண்டு கஷ்டபடுபவள் தேன்மொழி.                  "சரி விடு என்ன பண்றது ஆண்டவன் நம்ம தலையில இப்படிதான் கஷ்டப்படனும்ன்னு எழுதிருக்கான்" என்றாள் ஆறுதலாக செண்பகம்.                   செண்பகத்தின் கணவன் லோடுமேனாக வேலை செய்கிறான். எட்டு வருடங்களாக குழந்தை இல்லாத கவலை அவளுக்கு. ஆலை வேலை அவளுக்குப் புதிது என்பதால் சீனி வெடியில் மருந்து அடைக்கப்படுவதற்கு முன் செய்யும் டிஸி குத்தும் வேலையை செய்து கொண்டிருந்தாள். தேன்மொழி சரம் பின்னும் வேலையில் இருந்தாள்.                பட்டாசு ஆலை வந்ததும் இருவரும் அவரவர் பகுதிக்குச் சென்று வேலை செய்ய ஆரம்பித்தனர்.              போர்மேன்  மருந்துகளை அளந்து எடுத்துக் கொடுக்க மருந்து கலப்பவர் அதை வாங்கி கலக்க ஆரம்பித்தார். வெடிக்குள் கரிமருந்தை திணிப்பவர் வந்து மருந்தை வாங்கிச் சென்று வேலையை ஆரம்பித்தார். திடிரென உராய்வு ஏற்பட படபடவென வெடிக்க ஆரம்பித்து அந்த அறையே தரைமட்டாகியது.     தீயின் நாக்குகள் நாலாபுறமும் பரவி வெடிச் சத்தமும், மரண ஓலமும் அந்த பகுதியையே அதிர வைத்தது. புகை மண்டலத்தில் எங்கு ஓடுவதென தெரியாமல் மறுபடியும் தீயினுள்ளேயே மாட்டிக் கொண்டு வெளிவர முடியாமல் மயங்கினாள் தேன்மொழி.                 பிய்ந்த சதைத் துண்டுகளோடும், எரிந்து கருகிய உடலோடும் அங்கும் இங்கும் ஓடி உயிரை காப்பாற்றிக் கொள்ள தவித்தனர் ஏழை மக்கள்.                  ஆம்புலன்ஸ் ஓசைகளும் உருக்குலைந்த மனிதர்களை அள்ளிப் போடும் அவலமும் கண்கொண்டு காண முடியாத கோரமாக இருந்தது.                விபத்து சிக்கியவர்களின் உறவினர்களின் கூட்டம் தர்மாஸ்பத்தியை நோக்கி படையெடுத்தார்கள். யாரையும் உள்ளே விடாமல் கதவுகள் சாத்தப்பட்டன.          துரித சிகிச்சைப் பிரிவில் சுய உணர்வற்று உடல் முழுவதும் வெந்து முச்சு மட்டும் இயங்கி கொண்டிருக்க படுக்க வைக்கப்பட்டு இருந்தாள் தேன்மொழி.             செண்பகத்தின் துணையோடு வந்த பிள்ளைகள் அழுது அழுது கண்கள் வீங்கி சோர்வடைந்து போனார்கள்.              " அத்தை அம்மா எப்ப வருவாங்க" சிறியவள் கண்களில் நீர் வழிய தேம்பினாள்.         " வந்துடுவாங்கடா வந்துடுவாங்க நீ அழாத எங்கண்ணு" தேற்றினாள்.        " சரி வாங்க நாம்ப ஆஸ்பத்திரில இருக்க வேணாம் வீட்டுக்கு போயிட்டு காலையில வருவோம்" என அழைத்து வந்தாள்.                    " ஏய்  எங்கடி போன சாப்பாடு  கூட போடாம" குடித்துவிட்டு எதுவும் தெரியாமல் பிதற்றிக் கொண்டு இருந்தான் தேன்மொழியின் கணவன்.               "என்கூட வந்து படுத்துக்கோங்க" என்று அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்து படுக்க வைத்தாள். ஆயிரம் காரணங்கள் சொல்லி பத்தோடு ஒன்று பதினொன்று என இந்த வெடிவிபத்தும் பரபரப்பாக பேசப்பட்டு அடங்கிப் போனது.                மூன்று நாட்கள் கழித்து தேன்மொழி இறந்துவிட்டதாக செய்தி வருகிறது.   அனைத்து காரியங்களும் முடியும்வரை செண்பகம்தான் உடனிருக்கிறாள்.             அரசு இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கிறது தேன்மொழியின் கணவன் கட்சிக்காரர்களைத் தேடிக் கொண்டு செல்கிறான்.               அந்த ஏரியாவில் பொறுப்பில் இருப்பவரைப் பார்த்து நிவாரணம் கேட்கிறான். "வீட்டுக்கு போ நாங்களே கொண்டுவருவோம்" என்று அனுப்பி விடுகிறார்கள்.              " இந்த குடிகாரனுக்கு கொஞ்சப் பணத்தை கொடுத்து சரிகட்டிடலாம்" வேறு யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கனும்ன்னு லிஸ்ட் கொடுங்க" என வாங்கி அதிலும் சுருட்டியது போக மீதியை கணக்கு பார்க்கிறார்கள்.              கட்சி அலுவலகத்தில் இருந்து வந்து கொடுக்கிறார்கள் பணத்தை. "இவ்வளவுதான்டா  எங்ககிட்ட கொடுத்தத நாங்க அப்படியே கொடுக்கிறோம். இந்தா இதில கையெழுத்தப் போடு" என பேசி சென்றனர்.             கேட்பாரற்று கிடந்தது வீடு . அங்கொன்றும் இங்கொன்றுமாய் அழுதழுது தூங்கி இருந்தன. குழந்தைகள்.  வந்த உறவினர்கள் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட  தேன்மொழியின் வயதான அம்மா வந்து குழந்தைகளின் துணைக்கு இருந்தாள்.         "எய்யா அரிசி பருப்பு எதுவுமில்ல எதாவது வாங்கிட்டு வந்தா கஞ்சி காச்சி கொடுப்பேன் புள்ளைங்களுக்கு பாவம் பட்டினியா கிடக்குதுங்க" என்றாள் கிழவி.           " எனக்குத் தெரியும் உன் வேலையைப் பாத்துட்டு இருக்கிறதின்னா இரு இல்லன்னா போயிடு"  எரிச்சலுடன் வீட்டைவிட்டு வெளியேறினான்.              இரவு வரை காணததால் செய்வதறியாது திகைத்து நின்றாள். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தவன் குடித்துவிட்டு நிதானமிழந்து  வந்து படுத்தான். வாங்கிய பணத்தின் சுவடைக்கூட காணோம்.                     வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் ஒரு தீப்பெட்டி ஆபிஸிற்கு வேலைக்குச் சென்றாள் செண்பகம்.             "வெளிய போம்மா இங்கலாம் வேலை இல்ல சின்ன புள்ளைங்களுக்கு" என்று கணக்குப்பிள்ளையின் சத்தம் கேட்டு ஓடி வந்தாள் செண்பகம்.         தேன்மொழியின் மூத்தமகள்தான் வேலை கேட்டு வந்து திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறாள்.  ஈரக்குலை நடுங்க ஓடி வந்தாள்.               "நீ இங்க ஏன்யா  வந்த" கண்களிலு நீர் ஓட  கேட்கிறாள்.               " இல்ல அத்த  பாப்பாவுங்கலாம் பசிக்குதுன்னு அழுறாங்க. பாட்டிக்கும் என்ன செய்றதுன்னு தெரியல. அதான் நா வேலைக்குப் போகலாம்ன்னு நினைச்சி வேலை கேட்டு வந்தேன்" அழுது கொண்டே கூறினாள்.                    " என் தாயி இப்படி சோதிக்கிறானே உங்கள" அரை வயித்துக் கஞ்சிக்கும் நாதியத்துப் போயிட்டமே இந்த சாமிங்கலாம் கல்லா சமைஞ்சிருச்சிவுகளா? இந்த பச்சப்புள்ளகள தாயில்லா புள்ளைங்களா பரிதவிக்க வச்சிருச்சே" அரற்றினாள் செண்பகம்.             வேலைக்கும் போக வேணாம் எங்கயும் போக வேணாம். உங்காத்தா ஆசப்பட்டமாரி நா படிக்க வைக்கிறேன் ஆத்தா மூனு பேரையும் நீங்க கவலப் படாதீங்கத்தா என தாவி அணைத்து அரவணைத்துக் கொண்டாள் செண்பகம். Jaya NaVi                                                                                     

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in